இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான அருந்ததிராயின் குரல்
இலங்கையில் இன்று பெருகி வரும் பயங்கரத்தை அதைச் சுற்றியுள்ள மௌனமே சாத்தியப்படுத்துகிறது. மய்ய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும் இதுகுறித்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது ரொம்பவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. கொஞ்சநஞ்சமாய்க் கசிந்துவரும் செய்திகளிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில் ’பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்கிற பிரச்சாரத்தை இலங்கை அரசு தன் அம்மணத்தை மறைத்துக்கொள்ள கோவணத்துணியாகப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதுதான். அந்த நாட்டில் எஞ்சியுள்ள கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் இன்று அழித்து தமிழ் மக்களின் மீது சொல்லொணாக்குற்றங்களைப் புரிவதற்கு இந்தப் பிரச்சாரத்தை அது பயன்படுத்திக்கொள்கிறது. ஒவ்வொரு தமிழரும் தன்னை வேறுவகையில் நிறுவிக்கொள்ளாதவரை ஒரு பயங்கரவாதியாகவே கருதப்படவேண்டும் என்கிற ‘கொள்கை’யுடன் செயல்படும் இலங்கை அரசு குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வதிவிடங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும் குண்டுகளைப் பொழிந்து அவற்றையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. நம்பத்தகுந்த மதிப்பீடுகளின்படி இன்று போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலுள்ளது. டாங்குகள், போர்விமானங்கள் சகிதம் இன்று இலங்கை ராணுவம் முன்னேறிக்கொண்டுள்ளது.

இதற்கிடையில் இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக குடியமர்த்துவதற்கென வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் பல ’பொதுநலக் கிராமங்களை’ நிறுவியிருப்பதாக அரசுத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின்படி (பிப் 14, 2009) ‘‘போரிலிருந்து தப்பி ஓடிவரும் பொதுமக்களைக் கட்டாயமாகப் பிடித்து வைக்கும் மய்யங்களாக’’ இந்த கிராமங்கள் செயல்படுமாம், அரசுக்குப் பிடித்தவர்களை ஒதுக்கிக் குடியமர்த்தும் சிறைமுகாம்களுக்கான இன்னொரு பெயரா இது? இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ’டெய்லி டெலிகிராப்’ நாளிதழிடம் பேசும்போது, ‘பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கை அரசு கொழும்பிலுள்ள தமிழர்கள் எல்லோரையும் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது. 1930களில் நாஜிகள் செய்தத்துபோல் இதுவும்கூட வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அடிப்படையில் அவர்கள் எல்லாத் தமிழ்மக்களையும் சாத்தியமான பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்போகிறார்கள்’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளைத் ‘துடைத்தெறிவது’ என அது அறிவித்துக்கொண்டுள்ள குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாறு பொதுமக்களையும் ‘பயங்கரவாதிகளையும்’ ஒன்றாக்கும் இச்சதியின் மூலம் இறுதியில் இனப்படுகொலையாக முடியக்கூடிய ஒரு செயலைச் செய்து முடிக்கும் எல்லைக்கே இலங்கை அரசு சென்றுவிட்டதாகத் தெரிகிறது. ஐ.நா அவையின் மதிப்பீடு ஒன்றின்படி ஏற்கனவே அங்கு பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இன்றும் பல்லாயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். நேரடியாகப் பார்த்த சிலரின் கூற்றுகள் நரகத்திலிருந்து எழுகின்ற ஒரு கொடுங்கனவின் விவரணமாக அமைந்துள்ளன. இலங்கையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, ஆனால் ரொம்பவும் வெற்றிகரமாய் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்ற இக்கொடுமைகளை அப்பட்டமான, வெளிப்படையான இனவாதப் போர் எனச் சொல்லலாமா? எந்தவிதமான கண்டனங்களுக்கும் ஆட்படாமல் இலங்கை அரசு இந்தக்கொடுமைகளைச் செய்துவர முடிந்துள்ள நிலை அதனுள் ஆழமாகப் பதிந்துள்ள இனவாதப்பார்வையைத்தான் வெளிப்படுத்துகிறது. இதுவே இலங்கைத்தமிழ் மக்கள் அன்னியப்பட நேர்ந்ததற்கும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் தொடக்கமாக அமைந்தது. சமூகவிலக்கு, பொருளாதாரத்தடை, படுகொலைகள், சித்திரவதைகள் என இந்த இனவாதத்திற்கு ஒரு ஒரு நீண்ட வரலாறுண்டு. அமைதியான, வன்முறையற்ற போராட்டமாகத் தொடங்கிய ஒன்று கொடூரமான பண்புகளுடன் கூடிய ஒரு நீண்ட சிவில் யுத்தமாக மாறியதன் வேர்கள் இங்குதான் உள்ளன.

