எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும் முன் தொடர்ந்து...

விளிம்பின் மொழி

மீபத்தில் தமிழ்நதியின் சிறுகதையொன்றைப் படிக்க நேர்ந்தது.
இரண்டுகாரணங்களால் அந்தக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.
1. மய்யப்படுத்தப்பட்ட இலக்கியம், மய்யப்படுத்தப்பட்ட வரலாறு, மய்யப்படுத்தப்பட்ட அரசியல் ஆகியவற்றால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளைப் பேசுகிறது.
2. ஈழத்தமிழர் ஒருவர் விளிம்புகளின் வாழ்க்கையை விளிம்புகளின் மொழியிலேயே நேர்த்தியாகக் கையாண்டிருப்பது.
சமீபத்தில் சாருநிவேதிதாவின் நாவல் 'ராசலீலா'வைப் படித்து முடித்திருக்கிறேன். (உயிர்மை வெளியீடு). இதில் கால்வாசி நாவல் மலம், மலச்சிக்கல், மலங்கழிப்பதிலுள்ள பிரச்சினை ஆகியவற்றைப் பேசுகிறது.
நாவலின் முக்கியக் கதாபாத்திரமான எழுத்தாளன் கண்ணாயிரம்பெருமாள் ஒரு தபால் அலுவலகத்தில் ஸ்டெனோவாகப் பணிபுரிபவன். 9.30 அலுவலகத்திற்கு காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இரண்டு பேருந்துகள், ஒரு டிரெயின் ஆகியவற்றில் பயணித்து அலுவலகம் செல்பவன். இதனால் அவனால் சரிவரக் காலைக்கடன்களை முடிக்கமுடியாமல் போகிறது. இந்த அவஸ்தையைப் பலபக்கங்களில் பேசுகிறார் சாரு.

மலச்சிக்கல் என்பது வெறுமனே உடலியல் பிரச்சினையோ, மருத்துவப்பிரச்சினையோ அல்ல. உடலைக் காவுவாங்கும் மூலதனப்பசியினால் பாதிக்கப்படும் வர்க்கங்களின் பிரசினை. மேலும் இயற்கை உணவிலிருந்து நம்மைத் துண்டித்து இன்று உலகமயமாக்கல் நமது குடலுக்குள் திணிக்கும் மேற்கத்திய உணவுமுறைகள், நமது நிலங்களைச் சுரண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பசுமைப்புரட்சிப் பம்மாத்துகள் ஆகியவற்றோடும் தொடர்புடையது. குறிப்பாக இன்று கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் நிலையை பொருத்திப்பார்க்கலாம்..
அதேபோல க.பெருமாள் மலமள்ளும் சாதியைச் சேர்ந்தவன். சிறுவயதில் மலமும் அள்ளியிருக்கிறான். வளர்ந்து அரசு ஊழியனாகிவிட்ட பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வரும்.ஊர்த்தெருக்களிலுள்ள பீயையெல்லாம் அள்ளிவாரிக் கூடையில் போட்டுவருகிறான். ஒரு பீச்சந்தில் முனிசிபாலிட்டி லாரி தயாராக நிற்கும் . அதில் கொண்டுபோய்க்கொட்டவேண்டும். அப்போது திடிரென்று லாரியின் கதவுகள் திறந்துகொள்கின்றன. ஒருலாரி லோடு மலமும் பெருமாளின் மீது சரிகிறது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட பெருமாள் அலறுகிறான்.
இத்தகய சித்தரிப்புகள் சாரு போன்றவர்களின் எழுத்துகளிலேயே இடம்பெறும். சுந்தரராமசாமி, ஜெயமோகன் போன்ற உன்னத தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளில் மறந்தும் இடம்பெறாது. இன்னும் சொல்லப்போனால் அவர்களின் நாயகர்கள் மலமே கழிக்கமாட்டார்கள். அவர்கள் இறப்பும் பிணியுமற்ற மேன்மக்கள்.
பெருமாள்முருகனின் பீ சிறுகதை (வேறுவேறு இதழில் வெளிவந்தது. பிறகு அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'பீக்கதைகள்' தொகுப்பில் இடம்பெற்றது)யும் குறிப்பிடத்தக்கது .நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள். கம்யூனிசம் பேசிக்கழிக்கிறார்கள். உலக இலக்கியம், உலக சினிமாவை அலசுகிறார்கள். அவர்களிடத்தில் அழகான பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் ஒன்று இருக்கிறது. குடிக்கும்போது யார் அந்த டம்ளரைக் கைப்பற்றுவது என்று அவர்களிடத்தில் போட்டியே நடக்கும்.
இந்நிலையில் அவர்கள் வீட்டு செப்டிங்டேங்கில் ஒரு விரிசல் விழுந்து மலம் கசிய ஆரம்பிக்கிறது. அதைச் சரிசெய்யத் துப்புரவுத் தொழிலாளி வருகிறார். இடையில் அந்த பூப்போட்ட கண்ணாடித்தம்ளர் அந்த தொழிலாளியால் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப்பிறகு அந்த கண்ணாடித்தம்ளரை யாரும் தொடுவதே இல்லை. அந்த டம்ளரே அவர்களுக்கு மலமாகத் தெரிகிறது.
பெருங்கதையாடல்களின் சப்பாத்துகளினடியில் நசிபடும் விளிம்புகள்


