

"நான் அய்யங்கார்"
"நான் சக்கிலியன்"
"உனக்கு சாதிவேண்டாம் என்று நீதானே சொன்னாய்?"
"ஒரு திருத்தம். எனக்கு மட்டும் சாதி வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. பொதுவாக சாதி வேண்டாம் என்றேன். ஆனால் உங்களுக்கு சாதி என்பது கைவிடமுடியாத அத்தியாவசியமாக இருக்கிறது, உங்கள் ஆண்குறியைப்போல. ஆனால் எனக்கோ சாதி என்பது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது, வெட்ட வெட்ட வளரும் மசிர்போல, மறைவிடத்து மசிர் போல"
"நீ கெட்ட வார்த்தை பேசுகிறாய்"
"கெட்டவார்த்தை என்றால் என்ன நண்பா?"
"அதை எப்படி என் வாயால் சொல்வது?"
"ஓ, உன்னால் உச்சரிக்க முடியாத வார்த்தைகள்தான் கெட்டவார்த்தைகளா?, சரி உனக்குத் தெரிந்த வார்த்தைகளைச் சொல்"
"அய்யங்கார், அய்யர், சாதி, வேதம், மனுதர்மம், இந்துமதம், ராமபிரான், நெடுங்குழைகாதன்..."
"மன்னிக்கவும் நண்பா. எனக்கு அவையெல்லாம் கெட்டவார்த்தைகள்"
"ஏன் இப்படியெல்லாம் பேசறேள்?"
"நான் தெலுங்கு பேசலாமா?"
"ஏன்?"
"ஒவ்வொரு சந்திப்பின்போதும் நீ அவாள், இவாள் என்று உன் ஆத்துப்பாஷையே பேசுகிறாய். நான் சக்கிலியன் என்பதால் என் வீட்டுமொழி தெலுங்கு பேசலாமா என்று கேட்டேன்?"
"ஏன் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுகிறாய்?"
"ஏட்டி என்று ஒன்று இருந்தால் போட்டியும் இருக்கும்தானே நண்பா"
"நாட்டில் முக்கியமான பிரச்சினை நடந்துகொண்டிருக்கும்போது நீ விதண்டாவாதம் பேசித் திரிகிறாய்"
"அப்படியென்ன தலைபோகிற பிரச்சினை?"
"தெருக்களில் இருந்த சாதிப்பெயர்களையெல்லாம் எடுத்துவிட்டார்கள்"
"எங்கள் சேரிக்கள் எவையும் சாதிப்பெயர் தாங்கியவையில்லை"
"அய்யர் தெருவில் அய்யரை எடுத்துவிட்டால் வெறுமனே தெருவென்றாகிவிடுகிறது"
"அது உன் கவலை. என்னுடைய கவலையெல்லாம் சேரி எப்போது தெருவாகவும் ஊராகவும் மாறும் என்பதுதான்"
"சாதிப்பெயர்களை எடுத்து தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார்கள்"
"வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சுந்தரலிங்கம் என்ற பள்ளமாவீரனின் பெயரை பேருந்திற்கு வைத்தபோது தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்து எங்கள் குடிசைகள் தீக்கிரையாயின. அப்போதெல்லாம் கண்டனக்குரல் எழுப்பமுடியாதவாறு உன் வாய் போண்டாக்களாலோ சிக்கன் லெக் பீசாலோ அடைக்கபட்டிருந்தனவா நண்பா. சரி, அதுபோகட்டும் அது ஆதிக்கக் கள்ளர் சாதி வெறியர்களின் வெறியாட்டம். ஜெகஜீவன்ராம் எனும் தலித் அமைச்சர் வடநாட்டில் ஒரு துறவியின் சிலையைத் திறந்துவைத்தபோது தீட்டுப்ப்பட்டுவிட்டது என்று பார்ப்பனர்கள் தண்ணீர் ஊற்றி சிலையைக் கழுவினார்களே, அருணாச்சலம் என்னும் பறையனுக்கு இடம் கிடையாது என்று ஜெயலலிதா அவரை விமானத்திலிருந்து இறக்கிவிட்டாரே, ஏன், இன்னமும் 'அம்பேத்கர் சிலைகள் டிராபிக்கிற்கு இடையூறாக இருக்கிறது" என்று அசோகமித்திரன் என்ற பார்ப்பன எழுத்தாளன் (தீராநதி ஜனவரி 20007) உளறிக்கொட்டினானே. அம்பேத்கர், ஜெகஜீவன்ராம், அருணாச்சலமெல்லாம் தலைவர்கள் இல்லையா நண்பா?"
"இருந்தாலும் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார்......"
"முதலில் அவர்களை மனிதர்களாகச்சொல் நண்பா. சாதிப்பெயர் சுமக்கும் எவனும் எனக்குத் தலைவனாக முடியாது"
"ஏன் நீ பிரித்துப் பிரித்துப் பேசுகிறாய்?. நான் தான் என்னுடைய எலெக்ட்ரிக் டிரெயினில்.."
"ஓ நீ முதலில் கார்தான் வாங்கினாய். இப்போது எலெக்ட்ரிக் டிரெயினையுமா? அதுசரி, நீ எங்கள் சகோதரர்கள் சிலரையே விலைக்கு வாங்கியவனாயிற்றே. இந்த நாடே உன்னுடையதாயிற்றே. எனக்கு உடைமையானதெல்லாம் குப்பைகளைக் கூட்டிப் பெருக்க சில துடைப்பங்களும் துரட்டிகளும் சாதித்திமிர் கண்டால் காறி உமிழ எச்சிலும் சில கெட்டைவார்த்தைகளும்தானே நண்பா"
"என்னை முடிக்கவிடு. நான் உன்னோடு வந்து கிங்பிஷர் பியரும் சிக்கன் பிரியாணியும் சாப்பிடவில்லையா?"
"ஆதிகாலத்தில் நீ சுராபானம் அருந்தியவன் தானே. அபோது நான் சுரா அருந்தாததால் அசுரனாகிப்போனேன். இப்போதோ குடியும் மாமிசமும் எனக்குப் பழக்கமாகிப்போனது. நீ சாப்பிட்டாலோ அது செய்தியாகிறது"
"நீ ஒரு முகமிலிதானே?"
"அதுசரி. வரலாற்றின் பக்கங்களில் முகத்தைத் தொலைத்தவன் தான். ஆமாம் ஊருக்கெல்லாம் ஒழுக்கம் உரைத்த நீ கழிவறைக் கதவுகளுக்குப் பின் சுயமைதுனம் செய்யும்போதுதான் என் நண்பன் கையும் களவுமாகப் பிடித்துவிட்டானே"
"ராமபிரான் வாலியைக் கொல்லும்போது மறைந்திருந்து கொல்லவில்லையா?"
"நீ மீண்டும் கெட்டவார்த்தையிலேயே உதாரணம் சொல்கிறாய்"
"விஷ்ணுபகவான் பல அவதாரங்கள் எடுக்கவில்லையா?"
"எந்த அவதாரம் எடுத்தாலும் என்னைக் கொலைதானே செய்தாய். சம்புகனும் ஏகலைவனும் கம்மி அழும் விசும்பல்களின் ஒலிகள் என் காதில் இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருகிறது நண்பா. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சமும் வள்ளலாரை எரித்த நெருப்பின் மிச்சமும் இன்னமும் எங்கள் இதயக்கூட்டுக்குள் கனன்றுகொண்டிருக்கிறது. தயவுசெய்து அதைக் கிளறிவிடாதே. அதற்குப்பின் இந்த உரையாடல் நிகழ்த்த நான் மட்டும்தான் இருப்பேன்"
"எப்படியோ நீயும் முகமிலி. நானும் முகமிலி"
"நெருக்கடிநிலைக் காலத்தில் நக்சல்பாரிப் போராளிகள் தலைமறைவாக இருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ் நாய்களும் தலைமறைவாகத்தானிருந்தார்கள். இருவரும் ஒன்றா என்ன?"
"நீ மீண்டும் வசவைத் தொடங்கிவிட்டாய்"
"இல்லை. நீ தொடங்கியதே வசவிலிருந்துதான்"
"எப்படி?"
"இந்த உரையாடலைத் தொடங்கும்போதே 'நான் அய்யங்கார்' என்றாய். நீ அய்யங்கார் என்றால் நான் வேசிமகன் என்றுதானே உன் வேதம் உரைக்கிறது. வேசிமகன் என்பது வசவு இல்லையா? அல்லது ஆபாசமில்லையா? சரி பரவாயில்லை. நீ பல அவதாரம் எடுக்கவேண்டியிருக்கும். எனக்கோ அதைத் தாண்டிய சில வேலைகள் இருக்கின்றன.பிறிதொருமுறை சந்திப்போம். முடிந்தால் நீ எலெக்டிரிக் டிரையினையோ அலது கிங்பிஷர் விமானத்தையோ விலைக்கு வாங்கி வா நாம் கிங்பிஷர் அருந்துவோம்"
"உன் சாதிப்புத்திதான் எனக்குத் தெரியுமே. நட்பாகப் பழகுவாய். ஆனால் உன் நண்பனின் வீட்டில் என்னை நினைத்துக் காறியுமிழ்வாய். ஆனால் எனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை உனக்கு நினைவுபடுத்துகிறேன்"
"விடைபெறும்முன் தொடக்கத்தில் நான் சொன்னதையே நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.. நான் உச்சரிக்கும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு கெட்டவார்த்தைகளாக இருக்கின்றன. உனக்கு நல்ல செய்தி சொல்லும் நண்பர்கள் எல்லாம் எனக்கு கெட்டசெய்தியையே உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.நன்றி"
.