கோவை சந்திப்பு - நெருடலும் நெகிழ்வும்

கோவை வலைப்பதிவாளர் சந்திப்பிற்குச் செல்லவேண்டுமென்று பெரிதாக ஆர்வமில்லை. என்றாலும் கோவையில் விரவிக்கிடக்கும் நண்பர்குழாமைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் உறுத்திக்கொண்டேயிருந்தது. சனி இரவே 9.00 மணியளவில் கோவையில் கால்பதித்தாகிவிட்டது.

அடுத்தநாள் ஞாயிறு. வலைப்பதிவாளர் சந்திப்பிற்குப் போய்த்தான் பார்ப்போமே என்று 12.00 மணியளவில் நுழைந்தேன். நான் போன நேரமோ என்னவோ நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்.ரமணி பின்நவீனத்துவம் பற்றிக் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தார்.

ரமணியின் கட்டுரையினூடே தோழர்கள் ராஜ்வனஜ், மோகன் தாஸ், மா.சிவகுமார் மற்றும் நான் ஆகியோர் குறுக்கிட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் எந்தக் கேள்விக்கும் முறையாகப் பதில் சொல்லாத பேராசிரியர், "நான் பிரச்சினைகளைப் பற்றியோ தீர்வுகளைப் பற்றியோ பேசவரவில்லை" என்று நழுவிக்கொண்டார்.

யாரையும் 'தீர்வுகள் சொல்லித்தானாக வேண்டும்' என்று கழுத்திலே கத்தி வைக்கமுடியாதுதான். ஆனால் பிரச்சைனை என்னவென்றால் ரமணியின் கட்டுரைகள் பெரும்பாலும் தவறான கருத்துக்களே நிரம்பியிருந்தன. அவற்றை ரமணி தன்னுடைய சொந்தக் கருத்துக்களாக முன்வைத்திருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் அவற்றைப் பின்நவீனத்தின் பேரால் முன்வைப்பதுதான் ஆபத்தானது.

மேலும் ரமணி முன்வைத்த பலகருத்துக்கள் பின்நவீனம் பேசும் விசயங்களுக்கே முற்றிலும் மாறானவை. அவர் கட்டுரையை முடித்ததும் தோழர் ராஜ்வனஜ் "பின்நவீனத்துவம் என்றால் கழிசடைத்தனம் என்று புரிந்துகொண்டேன்" என்றார். அவரது நக்சல்பாரி அரசியல் ஆதரவும் மார்க்சியத் தீவிரச்சாய்வும் அவரை அப்படிச் சொல்லவைத்திருக்கலாம். ஆனால் ரமணியின் மோசமான கட்டுரையும் அதற்கு ஒரு காரணமெனலாம். ரமணி தன் கட்டுரையில் முன்வைத்த கருத்துக்களில் சிலவற்றைத் தொகுத்துக்கொள்ளலாம்.

* மய்யம் என்ற ஒன்று கிடையாது. மய்யங்கள் தகர்ந்துவிட்டன.

* முதலாளியம், ஏகாதிபத்தியம் ஆகிய ஆதிக்க நடைமுறைகள் நடப்பில் இல்லை.

* பொருளாதார ஆதிக்கம் என ஒன்றுமில்லை. நுகர்வியம் மட்டுமே இருக்கிறது. அதுவும் சுயேச்சையானது.

* பொருளாதார ஆதிக்கம் உட்பட எல்லா ஆதிக்கங்களும் தேர்வுகளுக்கு உட்பட்டதே. அவற்றை எப்போது வேண்டுமானாலும் மக்கள் (நுகர்வோர்கள்) மறுக்கலாம். துப்பாக்கி முனையில் இவற்றின் ஆதிக்கம் நிலைநாட்டப்படவில்லை என்பதால் அது விருப்பத்தேர்வின்பாற்பட்டதே.

* பின்நவீனத்துவம் மத அடிப்படைவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. உதாரணமாக சல்மான் ருஷ்டி, தஸ்லிமாநஸ்ரீன் ஆகியோரின் பிரதிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தூண்டிவிட்டிருக்கின்றன. இதற்குப் பின்நவீனத்துவம்தான் காரணம்.

மேற்கண்ட கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை மேலோட்டமான கவனிப்பிலேயே ஒருவர் உய்த்தறிய முடியும். இவை பின்நவீனத்துவத்தின் பேரால் முன்வைக்கப்பட்டதுதான் வேடிக்கையானது.