லம், பீ, குசு போன்ற இடக்கரடக்கல் அமங்கல வார்த்தைகள் தமிழ்ச்செவ்விலக்கியங்களில் தடை செய்யப்பட்டிருந்தன. 1992இல் பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையொட்டி இங்கு தலித் இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குமுன் இங்கு இருந்த தீவிர இலக்கிய இதழ்களான மணிக்கொடி, எழுத்து போன்ற இதழ்களில் பார்ப்பன, வெள்ளாள, மற்றும் உயர்சாதி எழுத்தாளர்களே எழுதிவந்தனர்.
தலித் எழுத்துக்களை நிறப்பிரிகை, மேலும், ஆகிய இதழ்கள் வெளியிட்டன. பிறகு கேப்பியார், கவிதாசரண், தலித் ஆகிய இதழ்கள் தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தன. இதை ஆதிக்க எழுத்தாளர்களின் பெருங்கதையாடல் மனங்கள் அசூயையுடனே எதிர்கொண்டன.சுந்தரராமசாமி தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்றார். இன்றளவும் அசோகமித்திரன் (குமுதம் தீராநதி ஜனவரி 2007) தலித் இலக்கியம் பற்றிப் பேசும்போது "ஏதோ இப்போதுதான் தலித்துகள் படித்து என்னவோ எழுதிகொண்டிருக்கிறார்கள்" என்கிற ரீதியிலேயே பேசுகிறார்.

பெருங்கதையாடல்களைப் பொறுத்தவரை அவை மூன்றுபடிநிலைகளில் சிறுகதையாடல்களை ஒடுக்க முயல்கின்றன.
1. அவை இலக்கியமே அல்ல என்று நிராகரிப்பது.
2. அவை இலக்கியம்தான் ஆனால் அவற்றில் அழகியல் இல்லை என்று ஒதுக்குவது
3. இது புதிய சிந்தனையில்லை, இதை நாங்கள் ஏற்கனவே யோசித்துவிட்டோம்(அ) எழுதிவிட்டோம் என்று ஊத்திமூடுவது.
இதற்கு நல்ல உதாரணம் சுந்தரராமசாமி. அவர் அசோகமித்திரனைப் போல அப்பாவிப் பார்ப்பனர் அல்ல. தந்திரமான பார்ப்பனர் தமிழ் இலக்கியத்தில் பெருங்கதையாடல்களின் பிரம்மாண்டம்.

முதலில் தலித் இலக்கியத்தைச் சவடால் இலக்கியம் என்று ஒதுக்கிய சு.ரா. வே பிறகு 'தோட்டியின் மகன்' நாவலை நான் முதலிலேயே மொழிபெயர்த்துவிட்டேன்,. அது தலித் நாவல்தான் என்றார். ஒரு கேரளத்து வெள்ளாளரால் எழுதப்பட்டு பார்ப்பனரால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதி எப்படித் தலித்நாவல் ஆகும் என்று நாம் கேள்விகேட்டால் சு.ரா பதிலளிக்காமல் நழுவுவார்.
விளிம்பின் காலம்

ழகியல் என்பதே இயற்கையானதில்லை. அது கொடுக்கப்பட்டது (given). கட்டமைக்கப்படட்து(constructed). ஆதிக்க வர்க்கங்களே அழகியலைத் தீர்மானிக்கின்றன. இந்திய சாதியச் சூழலில் சுத்தம் x அசுத்தம் என்னும் எதிர்வுகளின் அடிப்படையிலேயே தீண்டாமை வரையறுக்கப்பட்டது. சுத்தமாக இருக்கும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும் மலம், சளி, வியர்வை ஆகியவற்றோடு தொடர்புடையவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள்.

