கேட்கக்கூடாத கேள்விகள்

எனக்கு ராஜா என்று ஒரு நண்பன் இருந்தான். கல்லூரி நண்பன். சைவப்பிள்ளைமார்த்தனத்துக்கேயுரிய பிள்ளைப்பூச்சிக் குணத்தோடு இருந்தான். தினமும் காலையில் பிள்ளையார் கோயிலுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டுத்தான் காலேஜுக்கே வருவான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். காலேஜ் விட்டவுடனே மணியடித்தவுடன் வீட்டிற்கு ஓடி விடும் டைப். (நாங்கள் அவரவர் ஆளை வழியனுப்பிவிட்டுத்தான் வீட்டிற்குப் போவோம்)

ஆனால் அவனிடம் நான் ஒருநாள் கேட்ட கேள்வி அவன் சுபாவத்தையே புரட்டிப்போட்டது. தன் தலைப்பிரட்டை வாழ்க்கையிலிருந்து வெளியேறினான்.


அவனிடம் எப்போதும் ஒரு சைக்கிள் இருக்கும். அது எப்போதும் பளபளப்பாக இருக்கும். ஒருநாள் பேருந்துநிலையம் வரை செல்ல வேண்டுமென்று அவன் சைக்கிளை இரவல் கேட்டேன். ஆனால் அவன் தரமறுத்தான்.

"எங்கப்பா காலையில எழுந்திருச்சி சைக்கிளை துடைச்சு வைப்பார். நான் சைக்கிளெல்லாம் தரமுடியாது"

"பஸ்டாண்ட் வரைக்கும்தாண்டா. போய்ட்டு வந்திடுறேன்"

"இல்லை. எங்கப்பா காலையில எழுந்திருச்சி சைக்கிளைத் துடைச்சி வச்சிருக்கிறார்"

"பத்து நிமிஷத்தில வந்திருவேன்"

"இல்லை. எங்கப்பா காலையில..."

"உங்கப்பா சைக்கிளைத் தினம் துடைச்சுவைப்பாரா?"

"ஆமாம்"

"துடைச்சு வைப்பார். ஆனா ஓட்ட மாட்டாரா?"

"ஆமாம்"

"அப்புறம் எப்படிடா நீ பொறந்தே?"


நாங்கள் திண்டுக்கல்லில் தலைகீழ் இலக்கிய அமைப்பு என்று ஒரு இலக்கிய அமைப்பு நடத்திவந்தோம். அப்போது பெரியார் பற்றிய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். தலைமை அ.மார்க்ஸ். அப்போதுதான் மார்க்ஸ் முதன்முதலில் அறிமுகம்.
கூட்டத்திற்கு முன்பு நண்பர்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். அப்போதுதான் வந்தார் ஒரு தமிழ்த்தேசியத் தோழர். தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியில் இருந்தார்.வந்தவுடனேயே மார்க்ஸை நோக்கி, "நீங்கள் நாட்டு விடுதலையில் நாட்டங்கொண்டவர்தானே தோழர்?" என்று ஆரம்பித்தார். அப்போதே மார்க்ஸ் எங்களை ஒருமாதிரியாகப் பார்த்தார்.


நாங்கள் 'டீ குடிக்கப்போகிறோம்" என்று ஒவ்வொருவராய்த் தப்பித்து வெளியே வந்துவிட்டோம். ஆனால் தமிழ்த்தேசியத் தோழரோ 'டீ குடிக்கமாட்டேன், தேனீர்தான் குடிப்பேன்' என்று பிடிவாதமாய் மார்க்சுடன் அமர்ந்துவிட்டார்.


கிட்டத்தட்ட அரைமணி நேரம் தனித்தமிழில் தமிழ்த்தேசிய வீரவுரைகளை ஆற்றியிருக்கிறார். ஒருகட்டத்தில் மார்க்ஸ் அவரிடம் கேட்டாராம்.

"உங்கள் பெயர் என்ன தோழர்?"
"என்னுடைய உண்மையான பெயர் ஆரோக்கியதாஸ். ஆனால் தமிழில் தமிழ்மன்னன் என்று மாற்றிக்கொண்டேன்"

மார்க்ஸ் சொன்னாராம், "நியாயப்படி பார்த்தால் நீங்கள் உடல்நல அடிமை என்றல்லவா வைத்திருக்க வேண்டும்?"

