தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து...முன்னதாக...

நான் எழுதத் தொடங்கியபோது நினைத்த பல விஷயங்கள் எழுதி முடித்தபோது விடுபட்டிருக்கின்றன. என் தீர்மானங்களுக்கு அப்பால் பல விஷயங்கள் புதிதாகச் சேர்ந்திருக்கின்றன. ஆனால் இது மேலோட்டமான அறிமுகம்தானே தவிர ஆழமான அலசலோ முடிவான பார்வையோ அல்ல, சாத்தியப்பட்டவரை எளிமையாகவே எழுதமுயற்சித்திருக்கிறேன்.
- - - - - --------------------------------------------------------------
பின்நவீனத்துவம் குறித்த ஆழமான உரையாடல்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து ஆராயாமல் பின்நவீனம் என்னும் கோட்பாடு தமிழ்ப்பெருவெளியில் ஏற்படுத்திய பாரிய தாக்கங்கள் குறித்துமட்டுமே இக்கட்டுரை ஆராய முயல்கிறது.
தமிழ்ச்சூழலில் புதியவகை எழுத்துமுறை, மேற்கத்தியச் சிந்தனைமுறை மற்றும் மேற்கத்திய படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகவைத்து புதிய இலக்கியவகைமை 1959லிருந்துதான் தொடங்குகிறது.
'எழுத்து' இதழ் தொடங்கிவைத்த இந்த பாரம்பரியம் சமூக இருப்பு குறித்த எந்தக் கேள்வியுமற்று வைதீகக்கருத்தியலை உறுதிசெய்யும் மரபாகவே இருந்துவந்தது. இதிலிருந்து விலகி வைதீகநீக்கம் செய்யப்பட்ட நவீன இலக்கியமரபை 1967ல் 'புதிய தலைமுறை' என்னும் இடதுசாரிச்சிற்றிதழ் தொடங்கிவைக்கிறது. அதைத்தொடர்ந்து மார்க்சியம் இன்று, நிகழ், பரிணாமம், வெளிவட்டம் ஆகிய இடதுசாரி இதழ்மரபின் கடைசிக்கொழுந்து என்று நிறப்பிரிகை இதழைச் சொல்லலாம்.
1990 முதல் 2000 வரை இதழ்களைக் கொணர்ந்த நிறப்பிரிகைதான் பின்நவீனம் என்னும் சொல்லைத் தமிழில் விவாதப்பொருளாக மாற்றியது. குறிப்பாக அ.மார்க்ஸ் எழுதி விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த 'பின்நவீனத்துவம் இலக்கியம் அரசியல்' என்னும் நூல் பல்வேறுபட்ட இலக்கிய மற்றும் அரசியல் இயக்கங்களில் அதிர்வுகளை உண்டுபண்ணியது.
மார்க்சியம் : சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் உலகமெங்கும் மார்க்சியம் மற்றும் சோசலிசம் குறித்த கேள்விகள் எழத்தொடங்கின. 'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துபோகும்' என்று காரல்மார்க்ஸ் சொன்னதற்கு மாறாக சோசலிசநாடுகளில் அரசு இறுக்கமடைந்தது குறித்து உரையாடல்கள் தொடங்கின. அதற்கு முன்பே இங்கு மாவோயிஸ்ட்கள் சோவியத்யூனியனை 'சமூக ஏகாதிபத்தியம்' என்று வரையறுத்து விமர்சிக்கத்தொடங்கினர்.
இந்தச்சூழலில் நிறப்பிரிகையின் முதல் இதழிலேயே சோசலிசக்கட்டுமானம் குறித்ததாக உரையாடல் அமைந்தது. ஒரு மனுசி/தனுக்கு மொழி, வர்க்கம், சாதி, பால், தேசியம் எனப் பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் ஏதேனும் ஒற்றை அடையாளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கட்டமைக்கப்படுவதே அடையாள அரசியல்.(politics of identity) இந்த அரசியலை பின்நவீனம் மறுக்கிறது.
உதாரணமாக இந்தியச்சூழலில் ஒரு மனிதனுக்கு சாதி, மதம், மொழி, வர்க்கம், பால் என பல்வேறு அடையாளங்கள் உள்ளன.ஆனால் அடையாள அரசியல் ஏதேனும் ஒரு அடையாளத்தை மட்டுமே மய்யப்படுத்துகிறது. ஆனால் எல்லாவகையான அடையாளங்களையும் கணக்கிலெடுக்கவேண்டும். அதுவல்லாது ஒற்றை அடையாளத்தை மட்டும் வலியுறுத்துவது பன்மைத்துவத்தை மறுப்பதாகும் என்றது நி.பி. மேலும் அடையாள அரசியலால் மறுக்கப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாத நுண்ணிய அடையாளங்களை (பெண், தலித், பால்மீறி...) அடிப்படையாக வரையறுத்து வித்தியாசங்களின் அரசியல்(politics of differences), மிச்சங்களின் அரசியல்(politics of reminders) ஆகியவற்றை முன்வைத்தது நிறப்பிரிகை. மேலும் அவர்களுக்கிடையில் வித்தியாசங்களை அங்கீகரித்து ஒருங்கிணையும் ஒரு 'வானவில் கூட்டணி'யும் தேவை என்றது.
