''மதுவிலக்கு மாபெரும் முட்டாள்தனம்”* - பெரியாரை முன்வைத்து...

காந்தியாரின் அழைப்பை ஏற்று மதுவிலக்கிற்காகத் தனக்குச் சொந்தமான அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்தவர்”, “கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தானும் தனது குடும்பத்தினரும் கைதானவர்” - இப்படியாகவே பெரியார் குறித்த வழமையான பிம்பங்கள் பாடப்பொத்தகங்கள் தொடங்கி அவர் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படம் வரை கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மை நேருக்குமாறாய் இருக்கிறது. பெரியாரின் ஆரம்பகால காங்கிரஸ் ஈடுபாட்டு வாழ்க்கையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 1937 தொடங்கி தன் இறுதிக்காலம் வரை - 1973- பெரியார் மதுவிலக்கிற்கு எதிரானவராகவே இருந்தார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால் “இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது. கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு. இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன். (விடுதலை 18.3.71)
இப்போது தமிழ்ச்சூழலில் மீண்டும் மது மற்றும் மதுவிலக்கு குறித்த விவாதங்கள் மேலெழும்பியுள்ளன. மதுவை அனுமதிப்பது என்ற பெயரில் தமிழகத்தில் கள் தடை செய்யப்பட்டு அயல்நாட்டு மதுவகைகளை அரசே விற்கிறது. ’கல்விக்கூடங்களை தனியாரிடம் விட்டுவிட்டு மதுக்கடைகளை அரசு நடத்தலாமா?” என்கிற கேள்விகள் ஒருசாராரால் எழுப்பப்படுகின்றன. பா.ம.க தலைவர் ராமதாஸ் உள்ளிட சிலர் தமிழக அரசு மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இன்னொருபுறம் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட டாஸ்மாக்கின் தொழிலாளர்கள் நிலையோ சொல்லுந்தரத்தக்கது அல்ல. எட்டுமணி நேரத்திற்கு மேற்பட்ட வேலைநேரம், குறைவான ஊதியம் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொத்தடிமை முறைக்கு உட்பட்டு அல்லலால் உழலும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டப் பதாகைகளைத் தூக்கியுள்ள நேரமிது. ராமதாஸ், டாஸ்மாக் ஊழியர் என இருவரையும் எதிர்கொள்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கமான தந்திரமாக ”விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்கிற அறிவிப்பு. “அயல்நாட்டு மதுவகைகளை அரசே விற்கும்போது கள்ளை ஏன் அனுமதிக்கக்கூடாது?” என்கிற நியாயமான கேள்விகளும் கோரிக்கைகளும் போராட்ட அறிவிப்புகளும் பனைவிவசாயத் தொழிலாளர்கள், கொங்குவேளாளர்கள், நாடார்கள் போன்ற தரப்பிடமிருந்து எழுந்துள்ளன. நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலேயே கள் விற்கப்படும் என்கிற தமிழ்நாடு கள் இயக்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து, அவர்களை அழைத்துப் பேசிய கருணாநிதி மீண்டும் தனது தந்திரங்களை மேற்கொண்டார். ‘முடிந்தவரை பிரச்சினையை ஒத்திப்போடுதல்’என்பதே மதுவிலக்குப் பிரச்சினையில் கலைஞரின் அணுகுமுறையாக இருக்கிறது. அடுத்துவரக்கூடிய ஆட்சி யாருடையதாக இருந்தாலும் அவர்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக மதுவிலக்கு, டாஸ்மாக், கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். தமிழ்ப்பொதுவெளியில் ஒன்றோடு ஒன்றாய் ஊடாடியும் விலகியும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பெரியார் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளார். இதுபோலவே மதுவிலக்கு குறித்த பெரியாரின் நடைமுறைகளை அறிந்துகொள்வதும் அதுகுறித்து உரையாடுவதும் நமக்கு வேறுசில பார்வைகளை நல்கக்கூடும்.
மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தொடக்க காலம் முதலே பெரியார் வலியுறுத்திய சில அடிப்படைகள் இன்றைக்கும் பொருந்திவரக்கூடியவை. அவைகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.
1. ஒரு பிரதேசத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், மது அனுமதிக்கப்பட்ட இன்னொரு பிரதேசத்தை நாடிச் சென்று குடிப்பது என்பது மதுநுகர்வோரின் வழக்கம்.
2. பெரும்பாலும் உடலுழைப்பும் மதுவும் தொடர்புடையதாய் இருக்கின்றன. பெரும்பாலான உடலுழைப்புத்தொழிலாளர்கள் மது அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர். உடலுழைப்பை ஒருபுறம் அனுமதித்துவிட்டு அவர்களிடமிருந்து மதுப்போத்தல்களை மட்டும் தட்டிப் பறிப்பது அநீதியானது.
3. மதுவை அரசு தடைசெய்யும்போது இயல்பாகவே போலி மதுவும் கள்ளமதுவும் வரத்தான் செய்யும். இது மதுநுகர்வோரின் செலவை அதிகரிக்கத்தான் செய்யும்.
இத்தகைய அடிப்படைகளை அவர் பல்வேறு அரசுகளிடமும் வலியுறுத்திவந்தார். முதன்முதலாக 1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவுகளைப் பெரியாரே சொல்கிறார்,
”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள், குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள் அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள். இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் ‘புண்ணிய சேத்திரங்களுக்கு’ அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள். (குடியரசு 3.10.1937)” பெரியார் சொன்னதுதான் அன்று நடந்தது. இன்றும் கூட தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அதுதான் நடக்கும். எனவே இத்தகைய பயனற்ற முட்டாள்தனத்தைக் கண்டித்த பெரியார், “கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.” (கு.அ.3.10.1937) என்று ராஜாஜியைக் கிண்டலடிக்கவும் செய்தார். ‘மது என்பது மனிதவாழ்க்கையில் குறிப்பாக தொழிலாளர்களிடமிருந்து பிரிக்க முடியாதது” என்பதைக் காந்தியைக் கொண்டே மேற்கோள் காட்டினார் பெரியார்.
”சரீர பலத்தை சதா உபயோகித்து கஷ்டமான தொழில் செய்பவர்கள் கண்டிப்பாய் 100க்கு 90 பேர்கள் கள் குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். இதற்கு தோழர் காந்தியார் வாக்கே ஆதாரமாகும். அதாவது 1931ஆம் வருடம் ஜுன் மாதம் 12ம் தேதி தோழர்கள் காந்தியார், பட்டேல், முஸ்லிம் காந்தி ஆகிய அப்துல்கபார்கான் ஆகியவர்கள் பரோடா சமஸ்தானத்தில் சென்றிருக்கையில் மதுவிலக்கு சம்பந்தமாய் அவர்களது வரவேற்பில் எழுந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் போது காந்தியார் கூறியதாவது, “கதர் இல்லாமல் வெறும் மதுவிலக்கு ஒருநாளும் வெற்றி பெறாது. கள்ளு, சாராயக் கடைகளை மூடி விடுவது நம்முடைய வேலையல்ல. கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டு விட்டாலும் இப்போது இருப்பதைப் போலவே திருட்டுத் தனமாய் கள் குடியும், சாராயக் குடியும் நடந்து கொண்டுதான் இருக்கும். குடி வழக்கம் நிற்க வேண்டும் என்றால் குடிகாரர்களுக்கு இலகுவான கைத்தொழில் கற்றுக் கொடுத்தால் தான் நிறுத்த முடியும். இல்லையாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை ஒரு நாளும் விட மாட்டார்கள். பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது களைப்பையும், ஆயாசத்தையும் தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாய் இருக்கிறது. நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுதும் வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கும் வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறேன். அங்கு (தென்னாப்பிரிக்காவில்) என்னுடன் இருந்த கூலிகளுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக்குப் போய் சாராய வகைகளை வாங்கி வந்து பிரியமாக கொடுத்திருக்கிறேன். மிருகங்களைப் போல் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு மது பானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்த விதமான நிர்பந்தத்தையும் அவசியத்தையும் பெற்ற சாதனமான மதுவை ஒரு உத்தரவில் ஒரு நாளில் நிறுத்திவிடுகிறேன் என்பது அறிவுடைமையும் அனுபவ ஞானமுடைமையும் ஆகுமா என்று கேட்கிறோம்” (குடியரசு 3.10.37)
மேலும் ராஜாஜியின் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தலுக்குப் பின்னாலிருந்த அரசியல் நோக்கத்தையும் பெரியார் சுட்டிக்காட்டுவது சிந்திக்கத்தக்கதாய் உள்ளது. “மதுவிலக்கு திட்டத்தை சென்னை மாகாணம் தான் முதன்முதல் ‘அமுலுக்கு’ கொண்டு வந்தது. அது இராஜாஜியின் (ஆச்சாரியாரின்) முதல் மந்திரி ஆட்சிக்காலமாகும். மதுவிலக்கு திட்டத்தை அமுலாக்க ஆச்சாரியார் உச்சரித்த போதே அதை நான் இது ஒரு சூழ்ச்சி திட்டம் என்று சொன்னேன். குடியரசு பத்திரிக்கையிலும் மதுவிலக்கின் இரகசியம் என்பதாக எழுதி வந்திருக்கிறேன். அந்த சூழ்ச்சியின் விளக்கம் என்னவென்றால் அப்போது கல்விக்கு ஆக மது(கலால்) வரும்படியில் ஒரு பாகத்தை அரசாங்கம் நீண்டநாளாக செலவழித்து வந்திருக்கிறது. ஆச்சாரியர் 1937ல் முதல் மந்திரியாக வந்தவுடனே பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி பெற்று வருவதை ஒழிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் மீதே அதை (மதுவிலக்கு சட்டத்தை) ஆரம்பிக்கிறார் என்று எழுதினேன். (அதை இன்றும் அன்றைய குடியரசு இதழில் பார்க்கலாம்.)
எதற்காக கல்வியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அப்போது வந்தது என்று கேட்கலாம். நம் நாட்டில் அன்று சுமார் 150 வருஷ காலமாக வெள்ளையர் (பிரிட்டிஷ்) ஆட்சி நடந்து வந்திருந்தும் 1900-வது ஆண்டு வரை சென்னை மாகாண மக்கள் 100க்கு 7 பேர்களே எழுத படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அதே காலத்தில் கேரளாவில் 100க்கு 30க்கும் மேற்பட்ட மக்கள் கல்வி கற்றிருந்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிட்டிஷ் இந்தியா இயங்கும் 100க்கு 7பேர்களுக்கு மேல் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. காங்கிரஸும் வெகு ஜாக்கிரதையாகவே கல்வி வளராமல் இருக்கும்படியே பார்த்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அதே சமயத்தில் பார்ப்பனர் மாத்திரம் எங்கும் 100க்கு 100பேர் ஆண் பெண் அடங்கலும் கல்வி கற்பிக்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இந்த நிலையில் ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்தவுடன் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் முழுமைக்கும் கல்விக்கு ஆக ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து செலவு செய்து வந்ததை ஆண்டு ஒன்றுக்கு நாளாவட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்து ஆரம்ப கல்வியை அதிகப்படுத்தினார்கள். அதன் பயனாய் 100க்கு 