கர்நாடகாவின் இந்துத்துவ போலீஸ் ‍- அ.மார்க்சுடன் ஒரு சந்திப்பு


ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் இந்துப் பயங்கரவாதிகள் கிறித்துவர்களின் வழிபாட்டிடங்களின் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினர். இந்துத்துவ அமைப்புகள் மட்டுமில்லாது கர்நாடகப் போலீசும் சிறுபான்மைக் கிறித்துவர்களுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் கிறித்துவர்கள் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அறிய மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற உண்மையறியும் குழு சென்று வந்தது. தென்னிந்தியாவிலிருந்து ஏழு அமைப்புகள் பங்கேற்ற இந்த உண்மை அறியும் குழுவில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கேசவன், புதுச்சேரியிலிருந்து கோ.சுகுமாரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கர்நாடகாவில் நடந்த அநீதிகள் குறித்து தோழர் அ.மார்க்சிடம் உரையாடியபோது அவர் விவரித்தது இது.

‘‘புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் பாலகோபால் தலைமையேற்று நடத்திய இந்த உண்மை அறியும் குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம். தட்சணக் கர்நாடகம் என்று அழைக்கப்படும் தெற்கு கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது மதவாதச் சக்திகள் ஒருபுறம் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியது கொடுமை என்றால், இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய போலீசும் கிறித்துவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது துயரத்தின் உச்சம்.
இந்துத்துவ அமைப்புகள் தாக்குதலுக்கு இரண்டு முக்கியக் காரணங்களைச் சொன்னார்கள். ஒன்று கிறித்துவர்கள் கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது. இரண்டாவது, நியூ லைப் சர்ச் என்னும் சர்ச் இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில் நோட்டீஸ்களை அச்சடித்து வினியோகித்தது என்பது. இதில் முதல் காரணம் வழக்கமாகச் சொல்லப்படுவதுதான். ஆனால் இரண்டாவது காரணம் உண்மையில் கேலிக்குரியது. ஏனெனில், அந்த துண்டறிக்கைகள் சமீபத்தில் வினியோகிக்கப்பட்டவை அல்ல. பத்து வருடங்களுக்கு முன் வினியோகிக்கப்பட்டவை என்று எங்கள் விசாரணையில் தெரியவந்தது. எங்கள் கைக்குக் கிடைத்த நோட்டீஸ்களைக் கொண்டு அச்சடித்த இடத்தை தேடிப் போய்ப் பார்த்தால் அந்த அச்சகமே இப்போது இல்லை. அப்படியானால் அவை உண்மையில் அந்த சர்ச்சால் வினியோகிக்கப்பட்டதா, அல்லது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமூக விரோத சக்திகள் தாங்களாகவே அச்சடித்ததா என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. டி.ஐ.ஜி அதித் மோகன் பிரசாத்திடம் நாங்கள் பேசிய போது, ‘‘கட்டாய மதமாற்றம் தொடர்பாக எந்த புகார்களும் போலீசுக்கு வரவில்லை‘‘ என்றார். மேலும் இந்தியாவில் கிறித்துவர்களின் மக்கள் தொகை 2.4 சதவிகிதம் என்றால் கர்நாடகாவில் வெறுமனே 1.9 சதவிகிதம்தான். எனவே மதமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல.

இந்த கலவரங்களுக்கான ஒத்திகை ஏற்கனவே பார்க்கப்பட்டதுதான். தாவண்கரே என்ற இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே சர்ச்சின் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. புகார் கொடுக்கச் சென்ற கிறித்துவர்களிடமே, ‘‘ நீங்கள்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவீர்களே, அப்புறம் ஏன் புகார் கொடுக்க வந்தீர்கள்?‘‘ என்று போலீசாரே கேலி செய்திருக்கின்றனர். அதேபோல் சென்ற அக்டோபர் மாதம் பச்சநாடி மலை என்ற இடத்திலும் இத்தகைய போக்குகள் தொடர்ந்திருக்கின்றன. அங்கு சிலுவைப்பாதை என்னும் ஒரு இடம் இருக்கிறது. யேசு சிலுவை சுமந்து சென்றபோது நிகழ்ந்த சம்பவங்கள் அங்கு ஓவியங்களாக வரையப்பட்டிருக்கும். அந்த பச்சநாடி மலையில் ஆகஸ்ட் 8ந்தேதி காவிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த மேரி மாதா சிலையையும் காணவில்லை. காவல்துறையிடம் இதுகுறித்துப் புகார் செய்தால், நீதி கிடைப்பதற்குப் பதிலாக அங்கு நடந்ததோ வேறு. அந்த இடத்தையே ‘சர்ச்சைக்குரிய இடம்‘ என்று அறிவித்த காவல்துறை கேட்டை இழுத்து மூடிவிட்டது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்ற ஒத்திகைகள் செப்டம்பர் 14ம் தேதியிலிருந்து உச்சத்தை அடைந்தது என்று சொல்லலாம். செப்டம்பர் 14, காலை 10.15 மணி, மங்களூருக்கு அருகிலுள்ள மிலாகரஸ் என்னும் இடத்தில் உள்ள அடோரசன் சென்டர் என்னும் சர்ச் தாக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சின் சிறப்பு என்னவென்றால் இது 1680ல் கட்டப்பட்டது. இந்தியாவிலுள்ள பழமை வாய்ந்த சர்ச்சுகளில் ஒன்று. மேலும் கிளாய்ஸ்டர்ட் கம்யூனிட்டி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த சர்ச் நடத்தப்பட்டு வருகிறது. கிளாய்ஸ்டர்ட் கன்னியாஸ்திரிகள் தாங்கள் துறவு ஏற்ற நாளிலிருந்து இறக்கும் வரை ஒரு அறையிலேயே தங்கி இறைவழிபாடு நடத்துவார்கள். அறையை விட்டு வெளியே வரமாட்டார்கள். செப்டம்பர் 14 கிறித்துவர்களுக்குப் புனித தினமும் ஆகும். யூகரிஸ்ட் என்னும் சிலுவையில் யேசு இருப்பதாக நம்பி கிறித்துவர்கள் வழிபாடு செய்வர். இந்த யூகரிஸ்ட் சிலுவையும் உடைக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அங்கு வந்த போலீஸ், ‘‘ நீங்கள் உள்நாடா, வெளிநாடா, லைசென்ஸ் இருக்கிறதா?‘‘ என்று கிளாய்ஸ்டர்ட் கன்னியாஸ்திரீகளிடம் கிண்டலாகக் கேள்விகள் தொடுத்துள்ளனர்.

செப்டம்பர் 14ந்தேதி காலையே 14 இடங்களில் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடந்துள்ளதன் மூலம் இது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதை அறியலாம். இதில் கொடுமை என்ன வென்றால் அன்று மாலையே பஜ்ரங்தள் மாநிலத்தலைவர் மகேந்திரகுமார், ‘‘தாக்குதல் நடத்தியது நாங்கள்தான். இனியும் இது தொடரும்‘‘ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆனால் 19ம் தேதி வரை மகேந்திரகுமார் கைது செய்யப்படவில்லை.
பெரமணூர் என்னும் இடத்தில் செவத்தியார் ஆலயம் என்னும் சர்ச்சின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோது சர்ச்சுகளில் கிறித்துவ இளைஞர்கள் ஆவேசத்தோடு குவிந்திருக்கின்றனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் காதரும், அங்கிருந்த பாதிரியார்களும் இளைஞர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் போலீஸ் 144 தடை உத்தரவு போட்டு ‘சர்ச்சுக்குள் யாரும் நுழையக்கூடாது‘ என்று ஆணையிட்டுள்ளது. பொதுவாக தெருக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில்தான் 144 போடப்படும். ஆனால் சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்களில் தடையுத்தரவு போடுவது சட்ட நடைமுறையே இல்லை.
குலசேகர் என்னும் ஊரிலுள்ள புனித சிலுவை ஆலயம், வாமஞ்சர் என்னும் இடத்திலுள்ள புனித ஜோசப் ஆலயம் ஆகியவற்றின் மீதும் தாக்குதலும் தொடர்ந்திருக்கிறது, கிறித்துவர்களின் மீது போலீசின் தடியடியும் நிகழ்ந்திருக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் போலீசோடு பஜ்ரங்தள் ஆட்களும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சதீஷ்குமார் என்னும் எஸ்.பியும் ஜெயந்த்ஷெட்டி, கணபதி என்னும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் நேரடியாகத் தாக்குதலில் பங்கேற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். கிறித்துவர்களின் தாக்குதலையட்டி மத்திய அரசால் கர்நாடக அரசு கலைக்கப்படலாம் என்னும் சூழ்நிலை ஏற்பட்டவுடனே, ‘‘சர்ச்சுகள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்‘‘ என்று மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை யாரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. மாறாக கிறித்துவர்கள் 160 பேரும்
இந்து ஜக்ரண வேதிகே, பஜ்ரங்தள், ஸ்ரீராமசேனே ஆகிய தாக்குதலில் ஈடுபட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 60 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களையே அதிகளவு கைது செய்வது விசித்திரமான முரண்பாடு இல்லையா?‘‘ என்னும் அ.மார்க்ஸ் 61 வயதான செல்மா, 71 வயதான பெனீசியா மற்றும் குழந்தைகளும் போலீசால் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதைக் கவலையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘ கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடந்த அதே மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்திய முகாஜிதீன்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று முகமது அலி, ஜாவீத் அலி, (இருவரும் தந்தை, மகன்), நௌஷாத், அகமத் பாவா ஆகிய நான்கு முஸ்லீம்களைக் கைது செய்திருக்கிறது போலீஸ். உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களைக் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட சி.டிக்கள், குர்&ஆன் போன்றவற்றிற்கான ரசீது வழங்குவது போன்ற அடிப்படை சட்ட நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை. இந்த கைது நடவடிக்கை கூட ‘பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசின் செயல்‘ என்று பாதிக்கப்பட்ட கிறித்துவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ, சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களே பயங்கரவாதச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதைக் கடந்தகால வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கின்றது. இந்தப் பாடத்தை இனியாவது அரசும் போலீசும் ஒழுங்காகக் கற்றுக்கொள்ளுமா என்பதுதான் முக்கியமான கேள்வி‘‘ என்கிறார் அ.மார்க்ஸ்.

இத்தகைய கொடூரமான வன்முறை வெறியாட்டங்களை கிரீஷ்கர்னாட் போன்ற கலைஞர்களும் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற எழுத்தாளர்களும் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராகப் பேரணியும் நடத்தியது ஒரு ஆறுதல். இந்தப் போலீசை இந்துத்துவப் போலீசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிடுவது?

கிறித்துவர்கள் மீதான கர்நாடகப் போலீசின் தாக்குதல் குறித்த படங்களை இங்கு காண்க. suguna2896.blogspot.com/2008/11/blog-post.html

எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்.

( வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்டதற்கு எதிர்வினையாக கோபாலகிருஷ்ண நாயுடுவை நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் அழித்தொழித்துப் பழிவாங்கிய கதையைப் புனைவின் சுவையோடு விளக்குகிறது பாட்டாளியின் 'கீழைத்தீ; நாவல். (புதியபயணம் வெளியீட்டகம்.) இந்த நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்போதே ராமச்சந்திரன் நாயரின் 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம்' தமிழ் மொழிபெயர்ப்பையையும் படிக்க நேரிட்டது. இவ்விரு நூற்கள் குறித்தும் விரிவாய் எழுத விருப்பம். இலக்கியம் என்றாலே எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று இணையத்தில் ஊடுகட்டும் இலக்கியப் பிரகஸ்பதிகள் கொஞ்சம் இந்தப்பக்கமும் கவனம் திருப்புதல் நலம்.)

இங்கே எதுவும் பொதுவாக இல்லை. இலக்கியமும் தான். பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு படைப்பும் ஒரு சாராரின் நலன் சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். எனவே, அது பிறிதொரு சாராருக்கு எதிரானதாக இருக்கும். பன்முகத்தன்மை கொண்ட மனிதர்கள் நிரம்பிய, சாதிய இழிபழிகள் கொட்டிக்கிடக்கிற, மதச் சகதி வழிந்தோடுகிற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொந்தளிப்பாய்த் தெரிகிற நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக, நுட்பமானவர்களாகச் சித்தரிப்பது ஆபத்து. இது பொய்யுரைப்பது.

ஏனெனில், எழுதும் எவனும் தன் வர்க்கம் சார்ந்தே இயங்க இயலும். எழுத்தின், மொழியின் நடையிலும், இலக்கியத்தனத்திலும் அந்தந்த வர்க்கச் சாயலே பெருமையுடன் பளிச்சிடும். 1968-டிசம்பர் 25ல் தஞ்சைமாவட்டம் கீழவெண்மணி பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதியாம் கோபால கிருஷ்ண நாயுடுவால் 44 உயிர்கள் எரித்துக் கொள்ளப்பட்டன. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய அந்த உழைக்கும் மக்களை எரித்துக் கொன்ற பண்ணை ஆதிக்கப் பயங்கரத்தைப் பற்றி அன்றைய தமிழக ‘இலக்கிய நுட்பம் தெரிந்த இலக்கியவாதிகள்’ எவரும் ஒரு மயிரைக்கூட எழுத்தில் பிடுங்கிப்போடவில்லை.

லா.ச.ரா சௌந்தர்ய உபாசகராகவும், தி.ஜானகிராமன் மோகமுள்ளில் தைத்துக் கொண்டும் இருந்தார்கள், மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் அவரவருடைய பூணூலைத் தடவிக்கொண்டிருந்தார்களே தவிர வேறு எதுவும் அவர்களுக்குள் நிகழவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் அன்றைய ‘இலக்கிய’ நுட்பம் தெரிந்தவர்களுக்குப் பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதத்தினால் எரிக்கப்பட்ட உயிர்களின் வலி தெரியவில்லை. அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த கொடுமைக்கு எதிராக ‘இந்திரா பார்த்தசாரதி’ எழுதி அதற்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.

ஆனால், சோலை சுந்தரப் பெருமாள், என்ற ‘இலக்கிய நுட்பம் தெரியாத’ எழுத்தாளர் எழுதிய ‘செந்தெல்’ என்கிற நாவல் எரிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. விமர்சிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. (இவர் எழுதியிருப்பதில் ஒன்று கூட கவிதை இல்லை’ என்று ஜெயமோகனால் ‘இலக்கிய நுட்பத்துடன்’ விமர்சிக்கப்பட்டது) இன்குலாப்பின் பாடலும், கவிதையும் 44 உயிர்கள் எரிக்கப்பட்டதற்கெதிராகப் புலம்பி கோபத்தை காட்டுகிறது.

தாயின் கருணை என பொன்னி புனல் பாய்ந்தும்
தீயை அணைக்காத கொடுமை
தாயைக் குழந்தைகளைத் தீயின் கரங்களுக்குத்
தின்னக் கொடுத்து வைத்த கொடுமை

ஓயாக் கடலலை ஓய்வை விரும்பினும்
ஓயாதலைக்கழிக்கும் நினைவாய்
மாயாச் சினமிது மடியாத் துயரிது
வரலாறு காணாத கொடுமை

சமீபத்தில் 2007 டிசம்பர் 25 வெண்மணி நாளில் வெளிவந்திருக்கும் பாட்டாளியின் ‘கீழைத்தீ’ நாவலில் 44 உயிர்கள் எரித்துக் கொல்லப்பட்டதன் பின் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புவரை மிக விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இத்தகைய வாழ்வு நுட்பம் பதிவுகளைல்லாம் தான் இலக்கியத் தன்மை கொண்டவை. தஞ்சைப் பூணூல் பண்ணையார்களின் குடும்பக் கதைகள் ஒதுக்கப்பட வேண்டியவையே.

ஏனெனில் லா.ச.ரா., தி.ஜா, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களில் ‘தஞ்சைப் பூணூல் பண்ணையாரின்’ வர்க்கப்பாசம் பொங்கி வழிகிறது. இன்குலாப், சோலை சுந்தரப் பெருமாள், பாட்டாளி போன்றோரின் எழுத்துக்களில் ‘இணக்கம் காண முடியாத வர்க்கப் பகைமை’ கோபாவேசமாய்க் கொந்தளிக்கிறது.

இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. அரசு, மதம், சாதி பொருளியல் காரணங்களால் நொய்மைப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசுவதும், அவர்தம் கோபத்தை நேர்த்தியாக வழி நடத்தி ஒரு அழகிய சமூக மாற்றத்திற்கு அவர்களைத் தயார் செய்வதும்தான் இலக்கியத்தின், இலக்கியவாதியின் சாpயான செயல்பாடு. இதை ஏற்றுக் கொள்ளும் தன்மையற்றவர்கள் சமூக மாற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள்.

நன்றி: keetru.com/neythal/index.php

பெண் பேச்சும் மௌனமும் - புறணியிலிருந்து நெடுந்தொடர் வரை


பெண் என்பவள் பேச்சாலும் மௌனத்தாலும் கட்டப்பட்டவள். மொழியின் வரையறுக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இயங்குபவையாகவே பெரும்பாலும் பெண்பேச்சு அமைகிறது. அதுமட்டுமன்றி மொழியின் அதிகார எல்லைகளும் பெண்பேச்சால் மறு உறுதிசெய்யப்படுவதோடு மறு உற்பத்தியும் செய்யப்படுகின்றன.

உலகின் எல்லா வகையான அதிகாரக் கதையாடல்களும் மொழியின் வழியாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பது நாமறிந்ததே. இந்த அதிகாரக் கட்டமைப்பின் அடிப்படை அலகாகிய மொழி, தாய் என்னும் பெண்ணின் வழியாகவே குழந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. தாய்மொழி என்னும் புனைவும் அரங்கேறுகிறது.

சொல்லமைப்பு, அதன்வழியாகத் தக்கவைக்கப்படும் அதிகாரம் மட்டுமல்லாது சமூகத்தின் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகள், ( உதா : சாப்பிட வலதுகையைத்தான் பயன்படுத்த வேண்டும், எந்தப் பொருளையும் வலதுகையால்தான் வாங்கவேண்டும் ....), அதிகார நிறுவனங்களின் அறிமுகம் (கடவுள், கோயில்,...) ஆகிய அனைத்தும் தாயின் வழியாகவே அறிமுகமாகின்றன. அறிந்தும் அறியாமலும் சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பைக் கட்டமைப்பதில் தனக்கிருக்கும் வகிபாத்திரம் குறித்த பிரக்ஞை இல்லாமலே ஒரு பெண்ணாணவள் சுலபமாக உள்வாங்கப்படுகிறாள். இதில் முரண்நகை என்னவெனில் பெண்ணால் கட்டமைக்கப்பட்டு ஒழுங்கும் மறு உற்பத்தியும் செய்யப்படும் அதிகாரக் கட்டமைப்பு என்பது சாராம்சத்தில் அந்தப் பெண்ணுக்கே எதிரானது.

மேலும் பாலினம் (gender) என்பதும் தாய் வழியாகவே கட்டமைக்கப்படுகிறது. ஒரு ஆண்குழந்தையும் பெண்குழந்தையும் உடுத்துபவை, விளையாட வேண்டுபவை, படிக்க வேண்டியவை, புழங்க வேண்டிய சாமான்கள் என அனைத்தும் ஏற்கனவே சமூக அதிகாரத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு அது தாயால் மீண்டும் மீண்டும் மறு ஒழுங்கமைக்கப்படுகிறது. பாலினத்தின் தெளிவான வரையறைகளையும் வித்தியாசங்களையும் கட்டமைப்பதன்மூலம் நிலவும் சமூக இருப்பை மேலும் உறுதிசெய்கிறாள் பெண். ஒரு பெண்குழந்தையை வளர்க்கும்போது தன்னையொத்த மற்றொரு அடிமையை இந்தச் சமூகத்திற்கு உருவாக்கித்தருபவளாகவும், ஒரு ஆண்குழந்தையை வளர்த்தெடுக்கும்போது தன்னையொத்த அடிமைகளை நிர்வகிக்கிற, ஒடுக்குகிற, மேலாண்மை செய்கிற இன்னொரு ஆண் என்னும் ஆண்டானை உருவாக்கித் தருபவளாகவுமே 'தாய்' இருக்கிறாள். இத்தகைய பாலியல் ரீதியான வேறுபாடுகள் மட்டுமில்லாது சாதிய, வர்க்க, இன வேறுபாடுகளும் தொடக்கநிலையில் துல்லியமாக தாயாலேயே போதிக்கப்படுகிறது. உண்மையில் 'தாய்' வகிக்கும் பாத்திரம் இத்தகையதாகவே, இத்தன்மை வாய்ந்ததாகவே இருந்தபோதும் 'தாய்' புனித உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதிகாரம் தனனைக் கட்டமைத்துக்கொள்கிறது.

மொழியின் 'மேலான' சொற்களும் 'தகாத' சொற்களும் அர்த்தம் மயங்கிய நிலையிலேயே ஒரு குழந்தைக்கு அறிமுகமாகிறது. மேலான சொற்களைக் கற்பித்த தாயைத் தாண்டிப் பொதுவெளியில் புழங்கும்போதே 'தகாத', 'கீழான' சொற்களைக் குழந்தை சமூகப்பொதுவெளியிலிருந்து கற்றுக்கொள்கிறது. என்றபோதும் இது ஆண்குழந்தைக்கு உற்சாகமளிக்குமளவிற்கு பெண்குழந்தைக்கு அளிப்பதில்லை. இத்தகைய 'தகாத' சொற்கள் பெண்ணின் மர்மப்பிரதேசங்கள் குறித்ததாகவோ அல்லது மறைக்கப்பட்ட, புலனாகாத பாலியல்வெளியைப் பற்றியதாகவோ உள்ளபோது ஆண்குழந்தை இதை ஒரு ரகசியப் பரவசத்தோடும் குறைந்தளவிலான அதிகாரத்தோடும் உள்வாங்கிக்கொள்கிறது. ஆனால் பெண்குழந்தை 'இது தனக்கு அனுமதிக்கப்பட்டதில்லை' என்னும் உணர்வோடும் ஏற்கனவே தருவிக்கப்பட்ட கருத்தியல் மதிப்பீடுகளின் அடிப்படையிலும் அதை விலக்கிவைக்கிறது. ஒருகுறிப்பிட்ட எல்லைவரை பெண்குழந்தை பெண்ணாக வளர்ந்து மனைவி, தங்கை, தாய் என்னும் பலப்பல பாத்திரங்களை வகிக்கிறபோதும் தகாத வார்த்தைகளை விலக்கிவைப்பதன் மூலம் தனது 'கட்டமைக்கப்படட் புனிதத்தை'க் காத்துக்கொள்கிறது.

இன்னமும் 'கெட்டவார்த்தைகளை' மேல் மற்றும் இடைநிலை சாதி - வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பயன்படுத்தாதையும் அடிநிலைச் சாதி மற்றும் வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் மிகத்தாராளமாக இத்தகைய 'தகாத வார்த்தைகளை'ப் பயன்படுத்துவதையும் காணலாம். பாலுறவுச்செயற்பாடுகளின்போதுகூட ஆணள்விற்கு பாலியல் சொற்களைப் புழங்குவது பெண்ணுக்கு விலக்கப்பட்டதாகவே அமைகிறது. இவ்வாறாக பெண்பேச்சு மட்டுமல்லாது 'பெண்மௌனமும்' சமூகத்தால் தணிக்கையொழுங்கு செய்யப்படுகிறது.