மய்யம் என்கிற ஒன்றே இல்லையெனில் விளிம்புநிலை அரசியல், சபல்டர்ன் இலக்கியம், வித்தியாசங்களின் அரசியல்/மிச்சங்களின் அரசியல் இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவற்றை ஏன் பின்நவீனம் பேசவேண்டும்?

மய்யநாடுகள், விளிம்புநிலைநாடுகள் என்னும் வரையறுப்புகள் எதற்காக? நுகர்வியம் பிம்பங்களின் மூலம் கட்டமைக்கும் மனோநிலையை ழான்போத்ரியா ஏன் மறுகிமறுகிப் பேசியிருக்க வேண்டும்?

தூலமான வன்முறை மட்டுமே வன்முறையல்ல. கட்புலனாகாத வன்முறை மற்றும் அரூபவன்முறையும் ஆதிக்கக் கருத்தியலை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதுவும் இந்தியா என்னும் சாதிய நிலப்பரப்பில் சாதிய வன்முறையே அரூவ வன்முறையாகத்தானே தனது கருத்தியல் சாதிய அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மேலும் அரசு தேவைப்பட்டால் துப்பாக்கிக்குழலின் மூலம் அதிகாரத்தைத் திணிக்கும் என்பதற்கு தாமிரபரணி, குண்டாய் தொழிற்சாலை முதல் சமீபத்திய நந்திகிராமம், சிங்கூர் வரை சாட்சி.

மத நம்பிக்கைகளுக்கு எதிராய்க் கேள்விகேட்டால் கடுமையான ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதென்பது கலிலியோ, கோபர்நிக்கஸ் காலத்தினின்று தொடர்வது. ஏன், இன்னும் சொல்லப்போனால் இரண்யன் காலத்திலினின்றே தொடர்வது. அதற்கும் பின்நவீனத்திற்கும் என்ன தொடர்பு?

ரமணி கட்டுரையை முடித்தவுடனே, "நீங்கள் தவறான தகவலையே சொல்லியிருக்கிறீர்கள்" என்றேன். விரிவான எதிர்வினையை நிகழ்த்துவதற்கு முன்பு தோழர்.செந்தழல்ரவி ஒரு பரிசுப்பொருளை ரமணியின் கையில் நீட்டினார்.

என்னிடம் கொடுத்துதான் ரமணியிடம் கொடுக்கச்சொல்கிறார் என்று நான் நினைத்தேன். ரமணியும் அப்படியே நினைத்து வாங்கிவைத்துக்கொண்டார்.ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது, ரமணியின் மூலம் எனக்குத்தான் அந்தப் பரிசை அளித்திருக்கிறார் என்று. கிட்டத்தட்ட ரமணியிடமிருந்து பிடுங்கி அந்த பரிசுப்பொருளை எனக்களித்தார் ரவி.

அது ஒரு பழமையான மரத்தால் செய்யப்பட்ட சிலை. ஒரு வித்தியாசமான மனித முகத்தைத் தாங்கியது. மொத்தத்தில் ரவியோடு நான் பேசிப்பழகிய மணிநேரங்களே குறைவாகத்தானிருக்கும். ஆனால் ரவி என்னிடம் காட்டும் அன்பு அளவிடமுடியாதது. ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவர் ஏதேனும் எனக்காகப் பரிசுப்பொருள் வாங்கிவந்துவிடுகிறார். இத்தகைய பேரன்பு கொண்ட பிரியத்துக்குரிய நண்பனுக்கு என்ன கைமாறு செய்ய முடியும், இன்னும் அதிகம் பெண்நண்பர்களை ரவி பெறவேண்டுமென்று வாழ்த்துவதைத்தவிர.

அதற்குள் உணவு இடைவேளை நெருங்கிவிட்டது. நண்பர்கள் மதிய உணவுக்காக சிந்தாமணி சிக்கனைச் சமைத்துவைத்திருந்தார்கள். அதற்காக ஜூட் விட்டேன். (சிந்தாமணிசிக்கன் என்பது கோழிக்கறியோடு வறமிளகாய் எனப்படும் சிவப்புமிளகாயைச் சேர்த்து செய்யப்படும் சமையல். அது ஒரு வித்தியாசமான சுவையாக இருக்கிறது. யாரேனும் கோவையில் நண்பர்கள் வீட்டிற்குச்சென்றால் அவசியம் சிந்தாமணி சிக்கன் சாப்பிட்டு மகிழுங்கள்)

இன்னும்சில :

* தோழர்.பாலபாரதி வழக்கத்திற்கு மாறாக அமைதி காத்திருந்தார். ஆனால் பத்திரிகையாளர்கள் வந்தபோது மட்டும் அதிகம் பேசினார்.