7பேர் வீதம் படித்து வந்த மக்கள் ஜஸ்டிஸ் ஆட்சியில் 100க்கு 10 பேர் அளவில் படிக்கும்படி நேர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 1937ல் ஆட்சிக்கு வந்தது. இராஜாஜி முதல் மந்தரி ஆனார். அவர் மந்திரி ஆனவுடன் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மக்கள் எந்தெந்த துறையில் முன்னேறியிருக்கிறார்கள், அதை எப்படி ஒழித்து பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது பற்றி சிந்தித்தார். அச்சிந்தனையானது பார்ப்பனர் அல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் பயனாய் கல்வித் துறையிலும், சர்க்கார் உத்தியோகத் துறையிலும் சிறிது முன்னேறி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தார். அதன் மீது இதற்கு என்ன செய்து இந்த முன்னேற்றத்தை ஒழித்து நிரந்தரமாக தடுத்து வைப்பது என்று சிந்திக்க ஆரம்பித்தார். முதலாவதாக கல்வியைத் தடுப்பது அவசரம் என்று கண்டார். அந்தப்படியே கல்வியைத் தடுக்க இரண்டு வழிகள் கண்டு பிடித்தார். அவற்றுள் ஒன்று சிறுபிள்ளை (குழந்தை)களை இந்தி கட்டாயப்பாடமாக படித்து பரீட்சையில் தேற வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தி இந்தியைக் கட்டாயப்பாடமாக ஆக்கினார். இரண்டாவதாக பிரைமரி பள்ளிகளை குறைக்க வேண்டியது என்று கண்டுபிடித்து 2500 பள்ளிகளை மூடினார். இந்தப்படி பள்ளிகளை மூடி வேண்டுமானால் அதற்கு காரணம் காட்ட வேண்டுமே என்று கருதி நீண்ட யோசனைக்குப் பிறகு சர்க்கார் வரும்படியை குறைத்துக் காட்டி பள்ளிகளை மூட வேண்டும் என்பதற்காக கல்விக்கு ஆக செலவு செய்து வரும் இனமாகிய கலால் இலாகாவின் வரும்படியை குறைத்துக்காட்ட மதுவிலக்கை மேற்கொண்டார். (விடுதலை 29.11.62)”
ராஜாஜியால் மூடப்பட்ட 2500 ஆரம்பப்பள்ளிகள் காமராஜர் ஆட்சியில்தான் திறக்கப்பட்டன என்பதும் அதன் பின்னணியில் பெரியார் இருந்தார் என்பதும் நாம் அறிந்ததே. காமராஜர் ஆட்சிக்காலத்திலும் நடைமுறையில் இருந்த மதுவிலக்கைப் பெரியார் எதிர்த்துவந்தார். ”மதுவிலக்கு என்பது உயிர்ச்சத்துள்ள மதுவை விலக்கிவிட்டு விஷ சத்துள்ள மதுவை குடிகாரர்களுக்கு உதவுவது போலாகும் என்றும் சொன்னேன். மதுவிலக்கு என்பது மது அருந்துபவர்கள் மது கடைகளுக்கு போய் அருந்துவதற்குப் பதிலாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு மது தானே தேடிக் கொண்டு வரும்படி செய்வதாகும் என்றும் சொன்னேன். மதுவிலக்கினால் ஜாக்கிரதையான குடிப்பழக்கம் உள்ளவர்கள் தான் கஷ்டப்பட நேரிடுமே ஒழிய சாதாரண குடிகாரர்களுக்கு கும்மாளம்தான் என்றும் சொன்னேன். ”(விடுதலை 29.11.62) என்று தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். 1963ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மது ஆதரவாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பெரியார், ‘கள்ளுக்கடைகளில் கள் விற்க அனுமதிப்பது கூட சரியான தீர்வு இல்லை” என்று வலியுறுத்தினார். முதலில் தென்னந்தோப்பில் விற்கப்பட்டிருந்த கள் வணிகப்பொருளாக கடைகளுக்கு விற்பனைக்கு வந்தபிறகுதான், அதில் ஊமத்தை இலை, கஞ்சா இலை போன்றவற்றைச் சேர்த்து அதன் தன்மை விஷமாக்கப்பட்டது என்று கூறும் பெரியார், “மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் நான் பழையபடி கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில் சொன்னபடி தோப்பில் கள் விற்க வேண்டும். கள்ளை விஷமாக்கிவிடும் முறையை