ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்




பொங்கிப்பெருகும் கருணையே
முலைகளாய்த் ததும்பிற்றுப்
பெண்ணிடம்.
முலைகளற்ற வெற்றுக்காம்புகள் திருகி
குறிதுழாவி அலைகிறது
ஆண் என்னும் திமிர்மிருகம்.

- சில்வியாகுண்டலகேசி ( பெண், பெண் மற்றும் பெண் மட்டுமே தொகுப்பிலிருந்து...)

சமம் என்கிற வார்த்தையை வெறுக்கிறேன் நான். ஆணும் பெண்ணும் சமம் என்பது முட்டாள்தனமான உளறலின்றி வேறில்லை. ஆண் எப்போதும் பெண்ணிற்குச் சமமாக முடியாது. நான் ஆணாயிருக்கிறேன். அதனால் அவமானப்படுகிறேன். எப்போதும் எந்தக் கணமும் ஒரு பெண்ணின் கையால் கொலைசெய்யப்பட விரும்புகிறேன், அன்பும் கருணையுமுள்ள பெண்ணின் கைகளால்..

- சுகுணாதிவாகர் (20.11.1978க்குப் பிறகு... (அச்சில் ஏற்றப்படாத பிரதியிலிருந்து...)

மறக்கமுடியாதவர்கள் என்னும் பட்டியலில் பெண்களே எப்போதும் நிரம்பிக்கொள்கிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுமளவிற்கு ஆண்கள் முக்கியமானவர்கள் அல்ல. அன்பும் தோழமையும் கொண்ட ஒருசில ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் நினைவிற்கு வந்துபோவதெல்லாம் அறிவின் திமிர், வன்மம், குரோதம், இரக்கமற்ற துரோகம் இவற்றிற்காகத்தான். - அப்படியாக வாழ்க்கையில் மறக்கமுடியாத பெயர்களிலொன்று கார்த்திகா.

கார்த்திகா ஒவ்வொரு புத்தாண்டையும் கலைத்துப்போடுகிறாள். புத்தாண்டுக்கொண்டாட்டங்களுக்கிடையே கார்த்திகாவின் நினைவு தவிர்க்கவியாமல் உறுத்துகிறது விரலிடுக்கில் சிக்கிக்கொண்ட மணல்துகளைப் போல...

முதல்முதலாக ஒரு நண்பனை வழியனுப்புவதற்காக ரயில்வேஸ்டேசன் சென்றபோதுதான் கார்த்திகாவைச் சந்தித்திருக்கிறான் ஜெகன். நாங்கள் ஓராண்டுகாலம் நடத்திய பத்திரிகையில் என்னோடு இணைந்து ஆசிரியர்குழுவில் பணியாற்றியவன். அவ்வப்போது கவிதைகள் எழுதி, ஓஷோ மீது பிரியம் கொண்டு குழந்தைத்தனமும் மாறாத நேசமும் கொண்டு வாழ்பவன். ஜெகன் சந்தித்தபோது கார்த்திகா தற்கொலை செய்துகொள்வது, வீட்டைவிட்டு ஓடிவிடுவது ஆகிய இருவழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாயிருந்தாள்.

கார்த்திகா ஒரு தலித்பெண். குறிப்பாக பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பெண். அவளது தந்தை அரசு மருத்துவமனை ஊழியர். அரசு ஊழியர் காலனியில் அவளது வீடு அமைந்திருந்தது. பதினொன்றாவதோ, பன்னிரண்டாவதோ படித்துக்கொண்டிருந்தாள் கார்த்திகா. எல்லோருக்கும் வருவதைப் போலவே அவளுக்கும் காதல் வந்தது. ஒருநாள் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனாள்.

காதலனுக்கோ காதலைவிடவும் கார்த்திகா மீதுதான் நாட்டமிருந்தது. ஆனால் கார்த்திகாவிற்கு அது இல்லை. காதல் என்பது பாலியல் உறவிற்கு அப்பாற்பட்டது என்பது அவள் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். மீண்டும் வீடுதிரும்பினாள் தனியாக.

