பொன்வண்டு பிரியாணி
ஆறாவது விரல்

"பொன்வண்டுபிரியாணி சாப்பிடுகிறாயா??"

இசை இப்படிக்கேட்டபோது அதிர்ந்துதான் போனேன்.

பொன்வண்டைப் பிரியாணி செய்வதா? பொன்வண்டு என்பது சதையாலான வானவில் இல்லையா? அதைக் கறிசமைக்க மனம் வருமா? அதுவும் இசை போன்ற அழகிய பெண்ணால் .

உண்மையில் இசை நிரம்ப அழகானவள். யாரையும் புன்னகைக்க வைக்கும் முகம். அதுவும் அவளின் ஆறாவது விரல் மிகவும் அழகானது. பொதுவாக யாருக்கும் ஆறாவது விரல் கருச்சிதைவான சதைப்பிணடத்தைப் போல் தொங்கிக்கொண்டிருக்கும். ஆனால் இசைக்கோ அது செடியின் பக்காவாட்டில் பூத்த பூ போல அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.அதுசரி அழகான பெண் கொலை செய்யக்கூடாதா என்ன?

" இது என் பிறந்தநாள் ட்ரீட்" என்றாள் இசை.

ஆமாம். இன்று அவளது பிறந்தநாள். ஆடு சமைத்துப் பிரியாணி செய்யலாம், மாடு கறி சமைக்கலாம்.பொன்வண்டை மட்டும் சமைக்கக்கூடாதா?

சிலரது உலகம் ரொட்டித்துண்டுகளானது, சிலரது உலகம் மதுக்குடுவைகளானது, சிலருக்குக் கலவியால். அவரவர் உலகத்தை அவரவர்தானே சிருஷ்டித்துக்கொள்கிறோம். அவரவர் உலகத்தை நியாயப்படுத்துவதற்கான காரணங்களயும். அடுத்தவர் உலகத்தின் மீதான குற்றப்பட்டியல்களையும். உண்மையில் உலகம் எதாலானது? உலகம் எதாலுமானதில்லை, எதாதாலோ ஆனது.குழம்பிப்போனேன்.

இசை மீண்டும் அந்த கேள்வியை எழுப்பினாள்.

" இல்லை. நான் பக்கத்து அறையில் மது அருந்தப்போகிறேன். நீ உணவருந்திவிட்டு வா"

இப்போது என் உலகம் மதுவால் நிரப்பப்பட்டிருக்கிறது. மதுவின் மெல்லிய மிதவை மீண்டும் அந்த கேள்விகளை எழுப்பியது. தலை வலிப்பது போலிருந்தது.

உணவருந்திவிட்டு வந்த இசை என் உதடுகளில் முத்தமிட்டாள். எனக்கெனவோ அருவெறுப்பாகவிருந்தது. ஏதோ பொண்வண்டின் ரத்தக் கவுச்சி அடிப்பதைப் போல.

"ஒரு நிமிடம். நான் இன்னும் கொஞ்சம் மது அருந்திக்கொள்கிறேன்".

இசை என்னை இறுக்க அணைத்துக்கொண்டாள். நான் விலகிவிட முயன்றேன். ஆனால் அவள் ஒரு பசித்த சிறுத்தையைப் போல இருந்தாள். நான் நடந்த விளையாட்டிற்கு வெறும் சாட்சியாக மட்டும் இருந்தேன். அவள் அடிவயிற்றிலிருந்து கனன்ற தீ மெல்ல மெல்லத் தன் சுவாலையைப் பரப்பியது. உக்கிரமாய்ப் பெய்த பெருமழையின் முடிவில் சொட்டுச்சொட்டாய் நீர் வழிந்து தீ அணைந்தது.இப்போது இரை முடித்த சிறுத்தை தன் நாக்கைச் சுழற்றிக்கொண்டது.

நான் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.இசை என்னை மீண்டும் இறுக்க அணைத்தாள். அந்த அணைப்பில் அழுத்தம் இருந்தது. அழைப்பின் மிச்சங்களும்.

