வீணாய்ப்போன வியர்டும் கொள்ளிக்கட்டையும்
வியர்டு என்பதற்கு விசித்திரமானது, வினோதமானது என்றெல்லாம் அர்த்தம் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையே வியர்டுதான். அது கிறுக்குத்தனமானது, எந்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் நடப்பது. புதிரானது.

எனக்கு எப்போதும் ஆழமாய் இருக்கும் கிறுக்கு அரசியல் கிறுக்கு. இதனால் நடைமுறையில் இழந்தவை ஏராளம். முக்கியமாய்க் காதல். நான் ஏற்கனவே லெனின் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்க் காதலித்த 'லட்சணத்தை'ச் சொல்லியிருக்கிறேன்.

http://sugunadiwakar.blogspot.com/2007_01_01_archive.html

இயல்பிலேயே அது ஊறிப்போய்விட்டது. கல்லூரி படிக்கும்போது வகுப்பில் பெரியாரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருப்பேன். வகுப்புத்தோழிகள் பலர் தலையிலடித்துக்கொண்டே எழுந்துசென்றார்கள். பிறகு கல்லூரியெல்லாம் முடிந்து பல வருடங்களுகுப் பின் அந்தப் பெண்களில் இருவர் என்னைச் சீரியஸாய்க் காதலித்தாய் ஒரு நண்பன் சொன்னான்.

அவர்கள் பயந்துபோனதிலும் அர்த்தமிருக்கிறது. என்னைப் போலவே இருக்கும் பல ஜந்துக்களோடு பழகும்போது அந்த வியாதி அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒரு பத்துநிமிடத்திற்கு மேல் எந்தப் பெண்ணிடமும் வேறுவிடயங்களைப் பேசிகொண்டிருக்கமுடியாது. அறிவுக்கொடுக்கு தலைகாட்ட ஆரம்பித்துவிடும். இவனுகளைக் காதலிக்க ஆரம்பித்தால் முதலிரவில் கூட முக்கால்மணிநேரம் 'முதலாளிவத்துவத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியம்' பற்றி
சிறப்புரை நிகழ்த்திவிடுவான்கள் என்று பெண்கள் பயப்பட்டிருக்கக்கூடும்.

இது பல சமயங்களில் வேலை பார்க்கும் இடங்களிலும் எதிரொலித்திருக்கிறது. நாம் பணிபுரியும் இடங்கள் எல்லாமே முஸ்லீம் விரோதமும் சாதிய மனோநிலையுமே நிரம்பியிருக்கிறது. எனவே அங்கேயும் பிரச்சினைதான்.

அதேபோல திருமணம். நமக்குக் காதல்தான் கொடுப்பினை இல்லை என்று ஆகிவிட்டது. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் என்னவோ ஒரே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு கடைசிவரை அதேபெண்ணோடு குடும்பம் நடத்துவது என்பது பயித்திகாரத்தனமாகத்தான் தோன்றுகிறது.

இன்னொன்று குறுக்கே நிற்பது சாதிமறுப்புத்திருமணம் என்னும் நிலைப்பாடு. அதனாலேயே என்னை உண்மையாகவே காதலித்த, எனக்கும் பிடித்துப்போன இரண்டு பெண்கள் நான் பிறந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலையே உதறித்தள்ள நேர்ந்தது. இதை செந்திலிடம் சொன்னபோது 'காதலையும் திருமணத்தையும் அஜெண்டாகவே வைத்திருக்கிறீர்கள்' என்றார்.

இன்னும் சிலபேர் 'உங்களுக்குத்தான் சாதியில் நம்பிக்கையில்லையே, நீங்களே சாதியற்றவர்தானே. பிறகு இதில் சாதி என்ன தடை?' என்றும் கேட்கிறார்கள். இதற்கெல்லாம் தெளிவாகப் பதில்சொல்ல முடியாவிட்டாலும் ஏனோ அந்த கிறுக்குத்தனமான பிடிவாதமிருக்கிறது.