இந்தவகையிலேயே அழகியலையும் புரிந்துகொள்ளமுடியும். தலித் இலக்கியப் பிரதிகள், நிலவும் அழகியலுக்கு மாற்றாக எதிர் அழகியலை முன்வைக்கின்றன. பீ, குசு, இன்னும் சில கெட்டவார்த்தைகள் என அழகியலுக்கு எதிரான சொல்லாடல்களைத் தங்கள் பிரதிகளில் தாரளமாய்ப் பிரயோகிக்கின்றன.
என்.டி.ராஜ்குமார், மதிவண்ணன், தய்.கந்தசாமி ஆகிய தலித்கவிஞர்களின் மொழி இப்படியே அமைகிறது. என்.டி.ராஜ்குமார் தனது தெறி, ஒடக்கு ஆகியக் கவிதை நூல்களில் இத்தகைய மொழிநடையையே கையாள்கிறார்.மதிவண்ணனின் நெறிந்து, இருட்டைப்புதைத்த வெளிச்சங்கள் ஆகிய பிரதிகளும் இதே மொழியையே பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு மதியின் கவிதை ஒன்று..
"ஒரு ராஜ ரகசியத்தைக்
கேட்கும் பாவனையில்
பம்மிக்குழைந்து
பின் நேரடியாகவே
கேட்பாயென் சாதியை.
பிறகு நானிருந்த இடத்தில்
நாய்மோண்ட கல்லொன்றிருக்கும்"
மாதவிடாயால் பெண்கள் கோவிலுக்கு வரகூடாது என்னும் பார்ப்பனிய,இந்து,ஆண்தன்னிலைகளை இப்படியாகக் கேலிசெய்கிறார்.
"தீட்டாகும் நாளென்று
வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கிறாய்.
குறுகுறுப்புடன் பம்முகிறது கர்ப்பக்கிரகம்.
மீசை இழந்து நிற்கும் தேவனருகில்
தொடைகளைக் குறுக்கிச் சேர்த்து
சங்கடத்துடன் நின்றுகொண்டிருக்கின்றனர்
அந்த தேவியர் அரையிருட்டில்"
மதியின் கவிதைகள் "செத்தமாட்டீரலைச் சுட்டுத்தின்றுவிட்டு என் பாட்டன் இட்ட மணமும் குணமும் நிறைந்த குசுவிலிருந்து எடுத்துக்கொள்கிறேன் என் கவிதைக்கான கச்சாப்பொருளை" என்கின்றன."தமிழ் உனக்கு உயிர்மூச்சாக இருக்கலாம் ஆனால் அதைப் பிறர்மேல் விடாதே" என்று கவிதை எழுதி தமிழ்விரோதப் பார்ப்பனப் பெருங்கதையாடலை முன்வைத்த ஞானக்கூத்தனுக்கு எதிராக "நீ மட்டும் உன் குசுவை என் முகத்தின் மேல் விடலாமா?" என்று கேட்கிறார்.

