ஈழம் - ஒரு முஸ்லிம் கதையாடல்

(சும்மா இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்த கட்டுரை. ஒரு முஸ்லீமின் பார்வையிலிருந்து தமிழ்ப்போராளி இயக்கங்கள் குறித்தும் முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் குறித்தும் எழுதப்பட்ட பதிவு. ஒரு அரசியல் கட்டுரையின் இறுக்கம் இல்லாமல் ஒரு புனைவின் சுவாரசியத்தோடும் வாழ்வியல் பதிவுகளோடும் இருந்த இந்த பதிவு எனக்குப் பிடித்திருந்தது. வாசித்துத்தான் பாருங்களேன்....)

ஜிஹாத், அல்பத்தாஹ், புலிகள், சங்கிலியன் படை. - யஹியா வாஸித் -
புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் மட்டுமல்ல, புலிகள் சார்பான புத்தி ஜீவிகள் கூட இன்னும், இன்றும் முஸ்லீம்களை இரண்டாம் கண்கொண்டே பார்க்கின்றனர். அதிலும் கிழக்கில் முஸ்லீம்களையும், தமிழர்களையும் எவ்வாறு மோதவிடலாம் என்பதில் கண்ணும் கருத்துமாகவே உள்ளனர். அண்மையில் சகோதரர் பக்ஷீர் எழுதிய ஒரு கட்டுரையில் புலிகள் இறந்த பாறூக்குக்கு எவ்வாறு பட்டுக்குஞ்சம் கட்டி, பட்டுத்தாம்பரம் விரித்தனர் என எழுதியிருந்தார். யார் இந்த பாறூக், யார் அந்த மொகமட் ஹாசீம் மொகமட் றாபி என்பதை பார்க்க முதல், 1983 க்கு முந்தைய கிழக்கு மாகாணம் எப்படி இருந்தது என்பதை சற்று பார்ப்போம்.
1960,1970,1980 காலகட்டங்களில் கிட்டத்தட்ட மொத்த கிழக்குமாகாணத்தவனும் படிக்காத முட்டாளாகவே இருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், ஆங்காங்கே மாட்டுப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, வயல்வெளிகளுக்குள் குட்டிக்குட்டி தேனீர்கடைகள், நீண்ட நெடிய ஆறுகள், இடுப்பளவு தண்ணீருடன் குளங்கள், நாள்சந்தைகள், வாரச்சந்தைகள், துடிக்கத் துடிக்க கடல் மீன்களை கூறு போட்டு விற்கும் மீன் சந்தைகள், வீடுகள், பாடசாலைகள், கோயில்கள், தீர்த்தோற்சவங்கள், தீமிதிப்புகள், பெருநாட்கள், விளையாட்டுப் போட்டிகள்.

நாங்கள் வயலுக்கு பைசிக்கிளில் அதிகாலை போய்கொண்டிருப்போம். வழியில் தமிழ் சகோதரர் ஒருவர் மீன் வண்டியுடன் வந்து கொண்டிருப்பார். எங்களை கண்டதும் காக்கா நல்ல விரால் மீன் இருக்கு காக்கா வாங்கலையா என்பார். நான் வயலுக்கு போறன். வீட்ட பொண்டாட்டி இருப்பா நல்ல விரால் மீனாகப் பார்த்து ஒரு நாலு விரால் கொடு. நாளை பணம் தருகின்றேன் என சொல்லி விட்டு நாங்கள் வயலுக்கு செல்வோம். எஸ் வீ ஓல்ஆர் பிறதர்ஸ்.

புட் போல் மெச். ஒன்று யங்ஸ்டார். சித்திரவேல், நடராஜா, சின்னவன், போளையன், சங்கர், மூர்த்தி, தவராஜா என தமிழ் சகோதரர்களின் ரீம். ஆதம்பாவா, சீனிக்காக்கா, பாறூக், அஸீஸ், ஜமால், வட்டானை என முஸ்லீம் சகோதரர்களை கொண்ட ரீம். இரண்டு ரீம்காறர்களும் வெலிங்டன் தியேட்டர் அருகில் சந்தித்து அடுத்த வாரம் மோதுவதாக முடி வெடுப்பார்கள். செய்தி காட்டுத் தீயாக ஊர் முழுக்க றெக்கை கட்டிப் பறக்கும். தமிழ் பகுதிகளில் அடுத்தவாரம், காக்கா மாருக்கு இருக்குது அடி எனவும், முஸ்லீம் பகுதிகளில் வாற வெள்ளிக் கிழமை தமிழனுக்கு இருக்குது குறுமா எனவும் இளைஞர்கள் பேசிக் கொள்வார்கள். மரவெட்டான் குளம் ( எழுதுமட்டுவான் மைதானம் ) வெள்ளிக் கிழமை தமிழ் முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பி வழியும். மச்சான் நடராஜா, பின்னால சீனிக்காக்கா வாறான் கவனம் மச்சான் என தமிழ் இளைஞர்களும், சீனிக்காக்கோவ் கோணர் கிக் ஒண்டு கொடுங்கோ சீனிக்காக்கா என முஸ்லீம் இளைஞர்களும் குரல் கொடுப்பார்கள். ஆம் யுத்தம், தர்ம யுத்தம் நடக்கும். இறுதியில் தமிழ் இளைஞர்கள் வென்று விடுவார்கள். முஸ்லீம் இளைஞர்கள் வெடிக் கொழுத்துவார்கள். பக்கத்தில் உள்ள யாசீன் காக்காட சினிமா தியேட்டரில் அனைவரும் ஒன்றாக 6.30 படம் பார்த்து, அடுத்தவாரம் தர்மசங்கரி மைதானத்தில மோதுவோம் மச்சான் என புறப்படுவார்கள். எஸ் வீ ஓல்ஆர் கசின்.

வீடு கட்ட வேண்டும். புது வீடுகட்ட நிலம் பார்க்க, நிலக்கால் நாட்ட தமிழ் சாத்திரிமாருக்கிட்டத்தான் அத்தனை காக்கா மாரும் போவார்கள். கிழக்குமாணத்தில் உள்ள 90 வீதமான முஸ்லீம்களின் வீடுகள் 1983க்கு முதல் தமிழ் சகோதரர்களால்தான் கட்டப்பட்டது. அவ்வளவு நேர்த்தி, அவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் இருந்து தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உதவுவது போல் செய்வார்கள். எஸ் வீ ஓல் ஆர் சேம் பிளட்.

ஆம் தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்கள் வரும். கல்முனை காக்கா மாருக்கும், நற்பிட்டிமுனை தமிழ் சகோதரர்களுக்கும், அக்கரைப்பற்று காக்கா மாருக்கும், பனங்காடு, கோளாவில் தமிழ் சகோதரர்களுக்கும், காத்தான்குடி காக்காமாருக்கும், ஆரப்பத்தை தமிழ் சகோதரர்களுக்குமிடையில் இரண்டு வருடத்துக்கொரு முறை இனக்கலவரம் வரும். இது திட்டமிட்ட புத்திஜீவிகளால் உருவாக்கப்படும் இனக்கலவரம் அல்ல. நேற்று இரவு தென்னங்கள்ளையோ அல்லது வடிசாராயத்தையோ அருந்தியவர்களால் உருவான இனக்கலவரம். முதல்நாள் இரண்டு பகுதியிலும் இரண்டு பேரின் செவியை (காது) அறுப்பார்கள். அடுத்தநாள் இரண்டு பகுதியிலும் கொஞ்சம் சோடா போத்தல் பறக்கும். மூன்றாம் நாள் அப்பகுதி பொலீஸ் அதிகாரி இருபகுதியிலும் கோயில் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்களை அழைத்து. ஓகே. இன்றிலிருந்து சமாதானம் சரியா என்பார். இருதரப்பாரும் தலையாட்டுவர். பகல் ஒரு மணிபோல் போலீஸ் வண்டியில் ஸ்பீக்கர் கட்டி. சரி இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டது. நாளை கடை திறக்கலாம், பாடசாலைக்குப் போகலாம், எல்லாம் வழமை போல் இயங்கும் என்பார்கள். டண். இரண்டு பகுதியிலும் போத்தல் எறிந்த குறுப்புகள் அன்று பின்னேரமே சாறாட ( சிங்கள சகோதரர் ) கொட்டிலில் சோமபானம் அருந்திக் கொண்டிருப்பர். எஸ் வீ ஓல் ஆர் சக்களத்திகள்.
இந்த சக்களத்தி சண்டைகளையும், நண்பர்கள் சண்டையையும். மச்சான் மச்சினன் சண்டையையும் ஊதிப்பெருப்பித்த புண்ணியம் கிழக்கு மாகாணத்தில் 1979ல் வீசிய புயல், வெள்ளத்தையே சாரும். அன்று கிழக்கில் மருதமுனை, நீலாவணை, சின்னக்கல்லாறு, பெரிய கல்லாறு, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி, களுதாவளை, பெரிய போரதீவு, கோயில் போரதீவு போன்ற இடங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டது. இப்பகுதி முழுக்க முழுக்க தமிழ் சகோதர, சகோதரிகள் வாழும் பகுதிகள். உடனடியாக அன்று பிற்பகலே பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையுள்ள முஸ்லீம் இளைஞர்கள் புஸ்பைக்கிலிலும், கால்நடையாகவும் சென்று அவர்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தார்கள். செய்தோம். ( இப்போதும் வன்னி புனிதர்களுக்கு, சட்டி பானையுடன் ஓடிப்போய் முதல் சோறு போட்டவனும் இந்த காத்தான்குடி சோனிகள்தான். திஸ் இஸ் இஸ்லாம். வட் ஹெப்பன் ரு வணங்கா மண். தற் இஸ் பக்கா கெப்பிற்றலிஷம். தற்ஸ் வை ரூ லேட் போர் எவ்ரிதிங் ) அப்போது, ஒருவாரத்தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர்கள் இவர்களுக்கு உதவி செய்கின்றொம் பேர்வழி எனக்கூறிக் கொண்டு வந்து, உதவியுடன் உபத்திரவத்துக்கும் பிள்ளையார் சுழிபோட்டார்கள்.

அடியாத மாடு படியாது, அடி உதவுகின்றாப் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான், யாமிருக்கப் பயமேன் என ஆரம்பித்து, எங்களை, ஒன்றாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த எங்களை, கொத்தி கூறு போட்டு, கொத்து பராட்டா போட்டு, கொக்கரித்து, கொந்தளிக்க வைத்து, டேய் காக்கா வாறான், காக்கா வாறான் கதையை நிற்பாட்டு, ஏதோ றெக்கி எடுக்கத்தான் வாறான் என்ற அளவுக்கு எங்கள் நண்பர்களை, எங்களுடன் வாழ்ந்தவர்களை, எங்களுடன் ஒன்றாக உறங்கியவர்களை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, திரும்பவும் ஆட்ட நினைக்கின்றீர்களே, இது தகுமா, இது தருமமா. கோவலனை கண்ணகி மாதவி விடயத்தில் மன்னிக்கவில்லையா, நடுக்காட்டில் தன்னை விட்டு விட்டு ஓடிய நளனை தமயந்தி மன்னிக்கவில்லையா, தன்னை வைத்து சூதாடிய அயோக்கியன் தருமனை பாஞ்ஞாலி என்ற பதிவிரதை மன்னிக்கவில்லையா. பிளீஸ் எங்களை கொஞ்சம் பழையபடி சேர்ந்து வாழத்தான் விடுங்களேன். வீ ஆர் ஸ்ரில் திங்கிங் எபவுட் அவர் ஓல்ட் கல்ச்சர்.

1981இல் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பாறூக். வீட்டில் தனது குடும்பத்தாருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையில் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் அலைந்து திரிந்தார். அச்சமயங்களில் இவர் யாழ்பாணத்திலுள்ள டவுண் பள்ளி வாசலில்தான் ( இப்போதைய ஈபிஆர்எல்எப் ஒபீஸ் அருகில் உள்ள பள்ளி வாசல் ) தங்கினார். ஒரு சில நாட்கள் சுபாஸ்கபேயில் வேலையும் செய்தார். பின்னர் யாழ் பஸ் நிலையத்தில் ஒரு கூவி விற்கும் வியாபாரியுடன் சேர்ந்து சிறு சிறு வியாபாரம் செய்தார். 1982 கடைசியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில ஈபிஆர்எல்எப் முஸ்லீம் இளைஞர்களின் துணையுடன் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பள்ளியில் தங்கியிருந்தார். அப்போது இவர் ஈபிஆர்எல்எப் இல் இணைய முயற்சி செய்தார். இவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லாததால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவர் ஐந்து சந்தியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்தார்.

அதன் பின் இவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும், புலிகள் இயக்கத்தவருமான கெப்டன் நரேஷ் ( இவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றார் ) அவர்களூடாக 1984 முற்பகுதியில் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார் அல்லது இணைக்கப்பட்டார். இவரது வேகமான வளர்ச்சி, இறைச்சிக்கடை அனுபவம் புலிகளை மலைக்க வைத்தது. இவரது வெட்டுக்குத்துகளைப் பார்த்த கிட்டண்ணா இவரை தனது மெய்பாதுகாவலராக இணைத்துக் கொண்டார். ஒருசில நேரங்களில் இவரது வளர்ச்சியில் லெப்.கேணல்.ராதாவுக்கு, வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிடுமோ என்ற ஒரு மன உளர்ச்சி, தளர்ச்சி இருந்தது. ஆம் அது 07-01-1987ல் சிங்கள கூலிப்படை கொன்றது என்ற பெயரில் பிற்பகல் 5.55க்கு கே.கே.எஸ்.வீதியில் ராதா தலைமையில் அரங்கேறியது. அக்கரைப்பற்று ( அக்கு, ஆர், அரை, பற்று )பெற்றெடுத்த ஒரு மறவன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தானடா, கர்ணா எய்தவன் கர்ணனடா, கர்ணா எய்தவன் ராதாவடா. இது பாறூக்கின் சரித்திரத்தில் ஒரு துளி.

முகமட் ஹாசீம் முகமட் ராபி, இவர் அட்வகேட் ஹாசீம் பி.எஸ்சி (இந்தியா) அவர்களின் இரண்டாவது மகன். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் ( அமைச்சர், எம்பி )பேரன். இவர் அக்ரைப்பற்று சென்றல் கொலேஜ்ஜில் ஓஎல் வரை படித்து, ஏஎல் யாழ். மகஜனாவில் படித்தவர். 1983 ஆரம்பத்தில் பரீட்சை முடிவை எதிர்பார்த்து அக்கரைப்பற்றில் இருந்தார். அப்போது 1983 ஜூலை கலவரம் வெடித்து, குட்டிமணி, தங்கத்துரை எல்லாம் பனாகொடையில் கொல்லப்பட, தமிழ் சிறைக்கைதிகளை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட, அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லீம் இளைஞர்களும், தமிழ் இளைஞர்களும் சேர்ந்து 1983 செப்டம்பரில் திருக்கோவில், தம்பிலுவில் கிராமங்களில் பொதுமக்களின் ஆயுதங்களை கொள்ளையிட்டார்கள். சிலதை உரிமையாளர்களின் ஒப்புதலுடன் பெற்றார்கள்.

