இந்த படம் இன்றோடு கடைசி

அனேகமாய் இப்படியொரு தமிழ்மண நட்சத்திர வார அனுபவம் யாருக்கும் கிட்டியிருக்காது, எனக்கும்தான். இனி நான் இணையத்தில் எழுதப்போவதில்லை, யாருக்கும் பின்னூட்டம் இடப்போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். தோன்றினால் கவிதைகள் மட்டும் எழுத உத்தேசம்.

காஞ்சாஹசி

டி.வி.எஸ் 50ஐ எடுத்துச் சென்றிருந்தபோது குழாயடியில் வரிசையில் நின்றிருந்தாள் சிரஞ்சீவி. கிளம்புவதற்குத் தயாராகத்தான் இருந்தாள். ‘‘அஞ்சுநிமிஷம் இருங்க, தம்பியை ஸ்கூலுக்குப் பத்திட்டு வந்துர்றேன்’’. நான் அப்போது பழனியில் ஒரு தொண்டுநிறுவனத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியொன்றும் பிரமாதமான பணியில்லை. பழனியில் இருக்கும் குழந்தைத்தொழிலாளர்களைக் கணக்கெடுத்து டிராப் அவுட் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, மீதமுள்ள சிறார்தொழிலாளர்களுக்கு மாலையில் வகுப்பெடுப்பதுதான் அந்த என்.ஜி.ஓவின் வேலை. மொத்தம் 14 பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஊக்குனர்கள் என்று வினோதமான அலுவல்பெயர் இருந்தது. அவர்களை மேற்பார்வை செய்வதுதான் என் பணி. ஏனோ தானோவென்று போய்க்கொண்டிருந்த வேலைகளை முடிந்தவரைக்கும் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் ஒரு நரிக்குறவர் குடியிருப்பைக் கண்டுபிடித்தேன். பழனி ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரே விரிந்து கிடந்த அவர்களின் குடியிருப்பு என் கவனத்தை ஈர்த்தது. நண்டும் சிண்டுமாய் குழந்தைகள், குளிக்காமலே அழகாயிருக்கிற பெண்கள், எப்போதும் கமழும் மாமிசக்கவுச்சி, பூனைத்தனமான பாஷை என்றிருக்கும் அங்குதான் நானும் சிரஞ்சீவியும் செல்ல வேண்டும். அந்த குழந்தைகளுக்கு இன்று முதல் வகுப்பெடுக்கப் போகிறோம். அங்கு பேண்ட் சட்டை அணிந்த ஒரே ஆண் சாம்சன்தான். அனேகமாய் அவன்தான் தமிழ்நாட்டில் எம்.ஏ முடித்த நரிக்குறவராய் இருப்பான். அவன் கிறித்தவத்திற்கு மாறியிருந்ததால் அது சாத்தியமாகியிருந்தது.

நரிக்குறவர்களில் சாதி கிடையாது. ஆடு தின்னும் குழு, எருமை தின்னும் குழு. இருவருக்கும் வெவ்வேறு தெய்வங்கள். பாலியல் என்பது கரைகளற்ற நதியாய் வரைமுறையற்று பாய்ந்துகொண்டிருந்ததால் வேசித்தனத்தில் ஈடுபடும் நரிக்குறவர் பெண்ணையோ, பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் பெண்ணையோ மருந்துக்கும் பார்த்துவிட முடியாது. ஒருவழியாக நான் மற்ற வகுப்புகளை மறந்துவிட்டு அங்கேயே பழியாய்க் கிடந்தேன். பூனைக்கறி சாப்பிட நான் கற்றுக்கொண்டதும் அங்குதான். அதுமாதிரியான மென்மையான மாமிசத்தை என் பிற்கால வாழ்க்கையில் ருசித்ததில்லை. மூன்றுமாதங்களில் நான் கற்றுக்கொண்ட நரிக்குறவர் வார்த்தைகள் பன்னிரெண்டு. தினமும் சிரஞ்சீவியை வண்டியில் அழைத்துச் செல்வதும் வீட்டில் கொண்டுவந்து விடுவதுமாய்ப் பொழுது போய்க்கொண்டிருந்தது.

அவளிருந்த தெரு சக்கிலியத்தெரு. அதற்கு யார் ராஜாஜிதெரு என்று பெயர்வைத்தார்களோ தெரியவில்லை. எதிரிலிருந்த பறையர்தெருவான பொன்காளியம்மன் கோவில் தெருவில் தண்ணீர் பிடிக்கச் சென்றால் காத்திருந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். பிடித்துமுடித்தவுடன் குழாயைத் தண்ணீர் ஊற்றிக் கழுவி, குடத்தையும் ஒரு அலசு அலசித்தான் தண்ணீர் பிடிப்பார்கள் பொன்காளியம்மன் கோவில்தெரு பெண்கள். சிரஞ்சீவியின் வீடு, வீடு என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்திற்கு முற்றிலும் மாறாய் இருந்தது. சமயங்களில் இரவுகளில் அவள் தெருவுக்குப் போக வேண்டியிருந்தால்,  பைக் வெளிச்சத்தைப் பார்த்து அவசர அவசரமாக பாவாடையை வாரிச்சுருட்டி எழுவார்கள் ஒதுங்க வந்த பெண்கள், ஏதோ குடியரசு பரேடைப் போலிருக்கும். ‘‘பேண்டு நாறிக்கிடக்கும் உன் வீட்டு வாசலுக்கு கோலங்கள் தேவையில்லை’’ என்று பின்னாளில் நான் கவிதை எழுதியதும் சிரஞ்சீவியின் வீட்டை மனதில் வைத்துத்தான்.

நான் சிரஞ்சீவியை இப்படி அழைத்துச் செல்வதை மற்ற பல ஊக்குனர்கள் விரும்பவில்லை என்பதை நான் தாமதமாகத்தான் உணர்ந்தேன். சாதியும்கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மற்ற வகுப்புகளை நான் கவனிக்காதது, சிரஞ்சீவியுடன் சுற்றித்திரிவது என புகாருக்கு மேல் புகார்களாய் நிறுவன மேலிடத்திற்குப் பறந்தன. இதையொட்டி அவசர அவசரமாய் பழனிக்கு வந்த நிறுவன மேலாளரிடம் கூட்டத்தில் சரமாரியாக என்மீது புகார்களை பரப்பினார்கள் ஊக்குனர்கள். சிரஞ்சீவி அந்த கூட்டத்திற்கு வரவில்லை. அத்தனை கூட்டத்திலும் என் நிலைமையைப் புரிந்துகொண்டு ஆறுதலாய் இருந்தது பவானி மட்டும்தான். பிறகு என்னை நிறுவனம் பணிநீக்கம் செய்த மறுநாளே பவானி வேலையை விட்டுப் போய்விட்டது எனக்கு புதிராகத்தானிருந்தது.