தய்.கந்தசாமியுடனான ஒரு குடி உரையாடலின்போது விக்கிரமாதித்யன் என்ற வேளாளக் கவி "ப்ள்ளு பறைக்கெல்லாம் கவிதை வருமாடா" என்று வெள்ளாள இறுமாப்புடன் கேட்கிறார். இதற்குத் தன் கவிதையில் பதில் எழுதிய கந்தசாமி, தலித்துகளின் நீண்ட கவி மரபை விளக்கிவிட்டு "ஒன் தாடியிலெ என் பூலை வைக்க...' என்று முடிக்கிறார்.
இன்று தலித் இலக்கியத்தைத் தவிர்க்க முடியாமல் இந்தியாடுடே போன்ற மய்யநீரோட்ட ஊடகங்கள் வெளியிடுகின்றன. சு.ராவின் காலச்சுவடு என்னும் பார்ப்பனப் பத்திரிகை இதுவரை தலித் கவிதைகளை வெளியிட்டதிலையென்றாலும் தலித் படைப்பாளிகளின் நூல்களை விற்றுக் காசுபார்த்துக்கொண்டிருக்கிறது.எதிர் அழகியல், எதிர் அரசியல் ஆகியவற்றை முன்வைக்கும் சிறுகதையாடலாளர்கள் மய்யநீரோட்டத்தில் பங்கெடுப்பதோ, அதிகாரத்தை நோக்கி நகர்வதோ தவறு இல்லைதான். ஆனால் மய்யநீரோட்டத்தின் சந்தைக்கான பண்டமாக மாறிவிடாமலும் பெருங்கதையாடல்களால் செரிக்கப்படமலும் தங்களைக் காத்துக்கொள்ள தொடர்ந்து சமரசமற்ற பொராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
இது காலம். street dog-அய் பறைநாய் என்று மொழி பெயர்த்த புதுமைப்பித்தனின் காலமில்லை, நாகர்கோவில் அக்கிரகார லவுகீக வாழ்க்கையை வாந்தியெடுத்த சுந்தரராமசாமிகளின் காலமில்லை. தஞ்சாவூர்ப் பார்ப்பன தன்னிலைகள் மட்டுமே தமிழ் உலகம் என்று இயங்கிவந்த தி,ஜானகிராமன்களின் காலமுமில்லை. இது தலித்துகளின் காலம், இது பெண்களின் காலம், பால்மீறிகளின் காலம், உதிரிகளின் காலம், தேசத்துரோகிகளின் காலம், அரசவிரோதிகளின் காலம், வேசிகளின் காலம், இது விளிம்புகளின் காலம். ஆதிக்கத் தன்னிலைகளின் முகத்திற்கு நேரே குசுவிடும் காலம். இப்போது தொடங்கியிருப்பது எழுத்தின் கலகம், கலக எழுத்து.
தயாராகவே இருக்கிறோம்
உங்கள் ஆதிக்கச் சன்னிதானங்கள்
அனைத்தையும் அடித்து நொறுக்க.
தயாராகவே இருக்கிறது
உங்கள் பீடங்களின் மீது
மூத்திரம் அடிக்க
எங்கள் குறி.

20 உரையாட வந்தவர்கள்:

 1. மா சிவகுமார் said...

  சுகுணா திவாகர்,

  நான் படித்தவை எல்லாமே, நீங்கள் சொல்லும் பெருங்கதையாடல் படைப்புகளையே! சில நாட்களாகவே இன்னும் பரவிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிறுகதையாடல் படைப்புகளில் சிலவற்றை பரிந்துரைக்க முடிய முடியுமா?

  அன்புடன்,

  மா சிவகுமார்

 2. இளங்கோ-டிசே said...

  நல்லதொரு அலசல்.

 3. Osai Chella said...

  சும்மாவே சொன்னேன் உங்கள்எழுத்துக்கள் ஆசிட் இலக்கியங்கள் என்று! நான் பொச்செறிப்பு என்ற வார்த்தையை உபயொகித்ததால் வெளித்தள்ளப்பட்டேன் ஒரு இணையக் குழுமத்தில். என் ஊர் சொலவடையைக் கேலி செய்ய இவர்களுக்கு என்ன மயிரா முளைத்திருக்கிறது? ஆம் இது விளிம்புகளின் காலம்!

 4. பாரதி தம்பி said...

