வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- இறுதிப்பகுதி


தமிழகத்திலிருந்து வைக்கத்துக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட பெரியார் 13.04.1924ல்  வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீமான் கே.நீலகண்ட நம்பூதியார் 4ம் தேதியிட்டு அனுப்பிய தந்தியில் என்னை உடனே புறப்பட்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். குளித்தலையில் கூடிய திருச்சி மகாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் புறப்பட முடியவில்லை. நான் முக்கியமாக அங்கு வந்துதான் ஆக வேண்டுமென்றால் நான் வருவதாகத் தந்தி கொடுத்தேன். பிறகு அனுப்பிய கடிதத்திலும் இதே விஷயத்தைத் தெரிவித்திருந்தேன்.
6ந்தேதி ஸ்ரீமான் ஜோசப்பும் எழுதியிருந்தார். நான் வரவேண்டுமென்பது தாங்கள் நினைத்தால் நான் வரச் சித்தமென்று பதில் அளித்தேன்.
12ந்தேதி இன்னொரு தந்தியை ஸ்ரீமான் நம்பூதிரிபாட் அனுப்பியிருந்ததில் வைக்கம் சத்தியாக்கிரக நிலைமையைப் பற்றி யோசிக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை (14.04.1924) கூடுவதாகவும், நான் விஜயம் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயத்தில் ஸ்ரீமான் டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் கொச்சியிலிருந்து அனுப்பியுள்ள தந்தியில் நான் அங்கிருக்க வேண்டியது மிகவும் அவசியமென்றும், உடனே புறப்பட வேண்டுமென்றும், ஜோசப் கைதியானாரென்றும் கொச்சியில் தாம் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் இன்று ரெயிலில் வருவதாகவும், திருச்சூரில் என்னை ஸ்ரீமான் நம்பூதிரிபாத் சந்திக்கும் படிக்கும் பதில் தந்தி கொடுத்தேன்.
இரவு 7 மணிக்கு மூன்றாவது தந்தி கிடைத்தது. ’வைக்கத்தில் நிலைமை பயங்கரமாகவிருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். 18 சத்தியாக்கிரகிகள் உண்ணாவிரதத்துடனிருக்கிறார்கள். நானும் வைக்கத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடனே நான் கைது செய்யப்படுவேன் என்பது நிச்சயம். இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்துங்கள். தந்தி மூலம் யோசனை கூற வேண்டும்.’ இதற்கப்பால் நான் புறப்பட்டேயாக வேண்டுமென்று எண்ணமேற்பட்டுவிட்டது. இந்த நிலைமையை நானே வலுவில் விரும்பியதாக நினைக்க வேண்டாம். அத்தகைய எண்ணம் இல்லாமல் தடுக்கும் பொருட்டே நான் மேற்கண்ட சமாச்சாரத்தை வெளியிட்டேன். தமிழ் நாட்டில் நான் செய்யவிருக்கும் வேலைஅபரிமிதமாக இருக்கிறதென்பது தெரிந்த விஷயம். அதிலுள்ள பொறுப்புகளையும் கஷ்டங்களையும் அறிந்து கொண்டிருக்கிறேன். மிகவும் உபத்திரவமற்ற கதர் வேலைக்கு ஏற்படும் பல தடைகளும் இயக்கத்திலுள்ள இதர கஷ்டங்களும் என் மனத்திற்குத் தெரிந்தவைகளே. ஆனால் கேரள மாகாணத்திலிருந்து எனக்கு வந்திருக்கும் ஆக்ஞையை மீறி நடப்பதற்கில்லை. நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது. அடக்குமுறை ஓங்கி நிற்கின்றது. தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் உட்பட பல சத்தியாகிரகிகள் இந்த அடக்குமுறைக்கு ஆளாகிவிட்டனர். இத்தகைய எண்ணங்கள் என் மனதில் எழுந்தன. நான் புறப்பட்டு விட்டேன். நானும் கைது செய்யப்படலாம். அது ஒரு பெரிய காரியமல்ல. தலைவர்களாகவிருந்தாலும் சரி, பிரச்சாரகர்களாகவிருந்தாலும் சரி, தொண்டர்களாகினும் சரி, எல்லாச் சாதியினரும் கேரளத்திற்குக் கூட்டமாக வந்துவிட வேண்டுமென்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். தொண்டு செய்ய முடியாதவர்கள் பண உதவியாவது செய்யலாம்.
தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதி இருக்கின்றனர். தீண்டாமையை ஒழிப்பதற்காகக் கஷ்டப்படத்தயாரென்றும் அவர்கள் எழுதியிருக்கின்றனர். இதுதான் தகுந்த சமயம். இதை நழுவவிட்டு விடாதீர்கள். ஒவ்வொருவரும் இந்த உன்னத லட்சியத்திற்காக முன் வாருங்கள். (சுதேசமித்திரன் 15.04.1924)


 மிகத்தெளிவாகவே பெரியார் தனது அறிக்கையில் கேரளத்திலிருந்து வந்த அழைப்பைக் குறிப்பிடுகிறார். அவர் தமிழகக் காங்கிரஸ் அமைப்பின் சார்பாகச் செல்வதும் உறுதியாகிறது.  இந்த அறிக்கை காங்கிரஸ் இதழான சுதேசமித்திரனில் வெளியாவதும் கவனத்துக்குரியது. மேலும் வைக்கம் சென்றபிறகு ஈழவ தலைவர்களுடன் பெரியார் சந்திப்பு நடத்திய பின் வெளியிட்ட அறிக்கை 7.07.1924 இந்துவில் வெளியானது.

தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லாதவராகவும், எந்த அமைப்பின் சார்பின்றியும் சென்றவராகவும் ஜெயமோகனால் சுட்டப்படும் பெரியாரின் அறிக்கை காங்கிரஸ் இதழான  சுதேசமித்திரனிலும் தேசிய இதழான இந்துவிலும் எவ்வாறு வெளியாகும் என்கிற கேள்வியை வாசகர்களின் அறிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஜெயமோகன் வைக்கம் போராட்டம் குறித்து முன்வைத்த அவதூறுகளுக்கான மறுப்புகளுக்கு இந்த தரவுகளே போதுமானவை என்று நினைக்கிறேன். நான் முன்பே சொன்னபடி இந்த தரவுகளைத் தந்துதவியர் திரு..திருமாவேலன். காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக திரு. பழ.அதியமான் எழுதி வெளியான ஜார்ஜ் ஜோசப் நூலில் பெரியார் பற்றிக் கூறப்பட்ட கருத்துகளை மறுப்பதற்காக அவர் தேடிச் சேகரித்த தரவுகள் இவை. கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் உள்ள பக்கங்களை மலையாளத்திலிருந்து  திருமாவேலனுக்காகத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்தவர் மலையாளியும் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டவருமான திரு.சிவன் அவர்கள். அலுவல்பணி நிமித்தம் தொடர்ச்சியாக எழுத முடியாதபோது இந்த தரவுகளைத் தட்டச்சு செய்து தந்தவர் எனது மனைவி திரு.ஜெயந்தி அவர்கள். (ஜெயமோகனை மறுக்க குடும்பத்தோடு உழைக்க வேண்டியிருக்கிறது((- ) இவர்களின் உழைப்பில்லையேல் இந்த தொடர் சாத்தியமாகியிருக்காது.

எனக்கு ஜெயமோகனின் தளத்தில் நின்று பேச விருப்பமில்லை. வாய்ப்புள்ளவர்கள் இந்த கட்டுரைகளை ஜெயமோகன் தளத்திற்குக் கொண்டு சென்று கேள்விகேட்கலாம். பார்ப்போம், அவர் பதில் என்ன சொல்கிறாரென்று.

இனி கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் எழுதியுள்ள கருத்துகள் குறித்துப் பார்ப்போம்.
(அழுத்தம் தரப்பட்டவை ஜெயமோவின் வார்த்தைகள்)

”வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.”

முதலாவதாக எல்லா இயக்கங்களுமே பரப்பியம் சார்ந்தவைதான். நான் ஒரு இயக்கம் ஆரம்பித்தால்கூட இரண்டாவதாக ஒரு ஆள் இணையவேண்டும் என்றால் பரப்பியம் செய்யத்தான் வேண்டும். பரப்பியம் உள்ள இயக்கம், பரப்பியல் இல்லாத இயக்கத்தின் வகைப்பாட்டு  வினோதம் குறித்து ஜெயமோகன்தான் விளக்கவேண்டும். ‘பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது’ என்கிற திராவிட இயக்கம் குறித்த ஜெமோவின் கருத்து அவரது வரலாற்று அறியாமையைக் காட்டுகிறது. பெரியாரியக்கம் மட்டுமல்ல திமுகவும் கூட பொதுமேடைகளுக்கு அப்பால் பத்திரிகைகள், நாடகங்கள், சினிமாக்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்த இயக்கம். அன்று இந்தியாவின் மிக முக்கியமான தேசிய இயக்கங்களான காங்கிரசும் கம்யூனிஸ்டும் கூட திராவிட இயக்கங்கள் அளவிற்கு இதழ்கள் நடத்தியதில்லை என்பதும் மக்களுடன் ஓயாத உரையாடல் நடத்தியதில்லை என்பதும் கவனத்துக்குரியது. ஏறத்தாழ அய்ம்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை நடத்திவந்தன இவ்விரு இயக்கங்களும். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான ராஜன்குறையின் கட்டுரையைப் படிப்பது மேலும் பல புரிதல்களுக்கு வழிவகுக்கும். “சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.” என்று ஜெமோ சொல்வது தனது அபிமானத்துக்குரிய சிவசேனாவைப் போலவே எல்லா இயக்கங்களையும் எடைபோடுகிறார் என்பதையே காட்டுகிறது.


”எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்”

இதுமாதிரியான நகைச்சுவைகள் உண்மையிலேயே ஜெயமோகனின் தனித்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். பவுத்தமும் சமணமும் உருவாக்கிய பட்டிமண்டபங்கள், விவாதக்களங்களுக்குப் பிறகு தர்க்கத்தைத் தமிழ்ப்பொதுவெளியில் கொண்டு போனவர் பெரியார்தான். பெரியாரின் மேடைகளில் எப்போதும் மாற்றுக்கருத்திற்கும் தர்க்கத்திற்கும் இடமுண்டு. சாதியுணர்வு, மதவுணர்வு, இறைநம்பிக்கை மட்டுமில்லாது மொழியுணர்வு, தேசபக்தி முதலிய கருத்தியல் நம்பிக்கைகளைக் கூட கேள்விக்குட்படுத்தியவர் பெரியார். பெரியாரின் தர்க்க அறிவிற்கும் சாதுரியத்திற்கும் பெரியாரின் மிகச் சில எழுத்துக்களைப் படித்திருந்தால் கூட போதுமானது. அவர் ஜெயமோகன் சொல்வதைப் போல உணர்ச்சியின்பாற்பட்டு பேசிய பொழுதுகள் மிகமிகச் சொற்பம். அதுவும் தன் வாழ்நாளின் இறுதியில் தனது செயல்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கசப்புணர்வின் காரணமாக மட்டுமே சில சொற்கள் உதிர்ந்திருக்கும். எந்தவித மொழிப்பகட்டும் இன்றி உண்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டவை பெரியாரின் மேடைமொழி. அவரது எழுத்துக்களும் அவ்வாறனவையே என்பதைப் பெரியாரைப் படித்தவர்ளால் உணரமுடியும்.

“வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்”

“ காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும் ”


இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் உள்ள முரணைக் கவனியுங்கள். ’கருப்பு வெள்ளையாக இருமை எதிர்வுகளைக் கட்டமைத்து ஒற்றை மதிப்பீடுகளை நிறுவியவர் பெரியார்’ என்கிற அதே ஜெயமோகன்தான் ‘காந்தியைச் சனாதனவாதி என்ற பெரியார் காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னார்” என்கிறார். முதலாவதாக அவதூறின் முதற்பணியே கூற்றுகளையும் செயற்பாடுகளையும் வரலாற்றிலிருந்து பிய்த்து உருவி தனது விருப்பத்திற்கேற்ப கட்டமைப்பதுதான். பெரியார் எந்தெந்த சந்தர்ப்பங்களில் காந்தியோடு முரண்பட்டார், உடன்பட்டார் என்பதற்கு அவற்றின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை அறிய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் யாரை வேண்டுமானாலும் ‘முரண்பாடுகளின் மூட்டை’யாகக் கட்டமைத்துவிட முடியும்.

மேலும் பெரியாரும் திமுகவும் தான் தமிழர்களை வெறுப்பின் அரசியல்பாற் படாமல் காப்பாற்றியவர்கள். காந்திக்கு மட்டுமில்லை, திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாரதியார், பெரியாரியக்கத்தின் பிரதான அரசியல் எதிரியும் ‘’திமுகவை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கிவிடுவேன்” என்று சொன்ன ராஜாஜி தொடங்கி ராஜீவ்காந்தி வரை மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டு ஆளுமைகளுக்கும் உரிய மரியாதையைச் செய்தது திமுக அரசு. கடந்துபோன காந்தியின் நினைவுநாளுக்காய்ப் பொதுக்கூட்டம் நடத்தியதுகூட பெரியார்திராவிடர்கழகம்தான். தமிழ் அறிவுச்சூழலைக் கணக்கிலெடுத்துக்கொண்டாலும் அம்பேத்க்ரையும் பெரியாரையும் முன்வைத்து பேசிய, பேசி வருகிற வ.கீதா, பிரேம், அ.மார்க்ஸ் , ராஜன்குறை போன்றவர்கள்தான் இப்போது காந்தி குறித்தும் மறுவாசிப்பு செய்து எழுதிவருகிறார்கள். இன்றைய நுகர்வுக்கலாச்சாரம், இந்துப்பாசிசத்தின் வெறுப்பு அரசியல், வெளித்தள்ளும் தேசியம் ஆகியவற்றிற்கான மாற்றாக காந்திய மதிப்பீடுகளை இவர்கள் முன்வைக்கத் தவறுவதுமில்லை. ஆனால் அதற்காக சாதியம் குறித்த அம்பேத்கரிய பெரியாரியப் பார்வைகள் முற்றாகத் தவறானவை என்றோ காந்தியை இருவரும் வில்லனாகத் தவறாகச் சித்தரித்தனர் என்று சொல்லத் துணியவுமில்லை. காந்திக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்குமான வரலாற்றுப் பங்களிப்பு இந்தியச்சூழலில் பாரியத்தன்மை கொண்டதும் காத்திரத்தன்மையானதுமாகும். அதேபோல் அவர்கள் இழைத்த தவறுகள் விவாதத்துக்கு உரியதும் படிப்பினைகளுக்காய் முன் கிடத்தப்படுவதுமாகும். இந்த வரலாற்றுப் பங்களிப்புகளை மறுப்பது வரலாற்றுக்கு இழைக்கிற துரோகம் மட்டுமில்லை, வாழ்க்கையின் இயங்கியலை மறுக்கிற குருட்டுத்தனமும் கூட. உண்மையில் காந்தியை ஹீரோவாக்க அம்பேத்கரையும் பெரியாரையும் வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை ஜெயமோகன் தான் வலிந்து செய்துவருகிறார். ஆனால் பாவம், உண்மையில் இது காந்திக்கே நல்லதில்லை ((-

"வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார்."

மற்றுமொரு சிரிப்பானை உதிர்க்க வேண்டியதுதான். பெரியார் எந்தளவுக்குத் தன் கருத்துக்களிலும் செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தாரோ அந்தளவுக்கு நிதானமாகவும் வெறுப்பாகத் தன் அரசியல் மாற்றப்படக்கூடாது என்பதில் உறுதியாகவுமிருந்தவர் . காந்திப்படுகொலையின்போது பார்ப்பனர்களை வன்முறையின் நிழல் தீண்டாது காத்தவர் பெரியார். இயக்கமும் இயக்கத்தோழர்களும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் சூழல் வந்தபோது சிற்சில சமரசங்களையும் செய்துகொள்ளவும் அவர் தவறியதில்லை.  எப்போதும் அவர் வன்முறை அரசியலை முன்வைத்தவரில்லை. சமயங்களில்  மாற்று அரசியலுக்குத் தீங்கிழைக்கும் வகையில் கூட  வன்முறை எதிர்ப்பு அரசியலைக் கடைப்பிடித்தார் என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனவே இது ஜெயமோகனின் வன்மம் சார்ந்த பரப்புரை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. அந்த வன்மம் எந்தளவுக்குச் செல்கிறது என்றால்,

’’இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.”

என்றும் ஜெயமோகனை எழுதத் தூண்டுகிறது. அவருக்கு  இப்போதிருக்கும் திராவிடர் கழகம் பற்றி கூட ஏதாவது தெரியுமா என்பது ஒருபுறமிருக்க அண்மைய வரலாற்று நிகழ்வுகளையே மிகச்சுலபமாகத் திரித்துவிட முடியும் என்கிற அசாத்திய ‘நம்பிக்கை’ கொண்ட ‘ஞான அரக்கனை’ப் பாராட்டத்தான் வேண்டும். பெரியார் அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், சிறைக்குச் சென்றவர்கள், அதனால் தமிழ்ச்சூழலிலும் அரசியல் வெளியிலும் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து அறிய ஜெயமோகன் ‘அதிகாரப்பூர்வ திக வரலாறுகளைக்’ கூட படிக்க வேண்டாம், அந்த காலத்தில் வெளிவந்த சுதேசமித்ரன் தொடங்கி கல்கி வரையான எதிர்நிலை இதழ்களைப் படித்தால் கூட போதும். 1957ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் அறிவித்தபோது தமிழகம் முழுக்க கைது ஆனவர்கள் போலீஸ் ஆவணங்களின்படியே 10,000 பேர்கள். 57ல் 10,000 பேர்கள் கைது ஆகும் அளவிற்கு ஒரு இயக்கம் இருந்தது என்றால் அது ‘குறுங்குழு’வா என்பதையும் மீண்டும் மீண்டும் வாசகர்கள் அறிவிற்கே விட்டுவிடுகிறேன். 1957ல் பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து சென்று ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருந்தன, அவர் கணிசமான நபர்களைத் திராவிடர்கழகத்திலிருந்து பிரித்து சென்றிருந்தார் என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த பத்தாயிரத்தை அணுக வேண்டும்.

சாத்தியப்பட்டவரை பெரியாரை வாசித்தவன் என்றமுறையிலும் ஓரளவிற்கேனும் பெரியாரியக்க மற்றும் தி.மு.க வரலாற்றை அறிந்தவன் என்ர முறையால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஜெயமோகனுக்குப் பெரியார், திராவிட இயக்கம், தமிழக அரசியல் வரலாறு குறித்து விரிவான வாசிப்புகளோ, ஆழமான புரிதல்களோ அறிவோ கிடையாது. பொத்தாம்பொதுவாக மற்றவர்களின் அபிப்பிராயங்களைக்  கடன்வாங்கி மட்டுமே அவர் கட்டிடம் எழுப்பி வருகிறார். அதனால்தான் குமரிமைந்தனைப் பெரியாரிஸ்ட் என்றும் பெரியார் எந்த அமைப்பின் சார்பாகவும் வைக்கம் செல்லவில்லை என்றும் அவரால் அபத்தமாக உளற முடிகிறது. மேலும் ஜெயமோகன் அவதூறு பரப்புகிற தன்மை மிக நுட்பமானது.

