எழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...
மார்க்யெஸிற்கு
காஸ்ட்ரோ நண்பர்.
எங்களூர் இலக்கியவாதிகளுக்கோ
நல்லிகுப்புசாமி
(செட்டி)
- சில்வியாகுண்டலகேசி ( தேவதைகளின் மாதவிடாய்க்காலம் தொகுப்பிலிருந்து..)பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.

'ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது' என்றார் பேராசான் கார்ல்மார்க்ஸ். இந்தியச்சமூகம் வர்க்கம் மற்றும் சாதியச்சமூகமாக விளங்குவதால் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல சாதியின் முத்திரையுமிருக்கிறது. இந்தியச்சமூகத்தில் வாழ நேர்ந்த எந்தவொரு உயிரியும் சாதியக்கூறுகளிலிருந்து தப்பமுடியாது. படைப்பாளியும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை அழுத்தமாய்ச் சொல்ல விரும்புகிறேன்.

அதேபோல உலகின் எச்சமூகத்தில் பிறந்த ஆணும் முற்றுமுழுதாக ஆணாதிக்கக்கூறுகளை அகற்றியவனல்ல. வேண்டுமானால் சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை மீறுவதற்கான, கடந்துவருவதற்கான எத்தனங்களை மேற்கொள்ளலாம். அத்தகைய எத்தனங்கள் செயற்படும் தளங்களே அரசியலும் கலை மற்றும் இலக்கியமும். அதிலும் ஒரு கலைஞன் என்பவன் தான் வாழும் சமூகத்தில் நிலவும் ஆதிக்கக்கருத்தியலைக் கேள்விக்குட்படுத்துபவனாக மட்டுமில்லாது அதிகாரம் குறித்து சதா விழிப்பும் அதிகாரக்கூறுகளை அகற்றும் மனோநிலை கொண்டவனாகவும் விளங்கவும் வேண்டும்.

சமூகத்தில் 'சிறந்ததாக'க் கட்ட,மைக்கப்படுவது அனைத்தும் தேர்ந்தெடுப்பின் அரசியல் வழிச் செயல்படுபவையே. இந்தத் தேர்ந்தெடுப்பு மற்றும் தொகுப்பு என்பது நிலவும் ஆதிக்கக் கருத்தியலினடிப்படையிலானதே. நிலவும் அதிகார மய்யங்களுக்கெதிரான எதிர்ப்பு மற்றும் மாற்றுச் செயல்பாடுகள் என்பவை அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட புனிதங்களையும் மூளையிலேற்றப்பட்ட கருத்தியல்களையும் விசாரணை செய்வதும் மய்யங்களால் கண்டுகொள்ளப்படாத செயல்பாடுகளை முன்வைப்பதுமாகும்.

நவீன இலக்கிய உலகின் பிதாமகர்களாக விளங்கிய புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் 80 மற்றும் 90களில் நிகழ்ந்த அமைப்பியல்வாதம், பின் அமைப்பியல்வாதம் மற்றும் பின்நவீனம் போன்ற புதிய கோட்பாட்டு அறிமுகத்தின் வெளிச்சத்தில் மறுவாசிப்புச் செய்யப்பட்டனர். அவர்களது பிரதிகள் முன்மாதிரிகளாகவும் உன்னதப்பிரதிகளாகவும் கொண்டாடப்பட்டிருந்த நிலையில் அவர்களது பிரதியின் வழி செயற்படும் அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

உன்னத இலக்கியம், படைப்புத்தூய்மை, படைப்பாளியின் புனிதம் ஆகிய அனைத்தும் தகர்க்கப்பட்டன. ஒரு பிரதி படைக்கப்பட்டதும் ஆசிரியன் இறந்துவிட்டான். அப்போது வாசகனே உயிர்த்தெழுகிறான். படைப்பிற்கான அர்த்தங்களை வாசகனே உண்டுபண்ணுகிறான். எனவே படைப்பாளி என்பவன் புனிதமானவன் அல்ல, ஒரு படைப்பில் அர்த்தம் உண்டாவது வாசகனின் பங்கேற்பையும் உள்ளடக்கியே என்னும் புரிதல்கள் முன்நகர்ந்தன.

கடவுள் இறந்துவிட்டார் என்னும் நீட்சேயின் வாக்கியம் எப்படி மத அதிகாரங்களின் மத்தியில் கேள்வியை எழுப்பியதோ அதுபோல ஆசிரியன் இறந்துவிட்டான் என்னும் ரோலன்பார்த்தின் கூற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் அதிர்வுகளை உண்டுபண்ணியது. ஆசிரியனே இறந்துவிட்டான் என்னும் போதில் படைப்பாளிக்கான ஒளிவட்டம், கவித்திமிர், கலைப்பெருமிதம் எங்கிருந்து வரும்?

இத்தகைய வாசிப்புமுறைகள் உலகமெங்கும் நிகழ்ந்தன. அதற்குமுன் உன்னத இலக்கியங்களாக முன்நிறுத்தப்பட்டவை அனைத்தும் மறுவாசிப்பு செய்யப்பட்டன. கட்டவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டு பிரதியில் தொழிற்பட்ட அதிகாரம் மற்றும் வன்முறை வெளிக்கொணரப்பட்டன. ஆல்பெல்காம்யூவின் புகழ்பெற்ற இலக்கியப்பிரதியான 'அந்நியனை' எட்வர்த்செய்த் மறுவாசிப்பு செய்து அதனுள் நுட்பமாக செயற்பட்ட அரேபிய வெறுப்புமனோநிலையைக் கொணர்ந்தார்.

அப்படித்தான் இங்கும் புதுமைப்பித்தன், மௌனி ஆகியோர் மறுவாசிப்பு செய்யப்பட்டனர். அவர்களது பிரதிகள் கட்டவிழ்ப்பு செய்யப்பட்டன. புதுமைப்பித்தன் street dog என்பதை பறைநாய் என்று மொழியாக்கம் செய்தது, அவரது பிரதிகளில் கிறித்துவப்பாதிரிகள் மற்றும் தலித்துகள் ஆகியோரின் சித்தரிப்பு குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மௌனியின் ஒடுங்கிய தனிமைக்குள் தந்திரமாய்ச் செயற்படும் சனாதனக் கருத்தியல் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டது 'உன்னத' எழுத்தாளர்களை கலவரப்படுத்தியது

சுந்தரராமசாமியின் 'புளியமரத்தின்கதை' சிறுகதையில் செயற்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு மனோநிலை மற்றும் பார்ப்பனீய மனோநிலை குறித்து ராஜன்குறை விரிவான ஒரு கட்டுரையை (விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் - நிறப்பிரிகை வெளியீடு) எழுதினார்.

தொடர்ச்சியாக சு.ராவின் பிரதிகளில் வெளிப்பட்ட அரசியல் குறித்து அ.மா, ராஜன்குறை, வளர்மதி, சாருநிவேதிதா போன்ற பலரும் எழுதியிருக்கின்றனர். அவரது தோட்டியின் மகன் மொழிபெயர்ப்பு நாவல் குறித்துத் தலித் எழுத்தாளர் மதிவண்ணன் தலித்திய நோக்கில் மறுவாசிப்பு நிகழ்த்தியிருக்கிறார்.

சுந்தரராமசாமி, மௌனி, புதுமைப்பித்தன், அசோகமித்திரன் போன்ற உயர்சாதி எழுத்தாளர்கள் இலக்கியமே படைக்கக்கூடாது என்றில்லை. ஆனால் அவர்களின் பிரதிகளில் மற்றமைகளாகிய பார்ப்பனரல்லாத சாதிகள், தலித்துகள், பெண்கள் ஆகியவர்கள் குறித்த சித்தரிப்புகள் எங்கனம் அமைகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வி.

சு.ராவின் கடைசிக் கதையாகிய 'பிள்ளைகெடுத்தாள்விளை' கதையையே எடுத்துக்கொள்வோம். தங்கக்கண் என்னும் பத்திரிகையாளர் ஒருவர் பிள்ளைகெடுத்தாள்விளை' என்னும் ஊர்ப்பெயருக்கான காரணத்தை விபரிப்பதாக அந்தக் கதை விரிகிறது.

ரவிக்கை போடுவதற்கும் அனுமதியற்ற ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் பல 'உயர்சாதியினரின் கருணையால்' படித்து முன்னேறி பள்ளியின் தலைமையாசிரியையாகிறாள். அவள் உயர்சாதியைச் சேர்ந்த ஒரு சிறுவனைத் தன் பாலியல் தினவைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்கிறாள். அதன்பின் அவள் ஊரைவிட்டு அடித்துத் துரத்தப்படுகிறாள். அப்போது துரத்துபவர்களில் ஒருவர் 'சீலையை உரிஞ்சுட்டு அனுப்பிடலாமா?' என்கிறார். இன்னொருவரோ 'வேண்டாம் ரவிக்கையைக் கிழிச்சிட்டு விட்டுடு' என்கிறார். ஆக மீண்டும் ரவிக்கையற்றளாகிறாள் அந்தப் பெண்.