ஏனிந்த மவுனம்? இன்றைய இலங்கையில் சுதந்திரமான ஊடகம் என ஒன்று இல்லை என இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

சமூகத்தை ‘அச்சத்தில்’ உறைய வைத்துள்ள கொலைப்படைகள் குறித்தும் ’வெள்ளைவேன் கடத்தல்கள்’ குறித்தும்கூட சமரவீர கூறியுள்ளார். பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு எதிர்ப்புக்குரலை ஒலித்த பலர், கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் வாயை அடைப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்கள், காணாமல் போகடித்தல், படுகொலைகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்துவதை ’பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ வன்மையாகக் கண்டித்துள்ளது.

மனித சமூகத்திற்கு எதிரான இந்தக் கொடுமைகளில் இலங்கை அரசுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகளையும், பக்க ஆதரவுகளையும் இந்திய அரசு வழங்கி வருவது குறித்து வேதனைக்குரிய ஆனால் உறுதி செய்யப்பட இயலாத தகவல்கள் நிலவுகின்றன. உண்மையாயின் இது மிகவும் மூர்க்கத்தனமான கொடுமை. மற்ற அரசுகளின் நிலை என்ன? பாகிஸ்தான்? சீனா? இந்த நிலையை மட்டுப்படுத்தவோ அதிகரிக்கவோ அவை என்ன செய்கின்றன?

இலங்கையில் நடைபெறும் இந்தப் போரினால் தூண்டப்பட்ட உணர்வெழுச்சிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களைத் தீயில் மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும் இன்று ஒரு தேர்தல் பிரச்சினை ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபம், துயர் ஆகியவற்றில் பெரும்பகுதி உண்மையில் தன்னிச்சையாக உருவானவை என்றபோதிலும் ஒருபகுதி தந்திரமான அரசியல் நோக்கங்களுக்காகத் தூண்டப்பட்டதாகும்.

எனினும் இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளைச் சென்றடையாதது வியப்பூட்டுகிறது. ஏன் இங்கு இந்த மௌனம்? இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் நிச்சயமான இங்கே ‘வெள்ளை வேன் கடத்தல்கள்’ இல்லை. இலங்கையில் நடைபெறும் வன்முறைகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இந்த மவுனம் மன்னிக்கக்கூடியதல்ல. முதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது, அப்புறம் இன்னொரு தரப்பை ஆதரிப்பது என்கிற வகையில் இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற தலையீடுகளின் நீண்ட வரலாறு இதில் பெரும் பங்கு வகிக்கிறது. முன்னதாகவே பேசியிருக்க வேண்டிய நான் உட்பட எங்களில் பலர் அப்படிச் செய்யாமல் போனதற்குக் காரணம் இந்தப் போர் குறித்த முழுத்தகவல்களும் எங்களுக்குக் கிடைக்காமல் போனதே.

ஆக படுகொலைகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில், பத்தாயிரக்கணக்கானோர் சிறைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பசியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு இன அழிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில் இந்த நாட்டில் (இந்தியாவில்) ஒரு மரண அமைதி நிலவுகிறது. இது ஒரு மாபெரும் மனிதசோகம். உலகம் இதில் தலையிட வேண்டும். இப்போதே....எல்லாம் முடிந்து போவதற்கு முன்பே.

