வெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்

‘வெள்ளை யானை’ நாவலைப் படிப்பதற்கு முன் ஜெயமோகனின் முன்னுரையைப் படித்தது என் தவறுதான். அந்த முன்னுரையைப் படித்து முடித்தபிறகு. பக்கச்சார்பான அரசியல் தீர்ப்பெழுதும் அந்த முன்னுரை, நாவல் குறித்த முன் தீர்மானத்தை உருவாக்கிவிடும் என்ற பயம் எழுந்தது. முன்னுரையில் ஜெயமோகன் சொல்லியிருக்கும் விஷயத்தின் சாராம்சம் இதுதான் :

1921ஆம் ஆண்டில் சென்னை பின்னி மில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. அதுதான் இந்தியாவின் முதல் தொழிற்சங்க வேலைப்போராட்டம் என்று கருதப்படுகிறது. அந்தப் போராட்டத்தை காங்கிரஸ், நீதிக்கட்சி, இடதுசாரிகள் ஆதரிக்க, தலித் தலைவரான எம்.சி.ராஜாவோ, ‘‘தலித் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து வேலைக்குப் போன தலித் தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்த, மோதல் வெடித்தது. ‘புளியந்தோப்பு கலவரம்’ என்றழைக்கப்பட்ட அந்தத் தாக்குதலில் தலித் மக்கள் பெருவாரியாக வாழ்ந்த புளியந்தோப்புப் பகுதி குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. ஏராளமானவர்கள் இறந்தார்கள். இதைப் பற்றி திரு.வி.க. தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ‘தலித்துகள் சென்னையின் மய்யப்பகுதியில் குடியிருப்பதுதான் கலவரத்துக்குக் காரணம்’ என்று கருதிய நீதிக்கட்சி சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தலித் மக்களைக் குடியேற்றியது. ‘புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லீம்களைக் குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. இன்று அது ஒரு முஸ்லிம் குடியிருப்பு’ என்கிறார் ஜெயமோகன். ஏன் தலித்துகள் இந்தப் போராட்டத்தைப் புறக்கணித்தார்கள் என்கிற கேள்வியில் இருந்துதான் ‘வெள்ளை யானை’ நாவலுக்கான புள்ளி தொடங்குகிறது. தலித் அறிஞரும் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கத்தைத் தலித் மக்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி விமர்சித்து வந்தவருமான அன்பு பொன்னோவியத்துடனான ஜெயமோகனின் உரையாடல்தான் இந்த நாவலுக்கான விதை. ‘‘1878ல் சென்னை ஐஸ் ஹவுஸில் நடந்த வேலை நிறுத்தம்தான் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம். அதை மேற்கொண்டது தலித்துகள். ஆனால் அது இடைநிலைச் சாதி கங்காணிகளாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் முறியடிக்கப்பட்டது. அதைப்பற்றி திரு.வி.க. ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்’’ என்று ஜெயமோகனிடம் சொன்ன அன்புபொன்னோவியம், அதற்கான ஆவணங்களைத் தேடுவதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில்தான் பின்னி ஆலை வேலைநிறுத்தத்தைத் தலித்துகள் புறக்கணித்தார்கள் என்பது அன்பு பொன்னோவியத்தின் அனுமானம். மேலும் ஐஸ் ஹவுஸ் போராட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு இருந்திருக்கலாம் என்பதும் அவரது அனுமானம்.  இது ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நீதிக்கட்சி என்பது முற்றுமுழுதான முற்போக்கு விழுமியங்களைக் கொண்ட கட்சி அல்ல. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் வேலை வாய்ப்புகளிலும் அதிகார மய்யங்களிலும் பெற்றிருந்த அதிகப்படியான வாய்ப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு கட்சி. பார்ப்பனர்களைப் போலவே பார்ப்பனரல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே முக்கியக் கோரிக்கையாகக் கொண்ட கட்சி. கட்சியின் தலைமையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மேட்டுக்குடி பணக்காரர்கள். எம்.சி.ராஜா, சிவராஜ் போன்ற தலித் தலைவர்களும் இருந்தார்கள். திரு வி.க.வின் பின்னி ஆலை வேலை நிறுத்தம் குறித்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் இயக்கத்தின் மீது இதற்கு முன்பும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு ஏற்பட்ட செல்வாக்கு அன்றைய காங்கிரஸிலும் பிரதிபலித்தது. காங்கிரஸும் தன்னை முற்றுமுழுதான பார்ப்பனக் கட்சி அல்ல, பார்ப்பனரல்லாதார் நலன்கள் குறித்து தங்களுக்கும் அக்கறை உள்ளது என்று காட்டிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் ஆதரவில் ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பார்ப்பனரல்லாதார் சங்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சங்கத்தின் முக்கியமான மூன்று தலைவர்கள் ஈ.வெ.ரா.பெரியார், வரதராஜுலு (நாயுடு) மற்றும் திரு.வி.க. பல காங்கிரஸ் கூட்டங்களில் இவர்கள் மூவரும் பேசியபிறகுதான் ராஜாஜி பேசுவார் என்று பெரியார் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் முற்றுமுழுதான பார்ப்பனர் கட்சி என்ற முடிவுக்கு பெரியாரும் வரதராஜுலுவும் வந்து சேர்கிறார்கள். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பெரியார் கொண்டு வந்த தீர்மானம் தொடர்ச்சியாக காங்கிரஸ் மாநாடுகளில் தோற்கடிக்கப்பட்டவை ஆகியவை அவர்களை இந்த முடிவுக்குக் கொண்டுவந்தது. காங்கிரஸ் மாநாடுகளிலேயே பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனி சமையல் நடந்தது என்றால் காங்கிரஸில் பார்ப்பன ஆதிக்கம் எந்தளவுக்கு வெளிப்படையாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடைசியாக காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் விவாதத்துக்கே எடுத்துக்கொள்ளப்படாதபோதுதான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார். அந்த காஞ்சிபுரம் மாநாட்டின் தலைவராக இருந்தவர் திரு.வி.க. பெரியார், வரதராஜுலுவைப் போல காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் நலன்களைப் புறக்கணிக்கிறது என்பதைத் திரு.வி.க. புரிந்துகொண்டாலும் தொடர்ந்து அவர் காங்கிரஸ்காரராகவே நீடித்தார். காந்தியின் தலைமை மற்றும் தேசிய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். தொடர்ச்சியான நீதிக்கட்சி எதிர்ப்பாளராக இருந்த திரு.வி.க.வின் பின்னி வேலை நிறுத்தம் குறித்த குறிப்புகளில் இந்தப் பக்கச்சார்புகள் பிரதிபலித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் நீதிக்கட்சியின் ஆட்சியே ஒட்டுமொத்தமாகத் தலித் விரோத ஆட்சி என்று சொல்லிவிடமுடியாது. ‘பஞ்சமர்கள் பேருந்துகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்றே அக்காலத்தில் பயணச்சீட்டுகளில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படிப் பயணச்சீட்டுகளை வினியோகிக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசாணை கொண்டுவந்தது நீதிக்கட்சி ஆட்சிதான்.

