பருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு
முதலில் மேலோட்டமாக...


பருத்திவீரன் படம் ஆரம்பித்த அரைமணிநேரத்திற்குள்ளாகவே 'ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம்' என்றாகிவிட்டது. வழக்கம்போல கிராமத்துச் சின்னப்பசங்களின் காதல். இதையே அரைமணிநேரம் காட்ட 'ஆட்டோகிராப்' போல ஒரு கேவலமான சினிமாவாக இருக்கும்போல என்ற நினைப்பை விலக்கமுடியவில்லை. அதுவும் அந்தப் பெண்ணைச் சிறுவயதில் கிணற்றில் தவறிவிழுந்துவிட அந்தப் பையன் காப்பாற்ற அதுவே காதலாக மாறுகிறது என்பதும் நம்பமுடியாத லாஜிக்.

அதன்பிறகு ப்ரியாமணியின் நடிப்பு நம்மைக் கொஞ்சம் நிமிர வைக்கிறது. ஆனால் அவர் காதலில் உறுதியாக நிற்பதற்கும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் காதலுக்காகவே உயிரைத் துறப்பதற்கும் எந்த வலுவான காரணமுமில்லை. ஆனால் கதாநாயகியின் குரலிலிருந்து உடல்மொழி வரை பெண்மையின் சாயலே தெரியாமல் கம்பீரமாகப் படைத்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

கார்த்தியைப் பொறுத்தவரை படத்தின் முதல்பாதிவரை அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் கஞ்சாகருப்புவையே நினைவுபடுத்துகின்றன. (அந்த அலட்டல் உடல்மொழி). பிற்பகுதியில் தேறிவிடுகிறார். ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ப்ரியாமணி அளவிற்கு கார்த்தியால் ஈடுகொடுத்து நடிக்கமுடியவில்லை. கிளைமாக்சில் சிவகுமாரை ஞாபகப்படுத்திவிடுகிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இசை. குறிப்பாக மணற்பரப்பில் நடக்கும் சண்டைக்காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை வேறு ஒரு பரிமாணததைத் தொட்டிருக்கிறது. பாடல்கள்தான் தேறவில்லை. வழக்கம்போல இளையராஜா 'அறியாத வயசு...' என்று ஆரம்பிக்கும்போது 'ஹய்யோ...' என்று தோன்றுகிறது.

சரவணன், பொன்வண்ணன் மற்றும் படத்தில் பாலியல் தொழிலாளியாக வருபவரிலிருந்து பச்சை குத்துபவர் வரை வரும் அசல் மனிதர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். இப்போது இந்தப் படம் குறித்து எழுப்பப்படும் இரு சர்ச்சைகள் குறித்து உரையாடுவோம்.

சர்ச்சை 1 :

14.03.2007 ஆனந்தவிகடனில் ஞானி, சுஜாதா உள்ளிட்ட பலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கொடூரமானது, வன்முறையானது என்று கண்டனம் தெரிவிக்கின்றனர். சுஜாதாவோ இன்னும் ஒருபடி மேலே போய் இதற்காகவே 'பருத்திவீரன் படத்திற்கான நட்சத்திரங்களில் ஒன்றைப் பிடுங்கலாம் என்கிறார். (பிடுங்குவதில்தான் சுஜாதா எக்ஸ்பர்ட் ஆயிற்றே.)

இதற்கு மறுப்பு தெரிவித்து தினத்தந்தி பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் 'சேகர்கபூருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா' என்று சீறியுள்ளார். இந்தக் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். சேகர்கபூரின் 'பண்டிட் குயின்' படத்தில் பூலானைப் பலர் தொடர்ச்சியாகப் பாலியல் பலாத்காரம் செய்வதை வலியோடும் துயரத்தோடும் சித்தரித்திருப்பார் சேகர். அந்தளவிற்கான சித்தரிப்பின் நுட்பம் பருத்திவீரனில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

உண்மையில் வழக்கமாய்த் தமிழ்ச்சினிமாக்களில் வரும் கதாநாயகனால் காப்பற்றப்படுவதற்காகவே கதாநாயகி 'கற்பழிக்கப்படும்' காட்சிகளை விடவும் நாகரிகமாகவும் உண்மையாகவும்தானிருக்கிறது பருத்திவீரனின் உச்சகட்ட காட்சி.

ஆனால் இதுமாதிரியான காட்சிகளே இருக்கக்கூடாது என்று ஞானி போன்றவர்கள் வாதிடுவதின் காரணம் புரியவில்லை. ஒவ்வொரு இனக்கலவரத்தின்போதும் மதக்கலவரத்தின்போதும் பலியாவதென்னவோ பெண்ணுடல்தான். ஈழத்திலிருந்து வாச்சாத்தி, குஜராத் வரை இதுதான் நிலைமை. (சமீபத்தில் நந்திகிராமத்திலும் இத்தகையக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதாய் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன).

குஷ்பு சர்ச்சையின்போது கலாச்சாரப் பாசிஸ்ட்களுக்கு எதிராய் நின்ற ஞானி, திருமணத்திற்கு முன்பான பாலுறவு குறித்த திறந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த ஞானி இந்தக் காட்சிக்கு மட்டும் ஏன் எதிராய் நிற்கிறார் என்பதை அவர்தான் விளக்கவேண்டும்.

