என்றான பிறகு...

பூக்களால் நாம்பேசிக்கொண்டிருந்த
பொழுதுகளில்நம் கடிதங்களே
வாசமடித்தனஎழுத்துப்பிழைகளோடு.
பேருந்து தவிர்த்துசுட்டுவிரல்
பிடித்து நடைபயணித்த பொழுதுகள்கவிதை
எழுதுவதற்காய்வீணடித்த பொழுதுகளை
விடச் சுகமானவை.
அன்றொருநாள் பேருந்தில்படாமல்
அமர்ந்தபோது நீ கேட்டாய்"நான் ஒன்றும்
தீண்டத்தகாதவள் இல்லையே?"
இன்று நான் படாமல்உன்
சுடிதாரைச் சுருட்டிக்கொண்டு
விலகி அமர்ந்ததன்
காரணம்விளங்கவேயில்லை எனக்கு.
நான் பரிசளித்த சாவிவளையம்வாங்க
மறுத்த நீவீடு
சென்றுஅழுதிருக்கலாம்
யாருமறியாது.
சூழலால் நீ என்னை உதறினாயெனினும்நீ
என்னை நிராகரித்ததை
விடவும்அதிர்ச்சியாயிருக்கிறதுநீ
யாரிடம் பொய் சொல்கிறாய்?


ஒரு குறிப்பு : தினம் ஒரு பதிவை யாருக்காவது சமர்ப்பிக்கலாம் என்றிருக்கிறேன். முதல் பதிவு 'ரெண்டுலார்ஜ் வலதுசாரி' பாலபாரதிக்கு

அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பு

டீ, போண்டா (அ) செமினார் பிஸ்கட்,
அப்புறம் பெரிசுகளின்
அறிவுரை இம்சைகள்
எல்லாம் முடிஞ்சா
ஈகிள் பார்.
அடுத்தநாள் காலையில்
முதல் வேலை
'வலைப்பதிவாளர் சந்திப்பு'- பதிவு
போடணும்.
வரப்போகும் பின்னூட்டங்கள்
வருவதற்கு முன்பே தெரியும்
" ஆகா நான் அன்று
சென்னையில்தானே இருந்தேன்.
ஒரு அருமையான கூட்டத்தை
மிஸ் பன்ணிட்டேன்"

கணவன் என்ற மிருகம்

விசாரிப்புகள் ஏதுமற்று
அருகில் படுத்துக்கொண்ட
உன் கரங்கள்
என் இராவுடையைத் துளைத்துக்கொண்டு
நெளிந்து தீர்கின்றன.
வட்டுடையின் கொக்கியைக்
கழற்றவும் அவகாசமற்ற
உன் தீவிரத்தால்
தனங்களில் அரும்பிநிற்கின்றன
உன் பதிவின் கசப்பாய்
சில ரத்தத்துளிகள்.
எல்லாம் முடிந்து எழுந்த நீ
உணவு மேசையில்
உருட்டிய பாத்திரங்கள்
வந்து விழுந்தன
என் செவிப்பறையின் மெல்லியபுலன்களில்.
ஒரு ஆணுறை போலவே
என்னைப் பொருத்தியும்
கலைத்தும் போட்டு
களைப்பினூடாய் நீ உறங்கியபிறகுதான்
எனக்குப் பசித்தது.

ஆதிக்கசாதி நாய்களுக்கு...

நேற்று எம்
முன்னோரின் பெயர் சூட்டவும்
வழித்தெறிந்தீர்கள் பேருந்துகளிலிருந்து
உங்கள் தலைவன்களின் பெயர்களை.

இன்று நாங்கள்
இழுப்பதற்கெனக் கைவைத்தால்
நடுத்தெருவில் நாதியற்று
விட்டுப்போயிருக்கிறீர்கள்
சாமியையும் தேரையும்.

நாளை உம் தெருக்களில்
அத்துமீறி நுழைகையில்
கைவிட்டுப் போவீரோ
உம் தெருக்களை.

" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்" - ஜெயலலிதா தாக்கு!