வட இந்தியாவில் ரணஜித்குகா போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட விளிம்புநிக்லை வரலாறை(subaltarn)யும் அது பயன்படுத்திக்கொண்டது. வரலாறு என்பதே கதைகூறல்(narrative)தான், மேலும் அது எழுதுபவர் அல்லது தொகுப்பவர் ஆகியோர்க்குச் சாதகமாகவே தொகுக்கப்படுகிறது (அ) எழுதப்படுகிறது. இந்த வகையிலேயே வரலாறு 'உருவாக்கப்படுகிறது'. இந்த வரலாற்றால் கண்டுகொள்ளப்படாத விளிம்புநிலை மக்களின் வரலாற்றையும் கணக்கிலெடுக்க வேண்டியது அவசியம். எழுதப்படாத வாய்மொழி வரலாறுகளும் (oral history)வரலாறே என்றது நி.பி.
மார்க்சிய அமைப்புகள் குறித்துப் பேசும்போது கட்சியில் அதிகாரம் மேலிருந்து கீழ்செலுத்தப்படுவதை அது விமர்சித்தது. அதற்கு மாறாக கீழிருந்து மேல்நோக்கியதான அதிகாரத்தை அது கோரியது. கட்சிக்குள் சனநாயகம், கருத்துப்பரவல், மய்யப்படுத்தப்படாத அதிகாரம் ஆகியவற்றை முன்வைத்தது. முதலாளித்துவம் என்னும் உள்ளடக்கத்தை மட்டும் எடுத்துவிட்டு சோசலிசம் என்னும் உள்ளடக்கத்தை வைத்துவிட்டால் போதாது. வடிவத்திலும் மாற்றம் வேண்டும் என்றது நி.பி. இதன் தொடர்ச்சியாக மருத்துவமனை, பள்ளி ஆகியவற்றில் செயற்பட்ட அதிகாரத்தையும் கணக்கிலெடுத்து மாற்றுக்கல்வி (பாவ்லோபிரேயரை முன்வைத்து...), மாற்றுமருத்துவம் ஆகியவை பற்றிப்பேசவேண்டும் என்றது.
ஆனால் இதை மார்க்சிய அமைப்புகள் கம்யூனிசத்தை அழிக்கவந்த ஏகாதிபத்தியச்சதியாகவே பார்த்தனர். அமைப்பை உடைப்பவர்கள் என சாடினர். சி.பி.எம் போன்ற பல மய்யநீரோட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து பல இளைஞர்கள் நிறப்பிரிகைப் போக்கினால் வெளியேறியதும் அதற்குகொரு காரணம்.
தேசியம் : இந்தியத்தேசியத்தை மறுத்த நிறப்பிரிகை 'தேசியம் ஒரு கற்பிதம்'(nationalism is an imaging), 'தேசம் என்பது கற்பிக்கப்பட்ட சமூகம்(nation is an imagined community)' என்னும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கூற்றின் அடிப்படையில் நமக்கான தமிழ்த்தேசியத்தைக் கற்பிக்க வேண்டியது அவசியம் என்று உரையாடலைத் தொடங்கினர்.
மேலும் தமிழ்க்கலாச்சரம் என்பது ஒரு படித்தானது அல்ல. இங்கு பல்வேறுவகையான கலாச்சாரங்கள் நிலவுகின்றன என்றனர்.பொதுவாக தேசிய இனப்பிரச்சினையில் ஸ்டாலினின் புகழ்பெற்ற வரையறையான 'தேசம் என்பது பொதுவான மொழி, பொதுவான எல்லை, பொதுவான எல்லை, பொதுவான பொருளாதாரம்,பொதுவான மனோநிலை' என்பதை மறுத்த நி.பி காஷ்மீர், பாலஸ்தீனம் ஆகியவற்றில் இதைத் தாண்டி மதம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் தேசியம் அமைவதைச் சுட்டிக்காட்டினர். மேலும் 'பொது' வானது என்பது ஒன்று கிடையாது என்றும் கூறினர்.
மொழியை வெறுமனே கருத்துப்பரிமாற்றத்திற்கான கருவியாகவோ அல்லது அதை வழிபாட்டுக்குரிய பொருளாகவோ பார்த்த இரண்டு நிலைப்பாட்டிலிருந்தும் மாறி மொழி என்பது அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஊடகமாகச் செயற்படுகிறது என்று நிறுவினர். இதற்கு இம்மானுவேல் காண்ட், சசூர், தெறிதா தொடங்கி பெரியார் தமிழ்மொழி மீது வைத்த விமர்சனங்கள் வரைப் பயன்படுத்தினர்.