மற்ற சில்லறைத்தனமான விஷயங்கள் எவ்வளவோ சொல்ல்லாம். இந்த நக்கல் என்பது கூடவே பிறந்தது என்றே நினைக்கிறேன். கல்லூரிக்காலத்தின் போது டூர் போகலாம் என்று நண்பர்களிடம் பேச்சுவந்தது. என்னையும் ஒரு பெண் மனிதனாய் மதித்து "எங்கே போகலாம்?" என்று கேட்டார். நான் "யாழ்ப்பாணத்திற்குப் போகலாம்" என்றேன். அந்தப் பெண் படுபேஜாராகிவிட்டார். (அந்தப் பெண் அழகாக இருப்பார் என்பது முக்கியக் குறிப்பு). நேற்றுக்கூட உட்லேண்ட்ஸ் ஓட்டலில் ஒருநண்பருடன் சாப்பிடப்போனபோது 'ஆம்லேட் இருக்கா?' என்று கேட்டுவைத்தேன். பலபேர் இதைச் சீரியசாக எடுப்பதில்லையென்றாலும் சிலபேர் சீரியசாக எடுத்துக்கொண்டு உறவுகள் முறிந்ததுண்டு.

பெரும்பாலும் நான் வாழ்க்கையில் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் எதையாவது சீரியசாக எடுத்துக்கொண்டால் 'உருகுதே, மருகுதே, எரியுதே, கருகுதே' என்று மூன்றுநாட்களுக்கு புலம்பிப் புழுங்கித் தவித்துவிடுவேன்.

மறதி என்பதும் என்னோடு பிறந்த இன்னொன்று. பலசமயங்களில் சைக்கிளில் எங்காவது போய் அங்கேயே வைத்துவிட்டு வீட்டிற்கு நடந்தே வந்திருக்கிறேன். பலபொருட்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு ஆச்சரியம் நடக்கும். போனமுறை செந்திலைப் பார்ப்பதற்காக தூத்துக்குடி போயிருந்தேன்.

பஸ்ஸ்டாண்டில் இறங்கினால் செல்போனில் சுத்தமாக சார்ஜ் இறங்கியிருந்தது. எனக்குச் செந்திலின் நம்பரும் ஞாபகம் இல்லை. அவரை எப்படித் தொடர்புகொள்வதென்றும் தெரியவில்லை. கையில் லக்கானின் புத்தகம் ஒன்று வைத்திருந்தேன். ஆசுவாசப்படுத்துவதற்காக ஒரு கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பிறகு தெரிந்தவர்களிடமெல்லாம் போன் போட்டுக் கேட்டால் ஒருவருக்கும் செந்திலின் நம்பர் தெரியவில்லை.

அய்ந்துமணிநேரம் பயணம் செய்து வந்துவிட்டு செந்திலைப் பார்க்காமலும் ஊர் திரும்பமுடியாது. ஒருவழியாகக் கஷ்டப்பட்டு நம்பரைக் கண்டுபிடித்து செந்திலையும் வரச்சொல்லிவிட்டேன். ஆனால் அப்போதுதான் கவனித்தேன் கையிலிருந்த லக்கான் புத்தகத்தைக் காணவில்லை. பதறியடித்து நானும் செந்திலும் தேடிவந்தால் ஒருமணிநேரத்திற்கு முன்னால் எந்த டீக்கடையில் வைத்தேனோ அதே டீக்கடையில் பத்திரமாக இருந்தது புத்தகம். புத்தகங்களைத் திருடக்கூட யாருமில்லை என்று நானும் செந்திலும் சோகமானோம். ஆனால் இதுவரை நான் செல்போன்கள் எதையும் தொலைத்ததில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

சரி இந்த வியர்டு விளையாட்டு எல்லாம் எனக்கு உண்மையில் போரடிக்கிறது. ஏதோ செந்தழல் ரவி கூப்பிட்டார் என்றுதான் வந்தேன். இதிலும் ஒரு சூப்பர் காமெடி என்னவென்றால் என்னை வியர்டு ஆட்டத்திற்கு அவரது பதிவில் அழைத்த ரவி வழக்கம்போல என்னுடைய பதிவில் அனானியாக வந்து 'உங்களை வியர்டு ஆட்டத்திற்கு அழைத்திருக்கிறேன், வரவும்' என்று பின்னூட்டமும் போட்டுவிட்டார்.