வீட்டிலும் டென்ஷன், வெளியிலும் டென்ஷன். சற்று ரிலாக்ஸாக டி.வி. பார்க்கலாம் என்று டிவியைப் போட்டால், ஜெயாடிவி செய்திகள்.
" முன்னாள் தமிழக முதல்வர், புரட்சித்தலைவி, அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதா இன்று காலை விடுத்த அறிக்கை.
'ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்குத் தூக்கு தண்டனை விதித்த நீதிபதி குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்று எனக்கு நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. கறுப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று தனக்குத் தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு மனிதரைப் பார்த்துத்தான் நீதிபதி கெட்டுவிட்டார். இதன் பின்னணியில் கருணாநிதியின் மைனாரிட்டி திமுக அரசு இருக்கிறது என்றும் தெரிகிறது. சிக்கன்குனியாவையே கட்டுப்படுத்தமுடியாத கருணாநிதியின் மைனாரிட்டி அரசு மரணதண்டனையையா தடுக்கப்போகிறது? முன்னாள் அதிபர்கள், முன்னாள் முதல்வர்கள் என அனைவரையும் பழிவாங்கத்துடிக்கும் சதியின் ஒரு அங்கம்தான் இது என்பதை மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்"
இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது:-
"முதல்கில் என்னைக் குடிகாரன் என்றார் அந்த அம்மா. இப்போது ஈராக் நீதிபதியைக் குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்தே அவர் நிதானத்தை இழந்திருக்கிறார் என்று தெரியவில்லையா? அவர் அறிக்கை விடுவதற்கு முன்பு பாரின் ஜின் குடிப்பார் என்று எனக்கும் நம்பகமான தகவல்கள் வந்திருக்கின்றன. இரண்டு கட்சிகளையும் நீங்கள் மாறி மாறிப் பார்த்துவிட்டீர்கள். ஒருமுறை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஈராக்கில் மொத்தம் 53 நீதிமன்றங்கள் இருக்கு. ஆனால் ஒயின்ஷாப்போ 3021தான் இருக்கு...."
இன்று முரசொலியில் வெளிவந்த கருணாநிதியின் கவிதை
உடன்பிறப்பே
மதுமயக்கம் மதுமயக்கம் என்று
மதிமயக்கத்தால் உளறுகின்றார் ஒரு அம்மையார்.
மைனாரிட்டி அரசு என்று நம்மையும் ஏசுகின்றார்.
புயலொன்று இப்போது தன் புடவைக்குள்
இருக்கிறது என்ற மமதையும் கூட.
வங்கக்கடற்கரையில் உறங்கும்
நம் அண்ணன் அறிவான்
நாம் பங்கமற்றவர்கள் என்பதை"
இந்த கடிதம் குறித்து ம.தி.மு.க தலைவர் வைகோ அளித்த பேட்டி
" கோபாலபுரத்தார் என்னையும் தேவையில்லாமல் வம்பிக்கிழுத்திருக்கிறார். வம்புச்சண்டைக்குப் பயப்படாத வரிப்புலி மதிமுக என்பதை அவர் மறந்துவிட்டார். இன்று ஈராக் நீதிமன்றம் வரை கோபாலபுரத்தின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. சதாம் தவறாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்படித்தான் கிரேக்கத்திலே ஸ்பார்ட்டகஸ் தண்டிக்கப்பட்டார். ரோமாபுரியிலே சாக்ரடிஸ் தண்டிக்கப்பட்டார். கலிலியோ தண்டிக்கப்பட்டார். ஏன் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வைகோ பொய்க்குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டானே..(ஆ ஊ யேய்..ம்ம்ம்(கர்ஜிக்கிறார்))
இந்த தொல்லை தாங்காமல் திநகர் இந்திபிரச்சாரசபாதெரு பக்கம் வாக்கிங் போனால் அங்கே வாசலில் நின்றுகொண்டு சன் டிவிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறாஎ விஜய.டி.ராஜேந்தர்.
" அனனிக்கு ஈராக் மக்கள் சொன்னாங்க சதாம், சதாம்
இன்னைக்கு ஈராக் நீதிபதி சொல்றார் கதம், கதம்.
நீதிபதி அடிச்சது சரக்கா?
அம்மா சொல்றதில் ஏதாவது அர்த்தம் இருக்கா?
கலைஞர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க அம்மா
அதெல்லாம் வெறும் சும்மா"
அப்போது அந்த பக்கமாக வந்த சிம்பு டென்ஷனாகி.." லூஸு அப்பா,லூஸு அப்பா, லூஸு அப்பா லூஸுத்தனமா உளறி ஏன்யா உயிரை எடுக்கிறே...(பாடிக்கொண்டிருக்கும் போதே நயன் தாராவிடமிருந்து போன் வர ஜெர்க் ஆகிறார்.)
போனில் நயன்: காப்பாத்துங்க..காப்பாத்துங்க. சரத்குமார் அடுத்த படத்திலயும் ஜோடியா நடிக்க கூப்பிடறார்.

கட் பண்ணினால் ராதிகா வீடு (பின்ன என்ன சரத்குமார் வீடா?)
சரத் சோகமாக புடவைகளை அயர்ன் செய்துகொண்டிருக்கிறார். ராதிகா உள்ளே வந்து " ஆபிஸ் போகணும். புடவையை அயர்ன் பண்ணிணீங்கினா இல்லையா?
சரத் : ஏன் ராது விரட்டுறே? நான் தான் வேலைப்பளு அதிகமாயிருக்குன்னு கட்சியில இருந்துகூட விலகிட்டேனே. நயன் தாரா வேற என்னோட நடிக்க மாட்டேங்குது. ராது வேற யாரை ஜோடியாப் போடலாம்?
ராதிகா : யாரை வேணும்னாலும் போடுங்க. படம் என்ன ஓடவாப்போகுது?

அப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா?

அப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டும் என்ற பொதுப்புத்தியின் இரைச்சல் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அப்சால் விவகாரம் குறித்து தமிழில் ஒரு நல்ல புத்தகம் வெளியாகியிருக்கிறது.
நூலின் பெயர் : முகம்மத் அஃப்சால் தூக்கிலிடப்படத்தான் வேண்டுமா?
இந்நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கட்டுரைகளை எழுதியவர் தமிழ்ச்சூழலில் பின்நவீனத்துவம் குறித்த உரையாடலைத் தொடங்கிவைத்தவரும் ,தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், பெண்ணியம், சிறுபான்மையினர் பிரச்சினைகள், இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றிற்காக தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துள்ள என் நேசத்துக்கிரிய நண்பன் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
விலை : ரூ 25
புத்தகம் வேண்டுவோர் கவனத்திற்கு:
கருப்புப்பிரதிகள்,
45அ இஸ்மாயில் மைதானம்,லாயிட்ஸ் சாலை, சென்னை- 5
செல் : 944272500
நூலின் முக்கியப் பகுதிகள்...