இந்த ‘வைக்கமும் காந்தியும்’ கட்டுரையையே எடுத்துக்கொள்வோம். காந்தி பற்றியும் பெரியார் குறித்தும் அவர் எழுதிய வரிகளை எண்ணிப் பார்த்தால் பத்துவரிகளுக்கு மேல் தாண்டாது. வைக்கம் போராட்டம் குறித்த கேரளப்பின்னணி வரலாறு குறித்து அவர் விரிவாக எழுதும்போதே அவரது வரலாற்றறிவு குறித்த ஒரு பிரமிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார். பிறகு போகிற போக்கில் பெரியார் வைக்கம் வீரர் இல்லை என்று ‘நிறுவி’ அவதூறு செய்வது எளிதாகி விடுகிறது. அவர் முன் கேட்கப்பட்ட கேள்வியும் சரி, அவரது பதிவின் தலைப்பும் சரி, அவர் சொல்ல வந்ததாய் நம்பப்பட்ட கட்டுரையின் மய்யமும் சரி, ‘வைக்கம் போராட்டத்தில் காந்தி எதிர்நிலைப்பாடுகள் எடுத்ததாகப் பெரியார் சொன்னது சரியில்லை’ என்பதுதான். ஆனால் மீண்டும்கூட அந்த கட்டுரையை முழுவதுமாய்ப் படியுங்கள். அதற்கான ஆதாரங்களோ தரவுகளோ நிகழ்வுகளோ எதுவுமோ அந்த கட்டுரையில் இருக்காது. ரோசாவசந்த் ஒருமுறை எழுதியதைப் போல போகிற போக்கில் ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷத்தைக் கலக்கும் லாவகம் ஜெயமோகனுக்கு உண்டு.

மேலும் ஜெயமோகனின் நேர்மை குறித்தும் யோசியுங்கள். அந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளில் 99 சதவிகிதம் ‘ஒரு பொய்யான வரலாற்றைக் கட்டவிழ்த்த, அம்பலப்படுத்திய மாவீரன் நீங்கள்’ என்கிற ரீதியில் பெரியாரிடமிருந்த பட்டத்தைப் பறித்து ஜெயமோகனை வைக்கம் வீரர் ஆக்கிய கடிதங்கள். அப்படியானால் பெரியாரியர் தரப்பிலிருந்து ஜெயமோகனுக்கு எந்த எதிர்வினையும் கடிதமும் வரவில்லையா? ஜெயமோகன் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். “கேரளாவில்தான் பெரியார் போராடவில்லையே பின் ஏன் பெரியாறு அணை என்றும் பெரியாறு பூங்கா என்றும் பெயர் வைத்தார்கள்?” என்றும் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்கிறது அந்த கடிதம். உடனே ’அது பெரியார் இல்லை பெரியாறுதான்’ என்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆதாரம் காட்டி வெண்ணெய்வெட்டி விளக்கம் தருகிறார் ஜெயமோகன். பெரியாரிஸ்ட்கள் இப்படித்தான் ‘கூமுட்டைத்தனமாக’ கேள்வி கேட்பார்கள் என்பதாக ஜெயமோகன் உருவாக்க முயலும் பிம்பம் அது. உண்மையில் அது வந்த கடிதமா, அல்லது உருவாக்கப்பட்ட கடிதமா என்று தெரியவில்லை. ஜெயமோகனின் ஆய்வுமுறை எப்போதும் நேர்மையானதில்லை.

நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார், ‘’ஜெயமோகன் சொல்கிற ’எல்லாவற்றையும்’ மறுக்கிறீர்களே” என்று. மற்ற விஷயங்களில் எப்படியோ பெரியார் குறித்தும் திராவிடர் இயக்கம் குறித்தும் ஜெமோ சொல்லிவருவதை மறுத்துத்தானாக வேண்டும். ஏனெனில் அவை அத்தனையும் கலப்பில்லாத அவதூறு பொய்கள். மேலும் ‘ம.பொ.சி வளராததற்குக் காரணம் காமராஜர்தான்” (சி.பா.ஆதித்தனாரும் குமரி அனந்தனும் வளராமல் போனதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை), ‘இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முடிவுரையை  பிரகாஷ்காரத் எழுதக்கூடும் என நான் அஞ்சுகிறேன்” ( ஜெயமோகன் எதற்கு ‘அஞ்ச வேண்டும்?” ((- ) என்று போகிற போக்கில் அசட்டுத்தனமான வாக்குமூலங்கள், பழிபோடும் தீர்மானங்கள் ஆகியவை வரலாறு குறித்த ஒரு அரைகுறைப் பார்வையைத்தான் இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. எனவேதான் சிறில், இது.

ஆனால் ஜெயமோகனின் அவதூறுகளை மறுக்க வேண்டுமானால் தனிப்பட்ட சுகுணாதிவாகராலோ, ராஜன்குறையாலோ, தமிழச்சியாலோ முடியாது. அதற்கு ஒரு இயக்கமே தொடங்க வேண்டும் ((- அல்லது ஒரு இணையதளமாவது தொடங்கி ஜெயமோகனுக்கு மறுப்பு எழுதுவதற்காக மட்டுமே எழுதவேண்டும் ((-. இவையெல்லாம் நகைச்சுவைக்காச் சொல்லப்படுபவை என்றாலும் பெரியார் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை சிறுவெளியீடாகவோ அல்லது விரிவான புத்தகங்களாகவோ கொண்டு வருவது குறித்து நண்பர்கள் யோசித்து வருகிறோம்.

பெரியார் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பது நாம் வழக்கமாகச் சொல்வதுதான், பெரியாருக்கும் உவப்பானதுதான். ஆனால் ஜெயமோகனிடம் ஒன்று மட்டும் சொல்ல விருப்பம், உங்கள் விருப்பத்திற்கு வரலாற்றைத் திரிக்கவோ பெரியார் குறித்த அவதூறுகளைப் பரப்பவோ முடியாது ஜெமோ. எல்லா அவதூறுகளையும் எதிர்கொள்ள என்னை மாதிரியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

19 உரையாட வந்தவர்கள்:

 1. இராம.கி said...

  பெரியாரின் வைக்கம் போராட்டம் பற்றிய ஜெ.மோ.வின் கருத்திற்குத் தரவுகள் நிறைந்த, ஆழமான மறுமொழியைக் கொடுத்திருக்கிறீர்கள். நல்ல உழைப்பு. செய்யவேண்டிய பணி.

  ஜெ.மோ.விடம் மறுக்க வேண்டிய கருத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் பலரும் அதைச் செய்யாது ”நமக்கென்ன?” என்று நகர்ந்து விடுகிறார்கள்.

  இன்னும் பலர் அதைச் செய்யவேண்டும்.

  அன்புடன்,
  இராம.கி.

 2. K.R.அதியமான் said...

  நல்ல தொடர் சுகுணா. நீங்க மீண்டும் எழுத வந்ததில் மகிழ்ச்சி.

  ஜெயமோகன் சில சமயங்களில் sweeping statements and assumptions செய்துவிடுகிறார் தான். சில இடங்களில் over simplifications. ஆனால் அவர் உள்னோக்கத்துடன், திரிபு செய்வதாக நான் கருதவில்லை. பெரியார் மற்றும் அம்பேத்தாரை இழிவு செய்ய முனைவதாக தோன்றவில்லை. வரலாற்றை தன் கோணத்தில் இருந்து ’ஆராய’ முயல்கிறார். அதற்க்கு மிக விரிவான ஆய்வுகளும், பல காலமும் தேவை. ஆனால்..

  சரி, இந்த கட்டுரை தொடரில், ஒரு மிக முக்கிய விசயம் பற்றி பேசவில்லை நீங்க. வைக்கம் போரை காந்தி காட்டி கொடுத்துவிட்டார் என்று பெரியார் (மிக தவறாக கருதி) முன்வைத்து கருத்துக்கள். அதை பற்றி அவர் எழுதிய பல பக்கங்கள்... அதை பற்றிய ஜெவின் விளக்கங்கள். அவரின் கட்டுரையின் மையமே அதை பற்றியதுதான் என்று அவர் ஒரு சமயத்தில் சொல்கிறார். அக்கட்டுரை பெரியாரை பற்றியது அல்ல, காந்தியை பற்றியது, காந்திய போராட்ட வழிமுறைகளை பற்றியது..