ஆனால் இந்தியத்தேசியம் என்பது போலியானது என்ற தமிழ்த்தேசியவாதிகளால் தமிழ்த்தேசியமும் கற்பிதம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியவில்லை. அவர்கள் நிறப்பிரிகை குழுவினரை 'தமிழ்த்தேசியத்தின் ஓர்மையைக் குலைக்கவந்தவர்கள்' என்றும் 'தமிழ்த்துரோகி' என்றும் விமர்சித்தனர்.
இலக்கியம் : நாம் முன்பே பார்த்தபடி எழுத்துப் பாரம்பரியத்தினரின் எழுத்துக்களில் நிலவிவந்த சாதிய அதிகாரம் குறித்துக் கேள்வியெழுப்பியது நி.பி. புதுமைப்பித்தன் போன்ற ஆதர்சங்களின் எழுத்துக்களில் இருந்த சாதிய உளவியலை அடையாளப்படுத்தினர். கட்டவிழ்ப்பு (deconstruction) என்னும் புதிய இலக்கியவகைக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
எழுத்தாளன் என்பவன் உயர்ந்தவன் என்னும் பெருமிதமே இங்கு நிலவிவந்தது. ஆனால் பி.ந எழுதப்படும் எல்லாமும் பிரதிகள்தான். ஒரு படைப்பை எழுதியவுடனே அந்த படைப்பாளி இறந்துவிடுகிறான். பிறகு வாசிப்பதன் மூலம் வாசகன் தான் படைப்புக்கு அர்த்தத்தை ஏற்படுத்துகிறான் என்றது. அதுவும் ஒரு படைப்புக்கு ஒரேமாதிரியான வாசிப்பு கிடையாது. எனக்கு ஒரு படைப்பு ஒரு அர்த்ததைத் தரலாம், உனக்கு வேறொரு அர்த்தத்தைத் தரலாம் என்றது.
இதனால் படைப்பாளிக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் தகர்க்கப்பட்டன. இலக்கியத்தில் அரசியல் இருந்தாலே அதைத் தீண்டதகாததாகப் பார்த்தனர் 'நவீன' இலக்கியவாதிகள். ஆனால் அரசியலற்ற இலக்கியம் என்று சொல்லப்படுவதிலும் அரசியல் இருக்கிறது என்று நி.பி கட்டவிழ்த்துக்காட்டியது. தமிழில் நவீன இலக்கியங்களோடு தொடர்புடையவர்களாக பார்ப்பன், வெள்ளாள மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே இருந்தனர். ஆனால் நி.பி கையின் வரவிற்குப்பின்னால் ஏராளமான தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த இளைஞர்கள் எழுதத்தொடங்கினர்.
சாதி : மார்க்சிய மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் கணக்கிலெடுக்காமலிருந்த சாதிய அம்சங்களை அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளில் நி.பி வலியுறுத்திப்பேசியது. 1992 பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தலித் இலக்கியம், தலித் அரசியல் ஆகியவை குறித்த விவாதங்களை நி.பி தொடங்கிவைத்தது. 'தலித் அரசியல் அறிக்கை' என்னும் நூல் வெளியிடப்பட்டது.
'தலித்துகள் 'திருத்தப்படவேண்டியவர்கள்' என்னும் பார்வையை மறுத்து தலித்பண்பாடு என்பதும் குறிப்பிடத்தக்க பண்பாடுதான் என்றது நி.பி. இதனடிப்படையில் அழகியல், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவை குறித்துப் பலகேள்விகளை எழுப்பியது. நிறப்பிரிகையின் வரவுக்குப் பின்னரே இங்கு தலித் இலக்கியம் வீச்சுடன் வரத்தொடங்கியது.
பெண்ணியம் : பொதுவாகப் பெண்விடுதலை என்றால் அது பொருளாதார விடுதலையே என்று மார்க்சியர்கள் பேசிவந்த சூழலில் கலாச்சார விஷயங்களைப் பேசியது நி.பி. குறிப்பாக பாலியல் சுதந்திரம், குடும்பத்தின் வன்முறை, கற்பு ஆகியவை குறித்துப் பேசியது. இதை மரபான மார்க்சியர்கள் மற்றும் தேசியர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நி.பி குழுவினரைக் கலாச்சாரச் சீரழிவுவாதிகள் என்றும் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் என்றும் விமர்சித்தனர்.