. 'காவலில் வைக்கப்பட்டோர் மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கழகம் (spdpr)என்னும் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலே இந்நூல் அமைந்துள்ளது. நூலிலிருந்து சில பகுதிகள்..
"நான் மரணதண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால் விஷ ஊசி மூலம் மட்டுமே கொல்லப்பட வேன்டுமெனவும் என் வழக்கறிஞர் உயர்நீதி மன்றத்தில் கூறியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மூலம் அறிந்தேன். என் வழக்கறிஞரின் இக்கூற்று என் மேல் முறையீட்டையே கேலிக்குரியதாக்கிவிட்டது."
- அப்சால் எஸ்.ஏ.ஆர்.கீலானிக்கு வழக்காடுவதற்கான அகில இந்திய குழுவிற்கு எழுதிய கடிதம்

"நீதிவிசாரணை தொடங்கும் முன்பே காவல்துறையினர் அவரைச் சித்திரவதை செய்தார்கள். வாயில் மூத்திரம் கூட அடித்தார்கள். இவற்றை நான் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். ஆனால் சந்தர்ப்பச்சூழ்நிலை என்னை இதைச் சொல்ல வைத்துவிட்டது. என் ஆறுவயது மகனுக்காக இதைச் செய்கிறேன்"
- அப்சாலின் மனைவி தபஸ்ஸூம் குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தில்..

"நீதிவிசாரணை முழுவதும் அப்சால் தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கக்கோரி நீதிபதியைக் கேட்டுக்கொண்டே இருந்தார். வழக்குரைஞர்கள் பலரின் பெயரையும் கூட அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர்களனைவரும் அவருக்காக வாதிட மறுத்துவிட்டர்கள். நேர்மையான நீதிவிசாரணையை உறுதி செய்வதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைச் சாகவிடுவதே பெரிய தேசபக்தி என இந்திய வழக்குரைஞர்கள் நினைத்ததற்காக அப்சாலையா குற்றம் சாட்ட இயலும்?
-காஷ்மீர் தலைவர்களின் கூட்டுத்தீர்மானத்தில்...

ஒருகாலத்தில் (1975) மகாவீர்ஜெயந்தியைக் காரணம் காட்டி மரணதண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று இயக்கம் நடத்திய பாரதிய ஜனசங் கட்சியின் மூத்த தலைவர் அத்வானி இன்று அப்சால் தூக்கிலிடபப்ட வேண்டுமென்பதற்காக குடியரசுத்தலைவரைச் சந்திக்கிறார். பாகிஸ்தானால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சரப்ஜித்சிங்கிற்கு ஆதரவாக வாதாடியவர்கள் இன்று மன்னிப்புக்கு எதிராக ஒரு இயக்கமே நடத்துகின்றனர்.
- அ.மார்க்ஸ்
அப்சாலுக்கும் மரணதண்டனைக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் நீங்கள் உதவ விரும்பினால் spdpr முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்.
163, வசந்த் என்க்ளேவ், புதுடெல்லி 110057
மின்னஞ்சல் : rona358@gmail.com phone : 011 26152680

அப்சாலுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்!