பொதுவுடைமை இயக்கத்தோழர் ஜீவாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை சமதருமக்கட்சி என்று ஆரம்பித்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்தவர். சு.ம.இயக்கத்திற்கு முன்பு அவர் தனித்தமிழ்ப்பற்றாளராக இருந்தார். தனித்தமிழிலேயே பேசுவார், எழுதுவார்.
ஒருநாள் மறைமலையடிகளைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றாராம். அடிகளாரின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது மறைமலை அடிகள் கேட்டாராம், "யாரு போஸ்ட்மேனா?"

அன்றிலிருந்து ஜீவா தனித்தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டார் (ஆதாரம் பொன்னீலன் எழுதிய 'ஜீவா என்றொரு மானுடன்)


'தென்மொழி' என்ற இதழை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியாது. பெருஞ்சித்தனாரின் இதழ். அந்த இதழ் முழுக்க தனித்தமிழில்தான் இருக்கும்.

தனித்தமிழ் என்றால் நீங்களும் நானும் நினைக்கும் அளவிற்கல்ல, தனித்தமிழோ தனித்தமிழில் இருக்கும்.உதாரணமாக அவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு கருணாநிதி வருகிறார் என்றால் 'கருணாநிதி' என்று அழைப்பிதழில் போடமாட்டார்கள். கருணை என்பது வடமொழி. 'அருள்நிதி என்றுதான் எழுதுவார்கள்.

எம்.ஜி.ஆர் - ம.கோ.இரா, ராமதாஸ் - மாலடிமை (மால்_ திருமால், ராமன் திருமாலின் அவதாரம், தாஸ் - தாசன் - அடிமை)

இப்படித் தமிழ்ப்'படுத்துவது' எனக்கு என்னவோ போலிருக்கும். உங்கள் பெயரை தனித்தமிழில் மாற்றிக்கொள்வது சரி. ஊரான் பெயரை மாற்றுவது சரியா? 'பாட்ஷா' படத்தில் 'ஆட்டோக்காரன்' பாட்டில் ரஜினி பாடுவாரே "பிரசவத்துக்கு இலவசமா வர்றேம்மா, உண் பிள்ளைக்கொரு பேருவச்சுத் தர்றேம்மா"பிரசவத்திற்கு இலவசமாக வந்தால் ஆட்டோக்காரர் பிள்ளைக்கு பேர் வைப்பாரா என்ன?
குழப்பமாக இருந்தது.

நான் ஒருமுறை தென்மொழிப்பற்றாளரிடம் கேட்டேன்.
"அய்யா, பொள்ளச்சி மகாலிங்கம் தமிழ்த்தேசிய முதலாளிதானே?"
"ஆம் அதிலென்ன அய்யம்?"
"மகாலிங்கத்தை மாநாட்டிற்குக் கூப்பிடுவதில் தவறில்லையே?"
"தவறொன்றுமில்லை அய்யா"
" பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பெயரை தனித்தமிழில் எப்படிப் போடுவீர்கள்?"

2 உரையாட வந்தவர்கள்:

 1. அசுரன் said...

  ///
  பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பெயரை தனித்தமிழில் எப்படிப் போடுவீர்கள்?"
  ///


  நல்ல கேள்விதான்... :-)))

  பதில்தான் நல்லா இருக்காது...

  அது சரிஙக் அது என்ன தமிழ் தேசிய முதலாளி? சரி வுடுங்க இத்த போயி இங்க விவாதிச்சிக்கிட்டு

 2. bala said...

  //பதில்தான் நல்லா இருக்காது...//

  அசுரன் அய்யா,

  என்னங்க இது? இப்படி சொல்லிட்டீங்க?நீங்க தான் எல்லா கேள்விகளுக்கும் ஏற்கெனவெ செம்மையா பதில் சொல்லியிருக்கீங்களே?அப்படி இருக்கும்போது பதில் நல்லா இருக்காதுன்னு சொல்றீங்க.அடக்கமா?அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை அய்யா..நீங்க எப்பவும் செம்மையா பதில் ஏற்கெனவே சொல்லியிருக்கணும்.அது தான் இந்த தொண்டனின் ஆசை.

  பாலா