இந்தச் சிறுகதை 'படித்து உயரத்திற்கு வரும் தலித்துகள் வக்கிரத்துடனே நடந்துகொள்வர்' என்னும் கருத்தைப் பதிப்பதாகத் தலித் எழுத்தாளர்கள் உணர்ந்தனர். அழகியபெரியவன், ஆதவன்தீட்சண்யா, யாழன் ஆதி போன்ற தலித் எழுத்தாளர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். தலித்முரசு இதழ் 'சுந்தரராமசாமியை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றியது.

சாருநிவேதிதா சு.ரா தன் இனவெறியை வெளிப்படுத்திவிட்டார் என்று எழுதினார்.(தீராநதி, மே 2005). அ.மார்க்ஸ் அந்தக் கதையில் காணப்பட்ட பார்ப்பனீய மனோநிலையையும் பிரதிகளில் மலிந்துகாணப்பட்ட தொழில்நுட்பப்பிழைகளையும் சுட்டிக்காட்டினார். (தீராநதி ஜீன் 2005). இத்தகைய மறுவாசிப்புகளோ கட்டவிழ்ப்புகளோ தவிர்க்கமுடியாதவை. இதில் படைப்பாளியை அவமதிக்க ஒன்றுமில்லை. பிரதி என்பது பொதுவெளிக்கு புழக்கத்திற்கு வந்ததன்பிறகு அதுகுறித்தான வெவ்வேறான பார்வைகள் முன்வைக்கப்படுவது என்பது இயல்புதான்.

நிறப்பிரிகைக் குழுவினர், மற்றும் அதைச் சாராத சில எழுத்தாளர்கள், தலித்முரசு போன்ற தலித் இதழ்கள், புதியகலாச்சாரம் இதழ்களில் அவ்வப்போது சு.ரா பிரதிகள் குறித்து வெளிவந்த கட்டுரைகள் ஆகிய எவற்றிற்கும் சு.ரா பொறுப்பான பதில் சொல்லியதுகிடையாது. அதை எதிர்கொள்ளும் மனப்பக்கவமோ அதற்கான பதில்சொல்லும் நேர்மையோ அவரிடம் எப்போதும் காணப்பட்டது கிடையாது.

பிரதிகளுக்கு வெளியே சுந்தரராமசாமி:

சுந்தரராமசாமியின் பிரதிகளில் மட்டும்தான் இத்தகைய பார்ப்பனீய மனோபாவம் செயற்பட்டது என்று சொல்லமுடியாது. சு.ராவே பார்ப்பனீயத்தின் மொத்த உருவமாகத்தானிருந்தார். ஒரு கலைஞன் புதியசிந்தனைகள், கோட்பாடுகள் மற்றும் எழுத்துமுறைகளின் வெளிச்சத்தில் கண்கூசக்கூடாது. ஆனால் சு.ரா புதிய கோட்பாடுகளையும் சிந்தனைமுறைகளையும் எழுத்துமுறைமைகளையும் எவ்வாறு எதிர்கொண்டார்?

1992 பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவையட்டி இங்கு தலித் இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைமை உண்டானது. தலித்துகள் தங்களது அனுபம், வாதை, வலி, துயரம், கொண்டாட்டம் ஆகியவற்றைத் தங்கள் எழுத்துக்களில் பதியத்தொடங்கினர். அதுவரை அழகியல் குறித்து நிலவிவந்த பார்வைகள் மறுபரீசீலனை செய்யப்பட்டன. தலித் பிரதிகளின் கதையாடல்கள் மட்டுமல்ல, அவற்றின் மொழியும்கூட முற்றிலும் வேறானதாக இருந்தது.

இலக்கியப் பிதாமகர்களில் ஒருவரான சு.ரா தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என நிராகரித்தார். அது முன்வைத்த எதிர் அழகியலை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. ஏனெனில் அவரது மனசின் ஆழத்தில் தேங்கிப்போனவையெல்லாம் பார்ப்பன அழகியலே. மேலும் சு.ரா மற்றும் அவரது ஜெயமோகன் போன்ற சீடர்களும் முன்வைக்கும் உள்ளளி, தரிசனம் ஆகியவைகளை இரக்கமின்றிப் புதிய கோட்பாடுகள் கேள்விக்குள்ளாக்கின.

அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவம் ஆகியவை முன்வைத்த கட்டவிழ்ப்பு, மறுவாசிப்பு, பிரதி ஆகியவையும் அவருக்கு உவப்பாயில்லை. அனைத்துமே பிரதிகள்தாம். பிரதிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்டவையே. சு.ராவின் ஒரு கவிதையும் கட்டமைக்கப்படட் பிரதிதான், வைரமுத்துவின் ஒரு திரைப்பாடலும் கட்டமைக்கப்பட்ட பிரதிதான். இதில் சு.ராவின் பிரதி சூப்பர், வைரமுத்துவின் பாடல் மோசம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாப்பிரதிகளுக்கும் பல்வேறு வாசிப்புகள் உண்டு. பல்வேறு பார்வைகளில் கட்டவிழ்ப்பு செய்ய இயலும் என்கிற 'அபாயம்' அவருக்கு உறைத்தபோது அவரிடம் இயலாமையுடன்கூடிய ஆத்திரமே வெளிப்பட்டது.

தீராநதியில் வெளிவந்த கேள்விபதில் ஒன்றில் புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்துபவர்களை 'மேலைக்கோட்பாட்டை வாந்தியடிக்கும் நாய்கள்' என்று திட்டினார். (பிரேமிளிலிருந்து 'கோட்பாட்டு எதிரிகள்' வரை திட்டுவதற்கு சு.ராவிற்கு பிரியமான வார்த்தை 'நாய்'.).

கவிதையில் வழங்கிவந்த இருண்மை, படிமம், குறியீடுகளைக் களைந்து தலித்கவிதைகள் நேரடியான அரசியல்மொழியில் பேசின. நாவல்கள் மற்றும் சிறுகதைகளிலும் சு.ரா நம்பிவந்த எதார்த்தவகை எழுத்துமுறையை நிராகரித்து அ-நேர்கோட்டு எழுத்துமுறை, மாய எதார்த்தவாத எழுத்து ஆகிய எழுத்துமுறைகளை எழுத்தாளர்கள் கையாளத்தொடங்கினர்.

படைப்பாளியின் புனிதத்தில் மற்றவர்களுக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த உயர்சாதி எழுத்தாளர்கள் செயற்கையாக உருவாக்கிவைத்திருந்த மனத்தடைகளை விலக்கி ஏராளமான பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட எழுத்தாளர்கள் எழுதத்தொடங்கினர். ஆனால் ஒருபோதும் சு.ராவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சு.ராவால் சிறந்த தலித் நாவல் எனக்கொண்டாடப்பட்டது இமையத்தின் 'கோவேறுகழுதைகள்' என்பதிலிருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். அது புரதைவண்ணார் சாதியினரைப் பிற தலித் சாதியினர் எவ்வாறு ஒடுக்குகின்றனர் என்பதான கதையாடல். ஆகமொத்தம் ' எங்குதான் சாதியில்லை, தீண்டாமையில்லை, ஒடுக்குமுறையில்லை' எனத் தனது பார்ப்பனீய மனோநிலையைச் சமன்செய்துகொள்ளவும், தனது சாதியின் அதிகாரவிருப்பத்தை நியாயப்படுத்தவும் தலித்துகளின் உள்முரண்பாடுகளை பெரிதுபடுத்திக்காட்டுவதன் மூலம் சாதிய எதிர்ப்புக்குரல்களுக்கு ஒரு தடையரண் போடவுமே சு.ரா முயன்றார்,

அவரது பத்திகள் மற்றும் தனிப்பட்ட கட்டுரைகளில் வெளிப்பட்ட அமெரிக்க மோகம் குறித்து புதியகலாச்சாரம் வெளியிட்ட 'சுந்தரராமசாமி: கனவின் ஓடை, நனவின் குட்டை' நூலில் காண்க.

காலச்சுவடு ஒரு இலக்கியத்தினமலர்:

ஆதிக்கக் கருத்தியலும் ஆளும் வர்க்கமும் எப்போதுமே புதிய சிந்தனைகளையும் தங்கள் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மாற்று இலக்கிய மற்றும் அரசியல் தளங்களையும் செயல்பாடுகளையும் சில தந்திரமான வழிகளில் எதிர்கொள்கிறது.