அப்போது, முஸ்லீம் இளைஞர்கள் இந்த மொகமட் ராபியையும் அந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்கள். முகமட் ராபி பங்கு பற்றிய முதல் நிகழ்வு இது. அதன் பின் இவர் பல முறை ஈபிஆர்எலஎப் இல் இணைய முயற்சித்தார். அப்போது இந்திய அரசும், இந்திய ரோவும் இணைந்து தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சி வழங்க முன் வந்திருந்தது. இச்செய்தி பத்மநாபா ஊடாக முதல் முதலில் கிழக்கு மாகாணத்துக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அடுத்த வாரமே கிழக்கு மாகாணத்தில் இருந்து 67 இளைஞர்கள் அனுப்பப்பட்டார்கள். இதில் இந்த முகமட் ராபியும் ஒருவர். இவர் ஒருவர்தான் முஸ்லீம் இளைஞர். யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எப்புக்கு அப்போது பொறுப்பாக இருந்த தோழர்கள் அவரை மட்டும் திருப்பி அனுப்பிவிட்டு, மற்றவர்களை மயிலிட்டி ஊடாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆம் தடங்கல் அப்போதே ஆரம்பித்து விட்டது. என்றாலும் அப்போது ஈபிஆர்எல்எப்பில் கிழக்கு மாகாணத்தில் எடுபிடியாக இருந்த ஒருவரின் ( எல்லா இயக்கங்களுமே முஸ்லீம்களை எடுபிடியாகத்தான் பாவித்தார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம் ) நச்சரிப்பில், அவரே நேரடியாக யாழ். வந்து தோழர்களை உண்டு இல்லை என பண்ணி, முகமட் ராபியை மயிலிட்டியில் படகில் ஏற்றிக்கொண்டு வேதாராண்யம் ஊடாக மெட்ராஸ் சூழைமேடுவரை வந்து ராபியை, நாபாவின் ஆசீர்வாதத்துடன் உத்தரப்பிரதேசம் அனுப்பி வைத்தார்.

1984 பெப்ரவரிக்குப் பின் கிழக்கு கிழக்காக இல்லை. தடி எடுத்தவன், தண்ணி அடித்தவன், மச்சான் போட்டு பேசியவன், படலைக்குள் புகுந்து மையிறு புடுங்கியவர்கள் எல்லோரும் தடியுடன் இருந்தார்கள். இது கொஞ்சம் வித்தியாசமான தடி. இவனை பார்த்தால் கோழிக் கள்ளன் போல் இருக்கின்றான் மச்சான். போடு, போடு போட்டுத்தள்ளு என போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள். நண்பர்கள், சகோதரர்கள், ஒன்றாக எங்களை செக்கண் சோவுக்கு அழைத்துச் சென்றவர்கள், வா மச்சான், வாடா காக்கா என அன்பாக அழைத்த நண்பர்கள். வாடா காக்கா என, அடிநாக்கு நாசியையும், தொண்டையையும் ஒட்டுற மாதிரி அழைத்தார்கள். அதில் அன்பில்லை. ஆக்ரோஷம் இருந்தது. பள்ளி வாசல்கள், கடைத்தொகுதிகள், வயல்வெளிகள் எல்லாமே அழிந்து போயின. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல் இருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்க்க வெட்கப்பட்டோம். வேதனைப்பட்டோம். கையில் தடி வைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து சோனிகளும், தமிழனும் வாழ்வாதாரத்துக்கு கஸ்டப்பட்டார்கள். கஸ்டப்பட்டோம். கூலித்தொழிலாழிகள் ஒரு வேளை உணவுக்கு அல்லாடினர்.

இதில் இரு பகுதியினரையும் குறை சொல்ல வேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருந்து திட்டமிட்டு செய்தார்கள். மூஸ்லீம் இளைஞர்கள் எவ்வித ஆயுதமயப்படுத்தலுமின்றி கூட்டம், கூட்டமாக சென்று சில அநாகரிக செயல்களை அரங்கேற்றினர். இதற்கு அரசும் பின்னால் நின்று நெய்யூற்றியது. இவற்றின் உச்சக்கட்டம்தான் சிறிலங்காவில் ஜிஹாத் அமைப்பு தோன்ற வழி வகுத்தது. ஆம் 1984 ஜூன் 17ல் ஜிஹாத் உருவானது. முழு சிறிலங்காவிலுமிருந்து 40 நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடன் அது தொடங்கியது. காலி கோட்டை, வேருவளை தொடங்கி யாழ். நயினாதீவு வரையுள்ள மனிதாபிமானிகளின் உளப்பூர்வமான செயல்பாட்டுடன் அது தொடங்கியது.அது அக்கரைப்பற்றில்தான் உருவானது. உருவாகி அடுத்த தினமே நாடுமுழுக்க துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் வினியோகித்தது. நாங்கள் ஆள வந்தவர்களல்ல. வாழவந்தவர்கள். பிளீஸ் எங்களை விட்டுடுங்கோ என கரம் கூப்பி சகோதர இனங்களை மன்றாடியது. அதன் பின், இனி எம் பகுதியில் நடக்கும் அத்து மீறல்களை நாங்கள் தட்டி கேட்போம் என சிறிலங்கா முழுக்க பறை சாற்றியது. அதன் பின் நடந்த, ஆள் கடத்தல், வரி, கப்பம், கொலைகளுக்கெல்லாம் ஜிஹாத் உரிமையுடன் நடவடிக்கை எடுத்தது. 1985 இல் பயிற்சி முடித்துக் கொண்டு முகமட் ராபி சிறிலங்கா வந்து திருக்கோயில் பகுதியில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தங்கியிருந்தார். இவரும் ஜிஹாத்துடன் இணைந்து விடுவாரோ என்ற பயத்தில் இவரை திருக்கோவிலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்த ஒரு தமிழ் அமைப்பு முடிவெடுத்து, இவரை சங்கிலியால் கட்டி 1985 ஜனவரியில் ஒரு கொரளா காரில் கடத்திச் சென்றார்கள். ஆம் ஜிஹாத் அமைப்பின் ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலம், எவ்வித சிராய்ப்புமின்றி முகமட் ராபி நிந்தவூர் பிரதான வீதியில் ஒரு அதிகாலைப் பொழுது மீட்கப்பட்டார். திஸ் ஒப்பரேஷன் புறம் சிறிலங்கன் ஜிஹாத்.

அன்று முதல் அவர் ஜிஹாத் அமைப்பின் இராணுவ தளபதியாக செயல்பட்டார் ( இவர் எக்காலத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை ). ஜிஹாத் அமைப்பின் வளர்ச்சி கண்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி நேரடியாக இவர்களை அழைத்து, இரண்டு மூன்று பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஆயுத உதவி செய்வதாக உறுதியளித்தார். ஆம் பயிற்சியும் வளங்கப்பட்டது. ஜிஹாத் பல முறை புலிகளுடன் அக்கரைப்பற்றிலும், காரைதீவிலும், மூதூரிலும் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. ஜிஹாத் அமைப்பின் மிக, மிக பொறுப்பானவர்கள் எவ்வித உயிரச்சமுமின்றி புலிகள் சொன்ன இடங்களுக்கு சென்று பேச்சு வார்த்தைகள் நடாத்தியுள்ளனர். பேச்சு வார்த்தைகளுக்கு சென்றவர்களை கடத்த முயன்னற போதும், வார்த்தை ஜாலங்களால் தப்பி வந்ததுமுண்டு.

ஆம் 1985 மே 21ம் திகதி இரவு 7.15க்கு ராபி கிழக்கு மாகாண ஈரோஸ் அமைப்பினரால் நெஞ்சில் 27 துப்பாக்கி சன்னங்கள் விளாச சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அவ்விளைஞர் கடந்த 12 வருடங்களாக பிரான்சில் இருந்து, போன வருடம் இங்கிலாந்துக்கு மலையேறியுள்ளார் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ளலாம். அக்கொலைக்கு கட்டளை இட்டவர் இப்போது முஸ்லீம் சகோதரர்களுடன் வியாபாரங்கள் செய்கின்றார். ஆம் மன்னிப்பை விட உயர்ந்த பண்பு இந்த உலகத்தில் வேறு என்ன மண்ணாங்கட்டி இருக்கின்றது.

இந்த ஜிஹாத் அமைப்பு அரசு செய்த சில கூலிக்கு மாரடிக்கும் வேலைகளை செய்ய மறுத்தது. ஆம் சகோதர இனத்தை இரத்த வெறி கொண்டு தாக்குவதை ஜிஹாத் குழுவினர் அங்கீகரிக்க மறுத்ததின் பயனாய், அரசு கட்டாக்காலிகளை அழைத்து துப்பாக்கிளை கொடுத்து என்னென்னவோ செய்ய தூண்டியது. கூலிக்கு மாரடிக்கும் அக்குழு நிறைய செய்தது. அவை அனைத்தும் ஜிஹாத் அமைப்பின் தலையில் கட்டப்பட்டது. ஆம் இவ்வாறு ஒன்று நடந்தால் எப்படி சமாளிப்பது என ஜிஹாத் அமைப்பினர் ஆரம்பத்திலேயே திட்டமிட்டனர். ஆம். ஜிஹாத் அமைப்பிலிருந்து பலர் மறைமுகமாக தெரிவு செய்யப்பட்டு, அல்பத்தாஹ் என்ற அமைப்பு கட்டப்பட்டது. இதுவும் 1984 ஒக்டோபரில் உதயமானது. அல்பத்தாஹ். நிறைய மார்க்க , சன்மார்க்க பணிகள் மற்றும் விதவைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்கு, பாடசாலைக்கு செல்ல வழியில்லாதவர்களுக்கு உதவுதல் எனவும் செயல்பட்டதுடன், சில நாகரிக நடவடிக்கைகளிலும் இறங்கியது. ஆம் 1985 மே 21ல் சுட்டுக் கொல்லப்பட்ட ராபியின் ஞாபகார்த்தமாக, அக்கொலைக்கு துணைபோன சகலரையும் 1985 ஜூன் 21 இரவு 7.15 க்கும், 1986 மே 21 இரவு 7.15 க்கும் கழுவிலேற்றியது. இறுமாப்புடன் உரிமையும் கோரியது.

ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்கா முழுக்க ஒண்ணரை லட்சம் துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியது. அல்பத்தாஹ் என்ற தலைப்பில், அல்லாஹ் அக்பர், அல்பத்தாஹ் அமைப்பின் இராணவத் தளபதியும், முகமட் ஹாசீம் அவர்களின் மகனுமான முகமட் ராபி, 1985-05-21 இரவு 7.15 க்கு தமிழ் பயங்கர வாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, மேலும் பல ஆயிரம் ராபிக்கள் உருவாக வழி வகுத்துள்ளனர் என்பதை, மிக, மிக பெருமையுடன் அறியத்தருகின்றோம். அல்பத்தாஹ், மத்திய செயற்குழு என நாலுக்கு நாலங்குலத்தில் அது வெளியாகி அரபு நாட்டு எம்பஸிகளின் கதவுகளையும் தட்டியது.

1985 மே 21 ராபி மரணமாகி இரண்டு மணி நேரத்தில் சிறிலங்காவின் முழு பாதுகாப்பு தலைமைகளும் அக்கரைப்பற்றில் நின்றன. அம்பாரையில் இருந்தும், கொண்டைகட்டுவான் இராணுவ முகாமில் இருந்தும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தயாராகுங்கள். அழியுங்கள் தமிழர்களின் குடியிருப்புக்களையும், வரலாறுகளையும் என்றார்கள். ஆம் உடனடியாக ஜிஹாத், அல்பத்தாஹ் பொறுப்பாளர்கள் கூடி இது தருணமல்ல, இது பொருத்தமுமல்ல, இது நாகரிகமும் அல்ல என முடிவெடுத்தார்கள். அரசுடன் ஒத்துழைப்பதில்லை என ஒரு சேர அத்தனை மத்திய குழு உறுப்பினர்களும் முடிவெடுத்தார்கள் ( சம்மாந்துறையைச் சேர்ந்த, மறைந்த அன்வர் இஸ்மாயீல் எம்பி அவர்கள் அல்பத்தாஹ் அமைப்பில் மத்திய செயற் குழு உறுப்பினராக இருந்தவர்களில் ஒருவர் என்பதை இங்கு பெருமையுடன் சொல்லலாம். ) பாதுகாப்பு பிரிவும், கொஞ்சம் ரத்தம் துடிப்பவர்களும் எவ்வளவோ தலையணை மந்திரங்கள் ஓதினார்கள். ஆனால் அன்பு, மனிதாபிமானம், பொறுப்புணர்ச்சி, எதிர்காலம் என்பதில் முழு நம்பிக்கை கொண்ட சிறிலங்கா ஜிஹாத் அமைப்பு, எய்தவனிருக்க அம்பை நோக வைக்க விரும்பவில்லை. ஆனால்,

ஆயுதம் தருகின்றோம், கொழுத்து முஸ்லீம்களின் பள்ளிவாசல்களை என்றதும் கொழுத்தியவர்களும், ஆயுத கப்பலே அனுப்புகின்றோம் விரட்டு சோனிகளை என்று இஸ்ரேல் சொன்னதும் ஒரு மாவட்ட முஸ்லீம்களின் வரலாறையே அழிக்க முற்பட்டவர்கள்தான் இந்த தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அமைப்பு ரீதியாக செயல்பட்ட எந்த முஸ்லீம்களும் எக்காலத்திலும் கூலிக்கு மாரடிக்கவில்லை. மாரடிக்கவும் மாட்டான். தற் இஸ் இஸ்லாம்.

