காதலைக் கதைத்தல்

உன் சுடிதார் துப்பட்டா
தனக்குச் சிறகாக வேண்டி வண்ணத்துப்பூச்சிகள் தவமிருந்தபொழுதுகளில்
சந்தித்தேன் உன்னை.
உன் கன்னக்கதுப்புகளில்
ஒளிந்திருந்த புறா
நீ சிரிக்கும்போது மட்டும் சிறகசைத்தது.
என் சொற்புலங்களை
ஆக்கிரமித்து நகரமறுத்த நீ
உன் பார்வைகளை
வேறு எங்கேனும்
நகர்த்தியிருக்கலாம்
அல்லது நானாவது....
உனக்குக் கண்களை வழங்கிய
காலம் எவ்வளவு கொடுமையானது
.பிரியத்துக்கும் பிரியமானவளே!
உன்னோடு பேசமுடியாது
உதடுகடித்து
வார்த்தைகளை விழுங்கியபோது
சிதைந்துபோனது
உனக்கான முத்தங்களும்தானடி.
காற்றில் அலைபாயும்
உன்பச்சைத் தாவணியாய்ப்
படபடக்கும் காதலைக்
கட்டுப்படுத்த இயலாது
கைபிசைந்து நின்று
கூந்தலில் புதைந்த
மலர்களில் மனசழிந்து
உன் அதரங்களில்
வழியும்புன்னகையை
உண்டுயிர்த்து
உன் கொலுசின் மணிகளை
பனித்துளிகளோடு ஒப்பிட்ட பொழுதுகள்
எத்துணை இனிமையாயிருந்தன.
உன் கணுக்கால்களில் தெரிந்த
மஞ்சள் வெடிப்புகளைக்
கணக்கிட்டபடிநகர்ந்துகொண்டிருந்தது
என்னின் விரயமான பகல்களும்
கனவுமயமான இரவுகளும்.
உன் நினைவு ஆட்டும்
நேர்க்கோட்டு வழி
அசைந்துகொண்டிருக்கிறேன்
வெறும்பிம்பமாய் மட்டும்.
கொஞ்சமும் இரக்கமற்று
சட்டென நகர்ந்துபோகும்
காலத்தைக் கொல்லடி
குறைந்தபட்சம் உன்பார்வையாலோ
புன்னகையாலோ.

8 உரையாட வந்தவர்கள்:

 1. முபாரக் said...

  ரத்தமும் சதையுமான உயிர்ப்பான வரிகள். காதலுக்கேயுரிய பாசாங்குகளை விடுத்து நெஞ்சைத் தொடும் கவிதை

  வாழ்த்துக்கள் சுகுணா திவாகர்

  சினேகபூர்வம், முபாரக்

 2. Anonymous said...

  நான் ஏன் இப்படி இருக்கிறேன்??


  good question with no answer :).

 3. தமிழ்நதி said...

  "உன் கொலுசின் மணிகளை
  பனித்துளிகளோடு ஒப்பிட்ட பொழுதுகள்
  எத்துணை இனிமையாயிருந்தன."

  அப்படியா...? உங்களால் காதல் கவிதைகளும் எழுத முடியுமெனக் கண்டுகொண்டது எனது இன்றைய ஆச்சரியங்களில் ஒன்றாயிற்று. இது கோடைகாலமா? கவிதைக் காலமா...?

 4. bala said...

  //நான் ஏன் இப்படி இருக்கிறேன்??//

  வெளியே மிதக்க்கும் அய்யா,
  தெரியவில்லை அய்யா,நீங்க ஏன் இப்படி இருக்கறீங்கன்னு.இறைவனின் படைப்பில் பல விசித்திரமான/விபரீதமான பிறவிகள் தோன்றுகின்றன என்று பொத்தாம் பொதுவா சொல்லுவதைத் தவிர, வேறு என்ன சொல்லமுடியும்?mutation மூலமா சில மனிதப் பிறவிகளுக்கு பின்னால் நவீனமா இருக்கும் போலிருக்கிறது.

  பாலா

 5. ஜெகநாதன் said...

  //என்னின் விரயமான பகல்களும்கனவுமயமான இரவுகளும்.உன் நினைவு ஆட்டும்நேர்க்கோட்டு வழி அசைந்துகொண்டிருக்கிறேன்வெறும்பிம்பமாய் மட்டும்.கொஞ்சமும் இரக்கமற்றுசட்டென நகர்ந்துபோகும்காலத்தைக் கொல்லடிகுறைந்தபட்சம் உன்பார்வையாலோ புன்னகையாலோ//

  மிகவும் நுட்பமான உணர்வுகளை கவிதையாக்கி உள்ளீர்கள்
  சிலிர்க்கின்றது
  மிகவும் நன்றாக இருக்கிறது

  உங்கள் பதிவுகளில் கவிதைகளை அதிகமாக எதிர்பார்க்கிறேன்

  தோழமையுடன்
  jeevajegan

 6. குமரன் said...

  ஏதோ பிழை. இந்த கவிதை எனக்கு புரிகிறது.

  நீங்க எழுதுனதா? அல்லது மண்டபத்தில் யாராவது எழுது ட்ந்தார்களா?

  இல்லை. என் புரிதல் மட்டம் நிறைய உயர்ந்துவிட்டதா?

 7. வரவனையான் said...

  எவளாவது காதலித்து தொலையுங்களடின்னு பொலம்பியும் பார்த்தாச்சு ஒன்னும் வேலைக்காகலையே நண்பா .

  நள்ளிரவு கடந்தபின் தினமும் செல்பேசியில் நாம் வழமையாய் புலம்பிக்கொள்ளும் விதயங்களில் ஒன்றாகிவிட்ட இந்த காதலிகளற்ற நாட்கள் தொலைவதென்னாளோ ?

  எதோ குறையிருக்கிறது நண்பா நமக்கு, சிவகணங்களை கண்டது போலல்லவா அலறி ஓடுகிறாளுக

 8. முரளிகண்ணன் said...

  the style of this kavithai is completely differ from your previous and present works.