நவீன எழுத்தும் வைதீக மனமும்


தமிழில் புதியவகை எழுத்துமுறை, மேற்கத்திய சிந்தனைமுறை, மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட 'நவீன' இலக்கியம் என்பது ஆரம்பித்த ஆண்டு என்று 1959 அய்ச் சொல்லலாம்.
அப்போதுதான் சி.சு.செல்லப்பாவால் எழுத்து இதழ் தொடங்கப்பட்டது.
சிறுபத்திரிகை என்கிற வகையினம் அடையாளப்படுத்தப்பட்டதும் இதே எனலாம். அதற்கு முன்பே மணிக்கொடி பத்திரிகை வெளியாகியிருந்தாலும் அதைச் சிறுபத்திரிகைக் கணக்கில் சேர்க்கமுடியாது என்கிறார் பேராசிரியர்.வீ.அரசு (சிறுபத்திரிகை அரசியல் - கங்கு வெளியீடு பக் 10- 11).

தமிழில் வந்துசேர்ந்த இந்த நவீன எழுத்து இயக்கம் பல கொடைகளை வழங்கியிருக்கிறது. எழுத்தைத் தொடர்ந்து உள்வட்டம், பிரக்ஞை, கசடதபற, யாத்ரா, கொல்லிப்பாவை ஆகிய பல இதழ்கள் வரத்தொடங்கின. புதுமைப்பித்தன், கு.ப.ராசகோபாலன், கு.அழகிரிசாமி போன்ற இலக்கிய ஜாம்பவான்கள் இயங்கிக்கொண்டிருந்ததும் இக்காலத்தில்தான்.
தமிழின் எழுத்து முறையையும் சிறுகதை வடிவத்தையும் வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்ரவர்கள் என்ற வகையில் இவர்கள் மதிக்கப்படத்தகுந்தவர்களே. பரதநாட்டியம், நவீன ஓவியம் போன்றவை பற்றியும் தெருக்கூத்து போன்ற நுண்கலைகள் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டன.

ஆனால் 1966ல் 'புதியதலைமுறை' இதழ் வரும்வரை இவர்களின் எழுத்து என்பது குண்டுச்சட்டிக்குள் குதிரைப்பந்தயம் நடத்துவதாகவே இருந்தது.சமகாலச்சூழல் தன் எழுத்தில் எங்கும் வராதவாறு பிரக்ஞைபூர்வமாகப் பார்த்துக்கொண்டனர். அரசியல் என்பதை தீண்டப்படாத ஒன்றாகவே இவர்கள் பாவித்தனர். ஆனால் இவர்களின் பிரதிகளில் செயற்பட்ட அரசியலைப் பின்னால் வந்த அமைப்பியல் மற்றும் பின்நவீன விமர்சனங்கள் வெளிக்கொணர்ந்தன.

புதுமைப்பித்தனின் கதைமாந்தர் பெரும்பாலும் திருநெல்வேலி சைவப்பிள்ளைமாராகவே இருந்தனர். அவர்களின் துயரம் பற்றியே பு.பி மீண்டும் மீண்டும் எழுதினார். என்பதைப் பறைநாய் என்று மொழிபெயர்த்தார். தலித்துகளுக்கும் கிறித்துவ மிஷனரிகளுக்கும் இடையிலான உறவை எதிர்மறையாகவே அணுகினார். அப்போதைய காலகட்டத்தில் மணிக்கொடி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களை 'சுயமரியாதைக் காலிகள்' என்றே எழுதியது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்கத்துக்காரர்கள் குறிப்பிடத்தக்க சீர்திருத்தச் சினிமா எடுத்துக்கொண்டிருந்தபோது புதுமைப்பித்தனோ அவ்வையாரை ஒரு இந்துப் புராண மரபிற்குள் அடக்கும் ஜெமினி பிலிம்சின் 'அவ்வையார்' படத்திற்கு வசனம் எழுதப்போனார்.