  ஜெவின் கட்டுரைகளில் இருந்து :

  ////வைக்கம் போராட்டம் நாராயணகுருவின் இயக்கத்தின் விளைவு. காந்தியின் காங்கிரஸால் நடத்தப்பட்டது. அதை உருவாக்கி நடத்தி முடித்தவர் டிகெ.மாதவன். அதன்மூலம் ஈழவர்கள் காங்கிரஸில் செல்வாக்கு பெறவும் சுதந்திரத்திற்குப் பின்னர் அதிகாரத்திலேறவும் முடிந்தது. கேரளம் முழுக்க தீண்டாமை ஒழிப்பு ஆலய நுழைவு போராட்டங்கள் வலுப்பெற வைக்கம் வழிவகுத்தது.////

  /////வைக்கம் போராட்டம் முழுக்கமுழுக்க ஒரு காந்தியப்போராட்டம். காந்தி அவரது வழிமுறைகளை சோதித்துக்கொண்ட இடம் அது. எதிர்தரப்புடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் முன்னகர்வதே காந்தியின் வழியாகும். ஆனால் விடாப்பிடியாக பல வருடங்களுக்கு அந்த போராட்டத்தை பலமுனைகளில் முன்னெடுப்பதும் அவரது வழக்கம். அப்படித்தான் வைக்கம் போராட்டம் ஒட்டுமொத்த ஆலயப்பிரவேச இயக்கமாக ஆகி முழுவெற்றியை அடைந்தது. அந்த வழிமுறைகளை காந்தி பின்னர் ஹரிஜன இயக்கத்தில் செயல்படுத்தினார்./////

  /////வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடையும் முன்னரே 1925 ஆரம்பத்தில் ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி குடியரசு இதழையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார். தமிழகத்தில் அவரும் அவரது ஆதரவாளர்களும் காந்தியையும் காங்கிரஸையும் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள். அதற்கு அப்போது நடந்துவந்த வைக்கம் போராட்டத்தை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டார்கள். வைக்கம் போராட்டத்தில் நிகழ்ந்திருந்த பல்வேறு உள்விவாதங்களை ஈவேரா அவரது நோக்கில் பெரிதுபடுத்தினார். இதனலேயே வைக்கம் இங்கே ஒரு பேசுபொருளாக ஆனது.

  ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஈவேரா காந்தியை அவதூறு செய்தார் என்றோ வேண்டுமென்றே அவர் பொய்களைச் சொன்னார் என்றோ நினைக்கவில்லை. அத்தகைய சிறுமைகள் அண்டாத மாமனிதர் என்றே அவரைப்பற்றி எண்ணுகிறேன். இவ்விஷயம் குறித்து நாராயண இயக்கத்தின் முக்கியமான மூத்த தலைவர் சிலருடன் உரையாடியபோது அவர்கள் அளித்த வெளிச்சமே இவ்விஷயத்தில் என் புரிதலை உருவாக்கியது.

  ஈவேரா காந்தியப்போராட்டத்தை புரிந்துகொள்ளவில்லை. கடைசிவரை. அவரைப்போலவே காங்கிரஸ¤க்குள் இருந்த ஏராளமான தீவிரப்போக்குள்ளவர்கள் காந்தியப் போராட்டத்தை புரிந்து கொள்ளவில்லை. வைக்கம் போராட்டத்தில் காந்தியுடன் இருந்தவர்களில் பாதிப்பேர் வெளியேறி கம்யூனிஸ்டுகளாக ஆனார்கள் என்பதே வரலாறு. ஈவேரா அனைத்தையும் அதிரடியாகவே கண்டார். கவன ஈர்ப்புக்கான அதிரடிப்போராட்டங்களைச் செய்து அவற்றை உடனடியாக விட்டுவிட்டு அடுத்ததற்குச் செல்வது அவரது இயல்பு. அவர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நீடித்த திட்டமிட்ட குறிக்கோள் கொண்ட எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதே வரலாறு.

  /////

 3. Anonymous said...

  நன்றாக ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு தெரிகிறது.பாராட்டுகள்.ஆனால் ஜெமொவை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டுமா? ஜெமொவின் உளரல்கள்,அகம்பாவம் மற்றும் சக கலைஞர்களையும்/எழுத்தாளர்களையும் துச்சமாக மதிப்பது என்பது ஊரரிந்த விஷயம்.உதாரணமாக குருவி மண்டை அருந்ததிராய்,குடிகாரன் ஜான் அப்பிராஹம்,குருபி கமலாதாஸ்,மற்றும் சக தமிழ் எழுத்தாளர்களை பற்றி கேவலமாக எழுதியது( உ.ம்: நாகார்ஜூனக்கு இலக்கியம் தெரியாது,கோணங்கிக்கு எழுத தெரியாது,அ.மார்க்ஸ் பற்றிய அவதூறு) என்று போகிற போக்கில் அள்ளி தெரித்த வசனங்கள் எண்ணிலடங்கா.சக கலைஞர்களை/எழுத்தாளர்களை பற்றி விமர்சனம் செய்ய யாவருக்கும் உரிமை உண்டு.ஆனால் ஜெமொ எவ்வித ஆதாரங்களோடு எழுதாமல், தன் மனத்திற்கு தோன்றிய விஷத்தை கக்குகிறார். மேலும் தான் படைப்பதுதான் "ஆகச் சிறந்த இலக்கியம்" என்ற self-claim. இசை நுணக்கங்கள் தெரியாது,உலக சினிமா பரவலாக பார்த்ததில்லை, ஆழமாக அரசியல் தெரியாது, நவீன ஓவியத்தை பற்றியும் தெரியாது,உலக இலக்கியத்தையும் படித்தில்லை.இதைய்யெல்லாம் ஜெமொ வே பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் சக மனிதர்களிடம் வெறும் விஷத்தை கக்கியும் தன் கருத்துகளை எவ்வித வெட்கமும் இல்லாமல் தமிழ் சமூகத்தில் நிறுவுவதை ஒதுக்க வேண்டும். ஜெமொவின் வெற்றி லாவண்ய கச்சேரி நடத்துவதுதான்.மற்றபடி ஜெமொவிடமிருந்து எந்த புது விஷயத்தையும் தெரிந்து கொள்ளமுடியாது.வலைதளத்தில் இவருக்கென்று தற்கொலை படையே இருக்கிறது( ஜெமோ " பல்லக்கு தூக்கிகள்"). பல புத்தகங்களை ஆழமாக படிக்கும் தீவிர வாசகனுக்கு(குறிப்பாக உலக இலக்கியம்)ஜெமோ பொருட்டே இல்லை.இப்படி பரவலாக இலக்கியத்தையும் தத்துவத்தையும் ஆழமாக படிக்காத வாசகர் மத்தியில் ஜெமோ போன்றவர்கள் மேதையாக உலா வருகிறார்கள்.இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. 80 பின்பகுதி மற்றும் 90களில் தமிழில் கதை/கவிதை எழுத ஆரம்பித்தவர்கள் இன்னும் சுந்தரராமசாமியின் பூத உடலை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள்.நாகர்கோவில் மடம் உருவாக்கியது வியாபாரிகள்(காசு.கண்ணன், மனுஷ்யபுத்திரன்)மற்றும் தன்னையும் தன் படைப்புகளையும் ஆகச்சிறந்ததாக நினைக்கும் மன நோயாளிகளை(ஜெமோ,லஷ்மி மணிவண்ணன்). எந்த புது சிந்தனையையும்,உலக இலக்கியத்தையும் மடமும் மட சிஷ்யர்களும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதே வரலாறு. மேலும் ஜெமோ போன்றவர்கள் பின் நவீனத்துவத்தை பற்றி எந்த மூல நூல்களை படிக்காமல், ஒரு இந்தியர் ( நரங் மற்றும் மதன்)எழுதிய அறிமுக நூலை வைத்து உளரிக்கொண்டிருக்கிறார். இந்திய பொருளையே வாங்குவேன் இந்தியானாகவே இருப்பேன் என்ற பழைய அசட்டு கோஷத்திற்கு எடுத்துக்காட்டு ஜெமோ. ஆக நாகர்கோவில் மடத்தின் வீர்யம் அப்படிப்பட்டது. ஜெமோவின் பிரசித்த பெற்ற வசனம் 1991ல் குற்றாளம் இலக்கிய அரங்கில் பேசியது " காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹே". வெறும் தமிழ் புத்தகங்களையும்,மொழி பெயர்புகளையும் மட்டும் படித்து விட்டு இலக்கியம் பேசமுடியாது.இன்னும் காஃப்கா,தாஸ்தாவெஸ்க்கி போன்றவர்களை பற்றி என்ன உளறியிருக்கிறார் என்று தெரியவில்லை. இம்மாதிரி உளருபவர்களை ஒதுக்கவேண்டுமா அல்லது லாவண்ய கச்சேரி செய்யவேண்டுமா?

 4. மிதக்கும்வெளி said...

  நன்றி அதியமான். ஜெயமோகன் அம்பேத்கரையும் பெரியாரையும் உள்நோக்கத்துடன் திரிபு செய்வதாக நீங்கள் கருதாதது உங்கள் உரிமை. ஆனால் நான் அப்படித்தான் கருதுகிறேன். அதற்கான காரணங்கள் ஜெயமோகனில் எழுத்துகளிலேயே உள்ளன. ஒரு திராவிடர் கழக குடும்பத்தில் பிறந்த உங்களுக்கு பெரியார் காலத்திய திராவிடர் கழகம் குறித்து ஜெயமோகன் சொல்வது அபத்தமாகத் தெரியவில்லையா?

  நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜெயமோகனின் கூற்றுகளில் சில எங்கு உள்ளன? ‘வைக்கமும் காந்தியும்’ கட்டுரையில் இல்லையே, இருக்கட்டும். /வைக்கம் போராட்டம் நாராயணகுருவின் இயக்கத்தின் விளைவு. காந்தியின் காங்கிரஸால் நடத்தப்பட்டது. அதை உருவாக்கி நடத்தி முடித்தவர் டிகெ.மாதவன்/ என்று ஜெயமோகன் குறிப்பிடுவதே பெரியாரின் பங்களிப்பை மறுப்பதற்காகத்தான். இந்த வரிகளில் உள்ள சாதுரியத்தைக் கவனியுங்கள். நடத்தியது காந்தியின் காங்கிரஸ் கட்சியாம், முடித்தது டி.கே.மாதவனாம். டி.கே.மாதவனும் சரி அன்றைய பெரியாரும் சரி காந்தியின் காங்கிரசில் இருந்தவர்கள்தான். ஆனால் சாதுரியமாகப் பெரியாரை விலக்கிய ஜெயமோகன் வரிகள் பரிதாபகரமாக புத்திசாலித்தனமாக இல்லை.