தடுத்துவிட வேண்டும். (மது ஆதரவாளர்களின் மாநாட்டில் - விடுதலை 1.2.1963)” என்றும் வலியுறுத்தினார். அண்ணாவின் ஓராண்டு ஆட்சிக்காலத்திலும் பெரியாரின் கருத்து இதுவாகவே இருந்தது. “மது அருந்துவதை தடுக்க இதுவரை செய்து வந்த எந்த முயற்சியும் வெற்றி பெறவே இல்லை. சர்க்காருக்கு வரும்படி குறைந்தது. குடிக்கிறவனுக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. காலி பசங்களுக்கும் அயோக்கியர்களுக்கும் பிழைப்பிற்கு மது உற்பத்தி தொழில் ஏற்பட்டு வளர்ச்சி அடைந்தது என்பதல்லாமல் மது விலக்கால் யாதொரு பயனும் ஏற்படவில்லை” (விடுதலை 9.11.68). மேற்கண்ட காலகட்டங்களில் ராஜாஜியின் ஆட்சிக்காலம் தவிர மற்ற இரு ஆட்சிக்காலங்களான காமராஜர் ஆட்சிக்காலம் மற்றும் அண்ணா ஆட்சிக்காலம் என்பவை பெரியாரால் ஆதரிக்கப்பட்ட ஆட்சிகள் என்பன குறிப்பிடத்தக்கவை. ஆனாலும் பெரியாரின் கொள்கைக்கு எதிராகவே இவ்விரு ஆட்சிகளும் மதுவிலக்கு விஷயத்தில் நடந்துகொண்டன என்பதும் தான் ஆதரித்த ஆட்சிகள் என்பதாலேயே மது குறித்த தன்னுடைய கொள்கைகளைக் கைவிட பெரியார் தயாராக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி ”மதுவிலக்கை நீக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்” என்று இன்றைக்குப் போலவே அன்றும் அறிவித்தார் (ஆனால் சூழல் முற்றிலும் தலைகீழ்). ஆனால் வழக்கம்போக கருணாநிதி உடனடியாக அதை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. அப்போது பெரியார், “ இந்த ஆட்சியை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும். ஒரு காரியத்தில் நமக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு. மதுவிலக்கு விஷயத்தில் ஒரு நிலையான கருத்து இல்லை. நம் நாட்டிற்கு தேவையில்லாதது மதுவிலக்கு என்றாலும், நம்முடைய கலைஞர் பூச்சாண்டி காட்டி வருகிறார். ஒரு நாளைக்கு திறக்கிறேன் என்கிறார். ஒரு நாளைக்கு திறக்கமாட்டேன் கட்டாயம் தீவிரமாக அமல் நடத்துவேன் என்கிறார்....முன்னேற்றக் கழகத்திலும் சிலர் சாராயம் காய்ச்சுகிறார்கள். பலர் குடிக்கிறார்கள். போலீசிலும் 100க்கு 30 பேருக்கு மேல் மது அருந்துகின்றார்கள்”(விடுதலை 21.10.69) என்று வெளிப்படையாகவே கிண்டலடித்தும் கண்டித்தும் பேசினார். மேற்கண்ட பெரியாரின் பேச்சு திருச்சியில் திராவிடர்கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவைகளின் சார்பில் பெரியாரின் 91வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட மேடையில் பேசியது என்பதையும் இப்படியாக ’மதுவிலக்கு குறித்த கலைஞர் பூச்சாண்டி’யின் வயது 41 என்பதும் கவனிக்கத்தக்கது. ஒருவழியாக அதே கலைஞரே 1971ல் தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கினார். ஆனால் பிறகு அது கள்ளுக்கடைகளை ஒழிப்பதாகவும், அயல்நாட்டு மதுவகைகளை மட்டுமே அனுமதிப்பாகவும் ஆகிப்போனது. அதன் விளைவாக இயற்கையான உணவாகவும் மதுவாகவும் உள்ள கள் தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டதும் குடியின் செலவு அதிகரிக்கப்பட்டதும் மதுவின் விற்பனை தமிழக அரசின் வருமானத்தை மட்டுமல்லாமல் ஆளுங்கட்சிக்காரர்களே மதுபானத் தொழிற்சாலைகளைத் தொடங்கி நடத்துவதனால் அவர்களின் வருமானமும் விஜய்மல்லய்யா போன்ற சாராயப்பெருமுதலாளிகளின் கல்லா இருப்பும் உயர்வதும் விளைவுகளாயின. இத்தகைய ‘மதுவிலக்கு ஒழிப்பு’ என்பது பெரியாரின் விருப்பமாக நிச்சயமாக இருந்திருக்க முடியாது.