சிரஞ்சீவியுடனான தொடர்புகளும் ஒரு கட்டத்தில் நின்றுபோயின. மதுரையில் இன்னொரு வேலையில் சேர்ந்தபிறகு எதேச்சையாக மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் சாம்சனைப் பார்த்துவிட்டேன். மூன்றாவது பீர் இறங்கியபோது உடைந்து அழ ஆரம்பித்தான் சாம்சன். உண்மையில் சாம்சனுக்கும் சிரஞ்சீவிக்கும்தான் தொடர்பு இருந்ததாம். அது பாலுறவு வரை போயிருக்கிறது. சிரஞ்சீவியைத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தைத் தெரிவித்தபோது ‘‘உங்களை மாதிரி கீழ்சாதிக்காரங்களைக் கட்டிக்க எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க’’ என்றாளாம் சிரஞ்சீவி. எனக்கு வந்த புன்னகை குரூரமானதா என்று  தெரியவில்லை.

வானி குடும்பச்சூழ்நிலையின் காரணமாக வற்றலும் தொற்றலுமாய் இருந்தாலும் அவளைப் போல் அழகாய்ச் சிரித்த பெண்ணை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. சினிமாவிலோ டிவியிலோ சினேகா புன்னகைப்பதைப் பார்க்கும்போது எனக்கு பவானியின் நினைவுதான் வரும். அவள் தொண்டுநிறுவனத்திற்கு வேலைக்கு வருவதற்கு முன்பு பழனி பஞ்சாமிர்தக் கம்பெனியில் வேலை பார்த்திருக்கிறாள். அங்கு சூபர்வைசர் முத்துவோடு அவளுக்குக் காதலிருந்திருக்கிறது. பல சமயங்களில் முத்துவோடு நான்தான் போனில் பேசி அவளிடம் பேசக்கொடுப்பேன்.

செக்ஸ் பற்றி முதன்முதலாக நான் பகிர்ந்துகொண்ட பெண்  பவானிதான். ஒரு அலுவலக மீட்டிங்கிற்கு மற்ற எல்லோருக்கும் முன்னால் அவள் வந்துவிட்டாள். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுயமைதுனம் இவை குறித்து நான் பேசிய விஷயங்கள் அவளுக்கு ஏதோ புதிதான உலகத்துக்குள் நுழைந்ததைப் போலிருந்தது. கண்கள் கிறங்க கேட்டுக்கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் தெரிந்த மினுப்பு என்னை என்னவோ செய்தது. ‘‘நான் உன்னைக் கிஸ் பண்ணலாமா?’’ என்றேன். ‘‘வேண்டாம்’’ என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் மற்ற பெண் பணியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் அவள் வார்த்தைகளில் மறுப்போ அழுத்தமோ இருந்ததாகச் சொல்ல முடியாது.

அவளுக்கும் முத்துவுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு முற்றிலுமாக விலகிவிட்டார்கள். ஆனால் அதற்காக அவள் ஒருநாள் கூட வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது ‘‘எனக்கு முத்துவோட லவ் இருந்தாலும் மணின்னு இன்னொரு பையன் இருந்தான், அவனைத்தான் எனக்குப் பிடிக்கும். நீங்க அடிக்கடி ஏதோ சொல்வீங்களில்ல, செக்ஸ் வேட்கைன்னு. அது அவன் மேலதான் இருந்தது. அவனோட உடம்பும் ஹேர்கட்டும் உங்களை மாதிரிதான் இருக்கும். ஆனா அவன் கருப்பு’’ என்றாள்.

வேலையை விட்ட ஆறுமாதங்களில் பழனிக்குப் போக வேண்டியிருந்தது. பவானியைப் பார்க்கலாமே என்று தோன்றியது. அவள் ஒரு மெடிகல் ஷாப்பில் வேலை சேர்ந்ததாக ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தாள். அவளைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போது கேட்டேன், ‘‘நானும் மணியும் ஒரே மாதிரி இருக்கோம்னு சொன்னியே, அதுக்கு என்ன அர்த்தம்?’’. ‘‘இவ்ளோ லேட்டாவா கேட்பீங்க?’’ அதே சிரிப்பு.

நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.

அன்பின் இனிய நண்பர்களுக்கு.

சுகுணாதிவாகர் என்ற பெயரில் ஒரு போலிநண்பர் பல பதிவுகளுக்குப் பின்னூட்டமிடுகிறார். நான் அவ்வளவாக யாருக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. என் பெயரில் பின்னூட்டங்கள் வந்தால் அதை என்னிடம் கேட்டு வெளியிடவும். அல்லது வெளியிடாமலே இருந்துவிடவும். கொடுமை என்னவென்றால் எனது மிதக்கும்வெளிக்கே எனது பெயரில் ஒரு போலி பின்னூட்டம் வந்தது. நண்பர்கள் கவனமாய் இருக்கவும்.

2009 - முக்கிய புத்தகங்கள் குறித்த குறிப்புகள்

கடந்து சென்ற 2009ஆம் ஆண்டின் முக்கியமான புத்தகங்களாக நான் கருதப்படுபவை குறித்த குறிப்புகள். புத்தகச்சந்தைக்குச் செல்லும் வாசகர்களுக்கான பரிந்துரைகளாகவும் கொள்ளலாம்.

இரண்டு கவிதைத்தொகுப்புகள் தமிழின் மொழித்தளத்தை வேறொரு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. ஒன்று ஈழத்து முஸ்லீம் ஒருவருடையது, இன்னொன்று பெண் கவிஞர் ஒருவருடையது.


புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன : ஈழத்து முஸ்லீம் கவிஞரான மஜித்தின் இந்த தொகுப்பு, சிங்களப் பேரினவாதம் மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆகியவற்றிற்கு இடையில் சீரழிக்கப்பட்ட முஸ்லீம்களின் வாழ்வை கவித்துவத்தோடு முன்வைக்கிறது. பொதுவாக படிமம் என்னும் உத்தி வழக்கொழிந்து நவீன கவிதை வேறொரு தளத்திற்கு நகர்ந்து விட்டது.  படிமம் என்பதைத் தாண்டியதாக கவிதையில் சித்திரங்களை வரைந்து காட்டும் அற்புதக் கலை மஜீத்திற்குக் கைகூடியிருக்கிறது. சிங்கம், புலி, கோடைக்காலம், குளிர்காலம் என்னும் வெவ்வேறு குறியீடுகளின் வழியாக கவிதை நாடகத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் மஜீத். வெளியீடு : கருப்பு பிரதிகள்.


