பாரதிதாசனின் படைப்புகளில் பெரியாரியல்விரோதப்போக்கு - எஸ்.வி.ராசதுரை
தமிழ்ச்சூழலில் மிகமுக்கியமான அறிவுஜீவிகளில் ஒருவர் தோழர் எஸ்.விராசதுரை. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம், பெண்ணியம் எனப் பல்வேறு கோட்பாட்டுத்தளங்களில் இயங்கும் எஸ்.வி.ஆரின் 'பெரியார் :ஆகஸ்ட்15' மற்றும் 'பெரியார் : சுயமரியாதைசமதர்மம்' என்னும் இருநூல்களும் பெரியார் குறித்த மிகமுக்கியமான ஆவண முயற்சிகள். பெரியார் குறித்த தரவுகளே அருகிப்போயிருக்கும் சூழலில் கடும் உழைப்பால் அதைச்சாத்தியப்படுத்திய எஸ்.வி.ஆர் தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் இருக்கையின் தலைவராகப் பணியாற்றிவருவது சாலப்பொருத்தமானதே. அவரின் பாரதிதாசனின் பிரதிகள் குறித்த இக்கட்டுரை பெரியார்திராவிடர்கழகத்தோழர்களால் நடத்தப்படும் திராவிடர்.ஆர்ஜி யில் வெளியாகியிருந்தது. பொதுவாகப் பாரதிதாசன் குறித்து விமர்சிப்பதற்கு பெரியாரியர்களும் பெரியாரியக்கங்களும் தயங்கும்சூழலில் இக்கட்டுரையை தோழர்கள் வெளியிட்டிருந்தது பாராட்டுக்குரியது. ஆனால் நாம் இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். மய்யநீரோட்ட இடதுசாரி இயக்க எழுத்தாளர்களிலிருந்து 'நவீன' எழுத்தாளர்கள் வரை பாரதியைக் கொண்டாடிய அளவிற்கு பாரதிதாசனைப் புறக்கணித்ததும் உண்மையே. பாரதியின் இந்துத்துவ மற்றும் பார்ப்பனீயக் கறைபட்ட பிரதிகள் மீது மரபுமார்க்சியர்கள் மட்டுமில்லை, பின்நவீனத்துவக் கலகக்காரர்கள் கூட விமர்சனங்களை முன்வைத்ததில்லை என்பதையும் கணக்கிலெடுத்துக்கொண்டு நாம் வாசிக்கவேண்டும்.

''...சமூகப் புரட்சி தனது கவித் திறனைப் பழங்காலத்திலிருந்து பெற முடியாது; எதிர்காலத்திலிருந்துதான் பெற முடியும்."
-கார்ல் மார்க்ஸ், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்

1891௧967ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாரதிதாசன் பெரியாரின் சமகாலத்தவர். பெரியாருக்கு 12ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்து பெரியாருக்கு ஒன்பது ஆண்டு களுக்கு முன்பே இயற்கை எய்தியவர். பெரியாரைவிட ஏறத்தாழ 22ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்தவர். 37ஆண்டுக் காலம் ஆசிரியப் பணி, கவிதைத் தொழில், நாடகப்பணி, திரைப்பட ஈடுபாடு ஆகிய வற்றோடு காங்கிரஸ் தேசிய இயக்க, சுய மரியாதை இயக்கச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சிறிது காலம் புதுவைச் சட்டமன்ற உறுப்பினராக வும் இருந்தவர். பிரிட்டிஷ் இந்தியாவிலும் பிரெஞ்சிந்தியாவிலும் மட்டுமின்றி உலகள விலும் ஏற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளினூடாக வாழ்ந்தவர்; அவற்றின் நேரடிச் சாட்சியாகவும் விளங்கியவர். பாரதியாரின் பற்றுறுதி மிக்க மாணாக்கராக, சீடராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். அத்துடன் தமிழ் தேசியக் கருத்துநிலையை அடிநாத மாகக் கொண்ட, தொடர்ந்து நீடிக்கின்ற ஒரு கவிதை மரபின் தொடக்கப்புள்ளியாக இருந்தவர். மிகப் பெரும் வரலாற்றுக் காலகட்டத்தைச் சார்ந்த பாரதிதாசனின் வாழ்க்கையை வசதி கருதி மூன்று கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்: (1)1891௧908; (2) 1908௧930; (3) 1930௧964.

மரபுசார்ந்த தமிழ்ப்புலவர் பெருமக்களிடமிருந்து தமிழ் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் முறைப்படி கற்றுத் தேர்ந்து புலமை பெற்ற கனகசுப்புரத்தினம், பின்னர் தனது பிறப்பு, வளர்ப்புச் சூழலின் காரணமாக இறை நம்பிக்கையாளராக, அவரது காலத்தில் மிக இயல் பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வண்ணப்பாட்டுகளையும் துதியமுதுகளையும் இயற்றுபவராக இருந்தவர். அந்தக் காலத்திலேயே அவரிடம் இந்திய தேசிய வாதக் கருத்துகளின் தாக்கம் ஏற்பட்டிருந்ததைப் பார்க்க முடிகின்றது:

மனிதர் மனிதர்க்கடிமை ஆகுமொரு தீக்கதை
மண்ணிடையிருப்பதில்லை
வகைக்கெனது நாட்டின் அறப்போர் நடத்திடு
வாய்மையிற் பண்டை நாளில்
எனினும் எனதன்பான நாடின்று மற்றோர்
இனத்தவர்க்கடிமையாதல்
என்னுமிக் கோலத்தை எண்ணியென்தோள் பதைத்து
நான் பார்த்திருக்கும் நேரம்
(-மயிலம் சிறி சண்முகக் கடவுள் பஞ்சரத்நம்)

பாரதியாரைச் சந்திக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி கட்டமைத்த இந்தியத் தேசியக் கருத்துநிலையை ஏற்றுக் கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், இந்துமதப் பற்றும் இறை நம்பிக்கையும் கொண்டிருந்த இந்திய தேசியவாதி களைப் போலவே இந்திய தேசத்தை, குமரி முனையைப் பாதங்களாகவும் இமயமலையைத் தலையாகவும் கொண்ட ஒரு பெண்ணாக, தாயாக உருவகித்தார்.

வங்கத்து வீரர் உன் வாழ்க்கையிலே சம்பந்தி
தேசத் துருக்கரெல்லாம் தேவியுன் அண்ணன்மார்
மீசைத் தெலுங்கர்களும் வில்லர்களும் மைத்துனர்கள்
தமிழ்நாட்டு வீரர் எல்லாம் சண்பகமே சொந்தக்காரர்
நாட்டுக்கு நூலிழைக்கும் தங்கையர் உன் அக்கையர்
வீட்டில் துணி நெய்யும் வீரர் உன் அம்மான்கள்
கன்னியாகுமரி முதல் கங்கை இமயம் வரை
உன்னிரத்தம் சேர்ந்த உடம்புடையார்

என ‘பாரத மாதா’ தன் குழந்தையிடம் கூறுவதாகக் கவிதை புனைந்தார் கனக சுப்புரத்தினம். ‘தேசிய உபாத்தி யாயர்’, ‘கவியின் பெருமை’, ‘கதை இராட்டினப் பாட்டு’ போன்றவற்றில் காந்தியின் சுதேசி இயக்கக் கொள்கை களைப் பாடும் கவிஞர், பாரதியாரைப் போலவே பரந்த இந்தியப் பண்பாட்டின் ஓரங்கமாகவே தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் தேசத்தையும் பார்த்தார். இந்திய தேசியத்திற்குக் கடப்பாடுடைய உண்மையான பள்ளி ஆசிரியர் என்னும் வகையில் இளம் மாணவர் களிடையே தேசியக் கருத்துகள் எளிதில் சென்றடையும் வண்ணம் ‘சிட்டுக் குருவிப் பாட்டு’, ‘ நிலாப் பாட்டு’, ‘தாலாட்டு’ முதலியவற்றை எழுதினார்.

1929௩0ஆம் ஆண்டில் பாரதிதாசனில் ஒரு மாறுதல் கால கட்டம் தொடங்குவதைக் காண்கிறோம். பாரதிதாசனைப் போலவே காங்கிரஸ் தேசிய இயக்கத் திலிருந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி, 1925இல் ‘குடி அரசு’ வார ஏடு வழியாகத் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், எல்லாவகையான மானுட அடிமைத்தனங்களையும் சுட்டுப் பொசுக்குகின்ற பெருந்தீயாகக் கொழுந்துவிட் டெரிந்து, 1929ம் ஆண்டிலேயே பிரெஞ்சிந்தியாவுக்கும் பரவத் தொடங்கியிருந்தது. அந்த இயக்கத்தின் சமூக அடித்தளத்தின் முக்கியக்கூறாக இருந்தவர்கள் ‘தீண்டா தார்’ எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள். தென்னிந்தியா வின் முதல் கம்யூனிஸ்ட் என்று சொல்லப்படுபவரும் தமிழகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளர்களிலொருவரு மான ம.சிங்காரவேலர் கூறியதுபோல, “பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இளைப்பாறிச் செல்லும் மரநிழலாக” இருந்தது சுயமரியாதை இயக்கம்.