முதலில் அவற்றை இலக்கியம் அல்லது அரசியலே அல்ல என்பது

பின் அவற்றில் அழகியல் இல்லை, மெய்யியல் இல்லை என்று நிராகரிப்பது,

பிறகு இதையெல்லாம் நாங்கள் எப்போதோ செய்துவிட்டோம் என்று 'ஊத்திமூடுவது'.

இறுதியாக செல்வாக்கு பெற்ற இலக்கிய மற்றும் அரசியல் கோட்பாடுகளை அரவணைத்து வீழ்த்துவது. இப்படியான எல்லாத் தந்திரங்களும் இந்தியாவின் ஆதிக்கக் கருத்தியலான பார்ப்பனீயத்திற்குத் தண்ணீர்பட்ட பாடு.

பெரியார் மொழியில் சொல்வதென்றால் 'சங்கராச்சாரி பஞ்சமனைப் பார்த்தால் குளிப்பார்: சில பார்ப்பனர்கள் தொட்டால் தீட்டு என்பார்கள். சிலசமயம் ராஜாஜி காந்தியின் மகனுக்குப் பென்கொடுப்பார்: பலித்தவரைப் பார்ப்பனீயம்'. இன்னும் புரிகிற மாதிரி சொன்னால், கம்யூனிசம் மனிதகுல, தேசவிரோதத் தத்துவம் என்று பிடிவாதம் பிடிக்கலாம். பிடி தளரும் நிலைவந்தால் வேதத்திலேயே கம்யூனிசக்கூறுகளைக் 'கண்டுபிடிக்கலாம்'.

அப்படித்தான் தலித் இலக்கியத்தைச் 'சவடால் இலக்கியம்' என்று நிராகரித்த சு.ரா பிறகு அவர் மொழிபெயர்த்த 'தோட்டியின் மகன்' நாவல் மூலம் தலித் இலக்கியத்திற்குச் சொந்தம் கொண்டாடினார். (ஒரு வெள்ளாளன் எழுதிப் பார்ப்பான் மொழிபெயர்த்தது தலித் இலக்கியம் என்றால் 'நெஞ்சுபொறுக்குதில்லையே').

காலச்சுவடு ஒரு தலித் அறிவுஜீவி மற்றும் எழுத்தாளரைத் தனது ஆசிரியர்குழுவில் அமர்த்தியது. என்.டி.ராஜ்குமார் போன்ற தலித் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டது. (ஆனால் நான் வாசித்தவரை இன்றளவிலும் காலச்சுவடில் ஒரு தலித் அரசியல் கவிதையும் இடம்பெற்றதாய் நினைவில்லை.) ஆனால் சமயம் கிடைக்கும்போதெல்லாம் காலச்சுவடின் பார்ப்பனப் பயங்கரவாத மூளைத் தன் விஷக்கொடுக்கை நீட்டத் தவறுவதில்லை. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் ஒரு சில உதாரணங்கள்.

ஆஸ்திரேலியப் பாதிரியார் ஸ்டெயின்கிரகாம் சங்பரிவார் இந்துத்துவக் குண்டர்களால் கொலை செய்யப்பட்ட நேரம். அவர் பழங்குடிகளை மதமாற்றம் செய்ததால்தான் இந்துக்கள் கோபம்கொண்டு கொலைசெய்தனர் என்று வாதிட்டது பரிவார். அப்போதைய இந்தியப் பிரதமர் பா.ஜ.க வாஜ்பாய் 'மதமாற்றம் குறித்த தேசியவிவாதம் தேவை' என்கிறார். அதேநேரத்தில்தான் காலச்சுவடு ஒக்காங்கோவின் 'சிதைவுகள்' நூலை மொழிபெயர்த்து வெளியிட்டது. சிதைவுகள் நாவலின் கரு 'ஆப்பிரிக்கக் கிராமங்களில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் பண்பாடுகள், நம்பிக்கைகள், சமயங்கள் ஆகியவற்றை எப்படி காலனியக் கிறித்துவம் சிதைத்தது என்பதே.

மதச்சார்பின்மை குறித்துக் காலச்சுவடு ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. அதில் வெளியான இரண்டு கட்டுரைகள் இந்துத்துவத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தின. ஒன்று ரவிக்குமார் தர்மாகுமார், சஞ்சய்சுப்பிரமணியம் ஆகியப் பார்ப்பன வரலாற்றாசிரியர்களின் கருத்துக்களை முன்வைத்து மதச்சார்பின்மை குறித்து எழுதிய கட்டுரை. இதில் பார்ப்பனர்களும் பவுத்தர்களாக மாறினர் என்று 'வலிந்து' நிரூபித்தார் ரவிக்குமார். இக்கட்டுரை மற்றும் மேற்குறிப்பிட்ட பார்ப்பன வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுப்புரட்டுகளை அம்பலப்படுத்தியும் மத்தியகால இந்தியாவில் நிலவிய மதநல்லிணக்கமுயற்சிகள் குறித்தும் எழுத்தாளர்.திரு.வளர்மதி 'நினைக்கத்தெரிந்தமனமே' என்னும் தலைப்பில் கவிதாசரண் இதழில் தொடர்கட்டுரை எழுதினார். ஆனால் வழக்கம்போல கா.சுவிடமிருந்தோ ரவிக்குமாரிடமிருந்தோ பதில் இல்லை. பொய்களை விதைப்பதுதானே முக்கியம்? 'வசனமாடா முக்கியம், படத்தைப் பாருடா' என்றது காலச்சுவடு.

மற்றொரு கட்டுரை 'சிந்தனையாளர்' கண்ணன் இஸ்லாமிய மதவாதம் குறித்து எழுதியக் கட்டுரை. இந்துமதவாதமும் இஸ்லாமிய மதவாதமும் ஒன்றே என வாதிட்ட கண்ணன், இஸ்லாமிய மதவாதத்தை இடதுசஸ்ரீ மற்றும் மதச்சாற்பற்ற அறிவுஜீவிகள் கண்டிக்காதது குறித்துத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களால் தொகுக்கப்பட்ட 'சனதருமபோதினி' இதழில் வெளியான கோவைகுண்டுவெடிப்பு மற்றும் முஸ்லீம்களின் மனோநிலை குறித்து ஷாஜகான் என்பவர் எழுதிய கட்டுரையைக் குறிப்பிட்டு 'குண்டுவைக்கும் முஸ்லீம்களுக்கு இவர்கள் ஆதரவானவர்கள்:' என்று எழுதினார். (இந்த கண்ணன் இந்துத்துவ அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத்தின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது). பிறகு காலச்சுவடின் இத்தகைய அய்ந்தாம்படை வேலையைக் கண்டித்து நிறப்பிரிகை 'இலக்கியத்தில் இந்துத்துவம்: காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்' என்னும் வெளியீட்டைக் கொணர்ந்தது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் குண்டுவெடிப்பையட்டி 'நிறப்பிரிகை என்னும் பத்திரிகை தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கு ரகசியச்சுற்றிற்கு விடப்படும் பத்திரிகை' என்று தினமலர் எழுதியது. ( இதில் முரண்நகை என்னவென்றால் அப்போதுதான் 'தேசியம் ஒரு கற்பிதம்' என்னும் பெனடிக்ட் ஆண்டர்சனின் கருத்தை முன்வைத்து நிறப்பிரிகை உரையாடலைத் தொடங்கித் தமிழ்த்தேசியர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தது.). இதுபோலப் பலரையும் போட்டுக்கொடுப்பதும் காட்டிக்கொடுப்பதும் தினமலரின் குலத்தொழில் மற்றும் குலதர்மம். காலச்சுவடும் இதையே செய்துவருவதால்தான் காலச்சுவடை இலக்கியத்தினமலர் என்கிறோம்.

காஞ்சி ஜெயேந்திரன் கைதையட்டிக் காலச்சுவடு எடுத்த நிலைப்பாட்டை ஆராய்ந்தாலும் அதன் பார்ப்பனீயத்தன்மையைக் கண்டுகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. சங்கரன் கைதையட்டி தலையங்கம் தீட்டிய காலச்சுவடு பாரம்பரியம் காப்பாற்றப்படவேண்டும் என்று கவலைகொண்டது. இதை மறுத்துக் கடிதம் எழுதிய எழுத்தாளர் பிரபஞ்சனை 'கிணற்றுக்குள் தன் முகம் பார்த்த சிங்கம்' என்று வர்ணித்தது. (அதற்குமுன்தான் காலச்சுவடின் சென்னைக் கிளையைத் திறந்துவைத்து அதனோடு நெருக்கமாக இருந்தவர் பிரபஞ்சன் என்பது கவனத்திற்குரியது.)