சில குறிப்புகள் :


* அருந்ததிராய் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ‘இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு’வினரால் அச்சடித்து வினியோகிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பாக மார்ச் 30, 2009 அன்று மாலை லயோலா கல்லூரியில் இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. தோழர்.அ.மார்க்ஸ், இலங்கை அய்க்கிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜெயசூர்யா, டெல்லி பத்திரிகையாளர் சத்தியா சிவராமன், தமிழீழப் போராட்டக்குழுவைச் சேர்ந்த சுதாகாந்தி ஆகியோர் பேசினர். அருந்ததிராய் கட்டுரையின் ஆங்கில மூலத்தைத் தோழர் வ.கீதா வாசித்தார். சத்தியா சிவராமனின் பேச்சைப் பேராசிரியர் சிவக்குமாரும் ஜெயசூர்யாவின் பேச்சைத் தோழர் தியாகுவும் தமிழில் மொழிபெயர்த்தனர். ஏப்ரல் 8 அன்று சென்னை உள்ளிட்ட உலகின் முக்கிய நகரங்களில் இந்த அமைப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளது.

* அருந்ததிராய், தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மக்களின்பால் நிற்கக்கூடியவர். அதற்கான போராட்டங்களில் தன்னை பங்குபற்றிக்கொண்டவர். ஆனால் ஈழப்பிரச்சினை குறித்த அவரது ’மவுனத்தின்’ அடிப்படையில் மட்டும் அவரைக் கீழிறக்குவது என்பது துரதிர்ஷ்டவசமானது. புலிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் இனப்படுகொலை தொடர்பான விபரங்களை எந்த அளவிற்கு அறிவுஜீவிகளிடமும் மனித உரிமைப் போராளிகளிடமும் கொண்டு சேர்த்தனர் என்கிற கேள்வி இங்கு முக்கியமானது. மேலும் உலகமெங்கும் ஆங்காங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காய்ப் போராடிக்கொண்டிருக்கும் புரட்சிகர இயக்கங்களோடும் ஜனநாயகச் சக்திகளோடும் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என்னவிதமான உரையாடல்களை இதுவரை நிகழ்த்தியிருக்கிறார்கள்? இறுக்கமான மூடுண்ட அமைப்பாய்த் திகழும் விடுதலைப்புலிகள் இதுவரை தமிழகத்து ‘சவடால் அரசியல்வாதிகளையும்’ இந்திய மய்ய அரசின் கருணைப்பார்வையையும் மட்டும் நம்பியிருப்பது யார் தவறு என்கிற கேள்விகளையும் வரலாற்றின் வெளிச்சத்தில் பரிசீலிக்க வேண்டும்.

* ‘ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி’ என்ற பெயரில் ஜனநாயகச்சக்திகளின் மீது அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் ‘என்றென்றும் அன்புடன்’ பாலா எழுதுவது அதற்கு ஒரு உதாரணம். அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்? சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள், ‘அருந்ததிராய் ‘பப்ளிசிட்டிக்காக’ மட்டுமே பேசுவார்’ என்று அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதேபோலவே புலிகளின் மீதான விமர்சனத்தோடேயே ஈழமக்களின் பிரச்சினைகளைப் பேசும் சுகன், ஷோபாசக்தி, அ.மார்க்ஸ், ரயாகரன் என மாற்றுக்குரலை முன்வைக்கும் அனைவரையும் ரா ஆட்கள், கருணா ஆதரவாளர்கள், இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறு பரப்புவது, அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் நியாயங்களைக் கூட பரிசீலிக்க மூர்க்கமாய் மறுப்பது ஆகியவை இன்று இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை விமர்சிப்பதை விட மேற்கண்ட ஜனநாயகச் சக்திகளைக் காய்வதே அதிகமாய் நடக்கிறது. துரோகி பட்டம்தான் நமக்கு வாரி வழங்குவதற்கு ஏகப்பட்ட கையிருப்பு உள்ளதே! உலகமயமாக்கல், இந்துத்துவ வன்முறைகள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், சமீபகாலமாய் பெண்களின் மீது அதிகரித்து வரும் கலாச்சாரப் பாசிஸ்ட்களின் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களே ஈழப்பிரச்சினை குறித்தும் விமர்சனபூர்வமான போராட்டங்களில் பற்றி உறுதியாய் நிற்கின்றனர். வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் ‘திடீர்’ ஈழ ஆதரவாளர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

9 உரையாட வந்தவர்கள்:

 1. ராஜ நடராஜன் said...

  இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான அருந்ததிராயின் குரல் குறித்து மொழியாக்கம் செய்து கொண்டிருந்தேன்.அதற்குள் உங்கள் பதிவும் கூடவே அன்புடன் பாலாவின் பதிவின் பின்னூட்டத்திற்கான உங்களது சாடலும் எனது மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

 2. Anonymous said...

  வைகோ எத்தனை ஆண்டு காலமாய் அரசியல் களத்தில் இருக்கிறார், நெடுமாறன் 1983 முதல் அயராது இதில் ஈடுபட்டிருக்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஈழ
  தமிழர் துயரை வைத்து அறிவு ஜீவிகள் செய்யும் அரசியல்தான் கேவலமாக இருக்கிறது.அ.மார்க்ஸ்
  புதிய புத்தகம் பேசுகிறது இதழில் கொடுத்த
  பேட்டியை ஈழத்தமிழர்களும்
  படித்திருக்கிறார்கள் என்பதை
  நினைவில் கொள்க.

 3. Raj Chandra said...

  என்னப் புதிதாய் சொல்லியிருக்கிறார் என்று தெரியவில்லை. இதில் இவ்வளவு நாட்கள் இந்தப் பிரச்சினையை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டதாக சால்ஜாப்பு.

  பி.பி.சி தளத்தில் இலங்கைப் பற்றிய செய்திகள் விரிவாக வருவது அ. ராய்க்குத் தெரியாது என்பதை ஏற்க முடியவில்லை.

  வட மாநிலத்தில் நடக்கும் பிரச்சினைகளில் தலையிட்டால் அகில இந்திய கவனம் கிடைக்கும். வாசந்தி உயிரோசையில் எழுதியதைப் போன்று வட மானிலத்தாருக்கு இலங்கை genocide ஒன்று புரியவில்லை, மற்றொன்று அவர்களுக்கு இது பொருட்டில்லை.

  சும்மா ஒப்புக்கு யாரோ கேட்டு எழுதிக் கொடுத்ததைப் போல இருக்கிறது.

  நான் அ.ராயைத் திட்டவில்லை :).

 4. லக்கிலுக் said...

  கடைசி பாராகிராப் அனல் கக்குகிறது!

 5. Anonymous said...

  http://englishtamil.blogspot.com/2009/04/arundhati-roys-awakening.html

  She has so much conviction in her defence that she presents the case like a reporter on field would; "breaking the news to the world." The article is also written with a matter-of-fact tone. Quite unlike her flowery expositions about 9/11 or Kashmir. "The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell," (emphasis mine) seems to be the best she could cook. Maybe she didn't realize there's no hurry to turn the article in. After all, she had the patience and intellectual commitment to gathering information for 30 years before she "broke her silence." Hope nobody breaks her jaw for the puerile recital of old facts.

 6. -/சுடலை மாடன்/- said...

  //புலிகள் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் இனப்படுகொலை தொடர்பான விபரங்களை எந்த அளவிற்கு அறிவுஜீவிகளிடமும் மனித உரிமைப் போராளிகளிடமும் கொண்டு சேர்த்தனர் என்கிற கேள்வி இங்கு முக்கியமானது.//

  இனப்படுகொலை தொடர்பான விபரங்களை அறிவுஜீவிகளிடமும் மனித உரிமைப் போராளிகளிடமும் கொண்டு சேர்ப்பதற்காக இத்தனையாண்டுகள் என்ன செய்திருக்கிறீர்களென்று 5 வரிகளில் சொல்ல முடியுமா? சோபா சக்திக்கும், அ.மார்க்சுக்கும் ஜால்ரா போட்டு வலைப் பதிவில் எழுதி வருவதைக் கணக்கில் சேர்க்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  அதெப்படி தோழர் தியாகு, கொளத்தூர் மணி போன்றவர்கள் சொல்வதை மட்டும் நீங்கள் விமர்சிப்பதில்லை. அவர்களும் கூட நெடுமாறன், வைக்கோ போன்ற புலிகளை ஆதரிக்கும் கருங்காலிகள்தானே? அல்லது "நெடுமாறன், வைக்கோ போன்றவர்களைக் கருங்காலி" என்று சொல்வது அறிவுஜீவி வேசம் கட்டுவதற்காக நீங்கள் வழக்கமாக ஆதாரமின்றி எழுதும் உளரல்கள்தானா?