ஏனெனில் மதுவிலக்கு என்பது எப்போதும் ஏதேனும் ஒரு படிநிலை பேதத்தைக் காப்பாற்றி வந்ததைப் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட ‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல. ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”(கு.அ.3.10.1937) என்று கூறிய பெரியார், பிற்பாடு ‘பர்மிட்’ உள்ளவர்கள் குடிக்கலாம் என்று ஆகிப்போன நடைமுறை குறித்தும் வருந்திக் கண்டித்தார். ”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான். அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்” (விடுதலை 16.2.69) என்றவர் உடலுழைப்பிற்கு விதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஏழை உழைக்கும் மக்களின் குடிப்பழக்கமே அவமானகரமாகச் சமூகத்தால் பார்க்கப்பட்டதையும் சரியாகச் சுட்டிக்காட்டினார். ’’மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது. (விடுதலை 16.2.69)”, “நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும் மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை. (விடுதலை 16.2.69)” என்றார்.
பெரியாருக்கு எப்போதும் மது அருந்தும் பழக்கம் இருந்ததில்லை. சிறுவயதில் தான் ‘மைனர்’ வாழ்க்கை வாழ்ந்ததைக் குறிப்பிடும் பெரியார், மது அருந்தும் பழக்கத்திலிருந்து மட்டும் விலகியிருந்தார். தன் மைனர் வாழ்க்கையின் போது தனது குடிநுகர் நண்பர்களே வாயில் மது ஊற்றியபோதும், தான் குடிக்கவில்லை என்பதையும் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தான் குடிக்காதபோதும் ‘குடி என்பது அடிப்படை உரிமை’ என்பதைப் பெரியார் வலியுறுத்த தயங்கவில்லை. மது குறித்த பெரியாரின் கீழ்க்கண்ட கருத்துகள் ஆச்சரியகரமானவை.
மது தடைப்படுத்தப்பட்ட நாடு அடிமை நாடேயாகும். (விடுதலை 16.2.69)
“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.” (விடுதலை 18.3.71)
“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)
”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம். வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும். மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும். பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும் அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.” (விடுதலை 9.11.68)
”தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட இரண்டு பங்கு முட்டாள் தனம் மதுவிலக்கு எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும்.” (விடுதலை 21.10.69)
எல்லோருக்குமான ஒழுக்கம், எல்லோருக்குமான அறம், எல்லோருக்குமான நீதி என்னும் பெருங்கதையாடலை எப்போதும் பெரியார் மறுத்தவர். சுயேச்சை அறங்களும் சார்புநீதியும் தான் அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தது. ஒழுக்கத்தின் பேராலும் கலாச்சாரத்தின் பேராலும் வலியுறுத்தப்பட்ட நியதிகளின் பின்னாலிருந்த அரசியலையும் பேதத்தையும் அநீதியையும் வன்முறையையும் அடிமைத்தன்னிலையாக்கத்தையும் பெரியார் அளவுக்குத் தோலுரித்தவர்கள் இந்திய அளவிலேயே யாருமில்லை என்று சொல்லலாம். கற்பு, ஒழுக்கம், காதல், பலதார மணம், குழந்தைப்பேறு, திருமணம் ஆகியவை குறித்த பெரியாரின் கருத்துக்கள் எந்தளவு துணிச்சலானவையோ அந்தளவு குடி குறித்த பெரியாரின் கருத்துக்களும் தைரியகரமானவை. ’குடிகாரர்கள் அயோக்கியர்கள்’ என்கிற பொதுப்புத்தியிலிருந்தும் விலகி மிதந்து வெளியேறி நிற்பவை பெரியாரின் சிந்தனைகள்.