புதுச்சேரியில் சுயமரியாதை இயக்கத்தின் மிகப் பெருந்தூணாக விளங்கியவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ம.நோயேல் அவர்கள். செல்வந்தரான அவர், பாரதிதாசனுக்கு மட்டுமின்றி, சுயமரியாதை இயக்கத் தினருக்கும் புரவலராகத் திகழ்ந்தார். இந்திய தேசியத் தின் பார்ப்பனத்தன்மையால் வெறுப்புற்று அதிலிருந்து வெளியேறிய பாரதிதாசனால் 1929இல் எழுதப்பட்ட ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு” என்னும் நெடுங் கவிதையைக் குறுநூலாகத் தனது சொந்தச் செலவில் 1930 இல் முதன்முதலாக வெளியிட்டவர் இந்த நோயேல் பெருந்தகைதான். பிரெஞ்சிந்தியத் தமிழ்ப் பகுதிகளில் சுயமரியாதை முரசு கொட்டியதும், சா.குருசாமி, பொன் னம்பலானார் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டிருந் ததுமான ‘புதுவை முரசு’ ஏட்டிற்கும் நோயேல்தான் புரவலர்.“இப்புத்தகத்தை மக்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய நூற்கள் போலப் பாராயணம் செய்து இதன் கருத்துகளை ஓர் ஆயுதமாகக் கொண்டு முன்னேற வேண்டும்” என்பதற்காகவே‘ தாழ்த்தப்பட்டார் சமத் துவப் பாட்டு’ நூலை அச்சிட்டுச் சொற்பவிலைக்குத் தர தான் விழைந்ததாக நோயேல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நூலுக்கு நூன்முகம் எழுதிய காசி.ஈ.லட்சுமண் ப்ரசாத் என்பார் (இவர் பிறப்பால் வட இந்தியப் பார்ப்பனர்), இந்திய சமுதாயத்திலுள்ள அனைத்துத் தீமைகளுக்கும் ‘தீண்டாமையே’ அடிப்படை எனப் பாரதிதாசன் தன்னி டம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.2 ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு’ நூலின் முதல்பகுதியில் இந்தத் தலைப்புக் கவிதையுடன் மற்றொரு நெடுங்கவிதையும் மூன்று குறுங்கவிதைகளும் உள்ளன. கடைசிக் குறுங் கவிதையான ‘சேசு மொழிந்த தெள்ளமுது’, கிறிஸ்துவர் களுக்குள்ளும் புகுந்துள்ள சாதி வேறுபாடுகளுக்கும் ஏசுவின் உலகு தழுவிய மாந்தநேயத்துக்குமுள்ள முரண் பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது. ‘ஞாயமற்ற மறியல்’ குறுங்கவிதை மாறுதல் காலகட்டத்திலிருந்த பாரதி தாசன் ‘பாரத மாதா’வை முற்றிலும் மறக்க முடியாத நிலையிலிருந்தார் என்பதைக் காட்டுகிறது.

கோரும் இமயாசல முதல்-தெற்கில்
கொட்டு புனல் நற் குமரி மட்டும் இருப்போர் - இவர்
யாருமொரு சாதியெனவும்-இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் தேவிதனக்கே - நம்
படைமக்கள் எனவும் நம்மிடை இக்கணம்- அந்த
ஓருணர்ச்சி தோன்றிய உடன் - அந்த
ஒற்றுமைஅன்றோ நமக்கு வெற்றியாகிவிடும்
- என்றெழுதினார் பாரதிதாசன்.

1930இல் வெளியிடப்பட்ட மற்றொரு கவிதை நூல் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’. ‘சுயமரியாதை வீரர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட’ இந்த நூலில் பார்ப்பன எதிர்ப்பு, புராண - இதிகாச எதிர்ப்பு, சாதி மறுப்புக் கருத்துகள் நிரம்பி வழிகின்றன. இந்த நெடுங்கவிதையில் பாரதிதாச னின் இந்திய தேசியத்தின் எச்சங்கள் தொடர்ந்து காணப் படுகின்றன. சாதியும் அதனைத் தூக்கி நிறுத்தும் புராணங் களும் இந்திய சமுதாயத்தின் விடுதலைக்குக் குறுக்கீடாக இருப்பதாகக் கூறுகிறார். ஆங்கிலேயன் ஒருவன் கூறுவது ‘சஞ்சீவி பர்வத மூலிகைகளை’ உண்ட வர்களின் காதில் விழுவது போல அமைந்துள்ள வரிகள் இவை:

நாவலந்தீவு நமைவிட்டுப் போகாது
முப்பது முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லோரும் அங்கே தனித்தனிதான்
ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
பேதம் வளர்க்க பெரும் பெரும் புராணங்கள்
சாதிச் சண்டைகள் வளர்க்கத் தக்கஇதி காசங்கள்
கட்டிச் சமுதாயத்தின் கண்ணவித்துத் தா
முண்ணக் கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்
தேன்சுரக்கப் பேசிஇந்து தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்து பூசுரரும் வாழ்கின்றார்
.. .. .. .. .. .. .. ..
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கியே அந்தக்
கற்கள் கடவுள்களாகக் காணப்படும் அங்கே
இந்த நிலையில் சுதந்திரம் போவதெங்கே?
கொந்தளிப்பில் நல்ல கொள்கை முளைப்பதெங்கே?

Fஅன்டcய் எனப்படும் அதிகற்பனை உத்தியினை நவீன தமிழ்க் கவிதைக்குக் கொண்டுவருவதில் ஒரு சாதனை இக்கவிதை. மூட நம்பிக்கையில் மூழ்கித் திளைப்பவ னாக ஒரு ஆணையும் அவனுக்குப் பகுத்தறிவு புகட்டக் கூடியவளாக ஒரு பெண்ணையும் இந்த நெடுங்கவிதை யில் படைத்துள்ளார் கவிஞர். பெண்ணுரிமையும் இங்கே பேசப்படுகிறது:

பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரே, பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து விடுதல் முயற்கொம்பே

எனினும் பிற்கால திராவிட இயக்கச் சொல்லாடல்களில் நிரம்பி வழியும் வர்ணனைகள்-பெண்ணின் உடல் பற்றிய வர்ணனைகள்-இங்கும் காணப்படுகின்றன: ‘வாடாத பூ முடித்த வஞ்சி’, ‘தோகை மயில்’, ‘அச்சுப் பதுமை’, ‘ஆரணங்கு’, ‘கோவை உதடு’ முதலியன. பாரதிதாசனின் புகழ்பெற்ற காதல் கவிதை வரிகள் சில இக்கவிதையிலும் உள்ளன:

கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்
குப்பனது தோளில் குளிர்ந்த மலர் ஒன்றுவிழ
இப்பக்கம் பார்த்தான் வஞ்சி இளங்கையால்
தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க்
‘கட்டிக் கரும்பே,கவனம் எனக்கு
நமதுதே சத்தில் நடக்கின்ற பேச்சில்
அமைந்து கிடக்கு’ தென்றான்

1931ஆம் ஆண்டு நோயேல் அவர்களால் வெளியிடப் பட்ட, பத்துப் பாக்களைக் கொண்ட ‘சுமரியாதைச் சுடர்’ என்னும் நூல், சுயமரியாதை இயக்கத்திலும் திராவிடர் கழகத்திலும் சிந்தனையிலும் செயலிலும் பெரியாருக்கு இணையானவராக இருந்தவரும், 1930ஆம் ஆண்டு டிசம்பரில் நோயேல் தோற்றுவித்த ‘புதுவை முரசு’ ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை மேற்கொண்டவருமான சா.குருசாமிக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.3 சுய மரியாதை இயக்கத்தின் முக்கிய கருத்துகளான கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, மத எதிர்ப்பு, பொது வுடைமை, பார்ப்பன எதிர்ப்பு ஆகியனவற்றை எடுத்து ரைக்கும் இக்கவிதைகள் அனைத்தும் ‘பாரத தேசமே’ என முடிவு பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசியத் திலிருந்து திராவிட/தமிழ் தேசியத்திற்கு பாரதிதாசன் வந்த சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பதிப்பு களில், ‘பாரத தேசம்’ என்பது ‘தமிழ்நாடு’ எனக் கவிஞராலேயே திருத்தப்பட்டுவிட்டது.