  ‘வைக்கம் போரை காந்தி காட்டி கொடுத்துவிட்டார் என்று பெரியார் (மிக தவறாக கருதி) முன்வைத்து கருத்துக்கள். அதை பற்றி அவர் எழுதிய பல பக்கங்கள்..” என்று நீங்கள் எழுதுகிறீர்களே, அடைப்புக்குறிக்குள் போட்டுள்ள ’மிகத் தவறாக கருதி’ என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? வைக்கம் போராட்டத்தின் தீவிரநிலையின்போது அதைக் காந்தி மட்டுப்படுத்தவே நினைத்தார். காரணம், அது மதமாற்றத்தில் முடியலாம் என்ற தயக்கங்கள், வன்முறையில் முடியலாம் என்கிற அச்சம். வைக்கம் மட்டுமில்லை, பல்வேறு போராட்டங்களில் வன்முறையாக மக்கள் கிளர்ச்சி மாறுவது குறித்த அச்சம் அவருக்கு இருந்தது. வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்நிலைப்பாட்டிற்கு ‘யங் இந்தியா’ இதழில் காந்தி எழுதியது, அதற்கு ஜார்ஜ் ஜோசப் எழுதிய மறுப்பு, காந்தி தன் தொகுப்பு நூலில் வைக்கம் குறித்து எழுதுவது ஆகிய தரவுகள் உள்ளன. ஆனால் ’அதை பற்றிய ஜெவின் விளக்கங்கள்’ என்கிறீர்களே ஜெயமோகன் அப்படி என்ன தரவுகளை முன்வைத்தார் என்று சொல்ல முடியுமா?

  ஜெயமோகனின் ’வைக்கமும் காந்தியும்’ பதிவில் உங்கள் பின்னூட்டம் இது :

  //////காந்தி சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவது தேசியப்போராட்டத்தை ஒற்றுமையிழக்கச்செய்து பலவீனப்படுத்தும் என்று எண்ணினார். ////

  மிக மிக முக்கிய விசியம். இதை சரியாக புரிந்து கொண்டால் தான், காந்தியடிகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியாரியவாதிகள் மற்றும் மார்க்சியர்களாள் மிக தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது.

  By K.R அதியமான் on Jan 18, 2010 /

  முதலில் இந்த அடிப்படையே தவறு. மார்க்சியவாதிகளுக்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை. சொல்லப் போனால் காந்தியின் நிலைப்பாடுகளைத்தான் மார்க்சிஸ்ட்களும் எடுத்தார்கள். அம்பேத்கரும் பெரியாரும் தேசியப் போராட்டத்திற்கு எதிராய் இருந்தார்கள் என்பது காங்கிரசாரின் விமர்சனம் என்றால் அவர்கள் ஏகாதிபத்தியத்துக்குத் துணை போனார்கள் என்பது கம்யூனிஸ்ட்களின் விமர்சனமாக இருந்தது. இது குறித்து அறிய வேண்டுமென்றால் ஜீவாவின் ‘ஈரோட்டுப்பாதை சரியா?’, எஸ்.வி.ஆரின் ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ நூலின் பின் இணைப்பையும் படிக்கலாம். ஆனால் உங்களை மாதிரியான வாசகர்கள்தான் ஜெயமோகனின் பலம் போலும் ((-

  /வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடையும் முன்னரே 1925 ஆரம்பத்தில் ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி குடியரசு இதழையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார்/

  என்று ஜெயமோகன் குறிப்பிடுவதும் தவறு. நவம்பர் 1925ல் வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்தபோது பெரியார் காங்கிரசில்தான் இருந்தார். இதற்கும் மறுப்பு எழுத வேண்டும் என்றால் நான் மீண்டும் ஒரு தொடர் எழுத வேண்டும். முதலில் ஜெயமோகனை வரலாற்றுத தரவுகளைப் பரிசோதித்து விட்டு எதையாவது எழுதச் சொல்லுங்கள் அதியமான்!

  வைக்கம் போராட்டம் காந்தியப் போராட்டம். ஏனென்றால் அதை நடத்தியது காந்தியின் காங்கிரசுக் கட்சிதான் என்பதில் எல்லாம் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால் இதில் காந்தியின் நிலைப்பாடு மற்றும் பங்களிப்பு, பெரியாரின் பங்களிப்பு குறித்தும் ஜெயமோகன் எழுதியிருப்பவைதான் அடிப்படையில் தவறானவை. பெரியார் குறித்து ஜெயமோகன் உதிர்க்கும் ஸ்டேட்மெண்ட்கள் அவரது சொந்த அபிப்பிராயங்களே தவிர அவை வரலாற்று நோக்கில் ஆய்ந்து முடிவுக்கு வந்தவை அல்ல.

 5. K.R.அதியமான் said...

  ////நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜெயமோகனின் கூற்றுகளில் சில எங்கு உள்ளன? ‘வைக்கமும் காந்தியும்’ கட்டுரையில் இல்லையே,////

  ’வைக்கமும் காந்தியும் 2’ என்ற இரண்டாவது பகுதியில் உள்ளது. http://www.jeyamohan.in/?p=5792

  /////அம்பேத்கரும் பெரியாரும் தேசியப் போராட்டத்திற்கு எதிராய் இருந்தார்கள் என்பது காங்கிரசாரின் விமர்சனம் என்றால் அவர்கள் ஏகாதிபத்தியத்துக்குத் துணை போனார்கள் என்பது கம்யூனிஸ்ட்களின் விமர்சனமாக இருந்தது.////

  இரண்டும் ஒன்றுதான் சுகுணா. தேசிய போராட்டம் என்பதே எகாதிபத்தியத்திற்க்கு எதிரான போராட்டம் தான். (வேறு என்ன ?). ஒத்துழையாமை இயக்கத்தை, சவ்ரி ச்வ்ரா
  படுகொலைகளுக்கு பின் காந்தி, நிறுத்தியதை பற்றி பல ஆயிரம் பக்கங்கள் விமர்சனங்கள் / விவாதங்கள். மக்கள் இயக்கம், ஒரு புரட்சி இயக்கமாக மாற தொடங்கியதால், காந்தி அச்சம் கொண்டு நிறுத்தி விட்டார் என்பதே மார்க்ஸிஸ்டுகளின் நிலைபாடு. ஆனால் அது மிக மேலோட்டமான, புரிந்தல் இல்லாத
  வெற்று வாதம். மிக முக்கிய மார்க்ஸிய வரலாற்று ஆய்வாளாரன Bipan Chandra மற்றும் குழுவினர் எழுதிய “Indian struggle for Independence” என்று முக்கிய வரலாற்று நூலில் இதை பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளன. காந்தி எந்த உள்னோக்கம் இல்லாமல் தான், போராட்டத்தை வாபஸ் பெற்றார் என்பதை விரிவாக நிருபித்துள்ளார்கள். படித்து பாருங்கள்.

  ////ஆனால் உங்களை மாதிரியான வாசகர்கள்தான் ஜெயமோகனின் பலம் போலும் ((-////
  இது தேவையில்லாதது சுகுணா.

  சிவசேனா போன்ற ஃபாசிச இயக்ங்களை ஜெ ஆதரிக்கவில்லை. இந்த்துவா சக்திகளை கடுமையாக விமர்சனம் செய்கிறவர். தேசிய உணர்வு என்பதே மையபடுத்தப்பட்ட ஃபாசிசமாக மாறக்கூடாது என்கிறவர். ஆர்.எஸ்.எஸ் இன் கருத்தாக்கங்களை ஒற்றைபடுத்தி, மையப்படுத்தும் தன்மைகளை கடுமையாக விமர்சிக்கிறார். பெரியாரையும், திராவிட இயக்கத்தையும், இஸ்லாமிய அமைப்புகளையும், இன்றைய
  கிருஸ்துவ திருசபையின் அரசியலையும் விமர்சிபதாலேயே அவர் இந்துத்வாதியாகிவிட மாட்டார். நீங்கள் செய்வதும் முத்திரை குத்துவதுதான். திரிபுகள் மற்றும் அவதூறுகள் தாம். கீழோ இருக்கும் உங்கள் கருத்துக்கள் இவ்வகைதான் :

  ///உண்மையில் காந்தியை ஹீரோவாக்க அம்பேத்கரையும் பெரியாரையும் வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை ஜெயமோகன் தான் வலிந்து செய்துவருகிறார். ஆனால் பாவம், உண்மையில் இது காந்திக்கே நல்லதில்லை//// இல்லை. தவறு.

  சிவசேனா தொண்டர்களையும். ஜெவின் ஆதாரவாளர்களையும் ஒப்பிட்டு போகிற போக்கில் எழுதியிருந்தீர்கள். (அவசரத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை).

  பெரியாரின் பங்களிப்பை அவர் underestimate செய்கிறார் என்பதே உங்கள் வாதம். தமிழகத்தில் அதை over estimate செய்கிறார்கள் என்பது அவர் வாதம். உண்மை இரண்டிர்க்கும் நடுவில் உள்ளது.

  பெரியாரின் பங்களிப்பை பற்றி விவாதம் செய்வதை விட, வைக்காம் போராட்டத்தின் இறுதியில் காந்தி சனதானிகளுடன் சமரசம் செய்து, துரோகம் செய்து விட்டார் என்று பெரியார் கடுமையாக விமர்சனம் செய்தார். நிறைய எழுதியுள்ளார். ஆனால் அது உண்மையல்ல. மிக தவறான புரிதல் என்பதை விளக்கமாக ஜெ எழுதியுள்ளார். அதை பற்றிய சுட்டிகளை தேடி அளிக்கிறேன்.
  அதுதான் விவாதிக்கபட வேண்டிய முக்கிய விசியம்.