தலித் எழுத்தாளர் ரவிக்குமார் தனது 'தொல்பதிநரகர்' என்னும் கட்டுரையில் ஜெயேந்திரனின் கைது பிற்படுத்தப்பட்டவர்கள் கொண்டாடப்படவேண்டிய விஷயம்தானே தவிர 'தலித்துகள் கூத்தாட அதில் ஒன்றுமில்லை' என்று எழுதி தனது பார்ப்பனப்பக்தியை நிரூபித்தார்.. (இக்கட்டுரையை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையைப் புதியகலாச்சாரம் 'அம்பலப்பட்டது ஜெயேந்திரன் மட்டுமல்ல, தலித்-பார்ப்பனத் தரகு அரசியலும்தான்' என்னும் வெளியீடாகக் கொண்டுவந்தது. அது அப்போதையப் புத்தகக் கண்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.)

இதற்கெல்லாம் உச்சம் காலச்சுவடு பெரியாரின் 125வது பிறந்தநாளையட்டி வெளியிட்ட பெரியார் 125 சிறப்பிதழ். நீலகண்டன் என்கிற ஆய்வுமாணவர் எழுதிய 'சுயமரியாதை இயக்கமும் பூனா ஒப்பந்தமும்' என்னும் கட்டுரையைத் தவிர மற்ற கட்டுரைகள் அனைத்தும் பெரியாரின் மீதும் அவரின் இயக்கத்தின் மீதும் சேறு வீசியது.

பி.ஏ.கிருஷ்ணன் என்ற டெல்லிப்பார்ப்பனரின் கட்டுரை ஒரு கருப்புச்சட்டைக்காரர் ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்து அடிவாங்குவதாய்த் தொடங்கியது. அதுமட்டுமல்ல, காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவரும் தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமாரின் 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' என்னும் கட்டுரைதான் வக்கிரத்தின் உச்சமாய் அமைந்தது.

'திருமணம் என்பதைக் கிரிமினல் குற்ரமாக்க வேண்டும்' என்று பெரியார் 60களில் பேசியதைக் குறிப்பிட்டு அவர் 48ல் செய்த திருமணத்தைக் 'கட்டவிழ்த்தார்' ரவிக்குமார். பெரியார் சிறுவயதில் தாசிவீடுகளுக்குப் போனதையும் பெரியார் பின்னாளில் கற்பு உள்ளிட்ட கருத்தாக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கியதையும் ஜெர்மனியில் நிற்வாணச்சங்கத்தில் சேர்ந்து நிர்வாணமாய்ப் புகைப்படம் எடுத்தது, நிர்வாணச் சினிமாக்கள் பார்த்தது ஆகியவற்றிற்கெல்லாம் காலங்களைத் தாண்டி ஒரு முடிச்சு போட்டு பெரியார் ஒரு பொம்பளைப் பொறுக்கி என்று எழுதினார். (காலச்சுவடின் இந்த பார்ப்பனக் கயமையைக் கண்டித்த இடதுசாரி எழுத்தாளர்களில் சிலர் காலச்சுவடில் எழுதுவதைப் புறக்கணிக்க வேண்டுமென தமிழ் எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினர். மேலும் தோழர்.கணகுறிஞ்சி இப்பிரச்சினையையட்டி 'இந்துத்துவச் சூழலில் பெரியாரின் தேவை' என்னும் கட்டுரைத் தொகுப்பொன்றையும் வெளிக்கொணர்ந்தார்.)

இந்தியச்சூழலில் தோன்றிய சாதி எதிர்ப்பாளர்கள் வள்ளலார் முதல் பாபாசாகேப் அம்பேத்கர் வரை பார்ப்பனீயம் தின்று செரித்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை இந்து வரையறைக்குள் கொண்டுவந்து தனது கொடூரமான இந்துத்துவ அரசியல் திட்டத்தை நிறைவேற்றவும் தயங்கவில்லை.

ஆனால் பார்ப்பனீயத்தாலும் இந்துத்துவத்தாலும் ஜீரணிக்கமுடியாத ஒரே அரசியல் ஆளுமை தந்தை பெரியார்தான். 'பார்ப்பான் என்னும் அழகிய தமிழ்ச்சொல்லை வசைச்சொல்லாக மாற்றியது பெரியாரின் மகத்தான சாதனை' என்பார் பேராசிரியர்.தொ.பரமசிவன். 'பெரியார் மட்டுமில்லையென்றால் பார்ப்பான் தமிழனைத் தன் பூணூல் கயிற்றாலேயே தூக்குப்போட்டுத் தெங்கவிட்டிருப்பான்' என்னும் ஒரு கவிஞரின் கூற்று மிகையானதல்ல.

சாகும்வரை பார்ப்பனர்களுக்கு சிம்மசொப்பனமாகவும் கெட்ட சொப்பனமாகவும் வாழ்ந்த அந்த ஈரோட்டக்கிழவனின் மேல் 'பொம்பளைப்பொறுக்கி' என்று சேறை வாரி இறைத்து தனது பார்ப்பன வக்கிரத்தையும் அரிப்பையும் தீர்த்துக்கொண்டது காலச்சுவடு என்னும் இலக்கியத் தினமலர்.

ஈழத்தமிழர்கள், தலித்துகள், முஸ்லீம்கள், தமிழ்த்தேசியர்கள், மய்யநீரோட்ட மார்க்சியர்கள், நக்சல்பாரிப் போராளிகள் என அனைவருக்கும் எதிரானது பார்ப்பனத் தினமலர். அதனுடைய ஒரே அடிப்படை திமிர்கொழுத்த பார்ப்பன நலனன்றி வேறில்லை. ஆனால் இந்தப் பார்ப்பனத்தினமலர் மற்றும் சிறீராம் சிட்ஸ் போன்ற பார்ப்பன நிறுவனங்களோடு காலச்சுவடு மற்றும் உயிர்மை கொண்டிருக்கும் தொடர்பு குறித்து கிஞ்சிற்றும் கேள்வியற்றுத்தான் சுயமரியாதையற்று சில ஈழத்தமிழர்கள், தலித்துகள், முஸ்லீம்கள் காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் எழுதிக்குவிக்கிறார்கள். புத்தகங்களை வெளிக்கொணர்கிறார்கள். தோழர்.பெரியார் சொல்வார், 'அர்ச்சகன் பொறுக்கித்தின்ன கோவில், அதிகாரம் பொறுக்கித்தின்ன அரசாங்கம், அரசியல்வாதி பொறுக்கித்தின்ன அரசியல்' என்று. அத்தோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். 'இலக்கியவாதிகள் பொறுக்கித்தின்ன இலக்கியம்'.

உலகத்தின் எல்லா ஆதிக்கத்திற்கெதிராகவும் எதிர்ப்புக்குரல் எழுப்பித் தங்கள் தார்மீக அறத்தை நிறுவும் காலச்சுவடு, உயிர்மை இலக்கியக்கம்பெனிகளுக்குத் தினமலர் தமிழ்ப்பொதுப்புத்தியில் திணிக்கும் பார்ப்பனக் கருதியல் குறித்துக் கேள்வியெழுப்பவதற்கு மட்டும் கேள்விகள் ஏதுமில்லை.

ஓராண்டிற்கு முன்பு என்று நினைக்கிறேன். சன்டிவியின் ஏகபோக ஆதிக்கம் குறித்துக் கட்டுரை எழுதித்தள்ளினார் கண்ணன். (அதேபோல உயிர்மையில் சாருநிவேதிதா). இதையும் தினமலரோடு இருபத்திரிகைகளுக்குமுள்ள உறவு மற்றும் கனிமொழியுடனான நெருக்கம் ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால் சில அரசியல் முடிச்சுகள் அவிழும். ஞாநி ஆனந்தவிகடனில் 'அதிமுகவில் சசிகலாவைப் போல திமுகவில் கனிமொழி' என்று எழுதியபோது கொதித்துப்போய்க் கட்டுரை வரைந்த கண்ணனின் மௌனம் கனிமொழி எம்.பி ஆனபிறகு சிறகடித்துப்பறக்கவில்லை. கொஞ்சமும் கூச்சமில்லாமல் மனுஷ்யபுத்திரனோ 'திமுகவில் நடக்கும் வாரிசு அரசியலால் கனிமொழி போன்ற படித்த பண்பானவர்கள் அரசியலுக்கு வருவது சாதகமானது' என்று எழுதுகிறார். மூன்றுபிணங்களின் மேல் ஏறிவரும் படித்த பண்பானவரின் அரசியல் பின்னணியில் வீசுவது கருவறை வாசனை இல்லை ஹமீது, பிணங்களின் வாசனை.ஜெயமோகன் முதல் ஹியூபர்ட் சதீஷ் வரை:

எனது 'சுந்தரராமசாமி : உதிர்ந்த இலையும் குவிந்த குப்பையும்' பதிவில் சு.ராவின் படைப்புகள் குறித்து நான் எதுவும் விமர்சிக்கவில்லை. மாறாக அவரைப் புனிதத்திரு உரு(வீநீஷீஸீ) வாக்கும் முயற்சிகளையே விமர்சித்திருந்தேன். ஏனெனில் சு.ரா இறந்தபிறகு காலச்சுவடு மற்றும் உயிர்மையில் வந்திருந்த சு.ரா குறித்த கட்டுரைகளைத் தொகுத்துப்பாருங்கள்.

ஜெயமோகனின் கட்டுரையைத் தவிர மற்றனைத்தும் சு.ராவின் தனிப்பட்ட வாழ்க்கை நடவடிக்கைகள், மற்றும் அவருடனான உறவு ஆகியவை குறித்துப் பேசுபவையே ஜெயமோகனின் கட்டுரையும் சு.ராவின் படைப்பாளுமை குறித்துப் பேசும் பாவனையில் தானே உருவாக்கிக்கொண்ட இடைவெளியில் தனது பீடத்தை கட்டமைத்து நுழைத்துக்கொண்ட எத்தனமே.

நாகார்ஜீனன், தமிழவன் முதல் தமிழின் முக்கியமான அறிவுஜீவிகளின் உழைப்பெல்லாம் இந்த படைப்பாளிப் புனிதத்தை உடைப்பதிலும் பிரதிகளில் செயற்படும் அரசியல் மற்றும் உளவியலைக் கேள்விக்குள்ளாகுவதற்காக செலவழிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய காத்திரமான கோட்பாட்டுச் செயற்பாடுகள் கடந்த பத்தாண்டுகளில் பலவீனமாகியிருக்கின்றன.

இப்போது தமிழ் இலக்கியச்சூழலில் முதுகுசொறிதலும் புனிதத்திரு உருக்களை நிறுவ முயல்வதற்குச் செங்கல் எடுத்துக்கொடுக்கும் கரசேவையும்தான் நடைபெறுகிறது. ஒரு இலக்கியவாதி, தான் பேசும் உலக இலக்கியம் மற்றும் உலக சினிமாவிற்கு மாறாக ஏதேனும் குப்பைச் சினிமாவுக்குக் கூட வசனம் எழுதலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. பிற எழுத்தாளர்கள் நல்லிகுப்புசாமி, (30களில் சாதிப்பெயரைத் துரத்தி அடித்து சாதியைத் தன் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்வதே அவமானகரமானது என்னும் நிலைக்குக் கொண்டுவந்த பெரியார் என்னும் கலகக்காரன் வாழ்ந்த பூமியில் கலகக்கார எழுத்தாளர்கள், தன் சாதிப்பெயரைக் கூட உதறுவதற்குத் தயாராயில்லாத ஒரு ஜவுளிக்கடை முதலாளியின் தலைமயில் நூல்வெளியீட்டு விழா நடத்த நேர்ந்தது ஒரு ராசலீலையே.) கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் போன்ற தமிழ்நாட்டு காண்ட், பூக்கோக்களோடுடனான சினேகிதத்தை வளர்த்துக்கொள்வதிலும் வருடத்திற்கொருமுறை காலச்சுவடு ஸ்டாலில் எழுத்தாளர் கண்காட்சியில் எழுந்தருளி சிறுபத்திரிகை வாசகர்கள் என்னும் சுயமரியாதையற்ற மந்தைகளுக்கு ஆட்டோகிராப் போட்டு அருள்பாலிப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

அர்ப்பணிப்பும் தேடலுமுடைய சிறுபத்திரிகை மரபின் சிறுதன்மையைக் குலைத்து அதன்மேல் பிரம்மாண்டங்களையும் மாயக்கவர்ச்சியையும் எழுப்பி எல்லாவற்றையும் லாபநட்டக் கணக்காக மாற்றியதில் சுந்தரராமசாமிக்கும் காலச்சுவடிற்கும் பெரும்பங்கு இருக்கிறது..

எனது சுந்தரராமசாமி குறித்த முந்தையப் பதிவைப் படித்துக் கோபமுற்ற நெருக்கமான நண்பர்களில் ஒருவர் 'சுந்தரராமசாமி எத்தனை எழுத்தாளர்களை அரவணைத்திருக்கிறார், ஊக்கப்படுத்தியிருக்கிறார், வீட்டில் சாப்பாடு போட்டிருக்கிறார். அத்தகைய நல்ல மனிதரின் நற்குணங்களை எழுத்தாளர்கள் எழுதுவதில் என்ன தவறு? இந்த நல்ல குணம்தானே படைப்பாளிக்குத் தேவை' என்று வினவினார்.

'எம்.ஜி.ஆர் இடதுகைக்குத் தெரியாமல் வலதுகையால் தானம் செய்யும் வள்ளல், கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை' என்று கூறும் அவரது விசுவாசிகள் கூடத்தான் தமிழ்நாடு முழுக்க விரவியிருக்கிறார்கள். ஏன் ஒருவன் கொடுக்கும் நிலைமையில் இருக்கிறான், இன்னொருவன் வாங்கும் நிலைமையில் இருக்கிறான் என்னும் உணர்வற்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுதான் அது.

வர்க்கச்சுரண்டல் என்றால் என்ன என்பதே தெரியாத சுந்தரராமசாமியின் ஜவுளிக்கடை ஊழியர்கள் வேண்டுமானால், 'முதலாளி வருசாவருசம் போனஸ்ல்லாம் தருவாரு, எங்கமுதலாளி, தங்கமுதலாளி' என்று கொண்டாடலாம்.. எழுத்தாளர்கள் சுந்தரராமசாமியின் ஜவுளிக்கடை ஊழியர்களா, என்ன?

16 உரையாட வந்தவர்கள்:

 1. முபாரக் said...

  என்னதான் முசுடா இருந்தாலும் :)உம்ம எழுத்து சும்மா அதிருதுல்ல

  மன்றத்து சார்பா வச்சது

 2. வரவனையான் said...

  //பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.//

  நல்ல கட்டுரை சுகுணா, :)))))))))))  ஆனால் லேசாக உண்மைத்தமிழன் வலைப்பக்கம் போனது போல் இருக்கிறது நீளம்.


  இரவு கடற்கரையில் ஜமா

 3. முத்துகுமரன் said...

  அற்புதமான கட்டுரை சுகுணா திவாகர்.
  எழுத்தின் ஊடாக இயங்கும் அரசியலை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறிர்கள். தமிழ் இலக்கிய உலகமே இரண்டு பதிப்பகங்களின் கோமணத்துணிக்குள் கட்டி வைக்க முயற்சிகள் நடைபெறும் வேளையில் சிறப்பானதொரு மாற்றுப் பார்வை. போரட்ட களத்தில் எதிர்தலைமையிலும் பார்ப்பனியத்தை நிறுத்திக் கொளவது பார்ப்பனியத்தின் ஒரு யுக்தி. சுந்தரா ராமசாமி. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிலிருந்து படித்து வருபவர்களை எல்லாம் நேர்மையற்றவர்களாக, வக்கிர மனம் படைத்தவர்களாக சித்தரிப்பதை என்பது தொடர்ந்து வரும் நிகழ்வுதான். ஏன் என்று கேட்டால் அது படைப்பாளியின் சுதந்திரம். அடுத்தவன் மீது சேறுபூச படைப்பு சுதந்திர முக்காடு போட்டுத் திரியும் பேடிகளே இவர்கள்

  பேராசியர் சுப.வீ தன்னுடைய பெரியாரின் இடதுசாரித் தமித்தேசியம் நூலில் இது குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மிகப்பொருத்தமான வார்த்தைகள் அவை.

  //ஒருவன் கொடுக்கும் நிலைமையில் இருக்கிறான், இன்னொருவன் வாங்கும் நிலைமையில் இருக்கிறான் என்னும் உணர்வற்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுதான் அது. //
  மிக முக்கியமான செய்தி இதுதான்.

  இந்த பதிவை எழுத நீங்கள் எடுத்து கொண்ட உழைப்பு பாரட்டத்தக்கது

 4. அசுரன் said...

  நீண்ட சுவராசியமான கட்டுரை. கட்டுரை வரிகளை கட்டுடைப்பு (:-))) செய்து விமர்சிக்க அவகாசமில்லை. ஆனால் இது ஒரு அவசியமான கட்டுரை.

  தமிழக இலக்கிய சூழலில் பார்ப்ப்னியத்தின் ஆதிக்கத்தை விமரிசையாக அம்பலப்படுத்தியுள்ளது கட்டுரை.

  அசுரன்

 5. Pot"tea" kadai said...

  உள்ளேன் அய்யா...

  எப்போதிலிருந்து சாருவை காப்பியடிக்க கற்றூக் கொண்டீர்கள்?

  முழுசும் படிக்கலை...காத்தால ஓசீ ப்ரிண்ட் எடுத்து படிச்சுட்டு நாங்களும் விமரிசையாக விமரிசனம் செய்யறோம்

  வர்ர்ர்ரோஓஓஓஓம்

 6. குட்டிபிசாசு said...

  கட்டுரைக்கு பின்னால் உள்ள உங்கள் தெளிவான பார்வை அருமை!!

  பூணுல் அறுப்பு சம்பவத்தைக் கொண்டு சுஜாதா எழுதிய ஒரு சிறுகதையை விமர்சித்த கட்டுரையை எங்கேயோ படித்த ஞாபகம் (கீற்றில் என்று நினைக்கிறேன்).

  வாழ்த்துக்கள்!!!

 7. Ayyanar Viswanath said...

  வெகு விரிவான,மிகவும் அவசியமான கட்டுரை திவாகர்.இக்கட்டுரையில் ஒரு விதயம் உறுத்தலாக இருக்கிறது.

  /ஒரு வெள்ளாளன் எழுதிப் பார்ப்பான் மொழிபெயர்த்தது தலித் இலக்கியம் என்றால் 'நெஞ்சுபொறுக்குதில்லையே'/

  தோட்டியின் மகன் படைப்பு ரீதியிலாக விளிம்பின் வலிகளை சரியாய் முன்நிறுத்தியது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.ஒரு தலித் இதை எழுதியிருந்தால் ஒரு வேளை இந்த நாவல் பரவலாய் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம்.இருப்பினும் தலித என்கிற தகுதி மட்டுமே போதுமானதாகி விடாது.அதே சமயம் விளிம்பின் மொழி விளிம்பு மக்களால் மட்டுமே பேசப்பட வேண்டும் என்கிற வாதமும் எனக்கு சரியாய் படவில்லை.

 8. மிதக்கும்வெளி said...

  பின்தொடரும் வால்...

  (வால்தான்ப்பா பின்தொடரும். நிழல்கூட நைட்டானா மறைஞ்சுடும்.((-...)

  இது வெறுமனே அய்யனார்க்கான எதிர்வினை மட்டுமில்லை. எனது 'பெண் எழுத்தாளர்களிடம் சில கேள்விகள்' பதிவில் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். ஆனால் மய்யமான பல கேள்விகளை விடுத்து 'காலச்சுவடு மற்றும் உயிர்மையில் ஏன் எழுதக்கூடாது' என்கிற ஒற்றைக் கேள்வியிலேயே விவாதமானது மய்யங்கொண்டிருந்தது. அப்போது விரிவாக எழுதமுடியாத சூழல். இப்போது இதனைப் பயன்படுத்திக்கொண்டமைக்காக இந்த வாய்ப்பையளித்த நண்பர் அய்யனார்க்கு நன்றி.

  அய்யனார் ஏதோ எனது பதிவைப் படித்துப் பலர் சு.ராவின் பிரதிகளைப் படிக்காமலே போய்விடும் என்று தன் அச்சத்தைத் தெரிவித்திருந்தார். தேவையற்ற பயம். எனது எழுத்துக்கள் அந்தளவிற்கு செல்வாக்கு செலுத்துபவை என்று நான் கருதவில்லை. அத்தகைய மயக்கமும் எனக்கில்லை. நான் அய்யனாரைப் போல ஒரு சாதாரணமான சகபதிவர்தான். பல கருத்துக்களோடு இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேனே அல்லாது சு.ராவைப் படிப்பதைத் தடுக்கிற நோக்கமோ, காலச்சுவட்டின் வியாபாரத்தைக் கெடுக்கிற நோக்கமோ எனக்கில்லை.

  பிரேமிளைப் 'படிமத்தின் தந்தை' என்று குறிப்பிடும் அய்யனார் அவர் மீது தேவையற்ற அவதூறுகளைத் தெளித்த ஞானக்கூத்தனின் நூலையே தூக்கியெறிந்துவிட்டேன் என்றும் எழுதுகிறார். அப்படியானால் அய்யனார் முதலில் தூக்கியெறிய வேண்டியது சு.ராவின் நூற்களைத்தான். அவரது நடுநிசிநாய்களில் பல கவிதைகள் பிரேமிளைப் பற்றியது. பிரேமிள் வாழும்போது வைத்த விமர்சனங்களுக்கு தனது இயல்புப்படியே கள்ளமவுனம் சாதித்த சு.ரா அவர் இறந்ததும் அவரைப் பற்றி எழுதித் தன் அரிப்பைத் தீர்த்துக்கொண்டார். இறந்துபோன சு.ராவை விமர்சிக்கலாமா என்று பலர் பதைபதைப்பதையும் நினைவுபடுத்தி இதை டைமிங் ஜோக்காக ரசிக்கலாம்.

  மேலும் இறந்துபோனவர்களை விமர்சிக்கக்கூடாது என்றால் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ முதல் சாவர்க்கர், ஹெட்கேவர், 'தீண்டாமை என்பது ஷேமகரமானது' என்று சொன்ன கிழபாடு சங்கரன், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், நாளைக்குச் சாகப்போகும் கருணாநிதி அப்புறம் அய்ம்பது ரூபாய்க் கடன்வாங்கித் தராமலே செத்துப்போன பக்கத்துவீட்டு இருளாண்டி வரை யாரையும் விமர்சிக்கமுடியாது என்பதால் எனக்கு அந்த சென்டிமெண்டில் நம்பிக்கையில்லை என்பதையும் நண்பர் அய்யனார்க்குப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பிறப்பினடிப்படையிலேயே யாரும் இங்கு எந்த எழுத்தாளரையும் விமர்சிக்கவில்லை. சு.ரா மீது கடும் விமர்சனங்களை வைக்கும் எழுத்தாளர்கள் பார்ப்பனச்சாதியில் பிறந்த ஜி.நாகராஜன், நகுலன் ஆகியோரையும் கொண்டாடத்தவறவில்லை. வெள்ளாள ஆதிக்கச்சாதியில் பிறந்த ஜெயகாந்தன் அவ்வப்போது வெளிப்படுத்தும் பார்ப்பன அடிமைமனோபாவத்தை விமர்சிக்கும் எழுத்தாளர்களும்கூட ஜெயகாந்தன் தனது ஆரம்பகாலப் பிரதிகளில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ததைச் சுட்டிக்காட்டுவதையும் தயங்குவதில்லை.

  பாரதியின் பிரதிகளில் வெளிப்படும் பார்ப்பனீய மனோபாவம் குறித்து எனக்குக் கடுமையான விமர்சனங்கள் இருப்பதைப் போலவே பாரதியின் பல கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். ஆனால் சு.ராவின் எந்தப் படைப்பும் என்னை ஈர்த்ததில்லை.

  வைரமுத்து பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாக சாகித்ய அகாதெமி விருது போன்றவற்றில் அக்கறை இல்லாததைப் போலவே சு.ரா போன்ற 'நவீன' எழுத்தாளர்கள் காட்டிக்கொள்வர். ஆனால் வைரமுத்து போன்றவர்களுக்கு அந்த விருது கொடுக்கப்பட்டால், 'விருது கொடுப்பதில் அரசியல்', 'இது கொடுக்கப்பட்ட விருது அல்ல, வாங்கப்பட்ட விருது' என்று குய்யோமுய்யோ என்று கூக்குரலிடுவார்கள்

  வருடாவருடம் இந்த விருது வழங்கும் வைபவத்தின்போது இந்த நவீன எழுத்தாளர்கள் அலறுவதைப் பார்த்தால் படு காமெடியாக இருக்கும். காலச்சுவடில் 'சாகித்திய அகாதெமி விருதுக்குத் தகுதியானவர்கள் யார்?' என்று எழுத்தாளர்களிடம் 'கருத்து' கேட்பார்கள். அவர்களும் மாய்ந்து மாய்ந்து பட்டியல் கொடுப்பார்கள். சமயங்களில் அவற்றில் அ.மார்க்சின் பெயரெல்லாம் கூட இடம்பெற்றிருக்கும். ஆனால் எல்லா எழுத்தாளர்களின் பட்டியலிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் பெயர் சுந்தரராமசாமி.

  நான் நவீனகவிதை எழுதி நாசமாய்ப் போவதற்கு முன்பு வரை வைரமுத்துவின் ரசிகன். இப்போதும் அவரது திரைப்பாடல்களுக்கு ரசிகன்தான். உண்மையில் வைரமுத்துவிற்கு அவரது திரைப்பாடல்களுக்காக சாகித்ய அகாதெமி விருது கொடுத்தால் அதிலொன்றும் தவறில்லை. அவரின் பாடல்கள் சு.ராவின் கவிதைகளைவிட சிறந்தவை என்பது எனது கருத்து.

  சுந்தரராமசாமியின் ரசிகைகளைத் துரத்தித் துரத்திக் கொலைசெய்பவன் என்று 'சிவப்புரோஜாக்கள் கமலஹாசனின்' பிம்பத்தை எனக்கு ஏற்றிவைத்துவிட்டார். அதை ஒரு கவிதை என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்களேன். 'கொலைவாளினை எடுடா மிகுக் கொடியோர்செயல் அறவே' என்று பாரதிதாசன் சொன்னதற்காக அவரைக் கொலைமுயற்சி மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகியபிரிவுகளில் எப்படிக் கைதுசெய்ய முடியாதோ, 'செகத்தினை அழித்திடுவோம்' என்றதற்காக பாரதியைத் (இந்து? பார்ப்பன?) தீவிரவாதி என்று பொடாவிலே எப்படிப் போடமுடியாதோ அதுபோலத்தான் இதுவும்.

  பிள்ளைகெடுத்தாள்விளை பற்றி ஒரு வார்த்தை : பி.கெ.வி ஒரு தலித்விரோத நாவல் இல்லையென்றும் (அதுவும் எப்படி, அந்தப் பையனைக் கெடுத்த பெண் தலித்பெண்ணில்லை, நாடார்பெண்தான் என்கிற ரீதியில்...) தமிழின் நல்ல சிறுகதைகளில் ஒன்று என்றும் அதை ஆதரித்த ஒரே தலித் எழுத்தாளர் ரவிக்குமார்தான். வாழும்வரை அதன்மீதான கண்டனங்களுக்கு மௌனத்தாலேயே சிறகடித்துக்கொண்டிருந்தார் சு.ரா. அவர் இறந்தபிறகு காலச்சுவடு அதைப் பாராட்டி ரவிக்குமார், பஞ்சாங்கம், அ.ராமசாமி போன்ற அவரது ஆதரவாளர்கள் எழுதிய கட்டுரையைத் தொகுத்து 'பிள்ளைகெடுத்தாள்விளை- சில எதிர்வினைகள்' என்னும் தொகுப்பைக் கொணர்ந்தது.

  நான் என்னுடைய கவிதைகளைப் பெரும்பாலும் சிறுபத்திரிகைகளுக்கு அனுப்பியது கிடையாது. கட்டுரைகளை மட்டுமே அனுப்பியிருக்கிறேன். கவிதைகள் சில நண்பர்களின் முயற்சியால் மட்டுமே இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. என்னுடைய கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை எந்த சிறுபத்திரிகையிலும் வெளிவராதவை. ஆனால் வானம்பாடி இலக்கியப்பாணியிலிருந்து 'நவீன'(?) கவிதைக்கு நான் மாறிய காலகட்டத்தில் இந்த அரசியல் எல்லாம் தெரியாத பாலகனாய்க் கவிஞர்.யவனிகாசிறீராமின் ஆலோசனையின் பெயரில் காலச்சுவடிற்குக் கவிதைகளை அனுப்பியிருந்தேன்.

  அப்போது அதற்குப் பதிலாக 'உங்கள் கவிதைகளில் நுட்பம் போதவில்லை' என்று எழுதிக் கண்ணன் கையெழுத்திட்ட கடிதம் மட்டும் ஏனோ இன்னமும் என்னிடம் பத்திரமாகத் தங்கிவிட்டது. ஆனால் அதற்குப் பல ஆண்டுகள் கழித்து அவர் எனக்கு அனுப்பிய வக்கீல்நோட்டீஸ் மட்டும் என்னிடமில்லை.

  தன் அதிகாரத்தை விமர்சிப்பவர்களுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்புவது, மேலிடத்துச் செல்வாக்கைப் பயன்படுத்திப் போலீஸ் ஸ்டேசனில் லாடம் கட்டுவது, அவர்கள் வேலை செய்யும் பத்திரிகை அலுவலகங்களுக்கே போன் செய்து அவர்களின் வேலையைக் காலிபண்ண முயற்சிப்பது, வெளிநாட்டில் வசிக்கும் எழுத்தாளர்கள் என்றால் அவர்கள் இந்தியா வரும்போது அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் மேற்கொள்வது
  இவையெல்லாம் காலச்சுவடிற்குப் புதிதில்லை.

  காலச்சுவடின் அதிகாரத்தைத் தொடர்ந்து விமர்சித்த பலரில் தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான குமாரசெல்வா போன்ற சிலர் எழுதுவதையே நிறுத்தி ஒதுங்கிக்கொண்டனர். ஒருசிலர் காலச்சுவடு முகாம்களிலேயே தஞ்சமடைந்துவிட்டனர். மிஞ்சியிருக்கும் நேர்மையான ஒருசிலரே காலச்சுவடு மற்றும் உயிர்மையில் பங்குபற்றாமல் தனித்தியங்குகின்றனர். காலச்சுவடு மற்றும் உயிர்மையிலிருந்து ஒதுங்கிப் 'பனிக்குடம்' என்னும் இதழை நடத்தி வரும் கவிஞர்.குட்டிரேவதி போன்றவர்களையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

  சு.ரா மற்றும் காலச்சுவடிடமிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் விலகிவந்த பலருக்கும் (ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், சங்கரராமசுப்பிரமணியன், லட்சுமிமணிவண்ணன் என்று இந்தப் பட்டியல் நீளும்.) இலக்கியக் கோட்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சு.ரா மற்றும் காலச்சுவட்டின் நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் மாற்றமில்லை.

  கவிஞர். தமிழ்நதி எனது முந்தைய பதிவான சுந்தரராமசாமி: உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும் என்னும் பதிவிற்கு ஒரு பின்னூட்டமிருந்தார். ஒரு சில காரணங்களால் அவற்றை வெளியிடமுடியவில்லை. ஆனாலும் அதன் சாரங்களாக நான் கருதுவதற்கு மட்டும் சில வார்த்தைகளைச் சொல்லிக்கொள்ளலாமென்று விரும்புகிறேன். 'உங்களைப் பற்றிய வலைப்பக்கத்தில் அதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரல்' என்று போட்டுவிட்டு இன்னாரைத்தான் படிக்க வேண்டும் இன்னாரைப் படிக்கக்கூடாது என்று நீங்கள் சொல்வதும் ஒரு அதிகாரமில்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

  பொதுவாக படிக்கக்கூடாது என்று சொல்வதே பார்ப்பனீயம்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளை மட்டுமே வாசிப்பின் முன்நிறுத்துவது என்பது அதிகாரம் மட்டுமல்லாது வன்முறையும் கூட. மேலும் சு.ராவைப் படிக்காமலே எப்படி அதை விமர்சிக்கமுடியும்? எனவே அத்தகைய தொனி என் வார்த்தைகளில் தட்டுப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

  அதேபோல 'ஈழத்தமிழராயிருப்பதால் தமிழ்ச்சிறுபத்திரிகை அரசியல் குறித்த பரிச்சயமற்றிருந்திருக்கலாம்' என்பதையும் 'ஈழத்தமிழர்கள் அறிவிலிகள் அல்லர், அவர்களுக்கும் சிறுபத்திரிகை அரசியல் பரிச்சயம்தான்' என்கிற ரீதியில் மறுப்பு எழுதியிருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இலக்கிய உயிரிகளால் இந்த அரசியல் வெப்பத்தை அண்மையிலிருந்து உணரும் வாய்ப்பு அதிகம் என்னும் பொருள்படவே எழுதியிருந்தேன். எப்படி என்னால் ஈழத்து இலக்கியச்சூழலை வெறுமனே பிரதிகள் வழியாகவே அறியமுடிகிறதோ அதைப்போல என்ற கருத்தினடிப்படையிலேயே அது அமைந்திருந்தது. மற்றபடி ஈழத்தமிழர்களை இழிவுசெய்வதற்காக அல்ல.

  கவிஞர்.தமிழ்நதி தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் என்றே கருதுகிறேன். அவர்மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் அன்பும் மரியாதையும் உண்டு. பொதுவாக பெண் எழுத்துக்கள் மற்றும் தலித் எழுத்துக்கள் சில வரையறுக்கப்பட்ட அரசியல் சூத்திரங்களால் இயங்குவதால் அவை போலச்செய்த எழுத்துக்களாக மாறிவிட்டன என்று கருதுகிறேன்.. மூன்று தீராநதிகளுக்கு முன்னிருக்கலாம், லீனாமணிமேகலையின் ஒரு கவிதையைப் படித்து அதிர்ந்துபோனேன். அவை சல்மாவின் ' எல்லாப்புரிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரியை முதலாய்க்கொண்டு பிரதியெடுத்ததாய் இருந்தது. ( இந்த 'போலச்செய்தல் விமர்சனம்' என்னுடைய கவிதைகளென்று நம்பியிருக்கக்கூடிய வஸ்துக்களையும் சேர்த்துத்தான். என்னுடைய கவிதைகள் கூட கெட்டவார்த்தைகள் நிரம்பிய கொள்கலனாக மாறிவிட்டனவோ என்கிற அய்யமும் எனக்குண்டு).

  ஆனால் அப்படிப்பட்ட எழுத்துக்களைத் தமிழ்நதியின் பிரதிகளில் காண ஏலாது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் எல்லா எழுத்துக்களும் தேங்கி முடைநாற்றமெடுத்தும் கூறுவதுகூறல் என்னும் குற்றத்திற்கும் ஆளாகவும் செய்கின்றன. அதேபோல தமிழ்நதியின் எழுத்துக்களும் ஆகுமா என்பது குறித்த ஆருடம் எதுவும் சொல்லமுடியவில்லை. இருந்தபோதும் ஒரு சில பிரச்சினைகளூடே (இதுவும்கூட என்னுடைய தனிப்பட்ட கருத்து, இங்கு பிரச்சினைகள் என்று குறிப்பிடுவது என்னுடைய பிரச்சினைகளாக - வாசிப்பு, புரிதல் மற்றும் முன்தீர்மானங்கள் குறித்ததாகக்கூட இருக்கலாம்.) அவை தனித்துவமிக்க எழுத்துக்களென்றே கருதுகிறேன்.

  அத்தகைய படைப்பாளியை ஒரு சாதாரண இலக்கிய வாசகனாகிய நான் புண்படுத்தியிருந்தால் அதற்காக என் மன்னிப்பைக் கோருகிறேன்.

  நண்பர் அய்யனார் எனக்கு அறிமுகமான விதமே ஒரு சுவாரசியம்தான். அவரது பதிவுகளில் இருந்த சிறுபத்திரிகை வாசிப்புச்சாயலைக் கண்டு 'நீங்கள் காலச்சுவடு அய்யனாரா?' என்று ஒரு பின்னூட்டமிருந்தேன். (அய்யனார் காலச்சுவடின் தீவிர ஆதரவாளராயிருந்தவர். தற்போது பவுத்த அய்யனார் என்ற பெயரில் எழுதிவருகிறார். 'மேன்ஷன்கவிதைகள்' என்பது அவரது தொகுப்பு. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு குழாமிலிருந்து விலகினார். அதன்பிறகு கா.சுவின் ஆசிரியர் 'அய்யனார் ஒரு பிரெஞ்சுக்காரரிடம் 'காப்கா படித்திருக்கிறீர்களா என்று கேட்டுத் தொந்தரவு செய்ததாக ஒரு பத்தியில் எழுதி அய்யனாரின் அறிவின் ஒளிவட்டத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தனது மேதாவித்தனத்தையும் எவரையும் கழுத்தறுக்கத் தயங்காத பார்ப்பனக்கீழ்மைக்குணத்தையும் காட்டியிருந்தார்) உடனே அய்யனாரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, 'இல்லை. ஆனால் நானும் காலச்சுவடின் வாசகன்தான்' என்று. இந்த உம்மையில் என்னையும் காலச்சுவடின் வாசகனாக்கியிருந்தார் அய்யனார்.
  காலச்சுவடைப் படிப்பதனால் காலச்சுவடின் வாசகன் என்றால் நானும் காலச்சுவடின் வாசகன்தான். காலச்சுவடிற்கு மட்டுமல்ல விஜயபாரதம், சில சமயங்களில் விருந்து போன்ற பத்திரிகைகளுக்கும் கூட.

  அந்த அய்யனார் இந்த அய்யனார் இல்லை என்று எனக்கு 'விளங்கிற்று'. ஆனாலும் தோழர்.அசுரன் ஒரு பதிவில் 'அய்யனார் குடுமியா?' என்று கேட்டிருந்தார். அய்யனாரும் 'இல்லை' என்று பதிலளித்திருந்தார். நான் அறிந்தவரை இந்த பதிவர் அய்யனார், பவுத்த அய்யனாரில்லை. ஆனாலும் ஒரு அனானி நண்பர் அவர்தான் இவர் என்று விடாப்பிடியாய்ச் 'சாதிக்கிறார்'. (எனக்கு இப்போது அய்யனார் 'நீயா நீயா' என்று எழுப்பப்படும் கேள்விக்கு ' நானா, நானா, நோ, நோ, நான் அவனில்லை' என்று பாடுவதாய் மனக்கண்னில் பிம்பம் விரிகிறது. என்ன அய்யனார் பக்கத்தில் சினேகா, நமீதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்திரெட்டி போன்ற தேவதைகள்தான் இல்லை.). அப்படியே இவர் பவுத்த அய்யனாராய் இருந்தால்தான் என்ன பிரச்சினை? மேலும் பவுத்த அய்யனார் ஒரு பார்ப்பனர் அல்ல.

 9. Anonymous said...

  பிறப்பினடிப்படையில் ஒரு கலைஞனை/படைப்பாளியை மதிப்பிடலாமா என்பது ஒரு மய்யமான கேள்வி.கலைஞன் மட்டுமல்ல, அரசியலாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியவர்கள் குறித்தும் முன்வைக்கப்படும் இக்கேள்வி அடித்தட்டுமக்களிடமிருந்து எழும் பலகேள்விகளை மவுனப்படுத்தும் தந்திரம் கொண்டது. இதன்மூலம் சுலபமாக எதிர்த்தரப்பைச் சாதியவாதியாக நிறுத்திவிட முயலும் வசதியும்கொண்டது.


  //'ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது' என்றார் பேராசான் கார்ல்மார்க்ஸ். இந்தியச்சமூகம் வர்க்கம் மற்றும் சாதியச்சமூகமாக விளங்குவதால் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கம் மட்டுமல்ல சாதியின் முத்திரையுமிருக்கிறது. //

  அப்படியானால் தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா?

 10. லக்கிலுக் said...

  //லீனாமணிமேகலையின் ஒரு கவிதையைப் படித்து அதிர்ந்துபோனேன். அவை சல்மாவின் ' எல்லாப்புரிதல்களுடனும் விரிகிறதென் யோனி' என்னும் வரியை முதலாய்க்கொண்டு பிரதியெடுத்ததாய் இருந்தது.//

  என்ன கொடுமை சார் இது? :-(((((

 11. பாரதி தம்பி said...

  விரிவான தரவுகள் கொண்ட மிக நல்ல கட்டுரை. செயலிலும் பேச்சிலும் வெளிப்படையான பார்ப்பனராக மாறிவிட்ட நல்லி குப்புசாமி ஷெட்டிக்கு இந்த இலக்கிய வர்த்தகர்கள் சொரிந்து விடுவதும், புத்தகக் கண்காட்சியில் அந்தப் பார்ப்பன ஷெட்டியாரை பேருரை ஆற்றவிட்டு உவகையடைவதும் மகாக்கொடுமை.

  எனக்கு ஒரு சந்தேகம். புதுமை பித்தன் street dog என்பதை பறைநாய் என மொழி பெயர்த்தது எந்த நூலில்..?

 12. மிதக்கும்வெளி said...

  /அப்படியானால் தாங்கள் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளலாமா/


  கொள்ளலாமே! தெரிந்துகொண்டு சுகுணாதிவாகர் இன்னசாதியைச் சேர்ந்த நாதாறி/பன்னாடை என்று நீங்கள் எழுதலாமே!

 13. மிதக்கும்வெளி said...

  ஆழியூரான், சரியாக நினைவில் இல்லை. சரிபார்த்துச் சொல்கிறேன்.

 14. மிதக்கும்வெளி said...

  ஆழியூரான், சரியாக நினைவில் இல்லை. சரிபார்த்துச் சொல்கிறேன்.

 15. Anonymous said...

  Regarding puthumaipitthan,

  Eppothum mudivil enra siru kathai-il. annal atthu translation illai -
  melum antha kathai-il athu sariagave theriyum - ella jathiyum anth kathai-il kindal adithu eruppar

 16. கையேடு said...

  a well written detailed analysis, though one or two lines could be carefully revised - overall a well written article.

  Regarding "parai naai" if i am correct it was not used as a translation of a street dog rather a dog was used as a symbol of particular caste and also several animals were used as a representation of different caste in the same story.

  but the usage of a particular animal which by default gives a different impression have to be critisized severly irrespective of the public fame a writer has or had.

  one also have to take into the happenings at the time of the release of such old stories (sama kaalathaya nihazhvuhal), which can be useful to uncover the underlying purposes of those stories. - ranjith