(04.11.06)மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் 'மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்'தின் சார்பில் அப்சலுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தை ஒருங்கிணைத்தவர் மார்க்சியம், இருத்தலியம், அம்பேத்கரியம் ஆகியவை குறித்து தமிழில் தொடர்ந்து எழுதி வருபவரும் 'பெரியார்-ஆகஸ்ட்15', 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' ஆகிய முக்கிய ஆவண நூல்களை எழுதியவருமான தோழர் எஸ்.வீ.ராசதுரை.
இக்கூட்டத்தில் எஸ்.வீ.ஆரோடு பல நூல்களை எழுதியவரும் பெண்ணியம், காந்தியம் ஆகியவற்றில் புதிய உரையாடல்களைத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான தோழர்.வ.கீதா, மரணதண்டணை ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்திவரும் முன்னாள் நீதிபதி சுரேஷ், தமிழக முதல்வர் கலைஞரின் மகள் கவிஞர்.கனிமொழி, நக்சல்பாரி இயக்கத்தில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மரணதண்டனைக் கைதியும் இப்போதைய தமிழ்-தமிழர் இயக்கத்தின் தலைவருமான தோழர்.தியாகு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப்நய்யார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மரணதண்டணையை ஒழிக்கக்கோரியும் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழங்க்கக்கோரியும் இவர்கள் ஆற்றிய உரைகளின் சில துளிகள்:
கூட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் எஸ்.வி.ஆர் , மரணதண்டனைக்கு எதிரான போராட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கூறி, அப்சாலுக்கு கருணை காட்ட வேண்டுமென்று பகத்சிங்கின் பேரன் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், "ராஜேந்திரசிங்கின்(சமீபத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்) மீதான மரணதண்டனை தீர்ப்பினையும் எதிர்ப்பீர்களா என்று சிலர் கேட்கிறார்கள். குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் மும்பைக் கலவரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட்டு பால்தாக்கரேக்கும் மோடிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டால் அதையும் எதிர்ப்போம்" என்றார் உறுதியாக.
எழுத்தாளர் வ.கீதா இது வெறுமனே மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமில்லை, முஸ்லீம்கள் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியே என்றார்.
நீதியரசர் சுரேஷ், உலக அளவில் மரணதண்டனை குறித்த சட்டங்கள் குறித்தும் அதற்கு எதிரான இயக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
கவிஞர்.கனிமொழி " பெரும்பாலும் பெண், சொத்து ஆகியவைகளை மய்யமாகக் கொண்டே கொலைகள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திட்டமிடாமல் உணர்ச்சி வேகத்தில் நடப்பவை. ஆனால் அரசோ திட்டுமிட்டு மரணதண்டனை என்னும் பெயரில் ஒரு கொலையை அரங்கேற்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். 'தனஞ்செயனின் கடைசி நிமிடங்கள்' என்னும் நூலிலிருந்து சில வரிகளை வாசித்துக் காட்டினார். "கற்பிக்கப்பட்ட போலித்தேசியத்தின் பெயரால் முஸ்லீம்கள் பழிவாங்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்த கனிமொழி, "நம்முடைய பண்டைய இலக்கியங்களை எடுத்துக்கொண்டோமென்றால், சிலப்பதிகாரம் குறித்தும் கண்ணகி குறித்தும் நமக்குப் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கண்ணகி தவறாக தண்டனை அளிக்கப்பட்ட கோவலனுக்காகவே மதுரையை எரிக்கிறாள். இப்போது நாமும் அப்சாலுக்குத் தூக்கு வழங்கப்படும்போது மவுனம் சாதித்தோமென்றால் நம்மையும் யார் எரித்தாலும் தவறில்லை" என்றார் ஆவேசமாக.
பிரபல பத்திரிகையாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான குல்தீப்நய்யார், "பாராளுமன்றம் தாக்கப்பட்டபோது நானும் அந்த கட்டிடத்தின் உள்ளேதான் இருந்தேன். அப்போதே பல எம்.பி.க்கள் ஆவேசப்பட்டார்கள். ஆனால் அப்போதும் நான் தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் எல்லையில் 10லட்சம் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்கூடாகப்பார்த்தவன் நான். மரனத்தின் வலி எனக்குத் தெரியும். ஆனால் பத்திரிகைகள் மக்கள் மத்தியில் நஞ்சையே விதைத்து வருகின்றன. நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதற்கு முன்பே பத்திரிகைகளில் விசாரணை நடத்தி தீர்ப்பும் வழங்கிவிடுகிறார்கள்" என்றார்.
பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர்மணி, "நீதிபதிகளோ நீதித்துறையோ பாரபட்சமற்றவையல்ல. ஜெயேந்திரன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பிணை வழங்கப்பட்டது. ஆனால் மதானிக்கோ குற்றபப்த்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின்பும் பிணை வழங்கப்படவிலலை" என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர் "அமெரிக்காவில் செப்டம்பர்11 தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட ஜகாதியாமுகையா என்பவருக்கே ஆயுள்தண்டனைதான் வழங்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதக் கதையாடலக்ளை அவிழ்த்துவிட்ட அமெரிக்காவிலேயே அந்த நிலை. ஆனால் இந்தியாவில் மட்டும் அப்சாலுக்கு மரணதண்டனை வழங்கப்படுவது என்ன நியாயம்? " என்று கேள்வியெழுப்பினார்.
கூட்டத்தில் அப்சாலுக்கு பொதுமன்னிப்பு வழக்கக்கோரிய மனுவில் கையெழுத்துகளும் வாங்கப்பட்டன.

எத்தனைகாலம் பியர்போத்தல்களோடு பேசிக்கொண்டிருப்பது?

காதலற்றுக் கழிகிறது காலம்..
நண்பகல் வெறுமையைப் போல
மயான வெம்மையைப் போல..
ஒற்றைக் காகத்தின் தனிமையைப் போலவும்.
இந்த காலத்தை என்ன செய்வது?
கொலுசொலி, சிணுங்கல்,
பொய்க்கோபம், வாழ்த்தட்டைகள்,
சின்னச்சின்ன பரிசுகள்
பிரிவின் வாதை,
நெகிழ்வின் கண்ணீர்..
எதைக்கொண்டு நிரப்புவது
இந்த காலத்தை?
பதில்சொல்லுங்களேன் எவளாவது.

தோழர் டூண்டு

வன்மத்தின் மொழியிலிருந்து
வார்த்தைகளை உருவுகிறாய்.
வன்மத்தின் திசையிலிருந்து
விலகவே விரும்புகிறேன் நான்.
ஆனாலும் வன்மத்தின் ஆதி
உன்னிலிருந்து தொடங்கியதில்லை
என்பதை உணர்கிறேன் நான்
மெய்யாலும் மெய்யாலுமே..
காற்றைக்கிழிக்கும்
உன் இரைச்சலினூடே
எத்தனை ஓசைகள்
எனக்குக்கேட்கின்றன?
கணவாய்களில் கனைக்கும்
ஆடுகளின் மேய்ச்சல் ஓசை,
கருப்பு ரத்தங்களால் நிரம்பி வழியும்
ஆதி மதுக்குடுவைகள்
உடைந்து நொறுங்கும் ஓசை,
ஸ்வஸ்திக் ஒரு காற்றைப் போல்
ஆம் காற்றைப் போலவே
திசைகளை விழுங்கும் வேளை
தென் திசையில் மண்டியிட்டு
அன்னியப் பாதங்களுக்கு
முததமிட்ட ஓசை
இன்னமும்..இன்னமும்
ஆனாலும் நான்
உன் காலடிகளைப் பின்பற்றமுடியாது
மெய்யாலும் மெய்யாலுமே
நீ வெற்றிபெற்ற கணம்தான் எது?
உன்னோடு கைகுலுக்கலாமா
வேண்டாமா என்று நான் குழம்பிய கணமா?.

காஞ்சி ஜெயேந்திரனுக்காக...

நான் மீசை வைத்து தாடி மழித்தால்
அவன் தாடி வைத்து
மீசை மழிக்கிறான் என்கிறாய்.
நான் தெற்கு நோக்கி வணங்கினால்
அவன் மேற்கு நோக்கித் தொழுகிறான் என்கிறாய்.
எனக்கும் அவனுக்குமான
வித்தியாசங்களை விவரமாய்
விளக்கிச் சொல்லும் நீயோ
நான் உண்ட இலையில்
பேண்டு தொலைக்கிறாய்.
பின் பேண்ட இலையை
உண்டு முடிப்பாயோ?

வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்

தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.


நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான அநாகரிகதர்மபாலாவின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

பிளாக்கர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள்

வரவணையான் : ஆட்டோகிராப்

( இந்த படத்தின் கதாநாயகனின் பெயரும் செந்தில்தான். மேலும் அப்பாவின் கையெழுத்தை பிராக்ரஸ்ரிப்போர்ட்டில் போடுவது, சின்ன வயசிலேயே காதலித்து கெட்டுப்போவது, தண்ணியடிப்பது, தம்மடிப்பது என்று சகல கல்யாணகுணங்களும் நிரம்பியிருப்பது போன்றவை உபகாரணங்கள். மேலும் செந்திலுக்குப் பிடித்த தமிழ்சினிமா வசனங்களில் ஒன்று " எங்க தமிழ்ப்பெண்கள் மூக்கு குத்தும் அழகே தனி"( வசனத்தின் பின்பகுதி செந்திலுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்))

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)

அசுரன் : நான் சிவப்பு மனிதன்

லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை are you a .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)

we the people : பாரதவிலாஸ்

இட்லிவடை ; ஜெமினிகணேசன் படங்கள் அனைத்தும்

ஞானவெட்டியான் : பட்டினத்தார் ( படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அரைமணி நேரம் 'பிரபுலிங்கலீலை' பற்றி நியூஸ் ரீல் ஓட்டப்படும்)

ஈழபாரதி : தர்மயுத்தம்

வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்

ஜெயராமன் : அய்யர் தி கிரேட்

டோண்டு ராகவன் : நான் அவனில்லை

விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்

குழலி ; அய்யா, மறுமலர்ச்சி

யார் யாரைத் தூக்கில் போடலாம்?

புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் விஜய் தெண்டுல்கரிடம் ஒருமுறை ஒரு கேள்வி கேட்கப்பட்டது, " யாரையாவது எண்கவுண்டர் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டால் யாரை என்கவுண்டர் செய்வீர்கள்?" என்று. அதற்கு தெண்டுல்கர் உடனே சொன்ன பதில். "நரேந்திரமோடியை". இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்று சிலர் அடம்பிடிக்கும் போது எனக்குத்தோன்றியது இதுதான். 'பாராளுமன்றம் என்னும் பைசா பிரயோசனமில்லாத ஒரு கட்டிடத்தில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் என்னும் ஜந்துக்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சாலைத் தூக்கில் போடலாம் என்றால் 3000 முஸ்லீம்களின் படுகொலைகளுக்குக் காரணமான நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவதில் என்ன தவறிருக்கமுடியும்?

எனக்குத் தமிழ்நாட்டில் யாரையாவது என்கவுண்டர் செய்ய அதிகாரம் கொடுத்தால் நான் சுடப்போவது எழுத்துலகப் பாசிஸ்ட் 'துக்ளக்' சோ.
அப்சாலைத் தூக்கிலிடுவது சரியென்றால் வேறு யார் யாரையெல்லாம் தூக்கிலிடலாம் என்று யோசித்தபோது....

1. கார்கிலில் இறந்தவர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலிருந்து இஸ்ரேலிடம் ஏவுகணை வாங்கியது வரை ஊழல் செய்துவிட்டு தேசபக்தி பற்றி லெக்சர் அடிக்கும் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அடல்பிகாரிவாஜ்பேயி.

2. பாபர்மஜ்ஸித் என்னும் வரலாற்றுச் சின்னம் இடிபடுவதற்குக் காரணமாயிருந்த கடப்பாறைக் காதலன் அத்வானி.

3. அரசியல் தரகன் சூனாசாமி (சுப்பிரமணியசாமி)

4. மனிதனுக்குப் பிறந்ததாக ஒத்துக்கொள்ளாமல் "கோமாதா எங்கள் குலமாதா" என்று அடம்பிடிக்கும், "இந்துக்களின் கடையிலேயே பொருட்களை வாங்குங்கள்" என்று உளறிக்கொட்டி (பன்னாட்டு நிறுவனங்கள் இங்கே கடை விரித்து எல்லாவற்றையும் கபளீகரம் செய்யும்போது இந்து என்னடா, பொந்து என்னடா) ஆனால், மறந்தும் கூட "(தலித்துகளாகிய) இந்துக்களின் வீட்டிலேயே பெண் எடுங்கள்" என்று தூக்கத்தில்கூட உளறிவிடாத 'வீரத்தைத் துறந்த'(வீரத்துறவி?) ராமகோபாலன்.

5. காம சூத்திர லிபிகளை தன் எழுத்துகளில் பயன் படுத்துவதாலேயே பெரிய எழுத்தாளராகி விசிறி சாமியார், ஃபேன் சாமியார் என்று காமெடி அடித்து பலரைக் கெடுத்து வைத்திருக்கும் பாலகுமாரன்

6. விஞ்ஞானத்தையே மதத்தைப்போல கற்பிக்கும் சுஜாதா

7. காஷ்மீர் பிரச்சினை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் 'ரோஜா' என்று படம் எடுப்பது, 'பம்பாய்' என்னும் முஸ்லீம் விரோதக்குப்பையை எடுத்து அதில் தமிழனை(" தமிழா தமிழா! நாளை நம் நாடே!) தேவையில்லாமல் அழைப்பது, 'பம்பாய்' படத்தில் 'துலுக்கன்' என்று வசனம் வைத்து 'கேரக்டர் வாய்ஸ்' என்று சப்பைக்கட்டு கட்டுவது, ஆனால் திராவிட இயக்கம் பற்றி ஒரு படம் எடுத்து அதில் 'பார்ப்பான்' என்ற வார்த்தை ஒரு இடத்திலும் கூட வராமல் கவனமாக பார்த்துக்கொள்வது, திராவிட இயக்க வரலாறே ஏதோ கருணாநிதி படுக்கையறைக்கும் எம்.ஜி.ஆர் படுக்கையறைக்கும் உள்ள தூரம்தான் என்று எத்துவாளித்தனம் செய்வது ஆகியவற்றைச் செய்துவரும் மணிரத்னம்.