எனினும், அவரது ‘பாரத தேசியம்’ மீண்டும் பெரும் உக்கிரத்தோடு வெளிப்படுவதை 1962இல் பார்க்க லாம். இந்திய- சீன எல்லைத் தகராறு காரணமாக இரு நாட்டுப் படைகளுக்கும் போர் வெடித்தபோது, மூட்டப்பட்ட தேசியவாதத் தீயிலிருந்து பாரதிதாசனா லும் தப்ப முடியவில்லை (காமராசரையும் அவரது தலைமையிலிருந்த காங்கிரஸையும் ஆதரித்து வந்த பெரியாரும்கூட, அந்த ஆதரவின் ஒரு பகுதியாக சீன- எதிர்ப்புக் கருத்துகளைக் கூறிவந்தார். இந்தியாவில் பொதுவுடைமை ஆட்சி ஏற்பட வேண்டும் என்னும் ஆவலைத் தனது இறுதிநாட்கள் வரை கொண்டிருந்த பெரியார், சோவியத் ரஷ்யா மட்டுமே உண்மையான பொதுவுடைமை நாடு என்றும் சீனா ஆக்கிரமிப்பு நாடு என்றும் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக் கத்திலிருந்த வலதுசாரிப் பிரிவினரின் கருத்தை ஒட்டி யதாகவே பெரியாரின் நிலைப்பாடும் இருந்தது.). பாரதிதாசன் அச்சமயம் எழுதிய சீன-எதிர்ப்புக் கவிதைகளில் ‘முனையிலே முகத்து நில்’ என்றோர் கவிதை.

பல நூற்றாண்டாய் பாரத நாட்டில்
பாரே இல்லை; அதனால் மக்கள் பால்
அஞ்சாமை என்பதே இல்லாத மிழ்ந்தது;
நாட்டன்பு கட்ட வாய்ப்பே இல்லை

எனத் தொடங்கும் இக்கவிதை பாரதியாரின் இந்திய தேசிய மரபைத் துணைக்கழைக்கிறது:
சீனனை வெருட்ட
சீனன் இந்த நாட்டில் சிற்றடி
வைத்தான் பாரதி இச் சொல் வைத்தார்
வெள்ளைக்காரனை வெருட்டச் சொன்னவர்
கொள்ளைக்காரனான சீனனை
எதிர்த்துப் போரிட இதனைச் சொன்னார்;
இறக்கவில்லை பாரதி இருக்கின்றார் அவர்
சாவதற்கஞ்சோம் என்று சாற்றிப்
புத்துயிர் நம்மிடம் புகுத்துகின்றார்
சீனன் பெற்ற சிறிய வெற்றியைப்
பெரிதென எண்ணிடேல் என்று பேசுவார்
தோல்வியில் கலங்கேல் என்று சொன்னார்

இனி, 1942 முதல் 1950 வரை ஐந்து பகுதிகளாக வெளி வந்த ‘குடும்ப விளக்கு’ என்னும் காவியத்தை எடுத்துக் கொள்வோம். முதல் பகுதி-'ஒரு நாள் நிகழ்ச்சி' 1942இல் வெளியிடப்பட்டது.

இளங்கதிர் கிழக்கில் எழவில்லை
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்
நள்ளிரவு மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தது
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
காட்சியை இருள்தான் கட்டுக் குலைத்தது
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்

அற்புதமான இயற்கை வர்ணனைகளுடன் தொடங்குகிறது இந்தக் கவிதை.

ஆனால்,

சின்னமூக்குத் திருகொடு தொங்கப்
பொன்னாற் செய்த பொடி முத்தைப் போல்
துணி ஒளி விளக்கின் தூண்டுகோலைச்
செங்காந்தளிர்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க்கையில் ஏந்தி

வீட்டுப் பணிகளைச் செய்யத் தொடங்கும் இந்தப் பெண்ணின் உடல் பற்றிய வர்ணனைகள் உடனே தொடங்கி விடுகின்றன. ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ நமக்குக் காட்டுவது ஒரு புதுமைப் பெண்ணை அல்ல; மாறாக, ‘பின் தூங்கி முன் எழும் ஒரு பத்தினிப் பெண்’ணைத்தான். ஒருநாள் முழுக்க அவள் செய்யும் பணிகள் குறித்துக் கவிஞர் எழுதியவற்றின் பொழிப்புரை இது தான்: முகம் கழுவி, வாசல் பெருக்கி, கோலம் போட்டு, யாழினை எடுத்துத் தமிழிசை இசைத்துப் பிள்ளைகளை எழுப்பி, பால் கறந்து, மல்லிக் காப்பி வைத்துக் கண வனை எழுப்பி, அவனைக் குளிக்க வைத்து, அவனுக்கும் பிள்ளைகளுக் கும் காலை உணவு வழங்கி, பிள்ளைகளுக்குச் சங்கத் தமிழ் பாடம் புகட்டிப் பின்னர் பள்ளிக்கு அனுப்பிவிட்டு கடைக்குச் செல்லும் கணவனின் சட்டையிலிருந்த கிழிசலைத் தைத்துக்கொடுத்து அவனை வழியனுப்பி விட்டு, ஒட்டடை அடித்து, தையல் வேலை, தச்சர் வேலை, கொத்தனார் வேலை எல்லாம் பார்த்து, மாமன் மாமயை வரவேற்கும் நல்ல தமிழ்ப் பெண்மணி அவள். மாமன் மாமி கொண்டு வந்த பொருள்களின் நீண்ட பட்டியலில், “திருமணம் வந்தால் வேண்டும் செம்மரத்தில் முக்காலி”.

மாமன்- மாமியை உபசரித்து, மாமனின் நோய்க்கு மருந்து கொடுத்து, மதிய உணவுக்குக் கணவன் வந்தபின் அவனது கடைக்குச் சென்று கணக்கரை மதிய உணவு உண்ண அனுப்பிவிட்டு, கடை வாணிபம் புரிந்து பின் வீடு திரும்பி, தையல் வேலைகளை செய்து, பள்ளியிலி ருந்து திரும்பும் பிள்ளைகளுக்கு உடை மாற்றிவிட்டு, இரவு எட்டுமணிக்கு வீடு திரும்பும் கணவனிடமிருந்து, ‘பிள்ளை வளர்ப்புப் போட்டி’யில் தனக்கும் தன் துணை விக்கும் பரிசு கிடைத்திருப்பதை அவன் சொல்லக் கேட்டு மகிழ்ந்து, மாமன் மாமிக்கும் கணவன் குழந்தை களுக்கும் இரவு உணவு வழங்கி மாடு கன்றுக்கு வைக் கோல் வைத்துவிட்டு, மீண்டும் யாழெடுத்துத் தமிழிசை இசைத்துப் பிள்ளை களைத் தூங்கவைத்து, தங்கள் சொந்த சுகம், குடும்ப நலன் மட்டும் பாராமல், தமிழர் தம் பொதுநலத்திற்கும் தொண்டாற்ற வேண்டாமா என அவள் கேட்க, தனது கடை வருமானத்தில் ஒரு பகுதியைத் தமிழர் முன் னேற்றத்துக்குத் தந்து வருவதாகக் கணவன் தரும் பதிலில் அக மகிழ்ந்து அவனுக்கு இராச் சுகம் தரத் தயாரா கிறாள் இந்தக் குடும்ப விளக்கு!