என்றபோதும் தணிக்கை செய்யப்படும் அனைத்தும் மறைமுக மீறல்களைப் பற்றும் என்பது இயற்கைப் பொதுவிதியன்றோ? பெண் சமூகப் பொதுவெளியிலிருந்து தப்பித்து தனக்கான தனிவெளிகளையும் தன்னையொத்த பெண்களுக்கான சிற்சில தனிவெளிகளையும் உருவாக்கிக்கொள்ளவே செய்கிறாள். அதிலொன்றாக 'புறணி' எனப்படும் பெண்பேச்சு வடிவத்தைக் குறிப்பிடலாம்.
சுமாராக பத்தாண்டுகளுக்கு முன்புவரை கிராம மற்றும் அரைக்கிராமப் பிரதேசங்களில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் திண்ணைகளிலிலும் தெருக்களிலும் பெண்கள் கூடித் தங்களுக்குள் உரையாடி மகிழ்வதுண்டு. இவ்வுரையாடல் பெரிதும் பிறர் சார்ந்தே - புறம் சார்ந்தே அமைவதென்பது இயல்பு. இவ்வுரையாடல்களில் பெண்களின் தனிவெளிகள் குறித்த பகிர்தல் தனியானதும் அலாதியானதுமாகும்.

தங்களுக்கிடையிலான பாலியல் பகிர்வுகள், மற்றும் அண்டை வீட்டு ஆண் - பெண்கள் குறித்த கிசுகிசுக்கள் போன்றவையாகவே அமையும். மேலும் இந்திய தமிழ்த்தொன்மங்கள் பெரிதும் பெண்களை மய்யப்படுத்தியதாகவே அமைவதால் இந்துப் பார்ப்பனீய நம்பிக்கைகளும், புராணக் கதைகளும், தாய்த்தெய்வ வழிபாடு சார்ந்த நம்பிக்கைகளும், அறிவியல் சாராத புழக்கடை நம்பிக்கைகள், கதைகள் என இவையே மிகுதியும் இடம்பெறுவதுண்டு.

மேலும் இப்பிரதியைப் படிப்பவர்கள் இருபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவராயிருப்பின் 'தூரமானது,' விலக்கானது', செவ்வாய்க்கிழமைக் கொழுக்கட்டை', காப்பர்டி' போன்ற பெண்புழங்கு சொற்களை அர்த்தம் மயங்கிநிலையில் முதன்முதலாக உள்வாங்கிக்கொண்டது இத்தகைய புறணி உரையாடல்களின் வழியாகத்தான் என்பதை நினைவுகூர்வது கடினமல்ல. பெண்கள் தங்களுக்கேயான அவஸ்தைகளையும் பரவசங்களையும் பகிர்ந்து கொள்கிற அந்தரங்க உரையாடல்வெளியாகவும் ஆண்களுக்கு அப்பாற்பட்ட, ஆண்களுக்குச் சுலபத்தில் பரிச்சயமாகாத வெளியாகவும் இப்புறணிகள் அமைந்தன.

ஆனாலும் இதெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய கதைதான். இப்போது நீங்கள் தெருக்களில் நுழைந்தால் புறணிகளைக் காணவோ கேட்கவோ இயலாது. தெருக்கள் நிசப்தத்தைப் போர்த்தியுள்ளன. நிலப்பிரபுத்துவ வடிவந்தானெனினும் - திண்ணைகள் இல்லை. இப்போது மாலைநேரங்களில் தெருக்களில் கேட்க நேர்வதெல்லாம் சத்தமான, ஒரேமாதிரியான அல்லது வெவ்வேறு அலைவரிசைகளிலிருந்து விளம்பர இடைவேளைகளின் ஒலிகள் மற்றும் மெகாசீரியல்கள் எனப்படும் நெடுந்தொடர்களின் சவால்கள் அல்லது விசும்பல்கள்.

இப்போது புறணி என்கிற வடிவம் நெடுந்தொடர்களுக்கு மாறியிருப்பதை அவதானிக்க் சமூக ஆய்வாளர்கள் முயன்றால் பெண்களின் பொதுப்புத்தி கட்டமைக்கப்படும் விதம் குறித்தும் அதில் இத்தொடர்கள் ஆற்றும் பங்கு குறித்தும் சமூக உளவியல் குறித்தும் சில முடிவுகளுக்கு வரலாம்.

முதலாவதாக இத்தொடர்களில் கதாநாயகன் என்கிற பிம்பம் கீழிறக்கப்பட்டு கதாநாயகி, கதாநாயகிக்கு இணையாண முக்கியத்துவம் வாய்ந்த பிற பெண்பாத்திரங்களுக்குத் துணை நிற்பதாகவே அமைகின்றன. திரைக்கு அப்பாலும்கூட ஆண்நடிகர்களை விடவும் பெண்நடிகர்களே அதிகம் வருமானம் ஈட்டுகின்றனர் என்பது கசியும் செய்திகள். (பெரியதிரையில் இதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. அல்லது அதிக சம்பளம் வாங்குவதற்குப் பெண் தன்னை ஒரு பாலியல் பண்டமாக (திரையிலும் வெளியிலும்) மாற்றிக்கொள்ளவேண்டும்).

தொடர்களின் தலைப்புகளும் பெண்மய்யப்பயர்களே. அரசி, செல்வி போன்ற பெண் பெயர்களாகவோ, மஞ்சள் மகிமை, கோலங்கள் போன்ற பெண்புழக்கப்பெயர்களாகவோ அமைவதைக் கிரகிக்கலாம். (ஆனால் தமிழ்ச்சினிமாவிலோ எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரையிலான முன்ன்ணி நாயகர்களின் பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக பெண் பெயர்கள் தவிர்க்கப்பட்டு முற்ற முழுக்க ஆண்/ஆண்மய்யப் பெயர்களாகவே அமைவதைக் காணலாம். இப்போது தெய்வத்தாய், தாய் மீது ஆணை போன்ற பெயர்கள் மதுர, குசேலன் என்ற பெயர்களால் பதிலீடு செய்யப்படுகின்றன. ஆனால் இதில் ஆச்சரியமான விசயம் வெளிப்படையாகவே ஆண்மய்யக் கருத்துக்களைப் பிரச்சரம் செய்யும் ரஜினிக்கு நீண்டகாலத்திற்குப் பிறகு - அதுவும் ஒரு படுதோல்விக்குப் பிறகு 'சந்திரமுகி' அமைந்தது.)

கதைக்கருவும் பெண்ணின் சவாலாகவோ, விசும்பலாகவோ, சூழ்ச்சியாகவோ, அதீத வெற்றியாகவோ இப்படியாகவே - அதுவும் வரையறுக்கப்பட்ட ஆண்மய்ய மதிப்பீட்டெல்லைக்குள்தான் என்றாலும் - அமைவதைக் காணலாம். இன்னமும் குறிப்பாய் நாம் கவனங்குவிக்க வேண்டியது பாலியல் பிறழ்வுகள் குறித்தே அதிகமும் நெடுந்தொடர்கள் அமைவதும் அது பெண்களின் கவனத்தை ஈர்ப்பதும்.

கலாச்சாரத் தூய்மை, கற்புப்பெருமிதம் போன்ற போலிப் பண்பாட்டு விழுமியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அணுக வேண்டிய அம்சம் இது. மேலும் தொலைக்காட்சித் தொடர்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பதற்கான, ஆராய்வதற்கான மனநிலை கொண்ட வேறுயாரேனும் இன்னும் விரிவாக எழுதினால் இன்னமும் விடுபட்ட பல புள்ளிகள் குறித்து நாம் உரையாட ஏதுவாயிருக்கும்.

தமிழ்வெறியர்களும் கன்னடவெறியர்களும்

ஓசோவின்மீது ஈடுபாடு கொண்டு அதனடிப்படையில் Love and peace butthas என்னும் அமைதிக்கான ஒரு குழு அமைத்து இயங்கிவருபவர் நண்பர் மீராபாரதி. இவரை இதுவரை எனக்குப் பழக்கமில்லை என்றாலும் அடிக்கடி Love and peace butthas அமைப்பின்சார்பில் மின்னஞ்சல்கள் வருவது வழக்கம். 'பிரபாகரன்' திரைப்படம் குறித்த தமிழ்த்தேசியர்களின் செயல்பாடுகள் குறித்த அவரது கருத்தில் எனக்கு நூறுசதம் உடன்பாடு உண்டு என்பதால் இங்கே பதிவிடுகிறேன். (அவரது பதிவு சிவப்பு வண்ணத்தில் உள்ளது. அவரது இணையத்தளங்கள் meerabharathy.com
awakeningawareness.org)தமிழர்களுக்கு எதிரான படம் எனக் கருதப்படும் பிரபாகரன் என்ற சிங்களத்திரைப்படம் துசார பீரிசால் நெறியாள்கை செய்யப்பட்டதும் ஏப்பிரல் 25ம் திகதி உலகளவில் வெளியிட தயாராக இருக்கும் இத் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை.இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களால் இப் படத்தின் தமிழாக்கத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதை தடைசெய்யுமாறும் கேட்டு போரடியது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நெறியாளரை தாக்கியுள்ளார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக எனது சிறு குறிப்பை எழுதுவது எனது பொறுப்பு எனக் கருதுகின்றேன். தமிழ் உணர்வாளர்களின் இவ்வாறான நடவடிக்கைகளும் போக்குகளும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் சால்மான் ருஸ்டி தஸ்லிமா நஸ்ருடின் மற்றும் கேலிச் சித்திரக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டது எனக் கருதமுடியாது. இவர்களும் தமிழ் தேசிய அடிப்படைவாதத்திற்கு விழ்த்துள்ளார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.தமிழ் திரையுலகம் தயாரிக்கும் குப்பைத் திரைப்படங்களில் சிறுவர்களை பெண்களை மற்றும் தலித்துக்களை கேலிசெய்தும் சுரண்டியும் அவமானப்படுத்தியும் வெளியிடுகின்றன. இது தொடர்பாக இத் தமிழ் உணர்வாளர்கள் அமைதியாக இருப்பது ஏன்? இச் சிறுவர்களும் பெண்களும் தலித்துக்களும் தங்களுக்கு எதிரானவை இத் திரைப்படங்கள் ஆகவே இவை தடைசெய்யப்படவேண்டும் எனக் கூறினால் தமிழ் திரை உலகத்திற்கு என்ன நடைபெறும். இது தொடர்பான பிரக்ஞை இத் தமிழ் உணர்வாளர்களுக்கு அடிப்படைவாதிகளுக்கு இருக்கின்றதா?மாறாக இச் சிறுவர்களும் பெண்களும் திலித்துக்களும் அமைதியாக இருப்பதால் இத் தமிழ் திரைப்படங்கள் எல்லாம் சரியானவை என்றோ அல்லது நல்லவை என்றோ அர்த்தமாகாது. இதற்கு எதிராக போராடுவதற்கு இவர்களிடம் அதிகாரம் இல்லலை. ஆனால் இந் நிலைமை; நீண்ட காலத்திற்கு தொடரப்போவதில்லை. ஆப்பொழுது இதற்கு தமிழ் அடைப்படைவாதிகளுமு; உணர்வாளர்களும் பதில் கூறியாகவேண்டும். நமக்கு இப்பொழுது தேவையானது இவ்வாறான மாற்றுக் கருத்தாளர்களின் உரையாடலுக்கான ஒரு களம். யாரும் நமது கருத்துக்களுக்கு ஏற்ப எவ்வகையான திரைப்படங்களையும் வன்முறையில்லாது உருவாக்கலாம். இக் குறிப்பிட்ட கருத்துடன் உடன்பாடில்லாதவர்கள் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகளுக்கு எதிராக பாக்கியராஜா அந்த ஏழு நாட்கள் (இது நல்ல படமோ கருத்தோ என்பது விமர்சனத்திற்கு உரியது) எடுத்ததைப் போல மாற்று திரைப்படங்களை தமது கருத்துக்களுக்கு சார்பாக எடுக்கலாம். அல்லது விமர்சனங்களை முன்வைக்கலாம். இவ்வாறான செயற்பாடே ஆரோக்கயமானதாகவும் வளர்ச்சிக்கு உரிய பாதையாகவும் இருக்கும்.மாறாக தமக்கு உடன்பாடில்லாத கருத்தாளர்களுக்கு எதிராக இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவதோ தடைசெய்யக் கூறுவதோ தமது கருத்துக்களுக்கும் தமக்குமான அழிவை நோக்கிச் செல்வதே என்பதை இத் தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.ஆகவே மாற்றுக் கருத்துக்களை கலந்துரையாடுவதற்கான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குவோம். வுக்ல்டர் கூறியது போல், எனக்கு எதிரான கருத்தை நீ கொண்டிருந்தாலும் அதைக் கூறும் உனது உரிமைக்கான நான் மரணிக்கும் வரை போராடுவேன் என்பதை நாமும் கடைபிடிப்பதே ஆரோக்கியமான வன்முறையற்ற ஒரு மனித வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். மனிதர்களே! நண்பர்களே!காட்டுமிராண்டி கலாசாரத்திலிருந்து விடுபட்டு....மனித நேய கலாசாரத்தை நோக்கி வளர்வோம்.சுக மனிததை நேகிக்க முடியாதவர் சக மனிதரின் கருத்தை மதிக்க முடியாதவர்ஒருபோதும் தனது கருத்தையோ தன்னையோ நேசிக்காதவராகவே இருப்பார்.மாறாக கண்முடித்தனமாக தனது மொழியை கலாசாரத்தை சாதியை மதத்தை நோக்கிய பற்றுதல் மட்டும் இருப்பது சுய அழிவிற்கான பாதை என்றால் மிகையல்ல.
கடந்தகால மொழி காலாசராம் மதம் சாதி பெண்ணியம் ....அனைத்தும் விமர்சனத்திற்கு உரியவை. இவை ஒருபோதும் விமர்சனத்திலிருந்து தப்பமுடியாது. ஏனனில் கடந்த கால வரலாறு ஆணாதிக்கத்தினதும் ஆதிகக்க சக்திகளினதும் வரலாறே. இவர்கள் வரையறுத்ததே இன்று நாம பயன்படுத்தும் அனைத்து விடயங்களும். இதிலிருந்து எப்பபொழுது விடுபடுகின்றோமோ அன்றுதான் நம் சுய விடுதலைக்கான முதல் அடியை எடுத்துவைப்போம். நம் சிந்தனையில் கருத்தில் கலாசராத்தில் ஏற்படும் மாற்றமே எதிர் கால மனித வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அடித்தளம் அமைக்கும்.இனி நான்....