ஆனால் வீடு அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவளை ஒரு வேண்டத்தகாதவளாகவே நடத்திவந்தது. காலனியில் வசிக்கும் பையன்களோ கார்த்திகாவை 'எதற்கும் தயாரானவளாகப்' பார்த்தனர். தண்ணீர் எடுக்கக் குழாய்க்குச் செல்லும்போதெல்லாம் அவளைக் கிண்டல் செய்தனர். கிட்டத்தட்ட 'வர்றியா' என்று அழைத்தனர்.

இந்த நிலையில்தான் அவள் எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் அவளை ஒரு பெரியாரியக்கத் தோழர் ஒருவரின் வீட்டில் தங்கவைத்திருந்தோம். ஆனால் அதற்குள் தோழர் அவள் வீட்டிற்குத் தகவல் அனுப்பியிருந்தார். வீட்டார் வந்தபோது அதிர்ச்சியடைந்த கார்த்திகாவின் கண்களில் ஒரு விபரிக்கமுடியாத ஏமாற்றமும் குற்றம் சாட்டுகிற கோபமும் நிறைந்திருந்தது.

வீடு அவள், குடும்பக் கௌரவத்தைக் கெடுத்துவிட்டதாகப் புலம்பியது. பிறகு கார்த்திகாவை மறந்துபோனோம். ஆனால் இரண்டு வாரங்களில் அவள் மீண்டும் எங்களிடமே வந்து சேர்ந்தாள். இப்போது நாங்கள் உதவிநாடியது முன்னாள் மார்க்சியலெனினிய அனுதாபியும் இந்நாள் கலகக்காரமுமான நண்பர் ஒருவரை .

நல்லபோதையிலிருந்தபோதும் அவர் கார்த்திகாவின் தந்தைக்குப் போன் செய்யத் தவறவில்லை. ஒரு தீயணைப்புநிலையத்தின் அருகில் கார்த்திகாவை அவளது தந்தையிடம் 'ஒப்படைத்து' பொறுப்பாற்றினோம்.

டிசம்பர்31 காலை கார்த்திகா தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு நண்பரின் மூலம் தகவல் வந்தது. இரவு கார்த்திகாவை நானும் ஜெகனும் போய்ப்பார்த்தோம். கார்த்திகா இல்லை, எரிந்து கருகிப்போயிருந்த ஒரு பிண்டமே இருந்தது. பாலிதீன் துண்டுகளில் கட்டப்பட்ட மீன்துண்டங்களாய்ப் போல வெள்ளையாய் அலைந்துகொண்டிருந்தன அவளதுகண்கள்.

'தனியாகப் பேசவேண்டும்' என்று விருப்பம் தெரிவித்த கார்த்திகா, என்னைப் பார்த்துக் கேட்டாள், 'நீங்கள் எங்கள் வீட்டிற்குப் போன் செய்து கார்த்திகாவுடன் பேசவேண்டுமென்றீர்களா?'. நான் பேசவில்லை. ஆனால் எங்களது குழுவிலிருந்து எனது பெயர் கொண்ட இன்னொருநண்பன் பேசியிருக்கலாம். அந்த அழைப்பினால் வீடு மீண்டும் குழப்பத்தையும் கலகத்தையும் சந்தித்தது. கார்த்திகாவிற்கு மரணத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. சரியாக ஜனவரி 1 - கார்த்திகா செத்துப்போனாள்.

நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.

