பெண்களிடம் தோற்ற கதை
டுத்தவர் காதல் அனுபவங்களைப் படிப்பது நாகரிகமில்லை என்ற உறுத்தல் உங்களிடம் இருந்தால் இந்த பதிவை மூடிவிட்டு நீங்கள் வேறு பதிவிற்குச் சென்றுவிடலாம்.


னக்கு முதல் காதல் அரும்பியபோது வயது பத்து. தீபா என் அய்ந்தாம் வகுப்புத் தோழி. காரணம் தெரியாமலே நான் பத்துவயதில் நாத்திகனானதைப் போலவே பத்துவயதில் தீபா என்னை ஈர்த்தாள். அப்போது எனக்கிருந்த எண்ணமெல்லாம், 'பெரியவனானபிறகு அப்பா அம்மாவைக் கூட்டி வந்து பெண்கேட்கவேண்டும்' என்பதே. அது காதல்தானா என்பது எனக்குப் புரியவில்லை. (இந்தவயதுவரை எது காதல் என்பதும் எனக்கு விளங்கவில்லை.)


அதற்குப் பின் பல பெண்கள் என்னைக் கடந்துபோனார்கள். ஒவ்வொரு காலத்திலும் ஏதாவதொரு பெண் சிலிர்ப்பூட்டினாள். ஆனால் நான் காதலித்ததாக நம்பிய எந்த பெண்ணும் என்னைக் காதலிக்கவில்லை. என்னைக் காதலித்த எந்த பெண்ணையும் நான் காதலித்ததில்லை. எதிரெதிர் துருவங்களின் ஈர்ப்பினால் உண்டாகும் அந்த மின்சாரத்தைக் காலம் எனக்கு வழங்கவேயில்லை.

எத்தனையோ பெண்கள் சிலிர்ப்பூட்டியபோதும் இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் மனதில் தங்கிப்போனார்கள்.


த்தாம் வகுப்பு டியூஷன். பானுமதி எப்போதும் சைக்கிளில் வந்தாள். பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள டியூஷனுக்கு நானும் அக்தரும்(அக்தர் உசேன்) நடந்துதான் போவோம். பானுமதி அழகாயிருந்தாள், அந்தக்கால ராதிகாவைப் போல. எப்படியாவது அவளது வீட்டைக் கண்டுபிடித்துவிடுவதென்று தீர்மானித்தோம். நாங்கள் அவளை எப்படிப் பின் தொடர்வது?.


ஒருநாள் டியுஷன் முடிவதற்கு சற்றுமுன்பு காம்பஸால் அவளது சைக்கிளைப் பஞ்சராக்கினோம். பிறகென்ன பானுமதி தள்ளிக்கொண்டு போக நாங்கள் பின் தொடர்ந்தோம். கடைசியில்தான் தெரிந்தது. அவள் எங்கள் தெருவின் கடைசியிலிருக்கும் சலவைத்தொழிலாளர் குடியிருப்பில்தான் குடியிருந்தாள் என்பது.


ஆனால் மறுநாள் நடந்ததுதான் வேடிக்கை. பானுமதி, சாரிடம் புகார் செய்தாள். "சார், என்னுடைய சைக்கிளில் 35 பஞ்சர் இருக்கிறது' என்று. அடப்பாவிகளா, நாங்கள் ஒரே ஒரு பஞ்சர்தானே போட்டோம். மீதி பஞ்சர் போட்டது யார்? ஒரு ஊர்வலமே நடந்திருக்கும்போல. அதைவிட இன்னொரு கொடுமை யாரோ ஒரு 'நல்லவன்' வாத்தியாரின் சைக்கிளையும் சேர்த்துப் பஞ்சராக்கியிருந்தான்.


ல்லூரிக்காலம். ஜெய்சிறீ. அழகாயிருந்தாள். மலர்ந்த பூக்களில் அவள் ஒரு வளர்ந்த பூவாயிருந்தாள். அவளது புன்னகை, நடையசைவு, பின்னல் எல்லாம் இம்சைப்படுத்தின.