இரண்டாம் பகுதி- 'விருந்தோம்பல்': 1944இல் வெளியான இப்பகுதியில் ‘பெண் விடுதலை’ பற்றிப் பேசுகிறாள் பாரதிதாசனால் ‘பெண்ணரசி’ என அழைக்கப்படுபவள்:

பெண்கட்குக் கல்விவேண்டும்
குடித்தனம் பேணுதற்கே
பெண்கட்குக் கல்விவேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்விவேண்டும்
உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!
வானூர்தி செலுத்தல் வை
மாக்கடல் முழுதளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே!
சமைப்பதும் வீட்டு வேலை
சலிப்பின்றிச் செயலும் பெண்கள்
தமக்கேஆம் எனக்கூறல்
சரியில்லை ஆடவர்கள்
நமக்கும் அப்பணிகள் ஏற்கும்
என்றெண்ணும் நன்னாள் காண்போம்
சமைப்பது பெண்களுக்குத்
தவிர்க்கலாகாத கடமை என்றும்
சமைத்திடும் தொழிலோ, நல்ல
தாய்மார்க்கே தக்கதென்றும்
தமிழ்திரு நாடுதன்னில்
இருக்குமோர் சட்டந்தன்னை
இமைப்போதில் நீக்க வேண்டில்
பெண்கல்வி வேண்டும் யாண்டும்
எனினும் பாரதிதாசன் படைத்துள்ள இந்த இலட்சியக் குடும்பத்தில் சமைப்பதும் பிற வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வதும் பெண்தான்!
மூன்றாம் பகுதி -'திருமணம்': 1948இல் வெளியான இப் பகுதி,"மெல்லியலாளும் தேனில் துவைத்த செவ்விதழாளு”மான நகைமுத்துவுக்கும் வேடப்பனுக்கும் நடக்கும் திருமணத்தைப் பாடுகிறது.இந்தத் திருமணம் மணமகன் வீட்டில் மணமகனின் பெற்றோர்கள் செல வில் நடப்பதாகக் காட்டப்படுவது ஒரு ‘புதுமை’. பெரியவர் ஒருவர் மணமக்களைப் பார்த்து, இத்திருமணத்திற்கு அவர்கள் இசைவு தருகின்றார்களா என வினவி, அவர்களது இசைவினைப் பெற்ற பின், இருவரும் மாலை மாற்றிக் கொள்ள, திருமணம் இனிதே முடிவ டைகின்றது. அதற்கு முன் மணவீடு நோக்கி மணமகள் வருவதைக் கவிஞர் வர்ணிக்கிறார்:

மணவீடு நோக்கி வந்தனர்,என்னே!
அணி அணியாக அணியிழை மங்கையர்
துணையோடு நன்மலர் முக்காலி சுமந்து!
நகைமுத்தை மலர்பெய் நன்னீராட்டிக்
குறைவற நறும்புகை குழலும் கூட்டு
மணக்குநெய் தடவி வாரிப் பின்னி
மணியிழை மாட்டி, எம் கண்ணாட்டிக்கு

திருமணம் முடிந்ததும் மணமக்கள் சோலையொன்றுக்குச் செல்கின்றனர்.

“அசையும் அவள் கொடியிடையை இடது கையால் அணைத்தபடி வேடப்பன் செல்கின்றான்”.

நான்காம் பகுதி ‘மக்கட் பேறு’ 1950ஆண்டு வெளி வந்தது: நகைமுத்துவுக்கும் வேடப்பனுக்கும் குழந்தை பிறக்கிறது. குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இரண்டும் சமமதிப்புடையவை எனத் தான் கருதுவதாக ‘மலர்க்கொடி’, அதாவது நகைமுத்து இயம்புகிறாள்.

‘குடும்ப விளக்கா’ன அவளது மாமி, தங்கத்துப் பாட்டி குழந்தைக்குத் தாலாட்டுகிறாள்:

ஆட்டனத்தியான
அருமை மணவாளனையே
ஓட்டப் புனல் தள்ளி
உள் மறைத்துக் கொண்டு செல்லப்
போது விழி நீர் பாயப்
போய் மீட்டுக் கொண்டுவந்த
ஆதி மந்திக் கற்புக்
கரசியவள் நீதானோ?

‘கற்பு’ என்னும் விழுமியம் பாரதிதாசனால் கடைசிவரை வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஐந்தாம் பகுதி-"முதியோர் காதல்" 1950இல் வெளிவந்தது:

“இவ்வுலகில் அமைதியினை நிலை நாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு.பெண்களை ஆடவர்கள்
எவ்வகையிலும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்”
எனக் கவிஞர் பாடுகிறார்.

ஆனால் பிறிதோரிடத்தில் ‘குடும்ப விளக்கா’க ஒளிர்ந்த தங்கத்துப்பாட்டி கூறுகிறாள்:

தொப்பென்ற ஓசை கேட்டால்
துயருறும் என்றும்,
உப்பொன்று குறைந்தால் உண்ணல்
ஒழியுமே என்றும்,
ஒப்பெனில் ஒப்பாவிட்டால்
உடைபடும் உள்ளம் என்றும்
தப்பென்றும் இன்றி என்றன்
தமிழனைஅன்பாற் காத்தேன்
தற்காத்துத் தற்கொண்ட
தான் காத்துத் தகைமை சான்ற
சொற்காத்துச் சோர்விலாளே
பெண் என்று வள்ளுவர்தாம்
முற்சொன்ன படியே என்றன்
முத்தினைக் காத்து வந்தேன்

அதாவது தன்னையும் காத்துத் தன் கணவனையும் காக்கும் கடமை பெண்ணுக்கு மட்டுமே உரியது என்னும் வள்ளுவர் நெறிதான் இங்கு பெண் விடுதலையாகப் பேசப்படுகிறது!

‘குடும்ப விளக்கில்’ காட்டப்படும் நகைமுத்து-வேலப்பன் திருமணமும் சரி, 1949இல் வெளிவந்த ‘திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்’ கவிதையில் போற்றப்படும் திருமணமும் சரி, சாதி மறுப்புத் திருமணமாகத் தோன்று வதில்லை. மாறாக, பார்ப்பனச் சடங்குகள் ஏதும் இல்லா மல் நடத்தப்படும் திருமணம்; பெரியார் பயன்படுத்திய ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்னும் சொற்றொடர் பயன் படுத்தப்படுகிறது. எனினும் பெரியார் எழுதிய ஒப்பந்த வாசகங்கள் இல்லை. மாறாக, தமிழ்ச் சான்றோர் எனப் படுவோர் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். ஆரியப் பண்பாட்டுக்கு எதிராகத் திராவிடப் பண்பாடு உயர்த்திச் சொல்லப்படுகிறது.

இந்த முத்தமிழ் அறிஞர் கேட்கிற

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’ எனப் பேசும் திருவள்ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?

‘திராவிடர் புரட்சித் திருமணத் திட்ட’த்தில் திருமணம் முடிந்ததும், முத்தமிழ் அறிஞர் குறள்கள் ஒன்றிரண்டை மணமக்களுக்கு அறவுரைகளாக நல்குகிறார்:

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
தன்னையும் தக்கபடி காத்துக் கொள்ளல் வேண்டும்
தன் கொழுநன் தன்னையும் காத்திடல் வேண்டும்

பாரதிதாசன் போற்றும் தமிழ்ப் பண்பாட்டின் மையக் கூறாக விளங்குவது ‘கற்பு’. ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ போன்ற பல்வேறு படைப்புகளில் ‘கற்பு’ வலியுறுத்தப் படுகிறது. ‘கற்பு’க்கு பாரதிதாசன் கூறும் வரைவிலக் கணம் இதுதான்: மனைவியின் உடலைத் தொட அவளது கணவனுக்கு மட்டுமே உரிமை உள்ளது; மற்றவர்கள் யாரேனும் அவளைத் தீண்டினால் போய் விடும் அந்தக் ‘கற்பு’. அதுமட்டுமல்ல, அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவள் தன்னுணர்வு அற்ற நிலையில் அவளை யாரேனும் வன்புணர்ச்சி செய்து விட்டாலோ- அப்போதும்கூடப் போய்விடும் ‘கற்பு’. ‘தமிழச்சியின் கதை’ கூறும் செய்தி இதுதான்.

‘கண்ணகி புரட்சிக் காப்பியத்தில்’ , கண்ணகி கூறுவதாக பாரதிதாசன் எழுதுகிறார்:
.. .. என் கண்ணாளன்
வலதுகையால் முதல் ஏந்தும் இடது கொங்கை
விம்மல்ஏன் அதனைப் பிய்த்தெறிந்தாள்’

“கொலையுண்டோன் மனைவி ஒரு கற்பினுள் மிக்காள்” என்பது பாரதிதாசனின் வர்ணனை. கனகவிசயனின் தலையில் ஏற்றிக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப் படும் “கல்லினில்அக் கண்ணகியைக் கற்பின் தாயைக் கண்ணுறுதல் வேண்டும் நாம் “ என்கிறார் கவிஞர். ‘பெண்கள் காமம் கழிக்கும் கலயமா?’ என்னும் தலைப்பில் பாரதிதாசன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இது எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்னும் குறிப்பு, பாடபேதங்களும் அச்சுப் பிழைகளும் மலிந்த முழுத் தொகுப்பில் (கவிஞர் சுரதாவின் மகன் கல்லாடனும் திருநாவுக்கரசு என்பாரும் தொகுத்தவை) இல்லை. இங்கு ரஷியர்களை விளித்து பாரதிதாசன் எழுதுகிறார்:

பெண்கள் பற்றி நீ பேசும்
பேச்செல்லாம் முடைவீசும்
எண்ணங்கெட்ட உருசியனே
ஏதுங்கெட்ட உருசியனே

காமம் கழிக்கும் கலயம் என்றாய்
காதற் பெண்கள் நிலை மறந்தாய்
தாய்மை என்னும் பண்பு கொன்றாய்
தலை கொழுத்தே கெடுகின்றாய்

ஒருவனுக்குக் கொருத்தி வேண்டும்;
ஒருவனுக்கொருவன் வேண்டும்’
இருவர்தாமும் ஒன்றுபடவே
இன்பத்தை அடைய வேண்டும்

ஆடவன் தனி இருத்தல்;
அது, தான் தனை வருத்தல்
பேடை அன்னம் இணை பிரிதம்
பெற்ற உயிர் பிரிதல் அன்றோ?

