கருணாநிதி என்னும் இலக்கியவாதி
(அல்லது)

திராவிட இயக்க இலக்கியம் - சில பார்வைகள்
பொதுவாக திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்து இரண்டு விதமான பார்வைகள் நிலவுகின்றன. ஒன்று திராவிட இயக்க இலக்கியங்கள் இலக்கியங்களே இல்லை என்று நிராகரிப்பது. இதற்கும் இரண்டுவித மனநிலைகள் காரணமாகின்றன. ஒன்று திராவிட இயக்கங்கள் மீதான அசூயை மற்றும் அருவெறுப்பான பார்ப்பன மற்றும் பார்ப்பன ஆதரவு மனநிலை. மற்றொன்று இலக்கியத்தில் அரசியல் கூடாது, பிரச்சாரம் கூடாது எனும் மேட்டுக்குடி 'உள்ளொளித் தரிசன' உளறல்கள்.


மறுபுறத்திலோ திராவிட இயக்க இலக்கியங்களைக் கொண்டாடுபவர்களுக்கு வேறு இலக்கியங்கள் பற்றிய அறிவு கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த படைப்பாளிகள் அண்ணாதுரை, கருணாநிதி, மிஞ்சிப்போனால் வைரமுத்து, அப்துல்ரகுமான்.


ஆனால் இவ்விரு பார்வைகளுக்கு அப்பால் வேறு சில அணுகுமுறைகள் தேவையென்றே கருதுகிறேன்.


1930கள் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழில் பல புதிய சிந்தனைகளை அறிமுகம் செய்யும் அறிவுசார்க் காலமாக விளங்கியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார் என்பது நமக்குத் தெரியும். அதேபோல் ஏங்கெல்சின் முக்கியமான நூலாகிய priciples of communism நூலை தமிழுக்கு மொழிபெயர்த்ததும் பெரியாரின் இயக்கம்தான்.


மார்க்சியம், கம்யூனிசம் மட்டுமல்லாது தாராளவாதக் கருத்துக்கள், பெண்ணியச் சிந்தனைகள் குறித்தும் பெரியாரியக்க ஏடுகளில் தொடர்ந்து எழுதப்பட்டன. தமிழுக்குப் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் தேடல் கொண்டவர்களாக குத்தூசி குருசாமி, ராகவன், நீலாம்பிகை அம்மையார் போன்றவர்களைச் சொல்லலாம். கர்ப்பத்தைத் தடுப்பதற்கான மாற்றுப் புணர்ச்சி முறைகள் பற்றி குத்தூசி குருசாமி 30களிலேயே பேசுகிறார் என்பது ஆச்சரியமான ஒன்று. தமிழில் நாட்டார் ஆராச்சியைத் தொடங்கிவைத்த மயிலை.சீனி வேங்கடசாமி நாட்டார், சாத்தான்குளம் ராகவன் ஆகியோர் சு.ம இயகக்த் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பாரதி பற்றித் தமிழ்ச்சூழலில் பேசப்பட்ட அளவிற்கு பாரதிதாசன் பேசப்படவில்லை. அவரது கவிதைகளில் ஆணாதிக்கம், மொழிப்பெருமிதம், தமிழ்த்தேசிய வெள்ளாளப் பெருங்கதையாடல்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அழகியல் ரீதியாகப் பார்த்தால் பாரதிதாசன் ஒரு நல்ல கவிஞர்..


அவரது 'அழகின் சிரிப்பு' தமிழில் நல்ல அழகியல் பிரதி.

'காதலும் வாழ்வும்' என்னும அவரது கவிதையில் காதலன் காதலியைப் பார்த்துச் சொல்கிறான்.

"நாயின் நாக்குப்போன்ற சிவந்த மெல்லடியைத் தூக்கிவை குடிசையில்"

என்ன ஒரு அழகான படிமம்!


அவரது கவிதைத் தொகுப்புகளில் வெளியாகாத தனிப்பாடல் ஒன்று அவர் நடத்திய 'குயில்' ஏட்டில் வெளியாகியிருக்கிறது. அது ஒரு கதைப்பாடல்.
ஒரு ரயில்வே கம்பார்ட்மெண்டில் ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் தனித்திருக்கிறார்கள். ஆண் நெடுநேரமாய்த் தன் வயிற்றைத் தடவிகொண்டேயிருக்கிறான். பெண்ணோ தன் மார்பைத் தடவிகொண்டிருக்கிறாள். ரயில் போய்க்கொண்டேயிருக்கிறது.


ஒரு கட்டத்தில் ஆண் அந்தப் பெண்ணிடம் கேட்கிறான், "உனக்கு என்ன பிரச்சினை?"