மீண்டும் கன்னடவெறியர்கள் தமிழர்களின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகின்றனர். குறைந்தபட்சம் காவிரிப்பிரச்சினையில் அவர்கள் அடைவதாய்க் கருதும் பாதிப்பளவு கூட ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தால் கர்நாடகத்திற்குக் கிடையாது. ஆனாலும் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளும், தமிழர்களின் உணவகங்கள் உள்ளிட்ட கடைகளும், தமிழ்ப்பேருந்துகளும் தாக்கப்படுவது தொடர்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கவேண்டிய விசயம் என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்காது. எனினும் நாம் ஒரு முக்கியமான அமசத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பொதுவாக மய்யநீரோட்ட இடதுசாரிகள் - குறிப்பாக சி.பி.எம், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்து இரட்டைவேடம் போடுவதாகக் குற்றம் சாட்டுகிற பலரும் இந்துத்துவவாதிகள் இப்பிரச்சினைகளில் காட்டும் இரட்டைநிலைப்பாடுகள் குறித்து பெரிதாய் விமர்சிப்பதில்லை.

கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா கன்னட வெறியைத் தூண்டிவிடுகிறார். இங்கோ மதுரையில் இந்துமக்கள் கட்சி பெங்களூரிலிருந்து வந்த ரயிலை மறிக்கிறது. சி.பி.எம்மாவது குறைந்தபட்சம் பேரளவிற்காவது தன் கட்சித்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகச் சொல்லும். ஆனால் இந்துத்துவ அமைப்புகளூக்கோ சுயநிர்ணய உரிமையா... மூச்!

இவர்கள் ஒன்றுபட்ட இந்தியத்தேசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி அகண்டபாரதத்திற்கு ஆசைப்படுபவர்கள். இப்போது எங்கே போனது அக............ண்ட பாரதக் கனவு ? தேசமே தெயவமெனில் இப்போது எடியூரப்பாவிற்கு எது தேசம்?

எல்லைப்பிரச்சினை போன்ற பலவற்றால் இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பகை நாடென்றால் கர்நாடகத்திற்குத் தமிழ்நாடு என்ன? இப்போது கர்நாடகத்தில் வசிப்பவர்கள் முஸ்லீம்கள் மட்டுமா?

இத்தகைய பல கேள்விகளின் மூலம் இந்துத்துவவாதிகளின் போலித்தேசியத்தை அம்பலப்படுத்துவதோடு மட்டுமில்லாது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் உரத்த குரலை எழுப்ப வேண்டிய நேரம்.

வா.மணிகண்டன் முதலான பார்ப்பன அடிவருடிகளும் சுஜாதா விசுவாசமும்சுஜாதா இறந்துவிட்டார். எனக்கு அதில் ஒரு வருத்தமுண்டு. இன்னும் ஷங்கர் உயிரோடிருக்கிறார். பூங்காக்களில் படுத்துறங்குபவர்கள், ரயிலில் சரக்கடிப்பவர்கள் இன்னும் அச்சப்படுவதற்கான நியாயங்கள் உள்ளன. இன்னமும் தெருவோரங்களில் ஒண்ணுக்கு போகிறவர்களைக் கொலை செய்வதற்கான கதைகள் உருவாகவே செய்யும்.

சுந்தரராமசாமி இறந்தபோது என்னென்ன விபரீதங்கள் நிகழ்ந்தனவோ அத்தனையும் சுஜாதா விவகாரத்திலும் நடக்கின்றன. கடந்துபோன புத்தகக்கண்காட்சிக்கு நானும் நண்பர் ஜ்யோராம்சுந்தரும் போயிருந்தோம். காலச்சுவடு ஸ்டாலில் அறியப்படாத சு.ராவின் புத்தகங்களைக் கண்டேன். ஒருவேளை இறந்தபிறகும் சு.ரா எழுதுகிறாரா என்று ஆச்சரியமாகவும் பயமாகவுமிருந்தது.

பிறகுதான் தெரிந்தது. அவரின் சிறுகதைத் தொகுப்பில் 30 கதைகளிருக்கின்றன என்றால் மாற்றி மாற்றி அந்த சிறுகதைகளின் தலைப்பை வைத்து புத்தகங்கள். பிரசாதமா, அது ஒரு புத்தகம், பிள்ளைகெடுத்தாள்விளையா அது ஒரு புத்தகம். இப்படியாக சுராவின் பிணத்தை விற்றுக் காசு பார்த்தது காலச்சுவடு.

ஆனால் சுரா விசயத்தில் கா.சு மட்டும் திதி, கருமாதி எல்லாம் தொடர்ந்துநடத்துகிறது. மற்ற பத்திரிகைகள் இழவுக்கட்டுரைகளை வெளியிட்டதோடு சரி. ஆனால் சுஜாதா விசயத்திலோ அந்த கிருமி வெகுஜனப் பத்திரிகைகளையும் விடவில்லை.

ஏற்கனவே அச்சான உயிர்மை இதழின் அட்டையின் மீது சுஜாதா புகைப்படத்தோடு கூடிய அட்டையைப் போட்டு தன் விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் மனுஷ்யபுத்திரன். குங்குமத்திலோ பாதிக்குமேல் சுஜாதா, விகடனிலும் சுஜாதாபுராணம். குமுதத்திலோ கொடுமை உச்சகட்டம்.

அய்.ரா.சுந்தரேசன் எழுதிய அஞ்சலிக்கட்டுரையில் சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' நாவலுக்கு நாடார்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து எழுதும் பகுதியில் 'அதுகள், இதுகள்' என்றே எழுதியிருக்கிறான். ஒரு பார்ப்பார நாய் செத்ததிற்காக இன்னொரு பார்ப்பன நாய் போட்ட அஞ்சலிக் குரைச்சலில் நாடார்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சமத்துவமக்கள் நாயகன்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஜெயமோகன் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சன் டி.வியில் இழவுச்செய்தி வாசிப்பதற்கென்றே மாலன் என்னும் ஒரு நபர் இருந்ததைப் போல 'எமக்குத் தொழில் இழவுக்கட்டுரைகள் எழுதுவது' என்று குறிக்கோளாயிருக்கிறார் ஜெமோ. யாராவது ஒரு எழுத்தாளர் கொஞ்சம் சீரியசென்று மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு ஜெமோவிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். 32 பக்க அஞ்சலிக்கட்டுரை உத்திரவாதம். ஆனால் அது ஒருபகுதி மட்டும்தான். எழுத்தாளர் இறந்து 16ம் நாள் கருமாதி நடத்துவதற்குள் அவரைப் பற்றிய புத்தகம் உயிர்மையின் சார்பாக வெளியிடப்பட்டுவிடும்.

அப்படியென்ன சுஜாதா சாதித்தார்? நிச்சயம் இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்ததில்லை. வெகுஜன எழுத்தாளர் என்ற வரிசையிலும் அவரை வைத்துவிட முடியாது. ஏனெனில் ராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும் ஒரே தட்டில் நிறுத்திவிடமுடியாது. நான் 'தரம்' என்னும் அளவில் பேசவில்லை.

எனக்கு ராமராஜனின் படங்கள் பிடிக்கும். ஆபத்தில்லாத கிராமப்படங்கள். அவற்றில் பெரியளவிற்கு நிலப்பிரபுத்துவக்கூறுகள் இருக்காது. ஆனால் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமாரின் படங்களிலோ நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க மதிப்பீடுகளே நிறைந்திருக்கும். ராமராஜனை விட ரவிக்குமார் ஆபத்தானவர். சுஜாதா இரண்டாம் வகை.

அவர் அறிவியல் விசயங்கள் குறித்து வெகுமக்களிடம் சேர்த்தார் எனலாம். ஆனால் பாலியல் என்பதும் அறிவியல்தானே, ஆனால் மாத்ருபூதம் இறந்ததற்கு யாரும் இவ்வளவு வருத்தப்பட்டதில்லை. சுஜாதா அறிவியல் என்ற பெயரில் ரிலேட்டிவிட்டி தியரியில் நாரதபுராணத்தை நுழைத்து பார்ப்பனியத்தை திணித்தார்.

அவர் 'பூக்குட்டி' போன்ற குழந்தைக்கதைகள் எழுதியதற்காக அவரைப் பிடிக்கும் என்றார் ஒரு நண்பர். நான் படித்ததில்லை. ஆனால் சுஜாதா போன்றவர்கள் குழந்தைகளுக்கு கதைகள் எழுதியது குறித்து நாம் தீவிர மறுவாசிப்பு செய்யத்தானாக வேண்டும். அது பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.

என்னளவில் அறிவியல் புனைகதை எழுத்தாளர் என்ற முறையில் அவர்மீது மரியாதை உண்டு. அவருக்கு முன்னும் பின்னும் இன்னும் கூட அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் தமிழில் இல்லை. ஆனால் அவர் சிறுகதை, நாவல், சினிமா, அறிவியல் என அனைத்திலும் பார்ப்பனீய ஆணாதிக்க மதிப்பீடுகளைத் திணித்த ஒரு ஆபத்தான வலதுசாரி எழுத்தாளர்.

ஆனாலும் அவரை இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய அவசியமென்ன இருக்கிறது, அதுவும் புதுமைப்பித்தனை 'தூ, அவன் கதையைச் செருப்பாலடிக்க வேண்டும்' என்று எழுதியவர்கள் கூட. எல்லாவற்றிற்கும் காரணம் அறமும் அரசியல் நேர்மையுமற்ற அற்பவுணர்வு, பிழைப்புவாதம் என்பதெல்லாமல் வேறென்ன சொல்வது?

