புலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்....தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச்செயலாளர் தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி மீண்டும் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு xஎதிர்ப்பு என்னும் இருவேறுமுகாமகளிலிருந்தும் பலத்த விவாதங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன. தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்திருந்தது.

இவ்வூர்வலத்தில் கலந்துகொள்வதாயிருந்த, தற்போது திமுக கூட்டணியிலிருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்தேசபொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மணியரசன் போன்றோர் தடையை மீறி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார்கள். 'இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றிவிட்டது' என்றும் 'கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்' என்றும் கர்ஜித்திருக்கிறார் வைகோ.

மறுபுறத்திலோ பெரியார் திராவிடர்கழகத்தினர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தட்டி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்டனத்திற்குப் பிறகு காங்கிரசாரால் கிழிக்கப்பட, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் பெரியார் தி.க தோழர்கள் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் கலைஞர் தமிழ்செல்வனுக்கு இரங்கல் விடுத்ததே சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதுகுறித்து கேள்விகேட்பதற்குத் திராணியற்ற வைகோதான் கருணாநிதி மீது பாய்ந்திருக்கிறார். வைகோவைப் பொறுத்தவரை அவருக்கென்று இருந்த பல சாதகமான முகமூடிகள் கழன்றுவிழுந்திருக்கின்றன. பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய சில திராவிட இயக்கபோக்கின் அம்சங்களையும் இழந்துவிட்ட வைகோவிற்கு மிஞ்சியிருப்பது புலி ஆதரவு அரசியல் வேடம் மட்டும்தான்.

ஆனால் அதிலும்கூட சமீபகாலமாகத் திருமாவளவன் போன்றவர்கள் வைகோவை விடவும் தீவிரமாகப் புலி ஆதரவு அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தன் கடைசிக் கோவணமும் கழற்றப்படுமோ என்னும் பதட்டம் வைகோவிற்கு.

நெடுமாறனைப் பொறுத்தவரை ஈழ ஆதரவு அரசியலில் தன் இடம் பறிபோய்விடக்கூடாது. புலிகளைத் தமிழகத்தில் யார் ஆதரித்தாலும் தான் மட்டுமே அவர்களுக்கு ஞானத்தந்தையாக விளங்கவேண்டும் என்னும் அரிப்பு உண்டு. நெடுமாறனின் தமிழ்த்தேசியக் கருத்தியல் தளம் வெள்ளாளக் கருத்தியலும் முதலாளியமுமே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் சமீபத்திய உதாரணம், நெடுமாறன் தலைவராய்ப் பங்குபற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு தமிழகத் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு 'உலகபெருந்தமிழர் விருது' வழங்கியிருப்பதைச் சொல்லலாம். (இப்போக்கைக் கண்டித்து அரங்கிலிருந்து ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் மற்றும் பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.ராமகிருட்டிணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.)

பொள்ளாச்சி மகாலிங்கம் வெளிப்படையான இந்துத்துவ ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா கூட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர், இந்துத்துவத்தைப் பரப்புவதற்காகவே 'ஓம்சக்தி' என்னும் பிற்போக்கு இதழை நடத்திவருபவர். தொழிலாளர் விரோத மற்றும் உலகமயமாக்கல் ஆதரவுப் போக்கைக் கடைபிடித்துவருபவர். இவருக்கு விருது வழங்கி மகிழும் நெடுமாறனின் அரசியல் லட்சணம் எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கத்தேவையில்லை.

ஒருபுறம் புலிகள் ஆதரவு, இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தாலும் மறுபுறம் இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டம் போன்ற சாதியொழிப்புப் போராட்டங்களைப் பெரியார் தி.க முன்னெடுத்து நடத்திவருகிறது. ஆனால் சாதியமைப்பிற்கு எதிராகவோ, இந்துசாதியத்தால் நாள்தோறும் ஒடுக்கப்பட்டுவரும் உள்ளூர்த்தமிழர்களுக்கு ஆதரவாகவோ ஒரு புல்லையும் பிடுங்கிப்போட்டதில்லை நெடுமாறன்.