--------------------------- குடும்பவெளிகளிலிருந்து வெளியேறும் பெண்களுக்கான தனிவெளியை இந்தியப்பொதுவெளி உருவாக்கவில்லை, உருவாக்கப்போவதுமில்லை.. வீட்டைவிட்டு ஓடிப்போவது, தற்கொலைசெய்துகொள்வது என்னும் வாழ்வின் எந்தச் சந்தர்ப்பத்திலாவது எல்லோருக்கும் தோன்றும் உந்துதல்களில் பெரும்பாலும் இரண்டாவது வழி மட்டுமே பெண்களுக்குத் திறந்திருக்கிறது. ஒருவேளை வீட்டைவிட்டு ஓடிப்போனால்கூட அவள் யாராவது ஒரு ஆணுடன்தான் ஓடிப்போகவேண்டும். உலகமெங்கும் நிகழும் சாதி/மத/இனக் கலவரங்களில் பாலியல்பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு செய்தியே அல்ல. அது வெறுமனே பாலியல் விழைவு மட்டுமல்ல. மாற்று இன/மத/சாதிப் பெண்ணுடல் என்பது ஆணின் அதிகார வெற்றியை நிலைநாட்டிக்கொள்வதற்கான நிலம்தான். தனது வெற்றிக்கொடியை இறுக நாட்டிவிட்டுத் தனது குழுப்பெருமையைக் காப்பாற்றிய திருப்திகொள்கிறது ஆண்மனம். பெண்ணுடலோ யோனிகிழிந்து சிதைந்துகிடக்கிறது. உலகின் சாதிய, மதவாத, இனவாத, தேசியச் சொல்லாடல்களின் பின்னெல்லாம் ஆணாதிக்க மற்றும் ஆண்மய்ய நோக்கங்களே நிறைந்திருப்பதைப் புரிந்துகொள்வது கடினமானதா, என்ன?

------------------ எங்களுக்கு அதேமாதிரியான வேறொரு வாய்ப்பும் அமைந்தது. வேறுபெண். வேறு ஊர். வேறு சூழல். வேறு நண்பர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணை எங்களால் கொலைசெய்யமுடியவில்லை.

27 உரையாட வந்தவர்கள்:

  1. லக்கிலுக் said...

    //ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்//

    கண்கள் பனிக்கிறது தோழரே! இப்பதிவை படித்து முடித்தபின் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருக்கிறேன்.

  2. தமிழ்நதி said...

    இது உண்மையெனில்... வருத்தமாக இருக்கிறது திவாகர். அவளால் ஏன் ஒரு பெண்ணிடம் அடைக்கலம் தேடமுடியவில்லை என்று யோசித்தேன். இறுதித் தீர்மானங்கள் எங்கிருந்து வருகின்றன என்று யோசித்தபோது அந்தக் கேள்வி அபத்தமானது எனப் புரிந்தது. உங்களால் கொல்லப்பட முடியாத பெண் மற்றும் மறக்கவியலாதவர்கள் பற்றி எழுதுங்கள்.

    பாலிதீன் துண்டுகளில் கட்டப்பட்ட மீன்துண்டங்களைப்போல வெள்ளையாய் அலைந்துகொண்டிருந்தன
    அவளது கண்கள்.

    குரூரமாய் இருந்தாலும்... இப்பகுதி கவிதையின் சாயலைக் கொண்டிருந்தது.

    சில்வியா குண்டலகேசியின் கவிதைத் தொகுப்பை நானும் படித்திருக்கிறேன் :))))

  3. Jazeela said...

    கார்த்திகா என்பது நிஜ பெயரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் இதே போன்றதொரு நிகழ்வை கடந்து வந்திருக்கிறேன். உலகத்திலிருந்து ஒரு தப்பித்தல் தான் தற்கொலை - அது ஒரு அவசர முடிவுதான் தவிர ஆலோசித்த முடிவாகாது. அந்த தருணத்தில் புத்தி மழுங்கி போய்விடும். இனியாவது யாரையும் கொலை செய்து விடாதீர்கள்.

  4. Anonymous said...

    திவா,
    மனது கனமாகிவிட்டது..

  5. பொன்ஸ்~~Poorna said...

    :-(

  6. Ayyanar Viswanath said...

    அடப்பாவிகளா!!

    திணிக்கப்பட்ட சமூக ஒழுங்குகள்தான் இந்த துயருக்கெலாம் காரணம்னு தோணுது.உடல் கற்பு புனிதம் இதையெல்லாம் உடைச்சிட்டு வெளிவரனும் அப்படி இப்படி ன்னு வாய் வலிக்க பேசுறோம்..ப்ச்

  7. ரவி said...

