வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும் 4

’வைக்கம் போராட்டத்தில் பலரும் போராடினார்கள். அவ்வாறு போராடியவர்களில் ஒருவர்தான் பெரியார். அவரது போராட்டத்திற்கோ, பங்களிப்பிற்கோ தனிச்சிறப்பான வரலாற்று முக்கியத்துவமில்லை. அவரது பங்களிப்பைத் தமிழகத்தில்தான் குறிப்பாக பெரியாரது அபிமானிகளும் திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். மற்றபடி வைக்கம் போராட்டம் குறித்த  கேரள வரலாற்றில் பெரியாருக்கு இடமே இல்லை’ என்பதுதான் ஜெயமோகன் எழுதியதன் சாராம்சம்.  ஆனால் உண்மையில் பெரியார் ‘கைதானவர்களில் ஒருவர்’ மட்டுமல்ல, அவரது கைது என்பது மற்றவர்களின் கைதிலிருந்தது வேறுபட்டிருந்தது என்பதைக் கேரள போராட்ட தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமனனின் வார்த்தைகளிலிருந்தே பார்த்தோம். அரசு ஒடுக்குமுறை பெரியார் மீது கடுமையாகப் பாய்ந்திருக்கிறது என்றால் பெரியாரின் போராட்டம் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தது என்பதையும் போராட்டத்திற்குப் பாரிய வலு சேர்த்தது என்பதையும் மிக எளிதாக யாரும் புரிந்துகொள்ள முடியும்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக்கொள்வது நல்லது. பொதுவாக நான் பின்னூட்டங்களை மட்டறுப்பதில் கறார்த்தன்மை காட்டுவதில்லை. ஆனால் இந்த பதிவுகளுக்கு மட்டும் அப்படி ஒரு கறார்த்தன்மை இருக்கட்டும் என்று முன்பே முடிவு செய்துகொண்டேன். ஆனால் வரக்கூடிய பின்னூட்டங்களில் பெரும்பாலானவை  இன்றைய இலக்கிய வாசகர்களின் மொன்னைத்தனத்தைக் காட்டுகின்றன. ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அளவுக்கு வீடு புகுந்து தாக்கவில்லையே தவிர, மற்றபடி மூர்க்கத்தனமான பின்னூட்டங்கள்தான் ஜெயமோகன் வாசகர்கள் தரப்பிலிருந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் நாகரீகமானவர்கள், ‘பாடப்புத்தகங்கள்,. அண்ணா, கருணாநிதி, திமுக’ பற்றியெல்லாம் கேள்வி கேட்டு முடிந்தவரை வைக்கம் போராட்டம் தொடர்பான விவாதத்தின் ஓர்மையைக் கலைத்து விவாதத்தைக் கடத்த விரும்புகிறார்களே தவிர, இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் தரவுகள் குறித்து ஒரு வார்த்தையுமில்லை. ஜெயமோகன் எழுதியதன் சாராமத்தையே மறைத்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ‘இதுதான் சாராமசம்’ என்று காட்ட விரும்புகிறார்கள். மேலும் ஜெயமோகன் தளத்திலும், கேணி சந்திப்பு தொடர்பாக எழுதப்பட்ட பதிவுகளிலும் உள்ள கடிதங்கள், பதிவுகள், எழுத்துகளைப் பார்த்தால், ஒருவர் ஜெயமோகனை ‘ஞான அரக்கன்’ என்கிறார். இன்னொருவர் ஜெயமோகனை நேரில் பார்த்த பரவசத்திலிருந்தே மீளவில்லை. இப்படியாக ஒரு மதமனநிலையிலிருந்து ஜெயமோகன் வாசகர்கள் மீள்வது கடினம் போலிருக்கிறது. ஆனால் அதுகுறித்துக்கூட கவலையில்லை. ஆனால் வைக்கம் போராட்டம் குறித்தும் பெரியாரியக்கம் குறித்தும் திமுக குறித்தும் ஜெயமோகன் முன்வக்கும் கருத்துகள் அதிகபட்சம் எண்பது ஆண்டுகளிலிருந்து நாற்பது ஆண்டுகாலம் வரை முந்தியுள்ள வரலாறுகள்தான். இந்த வரலாறு குறித்து ஜெயமோகனால் அனாயசமாகத் திரித்து அவதூறு செய்யமுடிகிறது என்றால் இந்த வரலாறுகளைத் தரவுகளை உரசிப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை கூட இல்லாதவர்களாக இலக்கியவாசகர்கள் மாறியிருப்பது கவலையளிக்கிறது. புனைவு இலக்கியங்கள் மட்டுமே மனித வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் அல்ல, சமூக வரலாறும்தான் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ?