இந்த அல்பத்தாஹ் அமைப்பின் செயல்பாடுகளில்தான் அனைவரும் அக்காலங்களில் கவனம் செலுத்தினர். யார் இவர்கள். எங்கிருந்து தொழில்படுகின்றார்கள் என கண்ணுக்குள் விளக்கெண்ணை போட்டு தேடினார்கள். அதன் ஒரு வெளிப்பாடுதான் பிற்காலங்களில். ஓ இப்படியும் ஒரு ஆள்மாறட்டம் செய்யலாமோ என தோன்றிய சங்கிலியன் படை. ஆம் 1991 முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதும், முஸ்லீம்களின் வீட்டுத் தொகுதியொன்றை விடுதலைப்புலிகள் தமது அச்சகமாக பாவித்தார்கள். அந்த அச்சகத்துக்கு வே.பிரபாகரன் அவர்கள் வந்து போவது வழமை. ஆனால் ஒரு நாள் தலைவர் வந்து ஒரு முக்கால் மணி நேரத்தின் பின் வெளியேறி இரண்டு நிமிடத்தில் அவ் அச்சகம் வெடித்துச் சிதறியது. அதற்கும் இந்த அல்பத்தாஹ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற போர்வையில், யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே அக்காலங்களில், தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்த முஸ்லீம் சகோதரர்களை இந்த சங்கிலியன் படை வறுத்தெடுத்ததாகவும் அப்போது பட்சிகள் பேசிக்கொண்டன.

இப்போது சிறிலங்காவில் ஜிஹாத் இருக்கிறதா, இயங்குகின்றதா என்பதுதான் அனைவரின் கேள்வியும். ஜிஹாத் என்பது வாழ்க்கையுடன், வாழ்க்கைக்காக போராடுவது. அடுத்தவனைப் போய் வம்புக்கிழுப்பதல்ல. வம்புக்கிழுக்க இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை. அப்போதைய ஜிஹாத்தை சிலர் வம்புக்கிழுத்து, வம்பில் மாட்டிவிட நினைத்தனர். அதனால் நடப்பது தர்மயுத்தம், தமிழ் பேசும் தமிழ் மக்களுக்கும், சிங்கள அரசுக்கும் இடையில் ஒரு தர்மயுத்தம், அது தன் வழியில் நடக்கட்டும், நாம் முதலில் எம்மை புடம் போட்டுக் கொள்வோம். இக்கால கட்டங்களில் எம்மிடமும் ஆயுதம் இருந்தால் அது வேறு, வேறு பின் விழைவுகளை ஏற்படுத்தும் என்பதை பல மார்க்க அறிஞர்களும், புத்தி ஜீவிகளும் எடுத்துரைக்க, ஜிஹாத், அல்பத்தாஹ் அமைப்புக்களின் பைல்கள் மூடப்பட்டு அனைவரும் 1987 டிசம்பரில் நாடு கடந்தனர். கடந்து, முஸ்லீம்களின் கல்வி, வியாபார விடயங்களில் 100 வீத கவனம் செலுத்தினர். செலுத்திக் கொண்டுமிருக்கின்றனர். அதன் பயன்தான் இன்றைய முஸ்லீம்களின் கல்வி, வியாபார எழுச்சிகளெல்லாம். இல்லாவிட்டால், இன்றைய எமது முஸ்லீம் இளைஞர்கள் எங்கேயோ அகதி அந்தஸ்துக்கு விண்ப்பித்துக் கொண்டிருப்பர்.

இனி ஒரு ஜிஹாத்தோ, ஒரு அல்பத்தாஹ்வோ சிறிலங்காவில் தோன்றவும் கூடாது, தோன்றவும் மாட்டாது. இப்போது அனைவருக்கும் தேவை ஒரு பொருளாதாரப் புரட்சி. அந்தப் புரட்சி வெடிக்க நிச்சயம் சிறிலங்கா ஜிஹாத் கொடிபிடிக்கும். அப்புறம் மகிந்தவின் காதையோ, ரணிலின் காதையோ, சரத்பொன்சேகாவின் காதையோ கடித்து, மானில சுயாட்சியாவது எங்களுக்கு தாங்கோ மக்காள் என கேட்போம். ஒன்று பட்டால்தால் உண்டு வாழ்வு. ( இதில் உள்ள தகவல்கள் எமது உள்ளக் கிடக்கைகளின் ஒரு பனித்துளி அன்பின் பக்ஷீர் காக்கா. இவ்வாறு ஆயிரம் கோடி பனித்துளிகள் வன்னியில் உறங்கிக் கிடக்கின்றன சகோதரர்களே. இனி இவைகளை மறந்துவிட்டு நல்லதோர் உலகம் செய்வோம் )

நன்றி : http://www.muthalmanithan.com/2009/11/blog-post_05.html

சீமான் தரப்பு ‘நியாயங்களும்’ ஜெயமோகனின் ‘சமூக ஆஆஆஆராய்ச்சியும்’

சீமானின் தமிழ்த்தேசிய அரசியல் எப்படி ஆதிக்கசாதிச் சார்புநிலை எடுக்கிறது என்பது குறித்து சென்ற பதிவு எழுதிய அன்று இரவு மணி 12ஐத் தாண்டியிருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தவர் மும்பையிலிருந்து மகிழ்நன். ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த தோழர். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிராக மும்பைத் தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய அமைப்பைச் சேர்ந்தவர். ‘‘சீமான் இப்படி போனாரே’’ என்கிற ரீதியில் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டவர், பல தமிழ்த்தேசியவாதிகள் ஆதிக்கசாதி உணர்வுள்ளவர்களாகவும் இருப்பது குறித்த கவலையைப் பகிர்ந்துகொண்டார். ஒரு தேவர்சாதியைச் சேர்ந்த நண்பர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதையும் ஆனால் பெரியார் என்றாலே அவர் வெறுப்படைவது குறித்தும் ஆதங்கப்பட்டார். தனது உணர்வுகளை அவர் பதியவும் செய்திருக்கிறார்.

பெரியாரியச் சார்புநிலையில் ஈழ ஆதரவை முன்வைக்கும் தோழர்கள் மத்தியில் சீமானின் நிலைப்பாடு குறித்து அவநம்பிக்கையும் ஆத்திரமும் பரவுவதை உணர முடிகிறது. மற்றபடி, வெற்றுக்கோஷங்களையும் இனவாத உணர்ச்சிகளையும் மட்டுமே கொண்டுள்ள ‘சும்மா தமிழ்த்தேசியர்கள்’ மழை பெய்த எருமைமாடுகள் கணக்காய்த்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இனப்படுகொலையை எதிர்க்க வேண்டும், சாதி ஆதிக்கம் குறித்து எந்த அக்கறையோ எதிர்ப்போ தேவையில்லை. திமுக எம்.பிக்களும் திருமாவளவனும் ராஜபக்சேவைச் சந்தித்து அளவளாவியபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தவர்களுக்கு சீமான் முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை போட்டது குறித்து இம்மியளவும் கோபம் வரவில்லை. திருமாவளவன் தமிழகத்தில் ஒரு மக்கள்பிரதிநிதி. அவர் வேற்றுநாட்டு அதிபரைச் சந்திக்கப் போகும்போது அரசு ஒழுங்குகளுக்கு உட்பட்ட வழக்கங்களுடன்தான் நடக்க முடியும். ராஜபக்ஷேவின் மூக்கில் குத்து விட்டு பஞ்ச் டயலாக் பேசுவதோ, அல்லது ராஜபக்ஷேவின் நாற்காலிக்குக் கீழே டைம்பாம் வைப்பதோ, குண்டூசி செருகுவதோ ரஜினி படங்களில் மட்டும்தான் சாத்தியம். திருமா இலங்கைக்குத் திமுக எம்.பிக்களோடு சென்றுவிட்ட பிறகு இத்தகைய அரசு சம்பிரதாயங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் சீமானோ தானே விரும்பித்தான் குருபூஜைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்கிறார். திருமாவளவன் செய்ததைவிட மோசமான துரோகம் சீமான் செய்ததுதான்.

‘சீமான் தேர்தல் அரசியலுக்குப் போகப் போகிறார். எனவே எல்லா சாதி ஓட்டுக்களும் அவருக்குத் தேவையாய்த்தானிருக்கும்’ என்பது சொல்லப்படும் சமாதானங்களில் முகாமையானது. அப்படியானால் கருணாநிதியையோ திருமாவளவனையோ விமர்சிப்பதற்கு சீமானுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்பித்தானே ஆகவேண்டும். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்து தமிழுணர்வு, பகுத்தறிவு, இன உணர்வு ஆகிய அரசியல் களங்களில் குறிப்பிட்ட காலம் வரையிலாவது அர்ப்பணிப்பு உணர்வோடும் லட்சிய வேட்கையோடும் தீவிரமாகப் பங்களித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு.

திமுகவை விட குறுகியகாலத்திலேயே தேர்தல் பாதையில் வேகமாக நீர்த்துப்போனவர் திருமாவளவன்.
ஆனால் இப்போது அவர் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களைக் ‘கெட்ட சொப்பனமாக’ நினைத்து மறந்துவிட்டாலும், தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஆதிக்கசாதித் திமிருக்கு எதிராக, திருப்பி அடிக்கும் எதிர்ப்பு அரசியலை வளர்த்தெடுத்து தலித் இளைஞர்கள் மத்தியில் சுயமரியாதையை ஊட்டியவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சீமான்.................? சில பல ஆவேச சவடால் பேச்சுகள், சில மொக்கையான திரைப்படங்கள், இரண்டு முறை சிறைவாசம், அப்புறம் ‘காதல்’ படத்தில் வாய்ப்பு தேடி வரும் புதுமுக இளைஞன் சொல்வதைப் போல் ‘ அமெரிக்க ரிட்டன் மாப்பிள்ளை வேஷம்ல்லாம் வேணாம், ஹீரோ அப்புறம் டைரக்டா சி.எம்’தான். இளைஞர்களைக் கவர பெரியாரும் பிரபாகரனும் விசா, தேர்தலில் ஆதாயம் ஈட்ட தேவர் திருமகனுக்கு மாலை. இதற்கு ‘சமத்துவ மக்கள்‘ நாயகன் சரத்குமார் பரவாயில்லையே அய்யா! அவர் ‘‘அய்ம்பதாயிரம் இளைஞர்களைத் திரட்டுவோம், கடல் தாண்டுவோம்’’ என்று சவடால் பேசியதில்லையே.

அதைவிட கேவலமாக முன்வைக்கப்படும் ‘நியாயம்’, ‘சீமான் முத்துராமலிங்கத்திற்கு மட்டுமில்லை, இமானுவேல்சேகரனின் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார்’ என்பது. முத்துராமலிங்கத்தின் ஆதிக்கசாதித் திமிருக்கு எதிராய்ப் போராடி, தலித் மக்களின் சுயமரியாதையை உறுதி செய்வதற்காய் உயிரை அர்ப்பணித்தவர் போராளி இமானுவேல்சேகரன். அவரைக் கொலை செய்ததான குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சாதிவெறிக்கொலைகாரன் முத்துராமலிங்கம்.

‘கொலைசெய்யப்பட்ட போராளிக்கும் மரியாதை செய், கொலைகாரனுக்கும் மாலைபோடு’ - சூப்பர் தத்துவம் சார், மன்னிக்கவும் அய்யா! நல்லாத்தான் இருக்கான் சீமான், உங்கள் பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட பிஸ்கோத்துதமிழன். எனது சென்றபதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டமும் சீமானின் ‘நியாயத்தை’ வேறு வார்த்தைகளில் சொல்கிறது பாருங்கள்.

/தம்பி சுகுணா,
ஒரு விசயம் சொல்கிறேன் கேள். இவர்கள் யாரும் பெரிய சிந்தனைவாதிகளோ சீர்திருத்தவாதிகளோ கிடையாது. மைக் மோகன் போல மைக் பிடித்த வீரர்கள். அவ்வளவே. இதற்காகவெல்லாம் ஏதோ பெரிய எதிர்வினை செய்கிறோம் என்றெல்லாம் நினைத்து பார்த்தீரா சீமானின் வல்லமையை என்றெல்லாம் நக்கலடிப்பது தேவையற்றது. அவர் தேவர் சிலைக்கு மாலை போட்டார்... சரி.. அப்படியே இம்மானுவேல் சேகரனுக்கும் அஞ்சலி செலுத்தினார் என்றால் மகிழலாம்! /

இந்த ‘சற்றுநேரத்திற்கு முன்பு தொலைபேசிய’ நண்பர் எனது ‘புலி அரசியலிலிருந்து விடுதலை அடைவோம்’ கட்டுரைக்கு எதிராகத் தொடர்ச்சியாக பின்னூட்டங்களில் சண்டமாருதம் செய்தவர். ஆனால் தமிழ்த்தேசியவாதிகளின் தவறைச் சுட்டிக்காட்டினால் மட்டும், ‘விடுங்க பாஸ், இதெல்லாம் ஒரு மேட்டரா’ என்கிறவகையான பின்னூட்டம்,. அதுவும் அனானியாக.

ஈழமக்களால் எப்படி மன்னிக்கப்பட முடியாத கொலைகாரனாக ராஜபக்ஷே இருக்கிறாரோ, அதேபோல் தலித்துகளாலும் சாதி எதிர்ப்பாளர்களாலும் மன்னிக்க முடியாத கொலைகாரன்தான் முத்துராமலிங்கம். ‘தமிழின ஒற்றுமை‘, ‘நல்லிணக்கம்’ என்று எதன்பெயராலும் முத்துராமலிங்கத்தை மரியாதை செய்கிறவர்கள் எங்களிலிருந்து அன்னியப்பட்டவர்களே.

இப்போது சீமானும் ஜெயமோகனும் ஒன்றுபடக்கூடிய புள்ளிகளைக் கீழே பாருங்கள். ஜெயமோகன், பசும்பொன் குருபூஜை குறித்து தனது வலைத்தளத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள் மட்டும். இதன் பின்னுள்ள அபாயத்தை விளக்குவதற்கு நான் தேவையில்லை, ஜெயமோகனின் வரிகளே அதை விளக்கும். அபாயத்தை மட்டுமல்ல, ஜெயமோகனுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதற்கும் இந்த வரிகளே சாட்சியம். இதே ஜெயமோகன்தான் ‘‘பெரியாருக்கு தமிழ்க்கலாச்சாரம் குறித்து போதுமான புரிதல்/ அறிவு கிடையாது’’ என்னும் வகையாய் எழுதியவர் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

''எந்த ஒரு மக்கள்கூடுகையும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குச் சாதகமானதே. தேவர்சாதியை அரசியல் பிரக்ஞைக்கு கொண்டுவந்தவர் என்ற முறையிலும் அவர்களின் ஒற்றுமைக்கும் உரிமைக்கும் சுயநலமில்லாது போராடியவர் என்ற முறையிலும் அம்மக்கள் முத்துராமலிங்கத்தேவர் மீது கொண்டிருக்கும் பெரும் பற்று மரியாதைக்குரியது

ஆனால் தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

மதுரை ஆலயத்தில் தலித்துக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தவர் தேவர் என்பது வரலாறு. அந்த வரலாறு அந்த இளைஞர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் அவர்களில் ஒருசிலர் கிளப்பிய சில வெறிகொண்ட வெறுப்புக்கோஷங்களை எழுப்பியிருக்கமாட்டார்கள்.