மணவாழ்க்கை வேண்டாம் என்றாய்
மாட்டு வாழ்க்கை வேண்டும் என்றாய்
கணந்தோறும் இருட்டறைக்குக்
கட்டுச்சோறு கட்டுகின்றாய்

சோவியத் ரஷியாவில் ஏற்பட்ட மாற்றம் பற்றிப் பெரியார் கூறிய கருத்துகளுக்கு இவை நேர் எதிரானவை என்பதைப் பின்னர் காண்போம்.

பாரதிதாசனை ‘புரட்சிக் கவிஞரா’க்கியது வடமொழிப் படைப்பான ‘பில்ஹணீய’த்தை உருமாற்றி அவர் யாத்த ‘புரட்சிக்கவி’ (1937) என்னும் நெடுங்கவிதை. அற்புத மான காதல் கவிதையாகப் போற்றப்படும் இதில்,

நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக்
கோலமுழுதும் காட்டிவிட்டாற் காதல்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?

என்னும் வரிகள் பாரதிதாசன் அன்பர்களால் மிகவும் போற்றப்படுபவை.

இக்கவிதையில் இயற்கை வர்ண னைகள் இருந்தாலும், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், நால் வருண முறை ஆகியவற்றை எதிர்த்துப் பாடினாலும், ‘வேல்விழி வேலுடையாய்’, ‘ஏந்திழை’, ‘பூங்கொடி’, ‘மலர்க்கூட்டம்’,‘சேல்விழியாள்’,‘மடமயிலே’எனப் பெண்ணை வர்ணிக்கும் போக்கு சற்றும் குறையவில்லை.

பாரதிதாசன் 1938இல் எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் பாட்டு’ (எல்லாரும் வாருங்கள்), பல்லாயிரக்கணக்கான தமிழர் களைத் தட்டியெழுப்பிய பாட்டு என்பதில் அய்ய மில்லை. “மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்னும் வரிகள் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக இன்றும் பாடத் தக்கவைதான். ஆயினும், இந்த வரிகளுக்கு அடுத்து தமிழ் மொழியைத் தாயாக உருவகிக்கும் வரிகளும் வருகின்றன:

‘ஏங்கவிடோம் தமிழ்த்தாய்தனையே உயிர்
இவ்வுடலை விட்டு நீங்கும் வரை’

பெரியாரின்/சுயமரியாதை இயக்கத்தினரின் சொல்லாடல்களில் நாடோ, தேசமோ, மொழியோ பாலியல் தன்மை ஆக்கப்பட்டது இல்லை. பெரியார் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தமிழ்மக்களை ஒன்றுதிரட்டி, தமிழக வரலாற்றில் முதன்முறையாக ‘தமிழ் தேசியம்’ என்பதை (‘தேசியம்’ என்பதை அதனுடைய ‘ நவீனகாலப் பொருளில்’ பயன் படுத்துகிறேன்) முகிழ்க்கச் செய்தது. தாமரைக்கண்ணி அம்மையார், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழார்வ லர்கள்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டச் சொல்லாடல் களில் ‘தமிழன்னை’, ‘கன்னித்தமிழ்’ போன்ற சொற் களைக் கொண்டு வந்தனர். இந்த மரபோடு பாரதிதாச னும் ஒன்றிவிடுவதைப் பார்க்கின்றோம்.

மேலும், தமிழைத் தாயாக உருவகித்த பாரதிதாசன், அதனை எதனுடன் ஒப்பிடுகின்றார் என்பதைப் பார்ப்போம்:

‘மங்கை ஒருத்தி தரும் சுகமும், எங்கள்
மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்’

தமிழை ஒப்பிடுவதற்குக் கவிஞரால் அதிகபட்சம் பார்க்க முடிந்தது ‘மங்கை ஒருத்தி தரும் சுகம்’ தான்!

பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்திற்குள்/திராவிடர் கழகத்திற்குள் வந்த பிறகு இயற்றப்பட்ட பாக்கள் பெரும்பாலானவற்றில் அவ்வியக்கக் கருத்துகள் ஒரு பொதி போல் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பொதியில் ‘பெண் விடுதலை’, ஆண்- பெண் சமத்துவம்’,‘விதவைத் திருமணம்’, பெண் கல்வி’ போன்ற கருத்துகளும் அடக்கம். எனினும் இவை பெண் பற்றி, பெண் விடுதலை பற்றிப் பெரியார் கொண்டிருந்த கருத்து களிலிருந்து வேறுபட்டு நிற்கக் காரணம் ‘கற்பு’ பற்றி இருவரும் கொண்டிருந்த வெவ்வேறு புரிதல்களாகும்.

பெரியார் கூறினார் ‘கற்பு என்கின்ற வார்த்தையைப் பாகு பதமாக்கிப் பார்ப்போமேயானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது, படி- படிப்பு என்பது போல், கல்-கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகிறது. அன்றியும், ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை’ என்கிற வாக்கியப்படி பார்த்தால், ‘கற்பு’ என்பது சொல் தவறாமை - அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்துக்கு விரோதமில்லாமல் நடப்பது- என்கிறதான கருத்துகள் கொண்டதாய் இருக்கின்றது.

அதைப் பகாப் பதமாக வைத்துப் பார்த்தால், மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்குப் பொருளைப் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற பொருள்களே காணப்படு கின்றன. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப் பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டா லும்- அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்களே காணக் கிடைகின்றன.

அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்குக் கிரமமான கருத்துப் பார்க்கும்போது, இந்த இடத்தில் சுத்தம்-அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகக் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும், கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படு கிறது. அதாவது ‘சேஸ்ட்டிடி’ (Cகச்டிட்ய்) என்கின்ற ஆங்கில வார்த்தைப்படி பார்த்தால் ‘வர்ஜினிட்டி’ (Vஇர்கினிட்ய்) என்பதே பொருளாகும். அதை, அந்தப் பொருளின்படி பார்த்தால், இது ஆணுக்கென்றோ பெண்ணுக்கென்றோ சொல்லப்படாமல், பொதுவாக மனித சமூகத்திற்கே-எவ்வித ஆண்- பெண் புணர்ச்சி சம்பந்தமே சிறிதுமில் லாத பரிசுத்த தன்மைக்கே உபயோகப்பட்டு இருக்கின் றது என்பதைக் காணலாம். ஆகவே, கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல என்பதும் அதுவும் ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு, எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்கின்ற கருத்து கொள்ளக்கூடியதாயுமிருக்கிறது.

பெண்ணின் உடல் ஆணாதிக்கம் நிலவும் சமுதாயங்கள், தேசங்கள் எல்லாவற்றிலுமே குறிப்பிட்ட சமுதாயத்தின், தேசத்தின், இனத்தின் நேர்மைக்கு, தூய்மைக்கு, ஒழுக்கத் திற்குச் சான்று பகரக்கூடியதாகவே கருதப்பட்டு வந்துள்ளது. அதனால்தான், தேசத்தின் எல்லைகளையும் அதன் அடையாளத்தையும் போலவே பெண்ணின் உடலும் பாதுகாக்கப்பட வேண்டியதாகக் கருதப்படுகிறது. அக மண முறை என்பதும் கற்பு என்பதும் சாதியையும் ஆணாதிக்கத்தையும், அதாவது பெண்ணின் உடல்மீது ஆண் உரிமை கொண்டாடும் பாத்யதையை பாதுகாக்க உருவாக்கப்பட்டவையே ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்னும் திருமண ஏற்பாடு இல்லாவிட்டால் ஒழுக்கம் போய்விடும் என்னும் கருத்தை மறுக்கிறார் பெரியார்:

‘திருமணத் தத்துவம் போய்விட்டால் ஒழுக்கம் போய்விடும்’ என்று பூச்சாண்டி காட்டுகிறார்களே, ஆண்கள் விபச்சாரம் செய்ய முடியாவிட்டால் பெண்கள் மட்டும் எப்படிக் கெட்டுப் போய்விடுவார்கள்? அறிவிருந்தும் பெண்கள் ஏன் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும்?