‘பெரியார் தர்க்கத்தின் மொழியில் பேசியவர் இல்லை’ என்றும் ‘அவர் ஒரு குறுங்குழுவைத்தான் நடத்திவந்தார்’ என்றும் ‘காந்தியைப் போல அவர் ஒரு வரலாற்றின் குரல் இல்லை’ என்றும் ‘தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவருக்கு இடம் இல்லை’ என்றும் ஜெயமோகன் கூறுகிறார். ஆனால் நாம் முன்பு குறிப்பிட்ட அதே கேசவமேனன் மலேசியாவில் பெரியாரையும் நாகம்மையாரையும் சந்தித்ததை ஒட்டி ‘கடந்தகாலம்’ புத்தகத்தில் எழுதுவதைக் கவனியுங்கள்

”திராவிட கழகத் தலைவர் ஈ.வி.ராமசாமி நாயக்கர் நான் மலேசியாவில் இருந்தபோது அங்கு வந்திருந்தார். சுயமரியாதை இயக்கப் பிரசாரம் செய்து கொண்டு நாயக்கர் மலேயாவில் பல இடங்களிலும் சுற்றுப் பயணம் செய்தார். இரண்டு நாட்கள் அவரும் அவருடைய மனைவியும் எங்கள் இல்லத்தில் தங்கினார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் என்ற முறையில் நாங்கள் அடிக்கடி பார்த்துப் பழக சந்தர்ப்பங்களிருந்திருக்கின்றன. பின்னர் நாயக்கர் காங்கிரஸிலிருந்து பிரிந்தது மட்டுமின்றி, காங்கிரஸிக்கு எதிரியாகவும் மாறினார். என்றாலும் எங்கள் தனிப்பட்ட நட்புறவுக்கு அது தடையாக இல்லை. மலேயாவில் திராவிட கழகத்தார் நாயக்கரின் அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது, அக்கூட்டத்துக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்தார்கள். தேசீயக் கருத்துக்களில் எங்களிருவருக்கும் இடையே ஒற்றுமை நிலவவில்லை எனினும், அவர் சமுதாய முன்னேற்றத்துக்கு ஆற்றி வரும் தொண்டைப் பாராட்டுவதற்குரிய வாய்ப்பாக அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன். நாயக்கர் பேச்சாற்றல் மிகுந்தவர். பொதுத் தொண்டாற்றும் திறனுடன், தலைமைப் பொறுப்புற்குரிய பண்பும் அவரிடம் இணைந்திருந்தன. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத் தொண்டாற்றி வரும் நாயக்கரை அவருடைய கருத்துக்களில் உடன்பாடு கொள்ளாதவர்கள் கூட அவர் ஒரு ஆற்றல் மிகுந்த தனிமனிதர் என்பதை ஒப்புக் கொள்வார்கள். (பக்.196)

வெவ்வேறு அரசியல்நிலைப்பாடுகளில் இருந்தபோதும் பெரியாரின் வரலாற்றுப் பங்களிபையும் ஆளுமையையும் ஒத்துக்கொள்ளும் அறவுணர்வு மனநிலை கேசவமேனனிடம் இருந்தது. ஆனால், முன் தீர்மானங்களையும் வெறுப்பின் வன்மத்தையும் கொண்ட ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியுமா, என்ன?

கே.பி.கேசவமேனன் பெரியாரின் சிறைவாழ்க்கை குறித்து ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் எழுதுவதை அன்று காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராஜாஜியின் அறிக்கையும் உறுதிசெய்கிறது. ராஜாஜியின் அறிக்கை இது:

“இப்பொழுது திருவனந்தபுரம் சிறைச்சாலையிலிருக்கும் சத்தியாக்கிரகக் கைதியான ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரை உணவு, இடவசதி முதலிய விஷயங்களில் சாமான்யக் கைதிகளைப் போல் நடத்துவதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. அவர் சிறை உடைகளை அணிகிறார். காலில் இரும்பு வளையம் போடப்பட்டிருந்தது. மற்ற சத்தியாக்கிரகக் கைதிகளிடமிருந்து பிரித்துத் தொலைவில் ஒரு தனி அறையில் அடைத்திருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீமான் நாயக்கர் உற்சாகத்துடனிருந்து வருகிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருடன் நான் நெருங்கிப் பழகியிருப்பதால் அவரை நன்கறிவேன். அவர் செல்வத்தையும், அந்தஸ்தையும் துறந்து, சங்கடங்களை ஏற்றுக் கொண்ட தீர புருஷர். அவருடைய தூய்மையைப் பரிசோதிப்பதற்காக இத்தகைய சோதனைகள் செய்வதற்கு அவர் சந்தோஷப்படுகிறார். பிரிட்டிஷ் இந்தியாவில் நடத்தப்படும் தோரணைக்கு இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இருந்தாலும் ஸ்ரீமான் நாயக்கர் விஷயத்தில் திருவாங்கூர் கவர்மெண்டார் தவறான வழியில் இறங்கி விட்டதாகத் தோன்றுகிறது. ஸ்ரீமான் நாயக்கருடைய அந்தஸ்து தெரியாமல் அவ்விதம் செய்யலாம். ஆனால் அது ஒரு சமாதானமாக முடியாது. மனச்சாட்சிக்காகச் சிறை செல்வோர் எத்தகையினராயினும் அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அந்த ஜில்லாவை விட்டுப் போய்விடும்படி ஸ்ரீமான் நாயக்கருக்கு உத்தரவிட்டார்கள். சாந்தமாக அதை மீறி வந்தார்... இருந்தபோதிலும் பிரஷ்ட (வெளியேற்ற) உத்தரவின் நோக்கம் சம்பந்தப்பட்டவரைப் பாதுகாப்பில் வைத்திருப்பதால் நிறைவேறி விடுகிறது. ஆனால் அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிப்பதும், இரும்பு விலங்குகள் போடுவதும், சிறை உடைகளைக் கொடுப்பதும், மற்றவர்களுடன் சல்லாபமில்லாமற் செய்வதும் நியாய விரோதமாகும். திருவனந்தபுரம் சிறையிலிருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது... (சுதேசமித்திரன் 28.08.1924)