இத்தனையும் சொல்வதற்குக் காரணம் நீதிக்கட்சி குறைகளற்ற முற்போக்குக் கட்சி என்று நிறுவுவதற்கோ தலித்துகளை வெளியேற்றிய நீதிக்கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. வரலாற்றில் தனக்குத் தேவையான சம்பவங்களைப் பிய்த்தெடுத்து, தோதான தீர்ப்பு எழுதுவது சரியானதுதானா என்று பரிசீலனை கோருவதற்குத்தான். மேலும் நீதிக்கட்சி வெளிப்படையாகவே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்த கட்சி. அது ஏன் பிரிட்டிஷாரைப் பகைத்துக்கொண்டு தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும், தலித்துகளுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இதற்கு திரு.வி.க.வின் சில குறிப்புகளை மட்டும் வைத்து முடிவுக்கு வராமல் மேலும் பல தரவுகளைச் சேகரித்து விரிவாக ஆராய வேண்டும். ஜெயமோகனே தன் முன்னுரையில் ‘‘நீதிக்கட்சியினர் உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என்பதையும் எம்.சி.ராஜாவேகூட நீதிக்கட்சியில் பணியாற்றியவர் என்பதையும் கருத்தில் கொண்டால் பல குழப்பங்கள் வருகின்றன’’ என்கிறார். இப்படி பல ‘குழப்பங்களுக்கு‘ இடையே அவர் ஒரு ‘தெளிவான‘ முடிவுக்கு வருவதுதான் ஆச்சர்யம். அந்த முடிவு :

‘‘தலித் அரசியலும் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடத் தேசிய அரசியலும் கொள்ளும் முரண்பாடு அதன் ஆரம்பப்புள்ளியிலேயே இவ்வாறு வலுவாக வெளிப்பட்டுவிட்டபோதிலும்....’’ என்பது.

முதலில் நீதிக்கட்சி தமிழ்த் தேசியக் கட்சி அல்ல. அன்றைய சென்னை மாகாண நிலையைப் பிரதிபலிப்பதுபோல மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், தமிழர்கள் நிறைந்திருந்த கட்சி. திராவிட அடையாளம் என்பதும் நீதிக்கட்சிக்கு முன்பே உருவான ஒன்று. அத்தகைய அடையாளத்தை முன்வைத்தவர்களும் தலித்துகளே. இந்த வாக்கியமே அடிப்படையில் பிழையானது. எனக்கு இங்கே இன்னொரு முக்கியமான கேள்வி எழுந்தது. ஒரு தொழிலாளர் போராட்டம் முதன்முறையாக உருவாகும்போது எந்த அதிகாரமும் அற்ற தலித்துகள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதுதான் இயல்பு. ஒரு நிறுவனமயப்பட்ட தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப்போராட்டத்திலினின்று ஏன் தலித்துகள் விலகிப்போனார்கள் என்பதுதான் வரலாற்றில் மிக முக்கியமான புள்ளி. வர்க்க அடையாளமும் சாதி அடையாளமும் முரண்படுகிற புள்ளியில் இருந்துதான் இந்த வரலாற்றாய்வு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அது ஏன் நீதிக்கட்சி எதிர்ப்புப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது? ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ நாவலைக் கொண்டாடுகிற தலித் அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் திராவிட அரசியலையும் பெரியாரியக்கத்தையும் தலித் அரசியலுக்கு எதிர்நிலையில் இருந்து விமர்சிப்பவர்கள். அதற்கான ஒரு அரசியல் வசதியாகத்தான் இந்த நாவல் கொண்டாடப்படுகிறது என்பதுதான் சூட்சுமம். 