க.சந்தானம், தி.செ.சௌ.ராஜன், சட்டநாதக் கரையாளர் போன்ற பலருடைய வாழ்க்கை வரலாறுகளில் தேவர் குறிப்பிடப்படுகிறார். உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது. ஒரு தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று சாலைகள் தென்பட்ட பீதி ஒரு நல்ல விஷயம் அல்ல. தேவர் அவர் தேசத்துக்குச் செய்த தியாகங்களுக்காக அத்தனை சாதியினராலும் இந்தியாவில் உள்ள அத்தனை மக்களாலும் மதிப்புடனும், அவர் தங்களுக்கும் தலைவர் என்னும் பிரியத்துடனும் நினைவுகூரப்படுவதே அவருக்குச் செய்யும் நியாயம் ஆகும்.

தன்னிச்சையாக ஆரம்பித்த ஒரு விழா மெல்ல மெல்ல ஒரு திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி வரவேண்டும்.''

இதுதாண்டா சீமான்! - பல்லிளிக்கும் தமிழ்த்தேசியம்
குத்தறிவு, இனவுரிமை, ஈழ ஆதரவு என்று கலந்துகட்டி மேடைகளில் பட்டையைக் கிளப்புபவர் இயக்குனர் சீமான். தமிழ்நாட்டில் சேகுவாரா டி ஷர்ட் விற்பனை அதிகரிப்பதற்கான காரணகர்த்தா. பெரியாரும் பிரபாகரனும்தான் சீமானின் இரு கண்கள். பிரபாகரன் எப்படியோ போகட்டும், ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி இதுவரை அசிங்கப்படுத்தி வந்த சீமானின் முகமூடி இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருகிறது. தம்பி படத்தில் கதாநாயகனின் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் சாதிவெறியனின் புகைப்படத்தை பெரியாரோடு மாட்டி பெரியாரை அசிங்கப்படுத்தியது, காங்கிரசை ஆதரித்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பரப்புரை செய்தபோது, ‘‘ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு’’ என்று பரப்புரை செய்து தனது ஆதிக்கச்சாதித் திமிரை நிரூபித்தவர்தான் இயக்குனர் சீமான். சமீபத்தில் ‘புதியதலைமுறை’ இதழில் கல்லூரி மாணவிகள் சீமானுடன் கலந்துரையாடும் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அந்த உரையாடலில் ‘‘தமிழியம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தலித்தியம் பேசுவதில்லை?’’ என்று ஒரு கேள்வி. ‘‘எங்களை ஏன் மீண்டும் சேரிக்குள் தள்ளுகிறீர்கள்?’’ என்று போலி ஆவேசம் காட்டியிருந்தார் சீமான். நேற்று (30.10.09) பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மய்யநீரோட்ட இடதுசாரிகள் உள்பட ஓட்டுக்கட்சிகள் அவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்து தங்கள் ஆதிக்கசாதி விசுவாசத்தை வெளிப்படுத்தின. அதில் இந்த வருடம் மரியாதையின் புதுவரவு ‘தமிழ்த்தேசியத் தம்பி’, ‘பெரியாரின் பேரன்’ சீமான். நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பலரும் முத்துராமலிங்க சிலைக்கு மரியாதை செய்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க சிலையில் மேலிருந்து மாலை போட்டபடி சிரிக்கிறார் பெரியாரின் பேரன். அவருக்குப் பின்னால் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு நின்றிருக்க, கறுப்புச்சட்டையும் நெற்றியில் திருநீறுக்கீற்றுமாக அட்டகாசமாக சிரிக்கிறார் ‘பகுத்தறிவு இயக்குனர்’.

தமிழ்த்தேசியம் என்பது ஆதிக்கசாதிகளின் தேசியமே என்று மீண்டும் நிரூபித்த இயக்குனர் சீமானுக்கு நன்றிகள். இப்படித்தான் சிவாஜிலிங்கம் எம்.பி கோவையில் முஸ்லீம்களின் மீது வன்முறை புரிந்த இந்துமக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி, தமிழீழம் கிடைக்க வேண்டி பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டார். சீமான் முதல் சிவாஜிலிங்கம் வரை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக அடிப்படைவாதச் சக்திகளோடு கைகோர்த்துக்கொள்ளத் தயங்காதவர்கள். சீமானையும் சிவாஜிலிங்கத்தையும் நெடுமாறனையும் தங்கள் ஆதர்சமாக முன்னிறுத்தும் தமிழ்த்தேசியவாதிகள், ‘அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவதாய்’ப் பாவனை செய்யும் கண்ணீர்த்துளிக் கவிஞர்கள் பதில் சொல்வார்களா?எனது முத்துராமலிங்க எதிர்ப்பு கட்டுரைகளுக்கு....

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_15.html

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_09.html

புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்!


தற்போதுள்ள சூழ்நிலையில் புலிகள் மீது மாற்றுக்கருத்தாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்களையட்டி நண்பர்களுக்கிடையில் நடைபெற்ற விவாதங்கள், விவாதங்களின் இடையே இணைய வாசகர்கள் முன்வைத்த கருத்துக்கள், கண்டனங்கள், அணிச்சேர்க்கை என எல்லாவற்றையும் நண்பர்கள் கவனித்து வந்திருக்கலாம். இத்தகைய விவாதங்களைத் தொடங்கி வைத்தவர்களும் தொடர்ந்து சென்றவர்களும் இலக்கிய நண்பர்களே. இவர்கள் அனைவருக்குமே சமூகத்தில் சின்னஞ்சிறு பிரிவினரிடமாவது அசைவுகளை ஏற்படுத்திய பங்களிப்பு பெருமை உண்டு. ஆனால் அவையெல்லாம் ஒருகட்டத்தில் திசை மாறிப் போய் அரசியலற்ற பேச்சுக்கள் உற்பத்தியாகி, தனிநபர் தாக்குதலாய்க் குறுகிப்போனதையும் துயரத்துடன் அவதானிக்க வேண்டியிருந்தது.

வால்பாறையிலும் மதுரையிலும் என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டவர்கள், சென்னை தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் நடத்திய ‘பன்முக வாசிப்பில் ஈழக்கவிதைகள்’ அரங்கத்தில் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்வதிலும் தவறில்லை. பொதுவாக கவிதைத்தொகுப்பு குறித்த விமர்சன அரங்கம் என்பதால் கூட்டத்தின் முற்பகுதி முழுவதும் கவிதைத்தொகுப்பு பற்றியதாகவே இருந்தது. கவிஞர் லதாராமகிருஷ்ணனின் பேச்சுதான் கூட்டத்தின் போக்கை மாற்றிப் போட்டது. லதாராமகிருஷ்ணனின் கோபம் முழுக்க கவிஞர் தாமரை எழுதிய ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற கவிதையைப் பற்றியதாக இருந்தது.

முகாம்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும்போது இத்தகைய ‘பொறுப்பற்ற, உணர்ச்சிவசப்பட்ட’ கவிதைகளும் பேச்சுகளும் தமிழர் நலன்களுக்குத்தான் பாதகம் விளைவிக்கும் என்றும் மேலும் ஒரு கவிஞர் நம் நாட்டின் மீது சாபம் விடுவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்றும் இந்த கவிதையை எழுதிய தாமரை, ஈழத்தமிழரா, இந்தியத்தமிழரா என்று தெரியவில்லை என்றும் பேசினார் லதா. லதாராமகிருஷ்ணனின் பேச்சைக் கைதட்டி வரவேற்ற சிலரில் ஒருவராக சுகன் இருந்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றுதான். பின்பு பேச வந்த சுகன் தானொரு பவுத்தமரபைச் சேர்ந்தவன் என்று இலங்கையின் அரசியல் வரலாற்றை முன்வைக்கும்போதுதான் இலங்கையின் தேசியகீதம் தமிழிலும் பாடப்பட்டது குறித்து பாடிக்காட்டினார். இளங்கோவனின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ நூலை விமர்சிக்கும்போது சோமிதரன், ‘புலி இருக்கிறவரையிலும் எதிர்ப்பு அரசியல் பேசினீர்கள். செத்தபிறகும் அதே அரசியலைப் பேசுவதில் என்ன நியாயம்?’ என்று கேட்டார். எல்லோருடைய பேச்சையும் தூக்கிச் சாப்பிட்டது என்னவோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரனின் பேச்சுதான்.

ஈழத்தில் முஸ்லீம்களைப் புலிகள் வெளியேற்றியது குறித்து, தலித்துகள் ஒடுக்கப்பட்டது குறித்து, மலையகத்தமிழரின் பாடுகள் குறித்து, புலிகளால் கொலைசெய்யப்பட்ட மாற்றுக்கருத்தாளர்கள் குறித்து என எதைப் பற்றியுமே பேசக்கூடாது. அதற்கான தருணம் இது இல்லை என்றார். இடைமறித்த கருப்புப்பிரதிகள் தோழர் நீலகண்டன், ‘தோழர் உங்களது வாதங்களை ஏற்றுக்கொண்டாலும் கூட புலிகளைத் திருஉருக்களாகக் கட்டமைக்கிற உங்களைப் போன்ற இயக்கங்கள் முஸ்லீம்களை வெளியேற்றியபோது ஒரு சொல்லும் பேசியதில்லையே’ என்றொரு கேள்வியைப் போட்டார்.

கொதித்துப்போன மகேந்திரன், ‘நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்’ என்று நீலகண்டனைச் சொல்லி அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். ‘சுகன் உங்கள் வயது என்ன?’ என்ற மகேந்திரன் கேள்விக்கு சுகன் பதிலளிக்க மறுத்துவிட்டார். (‘நீயெல்லாம் சின்னப்பையன், உனக்கு அனுபவம் பத்தாது’ என்பதைத் தவிர இந்த கேள்வியின் தொனிக்கு வேறு என்ன அர்த்தம்?) உடனே மகேந்திரன், ‘சுகன் உங்களுக்கு பௌத்தம்ன்னு என்னன்னு தெரியுமா, இந்திய தேசியக்கொடியில அசோகச்சக்கரம் ஏன் இருக்கு தெரியுமா, காக்கா ஏன் கறுப்பா இருக்குன்னு தெரியுமா?’ என்று கிளாஸ் எடுக்கத் தொடங்கினார். இருக்கட்டும். இப்போது மய்யமான கேள்விக்கு வருவோம். ‘புலிகளைப் பற்றி இப்போது விமர்சிப்பது காலப்பொருத்தமில்லாததா?’.

திறந்த மனதோடு உரையாடுவோம் நண்பர்களே. ஈழத்தமிழர்களுக்கான தமிழக ஆதரவிற்கும் ஈழப்போராட்டத்தின் வயது இருக்கும். என் அப்பா புலிகளை ஆதரித்தார். என் அண்ணன் பள்ளியில் படித்த திமுக மாணவனாக இருந்தபோது, ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்ஸ்டார், பிரபாகரன் சூப்பர்ஸ்டார்’ என்று மாணவர் ஊர்வலங்களிலும் திமுக நடத்திய டெசோ பேரணிகளிலும் கோசம் போட்டார். நான் கல்லூரி படிக்கும்போது பிரபாகரனின் படத்தைப் பாக்கெட்டில் வைத்துத் திரிந்தேன். திமுக ஈழ ஆதரவை அம்போவென்று போட்டு விட்டு ஓடியபோதும் அதிமுகவிற்கு அப்பட்டமான ஈழ எதிரி ஜெயலலிதா தலைமையேற்றபோதும் மாறி மாறி வந்த இரு கட்சி அரசாங்களாலும் புலிகளை ஆதரித்த குற்றத்திற்காக எத்தனையோ சின்னஞ்சிறு இயக்கத்தலைவர்கள் சிறைப்பட்டார்கள், பலரது கட்சியின் இயக்கமே பாதிக்கப்பட்டது. ஆனாலும் தலைவர்களே, ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ஈழம் என்று எமக்குக் கற்றுக்கொடுத்து உணர்வூட்டிய தலைவர்களே, ஈழத்தில் முஸ்லீம்கள் என்ற மக்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது என்று நீங்கள் கற்றுக்கொடுக்கவேயில்லையே! தலித்துகள், மலையகத்தமிழர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஈழத்தை ஆதரித்து தெருவில் இறங்கிப் போராடிய இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தவேயில்லையே! தலித் அரசியல் மேலெழுந்து வந்த நாட்களில் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று கூசாமல் பொய்சொல்லி, ‘எல்லாம் நம்பாளுகதான்’ என்று ஊத்திமூடினாரே ‘மாவீரன்’ நெடுமாறன்.

திறந்த மனதோடு உரையாடுங்கள், இப்போது நடந்துள்ள வீழ்ச்சிக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கும் வெறுமனே கருணாநிதியும் சோனியாவும் ராஜபக்சேவும் மட்டும்தான் காரணமா? பிரபாகரனின் அரசியல் காரணமேயில்லையா? 15 ஆண்டுகாலத்திற்கும் மேலாக முன்வைக்கப்பட்ட மாற்றுக்கருத்துகளைப் புலிகள் புறங்கையால் தள்ளியதில் இந்த வீழ்ச்சிக்குப் பங்கில்லையா? மனச்சாட்சி தொட்டுச் சொல்லுங்கள், தமிழகத்தில் நீங்கள் கருணாநிதியைத் திட்டுவதைப் போல ஈழத்தில் பிரபாகரன் மீது ஒரு சிறுசொல் விமர்சனமும் வைத்துவிட முடியுமா? இன்னும் எத்தனைகாலத்திற்குக் கருணாநிதியைத் திட்டி புலிகளின் அரசியல் வறுமையையும் முட்டாள்தனத்தையும் மறைக்கப்போகிறீர்கள்?

புலி ஆதரவாளர்கள் அனைவரையும் ஒருதட்டிலோ ஒருதராசிலோ நான் நிறுத்த விரும்பவில்லை. தேநீர்க்கடையில் தலித்துக்களுக்கு எதிரான இரட்டைக்குவளையை உடைத்தும் போட்டுத்தான் புலிகளை ஆதரித்து சிறைசென்றார் கொளத்தூர்மணி. ஆனால் திண்ணியத்தில் தலித்துகளின் வாயில் பீ திணித்தபோது மவுனம் சாதித்து, புலிகளுக்கு மட்டும் முகவர் வேலை பார்ப்பவர் நெடுமாறன். தலித்துகளின் பிரச்சினையைக்கூட விட்டுவிடுவோம், தமிழ்த்தேசியவாதி என்ற அடிப்படையிலே கூட காவிரிப்பிரச்சினைக்குக் கூட மக்கள் இயக்கம் கட்டாதவர் நெடுமாறன்.