"இல்லை, வேண்டாம்" என்றேன்.
" ஏன்?" இசை
" எனக்குக் களைப்பாக இருக்கிறது"
அவள் உரக்கச் சிரித்தாள்.
அவளது சிரிப்பு என் ஆண்மையின் மீது வீசப்பட்ட கல் போலத் தோன்றியது
."இல்லை முடியும். ஆனால் தூக்கம் வருகிறது"
" போடா தூங்குமூஞ்சி, தூங்குவதற்காப் பிறந்தாய்?"

அதுசரி உலகம் தூக்கங்களாலுமானது என்பது அவளுக்கென்ன தெரியும்? நான் படுக்கையில் அவசரமாக சரிந்தபோது உலுக்கினாள்."சிகரெட் பாக்கெட்டை எங்கே வைத்திருக்கிறாய்?"
"உன் ஹேண்ட்பேகில்தான் வைத்திருக்கிறேன்"
சொல்லிவிட்டுத் தூங்கிப்போனேன்.

திகாலை நான்கு மணியிருக்கும். சிறுநீர் உந்துதல் என்னை எழுப்பியது.சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன்.சிகரெட் குடிக்கவேண்டும் போலிருந்தது.

அவளது ஹேண்ட்பேகைத் திறந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தேன். பாக்கெட்டிற்குள் ஏதோ ஊர்வதைப் போல இருந்தது. என்ன இது? பாக்கெட்டைத் திறந்தால் ஒரு அழகிய பொண்வண்டு என்னைப் பார்த்து மிரண்டு குறுகுறுவென்று ஓடியது.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
இசையை நோக்கிக் குனிந்தேன்
அதிர்ச்சியாக இருந்தது.

இப்போது இசையின் கைகளில் அய்ந்துவிரல்கள் மட்டுமே இருந்தன.

14 உரையாட வந்தவர்கள்:

 1. மிதக்கும்வெளி said...

  எனக்குப் பொதுவாக கதை எழுதுபவர்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கும். பலமுறை கதை எழுத முயன்று தோற்றிருக்கிறேன். இப்போது மீண்டும் ஒருமுறை.

 2. தமிழ்நதி said...

  'பொன்வண்டு என்பது சதையாலான வானவில் அல்லவா...'அழகிய வார்த்தைகள்....
  கதையளவில் தோல்வி என்பதையும் வெற்றி என்பதையும் எழுதுபவரல்ல வாசிப்பவர்தான் பிரகடனம் செய்யவேண்டும் என்பது எனது எண்ணம். நீங்கள் வென்றிருப்பதாகவே நினைக்கிறேன்.

 3. வரவனையான் said...

  அற்புதம் சுகுணா ! பணிக்கு திரும்பிய பின் விரிவாக விமர்சிக்கிறேன்

 4. மிதக்கும்வெளி said...

  /கதையளவில் தோல்வி என்பதையும் வெற்றி என்பதையும் எழுதுபவரல்ல வாசிப்பவர்தான் பிரகடனம் செய்யவேண்டும் என்பது எனது எண்ணம். நீங்கள் வென்றிருப்பதாகவே நினைக்கிறேன். /

  தமிழ்நதி, பிரகடனமெல்லாம் செய்ய வேண்டாம், ஏற்றுக்கொண்டால் போதும். நன்றி. உங்களைப் போன்ற பெரும் படைப்பாளிகள் வாழ்த்துவது 'வசிஷ்டர்வாயால் ராஜரிஷிதான்'. (நீங்கள் பெயரிலிக்குச் சொன்னதுதான்.

 5. மிதக்கும்வெளி said...

  /பணிக்கு திரும்பிய பின் விரிவாக விமர்சிக்கிறேன் /

  அடப்பாவி இப்பதானே கதையைப் படிச்சுட்டுப் பாராட்டிட்டு 'குடிக்கப்போறேன்'னு சொன்னே. என்னமோ 'எல்லை காக்கும் பணி' போல இன்னா பில்டப்? போதை தெளிஞ்சவுடனேன்னு சொல்லுப்பா

 6. தமிழ்நதி said...

  'பெரும் படைப்பாளிகள் வாழ்த்துவது'

  எனக்குத்தான் கடந்த ஆண்டு 'புக்கர்'கிடைப்பதாக இருந்தது. மயிரிழையில் தட்டிப்போயிற்று. என்னங்க சார்... ஆளாளுக்கு வாருறீங்க.. பொழுதும் போகணுமில்ல...

