தலித்தா? ஆதிதிராவிடரா?







'தள்' என்னும் மராத்தியச்சொல்லுக்கு மண் என்பது அர்த்தம் என்பர். தள்ளிலிருந்தே தலித் என்னும் சொல் உருவாகியது என்றும் அதற்கு மண்சார்ந்தவர்கள் என்றும் படுகுழியில் விழுந்தவர்கள் என்றும் பொருள் கூறுவர். பொதுவாக தலித் என்றால் ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் அடிப்படையிலேயே அதில் மலைவாழ்மக்கள், பெண்கள் போன்ற பல ஒடுக்கப்பட்டோரையும் சேர்த்தே ஒரு பொதுச்சொல்லாக வழங்கிவந்தனர். காலப்போக்கில் அது தாழ்த்தப்பட்ட சாதியினரைக் குறிப்பதற்காகவே பயனப்டுத்தப்பட்டு வருகிறது.

காந்தி தன் இறுதிக்காலத்தில் தனது 'யங் இந்தியா' இதழில் 'தலித்' என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதாக அ.மார்க்ஸ் கூறுகிறார். (ஆனந்தவிகடன் -14.03.2007). ஆனால் காந்தியால் முன்மொழியப்பட்ட அரிஜன் என்னும் வார்த்தையை அவமானமாகக் கருதிய தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராகவே 'தலித்' என்னும் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்திவந்தனர்.

தலித் அரசியல் குறித்த ஒரு தொகுப்பில் புனிதப்பாண்டியன் 'தலித்மகக்ளா? தாசிமக்களா' என்னும் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதில் அவர் கூறும் விபரங்களின் அடிப்படையில் '1939ல் நார்சிமேத்தா என்னும் குஜராத்திக்கவிஞரே முதன்முதலில் தன் நாவலில் அரிஜன் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்'.

அவர் கோவிலில் பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசிமக்களின் குழந்தைகளைக் குறிக்கவே அந்தச்சொல்லைப் பயன்படுத்துகிறார். த்கப்பன் பெயர்தெரியாத குழந்தைகள் இறைவனின் குழந்தைகள் - அரிஜன் என்ற அர்த்தத்திலேயே அவர் அதைப் பயன்படுத்தியிருப்பார். எனவே காந்தியின் கூற்றுப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் - அரிஜன் - தாசிமகன்கள் என்று அர்த்தம் ஆகிறது.

தமிழ்ச்சூழலில் நெடுங்காலம் தாழ்த்தப்படட் மகக்ள் 'பஞ்சமர்' என்றே அழைக்கப்பட்டார்கள். நான்கு வர்ணங்களிலும் சேர்த்துக்கொள்ளப்படாத அவர்ணர்கள், அய்ந்தாம் வர்ணத்தவர்கள் என்ற அடிப்படையிலேயே அவர்கள் பஞ்சமர்கள் (பஞ்சமம் - அய்ந்து) என்று அழைக்கப்பட்டனர். பேருந்து பயணச்சீட்டுகளிலும் நாடகக்கொட்டகைகளிலும் உணவகங்களிலும் 'பஞ்சமர்களுக்கு அனுமதி இல்லை' என்றே எழுதப்பட்டிருந்தது.

பெரியாரின் காலத்திலேயே ஆதிதிராவிடர் என்ற வார்த்தை உருவாகிறது. திராவிடர் என்னும் சொல்லாடலை வைத்து அரசியலை முதன்முதலில் தமிழ்ச்சூழலில் கட்டமைத்தவர்களே பறையர்கள்தான். எனவே ஆதிதிராவிடர் என்னும் சொல்லும் அவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.

'திராவிட நாடு கிடைத்துவிட்டால் இங்கு ஆதிதிராவிடர், மீதித்திராவிடர் என்னும் பிரிவே கிடையாது' என்கிறார் பெரியார் ஈ.வெ.ரா. ஒருவகையில் பார்த்தால் இது சமத்துவத்திற்கான விளிப்பாக இருந்தாலும் இன்னொருபுறம் தனித்துவங்களை அழிக்கும் ஆபத்தாகவே கருதவேண்டும்.

பாபாசாகேப் அம்பேத்கரைப் பொறுத்தவரை அவர் பெரும்பாலும் 'பட்டியலினத்தவர்'(scheduled caste) என்னும் சொல்லாடலையே தனது பிரதிகளில் பயன்படுத்துகிறார். பட்டியலினக் கூட்டமைப்பு (scheduled caste federation )என்னும் ஒரு அமைப்பையும் நடத்தியிருக்கிறார். ஆனால் ஒருமுறை ஒரு விவாத்த்தின்போது 'சாதியற்ற இந்துக்கள்'(non-caste Hindus) அல்லது 'எதிர் இந்துக்கள்'(Protestant Hindus)என்னும் வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்கிறார். இன்றளவும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது 'பட்டியலினத்தவர்'(s.c) என்னும் சொல்லே.