    சில சமயங்களில் உண்மை கற்பனையைவிட அழுத்தம் நிறைந்ததாயிருக்கிறது....

  8. பூனைக்குட்டி said...

    //நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.//

    திவாகர் இதில் பெண்ணியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் நிச்சயமாய். ஏனென்றால் இங்கே பெண்ணியமும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைச் சொல்லாமல் இன்னமும் பிரச்சனைகளையேயே பேசிக்கொண்டிருக்கிறது.

    சொல்லப்படும் தீர்வுகளும் வாழும் சமுதாயத்திற்கான ஒன்றாக இல்லாமல் புத்தகங்களிலும், மேடை நாடகங்களிலும், சினிமாக்களில் காண்பிக்கக்கூடியதாக மட்டுமே இருக்கிறது.

    :(

  9. மிதக்கும்வெளி said...

    தமிழ்,

    அது உண்மையாக நடந்ததுதான். இந்தக் கேள்வியைவ் வேறு சிலரும் கூடக் கேட்டிருக்கிறார்கள். சமயங்கள் நான் எழுதுவது உண்மையா, புனைவா என்று அறியமுடியாத மயக்கத்தினால் இருக்கலாம். நிவேதனா, தயாள், சௌகத் இவர்களெல்லாம் யாரென்று கேட்டவர்கள் மத்தியில் யாரென்று கேட்கப்படாது தனியாய் விசும்புகிறாள் சில்வியாகுண்டலகேசி.

  10. மிதக்கும்வெளி said...

    ஆலோசனைக்கு நன்றி ஜெசிலா. ஆனால் எ என் மீது உங்களுக்கு ஏதோ கோபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். பெண் எழுத்தாளர்களை விமர்சித்ததாலா? ஏனோ சமீபமாக நீங்கள் போடும் பின்னூட்டங்களில் மெல்லிய(அ) வன்மையான கோபம் இழையோடுவதாய் உணர்கிறேன். எதுவாயிருந்தாலும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம்தானே!

  11. மிதக்கும்வெளி said...

    கார்த்திகாவும் நிஜம், அவளது பெயரும் நிஜம்தான் ஜெசிலா. தமிழ், நீங்கள் உண்மையான தமிழ்தானே?

  12. மிதக்கும்வெளி said...

    மோகன் தாசிற்கு பெண்ணியத்தோடு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஆனால் அந்த ஆட்டைக்கு நான் வரவில்லை.

  13. Anonymous said...

    //நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.//

    //குடும்பவெளிகளிலிருந்து வெளியேறும் பெண்களுக்கான தனிவெளியை இந்தியப்பொதுவெளி உருவாக்கவில்லை, உருவாக்கப்போவதுமில்லை.. வீட்டைவிட்டு ஓடிப்போவது, தற்கொலைசெய்துகொள்வது என்னும் வாழ்வின் எந்தச் சந்தர்ப்பத்திலாவது எல்லோருக்கும் தோன்றும் உந்துதல்களில் பெரும்பாலும் இரண்டாவது வழி மட்டுமே பெண்களுக்குத் திறந்திருக்கிறது. ஒருவேளை வீட்டைவிட்டு ஓடிப்போனால்கூட அவள் யாராவது ஒரு ஆணுடன்தான் ஓடிப்போகவேண்டும்.//

    ஒரு உணர்ச்சிமயப்பட்ட நிலைக்கு தள்ளிவிட்டீர்கள். இந்த வீச்சு அடங்க இன்னும் நாட்களாகும்.

    //மறக்கமுடியாதவர்கள் என்னும் பட்டியலில் பெண்களே எப்போதும் நிரம்பிக்கொள்கிறார்கள். //

    இவர்களைக்குறித்தும் எழுதுங்களேன். நாங்களும் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.

  14. மிதக்கும்வெளி said...

    நன்றி நந்தா, அவசியம் எழுதுகிறேன்.

  15. Anonymous said...

    //"ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்" //

    ஒப்புதல் வாக்குமூலம். வெளியே மிதக்கும் அய்யாவை கைது செய்யாமல் மஞ்சத்துண்டு அய்யா என்ன செய்துகொண்டிருக்கிறார். துட்டை எண்ணிகொண்டிருக்கிறாரா?

  16. முத்துகுமரன் said...

    படித்து முடித்தவுடான் ஒரு அழத்தம் படருவதை உணர முடிகிறது.

    நாம் எல்லாவற்றையும் இன்னமும் பேசிக்கொண்டுதான். பேசிக்கொண்டேதான் இருக்கிறோம்.

    மனம் கனத்துக்கிடக்கிறது திவாகர்

  17. குசும்பன் said...

    கண்கள் கலங்கி விட்டன,சொல்ல வார்தைகள் இல்லை.

  18. Anonymous said...

    உணர்ச்சிவயப்பட வைத்த இடுகை.

    இலக்கிய மிகைப்படுத்தல்கள் (எல்லா பக்கங்களிலும்) சூழ்ந்திருக்க அடர்ந்த நிஜங்களும் கூட ஐயத்துடனேயே அணுகப்படுகின்றன.

    அவ்வாறான ஒரு குழப்பத்தில் தான்
    தயாள்களும் செளகத்களும் விசாரிக்கப்பட்டு கார்த்திகாக்கள் கேட்கப்படாமல் போகிறார்கள்.

    ஏனெனில் ஜோடனைகளுக்கிடைப்பட்ட உண்மை, பார்வைக்கு அப்பால் போய்விட நேரிடுகிறது, குழம்பிய நீருக்கடியில் நிலவைப்போல!

  19. தங்கமணி said...

    //மறக்கமுடியாதவர்கள் என்னும் பட்டியலில் பெண்களே எப்போதும் நிரம்பிக்கொள்கிறார்கள். நினைவில் வைத்துக்கொள்ளுமளவிற்கு ஆண்கள் முக்கியமானவர்கள் அல்ல. அன்பும் தோழமையும் கொண்ட ஒருசில ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் நினைவிற்கு வந்துபோவதெல்லாம் அறிவின் திமிர், வன்மம், குரோதம், இரக்கமற்ற துரோகம் இவற்றிற்காகத்தான்.//

    இவைகள் அற்புதமான வரிகள்.

    இந்திய/ தமிழ் சமூக இப்படியான ஆணாதிக்கச் சூழலை மிகவும் சாமர்த்தியமாக மாறிவரும் கால/ பொருளாதாரச் சூழலிலும் காப்பாற்றிக்கொள்வது தான் மிகவும் வியப்புக்கும், வேதனைக்குமான விதயம்.

    பதிவுக்கு நன்றி!

  20. Jazeela said...

    எனக்கென்ன கோபம் இருக்க போகிறது? நீங்க ஏதாவது தவறு செய்தீர்களா என்ன? வேறு யாரையும் இனியாவது கொலை செய்துவிடாதீர்கள் என்று சொன்னதற்கான பொருள்- நீங்கள் தொலைப்பேசினீர்களா என்று அவள் கடைசி மூச்சிலும் சந்தேகத்தில் கேட்டது, நட்பில் அந்த அளவுக்கு நம்பக்கை தந்திருக்கிறீர்கள் என்பதால்.

  21. லக்கிலுக் said...

    //போலி பாலா said...
    //"ஒரு பெண்ணைக் கொலைசெய்தோம்" //

    ஒப்புதல் வாக்குமூலம். வெளியே மிதக்கும் அய்யாவை கைது செய்யாமல் மஞ்சத்துண்டு அய்யா என்ன செய்துகொண்டிருக்கிறார். துட்டை எண்ணிகொண்டிருக்கிறாரா?
    //

    இந்த போலி பாலா நான் அல்ல :-(

  22. யு.எஸ்.தமிழன் said...

    சுகுணா திவாகர்,

    >>>>நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.