* தோழர்கள் லிவிங்ஸ்மைல் வித்யா, மோகன் தாஸ், வாத்தியார் சுப்பய்யா, பாமரன் மற்றும் அவரது நண்பர்கள், டெல்லி நண்பர் சென்ஷி ஆகியோரேடு சிறிதுநேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

* நிகழ்வை ஏற்பாடு செய்த செல்லா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்ததால் வரவில்லை.

* வித்யா போன்ற விளிம்புநிலையினர் மய்யநீரோட்ட ஊடகங்களில் பங்குபெறுவதும் தங்களைப் பதிவுசெய்வதும் அவசியமானது. ஆனால் பொதுவாக எல்லா வலைப்பதிவாளர்களும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி மய்யநீரோட்ட ஊடகங்களை நோக்கி நகர்வது, அவற்றில் தங்கள் பெயர், புகைப்படம் இடம்பெறவேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்படுவது வருத்தமளிக்கிறது. இது வலைப்பதிவெழுத்தின் சிறுதன்மை மற்றும் சுயேச்சைத்தன்மையைக் குலைத்துவிடும். சிறுபத்திரிகை இலக்கிய 'ஜாம்பவான்கள்' வெகுஜன ஊடகத்திற்கு நகர்ந்தபிறகு என்ன நடந்ததோ அதுவே நடக்கும். எனவே வலைப்பதிவாளர் சந்திபை ஏற்பாடு செய்யும் நண்பர்கள் இதைச் சிந்தித்தால் நல்லது என்று தோன்றுகிறது. மேலும் ஊடக ஆட்கள் சூழ நடைபெறும் சந்திப்பு என்பது ஒரு அன்னியோன்னியத்தன்மையற்றதாகவும் ஊடகத்திற்கான செயற்கைத்தன்மை கொண்டதாகவும் கூட்டத்தில் உரத்தகுரலெழுப்பிக் கவனமேற்படுத்தும் அதிகாரநிகழ்வாகவும் முடியும் வாய்ப்புமுண்டு.

* சென்னை வெயிலால் வாடுபவர்களுக்குக் கோவையின் தட்பவெட்பம் இதம்.

* வழக்கமான வலைப்பதிவாளர் சந்திப்புகளில் இருக்கும் மொக்கைத்தனம் கோவைச்சந்திப்பில் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* நான் சந்திப்பில் இருந்ததே அதிகபட்சம் ஒருமணிநேரம்தானிருக்கும். எனவே இது 'முழுமையான பார்வை'யில்லை.

12 உரையாட வந்தவர்கள்:

 1. மிதக்கும்வெளி said...

  இந்தவிடத்தில் நண்பர் உண்மைத்தமிழனைச் சந்தித்தையும் குறிப்பிட வேண்டும். அவர் என் பதிவில் பின்னூட்டம் போட்டே ஒருமாதமிருக்குமாம். ஆனால் என் ஒவ்வொரு பதிவின்போதும் அவர்பெயரால் எனக்குப் பின்னூட்டம் வந்துவிடுகிறது. பெரியார் படம் குறித்து அவர் பெயரால் வந்த பின்னூட்டத்திற்குக் கடிந்துவிட்டேன். ஆனால் பின்னூட்டம் போட்ட போலிநண்பரே 'உங்களை சுகுணா திட்டுகிறார்' என்று உண்மைத்தமிழனுக்கு மின்னஞ்சலும் அனுப்பியிருக்கிறார். பாவமாக இருக்கிறது. பேசாமல் 'நீங்கள் போலித்தமிழன் என்று பெயரை மாற்றிவைத்துக்கொள்ளுங்களேன்' என்று பரிந்துரைத்தேன்.

 2. - யெஸ்.பாலபாரதி said...

  இன்னும் அதிகம் பெண்நண்பர்களை ரவி பெறவேண்டுமென்று வாழ்த்துவதைத்தவிர.

  ரிபிட்டே... :)

 3. Anonymous said...

  /////
  இந்தவிடத்தில் நண்பர் உண்மைத்தமிழனைச் சந்தித்தையும் குறிப்பிட வேண்டும். அவர் என் பதிவில் பின்னூட்டம் போட்டே ஒருமாதமிருக்குமாம். ஆனால் என் ஒவ்வொரு பதிவின்போதும் அவர்பெயரால் எனக்குப் பின்னூட்டம் வந்துவிடுகிறது. பெரியார் படம் குறித்து அவர் பெயரால் வந்த பின்னூட்டத்திற்குக் கடிந்துவிட்டேன். ஆனால் பின்னூட்டம் போட்ட போலிநண்பரே 'உங்களை சுகுணா திட்டுகிறார்' என்று உண்மைத்தமிழனுக்கு மின்னஞ்சலும் அனுப்பியிருக்கிறார். பாவமாக இருக்கிறது. பேசாமல் 'நீங்கள் போலித்தமிழன் என்று பெயரை மாற்றிவைத்துக்கொள்ளுங்களேன்' என்று பரிந்துரைத்தேன்.
  ///

  உண்மைத்தமிழனை என்னுடைய பதிவில் மறந்துவிட்டேன்...யாராவது எழுதினால் பெரியதாக ஒரு பின்னூட்டம் போட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருதேன்...