இலங்கைத்தமிழர்களுக்கு உணவுபொருட்கள் போகவேண்டுமென்று உண்ணாவிரத நாடகம் நடத்தி தானே இலங்கைக்குச் சென்று உணவுபொருட்களை அளிக்கப்போவதாக சாகசவாத பயாஸ்கோப் ஓட்டும் நெடுமாறனுக்கு தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் ஊரிலிருந்து சேரிக்குத் தண்ணீர் வருவதில்லை என்பது தெரியுமா? தலித்துகள் வாயில் மலந்திணிக்கப்படுவது வெறுமனே செய்திகளாயிருந்தது மாறி, நிகழ்வுகளாக மாறிவருகின்றன. இதுகுறித்தெல்லாம் நெடுமாறனின் 'தமிழ்த்தேசியம்' கவலைப்படாதா?

இப்படியாக ஒருபுறம் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் சாகசவாதப் படம் ஓட்டியே தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுயற்சிக்க மறுபுறம் புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம் பார்பனப் பாசிஸ்ட்களாலும் காங்கிரசு தேசிய வெறியர்களாலும் முடக்கிவிடப்பட்டு வருகிறது.

புலி ஆதரவுப் போராளி வைகோவிற்கு தன் சகோதரி ஜெயலலிதாவை எதிர்த்துக் கேட்க துணிவில்லை. கருணாநிதியோ புலிகள் விசயத்தில் காங்கிரசைப் பகைத்துகொள்ள முடியாது. இனி என்ன நடக்கும்? வழக்கம்போல 'புலிகள் ஊடுருவல் புராணங்களை' தினமலர், துக்ளக், ஜெயா பார்ப்பனப் பாசிசக் கூட்டணி ஆரம்பித்துவிட்டது.

தனது கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளவும் 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்' கருணாநிதி தனது அரசு எந்திரத்தை 'முடுக்கிவிடுவார்'. இப்போதே 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக' பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜி.பி அறிவித்துள்ளார்.

இன்னும் சிலதினங்களில் யாராவது அப்பாவி ஈழத்தமிழர் வெடிகுண்டுடன் 'கண்டுபிடிக்கப்பட்டு' கைது செய்யப்படுவார். 'புலிகளின் ஊடுருவல்' தடுத்து நிறுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியில் சகல துவாரங்களிலும் பெவிகால் ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய வீராதிவீரன்கள், வீரபத்திரப் பேரன்கள் 'வீர முழக்கம்' செய்யத்துவங்கி விடுவார்கள். வைகோ, நெடுமாறன் மாதிரியான 'வாடகை மாவீரன்களுகு' தமிழ்நாடு முழுதும் பொதுக்கூட்டம் போட ஒரு நல்ல வாய்ப்பு.

தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் முகாம்களில் அடைத்துவைக்கபட்டிருக்கும் இலங்கை அகதித் தமிழர்கள் ஏற்கனவே 'நாயினும் கீழான வாழ்வு' வாழ்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுரிமையை உறுதிசெய்ய எந்த ஓட்டுபொறுக்கிக் கட்சிகளோ தமிழ்த்தேசிய மாவீரன்களோ முயற்சித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நடக்கப்போகும் நாடகத்தில் அரசின் கடும் கண்காணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகப்போவது தமிழகத்தில் வசிக்கும் அப்பாவி இலங்கை அகதிகளே..ஆகமொத்தம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப் போகிறது, 'ஆடு புலி புல்லுக்கட்டு' நாடகம்.

20 உரையாட வந்தவர்கள்:

 1. Anonymous said...

  எதார்த்தத்தை உங்கள் உள்ளத்தில் உள்ள கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் சுகுணாதிவாகர்.

 2. Anonymous said...

  இப்போதே 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக' பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜி.பி அறிவித்துள்ளார்

  See the advt. given by DGP in papers. Under this even putting
  up banners and holding hall meetings will be considered as
  extending support to banned
  organiztions. Mercifully he
  has left out blogging from
  the list :).

 3. nagoreismail said...

  இதுக்கு தீர்வு தான் என்ன? - நாகூர் இஸ்மாயில்

 4. Anonymous said...

  இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்...!!!!

  குட் ஷாட் !!!!!!!!

 5. தமிழச்சி said...

  உண்மையான விமர்சனம். எல்லோராலும் இப்படி எழுதிவிட முடியாது சுகுணா.
  உண்மையை உண்மையாய் இச்சமூகத்தில் பேசிவிட முடியாது. ஆனாலும் உண்மை உண்மைதானே!