சர்ச்சை 2 :

பருத்திவீரன் திரைப்படம் குறவர் இன மக்களை இழிவுபடுத்துவதாக அம்மக்களின் அமைப்புகள் போராடுகின்றன, வழக்கும் தொடுக்கப்படுகின்றன. புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் உண்மையில் குறவர் இனமக்கள் குறித்து நியாயமான சித்தரிப்புகளே படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தேவர்களின் சாதிவெறி குறித்து காத்திரமான குரலை எழுப்பியிருக்கிறது 'பருத்திவீரன்' படம். குறிப்பாக அந்த குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேவர்கள் கொலை செய்யும்போது ஒரு பன்றியை அடித்துக் கொலைசெய்யப்படுவதைப் போலவே கொலைசெய்கின்றனர். இத்தகைய நுட்பமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

தேவருக்கும் குறவர் இனப்பெண் ஒருவருக்கும் பிறந்த ஒரு பையனை கடைசிவரை தேவர்கள் ஏற்றுக்கொள்ளாத சாதிவெறியையே படம் பேசுகிறது. தமிழ்த்திரைப்படத் துறையில் தேவர்களை விமர்சித்து ஒரு படம் வருவது என்பதே அரிதானதுதான். உண்மையில் தேவர்கள்தான் இந்த படத்திற்கு எதிராகக் கோபம் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நிலைமை தலைகீழாகத் திரும்புவது புரியாத புதிராக இருக்கிறது.

உண்மையில் நாம் பருத்திவீரனைக் கண்டிக்க வேண்டியதெல்லாம் ஒரு பாடல்காட்சியில் பால்மீறிகளை மிகக் கேவலமாகச் சித்தரித்திருப்பதற்குத்தான்.

9 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  stupid

 2. Anonymous said...

  stupid arguement.

 3. உண்மைத்தமிழன் said...

  நண்பரே.. சினிமா என்பதே கற்பனைதான். கற்பனையை கண் முன்னால் நடப்பது போல காட்டுவதுதான் சினிமா. அதனால்தான் மக்கள் இன்னமும் சினிமாவை விரும்புகிறார்கள். தாங்கள் எழுதியிருப்பதைப் படித்து எனக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது. ஆட்டோகிராப் என்கிற தமிழ்த் திரைப்படம் இதுவரை வெளிவந்திருக்கும் தமிழ்த் திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பானது. அழகானது. என்றெல்லாம் என்னைப் போன்ற சினிமா பார்வையாளர்கள் கருதிக் கொண்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர்தான் அந்தப் படத்தை இப்படியொரு வார்த்தையில் அழைத்தது. ஓகே.. விமர்சனங்கள் அனைத்துமே மனிதர்களுக்குள் மாறுபடுவது இயற்கைதானே.. ஆனால் பருத்தி வீரனைப் பொருத்தமட்டில் சொல்ல வந்த விஷயத்தை அதே களத்தில், அதே இடத்தில் வைத்துச் சொல்லப்பட்டதுதான் சிறப்பு. இறுதிக் காட்சியில் உன் மேல இருக்குற பாவத்தையெல்லாம் என் மேல இறக்கி வைச்சிட்டாங்கடா என்று முத்தழகு முனகிக் கொண்டே சொல்வதுதான் நிஜம். உலகில் எந்த இடத்தில் பார்த்தாலும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் என்ற தனி ஜீவன்கள் இருப்பார்கள் பாருங்கள். அவர்களில் இந்த முத்தழகும் ஒருத்தி. இது ஒருவகை சினிமா. தங்களுக்கு சினிமா பற்றிய பார்வை குறைவு என்பது எனது தாழ்மையான கருத்து. சினிமா ரசிப்பு என்பதே ஒரு கலை. அந்தக் கலையுணர்வை ரசிக்க முடியாமல்தான் பலரும் சினிமாவைக் குறை சொல்லி வருகிறார்கள். அதில் நீங்களும் ஒருவர் என்று நினைக்கிறேன்.

  அடுத்து சேகர்கபூரின் பண்டிட்குயின் படத்தில் பூலான்தேவியை கற்பழிக்கும் காட்சியை இப்போது பார்த்தாலும் அதில் பரிதாபம்தான் தெரியும். காரணம் அதைப் படமாக்கியவிதமும். படம் பார்க்க வந்தவர்கள் மத்தியில் ஏற்கெனவே பூலான்தேவி பற்றி தெரிந்த ஒரு தெளிந்த மனவோடை இருந்ததும்தான் காரணம். முத்தழகு அப்படியல்ல. அவளை இப்போதுதான் முதல்முறையாக மக்கள் பார்க்கிறார்கள். இதுதான் அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம்.