8. இதுவரை ஒரே ஒரே கதையை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு கருடபுராணம், புருடாபுராணம் என்று ரீல் விட்டு சகலமும் பார்ப்பனீயத்தின் பக்கம் சாயும் பார்ப்பன அடிவருடி ஷங்கர்

9. 97% பார்ப்பனரல்லாத மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு சட்டசபையில் அமர்ந்து " நான் ஒரு பாப்பாத்திதான்" என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசிய பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா....
இன்னும் நீங்களும் எழுதலாம்

(பின்குறிப்பு : எனக்கு உண்மையில் இந்த பதிவில் விருப்பமில்லை. நான் மரணதண்டனையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பகத்சிங்குக்கு மரணதண்டனை கூடாதென்றால் கோட்சேக்கும் மரணதண்டனை கூடாதென்பதுதான். ஆனால் அப்சலைத் தூக்கில் போட வேண்டுமென்ற பார்ப்பனர்கள் மற்றும் ஜெய்ஹிவ்ந்த் தாசர்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. என்ன செய்வது? தோழர் மாவோவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன, " மரங்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை")

உலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடிதம்

அன்பு நண்பர் செல்வனுக்கு

சமீபத்தில் சமணமுனிவர்களுக்கு எதிரான பெரியார் திராவிடர்கழகத்தினரின் போராட்டத்தைப் பற்றியும் பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதைக்குறித்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் வாசிக்க நேர்ந்தது. ரோசாவசந்த், திராவிடத்தமிழர்கள், செல்வன் ஆகியோரின் பதிவுகளில் என்னால் செல்வனின் பதிவை மட்டுமே படிக்கமுடிந்தது. அது குறித்து ஒரு சில பகிர்வுகள்...
சமணமுனிவர்கள் விவகாரத்தில் பெரியார் தி.க தோழர்கள் நடந்துகொண்டது முற்றிலும் தவறானதே. பெரியார் நிர்வாணமாக தெருவிலே நின்றாரா, அல்லது தெருவோரத்திலே நின்றாரா என்பது கேள்வியல்ல.பெரியார் ஜெர்மனியில் நிர்வாணச்சங்கத்தில் கையெழுத்திட்டு உறுப்பினரானார். அது மட்டுமல்ல, ஜெர்மனியிலும் சோவியத்ரஷ்யாவிலும் அவர் இருந்தகாலங்களில் பூர்ஷ்வாக்குழுக்கள், தாராளவாதக்குழுக்கள், அனார்கிஸ்ட்கள், டிராட்ஸ்கியக்குழுக்கள் எனப் பல குழுக்களையும் சந்தித்துப்பேசினார். டிராட்ஸ்கியக்குழுக்களோடு தொடர்பு இருந்தததாலேயே பெரியார் சோவியத்யூனியனை விட்டு வெளியேற்றப்படுகிறார். இது எதைக்காட்டுகிறதென்றால், புதிய சிந்தனைகளையும் போக்குகளையும் கற்றுக்கொள்கிற, வரவேற்கிற தன்மை பெரியாரிடம் இருந்தது என்பதையே. இத்தகைய போக்குகள் தமிழில் அருகி வருகின்றன என்பது வருந்தத்தகக்கது

தீவீரப்பெண்ணியம்(radical feminism) மேற்கில் எழுந்தபோது பெண்ணிய ஓவியர்கள் தங்கள் நிர்வாணத்தை வரைய ஆரம்பித்தார்கள். அவர்களை என்ன செய்யலாம்? வெளிப்படையாக பாலியல் குறித்து எழுதும் நம் பெண்கவிஞர்களை சினிமாக்கவிஞர் சினேகன் சொன்னதைப் போல "சென்னை அண்ணாசாலையில் வைத்துக்கொளுத்திவிடலாமா?"

மேலும் பெரியார் நிர்வாணமாக நின்றது ரமேஷ்-பிரேம் சொல்வதைப் போல வெறுமனே துறவுநிலை மட்டுமல்ல, அது உடலின் கொண்டாட்டத்தை வலியுறுத்துவது.

பொதுவாகவே மதம் உள்ளிட்ட ஆதிக்க நிறுவனங்கள் உடலை ஒடுக்கவே சொல்கின்றன. ஒருபுறம் பெண்களை போகப்பொருளாகக் கற்பிக்கும் இந்துமதம் மறுபுறம் பெண்ணுடலை விலக்கிவைக்க வேண்டியதாகவே கருதுகிறது. சுத்தம் x அசுத்தம் என்று கட்டமைக்கப்பட்ட எதிர்வுகளிலிருந்தே தீண்டாமை கற்பிக்கப்பட்டது. தீட்டு, அசுத்தம் என்று பெண்கள் விலக்கி வைக்கப்படுவது குறித்து கொஞ்சம் யோசியுங்கள். இழிவான தொழிலை செய்ய பணிக்கப்பட்டதாலேயே அசுத்தம், தீட்டு என்று தலித்துகள் கோயிலிலிருந்து விலக்கிவைக்கப்பட்டதைப்போலவே பெண்ணுடலும் மாதவிடாயைக் காரணம் காட்டி கருவறையிலிருந்து விலக்கப்பட்டது. இப்படியாக பெண்காமம் வெளியே சொல்லத்தகாதது என்று சொல்லப்படுவது வரை இதை நீட்டித்துக்கொள்ளலாம்.