கல்லூரி தொடங்கும்போது அவளுக்காகக் காத்திருப்பதும், கல்லூரி முடிந்தபிறகு வழியனுப்புவதும் வாடிக்கையானது. ஆனால் ஒரு சொல்லும் பேசமுடியவில்லை. 3000 பேர் கூடியிருக்கும் மேடைகளில் முழங்கமுடிகிறது. 'ஈஸ்வர அல்லா தேரா நாம் என்ற காந்தி ஏன் சாகும்போதுமட்டும் ராம் ராம் என்றார், யேசுவையோ அல்லாவையோ ஏன் துணைக்கழைக்கவில்லை' என்று கேட்டு கைதட்டல் பெறமுடிகிறது. ஆனால் ஒரு பெண்ணிடம் பேசமுடியவிலலையே!.


அப்போது நான் தீவிர மார்க்சிய ஆதரவாளன். பூமியைப் புரட்டிப் போடும் நெம்புகோல் கவிதைகளுக்காய் மெனக்கெட்டவன். 'வாருங்கள் இளைஞர்களே' என்றுதான் கவிதைகள் ஆரம்பிக்கும். அவ்வப்போது ஜார்ஜ்தாம்சனின் 'புரட்சிகர இயங்கியலின் வரலாறு மார்க்ஸ் முதல் மாவோ வரை' போன்ற புத்தகங்களைக் கையில் வைத்துப் புரட்சிகரப் படம் வேறு ஓட்டவேண்டியிருந்தது.

ஆனால் காதலுக்கும் புரட்சிகரப் பிலிம்களுக்கும் அதிகதூரம் என்பது எனக்கு உறைத்தபோது காலம் மோசமாய் என்னைக் கடந்து போயிருந்தது.


ல்லூரியின் இறுதி நாட்கள். அவளிடம் எபடியாவது பேசிவிட வேண்டும். "நான் அய்.லவ்.யுவெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்க அழகாயிருக்கீங்க. இவ்வளவுநாள் உங்களை சைட் அடிச்சேன், அதுக்கு தேங்க்ஸ், அவ்வளவுதான் சொல்வேன்" என்று நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். (வீம்பு!)


ஆனால் ஒவ்வொருநாளும் அந்த நாளை ஒத்திபோட்டுக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு ஒத்திவைத்தலுக்கும் ஒவ்வொரு காரணங்கள். "கூடவர்ற பொண்ணு ரவுடி மாதிரி. எனக்குப் பயமாயிருக்கு" இப்படியாக.

கடைசியில் ஒருநாள். அவளும் அவளது (ஆபத்தில்லாத) தோழியும் மட்டும் தனியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன்.


தைரியம் வர வேண்டுமல்லவா. லெனினின் 'சர்வதேசியமும் தேசிய இனப்பிரச்சினைகளும்' புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.


அவள் முன்னால் போய்க்கொண்டிருக்கிறாள். நான் பின்னால். தூரம் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. எங்கள் காந்திகிராமக் கல்லூரியை பொறுத்தவரை பேருந்திலிருந்து கல்லூரி செல்ல இருபது நிமிடம் நடக்க வேண்டும். நாங்கள் 16 வருடங்களுக்குப் பிறகு போராட்டமெல்லாம் நடத்தி யூனியன் வாங்கினோம். இனும் பல கோரிக்கைகளையும் முன்வைத்து வெற்றி பெற்றோம். ஆனால் கல்லூரி நிர்வாகமே முன்வந்து ஒரு கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்தபோது நாங்கள் மறுத்துவிட்டோம். அது பேருந்துநிறுத்தத்திலிருந்து கல்லூரிக்கு பேருந்து கொண்டுவருகிறோம் என்பது. இருபது நிமிடம் கடலை போடுவதைக் கெடுக்கும் பஸ் யாருக்குத் தேவை?.


ரயில்வே கிராஸிங்கில் திரும்பும்போது ஜெய்சிறீ திரும்பி என்னைப் பார்த்தாள். எனக்குப் பதட்டமானது. வியர்க்கத்தொடங்கியது. உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது. புத்தகத்தைப் பிரித்து 32ம் பக்கத்தைப் படிக்கத்தொடங்கினேன்.