  உண்மைத்தமிழனின் போலித்தமிழன் மிகவும் பொலைட்டானவர் என்பதை உண்மைத்தமிழனிடமே கேட்டுத்தெரிந்துகொண்டேன்...

  பொய்த்தமிழன்,மடத்தமிழன்,போலித்தமிழன் என்றெல்லாம் பலபெயர்கள் இருக்கையில் உண்மைத்தமிழன் என்ற பெயரை விடாப்பிடியாக அந்த போலி பிடித்துகொண்டது ஏனோ தெரியவில்லை..

  எனக்கு சில மாதம் முன்பு (உண்மைத்தமிழன் வலையுலகில் குடியேறும் முன்பு) உண்மைத்தமிழன் என்ற பெயரில் பின்னூட்டம் வந்ததுபோல் ஒரு நினைவு...

  உண்மைத்தமிழன் சொன்னார், இந்த குறிப்பிட்ட பெயருக்காக ஒரு வாரம் யோசித்தாராம்...(என்னால சிரிப்பை அடக்கமுடியலை)

  பழக எளிமையானவர்...நமது ஆட்டத்துக்கு கண்டிப்பாக தேவையானவர்...:)))))


  பக்கம் பக்கமாக இரவு முழுவதும் நோட்பேடில் டைப் அடித்து அதை பதிவுக்கு மாற்றுகிறார்...ஒவ்வொரு பதிவுக்கு இவர் எடுக்கும் உழைப்பு அபரிமிதமானது...

  இவரது தயாநிதி பதிவு பி.டி.எப் கோப்பாக உலகத்தமிழர்களிடம் சுற்றுகிறது....

  யோசித்தபோது, இந்த பொய்த்தமிழன் உண்மைத்தமிழனை கலாய்க்க வேறுகாரணங்களை கண்டறிய முடியவில்லை, அவர் அ.தி.மு.க சார்புடைய நிறுவனத்தில் பணியாற்றுகிறார் என்பதை தவிர...கண்டிப்பாக ஒரு தி.மு.க அனுதாபிதான் அவரை கலாய்க்கிறார் என்பது தெரிகிறது...

  ஆனால் என் பார்வையில் வடிவேல் ஒரு படத்தில் சொல்வது போல, நீ அடிப்பது "பிள்ளைப்பூச்சியை"..விட்ருப்பா !!!!!

 4. மஞ்சூர் ராசா said...

  வலப்பதிவு சந்திப்பைப் பற்றிய மற்றொரு பார்வை.
  //வித்யா போன்ற விளிம்புநிலையினர் மய்யநீரோட்ட ஊடகங்களில் பங்குபெறுவதும் தங்களைப் பதிவுசெய்வதும் அவசியமானது. ஆனால் பொதுவாக எல்லா வலைப்பதிவாளர்களும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தி மய்யநீரோட்ட ஊடகங்களை நோக்கி நகர்வது, அவற்றில் தங்கள் பெயர், புகைப்படம் இடம்பெறவேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக ஆசைப்படுவது வருத்தமளிக்கிறது. இது வலைப்பதிவெழுத்தின் சிறுதன்மை மற்றும் சுயேச்சைத்தன்மையைக் குலைத்துவிடும். சிறுபத்திரிகை இலக்கிய 'ஜாம்பவான்கள்' வெகுஜன ஊடகத்திற்கு நகர்ந்தபிறகு என்ன நடந்ததோ அதுவே நடக்கும். எனவே வலைப்பதிவாளர் சந்திபை ஏற்பாடு செய்யும் நண்பர்கள் இதைச் சிந்தித்தால் நல்லது என்று தோன்றுகிறது. மேலும் ஊடக ஆட்கள் சூழ நடைபெறும் சந்திப்பு என்பது ஒரு அன்னியோன்னியத்தன்மையற்றதாகவும் ஊடகத்திற்கான செயற்கைத்தன்மை கொண்டதாகவும் கூட்டத்தில் உரத்தகுரலெழுப்பிக் கவனமேற்படுத்தும் அதிகாரநிகழ்வாகவும் முடியும் வாய்ப்புமுண்டு.//

  உங்களின் இந்த கருத்தை ஆமோதிக்கிறேன்.