இப்படியாக அதிகாரமும் ஒடுக்குமுறையும் உடலை ஒடுக்குதல், உடலை இழிவாகக் கருதுதல், உடல் பற்றிப் பேசாதிருத்தல் ஆகியவற்றை முன்வைத்தால் விடுதலையைப் பேசும் உடல் அரசியல் (body politics) நிர்வாணம், உடல் பற்றிப்பேசுதல், உடலைக்கொண்டாடுதல் ஆகியவற்றை முன்வைக்கிறது. இத்தகைய புரிதல்களின் அடிப்படையில் அணுகும்போதுதான் பெரியாரின் நிர்வாணத்தைப் புரிந்ந்துகொள்ளமுடியும். தீவிரப்பெண்ணிய ஓவியர்களின் ஓவியங்களும் அத்தகையதே.

மறுபுறம் சமணமுனிவர்களின் நிர்வாணத்தையும் நாம் பெரியளவில் கொண்டாட முடியாது. ஏனெனில் உடலை ஒடுக்குவதில் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. சமணர்களின் இத்தகைய போக்குகளை விரிவாகக் கிண்டலடித்திருப்பார் ஓஷோ. (பிறப்பின் அடிபப்டையில் ஓஷோவும் ஒரு சமணர்தான்) " காந்திதான் உலகின் மிகப்பெரிய வன்முறையாளர். தன் உடலின் மீது அவரளவுக்கு யாரும் வன்முறை செலுத்தியதில்லை" என்பார் ஓஷோ. பெரியாரும் உடலை வருத்தும் போராட்ட வடிவங்களை நிராகரித்தார். "சத்தியாக்கிரகம் சவுண்டித்தனம், உண்ணாவிரதம் முட்டாள்தனம் " என்பது அவரது கருத்து. (ஓஷோவுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒப்புமைகளைப் பற்ரி விரிவாகவே ஆராயலாம். நான் ஒரே ஒரு கட்டுரை மட்டுமே எழுதியிருக்கிறேன்.) உடல் மீதான கடுமையான ஒடுக்குமுறையும் சமணம் அழிவதற்கான காரணங்களில் ஒன்று. மேலும் சமணம் பெண்களை முக்திக்குரியவர்களாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. முக்தி என்பது என்ன, நிர்வாணம்தானே. எனவே பெண்கள் நிர்வாணத்திற்கு அனுமதிக்கப் படவில்லை. எனவே நண்பர் ஒருவர் கேட்டதற்குப் பதில் கவுந்தி அடிகள் நிர்வாணமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான்.

தேவையற்ற விவகாரங்களுக்குப் போய்விட்டேன் என்று கருதுகிறேன். பெரியார் தி.கவின் நிலைப்பாடு முற்றிலும் தவறானதுதான். பெரியாரின் நிர்வாணம் சரியெனில் சமண முனிவர்களின் நிர்வாணமும் சரிதான்.

ஆனால் இதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த பெரியாரிஸ்ட்களையும் பெரியார் இயக்கங்களையும் வசைபாடுவது கண்டிக்கத்தக்கது. (ஒருவர் தி.க முண்டங்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் திட்டியிருந்தார்). அதிலும் பெரியார் தி.க விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு சனநாயக ரீதியான அமைப்பு. குஷ்பு விவகாரத்தில் முழுக்க முழுக்க குஷ்புவுக்கு ஆதரவாக நின்ற ஒரு இயக்கம். இந்த மாதிரியான விவகாரங்களை பார்ப்பனர்கள் மிகச்சாமர்த்தியமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். உதாரணமாக இந்த சமண முனிவர்கள் விவகாரத்திலேயே பெரியார்தி.கவைக் கடுமையாக விமர்சித்து தனது தலையங்கத்திலே எழுதிய காலச்சுவடு என்னும் இதழின் ஆசிரியர் கண்ணன் ஒரு பார்ப்பனர், மட்டுமல்ல முன்னாள் ஏ.பி.வி.பி உறுப்பினரும் கூட.

இதே பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக நின்றதையும் அவர் மைனராக இருந்தபோது வேசி வீடுகளுகளுக்குச் சென்றதையும் இணைத்து "பெரியார் ஒரு பொம்பளைப்பொறுக்கி" என்று ரவிக்குமார் என்ற தலித் எழுத்தாளரை ஒரு கட்டுரை எழுதவைத்து வெளியிட்டு தன் பார்ப்பன மன வக்கிரங்களைத் தணித்துக்கொண்டார். எனவே இந்த மாதிரியான ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெரியார் பற்றி வலைத்தளங்களில் படித்தே தெரிந்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். நேரடியாக பிரதியைத் தேடிப்பிடித்து வாசிப்பதே நல்லது. திரிபுகளே நிஜமென உலவும் காலமிது.