"தேசியம் என்பது முதலாளித்துவக் கருத்தாக்கம்தான் என்றாலும் தேசிய இனங்களின் பிரிந்துபோவதற்கான சுயநிர்ணய உரிமையைப் பாட்டாளிவர்க்கம் அங்கீகரிக்க வேண்டும்"


அப்போது என்னைப் பின் தொடர்ந்து அவசரமாக சைக்கிளில் வந்த என்நண்பர்கள் 'என்ன தோழர் பேசிட்டியா?" என்றார்கள். (பொதுவாகக் கல்லுரியில் மாமா, மச்சி என்று கூப்பிடுவதே வழக்கம். ஆனால் 'தோழர்' என்றழைக்கும் கெட்ட பழக்கம் என்னிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவியிருந்தது)


எங்கே சொல்வது? ஜெய்சிறீ போயிருந்தாள். இப்போது என் கைகளில் லெனின் கனத்துக்கிடந்தார்.

8 உரையாட வந்தவர்கள்:

 1. பங்காளி... said...

  ம்ஹூம்...ம்ம்ம்ம்ம்....இதுபத்தி நான் எழுதனும்னு யோசிச்சிருந்தேன்....முந்தீட்டீங்க.....

  கனத்தது லெனின் மட்டுமா தோழரே!

 2. அரை பிளேடு said...

  ப்ராக்டிகலா இருக்கறவங்களதான் பொண்ணுங்களுக்கு பிடிக்கும்.

  பெண்களுக்கு பிடித்தது நுகர்வோர் சந்தை. அதற்கு ஆதாரமானது முதலாளித்துவம். முதலாளித்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆதரிப்பவர்கள் அவர்கள்.

  லெனின் கைகளை பற்றி வெளியில் மிதப்பவர்களை பெண்கள் கட்டாயம் திரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் அந்தப் பார்வையில் காதல் இருக்காது.
  அனுதாபம் இருக்கும்.

  :))

 3. Anonymous said...

  You may get a girl friend from AIDWA if you join DYFI:). But dont carry books by Lenin there.He is
  out of fashion.

 4. லக்கிலுக் said...

  :-)))))

  ஹார்மோன்கள்
  அறிவினை மீறி
  செயல்படுவது
  வாலிப வயசுல
  சகஜமப்பா....

 5. மிதக்கும்வெளி said...

  /பெண்களுக்கு பிடித்தது நுகர்வோர் சந்தை. அதற்கு ஆதாரமானது முதலாளித்துவம். முதலாளித்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் ஆதரிப்பவர்கள் அவர்கள்./


  இதுக்கு நானே பரவாயில்லை போல. தல, இப்படியே பேசிக்கிட்டிருந்தா உங்க காதலும் பணால்தான்.

 6. மிதக்கும்வெளி said...

  /You may get a girl friend from AIDWA if you join DYFI:). /

  அது சரி.

  /dont carry books by Lenin there.He is
  out of fashion.
  /

  என் காதலுக்கு ஏன்யா செத்துப்போன லெனினை வம்புக்கிழுக்கிறீங்க

 7. முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

  காதல் ஒரு சுகமான அனுபவ கனவு. பெறும்பாலும் எல்லாரும் காணும்/ கண்ட கனவு எனினும் அதனை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் திறன் நான் பெறும்பாலும் ஆண்களிடம் மட்டுமே காண்கிறேன். பெண்கள் தங்கள் காதலை பற்றி வெளிப்படுத்தும் - பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் ரொம்ப குறைவு. அது பெரும்பாலும் கற்பு சார்ந்த குழப்பமாகவே அமைகிற்து...

 8. மிதக்கும்வெளி said...

  சரிதான் முத்துக்குமார் நீங்கள் சொல்வது. இந்த மனத்தடைகளைத் தாங்க நமது சமூகத்திற்கு இன்னும் எவ்வளவு வயதாக வேண்டுமோ?