எம்.சி.ராஜாவும் தலித் தொழிலாளர்களும் பின்னி வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து ஏன் விலகினார்கள் என்பதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். 1878ல் நடந்த ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தப்போராட்டத்தில் தலித்துகளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் இதற்குக் காரணம் என்பது அன்பு பொன்னோவியத்தின் அனுமானம். அவ்வளவே. அதேபோல் அயோத்திதாசர் இந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டார் என்பதற்கும் எந்தத் தரவுகளுமில்லை. இதுவும் அன்பு பொன்னோவியத்தின் இன்னொரு அனுமானம். எனவே ‘வெள்ளை யானை’யை ஒரு வரலாற்று நாவல் என்று சொல்வதைவிட, அனுமானங்களின் மீது எழுப்பப்பட்ட வரலாற்றுப் புனைவு என்று சொல்லலாம். ஆனால் அனுமானங்களின் அடிப்படையில் ஒரு வரலாற்றுப் புனைவு எழுதுவது தவறு கிடையாது. ஏனெனில் வரலாற்றெழுதியலில் அனுமானங்களின் பங்கும் கணிசமானவை. இந்த நிலைகளை ஏற்றுக்கொண்டு ‘வெள்ளை யானை’யை மதிப்பிடலாம். ஆனால் முன்னுரையில் பின்னி வேலை நிறுத்தம், நீதிக்கட்சி குறித்தெல்லாம் ஜெயமோகன்  எழுதியிருக்கிறாரே தவிர, நாவல் அதைப்பற்றியது அல்ல. அது பஞ்சம் மற்றும் ஐஸ் ஹஸ் வேலை நிறுத்தத்தைப் பற்றியது. மேலும் முன்னுரையின் அடிப்படையில் நாவலை மதிப்பிடுவதோ முன் தீர்மானத்தோடு ஒரு நாவலை அணுகுவதோ வாசிப்பு அறம் அல்ல என்ற புரிதலோடு நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் நாவலின் முதல் அய்ம்பது பக்கங்கள் அப்படியே வாசகர்களை வாரிச் சுருட்டி உள்ளிழுத்துக்கொள்கின்றன. ஏய்டனின் பாத்திரப் படைப்பு மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அயர்லாந்து கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக, அதேநேரம் பிரிட்டிஷ் இந்தியாவில் தன் பின்னணியை மறைத்துக்கொள்ளும் வசதி கொண்ட ராணுவ உயரதிகாரியாக, இந்தியச் சாதியமைப்பின் புதிர்களை விளங்கிக்கொள்ள முடியாதவனாக, அது எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக இருப்பதைக் கண்டு மிரள்பவனாக, ஷெல்லியின் எழுத்துகளில் தோய்ந்துபோகிற கவித்துவ உள்ளத்தினனாக, ஏழைகளுக்கு இரங்கும் அதே நேரத்தில் சாரட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு ஓர் ஏழையின் முதுகைப் பயன்படுத்துவதில் உறுத்தல் இல்லாதவனாக, மரிஸாவிடம் காதலும் அதிகாரமும் பிரதிபலிப்பவனாக.....என பன்மைத்துவம் கொண்ட மிகச்சிறந்த பாத்திரமாக ஏய்டனை ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். ஏய்டனின் மனவோட்டங்களும் கூட மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ஏய்டனின் அயர்லாந்து வாழ்க்கை குறித்த சித்தரிப்புகள், ஒரு மொழிபெயர்க்கப்பட்ட செவ்வியல் நாவலைப் படிக்கும் உணர்வைத் தந்தது. அயர்லாந்திலிருந்து விடைபெறும் முன்பு, ஏய்டனுக்கும் அவனது தந்தைக்குமான கணங்கள் கவித்துவமானவை. 

‘ஆழமான பெருமூச்சு விட்டாலும் மனத்தின் எடை குறையவில்லை’ என்ற வரியைப் படித்ததும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, சில நிமிடங்கள் அந்த வரியைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த வரி என்னை ரொம்பவே பாதித்தது. நாவலின் பல பக்கங்களில் உள்ள ஏய்டனின் மனவோட்டம், புத்தகத்துக்குள்ளிருந்து இரண்டு கண்கள் நம்மை உற்றுப்பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தந்தன. அப்படியொரு கச்சிதமான பிரதிபலிப்பாக இருந்தது. அயர்லாந்து வாழ்க்கை, பலரும் குறிப்பிடுவதைப் போல செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில் பஞ்சத்தைப் பற்றிய சித்தரிப்புகள், வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும்போது பஞ்சத்தில் இறந்துகொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வரும் காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கன. அதேபோல் நாவலின் கடைசி அத்தியாயமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக டாக்டர். சிம்ஸன் பாத்திரம். ஒருவேளை வெள்ளையானையின் அடுத்த பாகத்தை ஜெயமோகன் எழுதுவதாக இருந்தால் சிம்ஸன் பாத்திரத்திலிருந்து தொடங்கலாம் என்பது என் கருத்து.