  சரி, வேறு ஒரு விசியம் / கோணம். 1949இல் அண்ணா, பெரியாரிடம் இருந்து விலகி, தி.மு.க வை ஆரம்பிக்காமலேயே இருந்திருந்தால் ? தொடர்ந்து பெரியாரின் தி.க வில் தொடர்ந்திருந்தால் ? இன்று திராவிட இயக்கத்தின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் ? இதர தென் மாநிலங்களை போல காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டு, கம்யூனிஸ்டுகள் எதிர் கட்சியாக இருந்திருப்பர். சுயமரியாதை திருமணம், இட ஒதுக்கிட்டுல் மாற்றங்கள் மற்றும் பல இதர சீர்திருத்தங்கள் எப்படி சாத்தியமாகியிருக்கும் ? அரசியல் இயக்கமாக மாற்றாமல், தி.மு.க உருவாகாமல், தி.க மட்டும் இன்றுவ்ரை தொடர்ந்திருந்தால், பெரியாரின் பங்களிப்பு பற்றி இன்று எப்படி மதிப்பிடுவோம் ?

 6. K.R.அதியமான் said...

  காந்தியின் போராட்ட முறைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவான வாதங்கள் உள்ளன :

  http://www.jeyamohan.in/?p=5792
  வைக்கமும் காந்தியும் 2

 7. மிதக்கும்வெளி said...

  மீண்டும் நன்றிகள் அதியமான். உங்கள் சுட்டிகளைப் படித்துப் பார்க்கிறேன்.

  /இரண்டும் ஒன்றுதான் சுகுணா. தேசிய போராட்டம் என்பதே எகாதிபத்தியத்திற்க்கு எதிரான போராட்டம் தான்/

  அதையேதான் நானும் சொல்கிறேன். காந்தியின் நிலைப்பாட்டைத்தான் ஏறத்தாழப் பொதுவுடைமை இயக்கத்தினரும் எடுத்திருந்தனர். ஆனால் அவர்களின் சொல்லாடல்கள் வேறுபடும் விதத்தைத்தான் சுட்டிக் காட்டியிருந்தேன். ஆனால் நீங்கள் ஜெயமோகனுக்கான பின்னூட்டத்தில் இப்படி குறிப்பிட்டிருந்தீர்கள் :

  ///////காந்தி சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியாக நடத்துவது தேசியப்போராட்டத்தை ஒற்றுமையிழக்கச்செய்து பலவீனப்படுத்தும் என்று எண்ணினார். ////

  மிக மிக முக்கிய விசியம். இதை சரியாக புரிந்து கொண்டால் தான், காந்தியடிகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியாரியவாதிகள் மற்றும் மார்க்சியர்களாள் மிக தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது.
  /

  ஆக மார்க்சிஸ்ட்களும் பெரியாரிஸ்ட்களும் காந்தியைப் புரிந்துகொள்ளாமல் எதிர்நிலைப்பாடு எடுத்தார்கள் என்பது. எதிர்நிலைப்பாடுகள் எடுத்தது அம்பேத்கரும் பெரியாரும்தானே தவிர, மார்க்சிஸ்ட்கள் அல்ல. சௌரிசௌரா போராட்டத்தில் காந்தியின் நிலைப்பாடுகள், திமுக உருவாகாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது குறித்தெல்லாம் பேசலாம்தான். ஆனால் அதற்கான நேரமோ இதுவோ அல்ல இது. ஜெயமோகன் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்தும் காங்கிரசில் இருந்த காலம் மற்றும் வெளியேறிய காலத்தில் தமிழக அரசியலில் அவரது வகிபாத்திரம், பெரியாரியக்கம் மற்றும் திமுக குறித்து ஜெயமோகன் முன்வைக்கும் கருத்துகள் இவைகளைத்தான் நான் மறுத்திருக்கிறேன். இதில் உள்ள தரவுகள் குறித்து பேசுவதே இப்போதைக்கு சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஜெயமோகன் குறித்த எனது கருத்துகளை சந்தர்ப்பம் வாய்த்தால் மறுபரிசீலனை செய்கிறேன். ஆனால் இப்போதைய எனது நிலைப்பாடு இதுதான். ராஜன்குறை தனது ‘முதலீட்டியமும் மானுட அழிவும்’ நூலில் அமெரிக்க வலதுசாரிகளுக்கு இருக்கும் பொதுவான அம்சங்களைப் பட்டியலிட்டிருப்பார் : முஸ்லீம் எதிர்ப்பு, அறிவுஜீவிகள் எதிர்ப்பு, இடதுசாரி எதிர்ப்பு. ஜெயமோகனிடம் இந்த அத்தனைக்கூறுகளும் இருக்கின்றன என்பதோடு கூடுதலாக பெரியார் மற்றும் திராவிட இயக்க எதிர்ப்பும் உள்ளன. இந்திய வலதுசாரிகள் அனைவரிடமும் இருக்கும் கூறுகள் அத்தனையும் ஜெமோவிடம் உண்டு. இதற்கான ஆதாரங்களை அவரது எழுத்துக்களிலிருந்து ஆயிரம் சொல்லலாம். மேலும் இந்துத்துவவாதிகள் எப்போதும் கறார்த்தன்மையோடு இருப்பதாய்க் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஜனநாயகப் பாவனைகளும் அவர்களுக்குக் கைவந்த உத்திதான். வாஜ்பாய், அத்வானி மாதிரியானவர்களுக்கே அது கைவரும் என்றால் ஜெயமோகனுக்கு வராதா என்ன? ஜெயமோகன் ஜனநாயகப் பாவனையோடு கூடிய இந்துத்துவவாதிதான் என்று என்னால் நிறுவமுடியும். கிட்டத்தட்ட இந்த வைக்கம் விவாதம் கூட அதன் ஒரு பகுதிதான். ஆனால் முழு விவாதமில்லை. இப்போது வைக்கம் போராட்டம் தொடர்பாக மட்டும் பேசலாம்.

 8. K.R.அதியமான் said...

  ////எதிர்நிலைப்பாடுகள் எடுத்தது அம்பேத்கரும் பெரியாரும்தானே தவிர, மார்க்சிஸ்ட்கள் அல்ல.///

  மார்கிஸியர்கள் எதிர்னிலைபாடு எடுத்தது போராட்ட முறைகள் பற்றி, முக்கியமாக காந்தி ஒத்துழையாமை இயக்கதை வாபஸ் பெற்றது பற்றி. இரண்டு விசியங்களையும் ஒரே வரியில் எழுதிவிட்டேன். எனினும் மார்சியர்கள் தான் காந்தியை மிக கடுமையாக விமர்சனம் செய்பவர்கள். முதலாளித்துவத்தின் கையாள் என்றும் விமர்சிப்பவர்கள்.

  ///ராஜன்குறை தனது ‘முதலீட்டியமும் மானுட அழிவும்’ நூலில் அமெரிக்க வலதுசாரிகளுக்கு இருக்கும் பொதுவான அம்சங்களைப் பட்டியலிட்டிருப்பார் : முஸ்லீம் எதிர்ப்பு, அறிவுஜீவிகள் எதிர்ப்பு, இடதுசாரி எதிர்ப்பு. ஜெயமோகனிடம் இந்த அத்தனைக்கூறுகளும் இருக்கின்றன என்பதோடு கூடுதலாக பெரியார் மற்றும் திராவிட இயக்க எதிர்ப்பும் உள்ளன. இந்திய வலதுசாரிகள் அனைவரிடமும் இருக்கும் கூறுகள் அத்தனையும் ஜெமோவிடம் உண்டு.///

  முஸ்லீம் எதிர்ப்பா அல்லது இஸ்லாமிய தீவரவாத / அல் கொய்தா. வகாபிச பாணி இஸ்லாமிய அடிப்படைவத எதிர்ப்பா ? இரண்டும் வேறு வேறு. வலதுசாரிகள் இடதுசாரிகளை எதிர்க்கவே செய்வர். இடதுசாரிகள் வலதுசாரிகளை எதிர்ப்பர். இதில் என்ன புதுமை ? நான் என்னை ஒரு வலதுசாரி liberal ஆக கருதிக்கொள்கிறென். முதலில் இந்த வலதுசாரி / இடதுசாரிகள் பற்றி சரியான definition இல்லை. அதை பற்றிய எனது பதிவு இது :

  http://nellikkani.blogspot.com/2009/09/blog-post.html
  இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

  ராஜன் குறையின் நூலை படிக்க ஆவல். கேணி கூட்டத்திற்க்கு அவரும் வந்திருந்தார்.ஜெவிடம் சில முக்கிய கேள்விகள் விவாதங்களை வைத்தார். ரோசா வசந்த்தும் ஒரு முக்கிய கேள்வி கேட்டார். (நீங்களும் வந்திருக்கலாம்).

  அறிவுஜீவிகளை ஜெ எங்கு எதிர்க்கிறார் ? முதலில் அறிவுஜீவி என்றால் என்ன definition ? மேலும் ஒரு காலத்தில் மார்க்சிய இடதுசாரியாக இருந்தவர்தான் அவர். கம்யுன்களில் தங்கியிருந்தவர். இன்னும் மார்கிசிய மொழி (சுரண்டல், வர்கம், தொழிற்சங்கம்) உபயோகிப்பவர். ஜனனாயக பாணி முதலீட்டியம், அடிப்படை சுதந்திரத்தை பலப்படுத்தி, வளத்தையும் பெருக்கும் என்பதே எம் புரிதல். Real free market dynamics destroys dictatorship and fasisim and leads to decentralisation of power and a liberal democracy. As proved by the history of Chile, etc. Even India after Indira Gandhi and 1991 reforms. இதை பற்றி ஒரு அருமையான நூல் : ‘Capitalism and Freedom’ by Milton Friedman. ராஜன் குறையின் நூலை படித்துவிட்டு தொடர்கிறேன்.