நானாவது எப்போதாவதுதான் சிக்குகிறேன். ஆனால் செந்தில்தான் பாவம். யார் எந்த ஆட்டத்க்தை ஆரம்பித்தாலும் செந்திலையும் அழைத்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் எனக்கும் புரியவில்லை. செந்திலைக் கேட்டபோது அவருக்கும் புரியவில்லை. 'உங்கள் ஜட்டியின் கலர் என்ன?' போன்ற உபயோகமான கேள்விகளையும் 'கடைசியாக யாருக்கு முத்தம் கொடுத்தீர்கள்?' என்பது போன்ற வயிற்றெரிச்சல் எழுப்பும் கேள்விகளையும் (முத்தம்ன்னா என்ன..?) கேட்டு பாடாய்ப்படுத்திவிடுகிறார்கள்.

எனவே நானே ஒருமுடிவுக்கு வந்துவிட்டேன். அடுத்து இதுமாதிரி யாராவது கேள்விகள் கேட்கும் அபாயத்திலிருந்து தப்புவதற்காக நானே ஒருவிளையாட்டை ஆரம்பித்துவிட்டேன். விளையாட்டின் பெயர் 'கொள்ளிக்கட்டை'. நிபந்தனைகள் மூன்று.

1. கேள்விகள் பலதுறையைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் 'அறிவுபூர்வமாக' இருக்கவேண்டும்.

2. பதிவின் தலைப்பில் 'கொள்ளி' என்கிற வார்த்தை அவசியம் இடம்பெறவேண்டும் உதாரணம் : கொள்ளிக்கட்டைத்தலையா, கொள்ளிவாய்ப்பிசாசு, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து...

3. மேற்கண்ட நிபந்தனைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீறலாம்.

வழக்கம்போல கொள்ளிக்கட்டையை செந்திலிடமே கொடுக்கிறேன். இனிக் கேள்விகள்....


வரலாறு : 'ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே...' என்று எந்தப் பெண்னிடமாவது சொல்லி அடிவாங்கியதுண்டா?

உடல்நலம் : நீங்கள் தினமும் போடும் சோப்பு எது? (இதெல்லாம் குளிக்கிறவங்ககிட்ட கேளுங்க என்று நீங்கள் சொன்னால் அடுத்த சாய்ஸ்)

'மருந்து' சாப்பிடும் பழக்கம் எப்போதிருந்து தொடங்கியது?

திறனாய்வு : பின்னூட்டம்பாலா போன்ற கே.கேக்களின் (கேணக்கிறுக்கர்கள்) பின்னூட்டங்களை மதிப்பீடு செய்க.

புலனாய்வு : மொக்கைவேந்தன் பாலபாரதி 36 வயதை 32 வயது என்று பொய்க்கணக்கு காட்டி விடுத்த பிறந்தநாள் அறிக்கையில் 'டைப் அடித்து அடித்து என் கைரேகைகள் தேய்ந்துவிட்டன..' என்றுசொன்னதில் உண்மை உண்டா?

அறிவியல் : மெத்தனால், எத்தனால் - பத்துவரிகளுக்குள் தடுமாறாமல் சிறுகுறிப்பு வரைக.

இலக்கியம் : நிலா, வண்ணத்துப்பூச்சி, பூ, இதயம், நீ, நான், முத்தம், அன்பே போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் 'சமையல்கட்டு' என்ற தலைப்பில் ஒரு காதல்கவிதை எழுதுக.