ஆனால் நாவலின் தொடக்கப்பகுதியில் ஈர்க்கும் வருணனைகளும் விவரிப்புகளும் போகப்போக வாசிப்புச் சுமையாக மாறுகின்றன. ஒருகட்டத்தில் அலுப்புமேலிட, தேவைக்கு மேலான வர்ணனைகள், விவரிப்புகளைத் தவிர்த்துவிட்டு, கதையின் அடுத்த கண்ணி எங்கேயிருக்கிறது என்று தேடிப் பிடித்துப் படிக்கத்தொடங்கினேன். ஒரு கறாரான எடிட்டிங்கை மேற்கொண்டால் இந்த நாவலில் 100 முதல் 150 பக்கங்கள் வரை நீக்கலாம். ஆனால் எனக்கு புரியாத புதிராக இருந்தது நாவலில் காணப்படும் தலித் பாத்திரச் சித்தரிப்புகள். 

தலித் வரலாற்று நாவல் என்று சொல்லப்படுகின்ற, 408 பக்கங்கள் கொண்ட ‘வெள்ளையானை’யில் பெயரும் அடையாளமும் கொண்டு, பேசக்கூடிய தலித்துகள் மூன்றே மூன்றுபேர்கள்தான், காத்தவராயன், ஜோசப் மற்றும் கருப்பன். நாவலில் நூற்றுக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால் அத்தனையும் உடல்கள். பஞ்சத்தில் இறந்துகொண்டிருக்கிற உடல்கள் மட்டுமல்ல, ஐஸ் ஹவுஸில் பணிபுரிகிறவர்களும் உடல்கள்தான். எந்த உரையாடலும் உணர்ச்சிகளும் வாழ்க்கையின் நுட்பமான தருணங்களுமற்று உடம்பில் கொஞ்சம் சதையோடும் கண்களில் கொஞ்சம் ஆன்மாவுடனும் ஜெயமோகன் எழுத்துகளில் பதியப்படுவதற்காக ‘தொர தொர’ என்று இறைஞ்சிக்கொண்டிருப்பவர்கள். மூன்றே மூன்று தலித் பாத்திரங்களும்கூட, ஏய்டன், மரிஸா பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது எந்தவித பன்முகத் தன்மையும் அற்று, ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தட்டையான பாத்திரங்களாக இருக்கிறார்கள். பண்ணையார்களை நோக்கி எம்.ஜி.ஆர். பேசும் வசனங்களையொத்த மொழிகளைப் பேசுகிறார்களே தவிர வலியின் நுட்பமோ வாழ்வின் சிக்கலோ இழையோடும் மொழி இல்லை. அழகியபெரியவன், இமையம், பாமா போன்ற தலித் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும் இந்தப் பாத்திரங்களில் விடுபட்டிருக்கும் தலித்தியல்புகள்கள். மேலும் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள், வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்கள்கூட, பாவம் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்களுக்கு வாய்க்கவில்லை. ஐஸ் அவுஸ் போராட்டம் குறித்த சித்தரிப்புகளும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி‘ சு.சமுத்திரத்தின் எழுத்தின் தரத்தைத் தாண்டவில்லை. நீளநீளமான விவரிப்புகளுக்கும் வர்ணனைகளுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஏய்டனின் பாத்திரத்தை உருவாக்குவதில் காட்டிய சிரத்தையை ஏன் தலித் பாத்திரச் சித்தரிப்புகளில் ஜெயமோகனால் செலுத்தமுடியவில்லை என்பது விளங்கவில்லை.

அதேபோல் மரிஸா பாத்திரத்தின் ‘திடுக்கிடும் திருப்பக்’ காட்சி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தற்காலம் வரை ஆங்கிலோ இந்தியச் சமூகம் பிற சமூகங்களுடன் பெரிதும் உறவுகளற்றதாய்த்தான் இருக்கிறது. ‘சட்டைக்காரிகள்’ என்று பிற சமூகங்கள் ஏளன மொழியில்தான் ஆங்கிலோ இந்தியர்களை அழைத்துவந்திருக்கிறது. ஆனால் மரிஸா, ‘‘என்றைக்கு நீ என் மக்கள்மீது காலைவைத்து மிதித்து இறங்குவதைக் கண்டேனோ அன்றே நான் உன்னைப் புரிந்துகொண்டேன்’’ என்று ஏய்டனிடம் சீறுவது அசல் சினிமாத்தனம். அவர் எப்படி தலித்துகளோடு தன்னைப் பொருத்தி உணர்கிறார்? அதற்கான அறிகுறிகளும் தர்க்கமும் நாவலில் இல்லவே இல்லை. இதேபோல் ஐஸ் ஹவுஸ் அதிகாரி பார்மரின் குணமாற்றமும் இன்னொரு செயற்கைத்தனம்.

நாவலில் நாயுடுகள். செட்டியார்கள், கோமுட்டிச் செட்டிகள், ரெட்டியார்கள், கொஞ்சம் பார்ப்பனர்கள் ஆகியோர் குறித்தும் அவர்களது ஆதிக்கம் குறித்தும் சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் ஏய்டனின் மனவோட்டத்திலும் சரி, பிற பாத்திரங்களின் உரையாடலிலும் சரி இந்துமதச் சட்டகம் குறித்த எந்த உரையாடல்களோ சித்தரிப்புகளோ இல்லை. ஏய்டனுக்கும் பாதர் பிரண்ணனுக்கும் இடையிலான உரையாடல்களில்கூட இல்லை. இருவருமே கிறித்தவர்கள். ஒருவர் கிறிஸ்தவ மதப் போதகர். ஆனால் இந்துமதம் குறித்த எந்த உரையாடல்களும் ஏனில்லை? பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும்போது துறைமுகங்களின் வழியாக பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் போய்க்கொண்டிருந்த அதே வேளையில்தான், தேவதாசி நடனங்களை ரசித்துக்கொண்டு கோயில்களில் ஆறுகாலப் பூஜைகளும் நடந்துகொண்டிருந்தன என்பதும் கவனம் கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறுவதற்கான பகுதி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 

வாசகர்களிடம் நீதியுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நாவல் எழுதப்பட்டதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கென்னவோ இந்த நாவல் வாசகர்களிடம் பரிவுணர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. பரிவுணர்ச்சிக்கும் நீதியுணர்ச்சிக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. பரிவுணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய உயர்வான மனநிலையிலிருந்து மேலிருந்து கீழ் பார்க்கும் உணர்ச்சி. ஆனால் நீதியுணர்ச்சியோ குற்றவுணர்ச்சியோடு தன்னிலை குறித்த விசாரணையை மேற்கொள்வதால் எழும் உணர்ச்சி. பஞ்சத்தால் பாவம் இத்தனை மக்கள் செத்தார்களே என்கிற பரிவுணர்ச்சியைத்தான் ‘வெள்ளை யானை’ குறித்து வரும் பெரும்பாலான விமர்சனங்களில் காணமுடிகிறது. மாறாக அதற்குத் தங்கள் சாதி இருப்பும் ஒரு காரணம் என்கிற குற்றவுணர்ச்சியை அவற்றில் காணமுடிவதில்லை. இருந்தபோதிலும் குறைந்தபட்சம் அத்தகைய பரிவுணர்ச்சியும்கூட ஏதோ ஒருவகையில் வரலாற்றுத்தேவையாக இருக்கிறது என்கிற அடிப்படையில் ‘வெள்ளை யானை’யைச் சாதகமாக மதிப்பிடலாம்.