பிரபாகரனுக்கு எப்படி எந்த அரசியலும் கிடையாதோ, அதுபோல நெடுமாறனுக்கும் எந்த அரசியல் வஸ்துவும் கிடையாது. பிரபாகரனாவது இறுதிநாட்களுக்கு முன்பு வரை ராணுவரீதியில் தந்திரங்கள் வகுக்கும் புத்திசாலியாக இருந்தார். நெடுமாறனோ அதுகூடத் தெரியாத அப்பாவி. சிட்பண்ட் கம்பெனிகளைப் போல அவர் அவ்வப்போது நடத்திவரும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்காவது ஏதாவது அரசியல், வேலைத்திட்டம் இருந்ததா, அவர் முன்வைப்பது தனித்தமிழ்நாடா, தமிழ்த்தேசியத்திற்குச் சுயநிர்ணய உரிமையா, வர்க்கம், சாதி பற்றி அவர் கருத்து என்ன? ஒரு மண்ணும் கிடையாது. பொத்தாம்பொதுவான தமிழ்த்தேசிய டம்மிபீஸ். இப்படிப்பட்ட ஒருவர்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு இயக்கத்தின் தலைவர். ஈழத்தில் பிரபாகரன் புலிகளின் தலைவர்.

நான் முன்பே சொன்னபடி புலி ஆதரவாளர்களை ஒருபடித்தானதாக கருதவில்லை. ஆனால் புலிகளின் மீது விமர்சனங்கள் வைப்பவர்களை மட்டும் அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, சுகன், ரயாகரன் என அனைவரையுமே ஒருதராசில் நிறுத்தி, ‘ராஜபக்சேவிடம் காசுவாங்கியவர்கள்’ அல்லது ‘இலங்கை அரசின் ஆதரவாளர்கள்’ என்று எப்படி முத்திரை குத்திவிட முடிகிறது? அப்படி குத்தி விடுவதற்கு முன்னால் உங்கள் அருகில்தான் மணியரசன் இருக்கிறாரே, அவரின் முகத்தையாவது கண்ணாடியில் பார்க்கலாமே.

மணியரசனின் ‘தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி’யிலிருந்து ராசேந்திர சோழன் விலகி அமைப்பு தொடங்கினாரே. அப்போது ‘த.தே.பொ.கவிலிருந்து ஏன் விலகினோம்’ என்று சிறுவெளியீடு கொண்டுவந்தாரே. ‘புலம் பெயர்ந்த தமிழர்கள் அன்பளிப்பாய்த் தந்த பணத்தைக் கட்சி நிதியில் சேர்க்காமல் தனக்குக் கலர் டி.வி வாங்கிக்கொண்டார்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினாரே! புலிகளோடு கொடுக்கல் & வாங்கல் கணக்கு வைத்திருந்த தமிழகத்துத் தலைவர்கள், உலகம் முழுக்க உள்ள புலிப்பினாமிச் சொத்துக்களைப் பாதுகாத்து வருபவர்கள் குறித்து ஒரு சின்ன விமர்சனமாவது வைப்பீர்களா?

இன்னமும் ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். வரலாற்றில் மீண்டும் இன்னொருவர் உயிர்த்தெழுவார்’ என்று பச்சைப்பொய்யைப் பரப்பி வருகிறாரே! இப்போதாவது ஈழமக்களுக்கான ஒரு வேலைத்திட்டம் இருக்கிறதா இவரைப் போன்றவர்களிடம்! இறுதிநாட்களில் புலிகள் நடந்துகொண்ட விதம் குறித்த தகவல்களைக் கேட்கும்போது மனசு பதறுகிறது.

இலங்கை ராணுவம் செல்லடிக்கும்போது மக்கள் மத்தியில் இருந்துகொண்டே புலிகளும் பதில் செல்லடித்து தமிழ்மக்களைக் கொன்றிருக்கிறார்கள். ‘தாங்கள் தோல்வி அடையப்போகிறோம், சாகப்போகிறோம்’ என்று தெரிந்தும் தமிழ்மக்களைத் துணைப்பிணங்களாக்கியிருக்கிறார்களே புலிகள். இறுதிப்போர் முடிந்தபிறகு மக்களோடு மக்களாக முகாமிற்கு வந்த புலிகளை ‘இவன்தான் புலி, எங்களைப் பிடித்து வைத்திருந்தவன்’ என்று மக்களே ராணுவத்திடம் பிடித்துக்கொடுத்ததாக மிகவும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இது ஏதோ ஷோபாசக்தி போன்றவர்கள் பரப்பும் ‘பொய்கள்’ அல்ல. புலி ஆதரவாளர்களே பகிர்ந்துகொள்ளும் தகவல்கள்தான்.

கடைசிநாட்களில் வன்னிமக்களோடு தொடர்பில் இருந்த புலி ஆதரவாளர்கள் கொஞ்சம் நெருக்கிக் கேட்டால் ‘அவையெல்லாம் உண்மைதான்’ என்று ஒப்புக்கொள்கிறார்கள். மூன்று தசாப்தங்களாக ‘புலிகள்தான் மக்கள், மக்கள்தான் புலிகள்’ என்று சொல்லி வந்தீர்களே, எவ்வளவு விமர்சனங்கள் புலிகளின் மீது இருந்தபோதும் ராணுவப்பகுதியை விட புலிப்பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததே, அவர்களையும் கொல்லக் கொடுத்தும் கொல்லவும் செய்தார்களே புலிகள். அவர்களைத்தானா விமர்சிக்கக்கூடாது என்கிறீர்கள்!

ஆனால் இத்தகைய பயங்கரவாத, வலதுசாரிய, மக்கள்விரோத, மனித உரிமைகளுக்கு எதிரான, சுதந்திரத்தையும் சமத்துவத்துவத்தையும் ஜனநாயக உணர்வையும் மயிரளவும் மதிக்காத அமைப்பு மீது விமர்சனம் வைப்பவர்கள் மீதுதான் நண்பர்களே, முடிந்தளவுக்குக் கல்லெறிகிறீர்கள். ஈழமக்களின் சாவுகளை வைத்து விளையாடும் ஒரு குரூர விளையாட்டில் கருணாநிதி கூட ஒருகட்டத்தில் நேர்மையாக விலகிவிட்டார். ஆனால், இன்னமும் நீங்கள் தொடரும் இந்த விளையாட்டின் அயோக்கியத்தனத்தை என்னவென்பது!

‘இப்போது புலிகளை விமர்சிக்கக் கூடாது, விமர்சிக்கக் கூடாது’ என்றால் எப்போதுதான் விமர்சிப்பது? சோவியத் யூனியன் உடைந்து சிதறியபிறகு மனநெருக்கடிக்கு ஆளான மார்க்சியர்கள்தானே கம்யூனிச அரசுகள் மீது விமர்சனமும் வைத்து செழுமைப்படுத்தவும் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் சோசலிசக்கட்டுமானம் குறித்த விவாதம் நடைபெற்றதே. விமர்சனங்களை முன்வைப்பதும், வரலாற்றிலிருந்து பாடங்கற்றுக்கொள்வதுமே புத்திசாலிகளின் வேலை. ஆனால் ‘நாங்கள் புத்திசாலிகள் இல்லை’ என்று நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் என்ன செய்வது?

‘‘90களுக்குப் பிறகான உலகப் பொருளாதாரச் சூழல், செப்டம்பர் 11க்குப் பிறகான உலக அரசுகளின் ராணுவத்தன்மை இவற்றைப் புலிகள் கணக்கில் எடுக்கவில்லை’’ என்றுதானே அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ பேட்டியிலே சொன்னார். அப்போது அவரை அரைலூஸ§ என்றீர்களே. இப்போது சொல்லுங்கள் குழலி, அரைலூஸ§ யார், அ.மார்க்சா, பிரபாகரனா?

சரி, எல்லாமே முடிந்தது , இனி வேறு அரசியல் பேசலாம் என்றாலும் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் அசரீரிதானே கேட்கிறது. ‘இந்தியாதான் தமிழீழம் அமைத்துத் தரும்’ என்றுதானே ருத்திரகுமாரன் பேசுகிறார். இந்திய அரசிற்குச் சாபம் கொடுத்து தாமரை கவிதை எழுதுவார். ஆனால் சாகும் வரை பிரபாகரனும் புலிகளும் இந்தியாவை எதிர்த்து ஒரு விமர்சனமும் வைக்க மாட்டார்கள். இன்னமும் இந்தியாவையும் ஒபாமாவையும்தான் நம்புவோம் என்றால் யாரைப் படுகொலைகளுக்குத் தின்னக் கொடுக்க இன்னமும் புலி அரசியல் பண்ணப் போகிறீர்கள்?

எந்த சுயவிமர்சனமும் செய்யாமல் புலிகளின் அதே அரசியலை அதே புலிகளின் குரலில் செய்வது தவறில்லை. ஆனால் புலிகளின் தவறுகளை விமர்சித்து மாற்று அரசியலைப் பேச முனைவது மட்டும் துரோகமா நண்பர்களே! நானும் புலிகளை விமர்சிக்கிற அனைவரது கருத்துக்களையும் கேள்விகள் எதுவுமற்றுக் கேட்டுக்கொள்ளச் சொல்லவில்லை! லதாராமகிருஷ்ணனின் அபத்தமான இந்தியச்சார்புப் பேச்சிற்குக் கைதட்டுகிற சுகனின் நிலைப்பாட்டை என்னால் ஆதரிக்க இயலாது. இலங்கை அரசை அவர் ஆதரிக்கிறார் என்று கருதவில்லை. ஆனால் இலங்கை அரசிற்கு எதிராக அவரிடமிருந்து விமர்சனங்கள் வருவதில்லை என்பதாலேயே சுகனின் அரசியலை மறுக்கிறேன். ஆனால் புலிகளை விமர்சிக்கிற அதே நேரத்தில் தனது பிரதிகள் அனைத்திலும் இலங்கை அரசையும் விமர்சிக்கிற ஷோபாசக்தியையும் விலக்கி வைப்பது எவ்வகை நீதி?

தோழர்களே! புலிகளாலும் இலங்கை ராணுவத்தாலும் இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்!

புலி அரசியலிலிருந்து விடுதலை பெறாமல் தமிழர்களுக்கு விடுதலை இல்லை. இவ்வளவு சொல்லியும் ‘‘இருக்கிறவரும் இருப்பவரும் வருபவருமாகிய சர்வ வல்லமை பொருந்திய கர்த்தராகிய தேவனே! உன்னை ஸ்தோர்த்திக்கிறோம்!’’ (வெளி 11 -& 17) என்று தொடர்ந்தீர்களானால் என்ன செய்வது! இறுதிநாட்களில் பிரபாகரனின் அப்பத்தையும் ஒயினையும் பங்கிட்டுக் கொண்டவர்களாயிற்றே! பரிசுத்தமடைவீர்களாக!

கவிதை ஒன்றுகூடல் உரையாடல் நிகழ்வு இரண்டு
இடம்: சென்னை AICUF அரங்கம்,

நாள்: 26 ஜுன் 2009, வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.


பன்முக வாசிப்பு

பெயல் மணக்கும் போது - அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம் - அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி
மனோன்மணி

இருள் யாழி - திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை - த. அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன - மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள் - இளங்கோ
சோமிதரன்


கருத்தாளர்கள்
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கருணாநிதி ‘துரோகி’யான கதை
உன்னதம் ஜூன் மாத இதழில் வெளிவந்த சில்வியா குண்டலகேசி என்பவரின் கட்டுரையிது. பொதுவாக ‘கருணாநிதி தமிழினத்துரோகியாக மாறிவிட்டார்’ என்றும் ‘திமுக தமிழின விரோதக் கட்சியாக மாறிவிட்டது’ என்றும் குற்றச்சாட்டுகள் வலுக்கும் காலம். ஆனால், இப்படிக் குற்றம்சாட்டுகிற பல ஈழத்தமிழ் நண்பர்களுக்கு திராவிட இயக்கத்தின் கருத்தியல் அடிப்படைகள் குறித்து அவ்வளவாய் அக்கறையில்லை. ஒரு மேலோட்டமான குற்றச்சாட்டை வைப்பதற்குப் பதில், திமுக இன்றைய சூழலில் அடைந்திருக்கும் பண்புமாற்றம் குறித்தும் குறிப்பாக அதன் அடிக்கட்டுமானத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் இந்த கட்டுரை உரையாடலுக்கான சில புள்ளிகளை வனைந்துள்ளது என்பதால் இதைப் பதிவிடுகிறேன். நன்றிகள் சில்வியாகுண்டலகேசிக்கும் உன்னதம் இதழுக்கும்.


அடிப்படைகளின் மரணம் : மாறிப்போன திராவிட இயக்க அரசியல் போக்குகள்நடந்துமுடிந்த 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் சற்றே மிதவாத இடதுசாய்வுச் சிந்தனையாளர்களிடம் இரு பாரிய அதிர்ச்சிகளை உண்டுபண்ணியது.

1. ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்குத் துணைபோன திமுக & காங்கிரசுக்கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

2. அப்பட்டமான அமெரிக்கச்சார்பு எடுத்து உலகமயமாக்கல் கொள்கைகளைத் தீவிரமாய்த் தொழிற்படுத்திய காங்கிரசுக்கட்சி முன்னைவிட வலிமையுடன் வென்றது.

பகுத்தறிவு, சமதர்மம், பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வு ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் தமக்கான அரசியலைக் கட்டமைத்தவர்களில் பெரும்பாலானோர் இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய ‘சங்கடத்திற்கு’ உள்ளானார்கள். இதுவரை மார்க்சிய & லெனினியம் உட்பட தீவிர அதிகார எதிர்ப்பு அரசியல் பேசி வந்தாலும் இவர்களில் பலர் ஓட்டரசியல் என்று வரும்போது திமுகவையே ஆதரிப்பது என்னும் நிலைப்பாட்டையே கையெடுத்தவர்கள். ஆனால் முதன்முறையாக, திமுகவிற்கு எதிராக, அதுவும் இரட்டை இலைக்கு ‘கைநடுங்கியபடி’ வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சூழல் உருவாக்கியது.. திமுக இத்தகைய ஒரு வாக்குவங்கியை இந்த தேர்தலில் இழந்தது. என்றபோதும் திமுக வென்றது என்றால் இந்த வாக்குவங்கி தீர்மானகரமான வாக்குவங்கியே அல்ல என்பதுதான் எதார்த்தம்.

தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றதற்குப் ‘பணநாயகம்’தான் காரணம் என்பதற்கு விரிவான ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆனால் இந்தியா முழுவதும் இதையே காரணமாக நம்மால் முன்வைக்க முடியாது, அது சாத்தியமுமில்லை என்றபோது, காங்கிரசு வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்? எதிர் அரசியல் சக்திகள் இந்தியா முழுவதும் பலவீனமடைந்துள்ளார்களா? தமிழகத்தில் மாற்று அரசியல் சக்திகளின் பலம் என்ன, எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளை முன்னெழுப்பிப் பேச வேண்டிய தருணம். அதன் தொடக்கங்களில் ஒன்றாக ஒரு மகத்தான சமூக ஜனநாயக இயக்கமாக மலர்ந்த திராவிட இயக்கத்தின் அரசியல் பாதைகளில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள், அவற்றின் போக்குகள், வெற்றி மற்றும் தோல்விகள், அவற்றிற்கான சமூக, அரசியல், பொருளாதாரச் சூழற்பின்னணிகள் ஆகியவை குறித்து விரிவாகப் பயில வேண்டியது அவசியம். குறிப்பாக திமுக தற்சமயம் அடைந்திருக்கும் பண்புமாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய சூழலில் மிகமுக்கியமாகிறது.

ஈழப்பிரச்சினையையட்டி திமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள், கருணாநிதியின் கூற்றுகள் மற்றும் செயல்பாடுகளைக் கூர்மையாக அவதானித்திருந்தால் ஒரு அற்புதமான கணத்தைக் கண்டடைய முடிந்திருக்கும். ஆனால், தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக இயங்கும் சிறு சிறு குழுக்களின் கவனத்திலிருந்து அந்த கணம் பதியாமல் போனதும் கைநழுவிப் போனதும் வரலாற்று வினோதம்தான்.

ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், புதிய அமைப்பு தொடக்கம், உண்ணாவிரதம், ஒருநாள் வேலை நிறுத்தம் எனப் பலவற்றையும் தமிழ்ப்பொதுவெளியில் நிகழ்த்திக் காட்டிய கருணாநிதி ஒருகட்டத்தில் தனது அரசியல் இயலாமை குறித்து பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். ‘‘ஒரு அண்டை நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடிய அளவிற்கோ அதன் அரசியல் போக்கை மாற்றுவதற்கோ/ தீர்மானிப்பதற்கோ மாநில அரசு பலம் வாய்ந்தது அல்ல’’ என்பதுதான் கருணாநிதியின் கூற்றுகளின் சாராம்சம். (ஈழப்பிரச்சினையில், தனக்கும் உணர்வுகள் இருந்தாலும் மாநில அரசின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களால் எந்த சாதனையையும் நிகழ்த்திக்காட்ட முடியாது’ என்பது கருணாநிதி மட்டுமில்லாது அன்பழகன் உள்ளிட்ட பல திமுக முன்னோடிகளால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட கூற்று)

‘‘ஈழத்தந்தை செல்வா காலத்தில் செல்வநாயகம் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வந்தார். ஆனால் அப்போதே பெரியார், ‘ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்?‘ என்று கேட்டார்’’ என்று தனது இயலாமைக்கான சாட்சியமாகப் பெரியாரை முன்னிறுத்தினார் கருணாநிதி. ‘பெரியார் அதிகார மய்யங்களில் அமர்ந்தவர் அல்ல. அவர் சமூகப்போராட்டம் நடத்திய அரசியல் ஆளுமை. அதிகார மய்யங்களிலிருந்து விலகி, ஆனால் மய்யங்களை அழுத்தப்படுத்தவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன. மேலும் அவர் இந்தியத் தேசியக் கட்டமைப்பிலிருந்து விலகிய தனித்தமிழ்நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டவர். ஆனால் கருணாநிதியோ அதிகார மய்யத்தில் பங்குபற்றிய மனிதர். இந்தியத் தேசியத்தோடு கருத்தளவில் முரண்படாத கட்சி அவருடையது. பெரியாரின் நிலையும் கருணாநிதிக்குக் கிடைத்திருக்கும் அதிகாரமும் சமதன்மை வாய்ந்ததுதானா?’’ என்கிற கேள்வி நியாயமாய் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பெரியார் அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகாரமய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களிலும் நிலவுவதால் அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால் எத்தகைய வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்தான். ஆனால் திமுகவோ, பாராளுமன்றப் பாதையின் வழியாகத் தாம் விரும்பும் சமுதாயத்தைப் படைக்க முடியும் என்று வாதிட்டே பெரியாரியக்கத்தினின்று பிரிந்து வந்தது. ஆனால், ‘தன்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது’ என்று கருணாநிதி வெளிப்படையாக அறிவித்தது, திமுகவின் மகத்தான தோல்வியே என்பதையும் நாம் கவனங்கொள்ள வேண்டும். மேலும் திராவிட நாட்டுக்கோரிக்கையைக் கைவிட்ட திமுக, ‘அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று முன்னறிவித்த காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன என்பதுதான் கருணாநிதி கூற்றுக்களில் மறைந்திருக்கும் எதார்த்தம்.

இந்தியத் தேசியம் என்னும் பார்ப்பனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட இந்திய தேசம் என்னும் பார்ப்பனக் கட்டமைப்பில் தமது இன உறவுகளைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் கூட மாநில அரசுக்கு இல்லை என்று ஒரு மாநில முதல்வரே அறிவித்தபிறகு, அதைச் சாக்காக முன்னிட்டு இந்தியத் தேசியத்தின் கொடூரத்தையும் தனித்தமிழ்நாட்டின் அவசியத்தையும் முன்வைத்து தமிழ்த்தேசிய சக்திகள் ஒரு இயக்கத்தைக் கட்டியிருக்க வேண்டும். ஆனால் மாறாக, ‘‘நாங்கள் இந்தியா உடைவதை விரும்பவில்லை, ஆனால் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்றுதான் மெல்லிய குரலில் முனகினார்கள். பெரியாருடைய இடத்தையும் திமுக கைவிட்ட பிரிவினைக்கோரிக்கைக்கான இடைவெளியையும் இட்டு நிரப்புவதற்குப் பதிலாக தெரிந்தே தவறவிட்ட பாவத்தைச் செய்தவர்கள் தமிழ்த்தேசியவாதிகள்.

’திராவிட இயக்கம்’ என்கிற வரையறை திராவிடர் கழகம் தொடங்கி, திராவிடப் பெயர் தாங்கிய அனைத்துக் கட்சிகளையும் குறிக்கும் விளிப்புச்சொல்லாக ஆய்வாளர் முதற்கொண்டு சாமானியர் வரை பயன்படுத்தப்படுகிறது. பெரியாரியக்கங்களை விட்டுவிடுவோம், மய்யநீரோட்ட திராவிட அரசியற் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் திராவிட இயக்கத்திற்கான அடிப்படைகளை வரையறுத்த, மற்றும் அதைச் செழுமைப்படுத்திப் பேண வேண்டிய அதிகப்பொறுப்பு திமுகவிற்கே உண்டு.

கருத்தியலற்ற மந்தைகளை உருவாக்கியதே எம்.ஜி.ராமச்சந்திரனின் வெற்றியின் அடிப்படை. அது திராவிடக் கட்சிக்கான அடிப்படைகள் என்று எதையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டதுமில்லை, அதனாலேயே சமூக ஆய்வாளர்களாலும் மாற்று அரசியலாளர்களாலும் கருத்தியல் அடிப்படையில் அதிக விமர்சனங்களைச் சந்தித்ததுமில்லை. எம்.ஜி.ஆர் காலம் வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக, ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணியின் தலைமை தாங்கிய காலத்தின்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன & தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கருத்தியல் கட்டுமானங்களையும் தீர்மானிப்பதாக மாறிப்போனது வெளிப்படை.

ஆனால் திமுகவிற்கு சற்றுக்காலத்திற்கு முன்பு வரை இருந்த பிம்பங்கள் வேறு. படித்தவர்கள் அதிகம் வாக்களிக்கும் கட்சி, முக்குலத்தோர்களால் அதிகம் வாக்களிக்கப்படாத கட்சி, தமிழின உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் கட்சி என்ற பிம்பங்கள் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாக உதிர்ந்து வருகின்றன.

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது. இந்த சாதியின் விருப்பத்தேர்வாக எம்.ஜி.,ஆர் காலத்திலிருந்து அதிமுகவே இருந்து வந்தது. ஜெயலலிதா& சசிகலா நட்புறவிற்குப் பிறகு இதன் உச்சம் அதிகரித்தது. மேலும் தேவராதிக்கக் கருத்தியல் பிதாமகனாகிய பசும்பொன் முத்துராமலிங்கம் திராவிட இயக்கத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர். அண்ணா, கருணாநிதி போன்ற எளிய சாதிப்பின்னணி கொண்ட தலைவர்களைப் பொதுமேடையிலேயே சாதிவெறி கொண்டு வசைபாடியவர். திராவிட நாடு கோரிக்கை, தமிழுணர்வு, இந்துமத எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை மூர்க்கமாக மறுத்தும் எதிர்த்தும் வந்தவர். அவரது மேடைப்பேச்சுகளைப் படித்தால் திராவிட இயக்கத்தின் மீதான அவரது ஆழ்மன வெறுப்பை உணரமுடியும். இதுவும் முக்குலத்தோர் சாதிகள் திமுகவை விலக்கி வைக்க மிக முக்கியமான காரணம்.

ஆனால் தற்பொழுதோ முக்குலத்தோர்கள் அதிகம் நிறைந்த திருமங்கலம் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணியை வீழ்த்த முடிகிறது, மதுரை உள்ளிட்ட முக்குலத்தோர்கள் அதிகம் நிறைந்த தென்மாவட்டங்களில் அதிமுகவின் இடத்தைத் திமுக கைப்பற்ற முடிகிறது என்றால் அதன் அரசியல்& சமூக அடித்தளம் என்னவாக மாறியிருக்கிறது என்பதுதான் மிக முக்கியமாய் ஆராயப்படவேண்டியது..

பாரதிய ஜனதா கட்சி என்னும் அதிகாரப்பூர்வ இந்துத்துவ அரசியல் கட்சிகளோடு மற்ற தமிழகக் கட்சிகள் எளிதாகக் கூட்டு வைத்துக்கொண்டபோது திமுகவிற்கு இருந்த தயக்கம் நமக்குத் தெரியும். மேலும் பா.ஜ.கவோடு கூட்டு சேர்ந்ததற்காக அதிகம் விமர்சிக்கப்பட்ட திராவிடக் கட்சியும் திமுகதான். ஏனெனில் மிஞ்சியிருக்கிற திராவிட அரசியலின் அடிப்படைகள் திமுகவில்தான் இருக்கின்றன என்றும் அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் மற்றெந்த திராவிடக் கட்சிகளை விடவும் திமுகவிற்குத்தான் உண்டென்றும் நாம் நம்பினோம்.

ஆனால் திராவிட அரசியலுக்கான அனைத்து அடிப்படைகளையும் திமுக இழந்து வருவது மட்டுமில்லாது, அது அதிமுகவின் பண்புகளை உள்வாங்கிக்கொள்ளும் கட்சியாக மாறி வருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருணாநிதியின் அதிகாரப் பசி, குடும்ப அரசியல், ஊழல்மயப்பட்ட தொண்டர்கள் என்பவை இத்தகைய பண்பு மாற்றத்திற்குப் பிரதான காரணங்கள் என்றாலும் இவை மட்டுமே காரணங்கள் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அயோக்கியத்தனம்..

நாம் முன்பே பேசியபடி உலகமயப் பாதிப்புகள் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லை. பிரம்மாண்டமான ஆண்குறியென கட்டமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்ததும் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்ததும் காங்கிரசு ஆட்சியில்தான். ஆனால் காங்கிரசு முன்னைவிட வலிமையாக எழுந்துநிற்கிறது. பெயரளவிற்கேனும் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்ட மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் தங்களின் செல்வாக்குப் பிரதேசங்களான கேரளாவிலும் மேற்குவங்கத்திலுமே பலத்த அடி வாங்குகின்றனர்.

தமிழ்நாட்டிலோ உலகமய எதிர்ப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமளவிற்கு தேர்தல் இடதுசாரிகள் பலம் வாய்ந்தவர்கள் அல்ல. தலித் அமைப்புகளும் உலகமயத்தை ஏற்று சமரசம் செய்துகொண்டன. இத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டிய வரலாற்றுத் தகுதி திராவிட இயக்கத்திற்கு உண்டு. சமதர்மம் என்கிற சொல்லாடல் தமிழகத்தில் அதிகமாய்ப் புழக்கத்திற்கு வந்தது பெரியாரியக்கத்தால்தான். அண்ணாவின் படைப்புகளிலும் பார்ப்பன எதிர்ப்பை விட பண்ணையார் எதிர்ப்பு விஞ்சி நிற்பதை அவதானிக்க முடியும்.

ஆனால் இடைத்தட்டு சாதிகள் & இடைத்தட்டு வர்க்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக இதுவரை விளங்கிய திமுகவின் தலைமை மற்றும் செல்வாக்குள்ள ஆளுமைகள் இப்போது முற்றிலுமாக மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதிகளாக மாறிப்போயினர். நாகூர் அனிபாவின் மேடைப் பாடல்களிலிருந்து ஜேடி ஜெர்ரி என்கிற தேர்ந்த விளம்பர இயக்குனர்களால் இயக்கப்பட்டதாக திமுகவின் பிரச்சார உத்தி இந்த தேர்தலில் மாறிப்போனது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

திமுக இதுவரை பேசிவந்த மொன்னையான கம்யூனிசத்தையும் அது கைகழுவிவிட்டது. அதன் சமூக அடித்தளங்களாக இடைநிலைச் சாதிகளும் ( இதுவும் கூட மென்மையான, குறைந்தளவிலான அதிகாரம் கொண்ட இடைநிலைச்சாதிகள் அல்ல, ஒரு வலிமையான அதிகார மய்யமாகத் திடப்பட்டிருக்கிற, வன்முறை மூலம் தமக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்கிற இடைநிலைச்சாதிகள்) அதிகாரத் தொடர்புகளாகவும் பங்காளிகளாகவும் பார்ப்பன மற்றும் உயர்சாதியினரைக் கொண்டிருக்கிற கட்சியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்கிற வடவரெதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்த திமுகவின் தலைவர் கருணாநிதி, ‘வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது’ என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசினார். தமிழ், தமிழுணர்வு ஆகிய விஷயங்களைக் கூட இப்போது கருணாநிதி அவ்வப்போது ரகசியமான குரலில்தான் பேசி வருகிறார். நாத்திகம் மாதிரியான விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. குறைந்தபட்சம் இதுமாதிரியான திமுகவின் அடிப்படை விஷயங்களைப் ‘பேசக்கூடிய நபராக’ கருணாநிதி இருக்கிறார் என்பதே திராவிட இயக்கம் என்ற பெயருக்கான கடைசி மரியாதையாகவும், திராவிட இயக்கச்சார்பு கொண்ட தமிழுணர்வாளர்களின் எஞ்சி நிற்கும் ஆறுதலாகவும் இருக்கிறது பரிதாபத்திற்குரிய உண்மை.

