ஒரு கவிதையாகியிருக்கலாம், என்ன செய்வது?இந்த நீ எல்லாம் ஒன்றல்ல. ஆனால் நீ ஆவதற்கான காரணம் ஒன்று.கவிதை எழுதத் தெரியாத கணங்களில்
ஒரு சொல்லாய் இருந்தாய் நீ.
அன்பால் உலகை நிறைத்த
உன் கதகதப்பால்
தொடங்கியது என் உலகம்.
பிறப்பும் வீடும் எல்லாவற்றையும்
தீர்மானிக்கும் தேசத்தில்
அந்த கடைசி மெழுகுவர்த்தியும்
அணைந்துபோன இரவில்
காணாமல் போனாய் நீ.
திசைகள் பற்றிய அக்கறையற்ற என்னிடம்
திசைமாறி வந்துசேர்ந்த நீ வேறு.
வாழ்வு என்பது பிரிவுகளாலானது
என்பதால் ஒரு புள்ளியில்
மறைந்துபோனாய் நீயும்.
இப்போது வந்துசேர்ந்த நீயோ
இன்னும் புதியவளாயிருக்கிறாய்.
சிக்கலான அறிவாயுமிருக்கிறாய்.
சமயங்களில் கிறுக்குத்தனமாய்ஓடிக்கொண்டிருக்கும் நதிபோலநடந்துகொள்கிறாய்.
எதிர்ப்படும் ஏதேனுமொரு கரத்தைப்
பற்றத்துடிக்கும் என்னை
நிதானமாய் விலக்கிவிட்டுச் சொன்னாய்
அதிகம் எதிர்பார்க்காதே
நமக்கிடையிலானது நட்புதானென்று.
உண்மையைத்தான் சொன்னாய்.
ஆனால் உண்மை யாருக்குத் தேவை.
அன்பு தொடங்கும்போதே
உண்மையை மறுத்துத்தான் தொடங்குகிறது.

0 உரையாட வந்தவர்கள்: