சென்னையில் போட்டி வலைப்பதிவாளர் சந்திப்பு



என்னடா வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்து ஒரு மாசமாச்சே, இன்னும் யாரும் ஆரம்பிக்கலையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஆரம்பிச்சாட்டாருய்யா.. லக்கிலுக் ஆரம்பிச்சுட்டாரு.

இந்த வ.ப. சந்திப்பு என்றாலே எனக்கு 'தி..திக்' என்றிருக்கும். முதல் 'திக்' இந்த மீட்டிங்கைச் சாக்காக வைத்துக்கொண்டு வரவணையான்(எ) செந்தில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு பஸ் ஏறியோ, டிரெய்ன் ஏறியோ, டிக்கெட் எடுத்தோ, எடுக்காமலோ வந்து "குஷ்புவைப் பேட்டி எடுங்க, குஷ்புவைப் பார்க்கணும்", 'சினேகா வீடு எங்கே இருக்கிறது?' 'ரகசியா சென்னையில்தான் இருக்கிறாரா?', 'நமீதாவின் ஷூட்டிங் ஸ்பாட் எது?' என்றெல்லாம் நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார். ஒருவழியாக குவார்ட்டர் பீடிங் பாட்டிலை வாங்கிக்கொடுத்து அவரைச் சமாதானப்படுத்த வேண்டும்.

அடுத்து ஆரம்பிக்கும் வ.ப.ச என்னும் இம்சை. அங்கே பல 'திக்..திக்'கள். 'கலந்துரையாடல்' என்று சொல்லிவிட்டு மூன்றுபேர் மட்டுமே மாறிமாறிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதில் சில பெரியவர்கள் 'நைன்டி பார்ட்டி செவனில்...'என்று ஆரம்பித்துவிடுவார்கள். திடீரென்று ஒரு பெரியவர் மூன்று நிமிடம் வெளியே போய்வந்துவிட்டு, "இப்பதான் அவன் என்னைப் போனில் கூப்பிட்டு மிரட்டினான்" என்று பார்வையாளர்களை 'வஞ்சிக்கோட்டை கிழவன்(?)' ரேஞ்சுக்குப் பெருமிதமாகப் பார்ப்பார். உடனே அனுதாப அலை பலமாக அடிக்க ஆரம்பித்துவிடும். பார்வையாளர்கள் 'த்சோ..த்சோ' என்பார்கள்.

இதற்கிடையில் டீ,போண்டா, செமினார்பிஸ்கெட்கள் பறிமாறப்படும். (செமினார் பிஸ்கட்ஸ்: சென்னைப் பல்கலைக்கழகத்தின் பக்கத்துக்கடைகளில் கேட்டால் சொல்வார்கள் செமினார் பிஸ்கெட் என்றால் என்னவென்று. மேரிபிஸ்கட்தான் அது. உலகத்திலேயே படு மட்டமான மண்ணு போன்ற டேஸ்ட் உடைய பிஸ்கெட் அது. பல்லுப்போன கிழவர்களுக்கென்றே தயாரிக்கப்படுவது. எல்லா செமினார்களிலும் இது கட்டாயம் உண்டு). அப்போதே சில வலைப்பதிவர்கள் 'போண்டா எப்படி இருந்தது?' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளை எழுதுவதற்குத் திட்டமிடுவார்கள். (ஏன் தான் போண்டா, இட்லி, வடை, போன்ற சாம்பார் விஷயங்களில் மூழ்குகிறார்களோ?)

திடீரென்று 'தெகல்கா' ரேஞ்சுக்கு யாராவது ரகசியமாக வீடீயோ மற்றும் போட்டோ எடுப்பார்கள். கூட்டத்தில் இருக்கும் பலரும் பள்ளிகொண்ட சீதாராமையா, சாருமஜும்தார் ரேஞ்சுக்கு போட்டோவுக்குத் தலைமறைவாவார்கள். "என்னைக்கொன்னுடாதீங்க' தொனியில் 'போட்டோ எடுத்துடாதீங்க" என்று அபயக்குரல் எழுபுவார்கள்.எனக்கு அப்போதே கடுப்பாகி விடும். 'ஏன் தான் அடைச்ச கடையாப் பார்த்து உடைச்ச சோடா வாங்கறாங்களே'ன்னு இருக்கும்

செந்திலோ சீக்கிரத்தில் கூட்டத்தை விட்டு வரமாட்டார். கூட்டம் முடிந்தாலும்( போண்டா சாப்பிட்டதும் அதற்குமுன் சீரியஸாகப் பேசிய விஷயத்தை அம்பேல் என்று விட்டுவிடுவார்கள்) அனானி, யுனானி என்று விவாதங்கள் போய்க்கொண்டிருக்கும். ஒருவழியாக இந்த தொல்லையிலிருந்து மீண்டதும்தான் 'ஒளிமயமான எதிர்காலம்' ஆரம்பிக்கும். 'பாருக்குப் போகலாம்' என்றவுடனேயே லக்கிலுக், முத்துதமிழினி, பாலபாரதி, வரவணையான் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்துவிடும்.

"கார்டு அக்செப்ட் பண்ற பாருக்குப் போங்கள்" என்பார் செந்தில்.
பாருக்குப் போனவுடன் தான் தெரியும் கார்டு இருப்பது முத்துவிடம்தான் என்று. செந்திலிடம் இருப்பதெல்லாம் பழைய விசிட்டிங்கார்டுகள்தான். அதிலும் பாதி கம்பெனியின் அட்ரெஸ்கள் மாறியிருக்கும். சரியாகப் பில் கொடுக்கும் நேரத்தில், வராத போனை அட்டெண்ட் செய்யப் போய்விடுவார் செந்தில்.(ஆனால் 'ஆலமரம்' தங்கவேலு, ஓகை போன்ற 'நல்ல உள்ளங்கள்' நன்கொடை வழங்கும்போது மட்டும் ஆஜராகிவிடுவார்)

'நாட்டாமை' முத்துதமிழினியோ ஆலமரத்தின்கீழ்தான் அமர்ந்து குடிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தியவுடன் தான் கொண்டு வந்திருந்த பழையசெம்பில் சரக்கை ஊற்றிக்குடிக்க ஆரம்பிப்பார்.

உண்மையில் வ.ப.ச.க்குப் பின்னான பார் சந்திப்பில்தான் தீவிரமான விவாதங்களும், கருத்துப்பரிமாற்றங்களும் நடக்கின்றன. மனம் விட்ட உரையாடல் சாத்தியமாகிறது. உறவும் பலப்படுகிறது. 1947 பெரியவர்களும் பெரும்பாலும் வரமாட்டார்கள் என்பதால் பயமின்றிப் பேசலாம்.

ஆகையால் மக்களே, இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் மிகச்சமீபத்தில்(1871ஓ 2025ஓ அல்ல) பாரிலேயே வலைப்பதிவாளர் சந்திப்பு நடத்தலாம் என்றிருக்கிறோம். இதற்காக எங்கள் பேரவைத் தோழர்களும் கடுமையாக உழைக்கவிருக்கிறார்கள்.
செந்திலும் உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். (உதவி என்ன பெரிய உதவி! முத்துதமிழினியை எப்படியாவது அமுக்கிட்டு வந்தால் போதும் - இது வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த செந்திலின் மனசாட்சி)

மீட்டிங்கில் போண்டா, செமினார் பிஸ்கெட்களுக்கு தடா. கோமாதா விருந்து (அதாங்க மாட்டுக்கறி) கட்டாயம் உண்டு. இது 'போட்டி' வலைப்பதிவாளர் சந்திப்பு என்பதால் கோமாதா போட்டி உண்டு.( போட்டி : சென்னையில் முட்டை கலந்த குடல்கறி). கோமாதா சாப்பிடத் தயங்குபவர்களுக்கு ஒரு டம்ளர் (அ) ஒரு டபரா கோமியம் வழங்கப்படும்.

ஒரு பின்குறிப்பு : தலித் இலக்கியத்தின் ஆரம்பகட்டங்களில் மகாராஷ்டிரத்தில் அர்ஜுன்டாங்ளே போன்ற தலித் இலக்கிய முன்னோடிகள் தலித் கவியரங்கங்களை பேருந்துநிலையங்களிலும், கட்டணக்கழிப்பிடங்களிலும் நடத்தினார்கள். அதேபோல நாமும் வலைப்பதிவாளர் சந்திப்பை நடத்த முயற்சிக்கலாம். பேருந்து நிலையத்தில் நடத்தினால் இன்னும் வசதி, யாராவது 1947 கதையை ஆரம்பித்தால் அப்படியே பஸ் ஏறி வீட்டிற்கு எஸ்கேப் ஆக வசதியாக இருக்கும்.

dedicated to 'கோல்டன் ஈகிள் பாரில் நடந்த 'ஒரிஜினல்' வலைப்பதிவாளர் சந்திப்பில் ஓவராகக் குடித்து மட்டையான லக்கிலுக்கிற்கு.

14 உரையாட வந்தவர்கள்:

  1. - யெஸ்.பாலபாரதி said...

    :-(((((

    ரகசிய கூட்டத்தை அம்பலப்படுத்திய இந்த பதிவை நான் புறக்கணிக்கிறேன்.
    ;-)

  2. Anonymous said...

    //'நாட்டாமை' முத்துதமிழினியோ ஆலமரத்தின்கீழ்தான் அமர்ந்து குடிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார். ஒருவழியாக அவரைச் சமாதானப்படுத்தியவுடன் தான் கொண்டு வந்திருந்த பழையசெம்பில் சரக்கை ஊற்றிக்குடிக்க ஆரம்பிப்பார்//
    :)
    அண்ணன் முத்து(தமிழ்னி)ரசிகர் மன்றம்
    அண்டார்டிகா

  3. Anonymous said...

    ஹிஹிஹி

  4. கோவி.கண்ணன் [GK] said...

    படிக்கும் போதே,
    வலைப்பதிவாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படுகிறது.

    நல்ல நகைச்சுவை எழுத்து.

  5. Anonymous said...

    ஏனுங்க இப்படி எழுதறீங்க.....ஒருத்தர் வந்து பின்வருமாறு பின்னூட்டமிடுவாரு பாருங்க...."இந்த பதிவ நான் என்னோட தனிமனித தாக்குதலா நினைக்கிறேன்" அப்படின்னு....

  6. dondu(#11168674346665545885) said...

    "திடீரென்று ஒரு பெரியவர் மூன்று நிமிடம் வெளியே போய் வந்துவிட்டு, "இப்பதான் அவன் என்னைப் போனில் கூப்பிட்டு மிரட்டினான்" என்று பார்வையாளர்களை 'வஞ்சிக்கோட்டை கிழவன்(?)' ரேஞ்சுக்குப் பெருமிதமாகப் பார்ப்பார். உடனே அனுதாப அலை பலமாக அடிக்க ஆரம்பித்துவிடும். பார்வையாளர்கள் 'த்சோ..த்சோ' என்பார்கள்."

    :)))))))

    பெரிசு அடுத்த அரைமணிக்கு "இம்மாதிரி நேரங்களிலே இஸ்ரவேலர்கள் சமீபத்தில் 1967-ல் என்ன செஞ்சாங்கன்னா.." என்று பேச ஆரம்பிப்பார். உள்ளே இருப்பவர்கள் ஒரே சமயத்தில் ஹாலை விட்டு ஓட முயற்சித்ததில் சிலருக்கு கதவு இடித்து காயம். அதற்கும் இஸ்ரவேலர்களை இழுத்து விடுமோ பெருசு என்ற பயத்தில் வலியைப் பொறுத்துக் கொண்டே நொண்டியடித்து எகிறி குதித்து ஐ ஆம் தி எஸ்கேப் என்று கத்திக் கொண்டே ஓடுவார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  7. குழலி / Kuzhali said...

    //கார்டு அக்செப்ட் பண்ற பாருக்குப் போங்கள்" என்பார் செந்தில்.
    பாருக்குப் போனவுடன் தான் தெரியும் கார்டு இருப்பது முத்துவிடம்தான் என்று. செந்திலிடம் இருப்பதெல்லாம் பழைய விசிட்டிங்கார்டுகள்தான். அதிலும் பாதி கம்பெனியின் அட்ரெஸ்கள் மாறியிருக்கும். சரியாகப் பில் கொடுக்கும் நேரத்தில், வராத போனை அட்டெண்ட் செய்யப் போய்விடுவார் செந்தில்.(ஆனால் 'ஆலமரம்' தங்கவேலு, ஓகை போன்ற 'நல்ல உள்ளங்கள்' நன்கொடை வழங்கும்போது மட்டும் ஆஜராகிவிடுவார்)
    //
    சிரிப்பு தாங்க முடியலைப்பா...

  8. சென்ஷி said...

    இன்னாபா இது..

    சென்னையில என்னதான் நடக்குது.

    ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே.

    போட்டியை எதிர்த்து டெல்லியில் வ.ப.ச. ஒன்று விரைவில் நடைபெறும்

    சென்ஷி

  9. senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

    :-)))))

  10. Gurusamy Thangavel said...

    சுகுணா,

    இந்தமுறை என்னால் வர இயலாது என நினைக்கிறேன். முயற்சிக்கிறேன். அதுசரி 'ஆலமரம்' என்று போட்டிருப்பதில் ஏதோ வெளிக்குத்து இருப்பது போல் தெரிகிறதே?

  11. மிதக்கும்வெளி said...

    சாரி பாலபாரதி, நீங்கள் வீட்டில் செமை மாத்து வாங்கி பாவபாரதி ஆன கதையை வரவணையான் பதிவில் படித்தேன். த்சோ..த்சோ, அடி பலமோ? இப்போதைக்கு நீங்கள் 'ரெண்டு லார்ஜ் வலதுசாரி' ஆன கதையைச் சொல்லமாட்டேன்.

  12. மிதக்கும்வெளி said...

    தங்கவேலு சார், நீங்கள் ஆலமரமா, புளியமரமா என்று தெரியாமல் எழுதிவிட்டேன். எப்படியோ மரத்தமிழனாக இருந்தால் சரி. போனமுறை வாங்கிய அய்ந்நூறு ரூபாய்க்கு செந்தில் கணக்கு கொடுக்காதபோதே தெரியும், நீங்கள் கண்டிப்பாக அடுத்த வ.ப.ச.வுக்கு வரமாட்டீர்கள் என்று.

  13. லக்கிலுக் said...

    //dedicated to 'கோல்டன் ஈகிள் பாரில் நடந்த 'ஒரிஜினல்' வலைப்பதிவாளர் சந்திப்பில் ஓவராகக் குடித்து மட்டையான லக்கிலுக்கிற்கு.//

    நன்றி தோழரே :-)))))))))))))))

    போட்டி வலைப்பதிவாளர் சந்திப்பிலும் கலந்துகொள்ள ஆவல்....

    இலக்கியத் "தாகம்" கொண்டவர்கள் தோழரின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டும்....

  14. Pot"tea" kadai said...

    நல்ல பகிடி?யப்பா...

    எ கு கி சி...:-)) ( L M A O - Laughing my arse off)

    பாலா,
    இதுக்கு கோவிச்சுக்கிட்டா எங்கள மாதிரி "பேஸ்மென்ட்" ஆட்களுக்கு எப்படி அங்கத்திய நிகழ்வுகள் தெரியும்.

    பகிர்ந்தமைக்கு நன்றி!