இந்த தந்திரம் மனுஷ்யபுத்திரனிடமிருந்து முந்தாநாள் சிறுபத்திரிகையில் ஒரே ஒரு கவிதை எழுதியவர் வரை யாரையும் கைவிடவில்லை.

ஞாநியின் திமுக எதிர்ப்புக் கருத்திற்காக அவரின் பார்ப்பனீயம் குறித்து விமர்சித்தவர்கள், சுஜாதாவிற்கு மட்டும் புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.

வா.மணிகண்டனின் கீழ்க்கண்ட பதிவைப் படியுங்கள். சுஜாதா இறந்ததற்கு முன்னும் பின்னுமான அவரது புகழ்பாடும் புராணங்களையும் படியுங்கள்.

http://pesalaam.blogspot.com/2007/10/blog-post_21.html

என்னளவில் சுஜாதாவையும் ஞாநியையும் ஒப்பிட முடியாது. ஞாநி மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவர் சுஜாதா அளவிற்கான ஒரு அடிப்படைவாதப் பார்ப்பனர் கிடையாது. ஆணிய மதிப்பீடுகள்ளுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதி வருபவர். ஆனால் சுஜாதா ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க பார்ப்பன வைதீகர்.

ஞாநிக்கு எதிரான கண்டனக்கூட்டம் குறித்த மணிகண்டனின் பதிவில் ஒருவரி,

/பார்ப்பனீயம் என்பது சகித்துக் கொள்ளவியலாத ஒன்று என்பதனை தொடர்ச்சியான நிகழ்வுகள் உணர்த்துவது மன நிறைவைத் தருகின்றது./

என்னால் வாயால் மட்டும் சிரிக்க முடியவில்லை மணி.

விவகாரம் வெரி சிம்பிள். மணிகண்டனின் கவிதைத்தொகுப்பை வெளியிட்டது உயிர்மை. உயிர்மை சுஜாதாவின் விசுவாசிகள் மன்றம். ஞாநியை எதிர்த்துக் கூட்டத்தில் பேசியவர்களில் மனுஷ்யபுத்திரனும் ஒருவர். ஆக மணிகண்டனின் சுஜாதா விசுவாசத்திற்கும் ஞாநியின் 'பார்ப்பனீயத்திற்கு' எதிரான ஆவேசத்திற்கும் என்னவெல்லாம் பின்னணியாக இருக்கிறது, இலக்கியவாதிகளின் இலக்கியச்செயல்பாடுகளையும் அபிப்பிராயங்களையும் எதுவெல்லாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது, ஹூம்......

குறிப்பு :சுஜாதாவின் ஆபத்தான முகங்கள் குறித்து விரிவாக அறிய விரும்புவோர் அ.மார்க்ஸ் எழுதிய 'சோவுக்கு மீசை முளைத்தால் சுஜாதா' கட்டுரை, ரவிக்குமார் நிறப்பிரிகையில் இந்தியாடுடே இதழில் வெளிவந்த சிறுகதையொன்றை கட்டுடைத்து எழுதிய கட்டுரை (சிறுகதை மற்றும் கட்டுரை தலைப்பு இரண்டுமே ஞாபகமில்லை), வெற்றியழகனின் 'சுஜாதாவின் கோணல்பார்வைகள்' என்னும் சிறுநூல் ஆகியவற்றைப் படிக்கலாம்.

சாதிமறுப்புத்திருமணத்திற்கான ஒரு வலைப்பூ

இந்தியச் சாதியச் சமூகம் என்னும் பிரம்மாண்டமான சிறைச்சாலையின் மீது சிறு கல்லையேனும் விட்டுக் கலகலக்க வைக்கும் வல்லமை சாதிமறுப்புத்திருமணங்களுக்குண்டு. அத்தகைய திருமணங்களுக்கான இணையத்தளம் தமிழில் ஏதுமில்லை. ஆனால் இப்போது ஒரு வலைப்பூவை இதற்காகவே தோழர்.சோலை.மாரியப்பன் உருவாக்கியுள்ளார். கும்பகோணத்தில் பெரியார்திராவிடர்கழகத்தில் செயல்படும் அவர்தான் எனக்கும் சாதிமறுப்புத்திருமணத்திற்காகப் பெண்பார்த்தார். ஆனால் பதிவெழுதும் இந்த நிமிடம்வரை நான் தான் சுகுணாதிவாகர் என்று அவருக்குத் தெரியாது. சாதிமீறி மணம் செய்ய விரும்புவோர் தொடர்புகொள்க .

http://thamizharthirumanam.blogspot.com

கர்ப்பம் vs பாலின்பம் மற்றும் பகுத்தறிவு குறித்த சில கருத்துகள்
ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள் என்னும் பதிவிற்கான எதிர்வினைகள் கருத்தரித்தல் மற்றும் பாலுறவு இன்பம் குறித்த உரையாடல்களாக திரும்பியுள்ளன. அதுகுறித்த விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இடுகையைப் படிக்கவும்...

http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html

ஓசோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகளில் பாலியல் சுதந்திரம் மற்றும் கருவுறுதல் மற்றும் கருவுறுதலை மறுப்பது தொடர்பான பெண்ணுக்கிருக்கும் உரிமை ஆகியவை குறித்து கவனப்படுத்துவதே எனது நோக்கம். இது குறித்து, குறிப்பாகப் பெரியாரின் இந்நிலைப்பாடு குறித்த மேலும் சில எனது புரிதல்கள்.

பெரியார் குறித்துப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் அவரது பெண்னியச்சிந்தனைகள், குறிப்பாக இந்தியச்சூழலில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவை. எம்முன்மாதிரிகளுமற்றவை. பெண்ணியம் என்றாலே பெண்னுக்கான சொத்துரிமை, விதவைத்திருமணம் என்பதைத் தாண்டி பெண்னின் பாலியல் வெளி குறித்துப் பயணித்தவை அவரது சிந்தனைகள்.

மணவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவர அரசு தாமதித்தபோது, 'கல்யாணரத்துச்சட்டத்தை விரைவில் அரசாங்கம் கொண்டுவராவிட்டால் திருமணக் கூட்டங்களுக்குச் சென்று கல்யாண மறுப்புப்பிரச்சாரமும் புருசர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் பலதாரமணப் பிரச்சாரமும் செய்வேன்' என்று அரசை 'மிரட்டியவர்' பெரியார்.

இதே போன்ற இன்னொரு சந்தர்ப்பம்தான், கருத்தடையைப் பல்வேறு மத அமைப்புகளும் கலாச்சார அடிப்படைவாதிகளும் எதிர்த்த சூழலில் பெரியார் கருத்தடையை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டது. இக்கட்டத்தில், குடும்பவிளக்கு, இருண்டவீடு, கண்ணகிப்புரட்சிக்காப்பியம் போன்ற அபத்தப்பிரதிகளை எழுதியவரும், தமிழ்த்தேசிய - ஆண்மய்யப்ப் பார்வைகளைக் கொண்டவருமான பாரதிதாசனும்கூட, 'காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம், இதிலென்ன குற்றம்?' என்று பாடிப் 'புரட்சிக்கவிஞர்' என்னும் பெயரைத் தக்கவைத்துக்கொண்டார்((-.

ஆனால் இத்தோடு மட்டும் பெரியார் நிற்கவில்லை. பெண்கள் குழந்தை பெறுவதை நிறுத்த வேண்டும் என்றார். அது வெறுமனே குடும்பக்கட்டுப்பாட்டுக்காக மட்டுமில்லை, பெண்ணின் சுயேச்சையான உரிமைகளை உறுதிசெய்யவும்தான் என்றார். மேலும் குழந்தைகளைப் பெறாமலிருப்பது பெண்னுக்கு மட்டுமான விடுதலையல்ல, அது ஆணுக்குமான விடுதலையே, ஆண்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விசயம் என்றார்.

ஒரு ஆண் நிறைய குழந்தை பெறுவதாலேயே, அயோக்கியனாகவும் ஒழுக்கக்கேடனாகவும் மாறிவிடுகிறான் என்றார். (இந்த இடத்தில் கருணாநிதி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.((- )

சரி பகுத்தறிவு குறித்த விசயத்திற்கு வருவோம்.

எது இயற்கையானது, இயற்கைக்கு மாறானது, இயற்கையோடு இணைந்து வாழ்வது, இயற்கைக்கு எதிராக (அ) இயற்கையை மீறிச்செல்வது என்பதற்கெல்லாம் காலகாலத்துக்குமான பொதுவறையரைகள் ஏதும் கிடையாது. கருவுறுதல் இயற்கையானதெனில் மலட்டுத்தன்மை என்பதும் இயற்கையானதுதான். அதை மருந்துகள் கொடுத்துக் கருவுற வைப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதான். பொதுவாக அறிவியல் என்பதே இயற்கையை மீறிச் சென்றதால்தான் சாத்தியமாயிற்று. எனவே இதில் எது பகுத்தறிவு, எது பகுத்தறிவில்லை என்று தட்டையான அணுகுமுறைகளைக் ( மீண்டும் செந்தழல் ரவி ((- ) கொண்டு தீர்மானிக்க முடியாது.

"Just because men cannot bear children, calling women to refuse to bear children is neither progressive nor scientific."

என்று எந்த அடிப்படையில் சுந்தரமூர்த்தி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு பகுத்தறிவு குறித்து விவாதம் வந்ததால் சில கருத்துக்கள்.

பெரியாரை வெறுமனே வறட்டுத்தனமான பகுத்தறிவுச் சிமிழுக்குள் அடைப்பதன் விளைவுதான் ஆடு கோழித் தடைச்சட்டத்தை ஆதரிப்பது, சமண முனிவர்களின் நிர்வாணத்தை எதிர்ப்பது என்பதிலிருந்து பார்ப்பனீய மதிப்பீடுகள் குறித்து எவ்விதக் கேள்வியும் எழுப்பாது சிறுதெய்வழிபாடுகள் தொடர்பான நம்பிக்கைகளை மட்டும் கிண்டலடிக்கிற நடிகர் விவேக்கைப் 'பகுத்தறிவுவாதி' என்று கொண்டாடுவது வரை நீள்கிறது.

"The views of Periyar and Osho are certainly absurd from a scientific viewpoint even as it sounds progressive.....Just imagine an hypothetical situation in which all women in the world, with no exception, get this message at the same time and unanimously embrace this idea."இதே சுந்தரமூர்த்தி கேட்ட கேள்விதான் ஒரு 'பகுத்தறிவுவாதி' கேட்கும் கேள்வி. ஆனால் பதில் சொல்கிற பெரியார் ஒரு 'பகுத்தறிவுவாதியாய்' நின்று சொல்லவில்லை. பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.

" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.

இங்குதான் பெரியாரிடம் பகுத்தறிவுவாதிகளின் தர்க்கங்களைத் தாண்டிப்போகிற அறவியல் ஆவேசமும் கவித்துவமும் மிளிர்கிறது. எனவே பெரியாரை வெறுமனே பகுத்தறிவுவாதி என மதிப்பிட்டுவிட முடியாது. (இது குறித்துக் கொஞ்சம் விரிவாக அ.மார்க்சின் 'பெரியார்?' நூலில் பெரியாரின் பகுத்தறிவை மதநீக்கம் என அ.மா அடையாளப்படுத்துவதை மறுத்து புதியகோடாங்கி இதழில் எழுதியிருக்கிறேன். மேலும் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பின்பின்னான உற்சாகச்சந்திப்பில் நண்பர்கள் ஓசைசெல்லா, ரோசாவசந்த், ஓகைநடராசன் ஆகியோருடன் 'பெரியாரை ஒரு பகுத்தறிவுவாதி' எனச் சொல்லமுடியுமா?' என்ற போக்கில் தொடங்கிய உரையாடல் பாதியிலேயே நின்றுபோனது.)