  நன்றி - சொ.சங்கரபாண்டி

 7. தமிழ் சசி | Tamil SASI said...

  பக்கத்தில் இருக்கும் இலங்கையி்ல் நடக்கும் பிரச்சனை தெரியவில்லை என்று சொல்லும் இவர் எல்லாம் அறிவுஜீவி. இதிலே ஊடகங்களில் வெளியாகவில்லை என்ற புலம்பல் வேறு. ஊடகங்களில் வந்தால் தான் தெரியும் என்றால் பொதுப்புத்தி சார்ந்து தங்கள் கருத்துக்களை கட்டமைத்துக் கொள்ளும் சாமானிய மக்களுக்கும் அருந்ததிராய்க்கும் எந்த வித்யாசமும் தெரியவில்லை.

  அவருக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களை பார்த்தால் தான் பரிதாபமாக உள்ளது. பிம்பங்களை சார்ந்து கொண்டாடாமல் இருக்க முதலில் உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் கற்றுக் கொள்ள வேண்டும் :)))

  அ.மார்க்ஸ், சோபாசக்தி, அருந்ததிராய் போன்றவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் உங்களைப் போன்றவர்களுக்கும் சி்ந்தனை ஆற்றல் மிக்க அறிவுஜீவி என்ற பட்டம் கிடைக்க வாழ்த்துக்கள் :)))

 8. sugan said...

  தாகம், பசிக்களை, கிழிந்த அழுக்கான ஆடைகளுடன் எலும்புக் கூடுகளாக காணப்படும் இடம்பெயர்ந்தவர்கள்

  பயங்கரமான திரைப்படத்தை பார்ப்பது போன்றது; நிவாரணப் பணியாளர் தெரிவிப்பு

  மோதல் பகுதிகளிலிருந்து தமிழ் பெண்களும் பிள்ளைகளும் வெளியேறி கஷ்டப்பட்டு நடந்து வருவதைப் பார்த்தபோது பயங்கரமான திகிலூட்டும் திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதாக நிவாரணப் பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

  அவர்களில் சிலர் மெலிந்து காணப்பட்டதுடன் எலும்புகள் வெளியே தெரிந்ததாகவும் இரத்தம் தோய்ந்த நிலையில் அழுக்கான கிழிந்த உடைகளுடன் காணப்பட்டதாகவும் ஐ.ஏ.என்.எஸ். செய்தி சேவை தெரிவித்தது.

  அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பல வாரங்கள் தோய்க்கப்படாமல் இருந்தது. பலரின் காயங்களுக்கு மருந்து கட்டப்பட்டிருக்கவில்லை பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். நிற்கமுடியாமல் பலர் காணப்பட்டனர் தமக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் வெற்றுத்தரையில் அமர்ந்தனர்.

  ஒருசிலரே கதைக்க விரும்பினர் பலர் பலவீனமாக இருந்ததால் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவர்களிடமிருந்து வெளிப்பட்டது. தண்ணீர் குடிப்பதே ஒரே விருப்பமாக இருந்தது.

  நீண்ட காலமாக அவர்களுக்கு ஒழுங்கான சாப்பாடு கிடைத்திருக்கவில்லை அவர்கள் கண்கள் உணவுக்காக மன்றாடின.

  கடந்த ஜனவரி முதல் மோதலுக்கு இடையில் சிக்கி இவர்கள் அல்லல் பட்டவர்கள். ஷெல், மோட்டார் மழைகளுக்கு மத்தியில் சிதறியோடியவர்கள் இவர்கள்.

  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுடன் கதைத்தவர்கள், அவர்கள் கூறியதை தெரிவித்துள்ளனர். பலர் இலையான்கள் போல இறந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

  தம்மை இனங்காட்ட வேண்டாமென்ற நிபந்தனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திசேவை குறிப்பிட்டதாக ?இந்துஸ்தான் டைம்ஸ்? தெரிவித்தது.

  புலிகளும் மக்கள் மத்தியிலிருந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.

  மக்கள் வெடித்து சிதறியதையும் கை, கால்களை இழந்ததையும் கண்டதாக உயிர்தப்பிய ஒருவர் தான் நேரில் கண்ட பயங்கரமான காட்சியை விபரித்திருக்கிறார். குடும்பங்கள் பிரிந்து சின்னாபின்னமாகிவிட்டன.