கடவுளுக்கு எதிரானவர்கள் பார்ப்பனர்கள்

"பொதுவாக பார்ப்பனர்களைப் போல வேறு நாத்திகர்கள் இல்லை" என்பார் தோழர்.பெரியார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

எல்லா பார்ப்பன அர்ச்சகர்களும் எல்லா அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்வது கடவுள் சிலை முன்னால்தான்.
காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்றவை பெண் தெய்வங்கள்தானே? அதற்கு ஏன் ஒரு ஆண் பூசாரி சேலை மாற்றிவிடுகிறார்? ஏனென்றால் அதெல்லாம் வெறும் டுபாக்கூர் என்று அந்த பார்ப்பனருக்குத் தெரியும்.

இன்னொன்றை யோசித்துப் பாருங்கள். கடவுள் இந்த உலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு உயிருக்கும் பற்களையும் கடவுள்தானே படைத்தார்? ஒவ்வொரு உயிரியின் உணவுப்பழக்கவழக்கத்திற்கு ஏற்றாற்போலத்தான் பற்கள் அமைப்பும் இருக்கிறது. மனிசி/தனின் பற்கள் அமைப்பு மாமிசத்தைக் குத்திக்கிழிப்பதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த இயற்கைநியதிக்கு மாறாக மாமிசம் சாப்பிடாத ஒரு இனம் இருக்கிறதென்றால் அது பார்ப்பனர்கள்தான்.உலகில் மாமிசம் சாப்பிடாத இனக்குழுவும் இருக்கிறதா என்ன?

பஞ்சமனின மொழியில்

வயிறுவெடித்துப் பிணங்கள் மிதக்கும்
கங்கைநீர் தெளித்து புனிதப்படுத்துவீர்
உன் கக்கங்களின் மயிர்சிரைத்து
ஆடைகளின் அழுக்ககற்றி
சிதைந்துபோன உங்கள்
செருப்புகளைச் செப்பனிட்ட
எமதால் தொடப்பட்ட இடங்களை.
பல்லிமூத்திரத்தால் வீச்சமடிக்கும்
கர்ப்பக்கிரகத்தின் இருட்டுமூலையில்
பொருள்புரியா பார்ப்பானின்
மந்திரமுணுமுணுப்பு செவிமடுத்திருப்பது
உன்னைப் பொறுத்தவரை சாமி.
எனக்கு அது என்
துரட்டியில் அள்ளித்
தூரக்கொட்டப்படும் மலம்

மண்


அவர்கள் வாழும் மண் உங்களுடையதா
அல்லது நீங்கள் வாழும் மண் அவர்களுடையதாஅல்லது
பொதுவாக நீங்கள் இருவரும் வாழும் மண் யாருடையது என்பது குறித்த ஆய்வுகள், விவாதங்கள்,கருத்துரைகள் தயாரிக்கப்படுகின்றன உங்களால்,
அவர்களாலும்கூட
மண்ணில் பொதித்த கண்ணிவெடியால் சொச்சம் முதியவர்களைக் கொன்றீர்கள்..
அவர்கள் விண்ணிலிருந்து மண் நோக்கிப்
பொழிந்த குண்டுகளால் சொச்சம் பிஞ்சுகளைக் கொன்றார்கள். எப்படியாயினும் பிணங்கள் போகப்போவது மண்ணிற்குத்தானே. (மண்ணிலிருந்து காணாமல் போனவர்களின் பட்டியல் தனி)
ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றும்போதோ
அல்லது மீட்கப்படும்போதோ
அழிவதென்னவோ மாற்றினத்து
பெண்ணுடல்கள்தான்.
யோனி மூடிய மண்
பெண்
மண்
பூமிமாதா
உங்கள் மண்ணிற்கான பேச்சுவார்த்தைக்கு
அயல் மண்ணிலிருந்து தூதுவர்கள் வருவார்கள்.
நீங்களோ எதிரியோ
வெற்றி பெறும்போது
கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மண்ணை
அவர்களுக்கு விற்கத்தொடங்குவீர்கள்.
இன்னமும் உங்களுக்கு மண் மீதுதான் பிரியம் எனில்
சில பொட்டலங்களில் சேகரித்துக்கொள்ளுங்கள்.
பலவற்றிற்கு அவை பயன்படும்.
துப்பாக்கி ரவைகள் தயாரிக்க
தேனீரில் கலந்து குடிக்க
முகாம்களுக்கான அடித்தளம் அமைக்க
சில நேரங்களில் பிணங்களின் வாய்களை மூடவும் கூட

மேதகு தாகம்


தலைவருக்குத் தாகம்
மிகும் வேளை போர்.
குறையும் வேளையோ பேச்சுவார்த்தை.
மிகுந்தால் அவர் போராளி,
குறைந்தாலோ அவர் ஒருராஜதந்திரி
.குறைகிறதோ மிகுகிறதோ
கோப்பை கோப்பையாய்க்குடிக்க கொடுக்க வேணும்.

நாடு


நாடு உனக்கு என்ன செய்தது
என்று கேட்காதே
(ஏனெனில் அது ஒன்றும் செய்யாது.)நாட்டிற்கு நீ என்ன செய்தாய்
என்று கேள்.
(நீதான் கேட்கவேண்டும்.பின் என்ன பூர்ஷவாக்களா கேட்பார்கள்?)

குரல் கொடுப்போம்

பொடாசட்டம் காலவதியாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.வைகோவிற்காகவும் நெடுமாறனுக்காகவும் குரல்கொடுக்கும்,கொடுத்த பலரும் ஊத்தாங்கரையில் கைதுசெய்யப்பட்ட நக்சல்பாரித் தோழர்கள் குறித்து அக்கறை கொள்ளவ்ல்லை.அதிலும் கைது செய்யப்பட்டவர்களில் 6பேர் பெண்கள்.இதுகுறித்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் மனித உரிமை இயக்கங்களும் சிந்திக்க வேண்டும்.