உலகின் அழகிய முதல்பெண் : லீனாவின் கவிதைகள் பெண்மொழியை அடுத்த நூற்றாண்டு நோக்கி நகர்த்தியிருக்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள். பெண்ணின் உடலைக் கொண்டாட்டமாகவும் விடுதலையாகவும் மாற்றிக் காட்டுகிற மாயச்சாகசங்கள் செயற்பட்டிருக்கிறது. உண்மையில் உலகின் துணிச்சலான முதல் பெண் தான். வெளியீடு : கனவுப்பட்டறை.

சலவான் : இந்த நாவல் குறித்து தமிழ் இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. அருந்ததியர் சமூகத்தில் பிறந்து முதல் தலைமுறையாக அரசு ஊழியர் ஆகியிருக்கும் பாண்டியக்கண்ணனின் இந்த நாவல் அருந்ததியர் வாழ்வு குறித்த நுட்பமான விவரணைகளைக் கொண்டிருக்கிறது. மலமள்ளும் தொழிலாளரின் பாடுகள், இன்னமும் தென்மாவட்டங்களில் சில இடங்களில் உள்ள எடுப்பு கக்கூஸ் என்னும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்துவிட்டு வீடு வீடாய்ப் பாத்திரம் தூக்கிப் போய் துப்புரவுப் பெண்கள் சாப்பாடு வாங்கும் அவலம், அந்த சாப்பாடையும் தொடாமல் போடுகிற சாதி இந்துக்களின் தீண்டாமை மனோபாவம், கணவனும் மனைவியுமாய் சாராயம் குடிப்பது, அதற்கு துணை உணவாய்ப் பன்றி அறுத்து அமைப்பது என முழுக்க அருந்ததியர் சமூக வாழ்வியலை விளக்கும் இந்த நூல் தமிழின் முக்கியமான நாவல். சலவான் என்றால் ஆண்பன்றி என்று அர்த்தம்.
வெளியீடு : பாரதிபுத்தகாலயம்.

குடியின்றி அமையாது உலகு : முத்தையாவெள்ளையனால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் குடிப்பழக்கத்தின் கலாச்சாரப் பின்னணி மற்றும் சமூகப்பிரச்சினை குறித்து ஆய்கிறது. பெரியார், அ.மார்க்ஸ், விக்கிரமாதித்யன்,பிரான்சிஸ்கிருபா, நாஞ்சில்நாடன், ஜமாலன், ரெங்கையாமுருகன் என வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு தளங்களிலிருந்து குடி என்னும் பழக்கத்தை அணுகியிருக்கின்றனர். விக்கிரமாதித்யன் மற்றும் பிரான்சிஸ்கிருபா கட்டுரைகள் ஆய்வு இறுக்கத்தைத் தணித்து சுவாரசியமான புனைவுத்தன்மையைக் கொண்டவையாய் இருக்கின்றன. வெளியீடு : புலம்.

வெட்டுப்புலி : பத்திரிகையாளர் தமிழ்மகனால் எழுதப்பட்ட இந்த நாவல் எழுபது ஆண்டுகளாய்த் தமிழகத்தின் திசைப்போக்கைத் தீர்மானிக்கும் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் தமிழ்ச்சினிமா வரலாற்றையும் நாவலுக்குள் கொண்டுவந்திருக்கிறது. கதையின் நாயகனின் தாத்தாதான், வெட்டுப்புலி தீப்பெட்டியில் இடம்பெற்றிருக்கும் சிறுத்தையை வென்ற சின்னாரெட்டி என்றறிந்து மேலும் தரவுகள் தேடி நாயகனும் நண்பர்களும் பயணிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள். இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்துபோனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு வெவ்வேறு தகவல்பரப்பில் முரண்பட்டு தொடரும் கதையின் போக்கு முப்பதுகளில் நீதிக்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான அரசியல் உராய்வுகள். நாடகநடிகர்களைக் கொண்டு சினிமா என்னும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயல்கிற மனிதர்களின் போக்கு என தொடங்குகிறது. இறுதியாக மு.க.அழகிரி மத்திய அமைச்சராவதோடு நாவல் முடிகிறது. சமகால வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நாவல் வெறுமனே சுவாரசியத்தால் தூண்டப்படுகிற பிரதியாய் மட்டுமல்லாது, வரலாறு குறித்த பிரக்ஞ்யை நம்முன் உசுப்புகிறது. வெளியீடு : உயிர்மை.


கொலைநிலம் - தியாகு, ஷோபாசக்தி முரண் அரசியல் உரையாடல்கள் : புலி அரசியல் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் படைப்பாளி ஷோபாசக்தி, தமிழ்த்தேசியத்தையும் புலிகளையும் ஆதரித்து மார்க்சிய அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைகளை அணுகுபவர் தோழர்.தியாகு. இந்த இரண்டு வெவ்வேறு அரசியல் பிரதிநிதிகள் தத்தம் நிலைப்பாட்டின் அடிப்படையில் ஈழம் குறித்து மேற்கொள்ளும் உரையாடலின் தொகுப்பு. ஈழப்பிரச்சினையில் கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுவிட வேண்டியதுமான தெளிவு இதை வாசிப்பவர்க்குக் கிட்டலாம்.  வெளியீடு : வடலி.

அ.மார்க்சின் ‘பெரியார் ?’ - ஒரு இடையீடு

(அ.மார்க்சின் ‘பெரியார் ?’ நூலுக்கு எழுதிய இந்த விமர்சனம் புதிய கோடங்கி இதழில் வெளியானது. ஆண்டு நினைவில்லை. ஆனால் கட்டுரையின் வேறு சில விஷயங்கள் தற்சமயச் சூழலுக்குத் தேவையில்லை என்று கருதுவதால் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே இங்கே பதிவிட்டிருக்கிறேன். ஒரு சில வார்த்தைகளையும் மாற்றியுள்ளேன். - சுகுணா)
’பெரியாரின் கண்டுகொள்ளப்படாத  சிந்தனைகளின் மீதான கவன ஈர்ப்பு’ என்னும் பிரகடனத்தோப்டு வெளிவந்திருக்கும் அ.மார்க்சின் ‘பெரியார்?’ பெரியாரின் வேறு பல பரிமாணங்களைக் கணக்கில் எடுத்திருக்கிறது. இது பெரியாரியக்கத்தவர் மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் மத்தியிலும் பதட்டங்களை ஏற்படுத்தியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இச்சிறுவெளியீடுனூடாக சில இடையீடுகளை நிகழ்த்தலாம் என்று தோன்றுகிறது.