அப்படியானால் பெரியாரின் 'பகுத்தறிவை' எப்படிப் புரிந்துகொள்வது? அது வெறுமனே ஆம், இல்லை என்னும் இருமைகளை அடிப்படையாகக் கொண்ட தருக்க முறையல்ல, மாறாக உரையாடலை மறுக்கும் இந்தியப் பார்ப்பனீய உளவியலுக்கு எதிராக எல்லாவித உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, தீர்மானிக்கும் காரணிகளைப் புறத்திலிருந்து அல்லாமல் சுயேச்சையாக நிர்ணயிக்கிற, இறுக்கங்களற்ற நெகிழ்வுகளையுடைய திறப்பு. இப்படியும் சொல்லலாம், 'உனக்கு நீயே விளக்கு' என்ற பவுத்தத்தின் அறுபடாத கண்ணி.

பெரியாரியக்கத் தோழர்களுக்கு உதவுங்கள்! - ஒரு தோழமைப்பதிவு

தோழர்களே!

அசுரன் ஊடகம் கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் பெரியார் திராவிடர் கழகத்தின் நூல் வெளியீடுகள் மற்றும் ஒலிநாடாக்கள் வெளியீடு, ஒளிக்குறுந்தகடு வெளியீடு ஆகியவற்றிற்கு தொழில்நுட்பப்பணிகளையும், கணினியாக்கப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

இதுவரை நாங்கள் பணியாற்றிய பதிப்புகள்

தமிழர்கள் உரிமைக்கு எதிரி யார்? பார்ப்பனர்களா ?

தனியார்துறை இடஒதுக்கீடு ஏன்? ஏதற்கு ?

பெரியாரின் விடுதலைப்பெண்

கடவுள்மறுப்புத்தத்துவம் ஒரு விளக்கம்

பெரியார் ஒரு வாழ்க்கைநெறி

இனிவரும் உலகம்

பெரியாரும் அம்பேத்கரும்

கடவுளர் கதைகள்

இந்துமதப்பண்டிகைகள்

இளைஞர்களே உங்களுக்குத் தெரியமா ?

மனுநீதி குலத்துக்குஒருநீதி

பெரியாரின் தன்வரலாறு

கிராமங்கள் ஒழியவேண்டும் ஏன்?

தமிழர்கள் இந்துக்களா ?

மதம் மாறினால் குற்றமா?

இராமாயணக்குறிப்புக்கள்

ஆத்மா – நரகம், மோட்சம்

பெரியாரில் பெரியார்

பெரியாரும் தனித்தமிழ்நாடும்

உயர் எண்ணங்கள்

சித்திரபுத்திரன் விவாதங்கள்


ஆகிய சிறுவெளியீடுகளுக்கு கணினியாக்கம் மற்றும் பதிப்புப்பணிகள் அனைத்தையும் செய்தோம். முதன்முதலாக தமிழர் பண்பாடு என்ற சிறு வெளியீட்டை அசுரன் ஊடகத்தின் பெயராலேயே வெளியிட்டோம். பெரியாரியல்வாதிகளால் மிக மிக அவசியமான பணியென்றும், தங்கள் இலட்சியம் இதுதானென்றும் சொல்லப்பட்டது குடிஅரசு தொகுப்பு வெளியீடு ஆகும். பெரியாரியலாளர்களின் கனவை பெரியார் திராவிடர் கழகம் நிறைவேற்றத் தொடங்கியது. குடிஅரசு மூன்று தொகுதிகள் மற்றும் சோதிடப்புரட்டு எனும் 500 பக்கங்கள் கொண்ட நூல் ஆகியவற்றை மிக மிக மலிவான விலையில் மக்களிடையே பரவ உரிய பணிகளையும் செய்தோம்.


குறுந்தகடுகள்


மதுரையில் நடைபெற்ற பெரியார் தலித்துகளுக்கு விரோதியா? என்ற கருத்தரங்கின் ஒளிக்குறுந்தகடு,

சங்கராச்சாரி யார்?

புதுவை தமிழர் தன்மானமீட்பு மாநாடு

திருப்பூர் தமிழர் எழுச்சி விழா

சேலம் குடிஅரசு வெளியீட்டு விழா உரைகள்

சாய்பாபவின் உண்மைமுகம்

ஓட்டன்சத்திரம் காதலர்தின விழா

இடஒதுக்கீடு ?

திண்டுக்கல் 5 நாள் பயிலரங்கம் (31 குறுந்தகடுகள்) தொகுப்பு

ஏற்காடு பயிலரங்கத் தொகுப்பு

மேட்டூர் நாத்திகர் விழா

தஞ்சை சாதிஒழிப்பு மாநாடு


ஆகியவற்றை தரமான குறுந்தகடுகளைப் பயன்படுத்தி அடக்க விலையில் பெரியார் தி.க மக்களிடம் கொண்டுசென்றது. அதற்குரிய அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் செய்தோம். இன்னும் பல நிகழ்வுகள் எடிட்டிங் பணிகள் முடிவடைந்தும் பொருளாதாரமின்மையால் வெளிவராமல் உள்ளன.


இணையம்


http://www.dravidar.org/ என்ற இணையதளத்தை கடந்த 2007 பிப்ரவரி 12 முதல் ஓராண்டாக நடத்திவருகிறோம். http://www.thozharperiyar.%20blogspot.,http://www.periyardravidar%20kazhagam.blogspot.com/ ,http://www.periyarmulakkam.blogspot.com/,http://www.thozharperiyar.wordpress.com/ ஆகிய வலைப்பூக்களையும் பதிவிட்டு வருகிறோம். திராவிடர் இணையத்தில் மின்நூல்களையும் பதிவேற்றியுள்ளோம். பெரியாரியலைப் பரப்பும் இன்னும் சில இணையதளங்களுக்கு மின்நூலாக்கப் பணிகளையும், கணினியாக்கப் பணிகளையும் செய்துவருகிறோம்.


வேண்டுகோள்!


சேலம் விசு, சேலம் வீரமணி, மேட்டூர் மார்டின், ஒட்டன்சத்திரம் பெரியார்நம்பி, தாராபுரம் குமார், செம்பட்டி ஆல்பர்ட், பழனி மருதமூர்த்தி ஆகிய தோழர்கள் வழங்கிய நன்கொடைகள்,


பெரியகுளம் குமரேசன், செம்பட்டி இராசா, வலையபட்டி நாகராசு, சென்னை மதி, மறைந்துவிட்ட வெள்ளோடு ஸ்ரீரங்கன் ஆகிய தோழர்களின் இரவுபகல் பாராத உழைப்பு,


புதுவை கோபதி, அகிலன் ஆகியோர் வழங்கிய உயர்நுட்பமென்பொருட்கள்,

பெரியார் திராவிடர் கழகத் தலைவர்கள் அளிக்கும் ஊக்கம், ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட பணிகளை செய்துவருகிறோம்.


ஒரே நேரத்தில் இயக்கத்தின் கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் போன்றவற்றிற்கும் நன்கொடை அளித்து இயக்கப்பணிகளையும் செய்துவரும் தோழர்களுக்கு, வெளியீடுகள் அதற்கான தொழில்நுட்பப் பணிகளுக்கு உதவுதல் என்னும் கூடுதல்சுமையையும்; சுமத்திவருகிறோம். இதுவரை வெளியே உதவி கோராமல் காலத்தை கடத்திவிட்டோம். இனி தொடர்ந்து பணிகள் நடக்க இயக்கம் கடந்த உங்களை நாடுகிறோம்.


பொருளாதாரமின்மையால் தட்டச்சு செய்தும் அச்சிடப்படாமல் உள்ள உள்ள சிறு சிறு நூற்களை வெளியிட உள்ளோம்.


பெரியாரின் உரையாக, கட்டுரையாக இதுவரை வந்துள்ள சிறு வெளியீடுகள் அனைத்தையும் மின்நூலாக்கி இணையதளங்கள் மூலம் உலகம் முழுக்க இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிய பணியையும் தொடங்கியுள்ளோம்.


வெறும் 500 எம்.பி அளவுள்ள - நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் பார்த்துவரும் திராவிடன் இணையத்தை மேம்படுத்த – அதன் அளவை உயர்த்த உள்ளோம்.


பெரியாரியலை காலத்துக்கேற்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களிடமும், உலகளாவி வாழும் தமிழர்களிடமும் கொண்டுசெல்ல வேண்டிய எமது கடமைக்கு தோள்கொடுக்க, துணைநிற்க அனைவரையும் அழைக்கிறோம். எமது தேவை 2,00,000 இரண்டு இலட்ச ரூபாய்கள்.


இதில் 1,00,000 ரூபாயை நிரந்தர இருப்பாக வைத்து தொடர்ந்து சிறு நூல்களை வெளியிடுவது என்றும், 50,000 ரூபாயை குறுந்தகடு வெளியீட்டிற்கும், 50,000 ரூபாயை மின்னூலாக்கம் மற்றும் இணையதள மேம்பாட்டிற்கும் பயன்படுத்த எண்ணியுள்ளோம்.


அறக்கட்டளைகளோ, அவ்வப்போது வரும் ஆளுங்கட்சிகளின்; அரவணைப்போ, கல்வி வியாபார வருமானங்களோ, கட்டப்பஞ்சாயத்து வருமானங்களோ எதுவுமில்லாத பெரியாரியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற துடிப்பைமட்டும் கொண்டு;ள்ள தோழர்களின் வேண்டுகோள்! பணிகளுக்குரிய ஆலோசனைகளைக் கூறுங்கள். அனைத்தையும் நிறைவேற்ற நிதியையும் வழங்குங்கள்!

அசுரன் ஊடகம், திண்டுக்கல்
நிதி வழங்க வேண்டிய முகவரி : தோழர் ஆல்பர்ட் , நவீன் தொலைபேசி நிலையம் , பேருந்து நிலையம் எதிரில், செம்பட்டி – 624710

வங்கிக்கணக்குப் பெயர் : MERCURY SOFTWARE

வங்கி எண் : 601305014423, ICICI Bank, Madurai Branch

மின்னஞ்சல் : asuranoodakam@gmail.com, atthamarai@gmail.com

ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள்

ஓஷோ எனக்கு அறிமுகமாகும்போது ஓஷோவாக அறிமுகமாகவில்லை. ரஜனீசாகத்தான் அறிமுகமானார், அதுவும் செக்ஸ் சாமியார் ரஜனீசாக. என் பதின்பருவங்களில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகனாகத் திகழ்ந்த காரணத்தினால் சாமியார்கள் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது. அவ்வெறுப்புக்குள் உட்பட்டே ஓசோவும் என் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

கல்லூரி முடிந்து ஒரு பத்திரிகை நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியபோது என்னோடு இணைந்து 'புதியபயணம்' என்னும் மாத இதழை நடத்திய ஜெகன் தான் முதன்முதலில் ஓஷோவை முறைப்படி அறிமுகப்படுத்தினான். முதன்முதலில் படித்த ஓசோ நூல், 'இப்போதே பரவசம், ஏன் காத்திருக்கிறீர்கள்?'. பெரியாரைத் தொடர்ச்சியாக வாசிக்கும் யாரையும் ஓசோ ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஓஷோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகள் குறித்து ஒருநூல் எழுதும் எண்ணமிருப்பதால் ஓஷோவைச் சமீபகாலங்களில் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தபோது கவனத்திற்குட்பட்ட சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ளலாமென்று தோன்றுகிறது.

பெரியாரும் ஓசோவும் சிறுபிராயத்திலிருந்தே கலகக்காரராக விளங்கியவர்கள். ஓஷோ சிறுவனாக இருந்தபோது ஒரு விருந்தினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒரு வயதானவரின் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு ஓசோவின் வீட்டில் பணித்திருக்கிறார்கள். ஆனால் ஓசோவோ ஏன் அவர் காலில் விழ வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 'அவர் வயதானவர், அதனால் காலில் விழவேண்டும்' என்றிருக்கிறார்கள்.