பெயரளவிற்கேனும் இருக்கிற கருத்தியல் அடிப்படைகளையும் ‘ஊத்திமூடி’ இப்போது ‘எல்லோருக்குமான’ ஜனரஞ்சகக் கட்சியாக மாறியிருக்கிற திமுக, கருணாநிதிக்குப் பிறகு கருத்தியல் அடிப்படைகள் ஏதுமற்ற, எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பற்ற தலைமைகளால் வழிநடத்தப்படும்போது அது வெகுவிரைவில் ஒரு வலதுசாரிக்கட்சியாக மாறிவிடுகிற அபாயமிருக்கிறது.

திமுக இப்போதெல்ல்லாம் அதிகம் ஊர்வலங்கள், மாநாடுகளை நடத்துவதில்லை. எழுச்சிமிக்க முழக்கங்களை முன்வைப்பதுமில்லை. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திமுக ஊர்வலங்களில் முன்வைக்கப்பட்ட அய்ம்பெரும் முழக்கங்களை முன்வைத்து இன்றைய திமுகவின் நிலையையும் வாசகர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

அண்ணா வழியில் அயராதுழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி!

இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான அருந்ததிராயின் குரல்
இலங்கையில் இன்று பெருகி வரும் பயங்கரத்தை அதைச் சுற்றியுள்ள மௌனமே சாத்தியப்படுத்துகிறது. மய்ய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் இதுகுறித்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது ரொம்பவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கொஞ்சநஞ்சமாய்க் கசிந்துவரும் செய்திகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில் ’பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்கிற பிரச்சாரத்தை இலங்கை அரசு தன் அம்மணத்தை மறைத்துக்கொள்ள கோவணத்துணியாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதுதான். அந்த நாட்டில் எஞ்சியுள்ள கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் இன்று அழித்து தமிழ் மக்களின் மீது சொல்லொணாக்குற்றங்களைப் புரிவதற்கு இந்தப் பிரச்சாரத்தை அது பயன்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு தமிழரும் தன்னை வேறுவகையில் நிறுவிக்கொள்ளாதவரை ஒரு பயங்கரவாதியாகவே கருதப்படவேண்டும் என்கிற ‘கொள்கை’யுடன் செயல்படும் இலங்கை அரசு குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வதிவிடங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும் குண்டுகளைப் பொழிந்து அவற்றையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. நம்பத்தகுந்த மதிப்பீடுகளின்படி இன்று போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலுள்ளது. டாங்குகள், போர்விமானங்கள் சகிதம் இன்று இலங்கை ராணுவம் முன்னேறிக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக குடியமர்த்துவதற்கென வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் பல ’பொதுநலக் கிராமங்களை’ நிறுவியிருப்பதாக அரசுத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின்படி (பிப் 14, 2009) ‘‘போரிலிருந்து தப்பி ஓடிவரும் பொதுமக்களைக் கட்டாயமாகப் பிடித்து வைக்கும் மய்யங்களாக’’ இந்த கிராமங்கள் செயல்படுமாம், அரசுக்குப் பிடித்தவர்களை ஒதுக்கிக் குடியமர்த்தும் சிறைமுகாம்களுக்கான இன்னொரு பெயரா இது? இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழிடம் பேசும்போது, ‘பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கை அரசு கொழும்பிலுள்ள தமிழர்கள் எல்லோரையும் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. 1930களில் நாஜிகள் செய்தத்துபோல் இதுவும்கூட வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அடிப்படையில் அவர்கள் எல்லாத் தமிழ்மக்களையும் சாத்தியமான பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்போகிறார்கள்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளைத் ‘துடைத்தெறிவது’ என அது அறிவித்துக்கொண்டுள்ள குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாறு பொதுமக்களையும் ‘பயங்கரவாதிகளையும்’ ஒன்றாக்கும் இச்சதியின் மூலம் இறுதியில் இனப்படுகொலையாக முடியக்கூடிய ஒரு செயலைச் செய்து முடிக்கும் எல்லைக்கே இலங்கை அரசு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஐ.நா அவையின் மதிப்பீடு ஒன்றின்படி ஏற்கனவே அங்கு பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இன்றும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலரின் கூற்றுகள் நரகத்திலிருந்து எழுகின்ற ஒரு கொடுங்கனவின் விவரணமாக அமைந்துள்ளன. இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, ஆனால் ரொம்பவும் வெற்றிகரமாய் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்ற இக்கொடுமைகளை அப்பட்டமான, வெளிப்படையான இனவாதப் போர் எனச் சொல்லலாமா? எந்தவிதமான கண்டனங்களுக்கும் ஆட்படாமல் இலங்கை அரசு இந்தக்கொடுமைகளைச் செய்துவர முடிந்துள்ள நிலை அதனுள் ஆழமாகப் பதிந்துள்ள இனவாதப்பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது. இதுவே இலங்கைத்தமிழ் மக்கள் அன்னியப்பட நேர்ந்ததற்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் தொடக்கமாக அமைந்தது. சமூகவிலக்கு, பொருளாதாரத்தடை, படுகொலைகள், சித்திரவதைகள் என இந்த இனவாதத்திற்கு ஒரு ஒரு நீண்ட வரலாறுண்டு. அமைதியான, வன்முறையற்ற போராட்டமாகத் தொடங்கிய ஒன்று கொடூரமான பண்புகளுடன் கூடிய ஒரு நீண்ட சிவில் யுத்தமாக மாறியதன் வேர்கள் இங்குதான் உள்ளன.

ஏனிந்த மவுனம்? இன்றைய இலங்கையில் சுதந்திரமான ஊடகம் என ஒன்று இல்லை என இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

சமூகத்தை ‘அச்சத்தில்’ உறைய வைத்துள்ள கொலைப்படைகள் குறித்தும் ’வெள்ளைவேன் கடத்தல்கள்’ குறித்தும்கூட சமரவீர கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு எதிர்ப்புக்குரலை ஒலித்த பலர், கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் வாயை அடைப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள், காணாமல் போகடித்தல், படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவதை ’பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ வன்மையாகக் கண்டித்துள்ளது.

மனித சமூகத்திற்கு எதிரான இந்தக் கொடுமைகளில் இலங்கை அரசுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகளையும், பக்க ஆதரவுகளையும் இந்திய அரசு வழங்கி வருவது குறித்து வேதனைக்குரிய ஆனால் உறுதி செய்யப்பட இயலாத தகவல்கள் நிலவுகின்றன. உண்மையாயின் இது மிகவும் மூர்க்கத்தனமான கொடுமை. மற்ற அரசுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலையை மட்டுப்படுத்தவோ அதிகரிக்கவோ அவை என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் இந்தப் போரினால் தூண்டப்பட்ட உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தீயில் மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும் இன்று ஒரு தேர்தல் பிரச்சினை ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபம், துயர் ஆகியவற்றில் பெரும்பகுதி உண்மையில் தன்னிச்சையாக உருவானவை என்றபோதிலும் ஒருபகுதி தந்திரமான அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்டதாகும்.

எனினும் இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்றடையாதது வியப்பூட்டுகிறது. ஏன் இங்கு இந்த மௌனம்? இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் நிச்சயமான இங்கே ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ இல்லை. இலங்கையில் நடைபெறும் வன்முறைகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மவுனம் மன்னிக்கக்கூடியதல்ல. முதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது, அப்புறம் இன்னொரு தரப்பை ஆதரிப்பது என்கிற வகையில் இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற தலையீடுகளின் நீண்ட வரலாறு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. முன்னதாகவே பேசியிருக்க வேண்டிய நான் உட்பட எங்களில் பலர் அப்படிச் செய்யாமல் போனதற்குக் காரணம் இந்தப் போர் குறித்த முழுத்தகவல்களும் எங்களுக்குக் கிடைக்காமல் போனதே.

ஆக படுகொலைகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில், பத்தாயிரக்கணக்கானோர் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பசியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு இன அழிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் (இந்தியாவில்) ஒரு மரண அமைதி நிலவுகிறது. இது ஒரு மாபெரும் மனிதசோகம். உலகம் இதில் தலையிட வேண்டும். இப்போதே....எல்லாம் முடிந்து போவதற்கு முன்பே.

சில குறிப்புகள் :


* அருந்ததிராய் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு’வினரால் அச்சடித்து வினியோகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக மார்ச் 30, 2009 அன்று மாலை லயோலா கல்லூரியில் இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. தோழர்.அ.மார்க்ஸ், இலங்கை அய்க்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூர்யா, டெல்லி பத்திரிகையாளர் சத்தியா சிவராமன், தமிழீழப் போராட்டக்குழுவைச் சேர்ந்த சுதாகாந்தி ஆகியோர் பேசினர். அருந்ததிராய் கட்டுரையின் ஆங்கில மூலத்தைத் தோழர் வ.கீதா வாசித்தார். சத்தியா சிவராமனின் பேச்சைப் பேராசிரியர் சிவக்குமாரும் ஜெயசூர்யாவின் பேச்சைத் தோழர் தியாகுவும் தமிழில் மொழிபெயர்த்தனர். ஏப்ரல் 8 அன்று சென்னை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளது.

* அருந்ததிராய், தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மக்களின்பால் நிற்கக்கூடியவர். அதற்கான போராட்டங்களில் தன்னை பங்குபற்றிக்கொண்டவர். ஆனால் ஈழப்பிரச்சினை குறித்த அவரது ’மவுனத்தின்’ அடிப்படையில் மட்டும் அவரைக் கீழிறக்குவது என்பது துரதிர்ஷ்டவசமானது. புலிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் இனப்படுகொலை தொடர்பான விபரங்களை எந்த அளவிற்கு அறிவுஜீவிகளிடமும் மனித உரிமைப் போராளிகளிடமும் கொண்டு சேர்த்தனர் என்கிற கேள்வி இங்கு முக்கியமானது. மேலும் உலகமெங்கும் ஆங்காங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காய்ப் போராடிக்கொண்டிருக்கும் புரட்சிகர இயக்கங்களோடும் ஜனநாயகச் சக்திகளோடும் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என்னவிதமான உரையாடல்களை இதுவரை நிகழ்த்தியிருக்கிறார்கள்? இறுக்கமான மூடுண்ட அமைப்பாய்த் திகழும் விடுதலைப்புலிகள் இதுவரை தமிழகத்து ‘சவடால் அரசியல்வாதிகளையும்’ இந்திய மய்ய அரசின் கருணைப்பார்வையையும் மட்டும் நம்பியிருப்பது யார் தவறு என்கிற கேள்விகளையும் வரலாற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்க வேண்டும்.

* ‘ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி’ என்ற பெயரில் ஜனநாயகச்சக்திகளின் மீது அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் ‘என்றென்றும் அன்புடன்’ பாலா எழுதுவது அதற்கு ஒரு உதாரணம். அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்? சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள், ‘அருந்ததிராய் ‘பப்ளிசிட்டிக்காக’ மட்டுமே பேசுவார்’ என்று அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதேபோலவே புலிகளின் மீதான விமர்சனத்தோடேயே ஈழமக்களின் பிரச்சினைகளைப் பேசும் சுகன், ஷோபாசக்தி, அ.மார்க்ஸ், ரயாகரன் என மாற்றுக்குரலை முன்வைக்கும் அனைவரையும் ரா ஆட்கள், கருணா ஆதரவாளர்கள், இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறு பரப்புவது, அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் நியாயங்களைக் கூட பரிசீலிக்க மூர்க்கமாய் மறுப்பது ஆகியவை இன்று இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை விமர்சிப்பதை விட மேற்கண்ட ஜனநாயகச் சக்திகளைக் காய்வதே அதிகமாய் நடக்கிறது. துரோகி பட்டம்தான் நமக்கு வாரி வழங்குவதற்கு ஏகப்பட்ட கையிருப்பு உள்ளதே! உலகமயமாக்கல், இந்துத்துவ வன்முறைகள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், சமீபகாலமாய் பெண்களின் மீது அதிகரித்து வரும் கலாச்சாரப் பாசிஸ்ட்களின் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களே ஈழப்பிரச்சினை குறித்தும் விமர்சனபூர்வமான போராட்டங்களில் பற்றி உறுதியாய் நிற்கின்றனர். வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் ‘திடீர்’ ஈழ ஆதரவாளர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது பார்ப்பன தேசம்

மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர் சங்கமொன்று இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிங்களக்கொடியையும் ராஜபக்சேவின் உருவப்படத்தையும் எரித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வெளியானது. ‘உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல்‘ என்று. நீதிமன்றத்தின் வாயில் முன்பு முன்னூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ‘பத்திரிகையாளர்கள்‘ என்று சொல்லாவிட்டால் அந்த வேட்டைநாய்களின் தடியடிக்கு இரையாவதிலிருந்து தப்பியிருக்க முடியாது. சுற்றிலும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை அடிக்கடி அடித்துக் கலைப்பதும் மக்கள் திரள் கலைந்து ஓடுவதுமாக ஒரே அமளிதுமளி. திடீரென்று நீதிமன்றத்தில் அடித்து நொறுக்குகிற ஓசை. காம்பவுண்ட் சுவர் வழியாக எட்டிப் பார்த்தால் வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தது போலீசு. சட்டம் ஒழுங்கை வழக்கறிஞர்கள் கெடுத்தார்கள் என்றுதான் தாக்குதல் என்றால் கார்க்கண்ணாடிகள் என்ன செய்தன? ஒருவழியாகப் போலிசின் வெறியாட்டம் நடந்து முடிந்து கமிஷனர் பேட்டிச்சம்பிரதாயமும் முடிந்து திரும்பும் வேளை. குடும்பநல நீதிமன்றத்தின் மொட்டைமாடியில் கால் உடைந்து ‘காப்பாற்றுங்கள்‘ என்று கதறிக்கொண்டிருந்தார் வழக்கறிஞர் ஒருவர். பத்திரிகையாள நண்பர்களும் பொதுமக்களும் ஒருவழியாக அவரைக் காப்பாற்றி இறக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆனால் இன்றைய தினத்தந்தியில் செய்தி வந்திருக்கிறது ‘அந்த வழக்கறிஞரைக் காப்பாற்றியது போலிசும் நீதிமன்றப் பணியாளர்களும்’ என்று.