  அடுத்து ஞாநியும், சுஜாதாவும் எழுதியது அவரவருடைய கருத்துகள்தான். இதே சுஜாதா விக்ரம் படத்தின் கதையை குமுதம் பத்திரிகையில் எழுதியபோது "நான் ஆம்பளை.. என்னால சுவத்து மேல மூத்திரம் அடிக்க முடியும்.." என்று எழுதியிருந்தார். உண்மையாக இதுதான் வக்கிரம். ஏனெனில் இயற்கையாக அமைந்த ஒரு விஷயத்தை பலகீனத்திற்கு உதாரணமாக எடுத்துக் காட்டி எழுதியிருந்தார். இது எவ்வளவு பெரிய தவறு?

 4. Anonymous said...

  Loose, sariyana loose..............

 5. கருப்பு said...

  படம் நானும் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது.

  கடைசி காட்சியில்தான் மனம் ரொம்ப சோகமாகி விட்டது.

 6. Ayyanar Viswanath said...

  திவாகர்

  படம் பார்ப்பதற்க்கு முன் விமர்சனம் படிப்பதில்லை என்பதால் தாமதமான இந்த பின்னூட்டத்திற்க்கு வருந்துகிறேன்.

  நம்ம ஊர்லதான் ஒரு சினிமாவை சினிமாவா யாரும் பாக்கிறது இல்ல அப்படிங்கிற வருத்தம் எனக்கு எப்பவும் உண்டு.இந்த இடம் இப்படி பாதிக்குது..அப்படி பாதிக்குது ன்னு இவங்க போடுற கூச்சல் தாங்க முடியாது சில சமயம்.இதுல கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னன்னா இத வச்சி சிலர் பொழப்ப ஓட்டுரது..( சுஜாதா ஞானி க்கெல்லாம் ஒரு வாரம் மேட்டர் கெடச்சது)

  விமர்சனம் சரியா இருந்தது..எனக்கும் இப்படித்தான் தோனுச்சு..

 7. லிவிங் ஸ்மைல் said...

  சர்ச்சை 1 : வெட்டியானது... அதற்கு தங்களின் விளக்கம் மிக பொருத்தமானது.

  சர்ச்சை 2 : சற்று சில சந்தேகங்கள் உண்டு.. நீங்கள் சொல்வது போல் தேவர்கள் கோவப்படாமை குறித்து நண்பர் ஒருவரிடம் கேட்டிருந்தேன்..

  அவர் சொன்னதல் சுருக்கம்..

  படத்தில் தேவர் இனத்தில் கடையர்களாக கருதப்படுபவர்கள், சேர்வை என்னும் இனத்தவர்கள்.. (இதே போல் ஒரு இனம் வன்னியர் சமூகத்திலும் இருப்பதாக அவர் சொன்னார்) படத்தில் வரும் மணிவண்ணன் கதாபாத்திரம் அத்தகைய சேர்வை இனத்தவரே.. இதனை அவரது இல்லத்தின் முகத்தில் ....சேர்வை என்று பொரிக்கப்பட்டிருப்பதை கண்டு உறுதி செய்துகொள்ளலாம்.

  மட்டுமன்றி, இதில் தேவர் இனத்தின் பெருமை போல ஒரு காம்பரமைசிங் வசனமும் படத்தில் ஒரு காட்சியில் (பருத்தி வீரனின் தந்தையிடம் ஒரு போலிஸ் அறிவுரை கூறுகையில் அதற்கு பதிலாக, அக்கதாப்பத்திரம் தேவர் இனத்தின் ஆண்மையை, நேர்மையை, பெருமையை கூறி அத்தகைய தேவன் நான் என்று கூறுவார்) உண்டும்...

  இப்படத்தில் மேலும் ஒரு சர்ச்சை

  நிஜ பருத்திவீரனின் மனைவி வழக்கு தொடுத்தது..

  நான் விசாரித்த வரையில்... படத்தின் தலைப்பு, கதைக்களம், பாத்திரம் (ஒரு பொறுப்பற்றவன் )என்பதைத் தவிர நிஜ வீரனுக்கும், திரை வீரனுக்கும் பெரிய தொடர்பில்லை...

 8. லிவிங் ஸ்மைல் said...

  // ஆட்டோகிராப் என்கிற தமிழ்த் திரைப்படம் இதுவரை வெளிவந்திருக்கும் தமிழ்த் திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பானது. அழகானது. என்றெல்லாம் என்னைப் போன்ற சினிமா பார்வையாளர்கள் கருதிக் கொண்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்து நீங்கள் ஒருவர்தான் அந்தப் படத்தை இப்படியொரு வார்த்தையில் அழைத்தது. ///


  நானும், நானும் அந்த நாட்களில் வலைப்பூவிற்கு வராததால் ஒன்னும் சொல்ல முடியாமல் போயிற்று..

  சுதேசமித்ரன் வெளியிட்ட 'சாம்பல்' என்ற இதழில் (இப்போதும் வருகிறதான்னு தெரியல).. ஒரு கட்டுரை வந்திருந்தது.. படிச்சுட்டு அந்த இதழ் வாங்குறதையே விட்டுட்டேன்..


  சோ... நான் இரண்டாவது ஆள்..

 9. அசுரன் said...

  //சோ... நான் இரண்டாவது ஆள்.. //


  நான் மூனாவது ஆள்

  அசுரன்