'வயதானவர் என்றால் ஏன் காலில் விழவேண்டும், ஏன் தலையைத் தொடக்கூடாது? நம் வீட்டிற்கு எதிரில் கட்டப்பட்டிருக்கும் யானைக்கு இவரை விட வயது அதிகமிருக்குமே, ஏன் நாம் யானையின் காலில் விழுவதில்லை?' என்று கேட்டிருக்கிறார் பாலக ஓசோ. பெரியாரின் சிறுவயதுக் கலகச்செயற்பாடுகள் பலரும் அறிந்ததுதான்.

அதேபோல் ஓசோவிடமிடம் பெரியாரிடமும் தொழிற்படும் தர்க்கங்கள் அலாதியானவை. பிறந்த நேரம் கணிப்பது குறித்துப் பெரியார் கேட்பார், 'பிறந்த நேரம் என்றால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நேரமா, தலை முதலில் வந்த நேரமா, முழு உடலும் வெளிவந்த நேரமா, அப்போது டாக்டர் பார்க்கும் நேரமா, மருத்துவமனைக்கு வெளியிலுள்ள கடிகாரத்தின் நேரமா, உலகத்திலுள்ள அனைத்துக் கடிகாரங்களும் ஒரேநேரத்தைக் காட்டுமா?' என்று.

ஓசோவும் இப்படியான தர்க்கங்களை அடுக்கிக்காட்டுவதில் வல்லவர். சொர்க்கம் என்பது பிளாஸ்டிக்காலானதாகத்தானிருக்கும் என்னும் ஓசோ, ஏனெனில் அங்கு துன்பமே இல்லை, ஒரே இன்பம்தானெனில் ஒரேநாளில் சொர்க்கம் போரடித்துப் போகுமென்பார். அங்கு முதல்நாள் மட்டும்தான் செய்தித்தாள் அச்சடிக்கப்பட்டிருக்கும். கொலை, கொள்ளை, பாலியல்பலாத்காரம் இல்லாத நியூஸ்பேப்பர் எதற்கு?

மதவாதிகள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பெரியாரும் ஓசோவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதுவும் ஓசோ தான் பிறந்த ஜைனமதத்தின் போலித்தனமான செயற்பாடுகள் குறித்தும் ஜைனமுனிவர்களின் உடலொடுக்கும் தன்மை குறித்தும் பகிடிசெய்தார். பெரிரார் கடவுளை மறுத்தாரெனில் ஓசோவோ 'கடவுள் இறந்துவிட்டார், ஜென்னே வாழ்கிறது' என்றார்.

அதேபோல் ஓசோவின் வாசிப்பு நினைத்துப்பார்க்க முடியாதளவு அபாரமானது. தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் , அரசியலாளர்கள் என அனைவர் குறித்தும் போகிறபோக்கில் விவரித்துச் செல்வார். பெரியாரை ஓசோ அறிந்திருந்தால் நிச்சயமாகக் கொண்டாடியிருப்பார் என்பதில் அய்யமில்லை.

கற்பு, கலாச்சாரம், குடும்பநிறுவனம், குழந்தைப்பேறு ஆகிய அம்சங்களிலும் ஓசோ மர்றும் பெரியாரின் சிந்தனைகள் பல சமயங்களில் இணையாகப் பயணிக்கின்றன.

இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர். முற்பிறவி, கர்மா, விதி ஆகிய கருத்தாக்கங்கள் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாரிய விளைவுகள் குறித்து உரையாடுகின்றனர். திருமண முறையை மறுத்து ஆண் - பெண்ணுக்கிடையில் தோழமை உறவை வலியுறுத்துகிறார் ஓசோ. பெரியாரும் 'திருமணம் என்பது கிரிமினல் குற்றம்' என்கிறார்.

ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களை ஏற்றுக்கொள்ளாததோடு காத்திரமான விமர்சனங்களையும் முன்வைத்தார். பெண்ணிய இயக்கங்கள் பெண்களை ஆண்களாக மாற்றுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றன என்றார். ஆணை விடப் பெண்ணே உயர்ந்தவள் என்ற ஓசோ ஆனால் பெண்னிய இயக்கங்கள் பெண்களை ஆண்களைப் போல மாற்ற முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது, ஆண்தான் பெண்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது என்றார்.

இத்தகைய விமர்சனங்களின் பின்னணியில் பெரியாரின் சிந்தனைகள் குறித்தும் கூட நாம் கேள்விகளை எழுப்பலாம். ஏனெனில் பெரியார் பெண்களை ஆண்களைப் போல உடையணியச்சொன்னவர், இருவருக்கும் பொதுப்பெயர்களை இடச்சொன்னவர். கிராப் வெட்டிக்கொள்ளச் சொன்னவர். இதுவெல்லாம் காலமாற்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு பெண்ணியத்தை ஆதரிக்கும் ஆணும் சேலை கட்டவோ வலையள் அணியவோ தயாராயில்லை.

குறிப்புகள் :

1. ஆனால் ஓசோ மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை அப்படியே நாம் இந்தியச்சூழலில் பொருத்திப் பார்க்கமுடியாது. இங்கு பெண்ணிய இயக்கங்களில் பார்ப்பனப் பெண்களே அதிகமும் தலைமையைக் கைப்பற்றியதால், பார்ப்பனீய - ஆணிய மதிப்பீடுகளுக்கேற்றவாறான பெண்களை 'உருவாக்கி'த் தருவதில் தங்களையறியாமலே வினையாற்றினர். தமிழ்ச்சூழலிலோ ஓவியா, சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தியப் பெண்கள் இவர்களையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் பெண்ணிய இயக்கமெல்லாம் ஒன்றுமில்லை. வரதட்சணை, கற்பழிப்பு எதிர்ப்பு ஆகியவற்றைத் தாண்டாத இடதுசாரிப் பெண்ணிய அமைப்புகளும், தயிர்சாதத் தயாரிப்புகளான மங்கையர்மலர், அவள்விகடன் வாசகர்வட்டங்கள்தானிருக்கின்றன.

2. கடைசிப் பத்தியில் உள்ள பெரியாரின் மீதான கேள்விகளைத் தயவுசெய்து தட்டையாக அணுகவேண்டாம். ஏனெனில் பெரியார் அடையாளங்களைக் கடப்பதற்காகவே - 'ஆண்மை', 'பெண்மை' ஒழிவதற்காவே அத்தகைய முன்வைப்புகளை முன்வைத்தார். குறிப்பாக உடை விசயத்தில் பெண்களுக்கு மிகவும் சவுகரியமானதும் ஆபத்தில்லாததும் சுடிதார், பேண்ட் - சட்டை மாதிரியான உடைகளே. சுனாமியின் போது நிறையப் பெண்கள் ஓடமுடியாமல் சேலை தடுக்கியும் நீண்ட கூந்தல் மரக்கிளைகள் மாட்டியும் இறந்துபோனார்கள் என்னும் எதார்த்தநிலைமைகளையும் கணக்கிலெடுக்கவேண்டும். என்றபோதும் வேறுமாதிரியும் உரையாடிப் பார்க்கலாமே.

பவுத்த ராமாயணம் - அம்பேத்கரின் 'ராமனின் புதிர்' கட்டுரையை முன்வைத்து...

சமீபத்தில் அம்பேத்கரின் 'Riddle of the Rama' கட்டுரையையும் பவுத்த ஜாதகக் கதைகளில் காணப்படும் பவுத்த ராமாயணத்தையும் நீன்டநாட்களுக்குப் பின் ஒரேநேரத்தில் வாசிக்கநேரிட்டது. ராமனின் புதிர் கட்டுரையில் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தை முன்வைத்து ராமன் என்னும் புனிதப்பிம்பத்தின் மீது சில குறிப்பிடத்தக்க விமர்சனங்களை முன்வைக்கிறார்.

அதேநேரத்தில் பவுத்தம் தனக்கான ஒரு ராமாயணத்தை ஏன் உருவாக்கவேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். ராமன் என்னும் பிம்பம் நெடுங்காலமாகவே இந்திய உளவியலில் பாரிய தாக்கத்தை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏற்படுத்திவந்திருக்கிறது. காலனிய ஆட்சிக்காலகட்டத்தின்போது தனக்கான சில மதிப்பீடுகளினடிப்படையில் காந்தி ஒரு ராமனைக் கற்பித்து ராமராஜ்ஜிய சுயராஜ்ஜியக் கதையாடல்களை விரித்தார்.

பாபாசாகேப் அம்பேத்கர் ராமனின் புதிரை அவிழ்த்தாரெனில் பெரியாரோ ராமனின் உருவப்படத்தை எரித்தார். 90களுக்குப்பிறகான இந்துத்துவப் புத்தெழுச்சி ராமனை முன்வைத்தே தனக்கான பாசிச அரசியலை உத்வேகத்தோடு கட்டமைத்தது. அதன் நீட்சியாகத் தற்போது கருணாநிதியின் தலைக்கு விலைபேசவைத்ததும் ராமன் தான். கருணாநிதியின் பழைய திராவிட உணர்வுகளை அவ்வப்போது மீட்டெடுக்க உதவுவதும் அதே ராமன் தான்.

கம்பராமாயணத்தைக் கொளுத்துவதற்காக இயக்கம் கட்டிய திராவிட இயக்கம்தான் ராவண காவியம் என்னும் எதிர்க்கதையாடல்ப்பிரதியொன்றை உருவாக்கியது. இப்படியாகவே ராமன் இந்தியப்பொது உளவியலில் செலுத்தும் செல்வாக்கைக் கணக்கில் கொண்டு பவுத்தமும் தனக்கான ஒரு ராமாயணத்தை உருவாக்கிக்கொண்டது எனப்புரிந்துகொள்ளலாம்.

புத்தஜாதகக்கதைகளில் பவுத்த ராமாயணம் ஒரு கதையாகவிருக்கிறது என்பதும் அக்கதையின்படி ராமனும் சீதையும் சகோதர - சகோதரிகள் என்பதையும் பலரும் அறிந்திருக்கலாம். ஆனாலும் அதன் கதையை முழுமையாகத் தெரியாத நண்பரகளுக்காக ஒரு கதைச்சுருக்கம் :

பெனாரசைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டுவந்தவர் தசரதச்சக்கரவர்த்தி. அவருக்கு ஒரு அன்பான மனைவியும் அழகான இரு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமுண்டு. ஆன்குழந்தைகளின் பெயர்கள் ராமபண்டிதன், லக்குவன் , பெண்குழந்தையின் பெயர் சீதா. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தசரதனின் மனைவி இறந்துவிட ஆளாத்துயரில் ஆழ்ந்தார் தசரதச்சக்கரவர்த்தி. அரசப்பிரதானிகளோ இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதன்பேரில் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார்.

அப்பெண்ணுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தைபிறக்க பரதன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்போது அப்பெண்ணிடம் தசரதன் ஏதேனும் உதவி வினவ வேண்டுகிறார். அப்பெண்ணோ சிறிதுகாலம் கழித்து அவ்வுதவியை வேண்டிப்பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.

பரதன் சிறிது வளர்ந்த காலகட்டத்தில் அப்பெண் தசரதனிடம் வந்து தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைக்குமாறு வேண்டுகிறார். தசரதனோ மறுக்கிறார். மீண்டும் அப்பெண் வற்புறுத்த, அப்பெண்ணால் தன் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என அய்யங்கொண்ட தசரதன் ராம்னையும் லக்குவனையும் அழைத்துச் சிலகாலம் காட்டில் தங்கியிருக்குமாறுப் பணிக்கிறார்.