  வாழ்த்துக்கள் தோழர்

  தமிழச்சி

 6. Anonymous said...

  see the ad by I.G(Police) on meetings etc in support of 'banned organisations' in this link
  http://viduthalai.com/20071127/page4.html
  Is this a warning to DK also not to protest ?

 7. P.V.Sri Rangan said...

  //தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் முகாம்களில் அடைத்துவைக்கபட்டிருக்கும் இலங்கை அகதித் தமிழர்கள் ஏற்கனவே 'நாயினும் கீழான வாழ்வு' வாழ்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுரிமையை உறுதிசெய்ய எந்த ஓட்டுபொறுக்கிக் கட்சிகளோ தமிழ்த்தேசிய மாவீரன்களோ முயற்சித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நடக்கப்போகும் நாடகத்தில் அரசின் கடும் கண்காணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகப்போவது தமிழகத்தில் வசிக்கும் அப்பாவி இலங்கை அகதிகளே..ஆகமொத்தம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப் போகிறது, 'ஆடு புலி புல்லுக்கட்டு' நாடகம்.//

  மிதக்கும் வெளி, தங்களின் இக் கருத்து மிகவும் சரியானது-நியாயமானது.இது குறித்து எவருக்கும் அக்கறை இருக்க வாய்ப்பில்லை.ஏனெனிலும்,எல்லோரும்(மக்களைச் சொல்கிறேன்) தமிழீழத்தின் பிறப்பில் கண் வைத்திருக்கக் தமிழீழத்தின் குடிகள் ஓட்டுக்கட்சி-இயக்கங்களின் அரசியலுக்குக் காற்பந்தாகி வருகிறார்கள்.இதற்குள் கருணாநிதி ஈழத்தமிழர்களின் மிக முக்கிய போராட்ட ஆதரவாளனாம்(!?).என்ன செய்ய? தங்கள் கட்டுரை பல கோணங்களைப் பார்க்கிறது.நல்லதொரு பதிவு.

 8. Anonymous said...

  நடுநிலையுடன் எழுதியுள்ளீர்கள். தமிழ் தேசியவாதிகளின் இந்துத்துவச் சார்புக்கு என்ன தான் காரணம்? இந்து வெறியர்களின் ஒரு பிரிவினர் இவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்திருப்பார்களா?

 9. Unknown said...

  இதிலிருந்து விளங்குவது ஒரு உண்மைதான்.

  தமிழ்த்தேசியம், இனப்பற்று, பொடலங்காய் என்று எல்லாமே பணத்துக்கு முன் பெட்டிப்பாம்பு தான்.

  அந்த பணம் இருந்துவிட்டால் பொறுக்கிக்கும் பொன்னாடை கிடைக்கும்.
  பொள்ளாச்சி மஹாலிங்கத்துக்கும் நெடுமாற விருது கிடைக்கும்.

  தன்னை மட்டுமே சிந்திக்கும் இவர்களுக்கு
  பணம் தான் பதவியாக வருகிறது.
  பணம் தான் உதவியாக வருகிறது.
  பணம் தான் பிம்பத்தை 'வாங்கி'த்தருகிறது. வீழ்த்தவும் செய்கிறது.

 10. Arasu Balraj said...

  நன்று.

 11. மிதக்கும்வெளி said...

  /இதுக்கு தீர்வு தான் என்ன? - நாகூர் இஸ்மாயில்/

  சாகசவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், நடைமுறைச் சாத்தியமான சில தீர்வுகளை முன்வைத்துப் போராடலாம்.

  1. குறைந்தபட்சம் அய்ந்தாண்டுகள் தமிழகத்தில் வசித்துவரும் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மற்ற இந்தியக் குடிமக்களுக்கு இருப்பதைப் போன்ற அனைத்து வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் வழங்கபடவேண்டும்.

  2. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும்.

  3. சர்வதேச அளவில் அகதிகள் நடத்தப்படும் முறைகளைக் கடைப்பிடிக்க இந்திய அரசு வலியுறுத்தபடவேண்டும்.