  சரி, இதெல்லாம் இருக்கட்டும். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு பற்றி கேரள வரலாற்று ஆய்வாளர்களின் கோணம் பற்றி அவரின் இரண்டாவது கட்டுரையில் உள்ளது. என்னை பொறுத்தவை பெரியாரின் பங்களிப்பை குறைத்து மதிப்பட முடியாது. ஆனால் தமிழகத்தில் உள்ள மதிப்பிட்டை விட கேரளாவில் உள்ள மதிப்பீடு தான் சரியாக இருக்க முடியும். நமக்கு கிடைத்த தகவல்கள் குறைவு. மிக முக்கியமாக கருதுவது, போராட்டத்தின் இறுதியில் காந்தி தூரோகம் இழைத்துவிட்டார் என்று பெரியார் குற்றம் சாட்டி, காந்தியை கடுமையாக விமர்சிக்க ஆரம்பிப்பது. வைக்கம் போராட்ட வடிவம் பற்றி, காந்தியின் வழிமுறைகள், நாராயண் குருவின் பங்களிப்பு, வைக்கம் போராட்டம் பின்பு எதற்க்கு பாதை அமைத்தது, இவை பற்றிய பெரியாரின் புரிதல் மற்றும் விமர்சனங்கள். இவைதான் விவாதிக்க பட வேண்டியவை.

 9. Anonymous said...

  Real free market dynamics destroys dictatorship and fasisim and leads to decentralisation of power and a liberal democracy. As proved by the history of Chile, etc. Even India after Indira Gandhi and 1991 reforms. இதை பற்றி ஒரு அருமையான நூல் : ‘Capitalism and Freedom’ by Milton Friedman.
  ---------------------------------
  Mr.Athiaman needs a 101 course on all this.Milton Friedman is the guru of neo-con market fundamentalism.The fundamentalism that played havoc with lives of lakhs of workers,families and children.Chile was ruled by military after the coup in 1973 and they followed policies advocated by Milton Friedman.
  Was that a state that ushered in liberal democracy.
  Milton was not even a liberal he was a conservative to the core.
  Athiyaman and Jeyamohan are made for each other as both are spin doctors.Markets can flourish under dictatorship also because while rights of the capitalists can be ensured by a dictatorship which will restrict rights of labor.

  Liberal democracy has not been the outcome of real free market dynamics.It is the outcome of long struggle against monarchy, church,
  feudalism and aristocracy.French Revolution was not based on free market dynamics, nor the revolutions that swept Europe.
  The american struggle against british domination was not the result of any free market dynamics.
  Athiaman, Jeyamohan, Dondu - these spin doctors think that others are just fools.Athiaman should read some decent book on political economy. The Washington Consensus
  had lost its hold. Some like Athiaman,Dondu still have faith in it. Like Jeyamohan they get perverse pleasure in blaming the left and the labor class.If at all anything liberal democracy and welfare state became realities because of the centuries of struggle by working class and other progressive forces.Of course each age had its own share of Athiyamans,Dondus and Jeyamohans.

 10. K.R.அதியமான் said...

  Annoy,

  Try this first :

  http://en.wikipedia.org/wiki/Miracle_of_Chile

  .....Commenting on his statement about the "Miracle", Friedman says that "the emphasis of that talk was that free markets would undermine political centralization and political control." [24] Friedman claimed that "The real miracle in Chile was not that those economic reforms worked so well, but because that's what Adam Smith said they would do. Chile is by all odds the best economic success story in Latin America today. The real miracle is that a military junta was willing to let them do it." [2] He says the "Chilean economy did very well, but more important, in the end the central government, the military junta, was replaced by a democratic society. So the really important thing about the Chilean business is that free markets did work their way in bringing about a free society." [24] The term Miracle of Chile is also commonly used to refer to the favorable economic results of economic liberalization in that economy.////

  ok. i meant about the transformation of Chile from a right wing dictarship to a liberal democracy. India under Indira Gandhi who over centralised economic and political power with New Delhi, almost wrecked our nation, in the name of 'socialism'. In the current trend of liberalisation,etc it is impossible to over centralise power again or convert India into a dictatorship.

  Also read about the history of S.Korea and Taiwan, after 1950, which began as an right wing dictatorships and now transformed into a liberal democracies. Free markets create new dynamics and a vibrant middle class, etc.

  Entire world has now moved towards right of centre. Very opposite of the trend until 80s. Not due to any US conspiracy or threats. Man will do the rational thing only after trying all other options.

  Also, this interview is a must read for people like you :

  A new beginning : The emerging democratic paradigm in Latin America
  http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

  How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

  ..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

 11. K.R.அதியமான் said...

  ///Liberal democracy has not been the outcome of real free market dynamics.It is the outcome of long struggle against monarchy, church,
  feudalism and aristocracy.French Revolution was not based on free market dynamics, nor the revolutions that swept Europe.
  ///

  Partially true. Industrial revolution which ushered in industrial capitalism too played a major catalyst for this. Until it arrived, feudalism and religious suppression exisited for centuries with no major chance for change. ok.

  also try these too, in answer to your other over simplified assertations :

  http://en.wikipedia.org/wiki/Capitalism_and_Freedom

  http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

 12. சாலிசம்பர் said...

  சுகுணா,நேற்று(28-2-10) நடந்த கலாப்ரியாவின் "நினைவின் தாழ்வாரங்கள்" நூல் அறிமுக விழாவில் ஜெயமோகனுடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.சுகுணாதிவாகரின் மறுப்புக்கட்டுரைகளை வாசித்தீர்களா? என்று அவரிடம் கேட்டேன்.வாசிக்காமல் இருப்பேனா என்ற அர்த்தத்துடன் கூடிய புன்னகையோடு பதிலளித்தார்.மிகுந்த அக்கறையுடன் பேசிய பண்பு பிடித்திருந்தது,ஆனால் பதில் ஏற்புடையதாக இல்லை.அவர் பேசியதின் சாராம்சம்,1.பதிவிலுள்ள தரவுகளும்,பதிவின் தகுதியும் பதிலளிக்க‌ போதுமானதாக இல்லை.2.திக வின் 'அதிகாரபூர்வ' தகவல்களை பொருட்படுத்த இயலாது.மேலும் பல தகவல்களையும்,ஆதாரங்களையும் கடகடவென சொன்னார்,எதுவுமே நினைவில் இல்லை.

 13. சாலிசம்பர் said...

  இந்தப்பதிவின் கடைசி பத்திகளில் 'இலக்கியவாசகர்கள்' என்ற சொற்பிரயோகம் ஒரு வெளிச்சத்தை எனக்குக் காட்டுகிறது.இலக்கிய வாசகர்கள் என்று இருந்தால் அரசியல் வாசகர்கள் என்றும் இருக்கமுடியும்.அரசியல் கட்டுரைகளை படிக்க முடியும் அளவிற்கு இலக்கியப்படைப்புகளை கருத்தூன்றிப் படிக்க முடிவதில்லை.செமோவுடைய அரசியல் கட்டுரைகளின் போதாமையை என்னாலேயே நன்றாக உணரமுடிகிறது.அதை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு மொழித்திறன் இல்லை.மொழித்திறனோடு நீங்கள் எழுதும் கட்டுரைகளோ ,செமோவுக்கு போதாததாக உள்ளது.இப்படி மாற்றி மாற்றி போதாமையை கண்டுபிடிக்க வேண்டியது தான்.

  செமொவிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி.கலைஞர் ஒரு இலக்கியவாதி இல்லை என்று நீங்கள் நம்பும் அதே முறையில் நீங்கள் ஒரு அரசியல்நிபுணர் இல்லை என்று கருதிக்கொள்வது தானே முறையாக இருக்கும்?.

 14. மிதக்கும்வெளி said...

  ஜெயமோகனிடம் நேரடியாக இதுகுறித்துக் கேள்வி கேட்டதற்கும் அதை இங்கு பதிவு செய்ததற்கும் நன்றி சாலிசம்பர்.

  /1.பதிவிலுள்ள தரவுகளும்,பதிவின் தகுதியும் பதிலளிக்க‌ போதுமானதாக இல்லை.2.திக வின் 'அதிகாரபூர்வ' தகவல்களை பொருட்படுத்த இயலாது/

  1. பதிவில் உள்ள தரவுகள் ஏன் பதில் அளிக்க போதுமானதாக இல்லை? ஜெயமோகன் வைக்கம் போராட்டம் குறித்தும் பெரியாரின் பங்களிப்பு மற்றும் அவரது இயக்கம் குறித்தும் சொன்ன ஒரு விஷயத்துக்கூட அவரால் தரவுகள் தரமுடியவில்லை. இறுதியாக அதியமான் தன் பின்னூட்டத்தில் ஜெயமோகனின் கூற்றைக் குறிப்பிட்டிருப்பதையே எடுத்துக்கொள்வோம்.