  புலிகளின் பகுதிகளிலிருந்த இரு வைத்தியசாலைகளில் உயிர்காக்க மருந்துகள் இல்லை தப்பியோட முயன்றபோது புலிகளால் சுடப்பட்டவர்களும் காயமடைந்தவர்களில் உள்ளடங்கியிருந்தனர்.

  உணவு விநியோகம் இல்லை. கிடைக்கும் சிறிதளவு உணவும் தடை செய்யப்பட்டதாகவே இருந்தது உயிரைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனையுடன் பதுங்கு குழிகளுக்குள் அவர்கள் இருந்துள்ளனர்.

  காயமடைந்தவர்கள் தமது உடைகளை கிழித்தே கட்டுப் போட்டுள்ளனர் இரத்தம் ஓடுவது கட்டுப்படாத போது மண்ணை எடுத்து அப்பிவிட்டு துணியால் சுற்றிக்கட்டியுள்ளனர். காயங்கள் சிதழ் பிடித்துள்ளன. மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பஸ்களில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டபோது சிலர் இறந்து விட்டனர்.

  2009 இன் பின்னர் எத்தனை பொதுமக்கள் இறந்துள்ளனர் என்பது ஒருவருக்கும் தெரியாத நிலை காணப்படுவதாக தோன்றுகிறது.

  சில ஆயிரங்கள் என்று கொழும்பு தெரிவித்துள்ளது. இராஜதந்திரிகள் அதிக புள்ளி விபரங்களை கூறுகின்றனர்.

  ஆஸ்பத்திரியில் கட்டிலொன்றில் தமிழ் பெண் ஒருவர் கட்டப்பட்டிருந்தார். மேலாடையின்றி வார்ட்டில் ஓடித்திரிந்ததால் கட்டிவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

  மனிதாபிமான நெருக்கடியை அடுத்து சர்வதேசத்தின் உதவிநாடப்பட்டுள்ளது.

  வவுனியாவில் 70 ஆயிரம் பேர் வரைபாடசாலைகள். முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

  ஆஸ்பத்திரிகளில் உணவு வழங்க முடியாமல் இருப்பதால் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் உதவியளிக்க முன்வந்துள்ளன. வவுனியாவில் போத்தல் நீர், பிஸ்கட், குளுக்கோஸ் பற்றாக்குறையாக உள்ளது ஆயிரக்கணக்கானோர் தற்போதும் ஓமந்தையில் உள்ளனர் ஒரு ஆயிரம் பேரை உள்ளீர்க்க தயாரென மன்னார் மாவட்ட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கூறியுள்ளன.

  ஆனால் மன்னாருக்கு சென்றால் தமிழர்கள் படகுகளில் இந்தியாவுக்கு சென்றுவிடுவார்களொன சில அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
  ***************************

 9. Pradeep S said...

  //இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை ............//

  what Nedumaran is a karungali???
  i have seen him always talking in support of srilankan tamil people.

  I like Arundati Roy.
  She is a great writer.
  I was really proud when she won the booker prize.
  She is against caste, religion and other divisions in society.
  I dont like Advani, number one criminal guy in india. if he come to power, he will kill all muslims.
  Vajpayee is OK, good man.
  I think people like Arundati Roy should go to parliament.
  Congress is the best party.

  No need LTTE in our state my friend.
  Big problem then coming.
  bomb here, bomb there.
  thats all. tamil nadu will become kashmir. damaal dumeel sound everywhere. our children will be killed. sisters raped. oh my god. no need terrorists in my state.

  Better we support Congress Rule in Tamil Nadu. Then all problem will solve.

  In our neighbouring state Kerala, this time CONGRESS will come back to power. And in Karnataka and Andhra also Congress will win.
  why not in Tamil Nadu?

  These regional parties are really stupid and கருங்காலிS. And are exploiting us.

  THE MAIN THING NOW WE NEED IS 'DEVELOPEMENT'
  Solve unemployment problem, poverty, water problem, etc.
  Congress alone can help us to become Number One state in India.

  Let us proud to be Tamil.
  I think you will also like all Tamils to become champions in every field.
  Congres only can rise above religion, region, caste and every divisive thing.