விலகிமிதக்கிறேன் goodbyeஆயிற்று வலையுலகில் எழுத வந்து ஆறுமாதகாலத்திற்கும் மேலாகிவிட்டது.ஏப்ரல் 2006ல் தொடங்கியது ஜனவரி 2007ல் வந்து நிற்கிறது. எழுதத்தோன்றியதை எழுதுவதல்லாது வேறு நோக்கம் ஏதுமில்லை. வலையுலகின் மூலம் பல புதிய நண்பர்களை சம்பாதித்திருக்கிறேன். சில பல எதிரிகளையும்.


சமீபமாக ஒருமாதகாலம் தொடர்ந்து நிறைய எழுதிவிட்டேன். ஜெயமோகனைப்போல எழுதிக்கொண்டிருக்கிறோமோ என்று ஒரு பயம். ஜெயமோகனே எழுதுவதை நிறுத்திவிட்டார். (காகிதங்களும் அழிவிலிருந்து மரங்களும் தப்பித்தன.)'சதா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் வயதான தகப்பனைப்போல' (செந்திலுக்குப் பிடித்த கவிதைவரி) மாறிவிட்டதாக ஒரு பிரமை.


கொஞ்சகாலம் நிறுத்திப்பார்ப்போம். இதற்கு யார் வலை என்று பெயர் வைத்தார்களோ, வலையில் எழுதுவது ஒரு வியாதி போலவே ஆகிவிட்டது. நேரங்களை இரக்கமற்று விழுங்குகிறது வலை. தீவிரமாய் எதையும் வாசிக்க முடியவில்லை. வெட்கத்தைவிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வலையில் அடுத்தவர் பதிவையும் கூட வாசிக்க முடிவதோ தோன்றுவதோ இல்லை. நமக்குப் பின்னூட்டம் வந்திருக்கிறதா, பதில் எழுதுவோமா என்றே அலைகிறது மனம்.


புறங்கையை நக்கிச் சுவைக்கும் சுயமோகியாகிப் போவேனோ என்ற அச்சம் வியாபிக்கிறது. அதனால் தற்காலிகமாக ஒரு முடிவு. குறைந்தபட்சம் பிப்ரவரி 14 காதலர் தினம் வரையாவது எழுதாமல் இருக்க வேண்டும் என்ற முடிவு. (நண்பர்கள் தப்பித்தார்கள்). கொஞ்சம் தீவிரமாக வாசிக்க வேண்டியிருக்கிறது, நூல்களையும் நண்பர்கள் வலையில் எழுதுவதையும். சாத்தியப்பட்டால் பின்னூட்டமும் இடலாம்.


என்ன, நான் 1+1=2 என்று எழுதினால் கூட "வெளியே மிதக்கும் அய்யா, தமிழர் மாமா கணக்கைக் கூடக் கட்டவிழ்த்துவிட்டாரா?" என்று பின்னூட்டமிடுகிற பாலா போன்ற நண்பர்களுக்கு போரடிக்கலாம். எனக்கும் பாலா இல்லாமல் போரடிக்கத்தான் செய்யும்.


பார்ப்போம்.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.

10 உரையாட வந்தவர்கள்:

 1. லக்கிலுக் said...

  எதுக்கு திடீர்னு இந்த கொலைவெறின்னு தெரிஞ்சுக்கலாமா?

  எனினும் வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு கட்டாயம் வருவீர்கள் தானே? :-)))))))

 2. Anonymous said...

  என்ன, நான் 1+1=2 என்று எழுதினால் கூட "வெளியே மிதக்கும் அய்யா, தமிழர் மாமா கணக்கைக் கூடக் கட்டவிழ்த்துவிட்டாரா?" என்று பின்னூட்டமிடுகிற பாலா போன்ற நண்பர்களுக்கு போரடிக்கலாம். எனக்கும் பாலா இல்லாமல் போரடிக்கத்தான் செய்யும்.
  You both can start a blog
  where both can write and
  respond to each others blog
  posts.

 3. nagoreismail said...

  மிதக்கும் வெளி ஐயா, தங்களின் இந்த முடிவை குறித்து தங்களின் பதிவை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் வருத்தத்துடன் கண்டிக்கிறேன் - மறுபரீசீலனை உண்டா? - குரு படம் பார்த்து விட்டீர்களா? - விமர்சனம் வருமா? - பொங்கல் வாழ்த்து எங்கே? - நன்றி - நாகூர் இஸ்மாயில்

 4. thiru said...

  நண்பரே,

  சற்று காலம் நிறுத்தப்பட்டாலும் தொடர்ந்து வலைப்பதியுங்கள் உங்கள் எண்ணங்களை. கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது தான் கற்றுக்கொள்கிறோம் இல்லையா?

  //குறைந்தபட்சம் பிப்ரவரி 14 காதலர் தினம் வரையாவது எழுதாமல் இருக்க வேண்டும் என்ற முடிவு.//

  காதலர் தினத்திற்கும் உங்க வலைப்பதிவிற்கும் என்ன தொடர்பு? :)

  உங்கள் பதிவை படிக்க ஆவலுடன்...

 5. PRABHU RAJADURAI said...

  உங்களது முடிவினை மதிக்கிறேன். உங்களது சில பதிவுகள் சிறப்பானவை என்ற வகையில் தற்காலிக பிரிவும் தமிழ் பதிவுலகத்திற்கு இழப்பே!

 6. சாத்வீகன் said...

  நன்றி. மீண்டு(ம்) வருக.

 7. மிதக்கும்வெளி said...

  /எனினும் வலைப்பதிவர் சந்திப்புகளுக்கு கட்டாயம் வருவீர்கள் தானே? :-))))))) /


  வேறுவழி?

 8. மிதக்கும்வெளி said...

  /குரு படம் பார்த்து விட்டீர்களா? - விமர்சனம் வருமா? - பொங்கல் வாழ்த்து எங்கே/


  பொங்கல் வாழ்த்துக்கள். குரு படம் பார்க்கவில்லை. ஆனால் ஆழ்வார் பார்த்துவிட்டேன்.

  நரகத்திற்குக்கூட போங்கள், ஆனால் தயவுசெய்து ஆழ்வார் படத்திற்கு மட்டும் போய்விடாதீர்கள்.

 9. மிதக்கும்வெளி said...

  /காதலர் தினத்திற்கும் உங்க வலைப்பதிவிற்கும் என்ன தொடர்பு? :) /

  அதுக்கும் நமக்கும்தான் ஒரு சம்பந்தமும் இல்லையே, அப்புறம் ஏன் வயிற்றெரிச்சலைக் கிளப்புறீங்க?

 10. Anonymous said...

  // வெட்கத்தைவிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் வலையில் அடுத்தவர் பதிவையும் கூட வாசிக்க முடிவதோ தோன்றுவதோ இல்லை. நமக்குப் பின்னூட்டம் வந்திருக்கிறதா, பதில் எழுதுவோமா என்றே அலைகிறது மனம். //

  நானும் இதைதான் உணர்ந்தேன் .... நீங்கள் அதை சொன்னதும் .. ஒ நம்மல போல ... இன்னொருத்தரும் இருக்குராருங்க சந்தோசம் ...

  சரி ... உங்க வலையத்தை தொடர்ந்து படிக்கும் வாசகன் சொல்லுவது ... உங்களை ,, மிண்டும் 14 Feb 06 ல் வலையுலகில் பார்க்க ஆசை .