எப்போது பார்த்தாலும் ‘பார்ப்பானைத் திட்டுகிறீர்களே’ என்று கேட்கும் நண்பர்களே, இப்போது சொல்லுங்கள். ‘யாருமே இல்லாத டீக்கடையில் டீ பார்ட்டி நடத்துகிற’ அரசியல் அனாதை சூனாசாமிக்கு ஆதரவாகத்தானே நடந்தது வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் படலம்? ஆள்பலம் இல்லாத சு.சாமியால் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவர் கருணாநிதியை இயக்க முடிகிறதே! (இவ்வளவு பிரச்சினைக்களுக்கு மத்தியில் காந்திகண்ணதாசனுக்குக் கடிதம் எழுதுகிற கருணாநிதியை என்ன செய்வது?)

‘இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனத் தேசியம்’ என்கிற புரிதல் பெரியாருக்கு இருந்ததால்தான் அவரால் பிரிவினைக் கோரிக்கையை முன்வைக்க முடிந்தது. இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனியக் கருத்தியல், இந்தியத்தேசம் என்பது பார்ப்பனியக் கட்டமைப்பு. அதன் கருத்தியல் நிறுவனங்கள்தான் மத்திய அரசும் மாநில அரசுகளும். அந்த நிறுவனங்களின் எடுபிடிகளில் ஒருவர்தான் ‘சூத்திரத்தலைவர்‘ கருணாநிதி. இப்போது மக்கள் எழுச்சி இருக்கிறது, கனவாய், பழங்கதையாய் மங்கிப்போயிருந்த போராட்ட உணர்வு எழுந்திருக்கிறது. மறுபுறம் ரத்தப்பசியோடு ஆளும் நிறுவனங்களும் அதிகார வர்க்கமும் தயாராகவே இருக்கின்றன, இல்லாமல் போனதெல்லாம் ‘பெரியார்’ மட்டுமே.

ஈழத்தமிழர்களுக்காகப் பெரியகுளத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் அரளி விதையை அரைத்துக்குடித்தனர்.

கடைசியாக வந்த தகவல் இது. அவர்களின் நிலை இப்போது என்னவென்று தெரியவில்லை. துரோகி கருணாநிதி அரசின் போலீசு மற்றும் சட்ட ஒடுக்குமுறை ஒருபுறம், தமிழகமெங்கும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை மூடி மறைப்பதில் சன் டிவி, கருணாநிதி டி.வி, ஜெயா டிவி என கைகோர்த்து நிற்கும் மீடியா துரோகம் மறுபுறம் என அத்தனையும் தாண்டி ஆங்காங்கு ஈழப்போருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. கருணாநிதியே இன்னும் எத்தனைத் தமிழர்களைப் பலி வாங்கக் காத்திருக்கிறாய்?

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

வலைப்பதிவுத் தோழர்களே!

ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி ஆகியோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி

இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.


மேலும் தொடர்புகளுக்கு : 9841354308, 9840903590, 9790948623.

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

ஈழப்பிரச்சினை : கருணாநிதி மட்டும்தான் துரோகியா?

ஈழத்துப் போர்ச்சூழல்கள் மென்மேலும் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலில் குறிப்பாக ஈழத்தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் வெறுமனே உணர்ச்சிவசப்படுதலோ மய்யநீரோட்ட அரசியல் அடிப்படையிலான கருத்துப்போர்கள் மட்டுமே தீர்வாகாது. மாறாக, இன்றைய எதார்த்தநிலைமைகள் குறித்த அவதானிப்பு நமக்கு அவசியமாகிறது.

'கிளிநொச்சி வீழ்ந்ததற்கே கருணாநிதிதான் காரணம்' என்கிற வகையிலான இணையப்பதிவுகள் நகைப்புக்குரியன. இதனாலேயே கருணாநிதி ராஜினாமா செய்யவேண்டும், அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்கிற கோபப்பதிவுகளின் நியாயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறதென்றாலும் இன்றுள்ள சிக்கல்களுக்குக் கருணாநிதி மட்டுமே காரணமில்லை என்பதை சற்று ஆழ்ந்து யோசித்தால் உணரமுடியும். மேலும் ஈழப்பிரச்சினையில் மட்டும்தான் கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகமிழைத்தாரா என்ன? காவிரிப்பிரச்சினை தொடங்கித் தமிழகத் தமிழர்களின் பல்வேறு வாழ்வாதாரப்பிரச்சினைகளிலும் கருணாநிதி அவ்விதமே செயல்பட்டு வந்திருக்கிறார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை ஓராண்டாகக் கிடப்பில் போட்டுவிட்டு இப்போது ஆளுநர் உரையில் மீண்டும் ஒகேனக்கல் திட்டம் குறித்து பூச்சாண்டி காட்டிவருகிறார். இப்போது கருணாநிதி தமிழினத்திற்கு இழைத்துள்ள துரோகங்களின் எண்ணிக்கை ஒன்று கூடியிருக்கிறதே தவிர வேறல்ல.

மேலும் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மட்டுமல்ல, அவரளவிற்குச் சமரசங்களையும் துரோகங்களையும் பின்னடைகளையும் நிகழ்த்திக்காட்டியதில் பிரபாகரனும் சளைத்தவரில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கருணாநிதி மட்டும்தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகவும் பிரபாகரன் சமரசமற்ற போராளி என்பதுபோலவும் வரைந்துகாட்டப்படும் சித்திரங்கள் கேலிச்சித்திரங்களே. ஒருவேளை நாளை ஈழத்தில் முற்றாகப் புலிகள் சிங்கள அரசால் ஒழிக்கப்படுவார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஈராக்கில் அமெரிக்க வல்லாதிக்கத்தால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது ஈராக்கில் பெரிய அளவில் ஆயுதத் தாங்கிய போராளிக்குழுக்கள் இல்லை. ஆனாலும் மக்களே தன்னெழுச்சியாக அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகளின் ராணுவத்திற்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை நிகழ்த்தி வந்தனர், வருகின்றனர். ஆனால், நாளை புலிகள் இல்லாத சூழலில் ஈழத்தில் அவ்வாறான மக்கள் போராட்டங்கள் நிகழுமா? புதைப்பது, விதைப்பது என்கிற வீரவசனப் படங்காட்டுதலைத் தள்ளிவைத்துப் பார்த்தால் அப்படி நடப்பதற்கான எந்த சாத்தியங்களுமில்லை என்பதே எதார்த்தம். மலையகத்தமிழர், முஸ்லீம்கள் ஆகியோரை ஈழப்போராட்டத்தினின்று ஒதுங்குவதற்கு/ஒதுக்குவதற்கான சூழலை உருவாக்கியது யார்? எண்ணற்ற போராளிக்குழுக்கள் அழிந்துபோனதும் பேரினவாத அரசின் கைக்கூலிகளாகவும் மாறிப்போனது யாரால்? இத்தகைய கேள்விகளையும் சேர்த்தே நாம் யோசிக்க வேண்டும்.

மேலும், இன்றைக்குக் கருணாநிதிக்கு இருக்கும் மிக முக்கியமான சிக்கலான ராஜீவ் கொலையை நிகழ்த்தி அத்தகைய சிக்கலை உருவாக்கியதும் புலிகள்தான். (இதன் அர்த்தம் ராஜீவ் ஒரு புனிதமான மனிதர் என்பதோ அவர் கொலை தவறு என்பதோ அல்ல). மேலும் புதியபோராளி என்னும் மார்க்சிய லெனினிய இதழில் தோழர் சமரன் எழுதியிருப்பதைப் போல புலிகள் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஆதரவை மட்டுமே எதிர்பார்த்து நிற்பதும் வேறு நாடுகளோடு எவ்வித உறவுகளையும் வளர்த்துக்கொள்ளாததும் அறிவீனமான செயல். இப்போது ஒபாமாவை எதிர்பார்த்து புலிகள் இயக்கம் நிற்பதாய்த் தெரிகிறது. இது மேலுமொரு ‘கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிதலைப்‘ போன்றதே. நிச்சயமாக நாளை தமிழீழம் அமைந்தாலும் அது அமெரிக்க ஆதரவு நாடாகத்தான் இருக்கும் என்பதும் கியூபா, நேபாளம் போலவோ அல்லது குறைந்தபட்சம் வெனிசுலா போலவோ குறைந்தபட்ச ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை அற்ற நாடாகக் கூட இருக்காது என்பது வெளிப்படையான உண்மை.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் விட்டுவிடுவோம். தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கு வருவோம். சி.பி.அய் முதன்முதலாக ஈழப்பிரச்சினை குறித்துப் பேசத்தலைப்பட்டதே கூட்டணியை உருவாக்க முயல்கிற சாதுர்யத்தின் அடிப்படையிலேயே. அதுவும் இப்போது தா.பா தலைமையிலான சி.பி.அய் மய்யநீரோட்ட வலதுசாரிக்கட்சியான அதிமுகவோடு நெருக்கம் காட்டுவது மிகவும் ஆபத்தான ஒன்று. அதிமுக வெளிப்படையான தேவர் ஆதரவுக்கட்சி. தா. பாவோ ஒரு ‘கம்யூனிஸ்ட்‘ ஆகக் காட்டிக்கொண்டாலும் அகமுடையார் சங்கவிழாவில் கலந்துகொண்டவர். எனவே சி.பி.அய் & அதிமுக கூட்டு என்பதே பார்ப்பன & தேவர் கூட்டுதான். இன்னொருபுறம் சி.பி.எம் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதாலேயே திமுகவை விட்டு வெளியேறியது. ஆனால் பகிரங்கமாக அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கும் விஜயகாந்தை கூட்டணிக்காக வெட்கமின்றிச் சந்தித்தது. இப்படித்தான் முன்பு எம்.ஜி.ஆரை வளர்த்துவிட்டதில் சி.பி.எம் கட்சிக்குப் பெரும்பங்குண்டு. எம்.ஜி.ஆர், விஜயகாந்த் மாதிரியான கருத்தியல் அடிப்படையற்ற சக்திகளை வளர்த்து விடுவதன் மூலம் எந்நேரமும் அவர்கள் வலதுசாரி சக்திகளோடு உறவு வைத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கித்தரும் குற்றமும் ‘இடதுசாரி‘களையே சாரும். ‘கருணாநிதி ஏன் மன்மோகன் அரசிலிருந்து விலகவில்லை?‘ என்று கேள்வி கேட்பவர்கள் சி.பி.அய்யும் மதிமுகவும் ஏன் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என்று கேட்பதில்லை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் இன்று திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று பிரிந்து கிடக்கிற ‘ஈழவிடுதலை ஆதரவாளர்களாக‘க் காட்டிக்கொள்கிற மய்யநீரோட்ட அரசியல் சக்திகள் வலியுறுத்தக்கூடிய ஒரே கோரிக்கை, ‘இந்திய அரசே இலங்கையில் போரைத் தடுத்து நிறுத்து‘. உண்மையில் இது ஒரு அபத்தமான கோரிக்கை. இந்தியா என்பது ஒரு தெற்காசியப் பேட்டை ரவுடி. அதன் ஆதிக்க நலன்களுக்கு இப்போதைக்கு ஏற்றது பேரினவாத அரசு ஆதரவு. மற்றும் இந்திய அரசைப் பின்னிருந்து இயக்கம் ஆளும் வர்க்க முதலாளித்துவச் சக்திகளின் பெரு முதலீடுகள் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவானவை. மேலும் இலங்கை அரசைப் போலவே இந்தியாவும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் சொந்த மக்கள் மீதே அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவிவரும் ஆதிக்க அரசு. ஒரு ஆதிக்க அரசிடம் எப்படி இன்னொரு ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை வைக்க இயலும்?

ஆனால் புலி ஆதரவாளர்களோ இன்னமும் இந்தியாவையே நம்புகின்றனர். அதற்காக பாகிஸ்தான் எதிர்ப்பு, சீன எதிர்ப்பு ஆகியவற்றைப் பேரமாக முன்வைக்கவும் தயங்குவதில்லை. இது ஒரு பச்சைச் சந்தர்ப்பவாதமே. இன்னொரு நகைமுரணையும் யோசித்துப் பாருங்கள். இங்கு புலிகளை ஆதரிக்கும் தமிழ்த்தேசியச் சக்திகளின் எதிரி இந்தியத் தேசியமும் அதன் ஆளும் வடிவமான இந்திய அரசும். ஆனால் புலி மற்றும் புலி ஆதரவாளர்களின் ‘நம்பிக்கை நட்சத்திரம்‘ அதே இந்திய அரசு. அப்படியானால் தமிழீழத்தேசியத்தை முன்வைக்கும் புலிகள் தங்கள் அரசியல் வெற்றிக்காகத் தங்களை ஆதரித்து வரும் தமிழ்த்தேசியச் சக்திகளின் கருத்தியல் அடிப்படைகளைக் காட்டிக்கொடுக்க முனைகின்றனர் என்பதே எதார்த்தம்.

எனவே கருணாநிதி மட்டுமல்ல, சி.பி.அய், ராமதாஸ், மதிமுக, புலிகள், புலி ஆதரவாளர்கள் என அனைவருமே தங்களால் இயன்றவரை ஈழப்போராட்டத்திற்குத் தங்களால் இயன்ற துரோகத்தைச் செய்துவருகின்றனர். ஈழப்போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கும் தினமலரோடு கருத்தியல் மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணும் காலச்சுவடு, உயிர்மை இதழ்களின் பக்கங்களையும் மேடைகளையும் பகிர்ந்து கொள்ளும் ஈழ ஆதரவு தமிழக மற்றும் ஈழ இலக்கியவாதிகள் வரை இந்த துரோகம் தொடர்கிறது. எனவே ஈழப்போராட்டத்தில் ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டுமானால் இதுவரையிலான போராட்டம் குறித்த விமர்சனப் பார்வையும் இந்திய அரசின் வர்க்க மற்றும் சாதியக் கருத்தியல் சார்பு/ தன்மை குறித்த கருத்தியல் தெளிவும் அவசியம். இன்று இந்திய அரசை நோக்கி நாம் முன்வைப்பதற்கு இரண்டு கோரிக்கைகளே இருக்கின்றன, ‘‘ இந்திய அரசே இலங்கைப் பேரினவாத அரசிற்கு ஆயுதங்கள் வழங்கித் துரோகமிழைப்பதை நிறுத்து! இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு!‘‘

இந்த கோரிக்கைக்கான மக்கள் இயக்கங்களைத் திரட்டுவதே இந்திய அரசின் மீதான நிர்ப்பந்தமாய் மாறும். இல்லாவிட்டால் ‘ஈழத்தில் எத்தனைப் படுகொலைகள் நிகழ்ந்தாலும் ‘தலைவர்‘ பிரபாகரனை மட்டும் பிடிக்கவே முடியாது‘ என்று ‘நம்பிக்கைக்‘கட்டுரைகள் எழுதி ஆற்றுப்படுத்திக்கொண்டு நம்மை நாமே பிரமாதமாய் ஏமாற்றிக்கொள்ளலாம்.