பொது அறிவு : தமிழீழத்தின் தலைநகரம் எது? (இந்தக் கேள்வியைப் 'பயன்படுத்தி' 'எங்கள் இதயம்' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பதில் சொல்லி யாரையாவது உணர்ச்சிவயப்படச்செய்து ரூட்போடவேண்டாம்)

10 உரையாட வந்தவர்கள்:

 1. பாரதி தம்பி said...
  This comment has been removed by a blog administrator.
 2. Anonymous said...

  சமையல்கட்டுக்குள்
  சாப்பிடப் போனவன்
  அவளுடற் கட்டுக்குள்
  சமாதியானான்.
  காதலன் அவனாகி
  காதலி அவளென்றான்.
  நாயக நாயகி பாவம்
  மனம் கொண்டது
  காமம் வந்தது
  காதல் விண்டது
  அவள் கருவானாள்
  அவன் மறைவானான்

 3. Anonymous said...

  சமையற்கட்டு,
  காதல்,
  வெங்காயம்!

 4. கருப்பு said...

  உண்மையிலேயே நல்லா எழுதி இருந்தீங்க திவாகர். ரசிச்சு படிச்சேன்.

  //நேற்றுக்கூட உட்லேண்ட்ஸ் ஓட்டலில் ஒருநண்பருடன் சாப்பிடப் போனபோது 'ஆம்லேட் இருக்கா?' என்று கேட்டுவைத்தேன். //

  தெரியாத ஆளுக்கு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. பூணூல் போட்ட ரெகுலர் கஸ்டமர்க்கு மாத்திரம்தான் கொடுப்பாங்க!!!

 5. Anonymous said...

  கட்டுக்கள் உடைக்க
  கிளம்பிய கூட்டம்,
  சமையல்கட்டுக்குள் புகுந்தது.

  காரமாய் வேண்டுமாம் ஏனெனில்
  ஏற்றிய சுருதி அதிகமாக.

  கண்களில் தெரிந்த வெங்காயத்தை
  உரித்து, உரித்துப் பார்த்தாலும்,
  ஒன்றும் சிக்கவில்லை, ஆனால்
  உரித்தே வீணான நேரத்தையும்
  வீரத்தையும் மறைக்க வழியென
  குமுறலாய் கருத்தென்ற பெயரில்
  அடுத்தவர்க்கு அர்ச்சனையது கற்சனையாம்.

  அந்தகோ பரிதாபம் அவர், அறியவில்லை உரித்த வெங்காயம் உருவாக்கிய வெற்றிடத்தும் இறையுள்ளதென.

 6. Anonymous said...

  santhipukku
  -----------
  இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
  மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
  கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.

  அப்பால
  நான் தான் உண்மையான
  கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
  நீயே கத்திகினுருக்க,
  அங்க இன்னாடானா
  ஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
  மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
  வேலைக்காகாதுன்ரான்,
  ஒன்னான்ட இத்த
  அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
  ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
  இன்னா தலிவா மேட்டரு.
  ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
  யெல்லாரும் காத்திகினுருக்காங்க

 7. Anonymous said...

  சந்திப்புக்கு
  -----------
  ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட
  வெட்கமாக இல்லயா ?

  ஏன் ?

  என்று கேட்கிறீர்களா !

  அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்
  கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்
  கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ?

  ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,
  அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.
  ஏன் ?
  எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?

  சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்

  நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,
  தோழர் லெனினுடைய மாணவர்கள்,
  கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்
  பாருங்கள்.

  சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்
  எட்டிப்பாருங்கள், அப்படியே
  உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்

 8. Anonymous said...

  புதிய தகவல்கள் உங்களைபற்றி... :) கொஞ்சம் வித்தியாசமானா ஆளா தான் இருக்கிங்க திவா

 9. மிதக்கும்வெளி said...

  செந்திலைத் தவிர எல்லாரும் கவிதை எழுதியிருக்காங்கப்பா!

 10. Anonymous said...

  செந்திலு ஒரு கவிதையை எழுதுப்பா :P