  //street dog-அய் பறைநாய் என்று மொழி பெயர்த்த புதுமைப்பித்தனின் காலமில்லை, நாகர்கோவில் அக்கிரகார லவுகீக வாழ்க்கையை வாந்தியெடுத்த சுந்தரராமசாமிகளின் காலமில்லை. தஞ்சாவூர்ப் பார்ப்பன தன்னிலைகள் மட்டுமே தமிழ் உலகம் என்று இயங்கிவந்த தி,ஜானகிராமன்களின் காலமுமில்லை. இது தலித்துகளின் காலம், இது பெண்களின் காலம், பால்மீறிகளின் காலம், உதிரிகளின் காலம், தேசத்துரோகிகளின் காலம், அரசவிரோதிகளின் காலம், வேசிகளின் காலம், இது விளிம்புகளின் காலம். ஆதிக்கத் தன்னிலைகளின் முகத்திற்கு நேரே குசுவிடும் காலம். இப்போது தொடங்கியிருப்பது எழுத்தின் கலகம், கலக எழுத்து.
  தயாராகவே இருக்கிறோம்
  உங்கள் ஆதிக்கச் சன்னிதானங்கள்
  அனைத்தையும் அடித்து நொறுக்க.
  தயாராகவே இருக்கிறது
  உங்கள் பீடங்களின் மீது
  மூத்திரம் அடிக்க
  எங்கள் குறி//

  செருப்படியான வார்த்தைகள்..

 5. Anonymous said...

  இவ்வாரத்தின் சிறந்த இடுகை இதுவாகத் தோன்றுகிறது..
  நன்றி

 6. மிதக்கும்வெளி said...

  சில விடுபட்டவைகள்

  தமிழ்நதியின் கவனத்திற்கு...

  1. உங்கள் பெரும்பாலான சிறுகதைகள் தன் கதைக்கூறலாகவே அமைகிறது. இதனால் உரையாடல்கள் குறைந்து பன்முகக்குரல்கள் பதிவு செய்யப்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே கதைகளில் அமையும் உரையாடல்களில் கவனம் செலுத்தவும்.

  2. அந்த சிறுகதையில் இன்னும் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் இருந்தால் நலம். ஆனால் படைப்பாளிகளையும் படைப்பையும் பொருத்திப்பார்ப்பதே தமிழ்மனத்தின் வாடிக்கையாக இருப்பதாலும் நீங்கள் ஒரு பெண் என்பதாலும் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

  2. பெருங்கதையாடல்கள் சிறுகதையாடல்களை உட்செரித்துக்கொள்வதற்கு இன்னொரு உதாரணம் சினிமா. பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா லேகியம் விற்பவராய் வந்து வாயுப்பிரச்சினை, குசு விடுவது போன்றவற்றைப் பேசினார். அதன்பிறகு ஆயுதஎழுத்து திரைப்படத்தில் சுஜாதா கூட குசு போன்ற வார்த்தைகளைத் தன் வசனத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்.

  3. சு.ராவைப்பொறுத்தவரை அவர் தலித் ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதற்காக ஓவராக உணர்ச்சிவசப்பட்டு தன் கடைசிக்காலத்தில் 'பிள்ளைகெடுத்தாள் விளை' என்ற சிறுகதையை எழுதினார். ஆனால் அந்த கதை தலித்துகளைக் கொச்சைப்படுத்துவதாக தலித்துகளிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின. புனிதப்பாண்டியன், யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, அரங்கமல்லிகா, அழகியபெரியவன் போன்ற தலித் எழுத்தாளர்களும் சாருநிவேதிதாவும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். சு.ராவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று தலித் எழுத்தாளர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.மார்க்ஸ் அந்தச் சிறுகதையிலுள்ள periodic errors-களைச்சுட்டிக்காட்டினார். ஆனால் தலித்துகளிடம் செருப்படிவாங்கியபோது பதிலேதும் சொல்லாமல் சு.ரா கள்ளமவுனமே சாதித்தார்.ஆனால் சு.ரா இறந்தபிறகு அவரது அடிப்பொடிகளான ரவிக்குமார், அ.ராமசாமி, க.பஞ்சாங்கம் போன்றவர்களால் அந்தச் சிறுகதை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து 'பிள்ளைகெடுத்தாள்விளை- எதிர்வினைகள்' என்றநூலை வெளியிட்டு அதிலும் காசுபார்த்துள்ளது காலச்சுவடு. (காலச்சுவடுவின் சுருக்கமே காசுதானே!)

 7. Anonymous said...

  அந்த சிறுகதையில் இன்னும் கொஞ்சம் கெட்டவார்த்தைகள் இருந்தால் நலம்.

  This shows your level of understanding.