சிறுகதையின் திருமூலர் என்றழைக்கப்படும் மௌனியின் நிலையோ இன்னும் மோசம். மௌனிக்கு ஒருபத்திகூடத் தமிழில் இலகக்ணப்பிழை இல்லாமல் எழுததெரியாது. ஆனால் இதை புதுவகை எழுத்து என்று அன்றைய 'நவீன' இலக்கியவாதிகள் கொண்டாடினர். மௌனி குறித்த விரிவான விமர்சனங்களுக்கு காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான 'மௌனி இலக்கியத்தடம்' நூலில் இடம்பெற்றுள்ள தமிழவன் மற்றும் அ.மார்க்ஸ் ஆகியோரின் கட்டுரைகளைப் படிக்கலாம்.

தமிழகம் மௌனியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த காலத்தில் மறைந்த ஈழத்து எழுத்தாளர் சு.வில்வரத்தினம் அவர்மீது காத்திரமான விமர்சனங்களை வைத்தார். மௌனியின் வைதீக மனோபாவத்திற்கு ஒரே ஒரு உதாரணம். 60களில் அவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் 'திமுக ஆட்சிக்கு வந்தால் தான் எழுதுவதையே நிறுத்தப்போவதாக'க் கூறுகிறார்.

பார்ப்பனீய மதிப்பீடுகளைத் தாங்கிப்பிடிக்கும் காங்கிரஸ் என்னும் நிலப்பிரபுத்துவக்கட்சியின் சரிவையே தாங்கவோ ஜீரணிக்கவோ முடியாதளவிற்கு மௌனியிடம் சனாதன மனோபாவம் ஊறிப்போயிருந்தது. இத்தகைய மனோபாவம் 'நவீன' எழுத்தாளர்களாக இருந்த பல ஆதிக்கச்சாதி எழுத்தாளர்களுக்கு இருந்தது. இந்தவகைப்படட் அழகியலை அடிப்படையாகக் கொண்ட 'நவீன மேட்டுக்குடி' மனோபாவத்தின் கடைசிக்கொழுந்தாக சுந்தரராமசாமியைச் சொல்லலாம்.

தமிழில் புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்துபவர்களை 'கண்டதைத் தின்று விட்டு வால்தூக்கிக் கழியும் பிறவிகள்' என்றே சு.ரா தீராநதியில் வந்த ஒரு கேள்வி பதிலில் கூறினார். 'தண்ணீர்' போன்ற படைப்புகளைத் தந்ததன் மூலம் அசோகமித்திரன் தமிழில் முக்கியமான படைப்பாளி என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் அவர் 'பார்ப்பனர்கள் தலித்துகளைப் போல கஷ்டப்படுகிறார்கள்' என்று அவுட்லுக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி நம்மில் பலருக்கு நினைவிருக்கும்.

சமீபத்தில் ஜனவரி 2007 தீராநதி நேர்காணலிலும் அ.மி அதே வைதீக மனோபாவமுடையவராகவேயிருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறார். அந்தப் பேட்டி முழுவதிலுமே பார்ப்பன மிடில்கிளாஸ் மனோபாவமே தெரிகிறது. இன்னொரு 'நவீனக்' கவிஞரான ஞானக்கூத்தனின் நேர்காணல் தற்போதைய குமுதம் தீராநதி - மார்ச் 2007 இதழில் வெளியாகியிருக்கிறது.

திராவிட இயக்கங்கள் குறித்து மோசமான சித்திரங்களைத் தன் கவிதையில் தீட்டியவர் ஞா.கூ. அதுகுறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் 'பாரதிதாசன்கூடத்தான், "'நான் ஆரியன் இல்லை என்று சொல்லிக்கொள்வதிலே பெருமைப்படுகிறேன்' என்கிறார். இது மோசமான கருத்து இல்லையா?" என்கிறார்.
ஒரு பார்ப்பனன் தன்னைப் பார்ப்பனனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் சாதியப்-பெருமிதத்திற்கும் பார்ப்பன அல்லாதவன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எதிர் அரசியல் மனோபாவத்திற்கும் வித்தியாசம் தெரியாதவரா கூத்தன்?