பின்னாட்களில் பெரியாரின் முதன்மை அரசியல் எதிரியாக மாறியவரும், பெரியாரைக் காங்கிரசுக்கு அழைத்துவந்தவருமான ராஜாஜி, பெரியாரின் நிலை குறித்து விடுகிற அறிக்கை, அன்று பெரியாருக்குத் தமிழகத்திலும் தமிழகக் காங்கிரசிலும் இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. அவதூறுவாதிகளும் கண்மூடித்தனமான அவரது பின்பற்றாளர்களும் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெரியார் உண்மையில் வைக்கம் வீரர்தான். அவரும் அவரது மனைவி நாகம்மையின் வருகையும் வைக்கம் போராட்டத்தில் மாபெரும் சலனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. முன்னணித் தளபதிகள் கைதுக்குப் பின் பெரியார் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தியதையும் அதனால் போராட்டத்தின் இயங்குதிசை இன்னும் தீவிரமடைந்ததையும் அரசு ஒடுக்குமுறை வைக்கம் வீரராம் பெரியார் மீது பாய்ந்ததையும் அரசு ஆவணங்களும் கேரள பதிவுகளும் காட்டுகின்றன. ஜெயமோகன் எச்சி தொட்டு அழித்துவிட வரலாறு என்ன அவ்வளவு குழந்தைத்தனமானதா?

(தொடரும்...).
5 உரையாட வந்தவர்கள்:

 1. எம்.எம்.அப்துல்லா said...

  காமெடியாப் பார்க்கவேண்டிய ஒரு விஷயத்திற்கு இவ்வளவு தீவிர எதிர்வினை தேவையா??

 2. விஷ்ணுபுரம் சரவணன் said...

  அன்புமிக்க சுகுணாதிவாகர்..

  பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியை சூழலுகேற்ப அவரவர் வசைபாடி வருவது வெளிப்படையான ஒன்று. ஜெயமோகனும் அதற்கு விதிவிலக்கல்ல.

  திராவிட இயக்கம் தமிழுக்கென்ன செய்தது என ஆஆஆராய்ந்து எழிதியிருப்பவரின் பதிவில் போகிறபோக்கில் தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னதையும், தமிழ் நீச பாஷை என பார்ப்பனர் சொன்னதை ஒரே நிலையில் ஒற்றை கருத்துநிலையில் வைத்து பார்ப்பதிலிருந்து நாம் இன்னும் வெளிப்படையாக ஜெயமோகனின் நோக்கத்தை புரிந்துக்கொள்ளலாம்.

  தமிழ் மொழி இன்னும் அறிவியலாகமல், சமயச்சார்ப்பும் ஆணாதிக்க பார்வையிலிருந்தும் வெளிவராமல் இருக்கிறதே எனும் பெரியாரின் ஆதங்கத்திலிருந்து வெளிவந்த கருத்தையும், தமிழை பேசுபவனை வெளியில் நிறுத்த பார்ப்பனர் கையாண்டதையும் அவற்றின் பின்னரசியலை நன்கு தெரிந்தும் இரண்டும் ஒன்றே எனும் தனது பேராய்வின் முடிவை தனது சிஷ்யகோடிகளுக்கு கடைவிரித்து தரும் அரசியல் மிகதந்திரமானது.

  காலச்சுவடு ஜெயமோகன் , கிழக்கு இவையெல்லாம் தனித்தனியே உலவுவதுபோலிருந்தாலும் இவை எல்லாமே ஒரே தளத்தில்தான் இயங்கி வருகின்றன.

 3. குட்டிபிசாசு said...

  வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு பற்றி தாங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் விளக்கத்திற்கும், மேற்கோள்களுக்கும் நன்றி.

 4. blackpages said...

  வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு பற்றி தாங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் விளக்கத்திற்கும், மேற்கோள்களுக்கும் நன்றி.


  வாழ்த்துக்கள்.விஷ்ணுபுரத்தின்
  பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்

 5. www.bogy.in said...

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in