  பெருங்கதையாடல்கள் சிறுகதையாடல்களை உட்செரித்துக்கொள்வதற்கு இன்னொரு உதாரணம் சினிமா. பாலாவின் பிதாமகன் திரைப்படத்தில் சூர்யா லேகியம் விற்பவராய் வந்து வாயுப்பிரச்சினை, குசு விடுவது போன்றவற்றைப் பேசினார். அதன்பிறகு ஆயுதஎழுத்து திரைப்படத்தில் சுஜாதா கூட குசு போன்ற வார்த்தைகளைத் தன் வசனத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்.

  what a nonsense it is.You have no idea about Sujatha's writing.

  சு.ராவை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று தலித் எழுத்தாளர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  They could have given a complaint
  to police.Why they did not do so.
  Do they atleast know the relevant
  provisions of the Act.

 8. Anonymous said...

  மேலும் இயற்கை உணவிலிருந்து நம்மைத் துண்டித்து இன்று உலகமயமாக்கல் நமது குடலுக்குள் திணிக்கும் மேற்கத்திய உணவுமுறைகள், நமது நிலங்களைச் சுரண்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பசுமைப்புரட்சிப் பம்மாத்துகள் ஆகியவற்றோடும் தொடர்புடையது. குறிப்பாக இன்று கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் நிலையை பொருத்திப்பார்க்கலாம்.

  References to constipation can be
  found in ancient medical literature.Both Ayurveda and Siddha
  have medicines for that.It is as old as humankind. It might have become acute for some persons who
  do no physical exercise or indulge in excessive drinking, smoking and
  eating.There is no need to raise it to a high pedastal.It is yet another medical disorder.

 9. Gurusamy Thangavel said...

  சுகுணா,

  "பிள்ளை கெடுத்தாள்விளை" என் புரிதலில் தலித் விரோதக் கதையாகத் தெரியவில்லை. இக்கதை குறித்து உங்கள் முழுமையான கருத்தை நேரில் அறிய ஆவலாகயிருக்கிறேன். நன்றி

 10. கார்திக்வேலு said...

  மதியின் கவிதை நன்றாக இருக்கிறது.
  [பிற கவிதைகள் இருந்தால் பகிரலாமே]
  விளிம்பு நிலை இலக்கியத்திக்கு எதிர்-அழகியல் ஒரு பெரும் பலமே,அது ஒரு தேவையும் கூட.

  //இந்திய சாதியச் சூழலில் சுத்தம் x அசுத்தம் என்னும் எதிர்வுகளின் அடிப்படையிலேயே தீண்டாமை
  வரையறுக்கப்பட்டத //
  உண்மைதான்.
  ஆதிக்க வர்க்கம் Moralityயை [அறநிலை ?] தீர்மானிக்கிறது ஆனால் அழகியலை
  முற்றிலும் தீர்மானிக்கின்றது என்று சொல்லிவிட முடியாது.

  சமுதாய / சாதீய அடையாளங்களை தாண்டி தனி மனித ஆளுமையிலும் பார்வையிலும்
  ஆழமான அழகியல் தாக்கம் இருந்து வந்துள்ளது.

  மதியின் மேற்சொன்ன கவிதையிலேயே அழகியல் இருக்கிறது.

  நல்ல பதிவு.

 11. Anonymous said...

  பிறகு அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 'பீக்கதைகள்' தொகுப்பில் இடம்பெற்றது
  I think Kalachuvadu published it.

  ஆனால் சு.ரா இறந்தபிறகு அவரது அடிப்பொடிகளான ரவிக்குமார், அ.ராமசாமி, க.பஞ்சாங்கம் போன்றவர்களால் அந்தச் சிறுகதை பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து 'பிள்ளைகெடுத்தாள்விளை- எதிர்வினைகள்' என்றநூலை வெளியிட்டு அதிலும் காசுபார்த்துள்ளது காலச்சுவடு. (காலச்சுவடுவின் சுருக்கமே காசுதானே.

  So you think that Ravi Kumar and
  Panchangam have no mind of their
  own.Are they stooges of Sunara
  Ramaswamy.Nothing prevented Adalayam or A.Marx from publishing their views as a book and making
  money.After all every body is selling books for a price.Whether
  it is Kalachuvadu or Adalayam
  or Karuppu Pirathigal they are
  in publishing business.If at all
  anything it was A.Marx who published a quickie on Afzal
  by translating a booklet, the contents of which were in the web
  for free.