  ஆனால் இதுமாதிரியான கோரிக்கைகளை தமிழ்த்தேசியக் குழுக்கள் முன்வைக்குமென்று தோன்றவில்லை. குறைந்தபட்சம் பெரியார் தி.க மாதிரியான அமைப்புகளாவது தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டுமென்பதே விருபம்.

 12. மிதக்கும்வெளி said...

  /see the ad by I.G(Police) on meetings etc in support of 'banned organisations' in this link
  http://viduthalai.com/20071127/page4.html
  Is this a warning to DK also not to protest /

  திராவிடர்கழகத்தை இந்த விசயத்தில் நம்பமுடியாது. ஏதேனும் 'தமிழினப் போதையேற்றி' அப்பாவி இளைஞர்களை உசுப்பேற்றிவிடும். ஆனால் அதை நம்பி ஆர்வக்கோளாறால் யாராவது இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அதோகதிதான். சிவராசனுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லையென்று எல்.டி.டி.ஈ அறிவிப்பதைப் போல அந்த இளைஞர்களுக்கும் தங்கள் அமைபிற்க்கும் தொடர்பில்லையென்று தி.க தலைமை அறிவிக்கும்.

 13. மிதக்கும்வெளி said...

  /நடுநிலையுடன் எழுதியுள்ளீர்கள். தமிழ் தேசியவாதிகளின் இந்துத்துவச் சார்புக்கு என்ன தான் காரணம்? இந்து வெறியர்களின் ஒரு பிரிவினர் இவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்திருப்பார்களா/

  அப்படிச் சொல்லமுடியாதென்றே கருதுகிறேன். ஆனால் தமிழகத்தில் தமிழ்த்தேசியம் என்பது (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது.

 14. Anonymous said...

  பாராட்டுக்கள்!!!!. தமிழ் வாசிக்கத் தெரிந்த ஒவ்வொரு தமிழ் அகதியும் நன்றி தெரிவிப்பான். ஆனாலும், நீங்கள் பழி சுமத்துகின்ற தலைவர்களையும் ஒதுக்கிவிட்டால்
  யார் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கத் தயராக இருக்கின்றார்கள்?

  முடிந்தால், பதிவிடுங்கள்!

  ஒரு ஈழத் தமிழன்

 15. தமிழச்சி said...

  http://thamizachi.blogspot.com/

 16. Anonymous said...

  1. குறைந்தபட்சம் அய்ந்தாண்டுகள் தமிழகத்தில் வசித்துவரும் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு மற்ற இந்தியக் குடிமக்களுக்கு இருப்பதைப் போன்ற அனைத்து வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் வழங்கபடவேண்டும்.

  2. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும்.

  3. சர்வதேச அளவில் அகதிகள் நடத்தப்படும் முறைகளைக் கடைப்பிடிக்க இந்திய அரசு வலியுறுத்தபடவேண்டும்.

  Of these the third is a demand
  that can be most acceptable to
  government.But this demand should come from civil liberties groups,
  and other sections of the civil
  society that cannot be dubbed as
  Pro-LTTE.Unfortunately that is
  not happening. Even after all
  these years the parties and groups
  in tamil nadu have not been able
  to build a national alliance for
  the cause of the Srilankan Tamils.

 17. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

  /இன்னும் சிலதினங்களில் யாராவது அப்பாவி ஈழத்தமிழர் வெடிகுண்டுடன் 'கண்டுபிடிக்கப்பட்டு' கைது செய்யப்படுவார்./

  நீங்கள் சொன்னது போல இப்போது சில தினங்களாக தொடர்ந்து சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்..!!

 18. Anonymous said...

  புலிப் பினாமிகளின் பொய்ப்பிரச்சாரங்களை தமிழக மக்கள் இனங்காணவேண்டும்.

  - முல்லை ஈஸ்வரன்.

  இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பற்றி தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் சுயலாபம் கருதி செய்து வருகின்ற பொய்ப்பிரச்சாரங்கள் குறித்து தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ஒரு நிலை இன்று தோன்றியுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் தமிழகப் பினாமிகளாக செயற்படுகின்ற வை. கோபாலசாமி, பழ. நெடுமாறன், தொல். திருமாவளவன், எஸ். ராமதாஸ், கி. வீரமணி, கொளத்தூர் மணி, சுப. வீரபாண்டியன் போன்றோர் தமிழக மக்களின் வாக்கு வேட்டைக்காக அன்றி புலிகளால் மாதாந்தம் வழங்கப்படுகின்ற இலட்சக் கணக்கான பணத்துக்காகவே இலங்கை தமிழர்கள் பற்றி இல்லாத பொல்லாத பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் புலிகளுக்கு ஆதரவாக செய்கின்ற பிரச்சாரங்களால் கவரப்பட்டு தமிழக மக்கள் இவர்களுக்கு வாக்களித்திருந்தால், தமிழகத்தின் ஆளும் கட்சியாக வராவிட்டாலும் இவர்கள் மூன்றாவது நான்காவது பெரிய கட்சியாகத் தன்னும் வந்திருக்க வேண்டும். அனால் இவர்கள் தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் இவர்களது புலி ஆதரவுப் பிரச்சாரத்துக்கு தமிழக மக்கள் எவ்வளவு தூரம் செவிசாய்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மறுபக்கத்தில் இவ்வரசியல்வாதிகள் தமிழ் இன உணர்வால்தான் புலிகளை ஆதரிக்கிறார்கள் எனவும் வாதிட முடியாது. ஏனெனில் அவ்வாறு இவர்கள் தீவிர தமிழ் இன உணர்வாளர்களாக இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களின் தலைவர்களான அ. அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன், சரோஜினி யோகேஸ்வரன், அ. தங்கத்துரை, நீலன் திருச்செல்வம் போன்றோரையும், போராளி இயக்கத் தலைவர்களான பத்மநாபா, சிறீ சபாரத்தினம், மாத்தையா போன்றோரையும், அறிஞர்களான ராஜினி திராணகம, அதிபர் ஆனந்தராஜன், லோகநாதன் கேதீஸ்வரன் போன்றோரையும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களையும் புலிகள் படுகொலை செய்ததை இவர்கள் கண்டித்திருக்க வேண்டும்.

  இதனைவிடவும் இவர்களது சொந்த நாட்டின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியையே படுகொலை செய்து, அதன் காரணமாக இந்தியாவாலும், கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல்கள், போதை வஸ்துக்கள் கடத்தல்கள், மிரட்டிப் பணம் பெறுதல் என்பவற்றுக்காக உலக நாடுகளாலும் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள புலிகளை, இந்த தமிழக பிழைப்புவாதிகள் ஆதரிப்பதென்றால் அதற்கு வேறுகாரணம் இருக்க வேண்டும். அது புலிகள் வீசியெறியும் பணம் எனும் எலும்புத் துண்டே தவிர வேறு எதுவுமல்ல. இதில் சற்று ஆச்சரியமானதும் கவலைக்குரியதுமான விடயமென்னவென்றால், கடந்த காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஓரளவு சரியான கண்ணோட்டத்ததைக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தா. பாண்டியன் போன்றோரும் அண்மைக் காலமாக இந்த சந்தர்ப்பவாதக் கூட்டுடன் சேர்ந்து அறிக்கைகள் விடுத்துவருவதுதான். இருப்பினும் இந்தியாவின் மிகப் பெரிய இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்விடயத்தில் சரியாகவும் நிதானமாகவும் இருப்பது உற்சாகம் தருவதாகும். இந்த தமிழக பிழைப்புவாதிகள் தமிழக மக்களிடையே செய்து வரும் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மையை எடுத்து நோக்குவோமானால் இவர்களது பித்தலாட்டங்களை, பொய்களை அறிந்து கொள்ள முடியும். இவர்கள் செய்யும் ஒரு பிரச்சாரம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களை இலங்கை அரச படைகள் வகை தொகையில்லாமல் தினசரி கொன்று குவிக்கின்றனர் என்பதாகும். இன்னொரு பிரச்சாரம் அரசாங்கம் வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாமல் அவர்களை பட்டினி போட்டுக் கொல்லுகின்றது என்பதாகும். இக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை எடுத்து நோக்குவது அவசியமானது.

  கொலைகளைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில் தினசரி பல உயிர்கள் பலியாகின்றன என்பது உண்மைதான். இதில் ஒருவகை உயிரிழப்புகள் யுத்த களங்களில் நடப்பவை. அவற்றில் அரசபடையினரும் புலிகளும் இறக்கின்றனர். இன்னொரு பிரிவினர் பொதுமக்கள் என்று சொல்லப்படுகின்ற முரண்பட்ட கோஷ்டிகளாகும். அதாவது பொதுமக்களென்ற போர்வையில் நடமாடும் புலிகள் மற்றும் புலிகளுக்காக உளவு பார்ப்போர், ஆயுதம் பதுக்கி வைத்திருப்போர், கப்பம் வசூலிப்போர் போன்றோரை அரச புலனாய்வுப் படையினரும் மாற்று இயக்கத்தினரும் கொலை செய்வது நடைபெறுகின்றது. அதேபோல தமக்கு எதிரானவர்கள் என்று கருதுவோரை – கடந்த 20 வருடங்களில் பல ஆயிரக்கணக்கானவர்களை – புலிகள் கொலை செய்து வருகின்றனர். எனவே இது ஒரு வழிப்பாதையல்ல. இது தவிர சாதாரண அப்பாவித் தமிழ் மக்களை அரசபடைகள் காரணமின்றி கொலை செய்கின்றன என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அவ்வாறு கொலை நடைபெற்றிருக்குமாயிருப்பின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவரும் இன்று இருந்திருக்க மாட்டார்கள். படை நடவடிக்கைகளின் போது கூட படையினர் மிகக் கவனமாகவே செயல்படுகின்றனர். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் சம்பூர், வாகரை, கொக்கட்டிச் சோலை, தொப்பிகல போன்ற பகுதிகளை விடுவிக்கும் பாரிய படை நடவடிக்கைகளின் போது மொத்தமாக இரண்டு டசின் பொதுமக்கள் கூட கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியில் பெரும்பாலும் தினசரி இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்ற போதிலும், இதுவரையில் இரண்டோ மூன்று பொதுமக்களே கொல்லப்பட்டு சிலர் காயமடைந்தும் உள்ளனர். அதுவும் புலிகளின் பிரதான முகாம்களுக்கு மிகவும் அருகில் வசித்தவர்களே அவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள். பெரும்பாலும் புலிகளின் முகாம்களே துல்லியமாக இலக்கு வைக்கப்படுவதால், வன்னியில் அதிகளவில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு வாய்ப்பெதுவும் இல்லை. புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் மீதான தாக்குதல் அரச படையினரின் தெளிவான இலக்குகளுக்கு உதாரணமாகும். அரச படையினரின் துல்லியமான தாக்குதல் காரணமாக அச்சமடைந்திருக்கும் புலிகளின் தலைமை அதைத் திசை திருப்புவதற்காகவே அரச படைகள் பொது மக்களை தாக்கி கொலை செய்து வருவதாக தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதே உண்மையாகும். இது ஒரு புறமிருக்க தமிழ் பகுதிகளுக்கு அரசாங்கம் உணவுப் பொருட்களை அனுப்புவதில்லை என்ற குற்றச்சாட்டும் பொய்ப் பிரச்சாரமாகும்.