முதலாவதாக “ மதநீக்கச் செயற்பாடுகளை இந்தியச் சூழலில் செய்தவர்கள் அம்பேத்கர், பெரியார், பூலே” என்கிறார் அ.மார்க்ஸ். இவர்கள் மூவரும் சாதி இருப்பு குறித்து தீவிரமான புரிதல் கொண்டிருந்ததையும்  இந்திய தன்னிலைகளின் உருவாக்கத்தில் இந்துமதம் மற்றும் பார்ப்பனிய உளவியல் வகிக்கும் பாத்திரம் குறித்தும் ஆழமாக யோசித்து அதற்கு எதிராகவே இந்துத்துவத்தின் அடித்தளத் தகர்ப்பிற்கான அவைதீகச் செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் மூவரையும் எல்லா அம்சங்களிலும் ஒத்த போக்கினராகக் கருத வேண்டிய அவசியமில்லை.

அம்பேத்கரிடமிருந்து பெரியாரும் பெரியாரிடமிருந்து அம்பேத்கரும் வேறுபடும் சிலவேறு புள்ளிகள் உள்ளன. அவற்றில் ஒன்று மதநீக்கம் - இறுதியாக மத ஒழிப்பு. ’’நான் சமூகத் தொண்டாற்றுவதற்கு ஆன்மீக உணர்வு அவசியமாகிறது” என்கிறார் அம்பேத்கர். ‘’தலித் மக்கள் இந்து மதத்தை விட்டு நீங்க வேண்டும்” என்னும் நிலைப்பாட்டின்போது தழுவுவதற்காய் பவுத்தத்தைத் தேர்வுசெய்கிறார் அம்பேத்கர். ஆனால் பெரியாரோ, ‘’இன இழிவு நீங்க இஸ்லாமியராகுங்கள்” என்கிறார். இந்தியாவில் செல்வாக்கு பெற்ற இருபெரும் மாற்று மதங்களாகிய கிறித்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் கிறித்தவத்தை, ‘’நான் பார்த்தவரையில் அதுவும் இன்னொரு பார்ப்பனீய மதமாகத்தானிருக்கிறது” என்று நிராகரிக்கும் பெரியார், இஸ்லாத்தைப் பரிந்துரைக்கிறார். ‘’மகமதியர்கள் முரட்டு சுபாவத்தோடு இல்லாதிருந்தால் இந்தியாவில் இந்து தீண்டப்படாதவரின் எண்ணிக்கை ஆறுகோடியும் முகமதிய தீண்டப்படாதவரின் எண்ணிக்கை ஆறுகோடியுமிருந்திருக்கும்” என்று முஸ்லீம்களின் ‘முரட்டுத்தனத்தை’ மெச்சுகிறார் பெரியார். அதைவிட முக்கியம் கிறித்தவத்துக்கு மாறுகிற தலித்துக்கு சாதி தொடர்வதைச் சுட்டிக்காட்டி இஸ்லாத்திற்கு மாறுகிற தலித் மறுநாளே தனது சாதி அடையாளத்தை துறந்துவிட்டு ‘இஸ்லாமியனாக’ மாறிவிட முடிவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்து மதத்தின் மூலம் இழந்த ‘சுயம்’ இஸ்லாத்தின் மூலம் வந்து சேர்கிறது. என்றாலும் கூட பல சந்தர்ப்பங்களில் ‘’புத்தி உள்ளவனெல்லாம் புத்தன், நானும் பவுத்தன்” என்று சொல்லி வந்தாலும், அ.மாவே நூலில் குறிப்பிடும்படி தம்மை ‘இஸ்லாமை அனுசரிப்பவர்” என்று சொல்லி வந்தாலும் ‘’நான் இறந்தபிறகு என் வீட்டார் பார்ப்பானின் காலைக் கழுவி தண்ணீரைக் குடித்து மோட்சம் அடையக்கூடாது என்பதற்காகத்தான் முஸ்லீமாக மாறுவேன் என்கிறேன்’’ என்று கூறினாலும் கூட அவர் எம்மதத்தையும் சேர்ந்தவராகவில்லை. அவ்வளவு சுலபமாக எந்தவொரு நிறுவனத்திற்குள்ளும் அகப்படமாட்டார் பெரியார்.

பெரியாரின் பகுத்தறிவு மதநீக்கச் செயற்பாடே என்கிறார் அ.மார்க்ஸ். மததின் ஆளுமை அகற்றப்பட்டு மேலைச் சூழலில் அறிவு ஆட்சி செய்துவந்த காலகட்டத்தில் இந்தியச் சூழல் மத இருள் (அதாவது பார்ப்பனிய இருள்) கப்பிக் கிடந்தது. இதுவே பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு அடித்தளம் என்பது அ.மாவின் கூற்று. இது உண்மை என்பதை விடவும் உண்மையின் ஒருபகுதிதான் என்று சொல்லத்தோன்றுகிறது.

பெரியாரின் பகுத்தறிவை வெறுமனே மதம் மற்றும் கடவுள் வழிபாடு நீக்கம் என்று மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஆழமாக யோசித்தால் அது எல்லாவித கருத்தியல் மேலாண்மை வன்முறைக்கு எதிரான இறுக்கமற்ற நெகிழ்வுடைய திறப்பு என்று புரிந்துகொள்ளலாம். இந்திய-தமிழ்ச்சூழலைக் கணக்கிலெடுக்காது சாதிய எதார்த்தத்தைப் புறந்தள்ளி, மார்க்சியர்கள் மார்க்சியத்தை அப்படியே பொருத்த முனைந்த சூழலில் அதுவே ஒரு மதமாகிப் போனதாக கண்டிக்கிறார். எந்தவொரு சித்தாந்தமும் முன்மொழியப்படும் காலத்தின்பின் ஏதேனும் ஒரு புள்ளியில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு வழிபாடாக்கப்படும் என்கிற பிரக்ஞை இருந்ததாலேயே அவர் இறுதிவரை தனது ஒவ்வொரு சொல்லாடலின் முடிவிலும் ‘இது இறுதியான உண்மையல்ல’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேயிருந்தார். (அதையும் மீறி பெரியார் பீடத்தில் ஏற்றப்பட்டுவிட்டார் என்பது வேறு
 விஷயம்).