’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள். இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. மது அருந்துவது சட்டவிரோதம் என்று சொல்லலாம். லஞ்சம் வாங்குவதுகூட சட்டவிரோதம்தான். லஞ்சம் வாங்கப்பட்டவர்கள் எல்லாம் சமுதாயத்தில் தள்ளப்பட்டவர்களா? தண்டிக்கப்பட்டவர்களா? (விடுதலை 16.2.69)”
மதுவை அனுமதிப்பதை வலியுறுத்தி வந்தபோதிலும் மக்களுக்குக் கெடுதியற்ற தரமான மது வழங்கப்பட வேண்டும் என்பதையும் நல்ல மதுபானத்தைப் பெற்று அருந்துவது அனைவரின் உரிமை என்பதையும் வலியுறுத்தவும் பெரியார் தயங்கவில்லை. அளவான குடி, மகிழ்வான வாழ்க்கை என்பதும் பெரியாரின் பரிந்துரைகளில் ஒன்றாக இருந்தது.
“பொதுவாக மது அருந்துவதையே குற்றமென்று சொல்லிவிட முடியாது. கெடுதி உண்டாக்கும் படியானதும் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் கேடு விளைவிக்கும்படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியது ஆகும் அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை.” (கு.அ. 3.10.1937)
”மதுவிலக்கை ஒழித்துவிட்டு மது ஆட்சி என்பதாக ஏற்பாடு செய்து மதுவினால் கேடில்லாமல் அதிக செலவில்லாமல் எவ்வளவு குடித்தாலும் அதனால் உடலுக்கும், புத்திக்கும், குடும்பத்திற்கும் கேடு வராமல் பாதுகாப்பளிக்கலாம். மது ஆட்சி என்பது கர்ப்ப ஆட்சி - பர்த் கன்ட்ரோல் என்பது போல் குடி ஆட்சி - டிரிங்க் கன்ட்ரோல் என்பதாக நடத்தலாம். இதனால் உடலுழைப்பாளிகள் நலம் பெறுவார்கள். பழைய கள், புளிச்ச கள் இருக்கவிடக்கூடாது. சுகாதார (நாணயமான) அதிகாரிகளை வைத்து மதுக்கடை மதுவை பரிட்சீத்து சோதனை செய்யவேண்டும். சர்க்கார் அதில் அதிக வரும்படி எதிர்பார்க்கக்கூடாது என்பவைகளை கவனித்தால் மது மக்களுக்கு நன்மை பயப்பதாகலாம்” (விடுதலை 29.11.62)
”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது. நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.” (விடுதலை 9.11.68)
”100 ஆண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பு மது குற்றமற்ற ஒரு சாதனமாகத் தான் இருந்தது. அரசாங்கம் மதுவை அரசாங்க வியாபாரப் பொருளாக ஆக்கினதுடன் அரசாங்கமே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், மது அருந்துவது (குடி) கெட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. மது வியாபாரிகள் மதுவுக்குள் இயற்கை போதையைவிட அதிக போதை ஏற்படும் படியான பக்குவம் செய்ததால் மதுவால் கெடுதி என்று சொல்லும்படியான நிலை ஏற்பட்டுவிட்டது.”(விடுதலை 9.11.68)