 7. bala said...

  //வயிற்றெரிச்சலாக இருக்கும். பலமுறை கதை எழுத முயன்று தோற்றிருக்கிறேன்//

  வெளியே மிதக்கும் அய்யா,

  தமிழர் மாமா கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,கற்பு போன்றவற்றை கட்டவிழ்த்தார் என்று எல்லாருக்கும் தெரியும்.கதை சொல்லுவதையுமா கட்டவிழ்த்தார்?
  கதை சொல்லுகிறேன்னு கதை வுட்டுகிட்டு (தமிழ்) இசையையே கற்பழித்திருக்கிறீர்கள்.
  இருங்க,எங்க மருத்துவர் அய்யா, தமிழ் இசையை காப்பாத்துவதற்காக புறப்பட்டு விட்டார்.கூடிய சீக்கிரம், உங்களூக்கு டின் கட்டிவிட்டு தமிழ் இசையை உங்களிடமிருந்து மீட்டெடுப்பார்.அப்புறம் உங்களுக்கு பொன்வண்டு பிரியாணி என்ன,கட்டெறும்பு கரி கூட கிடைக்காது.

  பாலா

  PS

  இது ஒரு கதை,இதுக்கும், ஜால்ரா போட செந்தில் அய்யா போன்ற பகுத்தறிவு குஞ்சுகள்.மாமா, அறிவையே கட்டவிழ்த்து விட்டாரய்யா.

  பாலா

 8. மிதக்கும்வெளி said...

  /எங்க மருத்துவர் அய்யா, தமிழ் இசையை காப்பாத்துவதற்காக புறப்பட்டு விட்டார்.கூடிய சீக்கிரம், உங்களூக்கு டின் கட்டிவிட்டு தமிழ் இசையை
  உங்களிடமிருந்து மீட்டெடுப்பார்/

  தமிழிசை என்பது பி.ஜே.பின் மகளிரணிச்செயலாளராச்சே, அவரை எதுக்கு டாக்டர் மீட்கணும்?. இதைக் குமரி அனந்தன் கேள்விப்பட்டால் உங்களைக் கட்டி வைத்து உதைப்பார்.

 9. கார்மேகராஜா said...

  ம்ம்ம்ம். பரவாயில்லை.

  --------
  ஆனால் ஒன்னும் மட்டும் புரியமாட்டேங்குது.

  யாருய்யா அது பாலா? எப்பவுமே வந்து உங்கள வம்புக்கு இழுக்கிறாரு!

  உண்மையில நீங்களே அவர் பேர்ல பின்னூட்டம் போடுறீங்களா?

  கருப்பு சார் பதிவுல ஐயரும் ஐயங்காரும் மாதிரி?

 10. ஜி said...

  சத்தியமா எனக்கு என்னனு புரியலீங்க... கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் :)

 11. மிதக்கும்வெளி said...

  /யாருய்யா அது பாலா? எப்பவுமே வந்து உங்கள வம்புக்கு இழுக்கிறாரு!

  உண்மையில நீங்களே அவர் பேர்ல பின்னூட்டம் போடுறீங்களா?/


  எனக்கு ரொம்ப முக்கியம். தல, யூ டூ புருட்ட்ஸ்?

 12. மிதக்கும்வெளி said...

  /சத்தியமா எனக்கு என்னனு புரியலீங்க... கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் :) /


  நீங்கள் எதைக் கேட்கிறீர்கள்?

 13. ஜி said...

  அந்த கடைசிப் பத்தி... அவளோட ஆறாவது விரல் காணாமல் போன கதை...

 14. முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

  மிக அருமையான அமைப்பில் இருக்கும் கதை - எனக்கு கதை என்பதை விட பகிர்ந்து கொள்ளபட்ட ஒரு அனுபவமாகவே காட்சியளிக்கிறது. உங்கள் போல சிலரின் உலகம் அனுபவங்களால் ஆனது என்பேன் நான்... அனுபவம் என்பது அனுபவித்துதான் சொல்ல வேண்டியது என்பது அல்ல... அது சில மெல்லிய கற்பனைகளையும் கொண்டது..