இங்கு பின்நவீனத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்ட காலத்திலேயே அதை மறுக்கும் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக மார்க்சியர்கள் இதுகுறித்துப் பல கண்டனங்களையும் மறுப்புகளையும் முன்வைத்தனர். அவற்றில் சிலவற்றிற்கு நியாயங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நிறப்பிரிகையின் செயல்பாடு அவர்களுக்குள்ளும் பலமாற்றங்களை ஏற்படுத்தின என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
இலக்கியச்சூழலில் மாபெரும் மாறுபாடு ஏற்பட்டு தலித் இலக்கியம் என்பது இன்று அங்கீகரிக்கப்பட்ட இலக்கியமாக மாறிவிட்டது. எதார்த்த இலக்கியங்களைத் தாண்டிய அ-நேர்கோட்டு எழுத்து, மாய எதார்த்தவாத இலக்கியப் படைப்புகளும் அதிகமாக வரத்துவங்கிவிட்டன.
மார்க்சிய அமைப்புகளும் சாதி குறித்த அம்சங்களைக் கணக்கிலெடுக்கத் துவங்கியிருக்கின்றன. நிறப்பிரிகை, தான் முன்வைத்த பல கோட்பாடுகளின் அடிநாதமாகப் பெரியாரையே முன்வைத்தது. மேலும் பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், பிரிவினை கோரியவர், இட ஒதுக்கீட்டிற்காகப் போராடியவர் என்றே சொல்லப்பட்ட பல விஷயங்களைத் தாண்டி பெரியாரின் பன்முகப் பரிமாணங்களையும் வெளிக்கொணர்ந்து உரையாடினர்.
இப்போது சி.பி.அய், சி.பி.எம் போன்ற மய்யநீரோட்டக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரியாரைப் பற்றிப் பேசத்தொடங்கியுள்ளனர். ம.க.இ.க போன்ற நக்சல்பாரி அரசியலாளர்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் கையிலெடுக்கின்றனர். 'பார்ப்பான்ப் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு' போன்றவற்றை நடத்துகின்றனர். இப்படியாகப் பலமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆனால் நிறப்பிரிகை முன்னெடுத்த தலித் அரசியல் என்பது வேறுதிசைக்கு மாறிவிட்டது. குறிப்பாக தலித்மகக்ளில் பெருந்திரளைக் கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு தமிழ்த்தேசியத்தை முன்வைக்கும் குறுந்தேசிய அமைப்பாகவும் பெண் தலைமைகள் பற்றிய பிரக்ஞையற்றும் மறுபுறத்தில் கற்பு போன்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை வலியுறுத்தும் ஆணாதிக்க அமைப்பாகவும் மாறிவிட்டது. ஆனாலும் ஆதித்தமிழர்பேரவை போன்ற அருந்ததிய அமைப்புகள் திருப்தியளிக்கும் விதத்திலேயே செயல்படுகின்றன. தலித் அரசியல் என்பதே பறையர் அரசியலாக மாறிவிட்ட சூழலில் அருந்ததியர், புரதைவண்னார், பழங்குடிகள், நரிக்குறவர் ஆகியோரின் உரிமைகளைப் பேசவேண்டியது மிகமிக அவசியமானது.
நிறப்பிரிகை என்பது இதழாக மட்டுமில்லாது ஒரு இயக்கம் போலவே செயல்பட்டு வந்தது. நிறப்பிரிகைப்பள்ளியில் உருவான குமாரசெல்வா போன்ற பல எழுத்தாளர்கள் எழுதுவதைக் கைவிட்டுவிட்டனர். அல்லது சிலர் மாற்றுமுகாம்களில் தஞ்சமடைந்துவிட்டனர். நிறப்பிரிகையின் ஆசிரியர்குழுவில் இடம்பெற்ற ரவிக்குமார் காலச்சுவடு இதழின் ஆசிரியர்குழுவிலேயே இடம்பெற்றுவிட்டார்.மட்டுமில்லாது பெரியார், தலித் மகக்ளின் விரோதி என்றும் பெண்பித்தர் என்றும் காலச்சுவடுவில் மட்டுமில்லாது பல இதழ்களில் எழுததொடங்கினார். 'தெலுங்கு பேசும் மகக்ளை (அருந்ததியர் உட்பட) வெளியேற்ற வேண்டும்' என்னும் தமிழ் அடிப்படைவாதப் பத்திரிகையான 'வேர்கள்' போன்ற இதழ்களிலும் தொடர் எழுதுகிறார்.
நிறப்பிரிகையின் இன்னொரு ஆசிரியரான பொ.வேல்சாமியோ காலச்சுவடுவில் எழுதுவது மட்டுமில்லாது அவரது கட்டுரைகளின் தொகுப்பு 'பொற்காலங்களும் இருண்டகாலங்களும்' காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாகவே வந்திருக்கிறது. நிறப்பிரிகையின் அரசியலை (விமர்சனத்தோடு) ஏற்றுக்கொண்ட இதழ்களாக கவிதாசார்ன், கேப்பியார், களம்புதிது, வேறுவேறு ஆகிய இதழ்கள் வெளிவந்தன. ஆனால் இப்போது 'கவிதாசரண்' மட்டுமே வெளிவருகிறது.
ஆனால் எல்லாவற்றையும் தாண்டி நிறப்பிரிகைக்குப் பிறகு அதனளவிற்கு காத்திரமான இதழ் தமிழில் வரவில்லையென்றுதான் சொல்லவேண்டும். அது ஏற்படுத்திய தாக்கங்கள் தமிழ்ச்சூழலில் பலமாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைகளிலும் பல பங்களிப்புகளைச் செய்த சாருநிவேதிதா, ராஜன்குறை, ராஜ்கவுதமன், பேராசிரியர் பா.கல்யாணி,வளர்மதி, இன்குலாப் போன்ற பலரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலானதுதான்.
ஆனால் காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய முதலாளிகளால் மட்டுமே சிறுபத்திரிகைகளை 'வெற்றிகரமாக' நடத்தமுடியும் என்னும் அவலச்சூழல் உருவாகியுள்ள நிலையில் நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது.

11 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  சுருங்க விரிந்ததைச் சொல்லியிருக்கின்றீர்கள்.

  தலித்முரசு சஞ்சிகையையும் சேர்க்கலாம்.

 2. Anonymous said...

  //'அரசு என்பது சோசலிசச்சமூகத்தில் உலர்ந்து உதிர்ந்துபோகும்'//

  Diwakar, I think you are making a mistake in here. Can you tell where Marx told like this?

  I guess he has told the same statement for a communist society. Whereas Class war will continue in Socialistic setup and the state will exist in socielistic kind of setup.

 3. லக்கிலுக் said...

  மிக மிக அருமையான பதிவு தோழரே!!!

  பின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் தானே வரும்?

 4. Anonymous said...

  //நிறப்பிரிகை இதழின் கூட்டுவிவாதங்களிலும் கட்டுரைகளிலும் பல பங்களிப்புகளைச் செய்த சாருநிவேதிதா, ராஜன்குறை, ராஜ்கவுதமன், பேராசிரியர் பா.கல்யாணி,வளர்மதி, இன்குலாப் போன்ற பலரும் தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது ஆறுதலானதுதான்.//
  are you and Valarmathie are the same person

 5. Anonymous said...

  அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம்.

 6. மிதக்கும்வெளி said...

  /
  தலித்முரசு சஞ்சிகையையும் சேர்க்கலாம். /

  தலித்முரசு ஒரு தலித் இதழ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பின்நவீனத்துவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.

 7. மிதக்கும்வெளி said...

  / guess he has told the same statement for a communist society. Whereas Class war will continue in Socialistic setup and the state will exist in socielistic kind of setup/

  நீங்கள் சொல்வது சரிதான். கம்யூனிஸ்ட் சமூகத்தில்தான் அரசு உதிரும் என்கிறார். சோசலிசச்சமூகம் என்பது மார்க்சின் வரையறைப்படி இடைநிலைச்சமூகம்தானே>?