    இஸம்களைப் பேசி மனித்ததை மறக்கின்ற ஒவ்வொருவருக்கும் சம்மட்டி அடியாக விழவேண்டிய வார்த்தைகள். சொல்லப்போனால் ஒவ்வொரு இயக்கமும் இஸமும் ஒரு நிறுவனமயமாக்கப்பட்ட சமயமாகவே மாறுவதைத்தான் இது காட்டுகிறது.

    இதைப்படித்து மற்றவர்களைப்போலவே உச்சு கொட்டிவிட்டு வீடுதிரும்பும்போது காய்கறி வாங்க வேண்டும் என்ற நினைவுகளுடன் நகர்ந்து போகிறேன்!

    -யு.எஸ்.தமிழன்

  23. Arasu Balraj said...

    எப்படியாயினும் மொழித்திமிர் காட்டும்
    என் வார்த்தைகளையும்
    தாண்டியதாயிருக்கிறது வாழ்க்கை.

    - 'வாழ்த்து' கவிதையிலிருந்து...

    கார்த்திகாவிற்கும் கூட பொருந்துகின்றன மேற்கண்ட வரிகள்.
    'என்'-னில் நாம் என்றுதான் வாசிக்கிறேன்.எழுத்து வியாபாரி வைரமுத்துவின் பழைய வரிகளில் ஒன்று,"கவிதைகள் இந்த தேசத்தை காப்பாற்ற முடியாது."
    (படைப்பாக்கத்தையே ஒட்டுமொத்தமாக நிராகரித்தலாக கருதி விட வேண்டாம்).

    எனக்கு தோன்றுகிறது, கவிதைகள், கட்டுரைகள் இத்யாதி இத்யாதி மாத்திரமல்ல, பாதுகாப்பான, உணர்ச்சிவயப்பட்ட குற்ற உணர்ச்சியும் கூட, தேசத்தை விடுங்கள், கார்த்திகாக்களை காப்பாற்ற முடியாது.

    உணர்ச்சிகளைத் தொட்டு, கேள்விகளை எழுப்பும் பதிவு சுகுணா திவாகர்.

  24. Anonymous said...

    //போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

    இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

    அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

    போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

    போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

    ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

    போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

  25. Anonymous said...

    மீண்டும் ஒருமுறை, நான் தோற்கிறேன்.

    பதிவுசெய்யப்பட்டுள்ள விதம் அருமை.

    -enbee

  26. த.அகிலன் said...

    //நாங்கள் கம்யூனிசம் பேசினோம், பெரியாரியம் பேசினோம், பின்நவீனத்துவம் பேசினோம், இலக்கியம் பேசினோம். எல்லாம் பேசி ஒருபெண்ணைக் கொலைசெய்த திருப்தியோடு வெளியேறினோம்.//

    என்னதான் பேசினாலும் எழுதிக்கிழித்துக் குவித்தாலும்.ஏற்கனவேயிருக்கம் சமூகவரைமுறைக்குட்பட்டு அடிமையான மனம் ஒன்று ஒவ்வொருத்தனுக்குள்ளும் இருக்கிறது போலும் இல்லையா?

  27. மாசிலா said...

    எது வேலியாக இருக்க வேண்டியதோ, அதுவே பயிரையும் மேய்ந்துவிட்டது. நான் சொல்ல வந்தது 'பண்பாடு, தன்மானம், அடக்கம், கௌரவம்' ஆகியவைகளைத்தான். ஏழைகளுக்கு மிஞ்சி இருக்கும் ஒரே பாதுகாப்பு இவைகள்தான். இவற்றில் ஓட்டை விழுந்தால் அதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இந்த ஓட்டை வழியாக வெளியே இருக்கும் பெருச்சாலிகள், பூச்சிகள் உள்ளே புகுந்து அவர்களது வாழ்க்கையை மிக சுலபமாக நாசம் செய்துவிடும்.

    வெளி உலக அறிவு, படிப்பறிவு இவைகளால்தான் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.

    இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தான் விரும்பும் கன்னியமாக வாழ்க்கை வாழ அனைத்து உரிமையும் இருக்கிறது.

    மனதை பிழிந்த பதிவு.