விருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு


நண்பர்களுக்கு.
கீழ்வரும் சிறுகுறிப்பு தோழர் நாகார்ஜுனனுடையது. தமிழின் நவீனச்சிந்தனைகளை வாசித்துணர்ந்தவர்களுக்கும் சிறுபத்திரிகை அறிவு மரபு குறித்து சிறிதளவேனும் ஞானம் உடையவர்களுக்கும் மறக்கமுடியாத பெயர் நாகார்ஜுனன். தமிழின் அறிவுச்சூழல் என்பது அணிதிரட்டும் குழுவாதமாகவும் தனிநபர்களை மய்யப்படுத்திய 'நானை;க் கடக்காத அவலமாகவும் கெட்டுச்சீரழிந்துவிட்டதாலேயோ என்னவோ பல ஆண்டுகள் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார் தோழர்.நாகார்ஜுனன்.

எனது ஒருபதிவுக்குத் தான் தனிப்பட்ட முறையில் புண்பட்டதாக
அவர் தெரிவித்து அதற்கு நான் மன்னிப்பும் கேட்ட ஒரு சங்கடமான சூழலில் அவருடனான என்னுடைய அறிமுகம் நிகழ்ந்தது. கடந்த இரண்டுநாட்களுக்கு முன் என் 'தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து' என்னும் பதிவை வாசித்துவிட்டு தொடர்புகொண்டார். பின் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எனது நூறாவது பதிவில் அவர் இட்ட பின்னூட்டத்தின் அடிப்படையில் சிந்தனையாளர் ழான்பூத்ரியாரின் மறைவையொட்டிய அவரது சிறுகுறிப்பை இங்கு வெளியிடுகிறேன்.

பின்நவீனத்துவம் குறித்து நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொகுத்த ஒரு கட்டுரைத்தொகுப்பில் ழான்பூத்ரியார் பற்றி ரவிக்குமார் எழுதிப் ( 'வெளிகடக்கும் பாவனைகள்' என்பது தலைப்பு என்பது என் ஞாபகம்) படித்ததாக நினைவு. மார்க்சியத்தின் அடிப்படையான 'மூலதனக்குவிப்பு' என்பதை மறுத்து 'மூலதனச் சுழற்சி' என்னும் கருத்தாக்கத்தை பூத்ரியார் வைத்தார் என்பதாக ரவிக்குமார் எழுதியது என் மங்கிய நினைவுகளில் தெரிகிறது. பூத்ரியார் செப்டம்பர் 11 குறித்து எழுதிய நூல் தமிழிலேயே மொழிபெயர்த்து வந்துவிட்டது என்று நினைக்கிறேன். பூத்ரியாரை நினைப்போம்.

ழான் பூத்ரியாரின் ஆன்மா/பிம்பம் இனி நம்மைத் துரத்துமா?
- நாகார்ஜுனன்

postmodernism என்று அறியப்படும் பிறகான நவீனத்துவத்தின் அதிமுக்கியத் தத்துவவாதியும், காமிராக்கலை நிபுணருமாக இயங்கி வந்த பிரெஞ்சு ழான் பூத்ரியார், நேற்று இரவு தம்முடைய 77-ஆவது வயதில் பாரிஸ் நகரில் காலமானார்.

ஒரு சோஷலிச தத்துவவாதியாக தம்முடைய சிந்தனை வாழ்க்கையைத் தொடங்கிய பூத்ரியார், படிப்படியாக வளர்ச்சி கண்டு, “பொருட்களின் அமைப்பு”, “பிம்பங்களின் பெருக்கம்”, “நகல்களின் பரப்பு” என்று பல்வேறு ஆய்வுகளின் ஊடாக, சுமார் நாற்பது ஆண்டுக்காலம், நவீன உலகின் மாற்றங்களை அதிர்ச்சி தரும் வகையில் ஆராய்ந்துவந்திருக்கிறார். மிஷேல் பூக்கோ, ழில் டெல்யூஸ் ஆகிய சிந்தனையாளர்களுக்கு அடுத்த கட்ட பிரெஞ்சுசிந்தனை இவருடையது.

பிம்பங்களே இன்று நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன, இதில் சுதந்திரம் என்பது மாயை என்று கடுமையாக நம் உலகைச் சாடியவர் பூத்ரியார். நம் காலத்திய நிகழ்வுகளான – வளைகுடாப்போர்கள், செப்டம்பர் 2001 மற்றும் அதை அடுத்த தாக்குதல்கள் என்று பலதின் மீதும் இவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன.

நவீன சமுதாயம் மனித இனத்தின் ஆதிநிலை உணர்வுகளைக் காயடித்துவிடுகிறது என்ற இவருடைய கருத்து பிரெஞ்சுப்புரட்சி கண்ட ஒரு சமுதாயத்தின் காலகட்டத்திலிருந்து வந்த ஒன்று. தம்மை ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன் என்று அழைத்துக்கொள்வார் பூத்ரியார்.
இவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சிகள் மேற்குலகில் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. உதாரணத்துக்கு பாரிஸ் நகரில் அவர் எடுத்த புகைப்படம்தான் மேலே உள்ளது.

1998-ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கம் அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்தியதை அடுத்து நான் எழுதிய 'சித்தார்த்தனுக்கு மீண்டும் துரோகம்' என்கிற ஆங்கிலக்கட்டுரை, பூத்ரியார் ஆசிரியர் குழுவில் இறுதிவரை இருந்த c-theory என்ற இணைய இதழில் வெளியானது.
பிம்பங்களின் பெருக்கத்தில் பரவிப்பாயும் நவீன சமுதாயத்தை பூத்ரியாரின் ஆன்மா/பிம்பம் இனியும் துரத்துமா?


1 உரையாட வந்தவர்கள்:

  1. லக்கிலுக் said...

    //நேற்று இரவு தம்முடைய 77-ஆவது வயதில் பாரிஸ் நகரில் காலமானார்.//

    அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.


    பின்நவீனத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பதியுங்கள். நான் ஒருவனாவது சத்தியமாக முழுவதும் படிப்பேன்.