மதுவிலக்கு குறித்த பெரியாரின் கருத்துக்களைப் பரிசீலிக்கும்போது இன்றைய நிலை குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 1937 குடியரசு இதழில் காந்தியின் கருத்தாக பெரியார் கூறுவதைப் பரிசீலித்தால், ‘உடலுழைப்பின் காரணமாகவே மது அருந்த வேண்டியிருக்கிறது. எனவே வேலையை லகுவாக்க வேண்டும்’ என்று காந்தி கருதியதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் காந்தியின் கருத்துக்கு மாறான சூழலே இன்றையதாக இருக்கிறது. இன்று உடலுழைப்பு குறைந்திருக்கிறது. மூளை உழைப்பு அதிகரித்திருக்கிறது. 90களுக்குப் பின்னான பொருளாதார மாற்றம் மற்றும் பணிச்சூழல் மாற்றம் கிட்டத்தட்ட அனைத்துத்துறைகளிலும் கணினியை அழைத்து வந்திருக்கிறது. புதிய யோசனைகளும் மூளைச்சிந்தனைகளுமே தேவையாகவும் அதிக வருமானத்தை ஈட்டித் தருபவையாகவும் உள்ளன. ஆனால் உடலுழைப்பைப் போலவே மூளை உழைப்பும் மன உளைச்சல், எல்லைகளும் பகலிரவு வித்தியாசமற்ற வேலைநேரங்கள் என மதுவை நாட வைக்கின்றன. குடி என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது என்பதும் வெறுக்கும் மனநிலையிலிருந்து மாறி அனுமதிக்கப்பட்டதாகவும் ஏற்கத்தக்கதாகவும் மாறியிருக்கிறது என்பதே எதார்த்தமாயிருக்கிறது. வார இறுதி மதுவிருந்துகளும் கார்பரேட் அலுவலகங்களின் பார்ட்டிகளும் கலாச்சாரத்தின் ஓரங்கமாக ஓரளவு மாறியிருக்கின்றன.
இன்னொருபுறம் உடலுழைப்புத் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மதுநுகர அரசு மதுக்கடைகளையே நம்பியுள்ளனர். சனி இரவு எந்த மதுக்கடை வாசல் முன்பும் ‘கிளம்பிற்றுகாண் தமிழ்ச்சிங்கக் கூட்டம்’ என்று பேரளவிலான கூட்டத்தைக் காண இயலும். ஆனால் அரசு குடிநுகர் மக்களின் நலத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்பதோடு குறைந்தபட்சம் ஒரு வாடிக்கையாளராகக் கூட அவர்களை மதிக்கவோ பொருட்படுத்தவோ தயாராக இல்லை. சுகாதாரமும் கவனிப்புமற்ற மதுக்கூடங்கள், கோரப்படும் மதுவிற்குப் பதிலாக ஏதேனும் ஒன்றைத் தலையில் கட்டுவது, சுகாதாரமற்ற மது என்று அரசின் மதுவிற்பனை அநீதிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார் வலியுறுத்தியதைப் போல ‘தோப்புகளில் கள் விற்பது’ என்கிற நடைமுறை இன்றைக்குச் சரிவருமா என்று தெரியவில்லை. ஆனால் ‘மது அருந்துவது மனித உரிமைகளில் ஒன்று’ என்கிற பெரியாரின் கருத்தை ஒத்துக்கொள்பவராயிருந்தால் ‘பெரியார் ஆட்சி நடத்துவதாக’ப் பெருமைப்பட்டுக்கொள்ளும் கலைஞரிடம் ‘மதுவிலக்கை அமல்படுத்துவது என்கிற பூச்சாண்டி காட்டலை நிறுத்தக்கோருவதும்’, கள்ளுக்கடைகளைத் திறக்க வலியுறுத்துவதுமே நமது கடமையாக இருக்க முடியும்.

* - தலைப்பு 29.11.1962 விடுதலையில் பெரியார் எழுதிய தலையங்கம்.


 (நன்றி : லும்பினி)