மேலும் மேலைநாட்டு பகுத்தறிவும் அதனடியிலெழுந்த நவீன அறிவியலும் இரண்டு விதமான அம்சங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு, அவை ஒற்றைத் தீர்வுகளாகவே உள்ளன என்றன. சில ‘வகைமாதிரிகளைக்’ கொண்டு பொதுவிதிகள் உருவாக்கப்பட்டன. ’ஒவ்வொன்றின் மீதும் கவனம்’, ‘ஒவ்வொன்றிற்குமான பிரச்சினைகள்’, ‘ஒவ்வொன்றிற்குமான தீர்வுகள்’ என்பதை மறுத்தே அவற்றின் பொதுவிதிகளும் தீர்வும் ஆளுமை செலுத்தின. ஆங்கில நவீன மருத்துவம் முதற்கொண்டு  இத்தகைய போக்குகளே நிலவியதால், பகுத்தறிவு மற்றும் அறிவியல்,  நுண் தளங்களில் நுட்பமாக அதிகாரத்தைத் தொழிற்படுத்த ஆரம்பித்தது. ஆனால் மாறாக பெரியார் எந்தவொரு பொதுவிதிகளை உருவாக்கவுமில்லை, பொதுத்தீர்வுகளைப் பரிந்துரைக்கவுமில்லை. பொதுவான ஒழுக்கம், பொதுவான கலாச்சாரம், பொதுவான வாழ்க்கைமுறை என்கிற எல்லாவற்றையும் மறுத்தார். மற்றதின் இருப்பு குறித்து தெளிவான பிரக்ஞை இருந்தது அவரிடம். அதனால்தான் தனக்கு சத்தியமானது மற்றவர்க்கு அசத்தியமானது.

மேலும் ஒரு பகுத்தறிவுவாதியானவன் மாற்றுத்தீர்வு குறித்தே கவனம் குவிப்பான். ’’மாற்றுகளை முன்வைத்து விட்டு விமர்சனம் செய், கட்டவிழ்ப்புகளை நிகழ்த்து’’ என்பான். ஆனால் இந்த கறார்தன்மை பெரியாரிடம் இல்லை. ‘’மதத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் என்ன வைப்பது?” என்கிற கேள்வி எழும்போது அவர் சொல்கிறார், ’’நடுவீட்டில் மலம் நாறுகிறது, தூக்கி எறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்கிறாயே”. கட்டமைப்புகளின் மீதான விமர்சனமும், கட்டவிழ்ப்புகளுமே இங்கு முக்கியம். வேறொரு வகையான கட்டமைப்பை நிறுவுதல் என்பது இன்னொரு வகையான அதிகாரச் செயற்பாட்டிற்கு அடிகோலலாம் என்கிற புரிதல் இருந்தது அவருக்கு.

மேலும் பெரியாரின் சொல்லாடல்கள் மற்றும் செயற்பாடுகளைப் பகுத்தறிவு வலியுறுத்தும் ‘தர்க்க’ அளவுகோல்களைக் கொண்டு மட்டும் அளந்துவிட முடியவில்லை. எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்பட்டவுடன் பகுத்தறிவுவாதி எழுப்ப விரும்புகிற கேள்வி, ‘’நடைமுறைக்கு ஒத்துவருமா?”.  இங்கு ‘நடைமுறை’ என்பது நிலவுகிற நடைமுறையே. ஆனால் மாற்றம் விரும்புகிற ஒருவனுக்கு ‘நடைமுறை’ பற்றிக் கவலையில்லை. அவனைப் பொறுத்தவரை நடைமுறை என்பதே வன்முறையானதும் மாற்றவேண்டியதும் ஆகும். ’’பெண்கள் விடுதலை பெற கர்ப்பப்பையைத் தூக்கி எறியுங்கள்” - பெரியார். அப்படியானால் ’ஜனசமூகம் என்னாவது?’ இதுதான் பகுத்தறிவுவாதியின் கேள்வி. ’’ஜனசமூகம் விருத்தியடையாவிட்டால் உனக்கு ( அ.து - பகுத்தறிவுவாதிக்கு) என்ன நட்டம்? இதுவரை விருத்தியடைந்த ஜனசமூகத்தால் பெண்களுக்கு என்ன நன்மை? விலங்குகள் வேண்டுமானால் விருத்தியடையட்டுமே”- இங்கு பெரியார் தர்க்கங்களைத் தாண்டுகிறார். உறைந்து போயிருந்த தமிழ்ப்பரப்பில் பெரியார் ஏற்படுத்திய காத்திரமான அதிர்வுகள் வெறுமனே ‘பகுத்தறிவு’ என்னும் எல்லைக்குள் நின்று விடுபவையல்ல, அதையும் தாண்டிய விசாலமான பரிமாணங்கள் கொண்டவை.

இப்படியாக பெரியார் குறித்த தொடர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலமாக நாம் புதிய புரிதல்களைக் கண்டடையலாம்.

ஜெயமோகனை ‘எதிர்கொள்வது’ எப்படி? -


எனக்குத் தமிழில் மூன்று எழுத்தாளர்களைப் பிடிக்காது. சுந்தரராமசாமி, ஜெயமோகன், சுஜாதா. இதில் சுஜாதாவை அரசியல் காரணங்களுக்காக எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரது எழுத்தில் உள்ள வெகுஜனத்தன்மையுடன் கூடிய சுவாரசியமும் விறுவிறுப்பும் பிடிக்கும். எனது அம்மா சுஜாதாவின் ரசிகை. அதனால் என் தம்பிக்கு கணேஷ் என்று பெயர் வைத்தார்.