 8. மிதக்கும்வெளி said...

  /பின்நவீனத்துவ வாதிகள் பார்வையில் திராவிடமும் அடையாளப்படுத்துதல் என்ற வகையில் தானே வரும்? /

  ஆமாம். ஆனால் திராவிடத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எனது 'தமிழ், தமிழர், திராவிடம்' பதிவைப் படியுங்கள்.

 9. மிதக்கும்வெளி said...

  /are you and Valarmathie are the same person /

  no.

 10. மிதக்கும்வெளி said...

  /அரசியல் ஃபார் டம்மிஸ் என்று தலைப்பு வைத்திருக்கலாம். /

  ஏன்?

 11. ரவி ஸ்ரீநிவாஸ் said...

  நிறப்பிரிகை குறித்த உங்கள் மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு.
  "நிறப்பிரிகையின் இழப்பும் வெற்றிடமும் இட்டு நிரப்பமுடியாததாகவும் துயரமானதாகவுமிருக்கிறது. "

  மிகவும் உணர்ச்சிகரமான மதிப்பீடு இது, தொல்லைக்காட்சி தொடர்களின் வசனங்களைப் போன்று அபத்தமாக இருக்கிறது.
  நிறப்பிரிகை இல்லாமல் இருந்திருந்தாலும் கூட நீங்கள் குறிப்பிடும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நிறப்பிரிகையின் வருகைக்கு முன்னரே தலித் இலக்கியம் இங்கு உருவாகத் தொடங்கிவிட்டது. நிறப்பிரிகையோ அல்லது வேறு சிறு பத்திரிகைகள் சில காரியங்களைச் செய்திருக்கின்றன.
  ஆனால் இயக்கங்களின் உருவாக்கம், வளர்ச்சி, தேய்வு போன்றவை சிறுபத்திரிகைகளை நம்பி இல்லை
  உங்கள் பதிவில் நீங்கள் படிகள் குறித்து எழுதாதது ஏன்.

  1970களிலும்,1980களின் ஆரம்பத்திலும் படிகள் செய்த பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.நிறப்பிரிகை குழுவிலுள்ளவர்கள் தவிர பிறரும் நிறப்பிரிகை சுட்டிக்காட்டிய சிலவற்றை குறித்து எழுதியிருக்கிறார்கள். உங்களுக்கு சிறு பத்திரிகைகள் குறித்த முழுமையான தகவல்கள் தெரியவில்லை என்று கருதுகிறேன். எதையும் கருப்பு-வெள்ளையாக நோக்கும் போக்கு உங்கள் பதிவில் தெரிகிறது. ஒற்றைப் பரிமாணப் கண்ணோட்டமும், எளிதாக சிலரை நிராகரிக்கும் போக்கும் உங்கள் பதிவில் இருக்கிறது. முடிந்தால் என் பதிவில் விரிவாக பதில் எழுதுகிறேன். நிறப்பிரிகை
  தொடாத அல்லது பேசாத விஷயங்களும் தமிழ்ச் சூழலில் விவாதிக்கப்பட்டுள்ளன. அவை குறித்தெல்லாம் நீங்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. நிறப்பிரிகை சிலவற்றை முன் வைத்தது ஆனால் முன்னெடுத்துச் செல்லவில்லை.
  இன்னும் சொல்லப் போனால் நீங்கள் பெயர் குறிப்பிடாத பலரும் நிறப்பிரிகையில் எழுதியிருக்கிறார்கள் அல்லது நிறப்பிரிகையின் முயற்சிகளுக்கு உதவியிருக்கிறார்கள்.
  சிலர் நிறப்பிரிகை தமிழ்ச் சூழலில் உருவாகவில்லையென்றாலும் கூட தங்களின் பங்களிப்பினை
  தமிழுக்குச் செய்திருப்பார்கள்.
  தேசியத்தை நிராகரித்த அ.மார்க்ஸ் மார்க்க மயக்கத்தில் இருப்பதும், மதமாற்றத்தினை தீர்வாக வைப்பதும், பின் நவீனம், கட்டுடைப்பு ஆகியவற்றை இஸ்லாம் என்று வரும் போது தூக்கி எறிந்து விட்டு மதவாதத்திற்கு வக்காலத்து வாங்குவதையும் என்னவென்று சொல்லுவது.