இப்படியாகத்தான் தமிழின் 'நவீன' எழுத்தாளர்கள் 'வைதீக'வாதிகளாக இருந்துகொண்டே 'நவீன' இலக்கியங்களைப் படைத்தார்கள். மாற்றுச்சிந்தனைகளைக் குறித்துப் பேசுவோர் வடிவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமுள்ள தொடர்பு குறித்துப் பேசுவர். வடிவத்தை மாற்றாமல் வெறுமனே உள்ளடக்கத்தை மட்டும் மாற்றுவது மாற்று இல்லையென்பர். \
உதாரணமாக கல்விக்கூடங்களின் நிறுவனத்தன்மை, ஆசிரியர்களின் சட்டகமனப்பான்மை, ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான அதிகாரப்படிநிலை இவற்றை மாற்றாமல் வெறுமனே 'ஆங்கிலக்கல்வி' என்னும் உள்ளடக்கத்தை எடுத்துவிட்டு 'தமிழ்வழிக்கல்வி' என்னும் உள்ளடக்கத்தை வைத்துவிடுவதாலேயே அது மாற்றுக்கல்வியாகிவிடாது.

ஆனால் இங்கு நிலைமையோ தலைகீழாக இருக்கிறது. இந்த 'நவீன எழுத்தளர்கள் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அவர்களது மனமோ வைதீகக்குட்டையில்தான் ஊறிக்கொண்டிருக்கிறது. ஒரு சனாதன மனம் எப்படி நவீன எழுத்தைப் படைக்கும் என்று நமக்கு விளங்கவில்லை. என்ன செய்வது? நவீன அறிவியலின் விளைபொருளான கம்ப்யூட்டருக்குப் பொட்டுவைத்து குங்குமம் பூசி ஆயுதபூஜை கொண்டாடி அழகுபார்க்கும் தேசமல்லவா இது?

7 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  மெளனி குறித்து எம்.ஏ.நுஃமான் நல்லதொரு கட்டுரை எழுதியிருந்தார் என்று வாசித்திருக்கின்றேன். சு.வி எந்த இதழில் எழுதினார் என்ற விபரத்தை -இயலுமாயின் - தரமுடியுமா? நன்றி.

 2. Anonymous said...

  டெம்ப்ளேட் சூப்பர்.

  உதவி யாருங்கோ...

  செந்தழல் ரவி

 3. Jayaprakash Sampath said...

  புதுமைப்பித்தன், எதை பறை நாய் என்று மொழிபெயர்த்தார் என்பது விடுபட்டிருக்கிறதே

 4. Anonymous said...

  //தமிழகம் மௌனியை உச்சி மீது வைத்துக் கொண்டாடிக்கொண்டிருந்த காலத்தில் மறைந்த ஈழத்து எழுத்தாளர் சு.வில்வரத்தினம் அவர்மீது காத்திரமான விமர்சனங்களை வைத்தார்//
  சு.வி எழுதியிருக்கிறாரா? ஏ.ஜே.கனகரத்னா தானே மெளனியைப் பற்றி விமர்சித்திருக்கிறார்...

 5. Anonymous said...

  ஏ.ஜே.கனகரட்னாவின் மௌனி பற்றிய கட்டுரையினை tn.wikipedia.org படிக்கலாம்

 6. மிதக்கும்வெளி said...

  /புதுமைப்பித்தன், எதை பறை நாய் என்று மொழிபெயர்த்தார் என்பது விடுபட்டிருக்கிறதே /

  street dog என்பதைத்தான் அவ்வாறு மொழிபெயர்த்தார். விடுபட்டுவிட்டது. உணர்த்தியதற்கு நன்றி.

 7. மிதக்கும்வெளி said...

  சு.வில்வரத்தினம் மறைந்தபோது 'உயிர்மை' இதழில் வந்த அஞ்சலிக்கட்டுரையில் மௌனி குறித்த அவரது விமர்சனங்களைப் படித்ததாக நினைவு.