என்னை ஏனோ அரசியலைத் தாண்டியும்கூட ஈர்க்க சு.ராவால் முடியவில்லை. சுந்தரராமசாமியின் எழுத்துக்களைப் படிக்கும்போதும் அவரது புகைப்படங்களைப் பார்க்கும்போதும் எனக்கு சாருஹாசன் ஞாபகம் வரும். தமிழ்ச்சினிமாவில் அதிகம் நீதிபதி வேடங்களை ஏற்று நடித்தவர் சாருஹாசன் அல்லது சாருஹாசன் அதிகம் ஏற்று நடித்த வேடங்கள் நீதிபதி வேடங்கள். சு.ராவும் அப்படித்தான். வாழ்க்கை குறித்து, எழுத்து குறித்து, கல்வி குறித்து தீர்ப்புகள் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் இளைஞர்களுக்கான எழுத்தாளர் அல்ல,மனதளவில் செத்துப்போன பிணங்களுக்கான எழுத்தாளர். சு.ராவின் டைரிக்குறிப்புகள், எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்கள், கோவில் கும்பாபிகேஷ நன்கொடைச்சீட்டுகள், சுதர்சன் ஜவுளிக்கடை வரவுசெலவுக்கணக்கு என அனைத்தையும் ஆவணப்படுத்தும் காலச்சுவட்டின் முயற்சி வேறு சு.ரா மீது ஈடுபாடின்மையை ஏற்படுத்துகிறது. இன்னும் சு.ரா பயன்படுத்திய உள்ளாடைகள், சேவிங் கிரீம் ஆகியவை ஏலத்திற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது சு.ராவைப் படிக்கும் அபாயத்திலிருந்து என்னை நான் விடுவித்துக்கொண்டாலும் சு.ராவைப் போலவே எழுதப் பழகி விட்ட நூறு பேராவது தமிழில் உருவாகிவிட்டார்கள். அந்த அபாயங்களைத்தான் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது.

ஜெயமோகனின் எழுத்துக்கள் சு.ராவின் எழுத்துக்களுக்குச் சித்தப்பாமுறை. அலுப்பூட்டுகிற எழுத்துக்கள், போதனைகள், பிரகடனங்கள். விஷ்ணுபுரத்திற்குள் உள்நுழைய முடியாத நான் ’பின் தொடரும் நிழலின் குரல்’ முப்பது பக்கங்கள் படித்திருப்பேன். ஒரு லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை கூட அரியாது ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைத் தாண்டி சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து விமர்சனம் வைக்கப் போகிறார் என்று சொன்னதும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஒருவழியாக ‘ஏழாம் உலகம்’ நாவலை முடித்து தொலைத்தவுடன் அப்பாடா என்றிருந்தது. மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அந்நிய வாடை அடிக்கும் அரைகுறைப் பிரதி.

ஒரு மாதத்திற்கு முன்பு ரோசாவசந்திடம் பேசியபோது அவர் சொன்னார், ‘’போகிற போக்கில் ஜெமோவை இந்துத்துவவாதி என்று முத்திரை குத்திவிட்டுப் போவது சரியில்லை என்று (பின்னூட்டத்தில்) சிலர் சொல்கிறார்கள். உண்மையில் ஜெமோ நிறைய எழுதிக்கொண்டுதானிருக்கிறார். அதையெல்லாம் படிக்க வேண்டுமே சுகுணா” என்றார். நானும் அதிலிருந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஜெயமோகனின் வலைப்பக்கத்தைத் தொடர்ச்சியாகப் படித்து வந்தேன்.

பிறகுதான் தெரிந்தது. ஜெயமோகனிடம் இருப்பது உழைப்பில்லை,வியாதி என்று. நீரழிவு வியாதி உடையவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைப் போல் ஜெமோ எழுதிக்கொண்டேருக்கிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்கள், மேலோட்டமான கருத்து உதிர்ப்புகள் என அத்தனையும் அபத்த உளறல்கள். ஜெமோ எழுதுவதை மறுக்கலாம் என்று தேடிப்பிடித்து வாசித்து வந்தால் அதற்குள் 35 கட்டுரைகள் (வாசகர் கடிதங்கள் மற்றும் பதில்கள் சேர்த்து) எழுதியிருப்பார் ஜெமோ.

எனக்கு விக்கிரமாதித்யனின் கருத்தியலில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கட்டுப்பாடுகளும் வரைவெல்லைகளும் அற்ற விக்கிரமாதித்யனின் வாழ்க்கை பிடிக்கும். அவர் அனாயசமாக கவிதைகள் எழுதிக்குவிப்பார். அவற்றில் ஒன்றிரண்டு தேறி விடும். ஆனால் தேறுவது மற்றும் தேறாமை குறித்து எந்த பதட்டமும் அவருக்கு இருக்காது. விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஆடு புழுக்கை போடுவதைப் போலிருக்கும். ஜெயமோகனோ யானை லத்தி போடுவதைப் போல் பாரம் பாரமாக இறக்குகிறார்.

ஜெயமோகன் எழுதும் எழுத்துக்கள் குறித்து எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. எந்த விஷயம் குறித்தும் அடிப்படை தரவுகளை உரசிப் பார்த்தல் குறித்த அடிப்படை அறம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.

பெரியார் குறித்த ஜெயமோகனின் அபிப்பிராயங்கள் மற்றும் அதற்கு ஆதாரமான கருத்துகள் குறித்து ஒரு ஆதாரபூர்வமான மறுப்பு இது.

திராவிடர்கழகத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆன, மிகச்சாதாரணமாக வீரமணி சொல்வதே வேதவாக்கு என்று நம்பிக்கொண்டிருக்கிற, ஒரு தி.க தொண்டனுக்குக் கூட தெரியும் குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் கிடையாது என்று. ஆனால் ஜெமோ எந்த வெட்கமும் இல்லாமல் இதைப் பதிந்து வைத்திருக்கிறார். இதற்கான மறுப்புகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இதைப் பற்றி நாம் பேசினால் அதுகுறித்து எந்த கவலையுமற்று  ‘அட்டாக் பாண்டி ஒரு காந்தியவாதியும் கூட’ என்று அடுத்த விஷயங்களைப் பேசி நகர்ந்து விடுவார்.

தேவர்ஜெயந்தி குறித்த அவரது கட்டுரையில் ‘நீதிக்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது’ என்று எழுதியிருப்பார். இந்த கீழ்க்கண்ட கட்டுரை, அவருக்கான மறுப்பு இல்லை என்றாலும் நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த கட்டுரை.