அவள் சொல்கிறாள், "எனக்குப் பால்கட்டிக்கொண்டுவிட்டது. மார்பு வலிக்கிறது, உனக்கு என்ன பிரச்சினை?"

ஆண் சொல்கிறான், "நான் சாப்பிட்டு நான்குநாட்களாகின்றன, வயிறு பசிக்கிறது"

அப்போதுதான் அந்த கவித்துவக் கணம் நிகழ்கிறது. யாரென்று தெரியாத அந்த ஆணுக்குத் தன் முலைப்பாலைப் பருகத் தருகிறாள் அந்தப் பெண். இருவரின் பிரச்சினையும் தீர்கிறது.உலகு தழுவிய அன்பும் மானுட விழுமியமும் அங்குப் புன்னகைக்கிறது.


இதேகாட்சியையொத்த ஓவியம் ஒன்று ரஷ்யாவில் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜார்மன்னனின் கொடுங்கோலாட்சியின்கீழ் போல்ஷ்விக் வீரர்கள் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களைக் காண அவர்களது மனைவிமார்கள் வருகிறார்கள்.. புரட்சிவீரர்கள் தாகம் தாங்காது "தண்ணீர் தண்ணீர்" என்று அலறுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கப்படவில்லை.


அப்போது யார்யாருடைய மனைவிகளோ யாராருடைய கணவன்களுக்கோ முலைப்பால் தந்து தாகம் தணிக்கிறார்கள்.


சிந்தனை சார்ந்த சுயமரியாதை இயக்க அறிதலை உணர்ச்சித் தளத்தில் திசைதிருப்பி விட்ட 'பெருமை' அண்ணாதுரையையே சேரும். அவர் ஒரு சிறந்த ஒரு மேடைப்பேச்சாளர். ஆனால் திரைக்கதை வசனம் எழுதுவதில் கருணாநிதி அண்ணாவை வென்றுவிட்டார் என்றே கருதுகிறேன். கருணாநிதியின் வசனங்களில் இருக்கும், கூர்மையும் அரசியல் நையாண்டியும் அண்ணாவின் வசனங்களில் இல்லை.


ஆனால் அண்ணா ஒரு சிறந்த நாடகாசிரியர். அவரது 'நீதிதேவன் மயக்கம்' இன்றளவும் ஒரு சிறந்த நாடகப் பிரதி. ராவணனைக் குறிக்கும் 'இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன்' என்னும் கம்பனின் ஒரு சொல்லாடலை எடுத்துக்கொண்டு அண்ணா அந்த நாடகத்தில் பல தர்க்கங்களை அடுக்குவார். இன்றும் சில அம்சங்களை மாற்றி நவீன நாடகமாகப் போடக்கூடிய தகுதி 'நீதிதேவன் மயக்கத்திற்கு உண்டு. ('தீம்தரிகிட' ஞாநி அண்ணாவின் 'சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம்' நாடகத்தை நவீன நாடகமாக நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் நீதிதேவன் மயக்கமே நல்ல பிரதி என்று கருதுகிறேன்.)


அண்ணாவிற்கும் 'நவீன' இலக்கிய உலகத்திற்கும் சம்பந்தமில்லையென்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் புதுமைப்பித்தன் இறந்தபோது ஒரு நல்ல இரங்கல் உரையை அண்ணா எழுதியிருக்கிறார்.'நவீன எழுத்தாளர் என்று சொல்லப்படும் புதுமைப்பித்தன் 'அவ்வையார்' படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் அண்ணாவோ "சங்ககாலத்தில் 40க்கும் மேற்பட்ட அவ்வையார்கள் உண்டு. ஆனால் நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரு டெஸ்ட் டியூபில் போட்டுக் குலுக்கி ஒரே அவ்வையாராகப் படம் எடுத்திருக்கிறீர்களே என்ன நியாயம்?" என்று விமர்சனம் எழுதினார்.


ண்ணாவின் சிறுகதையைப் போல கருணாநிதியின் சிறுகதைகள் சோபிக்கவில்லையென்றாலும்கூட அவரது 'குப்பைத்தொட்டி' சிறுகதை முக்கியமான ஒன்று. குப்பைத்தொட்டி என்னும் விலக்கப்படட் பொருள் ஒன்று தன் கதையைக் கூறும் மரபு அதற்குமுன் கிடையாது.