 12. Anonymous said...

  http://charuonline.com/kp233.html

 13. மிதக்கும்வெளி said...

  /நான் படித்தவை எல்லாமே, நீங்கள் சொல்லும் பெருங்கதையாடல் படைப்புகளையே! சில நாட்களாகவே இன்னும் பரவிச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிறுகதையாடல் படைப்புகளில் சிலவற்றை பரிந்துரைக்க முடிய முடியுமா?
  /


  சிவகுமார் சார்,கோவித்துக்கொள்ள வேண்டாம். இன்னும் ஓரிருநாட்களில் எழுதுகிறேனே.

 14. மிதக்கும்வெளி said...

  /இவ்வாரத்தின் சிறந்த இடுகை இதுவாகத் தோன்றுகிறது../

  நக்கல்?

 15. மிதக்கும்வெளி said...

  /what a nonsense it is.You have no idea about Sujatha's writing./


  நல்ல விஷயம்தான்.அந்த கருமாந்திரத்தை ஏன் நான் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

 16. மிதக்கும்வெளி said...

  /"பிள்ளை கெடுத்தாள்விளை" என் புரிதலில் தலித் விரோதக் கதையாகத் தெரியவில்லை. இக்கதை குறித்து உங்கள் முழுமையான கருத்தை நேரில் அறிய ஆவலாகயிருக்கிறேன். நன்றி /

  அது தலித்விரோதக் கதையாக பாவிக்கப்பட்டு தலித் எழுத்தாளர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. என்னைப்பொறுத்தவரை எனக்கு சு.ராவின் கதைகளில் பெரிய ஈர்ப்பு இல்லையென்றாலும் பி.கெ.வி விமர்சனத்திற்குக்கூட தகுதியற்ற கேணத்தனமான கதை

 17. மிதக்கும்வெளி said...

  /மதியின் மேற்சொன்ன கவிதையிலேயே அழகியல் இருக்கிறது.
  /

  இருக்கிறது. ஆனால் அது என்ன வகையான அழகியல் என்பதில்தான் பிரச்சினையே.

 18. Gurusamy Thangavel said...

  //அது தலித்விரோதக் கதையாக பாவிக்கப்பட்டு தலித் எழுத்தாளர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. என்னைப்பொறுத்தவரை எனக்கு சு.ராவின் கதைகளில் பெரிய ஈர்ப்பு இல்லையென்றாலும் பி.கெ.வி விமர்சனத்திற்குக்கூட தகுதியற்ற கேணத்தனமான கதை//

  சுகுணா, பி.கெ.வி கதையின் எதிர்வினைகள் பற்றி எனக்கும் தெரியும். நான் கேட்டது உங்கள் கருத்தினை, இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சு. ரா. குறித்த உங்கள் பார்வையை. 'தகுதியற்றது' 'கேணத்தனமானது' என்று ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டாம். உங்கள் பின் நவீனத்துவ பார்வையில் இது பற்றி நேரில் பேசலாம், நீங்கள் விருப்பப்பட்டால்.

 19. மிதக்கும்வெளி said...

  /உங்கள் பின் நவீனத்துவ பார்வையில் இது பற்றி நேரில் பேசலாம், நீங்கள் விருப்பப்பட்டால்.
  /

  லாமே!

 20. Anonymous said...

  //// இது தலித்துகளின் காலம், இது பெண்களின் காலம், பால்மீறிகளின் காலம், உதிரிகளின் காலம், தேசத்துரோகிகளின் காலம், அரசவிரோதிகளின் காலம், வேசிகளின் காலம், இது விளிம்புகளின் காலம். ஆதிக்கத் தன்னிலைகளின் முகத்திற்கு நேரே குசுவிடும் காலம். இப்போது தொடங்கியிருப்பது எழுத்தின் கலகம், கலக எழுத்து. தயாராகவே இருக்கிறோம் உங்கள் ஆதிக்கச் சன்னிதானங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்க. தயாராகவே இருக்கிறது உங்கள் பீடங்களின் மீது மூத்திரம் அடிக்க எங்கள் குறி. ///

  வழிமொழிகிறோம்