இன்று 'தலித்' என்பது அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களையும் குறிக்கும் பொதுச்சொல்லாக மாறிவிட்டது. ஆனால் அது மராத்திச்சொல் என்பதால் தமிழ்த்தேசியம் பேசுவோரில் ஒரு சாராரும் 'பள்ளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது, ஆண்டபரம்பரையினர்' எனும் குருசாமிச்சித்தர் போன்றோரின் போக்கினையொத்தவர்களும் தலித் என்னும் வார்த்தையை மறுக்கின்றனர்.

'தலித் உள்ளிட்ட வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துபவை. எனவே அவர்களை ஆதிதிராவிடர் என்றே அரசு ஆவணங்களில் குறிப்பிடவேண்டும்' என்று அரசு ஆணையிட்டிருக்கிறது. ஆனால் இதைப் பள்ளர் மற்றும் அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

'ஆதிதிராவிடர் என்பதே பறையரைக் குறிக்கும் வார்த்தைதான். அதை ஒட்டுமொத்தமாக எல்லா சாதிக்கும் பொதுவான பெயராக நீட்டிப்பது மோசடி' என்கிறார் புதியதமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. 'ஆதிதிராவிடர் நலத்துறை' என்பதையே 'சமூகநீத்துறை' என்று மாற்றவேண்டும் என்கிறார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தோழர். அதியமான்.

மேலும் தலித் என்பது இழிவான சொல் என்னும் அரசின் வாதங்களில் கிஞ்சிற்றும் பொருத்தமில்லை. பள்ளிச்சான்றிதழ்களில் 'பள்ளன்', 'பறையன்' 'சக்கிலியன்' என்றே குறிப்பிடவேண்டும் என்பது அரசின் நடைமுறையாகவே இருந்தது. (மற்ற 'உயர்' சாதிக்காரர்களோ பிராமணர், முதலியார், செட்டியார் என்று குறிப்பிட்டுக்கொள்ளலாம்).
இதைச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர்.கிருஷ்ணசாமி சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்துப்பேசினார். (அதன்பிறகு அது மாற்றப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.) நிலைமை இப்படியிருக்க தலித் என்பதை இழிவு என்று சொல்வது என்ன நியாயம்?

மேலும் இன்று தலித் அரசியல் என்பதே பறையர் அரசியலாக மாறிவிட்டது. சிறுபத்திரிகைகளாக இருந்தாலும் மய்யப்பத்திரிகைகளாக இருந்தாலும் தலித் எழுத்தாளர்கள், தலித் தலைவர்கள் என்றால் பறையர்சமூகத்தைச் சேர்ந்தவர்களையே பிரதிநிதித்துவபப்டுத்துகின்றனர். எப்போதாவது ஆனந்தவிகடனிலோ குமுதத்திலோ அதியமான் (அ) எஸ்.டி.கல்யாணசுந்தரம் பேட்டியைக் காணமுடியுமா? மதிவன்ணன் போன்ற அருந்ததியச் சமூகத்தைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஆதிதிராவிடர் என்னும் பெயரை அனைத்துத் தலித்சாதிகளுக்கும் திணிப்பது அவர்களுக்கிடையில் பிரிவுகளை அதிகப்படுத்தவே உதவும். மேலும் 'தலித்' என்னும் பெயரில் இதழ்நடத்துபவரும் தலித் இலக்கியம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதற்கு பெரும் பங்களிப்புச் செய்தவருமான ரவிக்குமார் போன்றவர்கள் சடட்மன்ற உறுப்பினர்களாக இருக்கும்போது இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது பல சந்தேகங்களையே கிளப்புகிறது.

மேலும் எப்படியிருந்தபோதும் 'தலித்' என்பது தாழ்த்தப்பட்ட மகக்ள் தாங்களாகவே தங்களுக்குச் சூட்டிக்கொண்டபெயர். அதைமறுப்பது என்பது அரவாணிகளை 'அலிகள்' என்றுதான் அழைக்கவேண்டும் என்று உத்திரவிடுவதைப்போன்ற முட்டாள்தனமாகும்.

3 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    நல்ல பதிவு. பல தகவல்களை அறிய முடிந்தது. நன்றி.

    - சுப்பையா

  2. bala said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    மீண்டும் ஒரு நச் பதிவு.க்ரீமி லேயர் OBC கும்பலின் கோர முகத்ததை தோலுரித்து,வெளிச்சம் போட்டு காட்டி ,சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.புரிய வேண்டிய ஓ பி சி கும்பலுக்கு புரிந்தா சரி.ஆனா புரியுமா?

    பாலா

  3. Anonymous said...

    வெளியே மிதக்கும் அய்யா,

    பார்ப்பான்களுக்கும் இந்துத்துவ நாய்களுக்கும் சாட்டையடியும் செருப்படியும் சரியாகவே கொடுத்துவருகிறீர்கள். நன்றி.