‘கற்பு’, ‘திருமணம்’ ஆகிய இரண்டுமே தனியுடைமை யுடன் தொடர்புடையவை எனப் பெரியார் விளக்கம் கூறுகிறார்:

என்றைக்குத் தனக்கென்று பொருள் சேமித்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ, அதன் பிறகுதான் திருமண முறை யும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகு தான் வெளியே பொருள் தேடிச் செல்லும்போது, தான் சேமித்து வைத்த பொருளைப் பாதுகாக்கவும் தான் வந்தபோது தனக்கு சிரமபரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஒரு ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்ய முன்வந்திருக்கமாட்டான். எனவே இவ் வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக் கிறது. முதலில் பெண் ஒருவனது சொத்துக்குப் பாதுகாப் பாக அமைந்த பிறகு, அவனுக்குச் சொந்தமானாள். பிறகு, அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசிய மும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்ததில்தான், தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கே பிறந்தாக வேண்டும் என்ற காரணத்தால் அவளைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருஷனை நாடாமல் இருக்கும்படி செய்யவும் ஆன நிர்பந்தம் ஏற்பட்டது. அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பின் அனுபவிக்கப் போகும் வாரிசு, தனக்கே பிறந்ததாக- தன் இரத்ததிலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின்பாற் பட்டதே ஆகும்... இயற்கை இன்பத்திற்காக ஒரு பெண் ணுடன் கலவி செய்வது என்பது போய், தனக்கு ஒரு வாரிசு உண்டாக்கிக் கொள்வதற்காக ஒருத்தியோடு கூட வேண்டிய அவசியம் என்கிற நிலை ஏற்பட்டது...
.
இதன் காரணமாகத்தான், தன் மனைவியைப் பிறர் புணரக் கூடாது என்று ஒருவன் நினைக்கிறானேயொழிய, தான் தொடும் பொருள் பிறரால் தொடப்படாமல் பரிசுத்த மாகயிருக்க வேண்டும் என்ற ஆசையால் அல்ல. அப்படிப்பட்ட ஆசையுள்ளவனாயிருந்தால் ஒருவன் ஹோட்டலுக்குச் செல்லமாட்டான்; மார்க்கெட்டையும் எட்டிப் பார்க்க மாட்டான்.7

மேலும், பண்டைத் தமிழகத்தில் சூத்திரர்களுக்குத் திரு மணம் என்னும் ஏற்பாடே இருந்ததில்லை என்கிறார் பெரியார்:தொல்காப்பியத்தில் கூறப்பட்டு இருக்கிறதே, “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப” என இருக்கிறதே!. “மேலோர் மூவர்க்குப் புணர்த்த கரணம் கீழோர்க்காதிய கரணமும் உண்டே” என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள் ளது. இவற்றில் இருந்தெல்லாம் சூத்திரர்களுக்குத் திரு மணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. பெரும்பகுதி மக்களைச் சூத்திர னாக்க-உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் - பெண் களை அடிமையாக்க ‘கலியாணம்’ என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

‘திராவிடர் திருமணம்’ பற்றிப் பெரியாரும் சில கருத்து களைக் கூறியுள்ளார். ஆனால், அவை பாரதிதாசனின் கருத்துகளை ஒத்தவை அல்ல: நாம் திராவிடர்; நமது திரு மணம் திராவிடர் திருமணம்தான். ஆனால், இந்த முறை யில்தான் திராவிடன் பழங்காலத் திருமணம் நடந்த தென்றோ அல்லது இப்படியேதான் திராவிடர் எதிர் காலத்திலும் திருமணங்கள் நடத்த வேண்டும் என்றோ நான் முடிவு கட்டவில்லை. இது திராவிடர் திருமணம் என்றாலும் நான் இதை 1946ஆம் ஆண்டு (தற்கால நிலைக்கேற்ப) திருமணம் என்றும், இதுவே இன்று எல்லா உலக மக்கள் திருமணமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுகிறேன். ஆனால், இது மாறாமல் இப்படியே இருக்கவேண்டும் என்று நான் சொல்லுவ தில்லை. 1946ஆம் வருடத்தியது என்று சொல்லுவதா னால் 1950க்கும் இருக்கவேண்டும் என்பது கருத்தல்ல. இந்த மாற்றம் நமது சவுகரியத்தையும் அறிவையும் மனிதத்தன்மையையும் பொதுநலத்தையும் குறிக் கொண்ட மாற்றமாகும்.

இதற்கு மாறாக, பாரதிதாசன் கூறும் ‘திராவிடர் திருமண முறை’ ஒரு வாய்பாடு/சூத்திரம் போன்ற மாறாத்தன்மை யுடையதாகும். பெரியார் காலத்தில் சுயமரியாதைத் திரு மணம் என்பது படிநிலை வளர்ச்சி பெற்றது; பார்ப்பனர் செய்துவைக்கும் சடங்குகளில்லாத திருமணம் என்பதிலி ருந்து தொடங்கி, சாதி மறுப்புத் திருமணம், தாலி யில்லாத திருமணம், விதவை மறுமணம் எனப் பல்வகை வளர்ச்சி கண்டது. ஆனால் இன்றோ பார்ப்பனர் இல்லா மல், ‘மங்கல நாண்’ கட்டி நடத்தப்படும் அகமணங்கள் கூட ‘சுயமரியாதைத் திருமணங்கள்’, ‘தமிழர் திருமணங்கள்’ என விளம்பரப்படுத்தப்படுகின்றன.

பாரதிதாசன் கூறும் ‘திராவிடர் திருமண’த்தில் அறவுரை களாகக் கூறப்படும் குறள் நெறிகளையும் பெரியார் கேள்விக்குட்படுத்துகிறார்: உண்மையான சமத்துவத் துக்கு மதிப்புக் கொடுப்போமேயானால்- உண்மையான அன்பு இருக்குமேயானால்- பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர, மற்ற காரியங்கள் இரு பாலாருக்கும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது உறுதி.

தவிர, ‘தற்கொண்டான்’ என்பதற்கு, அன்பைக் கொண்ட வன் என்கின்ற பொருளை வருவித்துக்கொள்வது இங்கு வள்ளுவருக்குக் காப்புச்செய்யக் கருதியதாகுமேயல்லா மல், குறளுக்கு நீதி செய்ததாகது. அன்றியும், பெண்ணிட மிருந்து ஆண் அறிய வேண்டிய குணம் ஒன்றுமில்லை யென்பதும், அப்படியிருந்தால்தான் ‘தற்கொண்டான்’ என்பதாகச் சொல்லலாம் என்பதும் பொருத்தமற்ற தென்றே சொல்லலாம்.

அதுபோலவே, ‘தொழுதெழுவதையும்’ ஆணுக்கு குறிப் பிட்ட நியதி இல்லையென்பதும் பொருத்தமற்றதே யாகும். பெண்ணைக் கொள்ள ஆணுக்குரிமையிருந் தால், ஆணைக் கொள்ள பெண்ணுக்கு உரிமை வேண் டும். ‘ஆணைத் தொழுதெழ வேண்டும்’ எனப் பெண் ணுக்கு நிபந்தனையிருந்தால், ‘பெண்ணைத் தொழு தெழ வேண்டும்’ என்று ஆணுக்கு நிபந்தனை இருக்க வேண்டும். இதுதான் ஆண்- பெண் சரிசம உரிமை யென்பது. இ•தில்லாது எதுவானாலும் சுயநன்மையும் மூர்க்கமுமேயல்லாமல், அன்பு அல்லவென்றே சொல்லிவிடுவோம்.

‘குறள் நெறி’க்கு காப்பு செய்யத் தன்னிடம் வாதாடும் குறளன்பருக்குப் பெரியார் பதிலுரைக்கிறார்: தவிர, நமது தோழர் அவர்கள், குறளில் ஆண்களுக்கும் வள்ளு வர் கற்பு கூறியிருப்பதாகச் சொல்லுகின்றார். இருக்கலா மானாலும், பெண்களுக்குக் கூறியது போலில்லை யென்றுதான் கூறுகிறோம். அதாவது, ஆண்களின் கற்புக்கு நமது தோழர் அவர்கள் இரண்டு குறட்பாக் களை எடுத்துக்காட்டாகக் கூறியிருக்கிறார்.அவை,

“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”

“நிறை நஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்”

இவைகளை ஆண்கள் கற்பை வலியுறுத்தக் கூறியதாகக் கூறுகிறார் போல் காண்கின்றது. இவைகள் அதற்காகக் கூறப்பட்டவையல்ல என்பது நமது அபிப்ராயம்.

அதாவது, முதற் குறளுக்கு, ‘காவலினால் பெண்கள் கற்பாயிருப்பதால் பயனில்லை, பெண்கள் தாங்களா கவே கற்பாயிருக்க வேண்டும்” என்பதுதான் கருத்தாக இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இரண்டாவது குறள், ‘விலைமாதரைப் புணர்கின்ற வர்க்குக் கூறிய பழிப்புரை’யேயல்லாமல், காதல் கொண்ட மற்ற பெண்களைக் கூடித் திரியும் ஆண்களைக் கூறியதல்ல வென்பது நமது அபிப்ராயம். நிறை என்கின்ற வார்த்தை மாத்திரம் காணப்படுகின்றதே தவிர, நிர்பந்தமில்லை.

ஆகவே, இருபாலருக்கும் சம நிபந்தனை குறளில் இல்லை என்பதற்கு மற்றும் பல குறட்பாக்களையும் நாம் கூறக் கூடும்.

பாரதிதாசன் கருத்துப்படி தமிழர்/திராவிடர் திருமணம் என்பது (‘குடும்ப விளக்கு’, ‘திராவிடர் புரட்சித் திரு மணத் திட்டம்’ போன்றவை காட்டுவதுபோல), பார்ப் பனச் சடங்குகள் தவிர்க்கப்பட்டு, தமிழர்களால் தமிழ் மறை (திருக்குறள்) ஓதி நிகழ்த்தப்படுவதும் மனை மாட்சியாக மகப்பேறு அடைதலும் ஆகும். ‘திருமணம்’ என்னும் ஏற்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் ‘புனிதம்’ என்பதைப் பெரியார் மறுக்கிறார்:

நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டது முதற்கொண்டே இத்திருமண முறைகளைப் பற்றி ரொம்பவும் கவலை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றேன். சிந்திக்கச் சிந்திக்க, இத்திருமண முறையையே ஒழித்துவிடலாமா என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. திருமண முறை கூடாதது; ஒழிக்கப்பட வேண்டியது என்று ஒன்றிரண்டு கூட்டங்களில் பேசியதோடு, பத்திரிகையிலும் எழுதி யிருக்கிறேன். திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகிறார் கள். இப்படிக் கருதுவதற்கெல்லாம் ஆதாரமே இல்லை என்றும் பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சிதான் இத்திருமண முறை என்றும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

‘திருமணம்’ என்கின்ற ஏற்பாட்டுக்கு எதிர்காலத்தில் தேவையில்லாமல் போகலாம் எனக் கூறும் பெரியார், ரஷியர்களை இகழும் பாரதிதாசனுக்கு மாறாக, ரஷியாவில் ஏற்பட்ட மாற்றங்களைப் புகழ்கிறார்:

நான் ரஷ்யாவில் பார்த்தேன். திருமணம் என்ற முறையின் அமைப்பும் ஏற்பாடும் இல்லாமலேயே வாழ முடியும் என்பதை. இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். இந்த முறையும் அங்கு அமுலில் வைத்தி ருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அந்நாட்டு மக்கள் சோற்றைப்பற்றிக் கவலையில்லாமல் வாழ்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கை ஆண்- பெண் உறவிலும் நடத்துகிறார்கள். சொத்து, வாரிசு உரிமை இருப்பதால்தான் நம்முடைய சமுதாயத்தில் கட்டுப் பாடு உள்ள குடும்பமுறை ஏற்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதைத்தான் உயர்ந்த முறை என்று கூறி மதவாதிகள் வாழ்கிறார்கள். காதல் என்பதற்கும் கலியாணம் என்ற ஏற்பட்டிற்கும் எவ்விதத்திலும் சம்பந்த மில்லை. கலியாணம் செய்துகொண்ட பெண்ணிடம் தான் காதல் உணர்வு உண்டாக வேண்டும் என்ற இயற்கை நியதி இல்லை. தான் கலியாணம் செய்து கொள்ளாத பெண்ணிடம்கூட காதல் ஏற்பட்டு விடலாம்.

பெண்களை வர்ணிப்பது பற்றிப் பெரியார் கூறுகிறார்: பெண்கள் பெருமை, வருணனை ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயங்கள், சாயல் ஆகியவை களைப் பற்றி 50 வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர் களால் ஏற்படும் பயன், சக்தி, திறமை பற்றி ஒருவரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழ்வது ஆகியவைகள் பெண் கள் சமுதாயத்திற்கு அவமானம் இழிவு, அடிமைத்தனம் என் பதை ஆயிரத்தில் ஒரு பெண் ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்ல முடியுமா?

பெண்களின் அழகை மெச்சுவதிலும், சாயலைப் புகழ் வதிலும் தொல்காப்பியரிலிருந்து தொடர்ந்துவரும் தமிழ் இலக்கிய மரபிலிருந்து பாரதிதாசனால் தன்னை முற்றிலு மாக முறித்துக் கொள்ள முடியவில்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறினோம். குடும்பம், திரு மணம் என்கின்ற ஏற்பாடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டக்கூடிய காலம் இன்னும் வரவில்லை என்றாலும் அவற்றை ஜனநாயகப்படுத்துவது இன்றும் சாத்தியமே. ஆனால் இலட்சியத் திருமணம், இலட்சியக் குடும்பம் ஆகியன பற்றிய பாரதிதாசனின் கற்பிதங்களிலும் கற்ப னைகளிலும் ஆண்-பெண் சமத்துவம்கூடக் காணப்படுவ தில்லை. குஞ்சிதம்-குருசாமி இணையர், பாரதிதாசனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்களில் முதன்மை யானவர்கள்; சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைச் சொல்லிலும் செயலிலும் முழுமையாகக் கடைப்பிடித்த வர்கள். இவர்களை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு ஒரு இலட்சியக் குடும்பத்தை அல்லது இலட்சிய இணையரைப் பாடுபொருளாகக் கொண்ட நெடுங்கவிதையொன்றை இயற்ற பாரதிதாசனால் ஏன் முடியவில்லை?

சுயமரியாதை/திராவிட இயக்க வரலாற்றில் இரு போக்குகளைக் காண முடிகின்றது. ஒன்று, ‘சுய மரியாதை’ என்பதை மையக்கூறாகக் கொண்ட போக்கு (பார்ப்பனர்- பறையர், ஆண்- பெண், பணக்காரன் -ஏழை, படித்தவன்- படிக்காதவன் என்னும் பேதங்களை ஒழித்துக் கட்டுதல்); மற்றொன்று, சுயமரியாதை/திரா விட இயக்கப் போராட்டங்களின் பயனாக விளைந்த அரசியல், பொருளாதார நன்மைகளைத் துய்ப்பதற்காக மேற்சொன்ன கொள்கைகளை மேம்போக்காக ஏற்றுக் கொண்டவர்கள் கடைபிடித்த கருத்துநிலைப் போக்கு. மேற்தோற்றத்துக்கு பெரியாரின் சுயமரியாதைக் கருத்து களைப் போலக் காட்சியளிக்கும்.

ஆனால் சாரத்தில் தமிழுணர்வு, தமிழ்/திராவிட தேசியம் என்னும் பெயரால் சமுதாயத்தின் பழமைக்கூறுகளைத் தக்க வைத்துக் கொள்ளும் போக்கு இது. இந்தப் போக்கின் மையக் கூறாக இருந்தது/இருப்பது ‘மானம்’ என்னும் கருத்தாகும். சங்ககாலத்திலிருந்த சமுதாய, அரசியல், பொருளியல், பண்பாட்டு வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு தட்டையான தமிழர் வீரத்தையும், தமிழர் மானத்தையும்,தமிழ்ப் பெண்களின் ‘கற்பு’ என்பதுடன் இணைக்கும் கருத்துநிலையே இது. எனவே தான் பெரியாரை ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய வாதிகளுக்கும் தமிழுணர்வாளர்களுக்கும் பாரதிதாசன் உவப்பானவராக இருப்பதில் வியப்பில்லை.

பின் குறிப்பு:

இக்கட்டுரையை எழுதி முடித்தவுடன் கவிஞர் இன்குலாப்புடன் தொடர்பு கொண்டேன். ‘திருமணம்’ என்னும் ஏற்பாடே வேண்டாம் என்று பாரதிதாசன் ‘அமைதி உலகம்’ என்னும் கவிதையொன்றில் எழுதி யிருப்பதைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தன் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாக இன்குலாப் கூறினார். இக்கவிதை, 1964இல் வெளிவந்த பாரதிதாசன் ‘பன்மணித்திரள்’ என்னும் தொகுப்பில் இருப்பதாகவும் கூறினார். கவிஞர் சுரதாவின் மகனும் திருநாவுக்கரசு என்பாரும் தொகுத்து வெளியிட்டுள்ள ‘முழுத் தொகுப்பில்’ இந்தக் கவிதை இடம் பெறவில்லை. “ஒருவனுக்கும் ஒருத்திக்கும் வாழ்க்கையில் உடன் பாடென்னும் திருமணம் ஒழியவேண்டும்” என்னும் வரிகள் இக்கவிதையில் உள்ளன.

‘சுயமரியாதைத் திருமணம்: வரலாறும் தத்துவமும்’ என்னும் நூலில் கி.வீரமணி இவ்வரிகளை மேற்கோள் காட்டுகிறார். பாரதிதாசன் எந்தச் சூழலில், எந்த ஆண்டில் இந்தக் கவிதையை எழுதினார் என்னும் விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. எனினும் அவரது ஒட்டுமொத்தமான படைப்புகளின் உலகக் கண்ணோட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்டுத் தனியாக நிற்கும் இக் கவிதை யொன்றினை மட்டும் கொண்டு ‘திருமணம்’, ‘ஆண்- பெண் சமத்துவம்’ ஆகியவற்றைப் பொருத்தவரை அவர் பெரியாரின் கருத்துகளுக்கு நெருக்கமாக இருந்தார் எனச் சொல்ல முடியது. ‘அமைதி உலகம்’ கவிதையைச் சுட்டிக் காட்டி, பாரதிதாசனுக்குக் காப்புச் செய்ய முயல்வது, காந்திக்கும் பெரியாருக்கும் நடந்த ஒரு சந்திப்பைத்தான் நமக்கு நினைவூட்டுகிறது.

பார்ப்பனர்களை வெகுவாகக் கண்டித்துப் பேசிய பெரியாரிடம் காந்தி கேட்கிறார்: “பார்ப்பனர்களில் நல்லவர்களே இல்லையா?”. பெரியார் சொல்கிறார்: “எங்களுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்களேன்”. காந்தி நல்ல பார்ப்பனருக்கு எடுத்துக்காட்டாக கோகலேவைக் குறிப் பிடுகிறார். பெரியார் தனக்கே உரித்தான நகைச்சுவை யுணர்வுடன் கூறுகிறார்: “மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு நல்ல பார்ப்பனர்தான் தெரிகின்றார் என்றால், எங்களைப் போன்ற சாமானியர்கள் கண்ணுக்கு அத்தகையவர்கள் எப்படித் தென்படுவார்கள்?”. 1977இல் வெளிவந்த பாரதிதாசனின் ‘காதல் பாடல்களி’லும் பெண்களின் அவயங்கள் பற்றிய அவரது வழக்கமான வர்ணனைகள் இருக்கின்றன.


- நன்றி . புதுவிசை

6 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  Reject everyone including Bharathiar,Bharathidasan
  and proclaim that
  Periyar is the only thinker,poet,writer,philosopher
  in the entire Tamil civilization from the days of Tamil Sangam
  to 21st century.Perhaps that is
  what you and folks like sv rajadurai want to say.One problem
  is sv rajadurai will say that besides periyar, me and v.geetha
  are the only thinkers in the entire tamil civilization.You can
  grant that to him, secretly, lest other periyarists should object.

 2. Anonymous said...

  /பாரதியின் இந்துத்துவ மற்றும் பார்ப்பனீயக் கறைபட்ட பிரதிகள் மீது மரபுமார்க்சியர்கள் மட்டுமில்லை, பின்நவீனத்துவக் கலகக்காரர்கள் கூட விமர்சனங்களை முன்வைத்ததில்லை என்பதையும் கணக்கிலெடுத்துக்கொண்டு நாம் வாசிக்கவேண்டும். /

  நான் வாசித்தவளவில் ராஜ் கெளதமன், முருகேசபாண்டியன், அ.மார்க்ஸ் போன்ற்வர்கள் பாரதியாரை விமர்சனக்கண்ணோட்டத்தில் அணுகியிருக்கின்றார்கள். இன்னும் 'பாரதி யார்?' போன்ற (பெயர் நினைவுக்கு வராத வேறு சில புத்தகங்களும்) வந்திருக்கின்றனவே?

 3. ஓகை said...

  நல்ல கட்டுரை. நன்றி சுகுணா திவாகர்.

 4. Thamizhan said...

  பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் மிகக்குறைவே.அதைவிட அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள்,வாழ நினைப்பவர்கள் அரிதென்றே சொல்லலாம்.
  தந்தை பெரியார் எளிதாகப் புரிந்து கொள்ளச் சொன்னார் பெண்ணுரிமை என்று வரும்போது உன் மனைவியை நினைக்காதே,தங்கையை,மகளை நினை என்று.
  அந்த நிலையில்தான் பெரும்பாலான ஆண்வர்க்கம் இருக்கிறது என்பதுதான் உண்மை.மிகவும் சிற்ந்த பெரியார் தொண்டர்களேக் கூடத் தங்கள் சொந்த வாழ்விலே பெரியாரைப் போல் எண்ணவோ,செயல் படவோ முடியாத சமூகமாகத்தான் நம் சமூகமும்,நம்மில் பெரும்போலோரும் உள்ளோம்.
  இனி வரும் இளைய தலை முறை,அதுவும் வெளிநாடுகளிலே இருவரும் வேலை செய்து வாழவேண்டிய நிலையில் உள்ளோர் தங்கள் பணிகளைப் பகிர்ந்து பெண் உரிமையுடன் வாழ்ந்தாலும் வாழ்விணையர்களாக வாழ்ந்தாலும் கணவன்,கற்பு என்பதெல்லாம் மக்கள் மன்தில் பெரியார் சொன்ன அளவிற்கு
  படியுமா என்பது இல்லை என்றுதான் இருக்கிறது.
  இதை பெரியாரிடமிருந்த துணிவு மற்றவர்கட்கு இல்லை என்று கொள்ள வேண்டுமே தவிர விரோதப் போக்கு என்று புரட்சிக் கவிஞரைக் கூடக் குறை சொல்ல முடியாது.நல்லிரவில் பல நண்பர்களுடன் வந்து விருந்து படைக்கச் சொல்லும் புரட்சிக் கவிஞர் இன்னும் மிகுதியாக எழுதியிருந்தால் அது எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

 5. said...

  தோழர்,

  நீங்கள் மரபு மார்க்சியர்கள் என்று யாரை குறிப்பிடுகிறீர்களென தெரியவில்லை ஆனால் கோவை ஞானி போன்ற சிலர் நக்சல்பாரிகளை குறிப்பிடுவதற்கும் இது போன்ற சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள் அந்த வரையறையின் கண்கொண்டு பதிலளித்தால், பார்ப்பன சநாதனி பாரதியை திரைகிழித்ததில் 'பாரதீ'ய ஜனதா பார்ட்டி என்ற திரு. வே. மதிமாறனுடைய புத்தகமும் அதன் காரணமாக அறிவு ஜீவிகளும் சிற்றிலக்கியவாதிகளும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்த போது தோழர்.மருதையனால் எழுதப்பட்டு வெளிவந்த 'பாரதி பக்தர்களின் கள்ள மவுனமும்' வெகு முக்கியமானவை அதன் பிறகு பாரதிக்கு வரிந்து கட்டி கொண்டு வந்த அறிவுஜீவிகள் அடங்கி போனார்கள் என்பதும் குறிப்பிடதகுந்தது. பாரதிதாசன் நிலப்பிரபுத்துவ விழுமியங்களையும், ஆணாதிக்க சிந்தனைகளையும் தன்னுள் கொண்டிருந்தார் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அதனை விமர்சிக்கும் விதமாக பழைய பதிய கலாச்சாரங்களில் சில வரிகளில் எழுதப்பட்டிருக்கின்றன.. சரி தோழர், பாரதிதாசனை பகுத்தாராயும் அறிவுஜீவி திருவாளர்.எஸ்.வி.ஆர் ஆரிய சாம்ராஜ்ய கனவு கண்ட பாரதியை பகுத்தோ தொகுத்தோ ஆராய்ந்திருக்கிறாரா?

  தோழமையுடன்
  ஸ்டாலின்

 6. Anonymous said...

  I only read the title.
  //"பாரதிதாசனின் படைப்புகளில் பெரியாரியல்விரோதப்போக்கு - எஸ்.வி.ராசதுரை" //
  So is he also a Brahmin.