  /வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடையும் முன்னரே 1925 ஆரம்பத்தில் ஈவேரா தமிழகம் திரும்பிவிட்டார். காங்கிரஸில் இருந்து விலகி குடியரசு இதழையும் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்தார்./

  இவை இரண்டுமே தவறான தகவல்கள். வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்தது 1925 நவம்பரில். பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது 1925 டிசம்பரில். மேலும் அவர் காங்கிரசுக்கட்சியிலிருந்தபோதே குடி அரசு இதழை ஆரம்பித்திருந்தார். இதுவெல்லாம் சாதாரணமான வரலாற்றுத் தகவல்கள், இன்று செவ்வாய்க்கிழமை என்பதைப் போல. ஆனால் சாதாரணமான தகவல்களைக் கூட தப்பும் தவறுமாய்ச் சொல்லும் ஜெயமோகனுக்கு இதைச் சொல்வதற்கு எந்த தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே பதிவின் தகுதி குறித்து ஜெயமோகன் பேசுவது, ‘தான் மாட்டிக்கொண்டதை’ ஒப்புக்கொள்ளமுடியாமல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கிற ஜெயமோகனின் பரிதாபத்தைத்தான் காட்டுகிறது. ஜெயமோகனோடு விவாதிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று அவரையே பட்டியல் போடச் சொல்லுங்கள்.

  2. இரண்டாவதாக இந்த அய்ந்து பாகங்களிலும் உள்ள தரவுகளில் பெரியாரின் கூற்றாக வரும் இரண்டு டங்களைத் தவிர மற்றவை அனைத்தும் கே.பி.கேசவமேனன், டி.கே,ரவீந்திரன், ராஜாஜி, சுதேசமித்திரன், ஹிந்து முதலான தரவுகளே. இவர்கள் யாருக்கும் தி.கவோடு தொடர்பில்லை. எந்த தரவுகளை முன்வைத்தாலும் ஜெயமோகன் கிளிப்பிள்ளை போல இதையே சொல்வது அவரது பலவீனத்தையும் கையாலாகத்தனத்தையும்தான் காட்டுகிறது. உண்மையில் நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ‘தமிழ் ஹிந்து’ என்னும் ஒரு இந்துத்துவ இணையதளத்தில் எழுதப்படும் அரைகுறைப்பொய் அவதூறுகளையே பெரும்பாலும் ஜெயமோகன் தனது மொழியின் வாந்தி எடுக்கிறார், வைக்கம் போராட்டம் உள்பட. அதிகாரப்பூர்வ இந்துத்துவ வரலாற்றை முன்மொழியும் ஜெயமோகனுக்கு அதிகாரப்பூர்வ தி.க வரலாற்று பற்றி பேசுவதற்கான தகுதி இல்லை. மேலும் ‘அதிகாரப்பூர்வ தி.க வரலாறாகவே இருந்தாலும் அதை ஏன் நிராகரிக்க வேண்டும்?’ இந்த கேள்வியை ஜெயமோகனிடம் கேளுங்கள்.

  அடிப்படையில் எனக்கு ஜெயமோகன் மீது மரியாதைகளோ நம்பிக்கைகளோ கிடையாது. ஜெயமோகனின் எழுத்துக்களைப் பொருட்படுத்தும், ஆனால் அதேநேரம் பார்ப்பனிய மற்றும் இந்துத்துவக் கறைபடியாத வாசகர்களை நோக்கித்தான் இந்த தொடர் எழுதப்பட்டது. ஜெயமோகன் ‘திருந்துவார்’ என்கிற மூடநம்பிக்கை எனக்கில்லை. இனொரு விஷயத்தையும் கவனியுங்கள். ஜெயமோகன் மட்டுமில்லாது, சந்தடிசாக்கில் ‘கோபால்கிருஷ்ணநாயுடுவைப் பெரியார் ஆதரித்தார்’ என்கிற ரீதியில் எல்லாம் தங்கள் விருப்பத்திற்கு அவதூறை நீட்டித்த டோண்டுராகவன், மதி இண்டியா மாதிரியான ஜெயமோகன் ஆதரவாளர்களும் கள்ள மௌனம் சாதிப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். நான் முன்வைத்த தரவுகள் உறுதித்தன்மையும் நம்பகத்தன்மையும் கொண்டவையாக இருப்பதால்தான் ஜெயமோகனும் அவரது சிஷ்யர்களும் வாயடைத்து நிற்கிறார்கள். ‘பெரியாரிஸ்ட்களுக்குத் தர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது’ என்று ஜெயமோகன் பரப்பிவருகிற பொய்யை முறியடித்திருக்கிறேன்.

  1. குமரிமைந்தன் பெரியாரிஸ்டா?

  2. நீதிக்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியதா?

  3. வைக்கம் போராட்டமும் பெரியாரும்

  இந்த மூன்று விஷயங்கள் குறித்து எந்த பொதுமேடையிலும் ஜெயமோகன் விவாதிக்க வரட்டும். பெரியாரிஸ்ட்கள் தயாராய் இருக்கிறார்கள். ஜெயமோகன் தயாரா என்பதைக் கேட்டு சொல்லுங்கள்.

 15. Anonymous said...

  //மாதிரியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள்//

  பெரியாரைப் பற்றி ஜெமொ என்ற சுயமோகி எழுதியுள்ள அவதூறை விட பெரிய அவதூறை சுகுணா எழுதியுள்ளார். போகிற போக்கில் தன்னையும் யூத்துகள் லிஸ்டில் இணைக்க முயல்கிறார்.

  இது கண்டிக்கத்தக்கது.

  தொடர் கட்டுரை சிறப்பாக வந்துள்ளது. ஜெமோவிற்கு தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற தனிமை சமீப காலமாக வாட்டியெடுக்கிறது என்று நினைக்கிறேன். அதுதான் இது போன்ற சில்லறைத்தனங்களை செய்ய வைக்கிறது. பைத்தியம் முற்றும் முன்பு வைத்தியம் பார்ப்பது நல்லது.

 16. விநாயக முருகன் said...

  ”எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்”

  கோயிலுக்கு போனா‌‌‌ல் மொட்டை அடிக்கின்றோம். ஏன் கை அல்லது காலை வெட்டி போட மறுக்கின்றோம்? ஏன்னா கை ,கால் மறுபடி முளைக்காது.

  இ‌து தர்க்கத்தின் மொழிதான். இந்த கருத்து சிந்திக்க வைக்காமல் மிகை உணர்ச்சி ஏற்படுத்துகின்றதா ஜெயமோகனுக்கு? ஈ.வே.ரா பேச்சு எல்லாமே தர்க்கத்தின் மொழியில் சொல்லப்பட்டவையே.


  இவர் இந்நேரம் இருந்திருந்தால் நித்யா போன்ற போலிகளுக்கு தைரியம் வந்திருக்குமா?

  பெரியார் வைக்கம் போராட்டம் ஆரம்பிக்கவில்லை
  பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தவில்லை பெரியார் வைக்கம் போராட்டம் முடிக்கவில்லை எ‌ன்று கேணிக் கூட்டத்தில் பேசினா‌‌‌ர். விட்டால் அவர் பெரியாரே இல்லை மேக்கப் போட்ட சத்யராஜ் எ‌ன்று கூட சொல்வார்.

  STD - ன்னா வரலாறு தானே எ‌ன்று கேட்பவர்கள் எல்லாம் பிதற்றுகிறார்கள்.

 17. விநாயக முருகன் said...

  “கேரளாவில்தான் பெரியார் போராடவில்லையே பின் ஏன் பெரியாறு அணை என்றும் பெரியாறு பூங்கா என்றும் பெயர் வைத்தார்கள்?” என்றும் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்கிறது அந்த கடிதம். உடனே ’அது பெரியார் இல்லை பெரியாறுதான்’ என்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆதாரம் காட்டி வெண்ணெய்வெட்டி விளக்கம் தருகிறார் ஜெயமோகன்.

  :) :)

  ஜெமோ சொன்னது வைக்கமா இருக்காது. கம்பமா இருந்திருக்கும். கம்பத்தில் பெரியார் போராடவில்லை என்பது உண்மைதானே... சரியாத்தான் ஜெமோ சொல்லியிருக்கார்.

 18. யுவகிருஷ்ணா said...

  //.பதிவிலுள்ள தரவுகளும்,பதிவின் தகுதியும் பதிலளிக்க‌ போதுமானதாக இல்லை//

  ஜெமோ இதை சொல்லுவது நல்ல நகைச்சுவை.

  ஏனெனில் இந்த வைக்கம் பிரச்சினையை அவர் இணையத்தளத்தில் ஆரம்பித்தபோதே அங்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தேன். அவரது எழுத்துக்கு ஆதாரம் கேட்டபோது, அவர் சில விக்கிபீடியா பதிவுகளை பார்க்கச் சொன்னார்.

  விக்கிபீடியாவை ஆதாரமாக காட்டும் ஜெமோ, சுகுணா திவாகரின் ஆதாரங்கள் போதுமானதல்ல என்று சொல்லுவதை என்னவென்று சொல்வது? :-(

 19. Raja M said...

  சுகுணா,

  நல்ல தொடர். இந்த மாதிரியான விவாதங்கள் மிகவும் நல்லவை. தேவையும் கூட.

  தர்க்கப் பூர்வமான விவாதங்கள், வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய மறுத்தளிப்புகள் தமிழில் அதிகம் இருப்பதில்லை.

  சாரங்களை மட்டும்,யாராவது சொன்னால், அதுவும் வலிமையான எழுத்துக்களால் சொன்னால், ஏற்றுக் கொள்ளும் வெகு ஜன மன நிலை உள்ள சூழலில், இத்தகைய எதிர்வினை அவசியம் தேவை.

  எந்த விஷயத்தையும் தீர ஆய்ந்து ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு வாசகனுக்கு உண்டு. உங்களது நல்ல கட்டுரைத் தொடருக்கு நன்றி.