இதை எழுதிய அதி அசுரன் என்கின்ற தோழர்.தாமரைக்கண்ணன் ஒரு இலக்கியவாதி அல்ல. அவர் ஜெயமோகனின் ஒரு நாவலைக்கூட படித்திருக்கமாட்டார். பெரியார் திராவிடர்கழகத்தில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் அவர், தொடர்ச்சியாக களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தமிழகமெங்கும் இரட்டைக்குவளைகளைக் கணக்கெடுத்து அதற்கு எதிராக பெரியார் தி.க போராட்டம் நடத்தியது, குடியரசு தொகுப்பைக் கொண்டுவந்தது என பலவற்றில் அதி அசுரனின் பங்கு முக்கியமானது. சீமான், பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போட்டது குறித்த சர்ச்சை எழுந்தபோது, கீற்றுக்கு அளித்த நேர்காணலில், “பெரியார் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று முக்குலத்தோர் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று கூறியிருப்பார் சீமான். அதை மறுப்பதற்காக தனது களச்செயல்பாடுகளுக்கு மத்தியிலும் இவ்வளவு தரவுகளைத் திரட்டி தாமரைக்கண்ணனால் ஒரு கட்டுரை எழுதமுடிகிறது. ஆனால் ஜெயமோகன்....? அவருக்குத் தான் சொல்வது குறித்து ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய எந்த அடிப்படை நேர்மையும் அறிவு நாணயமும் கிடையாது. கருத்துபொறுப்போ எழுத்துப்பொறுப்போ இல்லை.  இப்படி பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஜெயமோகன் உதிர்ப்பவை எல்லாம் மேலோட்டமான அபிப்பிராயங்கள்தான் என்பதற்கான உதாரணங்கள் அவரது வார்த்தைகளிலேயே உள்ளன.

/
ஒரு நாகரீக மனிதனைப்பொறுத்தவரை தலித்துக்கள் மீதான காழ்ப்போ விலக்குதலோ ஏற்கத்தக்கவை அல்ல என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் தார்மீகமான மையத்தில் உள்ளவர்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் மொத்த சமூகமும் அங்கே வந்துதான் ஆகவேண்டும். தலித் வெறுப்பு பிற்போக்கானது அசிங்கமானது ஆபத்தானது என்பதில் இன்று எவருக்கும் ஐயமில்லை.

இன்னமும் நம் சமூகத்தின் பெரும்பகுதி அங்கே வந்துசேரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வந்துகொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு தலைமுறை ஆகலாம். ஒருவன் படிக்கும்தோறும் சிந்திக்கும் தோறும் இந்த வகையான காழ்ப்பிலிருந்து மீள்வான். மீள்வதைக் காண்கிறோம்
ஆனால் முற்போக்கான, பண்பட்ட, சமநிலையான, படித்த, நிதானமான, மனிதர்கள்கூட இங்கே பிராமண வெறுப்பை கக்கலாம் என்றாகியிருக்கிறது. பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது/ (அழுத்தம் என்னுடையது)

இது அரவிந்தன் நீலகண்டனின் ஒரு கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்த பதிலையொட்டி எழுந்த விவாதத்திற்கு ஜெமோவின் பதில் பின்னூட்டம். இது ஒரு வலதுசாரித் தன்மை வாய்ந்த வார்த்தைகள் என்பதையும் தாண்டி ‘தலித்துகள் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்னும் ஜெயமோகனின் வாதம் எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் காட்டியோ அல்லது ‘பிராமண வெறுப்பு’ குறித்த ஜெயமோகனின் கருத்துகளைச் சாதிவாரியாக அரசு மற்றும் தனியார்துறைகளில் அதிகமும் பங்குவகித்து வருபவர்கள் குறித்த சாதிவாரியான புள்ளிவிவரங்களைக் காட்டியோ இதனை மறுக்கலாம். ஆனால் பயன்...?

ஜெயமோகனுக்கு எப்போதும் உரையாடல்களை நிகழ்த்துவதிலோ அதனூடாக ஒரு சில நகர்த்தல்களை நிகழ்த்துவதிலோ நம்பிக்கையிருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. ரோசா வசந்த் ஜெயமோகன் குறித்த மேற்கண்ட உரையாடலின்போது சொன்ன வார்த்தைகள் இவை, ‘’நமக்கு குடிக்கணும், நண்பர்களோடு பேசணும், படிக்கணும். ஆனால் ஜெயமோகனுக்கு இதெல்லாம் கிடையாது போலிருக்கு. எழுதிக்கொண்டேயிருக்கிறார்”.

உண்மைதான் ரோசா. பிழைப்பிற்காய் வேலை செய்யலாம், குடிக்கலாம், வேட்டைக்காரன் படம் பார்க்கலாம், வெட்டுப்புலி நாவல் படிக்கலாம், ’அணுவளவும் பயமில்லை’யில் நீலிமாவைக் கண்டு ரசிக்கலாம். எழுதலாம், வாசிக்கலாம், சாத்தியப்பட்டவரையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதனைகளை நிகழ்த்தலாம், எல்லோர் மீதும் அன்பைப் பொழியலாம்,. இந்த ஜெயமோகனோடு மல்லுக்காட்டும் கருமம் என்ன எழவிற்கு?


..

தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்

சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.

முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.

நட்சத்திர வாரம் என்றில்லை, வலைச்சரம் என்னும் வலைப்பூ இருக்கிறது அங்கும் என்னை இதுவரை எழுத அழைத்ததில்லை. முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை. குறிப்பாக தமிழ்மணம் நட்சத்திர வாரம் குறித்துத்தான் வருத்தம். ஆனால் அதில் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட நான் எழுதுவதை நிறுத்த வேண்டிய மனநிலை.

இப்போது அதிகமாய் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்குப் பத்து பதிவுகள் வரை எழுதியிருக்கிறேன். (அதில் பாதி கவிதைகள்). அப்போது தமிழ்மணம் பூங்கா என்னும் இதழை நடத்திவந்தது இப்போதுள்ள பல புதிய பதிவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். வாரம் ஒருமுறை வெளியாகும் பூங்கா இதழில் அந்த வாரத்தின் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும். ஒரு கட்டம் வரை எல்லா பூங்கா இதழ்களிலும் எனது பதிவுகள் வந்தவண்ணமிருந்தன. பிறகு நான் தமிழ்மணத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ”என்னை மாதிரியான முகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து போரடிக்கிறது. தயவுசெய்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துங்கள்”என்று. அதற்குப் பின் பூங்காவில் எனது பதிவுகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் பூங்கா இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் சூடான இடுகைகளில் வந்த எனது ஒருசில பதிவுகளைப் பார்த்தால் அது பெரும்பாலும் அக்கப்போர்களாகத்தானிருக்கும். சில காலங்களின்பின் படித்தால் நான் தேவையில்லாத ஏதோ வெட்டிவேலைகள் செய்திருக்கிறேன் என்று தெரியும். என்நினைவின்படி இதுவரை என்னுடைய பதிவுகள் எதுவும் வாசகர்பரிந்துரைகளில் வந்ததில்லை.

இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.

இந்த நாய்ச்சண்டைகளின் அடிப்படையில் பார்த்தால் நான் ஒரு குறிப்பிடத்தக்க பதிவராகவே இருக்க முடியாது. ஆனால் இந்த வரைவெல்லைகளைத் தாண்டி என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் வாசகர்கள் பல்வேறுதளங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நவீன இலக்கியத்தின்பால் அக்கறையும் கரிசனமும் கொண்டவர்கள் என. சமயங்களில் ‘நான் உங்கள் பிளாக்கை ரெகுலராகப் படிச்சுட்டு வர்றேன்’ என்னும் வார்த்தைகள் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும்போது ஆச்சரியமாக இருக்கும் (அதிர்ச்சியாக அல்ல((-). இதற்கெல்லாம் காரணம் என் எழுத்துதானே தவிர ஃபாலோயர்ஸ் அல்ல.

என் எழுத்தை எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத எதுவொன்றையும் வாசகி/கனுக்குத் தருவதில்லை. என் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியாகவும் பகைமை கொண்டவர்களும் கூட என் எழுத்தின் அடர்த்தியையும் ருசியையும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதான். ஆனால் அதற்கு எழுதிப்பழக வேண்டுமே தவிர பிள்ளை பிடித்துப் பழகக் கூடாது. ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்?

நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான். இது பிள்ளைபிடித்து உருவாக்கப்படுகிற பரிந்துரைகள். ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.

இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா? நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.

இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம். தமிழ்மணம் இந்த விருதுகளை நிறுத்திவிட்டு பூங்கா மின்னிதழை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கருத்து. பூங்காவிற்காக நான் கொளத்தூர்மணி, அ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்ற பலரின் நேர்காணல்களை எடுத்து தந்திருக்கிறேன். இப்போது என்னால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் பல்வேறு துறைசார்ந்த பதிவர்களைக் கொண்டு பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களை இடம்பெறச் செய்யலாம். தமிழ்மணத்திற்கு அப்பாலும் பங்களிப்புகளைப் பெறலாம் என்றே கருதுகிறேன்.

விலகி மிதக்கும்வெளி


நான் என்பது பெயர்தான் எனில் சிவக்குமார். பிறந்தது திண்டுக்கல்லில். காலம் நகர்த்திக் கரை சேர்த்த இடம் தற்சமயம் சென்னை. ஒரு திமுக குடும்பத்தில் பிறந்தவன் என்பது அரசியல் உயிரியாய் உருவாவதற்கான அடிப்படையாய் அமைந்தது. என் கனவுகளுக்கு என் அப்பாவும் என் அப்பாவின் கனவுகளுக்கு நானும் பரஸ்பரம் இழைத்துக்கொண்ட துரோகங்கள் ஏராளம். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவரை ஏதும் இல்லை என்றாலும் தந்தை மகற்கு ஆற்றிய பேருதவி ஏழாம் வகுப்பு படிக்கும்போது அரசுநூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்த்தது. ஒரு அருவமாய்த் தெரிந்த பெரியாரை உயிர்ப்பு மிக்க காதலனாய் மாற்றியவை பெரியார் குறித்த வாசிப்புகள். பெரியாரியக்கங்களிலும் ஒருகாலம் பணியாற்றியிருக்கிறேன். வாழ்க்கையில் பெரும்பாலும் நினைவு வைத்துக்கொள்ளத் தேவையில்லாதவர்களாய் ஆண்கள் இருக்கிறார்கள். என்றாலும் தாமரைக்கண்ணன், பூ.மணிமாறன், டார்வி, விடுதலைராசேந்திரன் மாதிரியான அற்புதமான மனிதர்களோடு பழகுவதற்கான சந்தர்ப்பங்களை இயக்கங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. இன்றளவும் தன்னை முன்னிறுத்தாத தகைமையாளராய், பெரியாரை வாழ்க்கையாய் மாற்ற எத்தனிக்கிற மனிதனாய், பற்றற்ற துறவியாய் வாழ்வை நகர்த்தும் அதி அசுரன் என்ற பெயரில் எழுதும் அதிமனிதன் தாமரைக்கண்ணனை இந்த கணங்களில் நினைத்துக்கொள்கிறேன். ’ஓ மனிதா!’ என்று ஒவ்வொருமுறையும் தொந்தரவு செய்து பூமியைப் புரட்டும் நெம்புகோலைக் கைப்பிடி இற்றுவிழும் வரை கவிதைகள் எழுதிய காலம் முடிந்து நவீன இலக்கியக் களத்தில் காலடி எடுத்துவைத்த ஆண்டு 1999. ஆணுறைகளையும் நாப்கின்களையும் போலவே கவிதைகளும் சமூகத்திற்கு அவசியமானவை என்றுதான் கருதுகிறேன். 2003ஆம் ஆண்டு ‘தீட்டுப்பட்ட நிலா’ என்னும் கவிதைத்தொகுதி மருதா பதிப்பகத்தின் மூலம் வெளியானது. பெயருக்கேற்றால் போல் நாய்கூட சீந்தவில்லை. ‘பெயர்மாற்றமும் மதமாற்றமும் - எங்கே போகிறது தலித் அரசியல்?’ என்னும் சிறுவெளியீடு சுயமரியாதை இயக்கத்தாலும் ‘அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும் கூடத்தான்’ என்னும் சிறுவெளியீடு புதிய ஜனநாயகம் வெளியீடாகவும் வெளியானது. கதவு, புதியபயணம், கவிதாசரண், எக்ஸில், தொரட்டி, புத்தகம் பேசுது என பல சிறுபத்திரிகைகளில் படைப்புகள் வெளியாயின. சில கட்டுரைத் தொகுப்புகளில் தனிக்கட்டுரைகளும் வெளியாயின. ஒருகட்டத்தில் சிறுபத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்தி வலைப்பூக்களில் எழுதத்தொடங்கினேன். ஆறாண்டுகால வலையெழுத்து ஏராளமான வாசகர்களையும் நண்பர்களையும் அதில் பாதியளவு கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது. அம்பேத்கரியம், பவுத்தம், பெரியாரியம், மார்க்சியம், பின்நவீனம் ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடும் அரைகுறை அறிவும் கொண்டவன். இவைதான் என் எழுத்துகளையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன என்று நினைக்கிறேன். தற்சமயம் பத்திரிகையாளன். துரதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு மனைவியும் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு குழந்தையும் உண்டு.