அரசவை நிமித்திகர்களை அழைத்து தான் இன்னும் எவ்வளவுகாலம் உயிர்வாழ்வேன் என்று வினவுகிறார். நிமித்தகர்களோ இன்னும் தசரதன் 12 ஆண்டுகாலம் உயிர்வாழ்வார் என்றுகூற , 12 ஆண்டுகாலம் ராமனையும் லக்குவணையும் காட்டில் வசிக்குமாறு ஆணையிடுகிறார். சீதையோ தானும் சகோதரர்களுடன் காட்டிற்குச் செல்வதாகக் கூறிச்செல்கிறாள்.

காட்டில் ஒரு குடிலமைத்து வசிக்கும் சகோதரர்களில் லக்குவனும் சீதையும் ராமனிடம், 'நீங்கள் இப்போது எங்களுக்குத் தந்தையின் இடத்திலிருப்பதால், நாங்கள் போய் உணவு சேகரித்து வருகிறோம். நீங்கள் குடிலைப் பராமரித்து வாருங்கள்'; என்கின்றனர். ராமனும் சம்மதிக்கிறார். இடையில் ஒன்பதாண்டு காலத்திலேயே தசரதச்சக்கரவர்த்தி இறந்துவிடுகிறார்.

பரதனின் தாய் பரதனுக்கு முடிசூட்ட முயற்சிகள் மேற்கொள்ள, அரசவையினரோ அதைத் தடுக்கின்றனர். ராமனுக்கே அரசாளும் உரிமை உள்ளது என்கின்றனர். பரதன் தன் அண்ணனைச் சென்று அழைத்து வருவதாகக் கூறிச்செல்கிறான். காட்டிற்குச் சென்று ராமனிடம் தந்தை இறந்த செய்தியைக் கலங்கியவாறே தெரிவிக்கிறான் பரதன்.

ஆனால் ராமர் கலங்கவில்லை. அப்போது உணவு சேகரித்துவிட்டு லக்குவனும் சீதையும் அவ்விடத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் தந்தை இறந்த செய்தியைக் கேள்விப்பட்டால் கடும் அதிர்ச்சி அடைவார்கள் என்பதால் ராமன் அவர்களிடம் பொய்க்கோபம் கொண்டவரைப் போல நடிக்கிறார். "நீங்கள் உணவு சேகரித்துத் திரும்ப வெகுநேரமாகிவிட்டது. எனவே இதற்குத் தண்டணையாக நீரில் சென்று நில்லுங்கள்' என்கிறார்.

இருவரும் நீரில் சென்று நின்றபிறகே தந்தை இறந்த செய்தியை அவர்களிடம் தெரிவிக்கிறார் ராமர். இருவரும் மயங்கிவிழுகின்றனர். இரண்டாவது முறை எழும்போது மீண்டும் சேதி கேட்டு மயங்கிவிழுகின்றனர். மூன்றாவதாக மயங்கி எழுந்தபின்பே அவர்களால் இயல்பான நிலைக்கு வரமுடிந்தது. இதைக்கண்ட பரதனுக்கோ ஆச்சரியம். ராமன் மட்டும் எப்படி இயல்பாக இருந்தாரென்று. ராமனிடமே கேட்க ராமன் கூறுகிறார்.

'உயிர்கள் அனைத்தும் மரணத்தை நோக்கியே செல்கின்றன. எல்லா இலைகளும் பழுத்து உதிரவே செய்கின்றன. மரணங்களில் உற்றார் மரணம், உறவினர் மரணம் என வேறுபடுத்திப் பார்ப்பதால்தான் நமக்குத் துக்கம் ஏற்படுகிறது' என்றவாறு நீண்டநேரம் அதுகுறித்துக் விளக்கமளிக்கிறார்.

பிறகு பெனாரசுக்கு வருமாறு ராமனை பரதன் வேண்ட, ராமனோ தான் தந்தைக்கு வாக்களித்ததைப் போல இன்னும் மூன்று ஆண்டுகள் காட்டிலிருந்துவிட்டு வருகிறேனென்றும் சீதையையும் லக்குவனையும் அழைத்துச்செல்லுமாறும் பணிக்கிறார். தனது அடையாளமாக தனது காலணிகளையும் பரதனிடம் கொடுப்பிக்கிறார்.

ராமன் வரும்வரை அரசனின் ஆசனத்தில் அப்பாதுகைகளை வைத்துப் பாதுகாக்கின்றனர். ஏதேனும் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமாறு அரசவை தவறான முடிவெடுக்க நேரிட்டால் அப்பாதுகைகள் தனக்குள் அடித்துக்கொண்டு அத்தீர்ப்பை மறுக்கும், சரியான தீர்ப்பெனில் அமைதிகாக்கும். இப்படியாக மூன்று ஆண்டுகள் கழிந்து பெனாரசிற்குத் திரும்பும் ராமன் அரசாட்சியை ஏற்றுக்கொள்கிறார். சகோதரியான சீதா பட்டத்த்கு ராணியாகிறார்.


அம்பேத்கரின் வால்மீகி ராமாயணத்தின் மீதான விமர்சனங்களுக்குத் திரும்புவோம். ராமன் என்பவன் புனிதப்பிம்பம் இல்லையென்றும் ராமனின் கதை பொதுவழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதற்கான அறவியல் அடிப்படைகள் ஏதும் கிடையாது என்று வாதிக்கும் அம்பேத்கர் தனது விமர்சனங்களைக் குவிக்கும் புள்ளிகள் :

1. முதலாவதாக வாலியின் பிரச்சினையில் ராமன் நடந்துகொண்டவிதம். ராவணனை வெல்வதற்காகவும் சீதையை மீட்பதற்காகவும் படைபலம் தேவைப்படுகிறது. இதற்காகவே சுக்ரீவன் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற ராமன் உதவுகிறான். இதற்காக யுத்த தருமங்களுக்கு அப்பாலான உத்தியின் மூலம் வாலியைக் கொல்கிறான். இங்கு ராமன் லட்சிய புருசனாகவோ அறவியல் அடிப்படையிலான முன்மாதிரியாகவோ கொள்வதற்கான எந்த அறவியல் நியாயங்களுமில்லை. தனது ஆதாயத்திற்காகப் பதிலுதவியின் பொருட்டு அறவியல் மதிப்பீடுகளை மீறுபவனாகவே ராமன் விளங்குகிறான்.

2. சீதையை ராமன் கையாண்டவிதம். ராவணனைப் போரில் வெற்றிகொண்டபின் ஆறுமாதங்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த தன் அன்புமனைவியைக் காண ராமன் உடனே செல்லவில்லை. மாறாக நிதானமாக விபீடணின் பட்டமேற்பு விழாவில் பங்குகொண்டு பிறகு அனுமனை அனுப்பியே சீதையை அழைத்து வரச்சொல்கிறான். அப்போதும் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க சீதை தீக்குளித்துத் தன்னை மெய்ப்பித்தபிறகே சீதையை ஏற்றுக்கொள்கிறஆண்.

அதன்பிறகும் கூட நகரத்தார்கள் சீதையின் கற்பின் மீது அய்யங்கொள்ள ஒரு கர்ப்பிணிப்பெண்ணைக் கூசாது காட்டிற்கு அனுப்புகிறான். ( ஆகமொத்தம் ராமனை மணந்தபின் சீதை அதிகநாட்கள் வாழ்ந்தது காட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.). அங்கு லவகுசா என்னும் இரு குழந்தைகளைப் பெற்றபிறகு வால்மீகி அவர்களை வளர்க்கிறார். பிறகு தனது அரசவையில் லவகுசாச் சகோதரர்களைக் கண்ட ராமன் சீதையை அழைத்து வருமாறு வால்மீகியை வேண்டுகிறான். அப்போது அரசவைக்கு வந்த சீதை மீண்டும் தன்னை 'நிரூபிக்க' பூமி விழுங்கி மீள்கிறாள். இங்கு முழுக்க ராமன் எவ்வித அறவியல் அடிப்படைகளற்ற ஒரு ஆணாகாவே நடந்துகொண்டதை விரித்துரைக்கத் தேவையில்லை. மேலும் இங்கு சீதையின் கற்பு நிரூபிக்கப்படுவதை விடவும் ஒரு கற்புள்ள பெண்ணுக்குத்தான் தான் கணவன் என்று நிரூபிப்பதே ராமனின் அவசியம்.

3. ராமன் சீதையோடு வாழ்ந்த காலங்களிலும் சரி, அவளைப்பிரிந்து அரசாண்டகாலங்களிலும் சரி, தினமும் தனக்கான ஓய்வு இல்லத்தில் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தான். அப்போது அழகிகளின் நடனக்கேளிக்கைகளும் நடைபெறும். எனவே கேளிக்கைகளில் திளைத்து மகிழும் ஒரு அரசன் என்பதைத் தாண்டி ராமனுக்கான பாத்திரமில்லை.

மேற்கண்ட அம்பேத்கரின் வால்மீகிராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களைக் கவனித்தால் பவுத்த ராமாயணத்தில் இத்தகையக் கூறுகள் இல்லாததை விளங்கிக்கொள்ள இயலும்.

மேலும் பவுத்த ராயணத்தின்படி ராமன் ஒரு அவதாரப்புருசனோ, காவிய நாயகனோ நாடுபிடிக்கும் ஆசைகொண்ட அல்லது கேளிக்கைகளின் மீது நாட்டங்கொண்ட சராசரி மன்னனோ அல்ல. தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஆரண்யவாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டவன்.

மேலும் தசரதன் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர்வாழ்வார் என்று நிமித்திகர்கள் கூற தசரதனோ ஒன்பதாண்டுகளிலேயே இறந்துவிடுகிறார். இங்கு நிமித்திகத்தின் மீதான பவுத்தத்தின் மெல்லிய குரலினூடான கேள்வியை நாம் கேட்கவியலும். நிமித்தகம் உள்ளிட்ட வெளியிலிருந்து செலுத்தப்பட்ட காரணிகளல்ல நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவை என்பதே இதன் சேதி.

இன்னும் முக்கியக் கூறு, வாலியைக் கொல்லும் கோழைத்துரோகம் மட்டுமில்லை, பவுத்த ராமாயணத்தில் ராவணன் என்னும் பாத்திரப்படைப்பே இல்லை. பவுத்த ராமாயணம் போரையும் உயிர்க்கொலையையும் நிராகரிக்கிறது. ராவணனும் இல்லாமல், போரும் இல்லாமல், பிறகு எதற்குத்தான் இந்த 'பவுத்த ராமாயணம்'?. இப்பவுத்த ராமாயணத்தின் உயிர்ப்பகுதியே மரணங்கள் குறித்து ராமன் பரதனிடம் பேசுவதாக வரும் பகுதிகள்தான்.

மரணம், வாழ்வின் அர்த்தம், துக்கம், துக்க்கத்தின் காரணம், மரணத்திற்குப் பின்னான வாழ்வு, அல்லது மரணத்தோடு வாழ்வு முடிந்துவிடுகிறதா என்னும் பெருங்கேள்வி இவை பவுத்தத்தின் அறவியல் தேடலின் அடிப்படை. இன்னும் சொல்லபோனால், சித்தார்த்தன் புத்தனாக மாறியதன் தொடக்கப்புள்ளி. இக்கேள்விகளை முன்வைத்து விரியுமொரு பிரதியே பவுத்த ராமாயணம்.

குறிப்பு : பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆனால் மறுபிறப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆன்மாவே இல்லாதபோது மறுபிறப்பு என்பது எப்படிச் சாத்தியம் என்னும் கேள்வியை முன்வைத்து பவுத்தத்தின் மறுபிறப்புக்கொள்கை குறித்து விரிவாக ஆராய்கிறார் அம்பேத்கர். அவர் மட்டுமல்ல, தர்மானந்த கோசாம்பி தொடங்கி நம் தமிழகத்தைச் சேர்ந்த மயிலை சீனி வேங்கடசாமிநாட்டார் வரை மறுபிறப்புக்கொள்கை குறித்து முன்வைத்த விளக்கங்கள் குரித்து வாய்ப்பு கிடைக்கும்போது உரையாடுவோம்.