  கடந்த பல வருடங்களாகவே இடம் பெயர்ந்த மக்களுக்கு இருவாரத்துக்கு ஒரு முறை அரசாங்கம் அரிசி, மாவு, சீனி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை. புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மக்களுக்கும் இவ்வுணவுப் பொருட்கள் பாரபட்சமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே தனது எதிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச மக்களுக்கும் இலவசமாக நிவாரணங்கள் வழங்குவதென்பது இலங்கையில் மட்டுமாகத்தான் இருக்கும். அந்த உணவுப் பொருட்களைக் கூட மக்களுக்கு வழங்கவிடாமல் புலிகள் கொள்ளை அடித்துச் செல்வது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த விடயம். இது புலிகளின் தமிழகப் பினாமிகளுக்கு தெரியுமோ தெரியாது. புலிகளின் தமிழகப் பினாமிகள் பிதற்றுவது போல அரசாங்கம் உணவு அனுப்பாமல் யாராவது பட்டினியால் இறந்ததாக இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை. புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி அரசாங்கம் கடற்படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை கப்பல்களில் தொடர்ந்து அனுப்பி வருகின்றது. அரசாங்கம் அனுப்பும் பொருட்களின் விபரங்களை யாராவது அறிய விரும்பினால் கொழும்பில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடமோ அல்லது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் தமிழ் பிரதேசங்களின் அரசாங்க அதிபர்களிடமோ அல்லது சமாதான செயலகத்தின் இணையத்தளத்தின் வாயிலாகவோ அறிந்து கொள்ள முடியும். யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு அடிக்கடி தட்டுப்பாடு நிலவுவதும் விலைகள் கூட்டி விற்கப்படுவதும் நடைமுறையாக உள்ளது உண்மையே. இதற்கும் புலிகளே காரணம். புலிகள் வர்த்தகர்களை மிரட்டிப் பெரும் தொகைப் பணத்தை கப்பமாகப் பெறுவதாலும், கொள்ளை இலாபம் பெற நினைக்கும் வர்த்தகர்கள் புலிகளைச் சாட்டி பொருட்களை பதுக்கி வைப்பதாலுமே அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன. எந்த வழியில் பார்த்தாலும் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு புலிகளே சூத்திரதாரிகளாக உள்ளனர். முன்பு யாழ்பாணத்தை தென்னிலங்கையுடன் இணைக்கும் பிரதான வீதியான ஏ9 வீதியால் தரைமார்க்கமாக பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அப்பொழுதும் கூட எடுத்துச் செல்லப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புலிகள் கப்பம் அறவிட்டதால், அரசாங்கம் அதை மூடியது. இருந்தும் புலிகளின் இடைய+றின்றி வாகனத தொடரணி மூலம் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களையும் இதர அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச் செல்ல அரசாங்கம் விரும்பியும் புலிகள் அதற்கு மறுத்து விட்டனர். மன்னார் - ப+நகரி பாதை மூலம் எடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் வேண்டுகோளையும் புலிகள் நிராகரித்துவிட்டனர். இதிலிருந்து தெரிவது என்ன? வடக்கில் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதிலும் விலை உயர்வை ஏற்படத்துவதிலம் புலிகளே சூத்திரதாரிகளாக திட்டமிட்டுச் செயற்படுகின்றனர் என்பதாகும். நிலைமை இவ்வாறிருக்க புலிகளின் தமிழகப் பினாமிகள் புலிகளிடம் கைநீட்டி பெறும் பணத்துக்காக தமிழக மக்களிடம் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவது எவ்வளவு மோசடித்தனமானது. எனவே தமிழக மக்களும் உண்மையான தமிழின உணர்வாளர்களும் புலிகளினதும் அவர்களது தமிழகப் பினாமிகளினதும் ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொள்வது அவசியமானது. அதேவேளை இன்னொன்றையும் தமிழக மக்களுக்கு தெரியப் படுத்துவது அவசியமானது. அதாவது தமிழகப் பினாமிகள் சொந்த இலாபத்துக்காக செய்யும் இவ்வகையான பிரச்சாரங்களை, இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் என்றுமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே அதுவாகும்.

  courtesy:http://www.thenee.com/html/071207.html

 19. Anonymous said...

  - முல்லை ஈஸ்வரன்.
  Are you from sri lanka why you tell us lie ever you feel in vanni war how many tamil people killed by srilankan Army a day?
  first support tamil people as a tamil man dont do beg money from sinhalese then wrote lie every where?
  again i dont like முல்லை in your name if you live in முல்லைyou never cant wrote like this

 20. பகீ said...

  /நடுநிலையுடன் எழுதியுள்ளீர்கள். தமிழ் தேசியவாதிகளின் இந்துத்துவச் சார்புக்கு என்ன தான் காரணம்? இந்து வெறியர்களின் ஒரு பிரிவினர் இவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்திருப்பார்களா/

  அப்படிச் சொல்லமுடியாதென்றே கருதுகிறேன். ஆனால் தமிழகத்தில் தமிழ்த்தேசியம் என்பது (ஏன், ஈழத்திலும் கூட) சாதியக் கறைபடிந்த இந்துத்துவச் சார்போடேயே உள்ளது.

  ///////(ஏன், ஈழத்திலும் கூட)//////////

  எதை வச்சு சொல்லுறீங்க.. சரியான நிகழ்கால ஆதாரம் தரவேண்டும்... அந்த பதிவில் இந்த பதிவில் உள்ளது என்கின்ற ஆதாரமல்ல..