கருணாநிதியின் கவிதைகள் இன்றைய நவீன கவிதைகளோடு ஒப்பிடும்போது ஒன்றுமே கிடையாது என்றாலும் அவரது 'வசனகவிதை'களில் சில கவித்தெறிப்புகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அண்ணாதுரை கவிதையில் பரிதாபமாய்த் தோற்றுப்போனார். ("காதுகொடுத்துக்கேள் தம்பி, கருணாநிதி என்னுமரிய கழகக்கம்பி, ஏதுமறியாத் தமிழர்தூய வாழ்வை எனக்குப்பின் சீர்படுத்தும் மறவன் நீதான் " என்னும் கலைஞரைப் பற்றிய அண்ணாவின் கவிதை வரிகள் எத்தனை உடன்பிறப்புகளுக்குத் தெரியும் என்று தெரியவில்லை)


கருணாநிதியின் நவீனச்சிந்தனைக்கும் இலக்கிய மேதமைக்கும் ஒரே ஒரு சான்று.


"தெய்வந்தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை"
இந்த குறளுக்குப் பலவிதமான உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.


"தெய்வத்தைக்கூடத் தொழாமல் கணவனைத் தொழும் மனைவி பெய் என்று ஆணையிட்டால் மழை பெய்யும்" இதுதான் பலராலும் சொல்லப்பட்ட மரபான உரை.


ஆனால் பாரதிதாசன் தனது கவிதையில் இதற்கு வேறு பொருள் தருகிறார்.

தலைவனும் தலைவியும் இருக்கிறார்கள். தலைவி தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனைத் தொழும் மனித எந்திரம். ( இத்தகைய 'கற்புசால் அடிமைகளை' அவரது குடும்பவிளக்கு, இருண்டவீடு போன்ற நூல்களில் சாதாரணமாகக் காணலாம்). வாசலில் புலவர்களும் பாணர்களும் பரிசிலுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். அப்போது தலைவி, தலைவனிடம் "பெய்" என்கிறாள். தலைவன் கொடைமழை பெய்கிறான்.


ஆனால் இந்தக் குறளுக்குக் கலைஞர் தரும் உரையே அலாதியானது.


'மழை என்பது தன்னியல்பானது, சுதந்திரமானது. அது யார் சொல்லியாவது பெய்தால் அப்போது அது தன் தன்னியல்பையும் சுதந்திரத்தையும் இழக்கிறது. அப்படிப் பெய்தால் அது மழையே அல்ல, அது ஒரு அடிமை அவ்வளவுதான். தெய்வத்தைக் கூடத் தொழாமல் கணவனை மட்டும் தொழுபவள், யாருடைய கட்டளைக்கோ கட்டுப்பட்டுப் பெய்யும் மழை போன்ற அடிமைதான்' என்கிறார் கலைஞர்.


தெய்வந் தொழாதாள் கொழுநன் தொழுதெழுவாள் - தெய்வத்தைக் கூடத் தொழாமல் கணவனையே தெய்வமெனத் தொழுபவள், பெய்யெனப் பெய்யும் மழை - பெய்யென்றவுடனே ஆணைக்கிணங்கிப் பெய்யும் (அடிமை) மழை போன்றவள்.

இறுதியாக திராவிட இயக்க இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தவை என்றோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதோ என்பதல்ல என் கருத்து. அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிரதிகளில் ஆண்மய்ய மற்றும் ஆண் வக்கிரப்பார்வைகளும் பழமைவாதப் பார்வைகளும் நிறைந்திருக்கின்றன. ஆனால் அந்தக் காலப்பின்னணியின் அடிப்படையிலும் இலக்கியங்கள் என்கிற அங்கீகாரத்தின் அடிப்படையிலும் அணுகும்போது வேறு சில புதிய புரிதல்கள் தென்படலாம் என்பதே என் கருத்து.

3 உரையாட வந்தவர்கள்:

 1. -/பெயரிலி. said...

  நீங்கள் சொல்வது சரிதான். ஒன்று அது அல்லது இது என்பதுதான் திராவிடஎழுத்துகள் குறித்த வாதங்கள். எதுவும் மிகையாகும்போது, இலக்கியம் சுவைக்காது; அதுபோலவே குறையும்போதுங்கூட.

 2. லக்கிலுக் said...

  கலைஞர் அரசியலை கைவிட்டிருந்தால் நீங்கள் ஒப்புக்கொள்ளும் வகையிலான நவீன இலக்கியவாதியாக பரிணமித்திருப்பார்

 3. மிதக்கும்வெளி said...

  /கலைஞர் அரசியலை கைவிட்டிருந்தால் நீங்கள் ஒப்புக்கொள்ளும் வகையிலான நவீன இலக்கியவாதியாக பரிணமித்திருப்பார் /

  எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அரசியல்வாதி நல்ல இலக்கியவாதியாகக்கூடாது என்றெல்லாம் இல்லை. திராவிட இயக்க இலக்கியவாதிகள் வாசிப்பில் தேங்கிப்போனதே முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்.