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  மிதக்கும் ஐயாவின் முதல் பின்னூட்டத்தை வரவேற்கிறேன்..

 6. Anonymous said...

  //தோழர்.பாலபாரதி வழக்கத்திற்கு மாறாக அமைதி காத்திருந்தார். ஆனால் பத்திரிகையாளர்கள் வந்தபோது மட்டும் அதிகம் பேசினார்//

  :-):):-)

 7. மா சிவகுமார் said...

  //* தகர்ந்துவிட்டன.
  * நடப்பில் இல்லை.
  * மட்டுமே இருக்கிறது. அதுவும் சுயேச்சையானது.
  * விருப்பத்தேர்வின்பாற்பட்டதே.
  * பின்நவீனத்துவம் மத அடிப்படைவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.//

  எனக்குப் புரிந்தவரை இப்படி திட்டவட்டமாக ரமணி சொல்லவில்லை. நவீனத்துவத்தைத் தொடர்ந்த கால கட்டத்தில் இப்படிப்பட்டப் போக்குகள் உருவாவதை விளக்குவதுதான் பின்நவீனத்துவம் என்று சொன்னதாகப் பட்டது.

  இன்றைக்கு இவை எல்லாம் ஏற்கனவே நிகழ்ந்து விட்டன என்றில்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சி, உலக மயமாக்கல், வணிக மயமாக்கல் போன்றவை இத்தகைய மாற்றங்களை உருவாக்கி வருகின்றன என்று அவர் படித்ததாகவே எனது புரிதல்.

  அன்புடன்,

  மா சிவகுமார்

 8. சிறில் அலெக்ஸ் said...

  அடுத்தமுறை பின்நவீனத்துவம் குறித்த கட்டுரையை நீங்களே வாசிக்கலாம்.
  :)

  பதிவர்கள் ஊடகத்துறையில் கால்வைப்பதும் ஊடகங்களால் கவனிக்கப்படுவதும் இருவேறு விதயங்கள் என நினைக்கிறேன். சந்திப்புக்களின்போது ஊடகங்கள் நம்மை கவனிக்கும்படி செய்வது சிறப்பாகவே இருக்கும்.

 9. Subbiah Veerappan said...

  ///ஆனால் ரவி என்னிடம் காட்டும் அன்பு அளவிடமுடியாதது. ////

  பாகுபாடின்றி அவர் எல்லோரிடமும் அப்படித்தான் நடந்துகொள்கின்றார்!
  எப்படிச் சாத்தியமாகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்!

  வாத்தியார் சுப்பையா

 10. Ayyanar Viswanath said...

  திவா
  பிந பெரிய குழப்படியாவே இருக்கு அங்க இங்க சுத்தி மேய்ஞ்சி அரைகுறையான புரிதல் தான் இருக்கு
  ரமேஷ் ப்ரேம் சில சன்னல்களை திறந்தாலும் இன்னும் நிறைய சந்தேகங்களிருக்கு .ரமணி சொன்ன கருத்துகளில் உடன்பாடில்லைனாலும் எது சரி ன்னு முடிஞ்சா நீங்களே ஒரு பதிவு போட்டிடுங்க.நேரமிருந்தா சில புத்தகங்களை பரிந்துரைங்க

 11. தமிழ்நதி said...
  This comment has been removed by the author.
 12. Osai Chella said...

  Post-Modernism?!
  Michael Albert  A little over two years ago, preparing to ride from Boston to New York to attend the Socialist Scholars Conference, I asked a scholar friend to explain "post-modernism" in the four to five hours we would spend on the road. He accepted, and we rode—he lecturing and me listening.

  When we got to New York if someone had walked up and asked, "What is post-modernism?" I could not have answered. Four hours and I still didn't know what "post-modernism" referred to. Three interpretations spring to mind.

  *

  My tutor was an idiot incapable of explaining one concept in four hours.
  *

  I am an idiot incapable of understanding one concept in four hours.
  *

  The concept is idiotic, a vague pastiche of mush covering a range too broad to clarify in four hours.

  The third possibility, as you might guess, is my favorite. But how could a concept which engenders shelves of books be nearly empty? Here's my hypothesis: Literary theory is largely a sham literary theorists use to cajole regal treatment from their professional cohorts, bosses, students, and broader intellectual community.